நினைவுநாள் அழைப்பிதழ்—உலகெங்கும் விநியோகிப்பு!
1. விசேஷமான என்ன அழைப்பிதழ் நினைவுநாளுக்கு முன் விநியோகிக்கப்படும்?
1 “என் நினைவாக இதைச் செய்துகொண்டிருங்கள்.” (லூக். 22:19) உலகெங்குமுள்ள யெகோவாவின் சாட்சிகள் இயேசுவின் இந்தக் கட்டளைக்குக் கீழ்ப்படிந்து, மார்ச் 30, 2010 அன்று அவருடைய மரண நினைவுநாளை அனுசரிப்பார்கள்; அதில் கலந்துகொள்ளும்படி ஆர்வமுள்ளவர்களை அழைப்பார்கள். நினைவுநாளுக்கான விசேஷ அழைப்பிதழை மார்ச் 13-லிருந்து 30-வரை உலகெங்கும் விநியோகிப்பார்கள்.
2. இந்த அழைப்பிதழை எப்படிக் கொடுக்கலாம்?
2 எப்படிக் கொடுப்பது: அழைப்பிதழைக் கொடுப்பதற்குச் சாதுரியமும் பகுத்துணர்வும் தேவை. ஒருவர் இயேசுவைப் பற்றி அதிகம் கற்றுக்கொள்ள ஆர்வம் காட்டினால் அவருக்கு இந்த அழைப்பிதழைக் கொடுக்கலாம்; அதிலுள்ள படத்தைக் காட்டிய பின்பு இவ்வாறு சொல்லலாம்: “மார்ச் 30-ஆம் தேதி மாலையில், உலகெங்கும் உள்ள லட்சக்கணக்கானோர் இயேசுவின் நினைவுநாளை அனுசரிக்கப்போகிறார்கள். அதில் கலந்துகொள்ள உங்களையும் உங்கள் குடும்பத்தாரையும் அழைக்கிறேன். இந்த நிகழ்ச்சி நடக்கிற நேரமும் இடமும் இங்கே கொடுக்கப்பட்டுள்ளது.” சூழ்நிலையைப் பொறுத்து, லூக்கா 22:19-ஐ வாசித்துக் காட்டலாம். குறுகிய காலத்திற்குள் பிராந்தியத்திலுள்ள எல்லா வீடுகளிலும் நாம் இந்த அழைப்பிதழைக் கொடுக்க வேண்டியிருப்பதால், சுருக்கமாகப் பேசுவது நல்லது.
3. யாரையெல்லாம் அழைக்கலாம்?
3 சூழ்நிலையைப் பொறுத்து, அழைப்பிதழோடு பத்திரிகைகளையும் சேர்த்துக் கொடுக்கலாம். உங்கள் மறுசந்திப்புகள், பைபிள் படிப்புகள், சக பணியாளர்கள், சக மாணவர்கள், உறவினர்கள், அக்கம்பக்கத்தில் உள்ளவர்கள், உங்களுக்குப் பழக்கமானவர்கள் என எல்லாரையும் அழைக்க மறவாதீர்கள்.
4. மீட்புப் பலியின் மூலம் யெகோவா நம்மீது காட்டியிருக்கும் அன்பை மதித்துணருகிறீர்கள் என்றால், என்ன செய்யத் தூண்டப்படுவீர்கள்?
4 இந்த விநியோகிப்பில் முழுமையாக ஈடுபடுங்கள்: ஊழியத்தில் அதிகமாக ஈடுபடுவதற்கு நினைவுநாள் காலம் மிகச் சிறந்த காலம். அப்போது துணைப்பயனியர் ஊழியம் செய்ய உங்களால் திட்டமிட முடியுமா? உங்கள் பிள்ளைகளோ பைபிள் மாணாக்கர்களோ ஆன்மீக ரீதியில் நல்ல முன்னேற்றம் செய்துவருகிறார்களா? அப்படியானால், அவர்களும் ஞானஸ்நானம் பெறாத பிரஸ்தாபிகளாகி இந்த விசேஷ விநியோகிப்பில் கலந்துகொள்ளத் தகுதிபெறுகிறார்களா என மூப்பர்களிடம் கேளுங்கள். மீட்புப் பலியின் மூலம் யெகோவா நம்மீது காட்டியிருக்கிற அன்பை மதித்துணருகிறீர்கள் என்றால், இந்த நினைவுநாள் அனுசரிப்பில் கலந்துகொள்ளத் தூண்டப்படுவீர்கள்; அதுமட்டுமல்ல, எத்தனை பேருக்கு முடியுமோ அத்தனை பேருக்கு இந்த அழைப்பிதழைக் கொடுக்கத் தூண்டப்படுவீர்கள்.—யோவா. 3:16.