உங்கள் பிள்ளைகள் முதிர்ச்சியான தீர்மானம் எடுப்பார்களா?
1 எந்த விஷயத்தில் முதிர்ச்சியான தீர்மானம் எடுக்க வேண்டும்? இரத்தமேற்றும் விஷயத்தில். காவற்கோபுர பத்திரிகையின் மார்ச் 15, 1992 இதழில் “யெகோவா போதித்திருக்கிறபடி நடவுங்கள்” என்ற தலைப்பில் ஒரு கட்டுரை வெளிவந்திருந்தது. அதில், யெகோவாவின் சாட்சிகளது பிள்ளைகள், இரத்தத்தைப் பற்றிய கடவுளுடைய சட்டத்திற்குக் கீழ்ப்படிவது தங்கள் பெற்றோருக்கு எந்தளவு முக்கியமோ அந்தளவு தங்களுக்கும் முக்கியம் என்பதை நிரூபிப்பதற்காக உறுதியான நிலைநிற்கை எடுக்க வேண்டியிருந்தது குறிப்பிடப்பட்டிருந்தது. அப்படியானால், மைனராக இருக்கும் உங்கள் பிள்ளையும் அவ்வாறே உறுதியான நிலைநிற்கை எடுக்க வேண்டியிருக்குமா?
2 சட்டம் என்ன சொல்கிறது? முதிர்ச்சிபெற்ற ஒரு மைனருக்கு, இரத்தமேற்றிக்கொள்ள மறுப்பதற்குரிய உரிமை இருப்பதை ஆதரித்து அமெரிக்காவில் தீர்ப்பளித்த மிகப் பெரிய நீதிமன்றம், இல்லினாய்ஸ் உச்ச நீதிமன்றம் ஆகும். 17 வயதான ஒரு சகோதரியின் வழக்கை விசாரித்த பின், அந்த நீதிமன்றம் இவ்வாறு தீர்ப்பளித்தது: “தன் செயல்களின் பின்விளைவுகளைப் புரிந்துகொள்கிற பக்குவமும், பெரியவர்களைப் போல் ஒப்பிட்டுப்பார்த்து முடிவெடுக்கும் பக்குவமும் அந்தப் பெண்ணுக்கு இருப்பதற்கான அத்தாட்சி தெளிவாகவும் நம்பகமாகவும் தெரிந்தால், முதிர்ச்சிவாய்ந்த மைனர் சம்பந்தமான சட்டம், மருத்துவச் சிகிச்சையை ஏற்றுக்கொள்வதற்கோ மறுப்பதற்கோ அவளுக்கு உரிமை அளிக்கிறது.” எனவே, நோயாளியாக இருக்கும் ஒரு பிள்ளை சொந்த தீர்மானமெடுக்கும் அளவுக்கு முதிர்ச்சிபெற்றிருக்கிறதா இல்லையா என்பதைத் தீர்மானிக்க, டாக்டர்களோ அதிகாரிகளோ அதனிடம் விசாரணை நடத்தி, இரத்தமேற்க மறுப்பதை அதன் வாயிலிருந்தே கேட்டுத் தெரிந்துகொள்ளலாம். அச்சமயத்தில் அந்தப் பிள்ளை மருத்துவ ரீதியில் தன்னுடைய உடல்நிலை எந்தளவுக்குப் பாதிக்கப்பட்டுள்ளது என்பதையும், தான் ஏற்றுக்கொள்ள விரும்புகிற சிகிச்சையின் பின்விளைவுகளைப் பற்றியும் போதுமானளவு புரிந்துவைத்திருக்க வேண்டும்; அதோடு இரத்தத்தைக் குறித்த கடவுளுடைய சட்டத்தைப் பற்றிய தன் சொந்த மத நம்பிக்கையைத் தெளிவாகவும் உறுதியாகவும் தெரிவிக்க வேண்டும்.
3 உங்கள் பிள்ளை என்ன சொல்லும்? இந்த விஷயத்தில் உங்கள் பிள்ளைகளுக்குப் பேசத் தெரிந்திருக்கிறதா? ‘இரத்தத்திற்கு விலகியிருக்க’ வேண்டுமென்பது கடவுள் கொடுத்த கட்டளை என்பதை இதயப்பூர்வமாக அவர்கள் நம்புகிறார்களா? (அப். 15:29; 21:25) வேதப்பூர்வமாக தங்கள் நம்பிக்கையை அவர்களால் விளக்க முடியுமா? அவர்களது உயிருக்கு ஆபத்து என்று நினைக்கும் டாக்டர்களிடம், இரத்தம் சம்பந்தமாக தாங்கள் எடுத்திருக்கும் உறுதியான தீர்மானத்தை ஆதரித்து தைரியமாகப் பேசுவார்களா? அதுவும், தங்கள் பெற்றோர் இல்லாத சமயத்தில்? ‘[நம்] எல்லாருக்குமே சமயமும் எதிர்பாராத சம்பவமும் நேரிடும்’ என்பதால், உங்கள் பிள்ளைகளின் உத்தமத்தன்மைக்கு எதிர்பாராமல் ஏதாவது சோதனை வரும்போது நடந்துகொள்ள வேண்டிய விதத்தைக் குறித்து நீங்கள் எப்படி முன்கூட்டியே அவர்களைத் தயார்படுத்தலாம்?—பிர. 9:11, NW; எபே. 6:4.
