கற்றுக்கொடுப்பதற்கு நன்கு தயாரியுங்கள்
1. பைபிள் படிப்பு நடத்தும்போது மாணாக்கர் சத்தியத்தை மதிக்க நாம் ஏன் முக்கியமாய் உதவ வேண்டும்?
1 நாம் ஒரு பைபிள் படிப்பை நடத்தும்போது, யெகோவாவைச் சேவிக்க மாணாக்கரைத் தூண்ட வேண்டுமென்றால் நாம் நன்கு தயாரிப்பது அவசியம். பைபிள் சத்தியத்தை மாணாக்கர் மதிக்க உதவினால், அவர் நன்கு முன்னேறுவதற்கு அது வழிவகுக்கும். யெகோவாவைச் சேவிக்க அது அவரைத் தூண்டும். (உபா. 6:5; நீதி. 4:23; 1 கொ. 9:26) இதற்கு நாம் என்ன செய்யலாம்?
2. படிப்புக்காக நன்கு தயாரிக்க ஜெபம் எப்படி நமக்கு உதவும்?
2 ஜெபத்தோடு தயாரியுங்கள்: மாணாக்கரின் இதயத்தில் சத்தியத்தின் விதை வேரூன்றி வளரச் செய்கிறவர் யெகோவாவே; அதனால், மாணாக்கருக்காகவும் அவருடைய முக்கியத் தேவைகளுக்காகவும் ஜெபம் செய்த பிறகு தயாரிப்பது பொருத்தமாக இருக்கும். (1 கொ. 3:6; யாக். 1:5) இத்தகைய ஜெபம், யெகோவாவுடைய சித்தத்தைப் பற்றிய “திருத்தமான அறிவினால்” அவருடைய இதயத்தை நிரப்ப இன்னும் என்ன செய்யலாம் என்பதைத் தீர்மானிக்கவும் நமக்கு உதவும்.—கொலோ. 1:9, 10.
3. மாணாக்கரை மனதில் வைத்து எப்படித் தயாரிக்கலாம்?
3 மாணாக்கரை மனதில் வைத்துத் தயாரியுங்கள்: திறம்பட்ட விதத்தில் போதிப்பதற்கு, கேட்போரை மனதில் வைப்பது அவசியம் என்பதை இயேசு அறிந்திருந்தார். அவரிடம் குறைந்தது இரண்டு சந்தர்ப்பங்களில் ஒரே கேள்வி கேட்கப்பட்டது. “முடிவில்லா வாழ்வைப் பெறுவதற்கு நான் என்ன செய்ய வேண்டும்?” என்பதே அந்தக் கேள்வி. அந்த இரண்டு சந்தர்ப்பத்திலும் அக்கேள்விக்கு அவர் ஒரே விதமாகப் பதில் அளிக்கவில்லை. (லூக். 10:25-28; 18:18-20) எனவே, நாம் மாணாக்கரை மனதில் வைத்தே தயாரிக்க வேண்டும். படிப்பின்போது, எந்தெந்த வசனங்களை வாசிக்கலாம்? எத்தனை பாராக்களை அவருடன் படிக்கலாம்? பாடத்திலுள்ள எந்தக் குறிப்புகளைப் புரிந்துகொள்வதற்கு அல்லது ஏற்றுக்கொள்வதற்கு மாணாக்கர் கஷ்டப்படலாம்? மாணாக்கர் சில கேள்விகளைக் கேட்கலாமென நாம் எதிர்பார்த்தால் அவற்றிற்கான பதில்களையும் தயாரித்துச் செல்லலாம்.
4. நன்கு தயாரிப்பதில் என்னவெல்லாம் உட்பட்டிருக்கிறது?
4 மீண்டும் தயாரியுங்கள்: அந்தப் புத்தகத்தை நாம் எத்தனை முறை படித்திருந்தாலும், இந்த மாணாக்கருடன் படிப்பது இதுவே முதல்தடவை. ஆகவே, சத்தியத்தை இவருடைய இதயத்தில் பதிய வைக்க நாம் விரும்பினால், ஒவ்வொரு படிப்புக்கு முன்பும் நன்கு தயாரித்துச் செல்வது முக்கியம். சொல்லப்போனால், மாணாக்கரை என்ன செய்யும்படி ஊக்கப்படுத்துகிறோமோ அதையே நாமும் செய்ய வேண்டும். மாணாக்கரை மனதில் வைத்து, படிப்பு நடத்தும் பகுதியைத் தயாரிக்கும்போது அதிலுள்ள வசனங்களையும் பாருங்கள்; முக்கியக் குறிப்புகளைக் கோடிடுங்கள்.—ரோ. 2:21, 22.
5. யெகோவாவைப் போல் நாம் எப்படி அக்கறை காட்டலாம்?
5 ஒவ்வொரு மாணாக்கருடைய முன்னேற்றத்திலும் யெகோவா அதிக அக்கறை காட்டுகிறார். (2 பே. 3:9) ஒவ்வொரு பைபிள் படிப்புக்கும் தயாரிக்க நேரத்தை எடுத்துக்கொள்வதன்மூலம் நாமும் அதே அக்கறையைக் காட்ட முடியும்.