வாழ்க்கையும் ஊழியமும் கூட்டத்துக்கு தயாரிக்க தேவையான தகவல்கள்
ஆகஸ்ட் 7-13
பைபிளில் இருக்கும் புதையல்கள் | எசேக்கியேல் 28-31
“தன்னை வணங்காத தேசத்துக்கு யெகோவா பலன் கொடுத்தார்”
(எசேக்கியேல் 29:18) “மனிதகுமாரனே, பாபிலோன் ராஜாவான நேபுகாத்நேச்சார் தீருவை எதிர்த்துப் போர் செய்வதற்காகத் தன்னுடைய படைவீரர்களைக் கடுமையாக வேலை வாங்கினான். அதனால், அவர்கள் எல்லாருடைய தலையும் வழுக்கையானது, எல்லாருடைய தோள்பட்டையின் தோலும் உரிந்துபோனது. ஆனால்கூட, தீருவுக்கு எதிராகப் போர் செய்ததற்கான கூலி அவனுக்கோ அவனுடைய படைவீரர்களுக்கோ கிடைக்கவில்லை.”
it-2-E பக். 1136 பாரா 4
தீரு
நகரத்தின் அழிவு. தீரு நகரத்தை நேபுகாத்நேச்சார் பல வருஷங்களாக முற்றுகையிட்டிருந்த சமயத்தில், அவருடைய போர் வீரர்கள், தலைக்கவசம் அணிந்திருந்ததால் அவர்களுடைய தலை “வழுக்கையானது.” அதோடு, முற்றுகை வேலைக்கான பொருள்களை அவர்கள் தோளில் தூக்கிக்கொண்டு போனதால், அவர்களுடைய தோலும் “உரிந்துபோனது.” தீருவுக்கு எதிரான தன்னுடைய தண்டனை தீர்ப்பை நிறைவேற்றுவதற்கு நேபுகாத்நேச்சாரை யெகோவா பயன்படுத்தினார். ஆனால், நேபுகாத்நேச்சாருக்கு அதற்கான “கூலி” கிடைக்காததால், அதற்கு ஈடாக எகிப்தின் செல்வத்தைத் தருவதாக யெகோவா வாக்குக் கொடுத்தார். (எசே 29:17-20) முற்றுகை 13 வருஷங்கள் நீடித்தது என்றும், பாபிலோனியர்கள் நிறைய செலவு செய்தார்கள் என்றும் யூத சரித்திராசிரியர் ஜொஸிஃபஸ் குறிப்பிட்டார். (அகைன்ஸ்ட் ஏபியன், I, 156 [21]) நேபுகாத்நேச்சாருடைய முயற்சிகள் எந்தளவு பலன் தந்தன என்று சரித்திர பதிவுகள் குறிப்பிடுவதில்லை. ஆனால், தீரு நகரத்தில் இருந்தவர்களுக்கு அதிகளவில் பொருள் நஷ்டம் ஏற்பட்டிருக்கும். நிறைய பேருடைய உயிரும் பறிபோயிருக்கும்.—எசே 26:7-12.
(எசேக்கியேல் 29:19) “அதனால், உன்னதப் பேரரசராகிய யெகோவா சொல்வது இதுதான்: ‘நான் எகிப்து தேசத்தை பாபிலோன் ராஜாவான நேபுகாத்நேச்சாருக்குக் கொடுக்கப்போகிறேன். அதன் சொத்துகளை அவன் வாரிக்கொண்டு போவான். அங்கு இருப்பதையெல்லாம் சூறையாடுவான். அவனுடைய படைவீரர்களுக்கு அது கூலியாகக் கிடைக்கும்.’”
