தனிப்பட்ட அக்கறை காட்டுங்கள்—ஆட்களுக்கு ஏற்றவாறு பிரசங்கிப்பதன் மூலம்
1 அப்போஸ்தலன் பவுல், ஜனங்களுடைய பின்னணிக்கும் சிந்தனைக்கும் ஏற்றவாறே அவர்களிடம் பெரும்பாலும் பிரசங்கித்தார்; இந்த விஷயத்தில் நமக்கு ஒரு சிறந்த முன்மாதிரியை வைத்தார். (1 கொ. 9:19-23) நாமும் அதையே செய்ய முயல வேண்டும். கொஞ்சம் முன்யோசனை இருந்தால், நம் ராஜ்ய ஊழிய பிரதியிலுள்ள பிரசங்கங்களை, நம் பிராந்தியத்தில் உள்ள ஜனங்களின் தேவைகளுக்கு ஏற்றவாறு பெரும்பாலும் மாற்றியமைத்து உபயோகிக்கலாம். ஒரு வீட்டுக்குச் செல்கையில், அந்த வீட்டுக்காரரின் ஆர்வத்தை வெளிக்காட்டுகிற சில விஷயங்களைக் கவனித்து, அதற்கேற்றவாறு நம் பிரசங்கத்தை மாற்றியமைக்கலாம். என்றாலும், நம் ஊழியத்தில் வேறொரு விதத்தில்கூட ஆட்களுக்கு ஏற்றவாறு நாம் பிரசங்கிக்கலாம்.
2 வீட்டுக்காரரின் பதிலுக்கேற்ப மாற்றியமையுங்கள்: நற்செய்தியை அறிவிக்கும்போது, பெரும்பாலும் வீட்டுக்காரர்களிடம் ஒரு கேள்வியைக் கேட்டுவிட்டு பதிலுக்காகக் காத்திருக்கிறோம். இந்தப் பதிலை நீங்கள் எப்படி எடுத்துக்கொள்கிறீர்கள்? ‘அப்படியா,’ என்று ஒரு பேச்சுக்குச் சொல்லிவிட்டு, நீங்கள் தயாரித்திருந்தபடியே உரையாடலைத் தொடருகிறீர்களா? அல்லது உங்கள் பதில், வீட்டுக்காரர்கள் சொன்னதைக் கவனத்தில் எடுத்துக்கொண்டீர்கள் என்பதைக் காண்பிக்கிறதா? மற்றவர்கள் சொல்லும் விஷயத்தில் உங்களுக்கு உள்ளார்ந்த அக்கறை இருந்தால், அவர்கள் மனதில் என்னதான் இருக்கிறது என்பதைக் கண்டுபிடிக்க சாதுரியமாக இன்னும் ஓரிரண்டு கேள்விகளை நீங்கள் கேட்பீர்கள். (நீதி. 20:5) இவ்வாறு, கேட்பவரின் தேவைகளுக்கு ஏற்ற ராஜ்ய செய்தியின் அம்சங்களிடமாக நீங்கள் அவரது கவனத்தைத் திருப்ப முடியும்.
3 இப்படிச் செய்வதற்கு, நீங்கள் தயாரித்துச் சென்றிருந்த விஷயங்களைத் தவிர வேறு விஷயங்களை பற்றி பேசுவதற்கும் மனமுள்ளவர்களாய் இருக்க வேண்டும். பரபரப்பாகப் பேசப்படும் ஒரு பிரச்சினையைப் பற்றி சொல்லி உங்கள் உரையாடலைத் தொடங்குவதாக வைத்துக்கொள்வோம்; அப்போது வீட்டுக்காரர், தான் வசிக்கும் பகுதியிலுள்ள பிரச்சினையை அல்லது தன்னைப் பாதிக்கிற ஒரு பிரச்சினையைப் பற்றி குறிப்பிடுகிறார். இச்சந்தர்ப்பத்தில் அந்த வீட்டுக்காரருக்கு உதவ வேண்டும் என்ற உண்மையான அக்கறை நமக்கு இருக்கிறதென்றால், அவருக்குத் தேவையான விஷயத்தைப் பற்றியே பைபிளிலிருந்து எடுத்துப்பேசுவோம்.—பிலி. 2:4.
4 நம் அணுகுமுறையை மாற்றியமைத்தல்: வீட்டுக்காரர் ஏதாவதொரு கேள்வியைக் கேட்டால், அதைக் குறித்து நன்கு தயாரித்து, பிரயோஜனமான, கூடுதலான தகவல்களைத் திரட்டிச் சென்று, வேறொரு சந்தர்ப்பத்தில் அவருடன் பேசுவது பலன் தரலாம். அந்த விஷயத்தைக் குறித்து முழுமையான விவரத்தை அளிக்கும் பிரசுரங்களையும் அவருக்குக் கொடுக்கலாம். இப்படியெல்லாம் செய்வது, யெகோவாவைப் பற்றி தெரிந்துகொள்ள மற்றவர்களுக்கு உதவ வேண்டுமென்ற நம் உள்ளார்ந்த அக்கறையைக் காண்பிக்கிறது.—2 கொ. 2:17, NW.