2006 “மீட்பு விரைவில்” யெகோவாவின் சாட்சிகளது மாவட்ட மாநாடு
1 பண்டைய யூதாவில் ஆட்சி செய்துவந்த எசேக்கியா ராஜா, ஜனங்களை எருசலேமில் கூடிவரும்படி அழைப்புவிடுத்து கடிதங்கள் எழுதினார்; அவற்றை ஜனங்களிடம் சேர்க்க அஞ்சல்காரர்களைப் பயன்படுத்தினார். (2 நா. 30:6, 13) அதைப் பெற்றுக்கொண்டபோது அவர்கள் என்ன செய்தார்கள் என்பது மெய்வணக்கத்தைக் குறித்த அவர்களது மனநிலையைப் படம்பிடித்துக் காட்டியது. (2 நா. 30:10-12) அவர்களைப் போலவே சீக்கிரத்தில், யெகோவாவின் இன்றைய ஊழியர்களும் அவரை வணங்குவதற்காகக் கூடிவரக் கிடைத்த பாக்கியத்திற்கு இதயப்பூர்வமாக நன்றிதெரிவிக்க ஒரு வாய்ப்பைப் பெறுவார்கள். “மீட்பு விரைவில்” மாவட்ட மாநாட்டில் கலந்துகொள்ளுமாறு அழைப்புவிடுத்து எழுதப்பட்ட ஒரு கடிதம் உங்கள் சபைக்கு அனுப்பப்பட்டுள்ளது. நீங்கள் என்ன செய்யப்போகிறீர்கள்? முன்பெல்லாம் மாவட்ட மாநாடுகள் சிறிய அளவில் பல இடங்களில் நடத்தப்பட்டன. இதனால் புதியவர்கள் அதில் கலந்துகொள்ள வசதியாக இருந்தது; அத்துடன் அநேக சிறு நகரங்களில் உள்ள பொது மக்களுக்கு யெகோவாவின் சாட்சிகளை உன்னிப்பாக கவனிக்க வாய்ப்பும் கிடைத்தது. ஆனால் இந்த வருட மாநாடுகள் அவற்றைவிட மிகப் பெரியளவில் நடத்தப்பட இருக்கின்றன; இதனால் பல இடங்களைச் சேர்ந்த சாட்சிகளுடன் பழகுவதற்கு வாய்ப்பு கிடைக்கும்.
2 இப்பொழுதே ஏற்பாடு செய்யுங்கள்: அன்புடன் தயாரிக்கப்பட்டு வரும் ஆன்மீக நிகழ்ச்சியிலிருந்து முழுமையாகப் பலன்பெற, அந்நிகழ்ச்சி முழுவதிலும் நாம் கலந்துகொள்ள வேண்டும். நீங்களும் உங்கள் குடும்பத்தாரும் அந்த மூன்று நாட்களிலும் கலந்துகொள்ளத் தேவையான ஏற்பாடுகள் அனைத்தையும் இப்பொழுதே செய்வது ஞானமானது. (நீதி. 21:5) நீங்கள் வேலை பார்க்கும் இடத்தில் உங்கள் அதிகாரியிடம் லீவு கேட்டு விண்ணப்பிப்பது, சாட்சியாய் இராத உங்கள் துணைவரிடம் உங்கள் திட்டங்களைக் கலந்துபேசுவது, ஓட்டல் அறைகளை புக் செய்வது, உங்கள் பைபிள் மாணாக்கர்களும் இந்த மாநாட்டில் கலந்துகொள்ளத் தேவையான உதவிகளைச் செய்வது போன்றவற்றிற்கு ஏற்பாடு செய்ய வேண்டியிருக்கலாம். முக்கியமான இந்தக் காரியங்களை கடைசி நிமிடம்வரை தள்ளிப்போடாதீர்கள். மாறாக, யெகோவாவே “காரியத்தை வாய்க்கப்பண்ணுவார்” என்ற நம்பிக்கையுடன் இவற்றைக் குறித்து அவரிடம் ஜெபம் செய்யுங்கள். (சங். 37:5) கவனமாகத் திட்டமிட்டோமெனில், பணப் பிரச்சினையைத் தவிர்க்கலாம். இன்றுமுதல், மாநாட்டிற்குச் செல்லும்வரை, ஒவ்வொரு வாரமும் கொஞ்சம் கொஞ்சமாகப் பணத்தைச் சேர்த்துவைத்தால், நம் குடும்பத்தார் அனைவரும் செல்லுகையில் போக்குவரத்துக்கும், தங்கும் இடங்களுக்கும் ஆகும் செலவைச் சமாளித்துவிடலாம்.—1 கொரிந்தியர் 16:2-ஐ ஒப்பிடவும்.
