நம் பைபிள் பிரசுரங்களை ஞானமாக உபயோகியுங்கள்
1 “உங்கள் பிரசுரங்களை 1965 முதல் வாசித்து வருகிறேன். வாசிக்கும்போது அதிலுள்ள வசனங்களை பைபிளில் எடுத்துப் பார்ப்பேன்; உங்கள் பிரசுரங்களிலுள்ள அனைத்து தகவல்களும் பைபிளுக்கு ஒத்திசைவாய் இருக்கின்றன. நிஜத்தில் கடவுளும் இயேசுவும் யார் என்பதைப் பற்றிய சத்தியத்தை எப்படியாவது அறிந்துகொள்ள வேண்டுமென்பதே என் நெடுநாள் ஆசை. உள்ளதைச் சொல்ல வேண்டுமென்றால், பைபிளிலிருந்தும் உங்கள் பிரசுரங்களிலிருந்தும் சரியான பதில்களைக் கண்டுபிடித்து வருகிறேன்” இவ்வாறு, யெகோவாவின் சாட்சிகளது தலைமை அலுவலகத்திற்கு ஒருவர் கடிதம் எழுதியிருந்தார். பைபிள் படிப்புக்கு ஏற்பாடு செய்யும்படியும் கேட்டு எழுதியிருந்தார்.
2 அவரைப் போலவே, உலகெங்கும் லட்சக்கணக்கானோர், “உண்மையும் விவேகமுமுள்ள அடிமை” வகுப்பினரால் அளிக்கப்படும் பைபிள் பிரசுரங்களுக்கு நன்றியுள்ளவர்களாய் இருக்கின்றனர். (மத். 24:45, NW) நேர்மை மனமுள்ளவர்கள் ‘சத்தியத்தின் திருத்தமான அறிவைப் பெற்றுக்கொள்ள’ வேண்டும் என்பதற்காக ஒவ்வொரு ஆண்டும் ஏராளமான பிரசுரங்கள் தயாரிக்கப்படுகின்றன. (1 தீ. 2:4, NW) அத்தகைய பைபிள் பிரசுரங்களை நாம் எப்படி ஞானமாக உபயோகிக்கலாம்?
3 வீணாக்குவதைத் தவிருங்கள்: காலப்போக்கில், தேவைக்கு அதிகமாகவே பிரசுரங்கள் நம்மிடம் சேர்ந்துவிடலாம். மதிப்புமிக்க நம் பிரசுரங்களை வீணாக்காதிருக்க நாம் என்ன செய்யலாம்? ஊழியத்தில் உபயோகிப்பதற்காக பிரசுரங்களைப் பெற்றுக்கொள்ளும்போது பகுத்துணர்வு தேவைப்படுகிறது. நிறைய பிரதிகளைப் பெற்றுக்கொள்வதற்குப் பதிலாக, முதலில் ஓரிரண்டு பிரதிகளைப் பெற்றுக்கொண்டு, அவற்றை அளித்த பின்னர் கூடுதலான பிரதிகளைப் பெற்றுக்கொள்ளலாம். இவ்வாறு, நம் வீடுகளில் ஏராளமான பிரசுரங்களைத் தேக்கிவைப்பதைத் தவிர்க்கலாம். அப்படி நிறைய பத்திரிகைகள் நம்மிடம் சேர்ந்துவிட்டதென்றால், பத்திரிகைகளின் ஆர்டரைக் குறைப்பது நல்லது.
4 முடங்கிக்கிடக்கும் பிரசுரங்கள்: சபையில், குறிப்பிட்ட சில பிரசுரங்கள் அதிகளவில் முடங்கிக்கிடந்தால், பிரசுர ஒருங்கிணைப்பாளர், அந்த ஏரியாவிலுள்ள மற்ற சபைகளுடன் தொடர்புகொண்டு, தேவைப்பட்டால் அவற்றை அவர்களுக்குக் கொடுக்கலாம். பிரஸ்தாபிகள், சத்தியத்தில் இல்லாத உறவினர்களிடமும், தங்களோடு பைபிள் படிப்பவர்களிடமும் மற்றவர்களிடமும் பழைய பிரசுரங்களைக் கொடுக்கலாம். சபைக்குப் புதிதாக வருபவர்கள் இந்தப் பழைய பிரசுரங்களைத் தங்கள் வீட்டு நூலகத்தில் வைத்துக்கொள்ள விரும்பக்கூடும்.
5 நம்முடைய பிரசுரங்கள் என்ன நோக்கத்தோடு பிரசுரிக்கப்படுகின்றனவோ அந்த நோக்கம் நிறைவேற வேண்டும் என்றே நாம் விரும்புகிறோம்; அதாவது நல்மனமுள்ளவர்கள் யெகோவாவின் மகத்தான நோக்கங்களைப் பற்றி இன்னும் அதிகமாகக் கற்றுக்கொள்ள வேண்டும் என்றே விரும்புகிறோம். ஆகவே, இயேசு ஏராளமான ஜனங்களுக்கு அற்புதமாக உணவளித்த பின்பு மீதமான உணவை எப்படி வீணாக்கவில்லையோ அப்படியே நாமும் மதிப்புவாய்ந்த நம் பைபிள் பிரசுரங்களை வீணாக்காமல், அவற்றை மிகச் சிறந்த விதத்தில் உபயோகிப்பதில் குறியாய் இருக்க வேண்டும். (யோவா. 6:11-13) இப்பிரசுரங்கள் நம்முடைய ஷெல்ஃபுகளிலோ பைகளிலோ முடங்கியே கிடந்தால், அவற்றிலுள்ள உயிர் காக்கும் செய்தி நீதியை நேசிப்பவர்களின் இருதயத்தைச் சென்றெட்டாமலேயே போய்விடும். ஆகையால், ஊழியத்தில் உபயோகிப்பதற்காக போதுமானளவு மட்டுமே பிரசுரங்களை நாம் பெற்றுக்கொள்ள வேண்டும்; மற்றவர்களுக்குப் பிரயோஜனமாகிற விதத்தில் அவற்றை ஞானமாக உபயோகிக்கவும் வேண்டும்.—பிலி. 4:5, NW.
[கேள்விகள்]
1, 2. அநேகர் நம் பிரசுரங்களைக் குறித்து எப்படி உணருகின்றனர், இது என்ன கேள்வியை எழுப்புகிறது?
3. பிரசுரங்களை வீணாக்காதிருக்க நாம் என்ன செய்யலாம்?
4. சபையில் பிரசுரங்கள் முடங்கிக்கிடந்தால் என்ன செய்யலாம்?
5. நம் பிரசுரங்களுக்கான போற்றுதலை நாம் எப்படிக் காண்பிக்கலாம்?