படிப்பு 23
நடைமுறைப் பயனை தெளிவுபடுத்துதல்
நீங்கள் தனிப்பட்ட நபரிடம் பேசினாலும்சரி பெரும் கூட்டத்தாரிடம் பேசினாலும்சரி, நீங்கள் பேசப்போகும் விஷயத்தில் உங்களுக்கு ஆர்வம் இருப்பதால் கேட்போரும் ஆர்வம் காட்டுவார்கள் என நினைத்துக்கொள்வது ஞானமற்றது. உங்களுடைய செய்தி முக்கியம்தான், ஆனால் அதன் நடைமுறைப் பயனை நீங்கள் தெளிவுபடுத்த தவறினால், கூட்டத்தாருடைய ஆர்வத்தை ஒருவேளை அதிக நேரத்திற்கு ஈர்த்துப்பிடிக்க முடியாது.
ராஜ்ய மன்றத்தில் கூடிவந்திருப்போருடைய விஷயத்திலும் இதுவே உண்மை. இதுவரை கேள்விப்படாத ஓர் உவமையையோ அனுபவத்தையோ நீங்கள் பயன்படுத்தும்போது, அவர்கள் உங்களுக்குச் செவிகொடுக்கலாம். ஆனால் அவர்களுக்கு ஏற்கெனவே தெரிந்த ஒரு பொருளில் பேசிக்கொண்டிருக்கும்போது, முக்கியமாக நீங்கள் அதை விரிவாக்கத் தவறும்போது, அவர்கள் செவிசாய்ப்பதை நிறுத்திவிடலாம். நீங்கள் சொல்வது ஏன், எப்படி உண்மையிலேயே அவர்களுக்கு பயனுள்ளது என்பதைப் புரிந்துகொள்ள உதவி செய்ய வேண்டும்.
நடைமுறையான வழிகளில் யோசித்துப் பார்க்கும்படி பைபிள் நம்மை உற்சாகப்படுத்துகிறது. (நீதி. 3:21, NW) ஜனங்களை ‘நீதிமான்களுடைய நடைமுறையான ஞானத்திற்கு’ வழிநடத்த முழுக்காட்டுபவனாகிய யோவானை யெகோவா பயன்படுத்தினார். (லூக். 1:17, NW) இதுவே யெகோவாவுக்கு காண்பிக்கும் ஆரோக்கியமான பயத்தில் வேரூன்றிய ஞானம். (சங். 111:10) இந்த ஞானத்தை மதித்துணருகிறவர்கள் இப்பொழுது வாழ்க்கையை வெற்றிகரமாக சமாளிப்பதற்கும் வரப்போகும் நித்திய ஜீவனாகிய மெய் வாழ்வை பற்றிக்கொள்வதற்கும் உதவி செய்யப்படுகிறார்கள்.—1 தீ. 4:8; 6:19, NW.
பேச்சை நடைமுறையாக்குதல். உங்களுடைய பேச்சு நடைமுறையாக இருக்க வேண்டுமென்றால், தகவலை மட்டுமல்ல, சபையாரையும் கவனமாக சிந்தித்துப் பார்க்க வேண்டும். அவர்களை வெறும் ஒரு தொகுதியாக நினைக்காதீர்கள். அந்தத் தொகுதி தனிநபர்களாலும் குடும்பங்களாலும் ஆனது. அங்கே சிறுவர்களும், பருவவயதினரும், வயதுவந்தவர்களும், முதியவர்களும் இருக்கலாம். புதிதாக அக்கறை காட்டுபவர்களும், நீங்கள் பிறப்பதற்கு முன்பே யெகோவாவை சேவிக்க ஆரம்பித்தவர்களும் இருக்கலாம். சிலர் ஆவிக்குரிய விதத்தில் முதிர்ச்சி வாய்ந்தவர்களாக இருக்கலாம்; வேறு சிலரோ இன்னும் இந்த உலகத்தின் மனப்பான்மைகளாலும் பழக்க வழக்கங்களாலும் பலமாக செல்வாக்கு செலுத்தப்படுகிறவர்களாக இருக்கலாம். உங்களையே இவ்வாறு கேட்டுக்கொள்ளுங்கள்: ‘நான் பேசப்போகும் விஷயம் எவ்வாறு சபையில் இருப்பவர்களுக்கு பயனுள்ளதாக இருக்கலாம்? குறிப்பை புரிந்துகொள்வதற்கு நான் எப்படி அவர்களுக்கு உதவி செய்யலாம்?’ இங்கே குறிப்பிடப்பட்டுள்ள ஓரிரண்டு தொகுதியினருக்கு மட்டுமே நீங்கள் ஒருவேளை முக்கிய கவனம் செலுத்த தீர்மானிக்கலாம். ஆனால் மற்றவர்களை அடியோடு மறந்துவிடாதீர்கள்.