4 பெற்றோர்களே, நீங்கள் என்ன செய்யலாம்? இரத்தத்தைப் பற்றிய கடவுளின் நோக்குநிலையை உங்கள் பிள்ளைகளுக்குக் கற்பிக்க வேண்டிய பொறுப்பு உங்களுக்கு இருக்கிறது. (2 தீ. 3:14, 15) இதைப் பற்றிய தெளிவான விளக்கம் நியாயங்காட்டிப் பேசுதல் புத்தகத்தில், பக்கங்கள் 70-4-ல் உள்ளது. உங்கள் குடும்பத்தோடு சேர்ந்து அதைக் கவனமாகப் படியுங்கள். பக்கங்கள் 74-6-ல், “ஒருவர் இவ்வாறு சொன்னால்—” என்று தலைப்பிட்ட பகுதியைப் பயன்படுத்தி உங்கள் பிள்ளைகளோடு பேசிப்பார்த்துக்கொள்ளுங்கள்; இவ்வாறு செய்வது, தாங்கள் என்ன நம்புகிறார்கள், ஏன் நம்புகிறார்கள் என்பதையெல்லாம் பேசுவதற்குப் பழக்குவிக்க உதவும். (1 பே. 3:15) இரத்தமேற்றுதலை மறுப்பது பற்றி இன்னும் கூடுதலான விஷயங்கள், உங்கள் உயிரை இரத்தம் எப்படிக் காப்பாற்ற முடியும்? என்ற சிற்றேட்டிலும், காவற்கோபுர பத்திரிகையின் ஜூன் 15, 2004 இதழில் பக்கங்கள் 14-24-லும் காணப்படுகின்றன. அத்துடன் ஆங்கிலத்திலுள்ள, உடல்நல பராமரிப்புக்கான இரத்தமில்லா மாற்று சிகிச்சை—நோயாளியின் தேவைகளையும் உரிமைகளையும் மதித்தல், இரத்தமின்றி சிகிச்சை—மருத்துவம் இந்தச் சவாலை சந்திக்கிறது ஆகிய வீடியோக்களும் இரத்தமில்லா மாற்று சிகிச்சை முறைகள்—டாக்குமென்ட்டரி சீரீஸ் என்ற தலைப்பில் டிவிடி-யில் தற்போது உள்ளன; இவை, இரத்தமில்லா மருத்துவ சிகிச்சைகளும் அறுவை சிகிச்சைகளும் எந்தளவுக்கு விவேகமானவை, சிறந்தவை என்பது பற்றிய நம்பத்தக்க தகவலைத் தருகின்றன. சமீபத்தில் இந்த வீடியோக்களை நீங்கள் குடும்பமாகப் பார்த்து, அவற்றைப் பற்றி கலந்தாலோசித்தீர்களா?
5 இரத்தம் சம்பந்தப்பட்ட விஷயத்தில், “தேவனுடைய நன்மையும் பிரியமும் பரிபூரணமுமான சித்தம் இன்னதென்று பகுத்தறிய [“தங்களுக்குத் தாங்களே நிரூபித்துக்கொள்ள,” NW]” உங்கள் பிள்ளைகளுக்கு உதவுங்கள். அப்போது யெகோவாவின் ஆசீர்வாதத்தைப் பெறும் விதத்தில் முதிர்ச்சியான தீர்மானத்தை அவர்கள் எடுப்பார்கள்.—ரோ. 12:2.
[கேள்விகள்]
1. இரத்தமேற்றுதல் சம்பந்தமாக சாட்சிகளது பிள்ளைகள் என்ன நிலைநிற்கை எடுத்திருக்கின்றனர்? உதாரணம் தருக.
2. இரத்தமேற்றிக்கொள்ள மறுத்த ஒரு மைனரின் விஷயத்தில், எந்தச் சட்டத்தை ஒரு நீதிமன்றம் பின்பற்றியது, இதிலிருந்து கிறிஸ்தவப் பெற்றோரும் அவர்களது மைனர் பிள்ளைகளும் என்ன கற்றுக்கொள்ளலாம்?
3. பெற்றோர்கள் முக்கியமான என்ன கேள்விகளுக்கு மிகுந்த கவனம் செலுத்த வேண்டும், ஏன்?
4, 5. (அ) பெற்றோர்களுக்கு என்ன பொறுப்பு இருக்கிறது, அதை அவர்கள் எப்படி நிறைவேற்றலாம்? (ஆ) பெற்றோர்களுக்கு உதவும் வகையில் என்ன ஏற்பாடுகள் உள்ளன?