3 மாநாடு நடக்கும் ஒவ்வொரு நகரிலும் போதுமான அளவில் தங்கும் வசதிகளைச் செய்து தருவதற்காக யெகோவாவின் அமைப்பு அதிக சிரமத்துடன் உழைத்திருக்கிறது. இதுபோன்ற ஏற்பாடுகளைச் செய்துதர கடினமாக உழைக்கும் சகோதரர்களின் சுயதியாக முயற்சிகளைக் குறித்து நமக்கு நன்றியுணர்வு இருக்குமானால், மாநாட்டுக்கு வரும் சகோதர சகோதரிகள்மீது நமக்கு அக்கறை இருக்குமானால், தேவராஜ்ய ஒழுங்கிற்கு மரியாதை காண்பித்தோமானால், இக்கட்டுரையில் கொடுக்கப்பட்டுள்ள குறிப்புகளைப் பின்பற்றுவதில் முழுமையாக ஒத்துழைக்க நாம் தூண்டப்படுவோம்.—1 கொ. 13:5; 1 தெ. 5:12, 13; எபி. 13:17.
4 ஓட்டலில் புக் செய்வது: தங்குவதற்காகச் சிபாரிசு செய்யப்பட்ட ஓட்டல்களின் பெயர்ப் பட்டியல், மாநாடு நடைபெறப்போகும் தேதிகளுக்கு வெகு முன்னதாகவே சபையின் தகவல் பலகையில் போடப்படும். நீங்கள் ஒத்துழைத்தால், மாநாடு நடக்கும் இடத்திற்கு அருகிலேயே நியாயமான வாடகைக்கு உயர்தர ஓட்டல்களில் வருடந்தோறும் ரூம்களை புக் செய்ய முடியும்.—1 கொ. 14:40.
5 மாநாட்டின்போது ஓட்டலில் உங்களுக்கு எத்தனை அறைகள் தேவைப்படுமோ, அவற்றை மட்டுமே புக் செய்யுங்கள். நீங்கள் வேறு யாருக்காவது சேர்த்து புக் செய்வதாக இருந்தால், நீங்களும் அவர்களும் முன்கூட்டியே ஒப்புக்கொண்ட பிறகும், தங்குவோரின் பெயர்களைத் திட்டவட்டமாகத் தெரிந்துகொண்ட பிறகுமே புக் செய்யுங்கள், இல்லாவிட்டால், மற்றவர்களுக்காக அறைகளை தயவுசெய்து புக் செய்யாதீர்கள். ஏனெனில் இது, மாநாட்டிற்காக அதிக அறைகள் புக் செய்யப்படுவதாகக் காட்டி, மற்றவர்களுக்கு அறை கிடைக்காதபடி ஆக்கிவிடும். அறையில் தங்கப்போகிறவர்களில் ஒருவரது பெயரில் அறைகளை புக் செய்ய வேண்டும்.