அடிப்படை பைபிள் போதனையைப் பற்றி பேசுவதற்கு நீங்கள் நியமிக்கப்பட்டிருந்தால் என்ன செய்யலாம்? இந்தப் போதனையை ஏற்கெனவே நம்புகிற சபையாருக்கு பயன்தரும் விதத்தில் எப்படி பேசலாம்? அதில் அவர்களுடைய நம்பிக்கையை மேலும் பலப்படுத்துவதற்கு முயலுங்கள். எப்படி? அதை ஆதரிக்கும் வேதப்பூர்வ அத்தாட்சியின் பேரில் நியாயங்காட்டிப் பேசுவதன் மூலமாகும். அந்த பைபிள் போதனையின் மீது அவர்களுடைய போற்றுதலை அதிகமாக்குவதற்கும் நீங்கள் உதவலாம். இந்தப் போதனை எவ்வாறு பைபிளில் உள்ள மற்ற சத்தியங்களோடும் யெகோவாவின் ஆள்தன்மையோடும் ஒத்திருக்கிறது என்பதை காண்பிப்பதன் மூலம் இதைச் செய்யலாம். குறிப்பிட்ட இந்தப் போதனையை புரிந்துகொண்டதால் மக்கள் எவ்வாறு பயனடைந்திருக்கிறார்கள், அதனால் எதிர்காலத்தைப் பற்றிய அவர்களுடைய நோக்குநிலை எவ்வாறு மாறியிருக்கிறது என்பதை காட்டுகிற உதாரணங்களை—முடிந்தால் நிஜ வாழ்க்கை அனுபவங்களை—பயன்படுத்துங்கள்.
நடைமுறை பொருத்தத்தை உங்களுடைய பேச்சின் முடிவில் சுருக்கமாக சொல்வதோடு நிறுத்திக் கொள்ளாதீர்கள். ஆரம்பத்திலிருந்தே சபையார் ஒவ்வொருவரும் “இது எனக்குப் பொருந்துகிறது” என உணரும் விதத்தில் அந்தப் பேச்சு இருக்க வேண்டும். இந்த அஸ்திவாரத்தைப் போட்ட பிறகு, பேச்சின் பொருளுரையில் ஒவ்வொரு முக்கிய குறிப்பை விரிவாக்கும்போதும் முடிவுரையிலும் நடைமுறை பொருத்தத்தை தொடர்ந்து காண்பியுங்கள்.
அவ்வாறு பொருத்துவது பைபிள் நியமங்களுக்கு இசைவாக இருக்க வேண்டும். இது எதை அர்த்தப்படுத்துகிறது? அன்பையும் அனுதாபத்தையும் காட்டுவதை அர்த்தப்படுத்துகிறது. (1 பே. 3:8; 1 யோ. 4:8) அப்போஸ்தலன் பவுல் தெசலோனிக்கேயாவில் பெரும் பிரச்சினைகளை கையாண்டபோதும்கூட, அங்கிருந்த கிறிஸ்தவ சகோதர சகோதரிகளின் ஆவிக்குரிய முன்னேற்றத்தைப் பற்றிய நம்பிக்கையூட்டும் அம்சங்களையே சிறப்பித்துக் காட்டினார். அப்பொழுது விவாதிக்கப்பட்ட விஷயத்தைக் குறித்ததிலும் அவர்கள் சரியானதை செய்யவே விரும்புவார்கள் என்ற தன்னுடைய நம்பிக்கையையும் வெளிப்படுத்தினார். (1 தெ. 4:1-12) பின்பற்றுவதற்கு எப்பேர்ப்பட்ட சிறந்த முன்மாதிரி!
நற்செய்தியை பிரசங்கிப்பதிலும் போதிப்பதிலும் ஈடுபடும்படி உந்துவிப்பதே உங்கள் பேச்சின் குறிக்கோளா? அப்படியானால் இந்தச் சிலாக்கியத்திற்காக ஆர்வத்தையும் போற்றுதலையும் வளருங்கள். ஆனால் அப்படி செய்கையில், இதில் ஒருவர் எந்தளவு பங்குகொள்ள முடியும் என்பது ஆளுக்கு ஆள் வித்தியாசப்படுகிறது என்பதை மனதிற்கொள்ளுங்கள், பைபிளும் இதை கவனத்தில் எடுத்துக்கொள்கிறது. (மத். 13:23) உங்களுடைய சகோதரர்களை குற்றவுணர்வால் பாரமாக்காதீர்கள். “அன்பு செலுத்தவும் நற்செயல்கள் புரியவும் ஒருவரையொருவர் தூண்டியெழுப்”பும்படி எபிரெயர் 10:24 (பொ.மொ.) நம்மை உந்துவிக்கிறது. அன்பு செலுத்துவதற்கு நாம் சகோதரர்களை தூண்டினால், நல்நோக்கத்தின் அடிப்படையில் நற்செயல்களை செய்வார்கள். அதிகாரத்தால் இணங்க வைப்பதற்குப் பதிலாக, “விசுவாசத்தினால் கீழ்ப்படியும்படி” உந்துவிக்கவே யெகோவா விரும்புகிறார் என்பதை உணர்ந்துகொள்ளுங்கள். (ரோ. 16:26, NW) இதை மனதில் வைத்து, நம்முடைய விசுவாசத்தையும் பிறருடைய விசுவாசத்தையும் பலப்படுத்த விரும்புகிறோம்.