it-1-E பக். 698 பாரா 5
எகிப்து, எகிப்தியன்
நேபுகாத்நேச்சாரின் 37-வது வருஷத்தில் (கி.மு. 588), எகிப்துக்கு எதிரான அவருடைய போர் நடவடிக்கையைப் பற்றி குறிப்பிடுகிற ஒரு பாபிலோனிய பதிவு கண்டுபிடிக்கப்பட்டது. அவர் எகிப்தைக் கைப்பற்றியதைப் பற்றி அது குறிப்பிடுகிறதா அல்லது கைப்பற்றிய பிறகு அவர் எடுத்த ராணுவ நடவடிக்கையைப் பற்றி அது குறிப்பிடுகிறதா என்று தெளிவாகச் சொல்ல முடியாது. எதுவாக இருந்தாலும் சரி, கடவுளுடைய மக்களை எதிர்த்த தீருவுக்கு எதிரான யெகோவாவின் தண்டனை தீர்ப்பை நிறைவேற்றுவதற்கு, நேபுகாத்நேச்சார் போர் செய்ததால் எகிப்தின் செல்வங்கள் அவருக்குக் கூலியாகக் கிடைத்தன.—எசே 29:18-20; 30:10-12.
(எசேக்கியேல் 29:20) “‘அவன் கஷ்டப்பட்டு தீருவுக்கு எதிராகப் போர் செய்ததால் நான் எகிப்து தேசத்தை அவனுக்குக் கூலியாகக் கொடுப்பேன். அவனும் அவன் ஆட்களும் எனக்காகப் போர் செய்தார்களே’ என்று உன்னதப் பேரரசராகிய யெகோவா சொல்கிறார்.”
g86-E 11/8 பக். 27 பாரா. 4-5
எல்லா விதமான வரிகளையும் கட்ட வேண்டுமா?
இந்தக் கேள்விக்கான பதிலைத் தெரிந்துகொள்ள ஒரு விஷயத்தைக் கவனியுங்கள். அதாவது, ஒரு அரசாங்கம் அதனுடைய வேலையைச் செய்ததற்காக படைப்பாளரே கடனைத் திருப்பி கொடுக்கும் விஷயத்தைக் கவனியுங்கள். யெகோவாவுடைய நீதியான கோபம்தான், பழங்கால தீரு நகரத்தை அழிக்க அவரைத் தூண்டியது. இதை நிறைவேற்றுவதற்கு, பாபிலோனிய பேரரசரான நேபுகாத்நேச்சாரின் தலைமையின்கீழ் பாபிலோனின் ராணுவ பலத்தை யெகோவா பயன்படுத்தினார். பாபிலோன் வெற்றி பெற்றாலும், அதற்கான செலவு அதிகமாகவே இருந்தது. அதனால்தான், பாலிலோனின் சேவைக்குக் கூலி கொடுக்க வேண்டும் என்று யெகோவா நினைத்தார். எசேக்கியேல் 29:18, 19-ல், அவருடைய வார்த்தைகள் இப்படிப் பதிவாகியிருக்கின்றன: “மனிதகுமாரனே, பாபிலோன் ராஜாவான நேபுகாத்நேச்சார் தீருவை எதிர்த்துப் போர் செய்வதற்காகத் தன்னுடைய படைவீரர்களைக் கடுமையாக வேலை வாங்கினான். அதனால், அவர்கள் எல்லாருடைய தலையும் வழுக்கையானது, எல்லாருடைய தோள்பட்டையின் தோலும் உரிந்துபோனது. ஆனால்கூட, தீருவுக்கு எதிராகப் போர் செய்ததற்கான கூலி அவனுக்கோ அவனுடைய படைவீரர்களுக்கோ கிடைக்கவில்லை. அதனால், உன்னதப் பேரரசராகிய யெகோவா சொல்வது இதுதான்: ‘நான் எகிப்து தேசத்தை பாபிலோன் ராஜாவான நேபுகாத்நேச்சாருக்குக் கொடுக்கப்போகிறேன். அதன் சொத்துகளை அவன் வாரிக்கொண்டு போவான். அங்கு இருப்பதையெல்லாம் சூறையாடுவான். அவனுடைய படைவீரர்களுக்கு அது கூலியாகக் கிடைக்கும்.’”