6 உங்கள் புக்கிங்கை உறுதிப்படுத்திக்கொள்வதற்கு, நீங்கள் புக் செய்யும் ஒவ்வொரு ரூமுக்காகவும் ஓரளவு முன்பணம் கட்ட வேண்டும். இல்லாவிட்டால், நீங்கள் புக் செய்திருக்கும் ரூமை வேறு யாருக்காவது ஓட்டல் நிர்வாகம் கொடுத்துவிடலாம். பட்டியலில் கொடுக்கப்பட்டுள்ள எல்லா ஓட்டல்களிலுமே ரூம்கள் காலி இல்லை எனத் தெரிந்தால், அல்லது ஓர் ஓட்டலில் புக் செய்யும்போது உங்களுக்கு ஏதாவது பிரச்சினை ஏற்பட்டால், உங்கள் சபை செயலரிடம் தெரியப்படுத்துங்கள். அப்போது அவர் அந்தப் பட்டியலின் ஆரம்பத்தில் கொடுக்கப்பட்டுள்ள தகவலைப் பயன்படுத்தி, மாநாட்டு அறை வசதி இலாகாவுடன் தொடர்புகொள்வார், கிளை அலுவலகத்துடன் அல்ல. பட்டியலில் இல்லாத ஓர் ஓட்டலுடன் தொடர்புகொள்வதற்குப் பதிலாக, உங்கள் மாநாட்டுக்காகச் சிபாரிசு செய்யப்பட்டுள்ள ஓட்டல்களின் புதிய பட்டியல் வரும்வரை தயவுசெய்து காத்திருங்கள்.
7 விசேஷத் தேவைகள்: நீதிமொழிகள் 3:27 சொல்வதாவது: “நன்மைசெய்யும்படி உனக்குத் திராணியிருக்கும்போது, அதை செய்யத்தக்கவர்களுக்குச் செய்யாமல் இராதே.” அப்படியானால், மாநாடு சம்பந்தமாக மற்றவர்களுக்கு நீங்கள் எப்படி நன்மை செய்யலாம்? வயதான பிரஸ்தாபிகள், உடல்நலமில்லாதவர்கள், முழுநேர ஊழியர்கள் போன்றவர்களுக்கு போக்குவரத்து அல்லது தங்கும் வசதிகளைச் செய்ய நடைமுறையான உதவி தேவைப்படலாம். இப்படிப்பட்டவர்களுக்கு உதவுவது முக்கியமாக உறவினர்களின் பொறுப்பு ஆகும். (1 தீ. 5:4) அவர்களால் முடியாவிட்டால், சக விசுவாசிகள் உதவலாம். (கலா. 6:10) புத்தகப் படிப்புக் கண்காணிகள் தங்கள் தொகுதியில், விசேஷத் தேவையில் உள்ளவர்கள் யாராவது இருந்தால், அவர்களுக்குத் தேவையான உதவிகள் செய்யப்பட்டு விட்டதா என்பதை மாநாடு நடப்பதற்கு வெகு முன்னதாகவே விசாரிக்க வேண்டும்.
8 குடும்பத்தாலோ, சபையாலோ கவனிக்கப்பட முடியாதவர்களுக்கு, தங்கும் வசதிக்கான தேவை இருந்தால் மட்டுமே ஸ்பெஷல் நீட்ஸ் ரூம் ரிக்வெஸ்ட் படிவங்கள் தரப்படும். சபை ஊழியக் குழு அந்தப் பிரஸ்தாபியின் தகுதிகளைப் பரிசீலிக்க வேண்டும்; அந்தப் படிவத்தில் கொடுக்கப்பட்டுள்ள குறிப்புகளையும், அனைத்து மூப்பர் குழுக்களுக்கும் அனுப்பப்பட்ட டிசம்பர் 14, 2005 தேதியிட்ட கடிதத்தையும் வைத்து பரிசீலிக்க வேண்டும். நல்ல நிலைநிற்கையிலுள்ள பிரஸ்தாபிகளுக்கும், நல்நடத்தையுள்ள அவர்களது பிள்ளைகளுக்குமே இந்த ஏற்பாடு செய்து தரப்படும்.
