பொது ஊழியத்திற்குப் புதிய வழிமுறை
1. முதல் நூற்றாண்டு கிறிஸ்தவர்கள் வைத்த முன்மாதிரி என்ன?
1 முதல் நூற்றாண்டு கிறிஸ்தவர்கள் வீட்டுக்கு வீடு ஊழியம் செய்ததோடு நிறுத்திக்கொள்ளவில்லை. பொது இடங்களிலும் பிரசங்கித்தார்கள். (அப். 20:20) உதாரணமாக, நிறைய பேரை ஆலயத்தில் பார்க்க முடியும் என்பதால் அங்கே போய்ப் பிரசங்கித்தார்கள். (அப். 5:42) அப்போஸ்தலன் பவுல் அத்தேனே பட்டணத்தில் இருந்தபோது ஒவ்வொரு நாளும் சந்தைவெளிக்குச் சென்று பிரசங்கித்தார். (அப். 17:17) இன்று, நற்செய்தியை நாம் அறிவிக்கிற முக்கிய வழி வீட்டுக்கு வீடு ஊழியம்தான். இருந்தாலும், மக்கள் எங்கெல்லாம் இருக்கிறார்களோ அங்கெல்லாம் பிரசங்கிப்பதற்காக... வாகனம் நிறுத்துமிடங்கள், வியாபார பகுதிகள், பூங்காக்கள், நெரிசல்மிக்க சாலைகள் போன்ற பல இடங்களுக்குச் செல்கிறோம். முடிந்தவரை, ஒவ்வொரு பிரஸ்தாபியும் பொது ஊழியத்தில் ஈடுபடும்படி உற்சாகப்படுத்தப்படுகிறார்கள்; என்றாலும், அநேகர் பொது ஊழியத்தில் ஈடுபடுவதற்கான ஒரு புதிய அணுகுமுறையைப் பயன்படுத்தும் வாய்ப்பைப் பெறுவார்கள்.
2. பொது ஊழியத்தில் ஈடுபடும்போது எப்படி ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்?
2 பொது இடங்களில் ஊழியம் செய்வதற்கு உதவும் சில வழிமுறைகள் இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டிருக்கிறது. அதேசமயத்தில், ஊழியத்தில் ஜாக்கிரதையாக இருப்பது பற்றி முந்தைய நம் ராஜ்ய ஊழிய கட்டுரைகளில் கொடுக்கப்பட்ட ஆலோசனைகளையும் நாம் கடைப்பிடிக்க வேண்டும். பிரச்சினைகளைத் தவிர்க்க நம்மால் முடிந்த அனைத்தையும் செய்ய வேண்டும். பிராந்தியத்தில் எந்தளவு எதிர்ப்பு உள்ளது என்பதையும் இதுபோன்ற பொது ஊழியத்தால் வெளி ஊழியம் பாதிக்கப்படுமா என்பதையும் சபையின் மூப்பர் குழு நன்கு ஆராய்ந்து தீர்மானிக்க வேண்டும். (கூடுதல் தகவலுக்கு நவம்பர் 24, 2012 மற்றும் பிப்ரவரி 13, 2014 தேதியிட்ட கடிதத்தை மூப்பர்கள் பார்க்கலாம்.) பிராந்தியத்தில் பிரச்சினை வர வாய்ப்பிருந்தாலும் சரி இல்லாவிட்டாலும் சரி, பிரஸ்தாபிகள் ஒவ்வொருவரும் யெகோவாவின் சாட்சிகள்—நம் அயலகத்தாரிடம் நற்செய்தியை அறிவிப்பதில் நமக்கு இருக்கும் உரிமைகளும் பொறுப்புகளும் (T-85) என்ற துண்டுப்பிரதியை வீட்டுக்கு வீடு ஊழியத்திற்கும் தெரு ஊழியத்திற்கும் எடுத்துச் செல்வது போல் இந்த ஊழியத்திற்கும் எடுத்துச் செல்ல வேண்டும்.
3. நவம்பர் 2011-ல் எந்தப் புதிய முயற்சி தொடங்கப்பட்டது?
