ஏப்ரல் 2 முதல் நினைவுநாள் அழைப்பிதழ்கள் விநியோகிக்கப்படும்
1. இந்த வருட நினைவுநாள் அனுசரிப்புக்கான அழைப்பிதழ்களை எப்போது விநியோகிப்போம், இந்த வருடாந்தர விநியோகிப்பு பலன் தந்திருக்கிறது என்பதை எது எடுத்துக்காட்டுகிறது?
1 இந்த வருடத்தின் மிக முக்கியமான நிகழ்ச்சியின், அதாவது கிறிஸ்துவின் மரண நினைவுநாள் அனுசரிப்பின், அழைப்பிதழ்கள் வரும் ஏப்ரல் 2 முதல் 17 வரை விநியோகிக்கப்படும். கடந்த வருடங்களில் நினைவுநாள் அழைப்பிதழ்களைப் பெற்ற ஆர்வமிக்க அநேகர் அந்தக் கூட்டத்திற்கு வந்திருக்கிறார்கள். உதாரணமாக, நினைவுநாள் அன்று, ஒரு கிளை அலுவலகத்திற்கு ஒரு பெண்மணி ஃபோன்கால் செய்து இவ்வாறு கேட்டார்: “நான் இப்போதுதான் வீட்டிற்கு வந்தேன். கதவைத் திறந்ததும் கீழே ஓர் அழைப்பிதழ் கிடப்பதைப் பார்த்தேன். இந்த நிகழ்ச்சிக்கு நான் போக விரும்புகிறேன்; ஆனால் அது ஆரம்பிக்கும் நேரம் எனக்குச் சரியாகத் தெரியவில்லை.” இந்தத் தகவல் அந்த அழைப்பிதழில் எங்கே உள்ளது என்பதை அந்தப் ஃபோன்காலுக்குப் பதிலளித்த சகோதரர் தெரிவித்தார். “இன்றைக்குச் சாயங்காலம் நான் அந்தக் கூட்டத்திற்குப் போகப்போகிறேன்” என அந்தப் பெண்மணி சொன்னார்.
2. இந்த அழைப்பிதழை வீட்டுக்காரரிடம் கொடுக்கும்போது என்ன சொல்லலாம்?
2 எப்படி விநியோகிப்போம்: கிட்டத்தட்ட இரண்டே வாரங்களில் நம்முடைய பிராந்தியம் முழுவதிலும் இவற்றை விநியோகிக்க வேண்டியிருப்பதால் சுருக்கமாகப் பேசுவது நல்லது. இவ்வாறு நாம் சொல்லலாம்: “வணக்கம். ஏப்ரல் 17-ஆம் தேதி, ஞாயிற்றுக் கிழமை உலகமெங்கும் ஒரு முக்கியமான நிகழ்ச்சியை நாங்கள் அனுசரிக்கிறோம்; அதற்கான அழைப்பிதழ் இது. நீங்களும் குடும்பத்தோடு வந்து கலந்துகொள்ள வேண்டுமென விரும்புகிறோம். [அழைப்பிதழை வீட்டுக்காரரிடம் கொடுங்கள்.] அன்றைக்கு, இயேசுவின் மரண நினைவுநாளை நாங்கள் அனுசரிக்கிறோம். இயேசு கிறிஸ்துவின் மீட்புப் பலியால் நாம் எப்படியெல்லாம் நன்மை அடைகிறோம் என்பதைப் பற்றி ஒரு பைபிள் பேச்சு கொடுக்கப்படும்; இந்தக் கூட்டத்திற்கு அனுமதி இலவசம்தான். நம் ஏரியாவில் இந்தக் கூட்டம் நடக்கப்போகிற இடமும் நேரமும் இந்த அழைப்பிதழில் இருக்கிறது.” பிரச்சினைக்குரிய பிராந்தியத்தில் நீங்கள் ஊழியம் செய்துகொண்டிருந்தால், அழைப்பிதழைக் கொடுப்பதற்கு முன் வீட்டுக்காரர் அதை ஏற்றுக்கொள்வாரா என்பதைத் தீர்மானிப்பது முக்கியம்.
3. அதிகமான ஆட்களை அழைக்க நாம் என்ன செய்யலாம்?
3 சபையின் பிராந்தியம் பெரிதாக இருந்தால், பூட்டப்பட்ட வீடுகளில் மற்றவர்கள் பார்வையில் படாத இடத்தில் அழைப்பிதழ்களை வைத்துவிட்டு வரும்படி மூப்பர்கள் தெரிவிக்கலாம். உங்கள் மறுசந்திப்பு நபர்கள், உறவினர்கள், சக பணியாளர்கள், சக மாணவர்கள், தெரிந்தவர்கள் என எல்லாரையும் அழைக்க மறவாதீர்கள். சனி, ஞாயிறு தினங்களில் இந்த விநியோகிப்பில் கலந்துகொள்ளும்போது பொருத்தமான சந்தர்ப்பங்களில் பத்திரிகைகளையும் சேர்த்துக் கொடுங்கள். ஏப்ரல் மாதம் உங்களால் துணைப் பயனியர் ஊழியம் செய்ய முடியுமா? சந்தோஷம் தருகிற இந்த விநியோகிப்பு வேலையில் அதிகமாக ஈடுபட முடியுமா?
4. ஆர்வமுள்ளவர்கள் நினைவுநாள் அனுசரிப்பிற்கு வர வேண்டுமென்று நாம் ஏன் விரும்புகிறோம்?
4 இந்தக் கூட்டத்தில் கலந்துகொள்கிறவர்கள் வலிமையான ஒரு செய்தியைக் கேள்விப்படுவார்கள் என்பது உறுதி! மீட்பு விலையைச் செலுத்தியதன் மூலம் யெகோவா காட்டியிருக்கிற மாபெரும் அன்பைப் பற்றி அவர்கள் தெரிந்துகொள்வார்கள். (யோவா. 3:16) கடவுளுடைய அரசாங்கத்தின் மூலம் மனிதகுலம் அடையப்போகிற ஆசீர்வாதங்களைப் பற்றியும் அவர்கள் கற்றுக்கொள்வார்கள். (ஏசா. 65:21-23) பைபிளிலிருந்து இதுபற்றி அதிகமாகக் கற்றுக்கொள்ள விரும்பினால், தங்களுடைய பெயர் மற்றும் விலாசத்தை அட்டென்டண்டுகளிடம் கொடுக்கும்படியான அறிவிப்பையும் கேட்பார்கள். நல்மனமுள்ள அநேகர் இந்த அழைப்பை ஏற்றுக்கொண்டு நினைவுநாள் அனுசரிப்பிற்கு வர வேண்டும் என்பதே நம் ஜெபம்!