9 வேறொரு மாநாட்டிற்குச் செல்லுதல்: மாநாட்டிற்கு வருவோருக்குப் போதுமான இருக்கை வசதிகள், பிரசுரங்கள், அறைவசதி ஆகிய ஏற்பாடுகளைச் சரிவர செய்வதற்காகவும், இதுபோன்ற பிற காரணங்களுக்காகவும் உங்கள் சபைக்கு நியமிக்கப்பட்டுள்ள மாநாட்டிற்கு மட்டுமே செல்லும்படி உங்களை ஊக்கப்படுத்துகிறோம். சூழ்நிலை காரணமாக வேறொரு மாநாட்டிற்கு நீங்கள் செல்ல நேர்ந்தால், அதைப் பற்றிய தகவலறிய உங்கள் சபை செயலரை அணுகுங்கள். சிபாரிசு செய்யப்பட்ட ஓட்டல்களின் பட்டியல் அல்லது வேறு தகவல் சம்பந்தமான கடிதத்தை, சுயவிலாசமிட்டு ஸ்டாம்ப் ஒட்டப்பட்ட கவருடன் சேர்த்து அனுப்புங்கள். அந்நகரில் ஒன்றுக்கு மேற்பட்ட மாநாடு நடக்கவிருந்தால், நீங்கள் கலந்துகொள்ளப்போகும் மாநாட்டுத் தேதிகளை அதில் குறிப்பிடுங்கள்.
10 வாலண்டியர் சேவைக்கு முன்வருதல்: மாநாட்டிற்கு வந்து, ஆன்மீக உணவிலிருந்தும் உற்சாகமூட்டும் கூட்டுறவிலிருந்தும் பலன் பெறும் அனைவருமே அதிக மகிழ்ச்சி அடைவார்கள் என்பதில் சந்தேகமில்லை. மாநாடு வெற்றிகரமாய் நடப்பதற்கு உதவியாக வாலண்டியர் சேவைக்கு முன்வந்தால் நம் சந்தோஷம் இன்னும் பல மடங்கு அதிகமாகும். (அப். 20:35) உள்ளூர் மாநாட்டுக் குழுவைச் சேர்ந்த சகோதரர்கள் இந்த வேலையில் பங்குகொள்ள சீக்கிரத்தில் உங்களுக்கு அழைப்பு விடுப்பார்கள். நீங்கள் முன்வருவீர்களா?—சங். 110:3.
11 மாவட்ட மாநாடு ஒன்றில் கலந்துகொண்ட ஐந்து வயது சிறுவன் இவ்வாறு கூறினான்: “யெகோவாவின் வணக்கத்தில் எனக்கு ரொம்பவும் பிடித்தது மாவட்ட மாநாடுதான்.” இருதயப்பூர்வமான அந்த வார்த்தைகள், வருடாந்தர மாவட்ட மாநாட்டில் கலந்துகொள்கையில் எவ்வளவு மகிழ்ச்சி அடைகிறோம் என்பதை நம் அனைவருக்கும் உணர்த்துகிறது. சொல்லப்போனால், சங்கீதக்காரன் பின்வருமாறு பாடியதைப் போன்றே அது இருக்கிறது: “ஆயிரம் நாளைப் பார்க்கிலும் உமது பிராகாரங்களில் செல்லும் ஒரே நாள் நல்லது.” (சங். 84:10) ‘அவருடைய ஆலயத்தில் ஆராய்ச்சி செய்யும்படியாக, நான் என் ஜீவனுள்ள நாளெல்லாம் கர்த்தருடைய ஆலயத்தில் தங்கியிருப்பதையே நாடுவேன்’ என பாட்டு வடிவில் தாவீது தன் ஆசையை வெளிப்படுத்தினார். (சங். 27:4) யெகோவாவின் வணக்கத்தாருடன் இருப்பது தாவீதுக்கு மிகுந்த இன்பம் அளித்தது. மெய் வணக்கத்திற்கு அவர் மதிப்பு காட்டிய விதமாகவே நாமும், “மீட்பு விரைவில்” மாவட்ட மாநாட்டில் மூன்று நாட்களும் கலந்துகொள்வதன் மூலம் நம் மதித்துணர்வை வெளிக்காட்டுவோமாக.
[கேள்விகள்]
1. பண்டைய காலங்களில் கடவுளுடைய ஜனங்கள் மெய் வணக்கத்திற்கு தங்கள் மதித்துணர்வை எப்படிக் காட்டினார்கள், அதைப் போன்ற என்ன வாய்ப்பு இன்று நமக்குள்ளது?
2. மாநாட்டிலிருந்து முழுமையாகப் பலன்பெற நாம் இப்பொழுதே என்ன செய்யலாம்?
