அன்பு—பலன்தருகிற ஊழியத்தின் திறவுகோல்
1 ‘என்னிடத்தில் வாருங்கள், நான் உங்களுக்கு இளைப்பாறுதல் தருவேன்.’ (மத். 11:28) மனிதர்கள்மீது இயேசு வைத்திருந்த ஆழமான அன்பை இந்த இதமான வார்த்தைகள் தெரிவிக்கின்றன. இந்த அன்பற்ற உலகில் சோர்ந்து போயிருக்கும் மக்கள்மீது இயேசுவைப் போலவே அன்புகாட்ட கிறிஸ்தவ ஊழியர்களாகிய நாம் ஆசைப்படுகிறோம். பிரசங்க வேலையில் நாம் எவ்வாறு மக்களிடம் அன்பு காட்டலாம்?
2 வார்த்தையில்: கிடைத்த எல்லா சந்தர்ப்பத்திலும் நற்செய்தியை அறிவிப்பதற்கு மக்கள்மீது இயேசுவுக்கு இருந்த அன்பு அவரைத் தூண்டியது. (யோவா. 4:7-14) சந்தர்ப்ப சாட்சி கொடுப்பதற்கான தயக்கத்தை மேற்கொள்ள அன்பு நமக்கு உதவும். ஆறு வயது சிறுமி, ஆஸ்பத்திரியில் காத்திருக்கும்போது தனக்கு அருகில் அமர்ந்திருந்த பெண்மணியிடம் சிறப்பாக சாட்சி கொடுத்தாள். அவ்வாறு செய்ய எது அவளைத் தூண்டியது? “அந்த அம்மாவின் முகத்தைப் பார்த்தபோது, அவர் யெகோவாவைப் பற்றி கண்டிப்பாக தெரிந்துகொள்ள வேண்டுமென நினைத்தேன்” என்று அவள் கூறுகிறாள்.
3 உள்ளப்பூர்வமாகவும், கனிவாகவும் புன்னகைப்பதன் மூலமாக, சிநேகப்பான்மையான குரலில் பேசுவதன் மூலமாக ஆட்களிடம் நமக்கு அக்கறை இருப்பதைக் காட்டலாம். மற்றவர்கள் சொல்வதைக் காதுகொடுத்து கேட்பது, அவர்களுடைய நியாயமான கவலைகளை புரிந்துகொள்வது, அவர்கள்மீது உண்மையான அக்கறைக் காட்டுவது போன்றவற்றால் அவர்களை நாம் நேசிக்கிறோம் என்பதைக் காட்டலாம். (நீதி. 15:23) இயேசுவைப்போல, நாமும் நம்பிக்கையூட்டும் ராஜ்ய நற்செய்தியையும், மக்களிடம் யெகோவா கொண்டிருக்கும் கனிவான இரக்கத்தையும் வலியுறுத்த வேண்டும்.—மத். 24:14; லூக். 4:18.
4 செயலில்: அன்றாட வாழ்க்கையில் மற்றவர்கள் படுகிற கஷ்டத்தை இயேசு நன்றாகப் புரிந்துகொண்டு, ஏற்ற உதவிகளைச் செய்தார். (மத். 15:32) ஊழியத்தில் ஈடுபடுகையில், தயவான செயல்களைச் செய்வதற்கு நமக்கும் வாய்ப்புகள் கிடைக்கலாம். ஒரு பெண்மணி, ஃபோனில் அவருடன் பேசியவர் தெரிவித்த முக்கியமான விஷயத்தைப் புரிந்துகொள்ள முடியாமல் தவிப்பதை ஒரு சகோதரி கவனித்தார். அதை அவருக்கு மொழிபெயர்த்துச் சொல்வதற்கு முன்வந்தார். இந்த அன்பான செயல் அந்தப் பெண்ணுடன் பைபிளைக் குறித்து கலந்துரையாட வழி வகுத்ததோடு ஒரு பைபிள் படிப்பைத் துவங்குவதற்கும் உதவியது. மற்றொரு சம்பவத்தில், மறுசந்திப்புக்குச் சென்ற ஒரு சகோதரர், அந்த வீட்டுக்காரர் ஒரு பெரிய சோபாவை வாசல் கதவு வழியாக நுழைக்க முடியாமல் திணறிக் கொண்டிருந்ததைக் கண்டார். அதை உள்ளே கொண்டு செல்ல அவர் உதவினார்; பிறகு, அதற்கு நன்றி தெரிவித்த அந்த நபரோடு அந்த சோபாவிலேயே அமர்ந்து பைபிள் படிப்பைத் துவங்கினார்.
5 ஊழியத்தில் கலந்துகொள்கையில், கடவுள்மீதும் அயலார்மீதும் நம் அன்பை வெளிக்காட்டுகிறோம். (மத். 22:36-40) வார்த்தையிலும் செயலிலும் நாம் காட்டும் அன்பு, நம்மிடம் சத்தியம் இருக்கிறது என்பதைப் புரிந்துகொள்ள உண்மை மனதுள்ளவர்களுக்கு உதவுகிறது.