நேபுகாத்நேச்சார் தலைக்கனம்பிடித்த, சுயநலமான, புறமத அரசன் என்பது பைபிளில் ஆர்வம் காட்டுகிறவர்களுக்கு நன்றாகத் தெரியும். பாபிலோனும் அதனுடைய படையும் தன்னுடைய அடிமைகளை எந்தளவு சித்திரவதைச் செய்யும் என்பதும் எல்லாருக்கும் தெரிந்த ஒன்று! அவர்கள் அப்படி நடந்துகொள்வதை யெகோவா ஏற்றுக்கொள்ளவில்லை. இருந்தாலும், கடனைத் திருப்பி கொடுக்க வேண்டும் என்பதில் அவர் உறுதியாக இருந்தார், அதுவும் அந்தக் கடனை முழுமையாகத் திருப்பி கொடுத்தார்.
புதையல்களைத் தோண்டி எடுங்கள்
(எசேக்கியேல் 28:12-19) “மனிதகுமாரனே, தீருவின் ராஜாவைப் பார்த்து இந்தப் புலம்பல் பாட்டைப் பாடு: ‘உன்னதப் பேரரசராகிய யெகோவா சொல்வது இதுதான்: “நீ எந்தக் குறையும் இல்லாதவனாக இருந்தாய். ஞானம் நிறைந்தவனாகவும் அழகே உருவானவனாகவும் இருந்தாய். நீ கடவுளுடைய தோட்டமான ஏதேனில் இருந்தாய். மாணிக்கம், புஷ்பராகம், சூரியகாந்தக் கல், படிகப்பச்சை, கோமேதகம், பச்சைக் கல், நீலமணிக் கல், நீலபச்சைக் கல், மரகதம் ஆகிய ரத்தினக்கற்களால் அலங்காரம் செய்யப்பட்டிருந்தாய். அந்தக் கற்கள் பதிக்கப்பட்ட தங்க நகைகளைப் போட்டிருந்தாய். உன்னைப் படைத்த நாளில் அவற்றை நான் தயாராக வைத்திருந்தேன். பாதுகாக்கும் கேருபீனாக நான் உன்னைத் தேர்ந்தெடுத்து நியமித்தேன். நீ கடவுளுடைய பரிசுத்த மலையில் இருந்தாய். எரிகிற கற்களின் நடுவில் நடந்தாய். நீ படைக்கப்பட்ட நாளிலிருந்து நல்ல வழியில்தான் நடந்தாய். ஆனால், பிற்பாடு கெட்ட வழியில் நடக்க ஆரம்பித்தாய். நீ வியாபாரம் செய்வதில் மூழ்கிப்போனதால் உன் நடுவே வன்முறை பெருகியது. நீ பாவம் செய்ய ஆரம்பித்தாய். நீ தீட்டுப்பட்டதால் உன்னைக் கடவுளுடைய மலையிலிருந்தும் எரிகிற கற்களின் நடுவிலிருந்தும் துரத்தியடிப்பேன். பாதுகாக்கும் கேருபீனே, நான் உன்னை அழித்துவிடுவேன். அழகினால் உன் இதயத்தில் பெருமை வந்துவிட்டது. உன்னையே நீ உயர்வாக நினைத்ததால் உன் ஞானத்தைக் கெடுத்துக்கொண்டாய். நான் உன்னைத் தரையில் தள்ளுவேன். ராஜாக்களுக்கு முன்னால் உன்னை வேடிக்கைப் பொருளாக்குவேன். நீ செய்த நேர்மையற்ற வியாபாரத்தினாலும் பெரிய குற்றத்தினாலும் உன்னுடைய பரிசுத்தமான இடங்களைத் தீட்டுப்படுத்தினாய். அதனால், உன் நடுவில் தீயைக் கொளுத்துவேன். அது உன்னைப் பொசுக்கிவிடும். உன்னைப் பார்க்கிற எல்லாருடைய கண் முன்னாலும் நான் உன்னை இந்தப் பூமியின் மேல் சாம்பலாக்குவேன். உன்னைப் பற்றித் தெரிந்த ஜனங்கள் அதிர்ச்சியோடு உன்னைப் பார்ப்பார்கள். உனக்குத் திடீரென்று பயங்கரமான முடிவு வரும். நீ அடியோடு அழிந்துபோவாய்”’ என்றார்.”