3 நியு யார்க் நகரத்தில் பொது ஊழியம் செய்ய ஒரு புதிய அணுகுமுறை 2011 நவம்பரில் ஆரம்பிக்கப்பட்டதைப் பற்றி இயர்புக் 2013 (ஆங்கிலம்) 16-ஆம் மற்றும் 17-ஆம் பக்கங்களில் தெரிவிக்கப்பட்டது. அந்நகரத்தில் மக்கள் நடமாட்டம் அதிகமுள்ள பகுதிகளில் டேபிள்களும் வீல்-ஸ்டேண்டுகளும் வைக்கப்பட்டன; பிரசுரங்களும், பெரிய அளவில் அழகிய அட்டைப் படங்களும் பல்வேறு மொழிகளில் வைக்கப்பட்டன. வெளியாட்கள் நுழைய முடியாத அப்பார்ட்மென்ட்களில் வசிப்பவர்கள்... வீடுகளில் சந்திக்க முடியாத ஆட்கள்... என ஆயிரக்கணக்கானோர் அன்றாடம் அவற்றைக் கடந்து சென்றார்கள். அதனால், இந்தப் புதிய முயற்சிக்கு அமோக வரவேற்பு கிடைத்தது. சமீபத்தில், 3,797 பத்திரிகைகளும் 7,986 புத்தகங்களும் ஒரே மாதத்தில் அளிக்கப்பட்டன. அநேகர் பைபிள் படிப்பு நடத்தும்படி கேட்டுக்கொண்டார்கள். பைபிள் படிப்பைத் துவங்குவதற்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டதால், ஆர்வம் காட்டியவர்களிடமிருந்து பெற்ற விலாசங்கள் உடனடியாக அந்தப் பகுதியிலுள்ள சபைகளுக்கு அனுப்பிவைக்கப்பட்டன.
4. இந்தப் புதுவித ஊழியம் எங்கெல்லாம் செய்யப்படும், இதில் ஈடுபட்ட ஒரு தம்பதியினருக்கு என்ன பலன் கிடைத்தது?
4 இந்தப் புதிய முயற்சி வெற்றி பெற்றதால் உலகம் முழுவதும், மக்கள் தொகை அதிகமுள்ள பெருநகரங்களில் இந்த ஊழியம் இனி ஏற்பாடு செய்யப்படும். ஒரு தம்பதியினர் இவ்வாறு எழுதினார்கள்: “டேபிள் அருகில் நின்றுகொண்டிருக்கும்போது, ஒவ்வொரு நாளும் ஆயிரக்கணக்கானோர் கடந்துசெல்வதை நாங்கள் பார்க்கிறோம்; இவர்களைப் பார்க்க பார்க்க... உலகெங்குமுள்ள மக்களைச் சென்றெட்ட மாபெரும் வேலை செய்யப்பட வேண்டுமென்பது எங்கள் மனதில் ஆழமாகப் பதிந்துவிட்டது. மக்கள் கூட்டத்தைப் பார்க்கும்போது... ஒவ்வொரு நபர்மீதும் யெகோவா வைத்திருக்கிற உண்மையான அக்கறையைப் பற்றிச் சிந்திக்கும்போது... பிரசங்க வேலைக்கு வாழ்க்கையில் முக்கிய இடம் கொடுக்க வேண்டுமென்ற எங்கள் தீர்மானம் பலமாகியிருக்கிறது. டேபிளைக் கடந்துசெல்கிற எல்லோருடைய இதயத்தையும் யெகோவா ஊடுருவிப் பார்க்கிறார்... தகுதியானவர்களைத் தேடிக் கண்டுபிடிக்கிறார்... என்பதாக நாங்கள் கற்பனை செய்துகொள்வோம். நம்முடைய சக வேலையாட்களாய் இருக்கிற தேவதூதர்களுடன் நெருக்கமாக வேலை செய்வதை நாங்கள் ரொம்பவே உணர்கிறோம்.”
5. (அ) பொது ஊழியத்திற்கான என்ன புதிய முறையை பல சபைகள் ஏற்பாடு செய்திருக்கின்றன? (ஆ) பொது ஊழியத்தில் ஈடுபடும்போது சபைகள் எப்படி ஒத்துழைப்பு தரலாம்?
