பலன்தரும் தெரு ஊழியம்
1. நாம் எப்படி இயேசுவைப் பின்பற்றலாம்?
1 இயேசு பூமியில் இருந்தபோது, வழியிலும் பொது இடங்களிலும் சந்தித்த ஆட்களிடம் சாட்சி கொடுத்தார். (லூக். 9:57-61; யோவா. 4:7) இப்படி எத்தனை பேருக்கு முடியுமோ அத்தனை பேருக்கு நற்செய்தியைச் சொல்ல அவர் விரும்பினார். இன்றும், கடவுளுடைய ஞானத்தை மக்கள் பெற்றுக்கொள்வதற்கு உதவும் சிறந்த வழி தெரு ஊழியம். (நீதி. 1:20) நாமாகவே முயற்சி எடுத்து விவேகத்தோடு செயல்பட்டால் வெற்றி நிச்சயம்.
2. தெரு ஊழியம் செய்யும்போது நாமாகவே போய் பேசுவது எப்படி?
2 நீங்களே போய் பேசுங்கள்: ஓர் இடத்தில் உட்கார்ந்துகொண்டோ நின்றுகொண்டோ மற்றவர்கள் வந்து பேச வேண்டுமென எதிர்பார்க்காதீர்கள். நீங்களே போய் பேசுங்கள். புன்சிரிப்புடன் கண்ணைப் பார்த்து, நட்பாகப் பேசுங்கள். பிரஸ்தாபிகளாக சேர்ந்து தெரு ஊழியம் செய்தாலும் ஆட்களிடம் தனித்தனியாகப் பேசுங்கள். ஆர்வம் காட்டியவர்களை மறுபடியும் சந்திப்பதற்கும் நீங்களே முயற்சி எடுக்க வேண்டும். பேசி முடித்ததும் மறுபடியும் அவர்களை எங்கே சந்திக்கலாம் என்று சாதுரியமாகக் கேளுங்கள். சில பிரஸ்தாபிகள் ஒரே இடத்தில் அடிக்கடி தெரு ஊழியம் செய்கிறார்கள். முன்பு சந்தித்தவர்களை மறுபடியும் சந்திக்கவும் அவர்களுடைய ஆர்வத்தை வளர்க்கவும் அது உதவும்.
3. தெரு ஊழியம் செய்யும்போது ஞானமாகச் செயல்படுவது ஏன் முக்கியம்?
3 ஞானமாகச் செயல்படுங்கள்: தெருவில் எங்கே நிற்க வேண்டும், யாரிடம் பேச வேண்டும் என்று ஞானமாகத் தீர்மானியுங்கள். தெருவில் போகும் எல்லோரிடமும் பேச வேண்டியதில்லை. ஆட்களைக் கவனித்துப்பாருங்கள். அவசர அவசரமாகப் போய்க்கொண்டிருப்பவரை நிறுத்தி பேசாமல் இருப்பது நல்லது. பிரச்சினைக்குரியவர்கள் யாராவது இருக்கிறார்களா என்றும் நோட்டமிடுங்கள். பெரிய கடைகளுக்கு முன்னால் நின்று ஊழியம் செய்யும்போது, கடை மேனேஜருக்கு தொந்தரவாக இருக்கிறோமா என்று யோசித்து ஞானமாகச் செயல்படுங்கள். கடைகளுக்குப் போய்கொண்டிருப்பவர்களிடம் பேசாமல், கடையிலிருந்து வெளியே வருபவர்களிடம் பேசுங்கள். ஆட்கள் பயந்துவிடாத விதத்தில் பேசுங்கள். பத்திரிகைகளைக் கொடுக்கும்போதும் கவனமாக இருங்கள். அவ்வளவாக ஆர்வம் காட்டாதவர்களிடம் பத்திரிகைக்குப் பதிலாக துண்டுப்பிரதியைக் கொடுக்கலாம்.
4. தெரு ஊழியம் சந்தோஷத்தையும் பலனையும் தரும் என்று எப்படிச் சொல்லலாம்?
4 தெரு ஊழியம் செய்வதால் கொஞ்ச நேரத்திலேயே நிறைய சத்திய விதைகளை விதைக்க முடியும். (பிர. 11:6) வீட்டுக்கு வீடு ஊழியம் செய்யும்போது பார்க்க முடியாதவர்களை தெரு ஊழியத்தில் சந்திக்கலாம். சந்தோஷத்தையும் பலனையும் அள்ளித்தரும் தெரு ஊழியத்தில் ஈடுபட நீங்கள் திட்டமிடலாமே!