it-2-E பக். 604 பாரா. 4-5
பரிபூரணம்
முதல் முதலில் பாவம் செய்தவனும், தீரு நகரத்தின் ராஜாவும். மனிதர்கள் பாவம் செய்து, பரிபூரணத்தை இழப்பதற்கு முன்பு, பரலோகத்தில் ஒரு தேவதூதன் பாவம் செய்து பரிபூரணத்தை இழந்தான் என்று யோவான் 8:44-ல் உள்ள இயேசுவின் வார்த்தைகளும் ஆதியாகமம் 3-ஆம் அதிகாரத்தில் இருக்கிற பதிவும் காட்டுகின்றன. எசேக்கியேல் 28:12-19-ல் இருக்கிற புலம்பல் பாடல், ஒரு மனித ராஜாவை, அதாவது “தீருவின் ராஜாவை,” குறிப்பிட்டாலும், பரலோகத்தில் முதல் முதலில் பாவம் செய்த கடவுளுடைய மகன்களில் ஒருவனாக இருந்தவனையும் குறிக்கிறது. ‘தீருவின் ராஜாவின்’ தலைக்கனமும், தன்னை ‘ஒரு கடவுளாக’ ஆக்கிக்கொண்டதும், “கேருபீன்” என்று அழைக்கப்படுவதும், ‘கடவுளுடைய தோட்டமான ஏதேன்’ என்று குறிப்பிடப்படுவதும் சாத்தானைப் பற்றி பைபிளில் குறிப்பிடப்படுகிற தகவல்களோடு ஒத்திருக்கிறது. ஏனென்றால், சாத்தானுக்கும் தலைக்கனம் இருந்தது. ஏதேனில் இருந்த பாம்போடு அவன் சம்பந்தப்படுத்திப் பேசப்பட்டிருக்கிறான். அதோடு, “இந்த உலகத்தின் கடவுள்” என்றும் அவன் அழைக்கப்படுகிறான்.—1தீ 3:6; ஆதி 3:1-5, 14, 15; வெளி 12:9; 2கொ 4:4.
தீருவில் குடியிருக்கும் தீரு நகரத்தின் பெயர் குறிப்பிடப்படாத ராஜா தன்னைப் பற்றி, “எந்தக் குறையும் இல்லாதவனாக இருந்தாய்” என்றும், ‘ஞானம் நிறைந்தவன், அழகே உருவானவன் [கலால் என்ற எபிரெய வார்த்தையோடு சம்பந்தப்பட்டிருக்கிற பெயரடை]’ என்றும், சொல்லிக்கொள்கிறான். கெட்ட வழியில் நடக்க ஆரம்பிக்கும்வரை, படைக்கப்பட்ட நாளிலிருந்து ‘நல்ல வழியில் [எபிரெயுவில் டாமிம்] நடந்தவன்’ என்றும் தன்னைப் பற்றி சொல்லிக்கொள்கிறான். (எசே 27:3; 28:12, 15) எசேக்கியேலில் இருக்கிற புலம்பல் பாடல் முதலில் அல்லது நேரடியாக ஒரு ராஜாவுக்குப் பொருந்துவதற்குப் பதிலாக, அது தீருவில் இருந்த எல்லா ராஜாக்களுக்கும் பொருந்தலாம். (ஏசா 14:4-20-ல் உள்ள பெயர் குறிப்பிடப்படாத “பாபிலோன் ராஜாவை” பற்றிய தீர்க்கதரிசனத்தோடு இதை ஒப்பிட்டுப் பாருங்கள்.) அப்படியென்றால், மேலே குறிப்பிடப்பட்டிருக்கிற விஷயம், ஆரம்பத்தில் தாவீது மற்றும் சாலொமோன் ராஜாக்களோடு, தீருவை ஆட்சி செய்த ராஜாக்களுக்கு இருந்த நல்ல நட்பையும் ஒத்துழைப்பையும் அது குறிக்கலாம். அந்தச் சமயத்தில், மோரியா