மார்ச் 17—நினைவுநாள் அழைப்பிதழ் வினியோகிப்பு
1. மார்ச் 17 முதல் எதை வினியோகிக்க போகிறோம்?
1 ஒவ்வொரு வருடம் நினைவுநாள் அனுசரிப்பின்போது இயேசுவின் மரணத்தைப் பற்றி எல்லாருக்கும் அறிவிக்கிறோம். (1 கொ. 11:26) ஏனென்றால், மற்றவர்களும் நம்மோடு சேர்ந்து நினைவுநாள் அனுசரிப்பில் கலந்துகொண்டு, மீட்புவிலையின் மூலம் யெகோவா கொடுத்திருக்கும் அன்பான பரிசை பெற்றுக்கொள்ள வேண்டும் என்று நாம் விரும்புகிறோம். (யோவா. 3:16) இந்த வருடம் நினைவுநாள் அனுசரிப்புக்கான அழைப்பிதழை மார்ச் 17 சனிக்கிழமையிலிருந்து கொடுக்கப் போகிறோம். அதில் முழுமூச்சுடன் பங்குகொள்ள நீங்கள் தயாரா?
2. அழைப்பிதழைக் கொடுக்கும்போது நாம் என்ன சொல்லலாம், எதைக் குறித்து எச்சரிக்கையாக இருக்க வேண்டும்?
2 என்ன சொல்லலாம்: சுருக்கமாக பேசி அழைப்பிதழைக் கொடுப்பது நல்லது. வீட்டுக்காரருக்கு வணக்கம் சொல்லிய பிறகு இப்படிச் சொல்லலாம்: “ஏப்ரல் 5-ஆம் தேதி உலகம் முழுவதும் இயேசு கிறிஸ்துவின் மரண நாளை நினைவுக்கூற போகிறோம். அதற்கான அழைப்பிதழை உங்கள் குடும்பத்துக்கு கொடுக்க வந்தோம். அந்தக் கூட்டத்தில், பைபிளிலிருந்து ஒரு பேச்சு கொடுக்கப்படும். இயேசு இறந்ததால் நமக்கு என்ன பயன், இப்போது அவர் என்ன செய்துகொண்டு இருக்கிறார் என்று அந்த பேச்சில் சொல்வார்கள். இந்த அழைப்பிதழிலேயே நேரமும் இடமும் கொடுக்கப்பட்டிருக்கிறது. எல்லாரும் வரலாம், அனுமதி இலவசம்.” வீட்டுக்காரர் கிறிஸ்தவர் இல்லையென்றால், அவருக்கு ஆர்வம் இருக்கிறதா இல்லையா என்று பார்த்துவிட்டு அழைப்பிதழைக் கொடுங்கள். வாரயிறுதி நாட்களில் அழைப்பிதழோடு சேர்த்து பத்திரிகைகளையும் கொடுக்கலாம்.
3. நிறைய பேரைக் கூப்பிட நாம் என்ன செய்ய வேண்டும்?
3 நிறைய பேரைக் கூப்பிடுங்கள்: எவ்வளவு பேரை கூப்பிட முடியுமோ அவ்வளவு பேரைக் கூப்பிடுவதுதான் நம்முடைய இலக்கு. அதனால் உங்கள் பைபிள் மாணவர்கள், மறுசந்திப்புகள், உறவினர்கள், கூட வேலை செய்பவர்கள், பள்ளி தோழர்கள், அக்கம்பக்கத்தார் என எல்லாருக்கும் அழைப்பிதழைக் கொடுங்கள். பிராந்தியத்தில் எப்படிப்பட்ட ஆட்கள் இருக்கிறார்கள் என்பதைக் கருத்தில் கொண்டு, அதை எப்படி முழுமையாகச் செய்து முடிப்பதென்று மூப்பர்கள் உங்களுக்குச் சொல்வார்கள். ஒவ்வொரு வருடமும் நினைவுநாள் ஆசரிப்பின்போது நாம் செய்யும் வினியோகிப்பிற்கு நல்ல பலன் கிடைக்கிறது. உதாரணத்திற்கு, சென்ற வருடம் நினைவுநாள் அனுசரிப்பு நடந்துகொண்டிருந்த சமயத்தில் ஒரு பெண்மணி உள்ளே வந்தார். அவருக்கு அழைப்பிதழ் கொடுத்தவரை கண்டுபிடிக்க உதவுவதாக அங்கிருந்த அட்டன்டன்ட் சொன்னார். அதற்கு அந்தப் பெண்மணி, “எனக்கு இங்கே யாரையும் தெரியாது, காலையில் யாரோ வீடுவீடாக வந்து இந்த அழைப்பிதழைத் தந்துவிட்டு சென்றார்” என்று சொன்னார்.
4. பக்திவைராக்கியத்துடன் ஊழியத்தில் பங்குகொள்வதற்கு என்ன நல்ல காரணங்கள் இருக்கின்றன?
4 ஒருவேளை நீங்கள் கலந்துகொள்ளும் நினைவுநாள் அனுசரிப்பில் உங்களிடமிருந்து அழைப்பிதழ் வாங்கிய ஒருவர் வரலாம். அப்படி வந்தாலும் சரி வராவிட்டாலும் சரி, முழுமூச்சோடு நீங்கள் எடுக்கும் முயற்சியே ஒரு சாட்சியாக இருக்கும். நீங்கள் அழைப்பிதழ்களை கொடுப்பதன் மூலமாக இப்போது இயேசு ஒரு சக்திவாய்ந்த ராஜாவாக இருக்கிறார் என்பதை அறிவிக்கிறீர்கள். நீங்கள் பக்திவைராக்கியமாக ஊழியத்தில் பங்குகொள்வதன் மூலம் மீட்புவிலை என்ற பரிசுக்கு நன்றி தெரிவிக்கிறீர்கள் என்பது பிராந்தியத்தில் உள்ளவர்க்கு, மற்ற பிரஸ்தாபிகளுக்கு, மிக முக்கியமாக யெகோவா தேவனுக்கு தெளிவாகத் தெரியும்.—கொலோ. 3:15.