நடைமுறைக்கு உதவும் ஒரு பள்ளி
1 2006-ம் ஆண்டிற்கான தேவராஜ்ய ஊழியப் பள்ளி அட்டவணையில் கொடுக்கப்பட்டுள்ள பேச்சுப்பொருள்களை ஒவ்வொரு வாரமும் சிந்தித்துவரும்போது, அத்தகைய பைபிள் போதனைகளை நாம் செய்யும் பரிசுத்த சேவையிலும் நம் அன்றாட வாழ்க்கையிலும் கடைப்பிடிப்பதன் மூலம் நன்மை அடைய பிரயாசப்படுகிறோம். நாம் கற்றுக்கொள்கிற அந்தக் காரியங்களைக் கடைப்பிடிக்கத் தீர்மானமாய் இருக்கிறோம்.—யோவா. 13:17; பிலி. 4:9.
2 குறிப்புகள் சொல்வது: இந்த ஆண்டின் அட்டவணைப்படி, பைபிள் வாசிப்பின் சிறப்புக் குறிப்புகள் பகுதியில், சபையார் தங்கள் குறிப்புகளைச் சொல்வதற்குக் கூடுதலாக ஒரு நிமிடம் ஒதுக்கப்பட்டுள்ளது. எனவே, சிறப்புக் குறிப்புகள் பகுதியைக் கையாளும் சகோதரர் ஆறு நிமிடங்களுக்குப் பதிலாக ஐந்தே நிமிடங்களில் தான் சொல்ல நினைப்பதைச் சொல்லி முடித்துக்கொள்ள கவனமாக இருக்க வேண்டும். குறிப்பு சொல்பவர்களும் நேரத்தைக் குறித்துக் கவனமாக இருக்க வேண்டும். சற்று முன்யோசனையோடு தயாரித்திருந்தால், குறிப்பு சொல்பவர் 30 நொடிக்குள் பயனுள்ள தகவலைத் தெரிவிக்க முடியும். அப்படியானால், சபையாருக்காக ஒதுக்கப்பட்டுள்ள ஐந்து நிமிடங்களுக்குள் கிட்டத்தட்ட பத்து பேர் அர்த்தமுள்ள குறிப்புகளைச் சொல்லி முடித்துவிடலாம்.
3 போதனை அளிக்கும் பேச்சுகள்: பைபிள் சிறப்புக் குறிப்புகள் பகுதி, போதனாப் பேச்சு ஆகியவை நம் ஊழியத்திற்கும் அன்றாட வாழ்க்கையின் பிற அம்சங்களுக்கும் பயன்படுவதால் அவற்றிலுள்ள தகவலின் முக்கியத்துவம் சிறப்பித்துக்காட்டப்பட வேண்டும். பேச்சைக் கொடுக்கும் சகோதரர், சபையார் செயல்படுவதற்கான ஆசையை தூண்டிவிட்டால் மட்டும் போதாது. என்ன செய்ய வேண்டும் என்பதைக் குறிப்பாகச் சொல்ல வேண்டும்; எவ்வாறு செய்ய வேண்டுமென்று விளக்க வேண்டும், அதோடு, அவ்வாறு செய்வதன் நன்மைகளையும் தெரிவிக்க வேண்டும். “ஆக, நாம் இப்படிச் செய்ய வேண்டுமென்பதையே இந்த வசனம் நமக்குக் காட்டுகிறது,” அல்லது “இவ்விதத்தில் இந்த வசனங்களை நாம் ஊழியத்தில் பயன்படுத்தலாம்” என்று அவர் சொல்லலாம். சபையின் சூழ்நிலைகளை அறிந்துள்ள மூப்பர்களும் உதவி ஊழியர்களும் சிந்திக்கப்படுகிற தகவலை எந்தளவு முடியுமோ அந்தளவு நடைமுறைக்கு பயன்படும் விதத்தில் குறிப்பாகச் சொல்வதற்குப் பிரயாசப்பட வேண்டும்.
4 நடைமுறை குறிப்புகளைச் சொல்கையில், பைபிள் உதாரணங்களைக் குறிப்பிடுவது முக்கியமாக நல்ல பலனைத் தரும். பைபிளிலிருந்து ஓர் உதாரணத்தைக் குறிப்பிட்ட பின்னர், “இதுபோன்ற ஒரு சூழ்நிலை உங்களுக்கும் ஏற்படலாம்” என்று பேச்சாளர் சொல்லலாம். இப்படி பைபிள் உதாரணங்களை நடைமுறைக்குப் பொருத்திக் காட்டுகையில், வசனத்தின் சூழமைவுக்கு இசைவாக அது இருக்கிறதா, முழு பைபிளுக்கு இசைவாக இருக்கிறதா, “உண்மையும் விவேகமுமுள்ள அடிமை” வகுப்பார் பிரசுரித்திருக்கும் தகவல்களுக்கு இசைவாக இருக்கிறதா என்றெல்லாம் அவர் உறுதி செய்துகொள்ள வேண்டும்.—மத். 24:45, NW.
5 ஞானம் என்பது, அறிவையும் புரிந்துகொள்ளுதலையும் சிறந்த விதத்தில் உபயோகிக்கும் திறன் ஆகும். “ஞானமே முக்கியம்.” (நீதி. 4:7) தேவராஜ்ய ஊழியப் பள்ளியிலிருந்து கற்றுக்கொள்ளும் பாடங்களின் வாயிலாக நடைமுறை ஞானத்தை நாம் தொடர்ந்து பெற்றுக்கொள்வோம்; அவ்வாறு பெற்றுக்கொள்ளும் நாம் அதை மற்றவர்களுக்கு அளிப்பதற்கான திறனை வளர்த்துக்கொள்வோமாக.