5 உள்ளூரில் ஏற்பாடு செய்யப்படும் பொது ஊழியம்: சபை பிராந்தியத்தில் இந்தப் புதிய முறை ஊழியத்தை மூப்பர் குழுவினர் ஏற்பாடு செய்துவருகிறார்கள். இந்தப் புதிய முறையில், சபை பிராந்தியத்திற்குட்பட்ட, மக்கள் அதிகம் நடமாடுகிற பகுதியில் பிரஸ்தாபிகள் டேபிளையோ வீல்-ஸ்டேண்டையோ பயன்படுத்தி ஊழியம் செய்யலாம்.—“நல்ல ஒத்துழைப்பு அவசியம்” என்ற பெட்டியைப் பாருங்கள்.
6. உள்ளூரில் எப்படிப் பொது ஊழியத்தை மூப்பர்கள் ஏற்பாடு செய்வார்கள்?
6 சபை பிராந்தியத்தில் நெரிசல்மிக்க இடங்கள் இருக்கின்றனவா என்றும் அங்கே பொது ஊழியம் செய்வது நடைமுறையாக இருக்குமா என்றும் மூப்பர்கள் கலந்தாலோசித்துத் தீர்மானிப்பார்கள். பஸ் மற்றும் ரயில் நிலையங்கள், பூங்காக்கள், சந்தடிமிக்க தெருக்கள், ஷாப்பிங் மால்கள், கல்லூரி வளாகங்கள், விமான நிலையங்கள், பொது நிகழ்ச்சிகள் நடத்தப்படும் இடங்கள் போன்றவை டேபிள் அல்லது வீல்-ஸ்டேண்ட் வைத்து பொது ஊழியம் செய்வதற்கு ஏற்ற இடங்களாகும். அதே இடத்தில், அதே நாட்களில், அதே நேரங்களில் டேபிளை அல்லது வீல்-ஸ்டேண்டை வைத்து ஊழியம் செய்வது நல்ல பலனைத் தரும். ஒரேவொரு பெரிய கடையின் முன்னால் டேபிளை அல்லது வீல்-ஸ்டேண்டை வைப்பதைவிட ஷாப்பிங் மால்களில் வைப்பது மிகுந்த பலன் தரும் எனக் கண்டறியப்பட்டுள்ளது. ஏனென்றால், பெரிய கடைக்கு ஆட்கள் வரும்போது ஏதாவது ஒரு குறிப்பிட்ட பொருளை வாங்கிக்கொண்டு சீக்கிரத்தில் போய்விடுவார்கள். சில இடங்களில், பிரசுரங்கள் வைக்கப்பட்ட சிறிய வீல்-ஸ்டேண்டுகளை நிறுத்துவதற்குப் பாதை ஓரங்கள் வசதியான இடங்கள். காவற்கோபுரம், விழித்தெழு பத்திரிகைகள், பைபிள் கற்பிக்கிறது போன்ற பிரசுரங்களின் அட்டைப் படங்களைக் (போஸ்டர்கள்) காட்சிக்கு வைப்பதற்கு வெப்-சைட்டிலிருந்து விசேஷ ஃபைல்களை மூப்பர்கள் டவுன்லோட் செய்துகொள்ளலாம். இந்தப் புதுவித ஊழியத்தில் பயன்படுத்துவதற்காகவே இந்த ஃபைல்கள் விசேஷமாகத் தயாரிக்கப்பட்டுள்ளன. பொதுமக்களை ஈர்க்கும் அட்டைப் படங்களைப் பயன்படுத்துங்கள். அவர்கள் மனதைப் புண்படுத்தும் படங்களைத் தவிர்த்திடுங்கள். இந்த ஊழியத்தில் ஈடுபடுகிறவர்கள் ஊழியக் கண்காணி தருகிற எல்லா வழிநடத்தலையும் பின்பற்ற வேண்டும். தங்கள் பிராந்தியத்தில் வசிக்காத ஆர்வமுள்ள ஒருவரிடமிருந்து விலாசம் வாங்கினால், தயவுசெய்து போய் பார்க்கவும் (S-43-TL) படிவத்தை உடனே பூர்த்தி செய்து சபை செயலரிடம் கொடுக்க வேண்டும்.
7. இந்த ஊழியத்தை எப்படி செய்ய வேண்டும்?