நடைமுறைப் பயனை காண பிறருக்கு உதவுதல். நீங்கள் பிறருக்கு சாட்சி கொடுக்கும்போது, நற்செய்தியின் நடைமுறைப் பயனை சிறப்பித்துக் காட்ட தவறாதீர்கள். அப்படி செய்வதற்கு உங்களுடைய பிராந்தியத்திலுள்ள மக்களின் மனதில் என்ன இருக்கிறது என்பதை சிந்தித்துப் பார்க்க வேண்டும். இதை நீங்கள் எப்படி கண்டுபிடிக்கலாம்? ரேடியோ, டெலிவிஷன் செய்திகளை கேளுங்கள். செய்தித்தாளின் முதல் பக்கத்தை நோட்டமிடுங்கள். அதோடு, மக்களை உரையாடலில் உட்படுத்த முயலுங்கள், பின்பு அவர்கள் பேசும்போது செவிகொடுத்துக் கேளுங்கள். நெருக்கடியான பிரச்சினைகளோடு—வேலையை இழந்துவிடுதல், வாடகை கட்டுதல், வியாதி, குடும்பத்தில் மரணம், குற்றச்செயல்களால் வரும் ஆபத்து, அதிகாரிகளின் அநீதி, திருமண முறிவு, பிள்ளைகளை வளர்த்தல், இன்னும் இதுபோன்ற பிற பிரச்சினைகளோடு—அவர்கள் போராடிக் கொண்டிருப்பதை நீங்கள் காணலாம். பைபிள் அவர்களுக்கு உதவி செய்ய முடியுமா? நிச்சயமாகவே முடியும்.
உரையாடலை ஆரம்பிக்கையில், உங்களுடைய மனதில் ஒரு பொருள் இருக்கலாம். இருந்தாலும், உடனடியாக தீர்க்க வேண்டிய சொந்த பிரச்சினை ஏதாவது இருப்பதாக அந்த நபர் சொன்னால், உங்களால் முடிந்தால் அதைப் பற்றி பேச தயங்காதீர்கள், அல்லது பயனுள்ள தகவலோடு பிறகு வந்து சந்திப்பதாக கூறுங்கள். ‘பிறருடைய விஷயங்களில் வீணாய் தலையிடுவதை’ நாம் தவிர்க்கிறோம் என்பது உண்மைதான், ஆனால் பைபிள் தரும் நடைமுறையான அறிவுரைகளை மற்றவர்களோடு பகிர்ந்து கொள்வதில் நாம் மகிழ்ச்சியடைகிறோம். (2 தெ. 3:11, NW) மக்களுடைய மனதை மிகவும் கவருவது அவர்களுடைய சொந்த வாழ்க்கையை தொடுகிற பைபிள் அறிவுரைகளே.
நம்முடைய செய்தி எவ்வாறு தனிப்பட்ட விதமாக தங்களை பாதிக்கிறது என்பதை ஆட்கள் புரிந்துகொள்ள முடியவில்லையென்றால், அவர்கள் உடனடியாக சம்பாஷணையை முடித்துக்கொள்ளலாம். நம்மை பேசுவதற்கு அவர்கள் அனுமதித்தாலும், சொல்லும் விஷயத்தின் நடைமுறைப் பயனை காண்பிக்க தவறினால், நம்முடைய செய்தி அவர்களுடைய வாழ்க்கையில் எந்தப் பாதிப்பையும் ஏற்படுத்தாது. மாறாக, நாம் சொல்லும் செய்தியின் நடைமுறைப் பயனை தெளிவாக காண்பித்தால், நம்முடைய சம்பாஷணை மக்களுடைய வாழ்க்கையில் ஒரு திருப்பு முனையாக அமையலாம்.
பைபிள் படிப்புகள் நடத்தும்போது, நடைமுறைப் பயனை தொடர்ந்து சிறப்பித்துக் காட்டுங்கள். (நீதி. 4:7) யெகோவாவின் வழிகளில் எவ்வாறு நடப்பது என்பதை காட்டுகிற வேதப்பூர்வ அறிவுரை, நியமங்கள், எடுத்துக்காட்டுகள் ஆகியவற்றை மாணாக்கர் புரிந்துகொள்ள உதவுங்கள். அப்படி செய்வதால் வரும் நன்மைகளை வலியுறுத்திக் காட்டுங்கள். (ஏசா. 48:17, 18) இது, மாணாக்கர் தங்களுடைய வாழ்க்கையில் மாற்றங்களை செய்வதற்கு அவர்களைத் தூண்டும். யெகோவாவுக்கான அன்பையும் அவரைப் பிரியப்படுத்த வேண்டும் என்ற ஆவலையும் அவர்களிடம் வளருங்கள்; கடவுளுடைய வார்த்தை தரும் அறிவுரைகளை பின்பற்ற வேண்டும் என்ற உந்துவிப்பு அவர்களுடைய இருதயத்திலிருந்து பிறக்க அனுமதியுங்கள்.