முடியாதென நினைக்காதீர்கள் —தகுதியில்லை என்ற எண்ணத்தை தகர்த்தெறிய...
1. பைபிள் படிப்பு எடுக்க சிலர் ஏன் தயங்குகிறார்கள்?
1 ‘பைபிள் படிப்பு எடுக்குற அளவுக்கெல்லாம் எனக்கு திறமை இல்லை’ என்று நினைத்து நீங்கள் தயங்குகிறீர்களா? மோசே, எரேமியா போன்ற கடவுளுடைய ஊழியர்கள்கூட, கடவுள் கொடுத்த பொறுப்பை நிறைவேற்ற தங்களுக்குத் தகுதியில்லை என சில நேரங்களில் நினைத்தார்கள். (யாத். 3:10, 11; 4:10; எரே. 1:4-6) எனவே, நீங்கள் அப்படி நினைப்பது ஒன்றும் தவறல்ல. என்றாலும், இந்த எண்ணத்தை விட்டொழிக்க என்ன செய்வது?
2. வீட்டுக்கு வீடு ஊழியத்தை மட்டும் செய்துவிட்டு, பைபிள் படிப்பை வேறு யாராவது நடத்தட்டும் என்று நினைப்பது ஏன் சரியில்லை?
2 நம்மால் செய்ய முடியாத ஒன்றை செய்யும்படி யெகோவா சொல்ல மாட்டார் என்பதை நாம் ஒருநாளும் மறந்துவிடக் கூடாது. (சங். 103:14) எனவே, மக்களை “சீடர்களாக்கி, . . . அவர்களுக்குக் கற்பியுங்கள்” என்ற கட்டளையையும் நம்மால் நிறைவேற்ற முடியும். (மத். 28:19, 20) நம் மத்தியில் இருக்கும் அனுபவசாலிகளுக்கும் திறமைசாலிகளுக்கும் மட்டுமே இந்தப் பாக்கியத்தை யெகோவா கொடுக்கவில்லை. (1 கொ. 1:26, 27) அதனால், நாம் வெறும் வீட்டுக்கு வீடு ஊழியத்தை மட்டும் செய்துவிட்டு பைபிள் படிப்பை வேறு யாராவது நடத்திக்கொள்ளட்டும் என்று விட்டுவிடக் கூடாது.
3. பைபிள் படிப்பு எடுப்பதற்கு யெகோவா நமக்கு எந்தெந்த வழிகளில் உதவுகிறார்?
3 யெகோவா நமக்குத் தகுதியளிக்கிறார்: சீடராக்கும் பொறுப்பை யெகோவாதான் நம்மிடம் ஒப்படைத்திருக்கிறார். அதற்கான தகுதிகளையும் அளித்திருக்கிறார். (2 கொ. 3:5) இந்த உலகத்தில் மெத்தப் படித்த ஜனங்களால் புரிந்துகொள்ள முடியாத பைபிள் உண்மைகளை, யெகோவா அவருடைய அமைப்பின்மூலம் நமக்குச் சொல்லித் தந்திருக்கிறார். (1 கொ. 2:7, 8) பெரிய போதகரான இயேசு பயன்படுத்திய கற்பிக்கும் முறைகளை நாமும் பின்பற்றுவதற்காக அவற்றை பைபிளில் பதிவு செய்திருக்கிறார். அதோடு, சபையில் ஒவ்வொரு வாரமும் நமக்குப் பயிற்சி கொடுக்கிறார். பைபிள் படிப்பு நடத்துவதற்கான தகவல்களை நீங்களே தயாரித்துக் கொள்ளுங்கள் என்று யெகோவா விட்டுவிடவில்லை. பைபிள் கற்பிக்கிறது புத்தகத்தையும் அதுபோன்ற வேறு பல பிரசுரங்களையும் அளித்திருக்கிறார். இந்தப் புத்தகங்கள் பைபிளிலிருக்கும் உண்மைகளை தர்க்க ரீதியில், புரிந்துகொள்ளும் விதத்தில் விளக்குகின்றன. இவ்வளவு உதவி இருக்கும்போது பைபிள் படிப்பு நடத்துவது கஷ்டமா என்ன?
4. யெகோவா நமக்கு உதவுவார் என்பதில் நாம் ஏன் உறுதியாய் இருக்கலாம்?
4 மோசேயும் எரேமியாவும் யெகோவாவின் உதவியுடன் தங்கள் பொறுப்பை நிறைவேற்றினார்கள். (யாத். 4:11, 12; எரே. 1:7, 8) நாமும் உதவிக்காக யெகோவாவிடம் தாராளமாக ஜெபிக்கலாம். ஏனென்றால், பைபிள் படிப்பில் நாம் யெகோவாவைப் பற்றித்தானே சொல்லிக் கொடுக்கிறோம். அது அவருக்கு நிச்சயம் சந்தோஷத்தையே தரும். (1 யோ. 3:22) ஆக, பைபிள் படிப்பு நடத்த வேண்டும் என்று இலக்கு வையுங்கள். அப்போது, ஊழியத்தில் மகிழ்ச்சி காண்பீர்கள், ஆசீர்வாதங்களையும் பெறுவீர்கள்.