7 எப்படிச் செய்ய வேண்டும்: பிரஸ்தாபிகள் பொதுவாக தங்களுடைய டேபிள்களிடம் அல்லது வீல்-ஸ்டேண்டுகளிடம் ஆட்கள் வருவதற்காகக் காத்திருப்பார்கள். யாராவது வந்தால், அவருக்கு விருப்பமான பிரசுரத்தை எடுத்துக்கொள்ளும்படி சொல்வார்கள். அவர் ஏதாவது கேள்வி கேட்டால், பைபிளிலிருந்து பதில் சொல்வார்கள். அவர் பிரசுரங்களை எடுத்துக்கொண்டால், நன்கொடை ஏற்பாட்டைப் பற்றிச் சொல்ல மாட்டார்கள். நம்முடைய வேலைக்கு பண உதவி எப்படிக் கிடைக்கிறது என்பதைப் பற்றி அவர் கேட்டால், அந்தப் பிரசுரத்திலுள்ள விலாசத்துக்கு நன்கொடை அனுப்பி வைக்கலாம் என விளக்குவார்கள். முடிந்தால், “உங்கள் வீட்டிற்கு யாராவது வந்து உங்களைச் சந்திக்க விரும்புகிறீர்களா?” என்றோ “நாங்கள் பிரசுரங்களை கொடுப்பதோடு இலவசமாக பைபிளையும் கற்றுக்கொடுக்கிறோம், உங்களுக்கு அதில் விருப்பமா?” என்றோ கேட்பார்கள்.
8. இந்தப் புதிய ஊழிய முறை என்ன பலன்களை அளித்திருக்கிறது?
8 இந்த முறையில் ஊழியம் செய்வது நல்ல பலன்களை அள்ளித்தருகிறது. இந்தியாவில் உள்ள ஒரு சபையைச் சேர்ந்தவர்கள் ஒருமணிநேரத்தில் 1,000 பத்திரிகைகளைக் கொடுத்தார்கள். ஆர்வம் காட்டிய 200 பேரிடமிருந்து முகவரியைப் பெற்றுக்கொண்டார்கள். பெங்களூருவில் ஒரு ஷாப்பிங் மாலுக்குமுன் வைக்கப்பட்ட நம் பிரசுரங்களை ஒரு டிராஃபிக் இன்ஸ்பெக்டர் கவனித்தார். நம் வேலையைப் பார்த்து ஆச்சரியப்பட்டார். குடும்ப மகிழ்ச்சி புத்தகத்தையும் இளைஞர் கேட்கின்றனர் புத்தகத்தையும் எடுத்துக்கொண்டார். ஆந்திர பிரதேசத்தில், யெகோவாவின் சாட்சிகளைப் பார்க்க வேண்டும் என்று பல நாட்களாகக் காத்திருந்த ஒருவர் பொது ஊழியத்தில் அவர்களைப் பார்த்தார். இப்போது சாட்சிகளோடு பைபிள் படிக்கிறார், கூட்டங்களுக்கும் வருகிறார்.
9. பொது ஊழியம் செய்ய சபையில் ஏற்பாடு இல்லாவிட்டாலும், அதைச் செய்ய இன்னும் என்னென்ன வாய்ப்புகள் இருக்கின்றன?
9 தனிப்பட்ட விதமாகப் பொது ஊழியம்: சில சபை பிராந்தியங்களில் டேபிள் அல்லது வீல்-ஸ்டேண்ட்களில் பிரசுரங்கள் வைத்து ஊழியம் செய்யுமளவுக்கு நெரிசல்மிக்க இடங்கள் இல்லாதிருக்கலாம். என்றாலும், அப்படிப்பட்ட சபைகளிலும்கூட, தனிப்பட்ட விதமாகப் பொது ஊழியம் செய்வதைப் பற்றி பிரஸ்தாபிகள் சிந்தித்துப் பார்க்கும்படி உற்சாகப்படுத்துகிறோம். உங்கள் பிராந்தியத்தில் கடைவீதி, ஷாப்பிங் காம்ப்ளக்ஸ் இருக்கிறதா? பூங்காவோ மக்கள் ஒன்றுகூடி வருகிற இடமோ இருக்கிறதா? உங்கள் பிராந்தியத்தில் வழக்கமாக பொது நிகழ்ச்சிகள் ஏதாவது நடைபெறுமா? அதுபோன்ற இடங்களில் மூப்பர்களின் அனுமதியுடன் நீங்கள் பொது ஊழியம் செய்யலாம், ஆனால் சாதுரியமாக இருப்பது முக்கியம்.