3. தங்கும் வசதிகளுக்காகச் செய்யப்படும் ஏற்பாடுகளுக்கு நாம் ஏன் ஒத்துழைப்பு தர வேண்டும்?
4-6. ஓட்டல் அறைகளை புக் செய்கையில் என்ன முக்கியமான குறிப்புகளை மனதில் வைத்திருக்க வேண்டும், ஏன்? (பக்கம் 4-ல் உள்ள பெட்டியையும் சேர்த்துக்கொள்ளுங்கள்.)
7, 8. விசேஷ கவனம் செலுத்தப்பட வேண்டியோருக்கு எப்படி உதவி செய்யப்படுகிறது?
9. (அ) நமக்கென்று நியமிக்கப்பட்ட மாநாட்டில் மட்டுமே நாம் ஏன் கலந்துகொள்ள வேண்டும்? (ஆ) சூழ்நிலை காரணமாக நீங்கள் வேறொரு மாநாட்டிற்குச் செல்ல நேர்ந்தால் என்னென்ன செய்ய வேண்டும்?
10. வரவிருக்கும் மாநாட்டின்போது நம் சந்தோஷத்தை அதிகரிப்பதற்கான ஒரு வழி எது?
11. வருடாந்தர மாவட்ட மாநாட்டின் எந்த அம்சத்தை நீங்கள் மதித்துணருகிறீர்கள், உங்கள் தீர்மானம் என்னவாக இருக்க வேண்டும்?
[பக்கம் 3-ன் பெட்டி]
நிகழ்ச்சிநிரல் நேரம்
வெள்ளி, சனி
காலை 9:30 - மாலை 5:05
ஞாயிறு
காலை 9:30 - மாலை 4:10
[பக்கம் 4-ன் பெட்டி]
ஓட்டல் ரூம் புக்கிங்கிற்கு நீங்கள் செய்ய வேண்டியவை
1. சிபாரிசு செய்யப்படும் தங்குமிடங்களுக்கான பட்டியலிலுள்ள ஃபோன் நம்பரை உபயோகித்து வேலை நேரத்தில் ஓட்டலுக்கு ஃபோன் செய்யுங்கள்.
2. யெகோவாவின் சாட்சிகளது மாநாட்டில் கலந்துகொள்கிறீர்கள் என்பதை ஓட்டல் நிர்வாகத்தாரிடம் தெரிவியுங்கள்.
3. ஓட்டலில் எந்தத் தேதியிலிருந்து எந்தத் தேதிவரை தங்குகிறீர்கள் என்பதைக் குறிப்பிடுங்கள்.
4. அறைகள் கிடைக்காவிட்டால் பட்டியலிலுள்ள வேறொரு ஓட்டலுக்கு ஃபோன் செய்யுங்கள்.
5. பட்டியலில் குறிப்பிடப்பட்டதற்கும் அதிகமான வாடகைக்கு ஒத்துக்கொள்ளாதீர்கள்.
6. புக் செய்தபின், அதை உறுதிப்படுத்திக்கொள்ளுங்கள்.
7. பத்து நாட்களுக்குள் கிரெடிட் கார்ட், செக், அல்லது மணி ஆர்டர் மூலமாக முன்பணத்தைக் கட்டிவிடுங்கள். ஒருபோதும் ரொக்கமாக அனுப்பாதீர்கள். செக் அல்லது மணி ஆர்டர் மூலமாக முன்பணத்தை அனுப்புகையில், உறுதி செய்துகொண்ட விவரத்தை முன்பக்கத்தில் எழுதுங்கள்.
தயவுசெய்து
◼ உங்களுக்கு உண்மையிலேயே தேவைப்படும் அறைகளை மட்டுமே புக் செய்யுங்கள்.
◼ ஒரு முறை புக் செய்த பிறகு அதை ரத்து செய்யாதீர்கள்.—மத். 5:37.
◼ ஓட்டல் நிர்வாகம் அனுமதிப்பதற்கும் அதிகமான ஆட்களை அறையில் தங்க வைக்காதீர்கள்.