நினைவுநாள் அழைப்பிதழ் விநியோகிப்பு—மார்ச் 1 முதல்
1. நினைவுநாள் அழைப்பிதழை நாம் எப்போது முதல் கொடுப்போம், இந்த வருடம் விசேஷ விநியோகிப்பு நாட்கள் ஏன் நீட்டிக்கப்பட்டிருக்கின்றன?
1 மார்ச் 26 அன்று நடைபெறவுள்ள நினைவுநாள் அனுசரிப்பில் எல்லோரும் கலந்துகொள்வதற்காக மார்ச் 1 வெள்ளிக்கிழமை முதற்கொண்டு அழைப்பிதழை விநியோகிக்க ஆரம்பிப்போம். எனவே, முந்தைய வருடங்களைவிட இந்த வருடம் கூடுதல் நாட்கள் நாம் விநியோகிக்கப்போகிறோம். இதனால் நிறையப் பேருக்கு நம்மால் அழைப்பிதழைக் கொடுக்க முடியும். முக்கியமாக, பெரிய பிராந்தியமுள்ள சபைகளால் அநேகரை அழைக்க முடியும்.
2. அழைப்பிதழ்களைப் பெற்றுக்கொள்வதற்கும் பிராந்தியத்தை முடிப்பதற்குமான ஏற்பாடுகள் யாவை?
2 முன்னேற்பாடுகள்: பிராந்தியத்தை எப்படிச் செய்து முடிக்க வேண்டும் என்று சபை மூப்பர்கள் சொல்வார்கள்; உதாரணத்திற்கு, பூட்டியிருக்கும் வீடுகளில் அழைப்பிதழை வைக்கலாமா, வேண்டாமா என்பது போன்ற ஆலோசனைகளைக் கொடுப்பார்கள். உங்கள் பிராந்தியத்திலுள்ள வீடுகளில் கொடுத்து முடித்த பிறகும் அழைப்பிதழ்கள் இருந்தால் பொது ஊழியத்தில் அவற்றைக் கொடுக்கலாம். பிரஸ்தாபிகள் எடுத்துக்கொள்வதற்காக, முகவரியிடப்பட்ட அழைப்பிதழ்கள் பத்திரிகை கவுன்ட்டரில் வைக்கப்படும்படி ஊழியக் கண்காணி பார்த்துக்கொள்வார். ஆனால், ஒரே சமயத்தில் எல்லா அழைப்பிதழ்களும் வைக்கப்படாது. ஒரு வாரத்திற்குத் தேவையான அழைப்பிதழ்களை மட்டுமே நாம் எடுத்துக்கொள்ள வேண்டும்.
3. அழைப்பிதழைக் கொடுக்கும்போது நாம் எதை நினைவில் வைக்க வேண்டும்?
3 என்ன சொல்லலாம்? சுருக்கமாகப் பேசுவது நல்லது. அப்போதுதான் நிறையப் பேரிடம் நம்மால் பேச முடியும். பக்கம் 6-ல் உள்ள மாதிரி அணுகுமுறையை நம் பிராந்தியத்திற்கு ஏற்றாற்போல் மாற்றியமைத்துப் பேசலாம். வீட்டுக்காரர் ஆர்வம் காட்டினாலோ ஏதாவது கேள்வி கேட்டாலோ நேரமெடுத்து பேசலாம். வாரயிறுதி நாட்களில் அழைப்பிதழோடு சேர்த்து பத்திரிகைகளையும் கொடுக்கலாம். மார்ச் 2 அன்று பைபிள் படிப்பு ஆரம்பிப்பதற்குப் பதிலாக அழைப்பிதழை விநியோகிப்பதில் அதிக கவனம் செலுத்துவோம்.
4. நாம் ஏன் இந்த விசேஷ விநியோகிப்பில் ஆர்வமாய்க் கலந்துகொள்ள வேண்டும்?
4 நிறையப் பேர் நினைவுநாள் அனுசரிப்பிற்கு வருவார்கள் என்று நாம் நம்புகிறோம். அன்று கொடுக்கப்படும் பேச்சு, இயேசு உண்மையில் யார் என்பதை விளக்கும். (1 கொ. 11:26) அவருடைய மரணம் நமக்கு எப்படி நன்மை அளிக்கிறது என்பதையும் விளக்கும். (ரோ. 6:23) நாம் அவரை நினைத்துப் பார்ப்பது ஏன் முக்கியம் என்பதையும் சிறப்பித்துக் காட்டும். (யோவா. 17:3) எனவே, நாம் எல்லோரும் இந்த விசேஷ விநியோகிப்பில் ஆர்வமாய்க் கலந்துகொள்வோமாக!