10. மக்கள் எங்கெல்லாம் இருக்கிறார்களோ அங்கெல்லாம் சென்று பிரசங்கிக்க நாம் ஏன் தயாராய் இருக்க வேண்டும்?
10 “பலதரப்பட்ட ஆட்களும் சத்தியத்தைப் பற்றிய திருத்தமான அறிவை அடைய வேண்டுமென்பதும், மீட்புப் பெற வேண்டுமென்பதும்” யெகோவாவின் சித்தம். (1 தீ. 2:4) ஆகவே, முடிவு வருவதற்குமுன் எத்தனை பேருக்கு முடியுமோ அத்தனை பேருக்கு கடவுளுடைய அரசாங்கத்தைப் பற்றிய நற்செய்தியை அறிவிக்க நாம் முயற்சி செய்கிறோம். (மத். 24:14) அநேக இடங்களில், மக்களை வீடுகளில் சந்திப்பது அரிதாக இருக்கிறது. ஆனாலும், அவர்களைப் பொது இடங்களில் சந்தித்துப் பேச வாய்ப்புகள் கிடைக்கலாம். சிலர் நற்செய்தியைக் கேட்பதற்கு ஒரே வழி பொது ஊழியமாக இருக்கலாம். ஆகவே, ஆட்கள் எங்கெல்லாம் தென்படுகிறார்களோ அங்கெல்லாம் சென்று பிரசங்கிப்பதன் மூலம் நம் ஊழியத்தை முழுமையாக நிறைவேற்றுவோமாக.—2 தீ. 4:5.
நல்ல ஒத்துழைப்பு அவசியம்
சிலசமயங்களில், அடுத்தடுத்து உள்ள சபைகளைச் சேர்ந்த பிரஸ்தாபிகள் ஒரே தெருவில்... ஒரே வாகன நிறுத்துமிடத்தில்... ஒரே கடையில்... ஒரே பஸ் நிலையத்தில் அல்லது ரயில் நிலையத்தில்... பொது ஊழியம் செய்வதாகக் கேள்விப்படுகிறோம். வெவ்வேறு சபையைச் சேர்ந்த பிரஸ்தாபிகள்... ஒரே வரவேற்பு அறையில், காத்திருக்கும் அறையில் பத்திரிகைகளை வைத்துவிட்டு வந்திருக்கிறார்கள்; ஒரே கடைக்காரரிடம் பிரசங்கித்திருக்கிறார்கள். இவர்கள் வெவ்வேறு நேரத்தில் ஊழியம் செய்தாலும், கடைக்காரர்களும் சரி அந்தப் பகுதிகளில் வசிப்பவர்களும் சரி, இதனால் சில சமயம் எரிச்சல் அடைந்திருக்கிறார்கள். எனவே, நம் சபைக்கு நியமிக்கப்பட்ட பிராந்தியத்தில் மட்டுமே பொது ஊழியம் செய்வது மிகவும் நல்லது.
அருகிலுள்ள சபையின் பிராந்தியத்தில் பொது ஊழியம் செய்ய பிரஸ்தாபிகள் விரும்பினால், சபையின் ஊழியக் கண்காணியிடம் அதைப் பற்றி பேச வேண்டும். அப்போதுதான் அவர் அந்தச் சபையின் ஊழியக் கண்காணியைத் தொடர்புகொண்டு அனுமதி வாங்கித்தர முடியும். வெவ்வேறு மொழி சபைகள் ஒரே பகுதியில் பொது ஊழியம் செய்ய நியமிக்கப்பட்டால், அந்தந்த சபையின் ஊழியக் கண்காணிகள் அதைப் பற்றி கலந்துபேசி ஊழியம் செய்ய வேண்டும்; இதனால், அந்தப் பகுதிகளில் வசிப்பவர்களை அநாவசியமாக எரிச்சலூட்டாமல் இருக்கலாம். பிரஸ்தாபிகள் தொகுதியாக வெவ்வேறு பிராந்தியங்களில் ஊழியம் செய்ய அல்லது ஒரே பிராந்தியத்தில் வெவ்வேறு நேரங்களில் ஊழியம் செய்ய ஏற்பாடு செய்யலாம். நல்ல ஒத்துழைப்பு கொடுப்பதன் மூலம் எல்லாவற்றையும் “கண்ணியமாகவும் ஒழுங்காகவும்” செய்ய முடியும்.—1 கொ. 14:40.