மலைமேல் இருந்த யெகோவாவின் ஆலயத்தைக் கட்டுவதற்கும்கூட தீரு ராஜாக்கள் உதவி செய்தார்கள். அதனால் ஆரம்பத்தில், யெகோவாவின் மக்களான இஸ்ரவேலர்களோடு தீருவின் ராஜாக்கள் நல்ல நட்போடு இருந்தார்கள், அதாவது “நல்ல வழியில்” நடந்தார்கள். (1ரா 5:1-18; 9:10, 11, 14; 2நா 2:3-16) ஆனால் பிற்பாடு வந்த ராஜாக்கள் “நல்ல வழியில்” நடப்பதை விட்டுவிட்டார்கள். அதனால், யோவேல், ஆமோஸ் மற்றும் எசேக்கியேல் தீர்க்கதரிசிகளின் மூலம் கடவுள் தண்டனை தீர்ப்பு கொடுத்தார். (யோவே 3:4-8; ஆமோ 1:9, 10) ‘தீருவின் ராஜாவுக்கும்’ கடவுளுடைய முக்கிய எதிரிக்கும் நிறைய ஒற்றுமைகள் இருப்பது தெளிவாகத் தெரிகிறது. அதோடு, ‘பரிபூரணமாக இருப்பதையும்’ ‘நல்ல வழியில் நடப்பதையும்’ ஒருவர் விட்டுவிடுவதற்கு வாய்ப்பு இருக்கிறது என்பதை இந்தத் தீர்க்கதரிசனம் காட்டுகிறது.
ஆகஸ்ட் 14-20
பைபிளில் இருக்கும் புதையல்கள் | எசேக்கியேல் 32-34
“காவல்காரனுடைய மிகப் பெரிய பொறுப்பு”
(எசேக்கியேல் 33:7) “மனிதகுமாரனே, இஸ்ரவேல் ஜனங்களுக்கு நான் உன்னைக் காவல்காரனாக நியமித்திருக்கிறேன். என்னிடமிருந்து எச்சரிப்பு செய்தியைக் கேட்டதும் நீ அதை அவர்களிடம் சொல்ல வேண்டும்.”
it-2-E பக். 1172 பாரா 2
காவல்காரன்
அடையாள அர்த்தம். இஸ்ரவேல் தேசத்துக்கு, அடையாள அர்த்தத்தில் காவல்காரர்களாக இருப்பதற்கு யெகோவா நிறைய தீர்க்கதரிசிகளை ஏற்படுத்தினார். (எரே 6:17) அந்தத் தீர்க்கதரிசிகளும், காவல்காரர்களைப் பற்றி அடையாள அர்த்தத்தில் பேசியிருக்கிறார்கள். (ஏசா 21:6, 8; 52:8; 62:6; ஓசி 9:8) அடையாள அர்த்தத்தில் சொல்லப்பட்ட இந்தத் தீர்க்கதரிசிகள், கெட்டவர்களுக்கு வரப்போகும் அழிவைப் பற்றி எச்சரிக்க வேண்டியிருந்தது. அப்படிச் செய்யவில்லை என்றால், அவர்கள் கடவுளுக்குக் கணக்குக் கொடுக்க வேண்டியிருந்தது. ஒருவேளை, மக்கள் அந்த எச்சரிப்புக்குச் செவிகொடுக்கவில்லை என்றால், அவர்களுடைய சாவுக்கு அவர்களே காரணமாக இருப்பார்கள். (எசே 3:17-21; 33:1-9) உண்மையாக நடந்துகொள்ளாத ஒரு தீர்க்கதரிசி, குருட்டு காவல்காரனைப் போலவும், குரைக்க முடியாத ஊமை நாய்களைப் போலவும் இருந்தான்.—ஏசா 56:10.
ஆகஸ்ட் 28—செப்டம்பர் 3
புதையல்களைத் தோண்டி எடுங்கள்
(எசேக்கியேல் 39:7) “என்னுடைய ஜனங்களான இஸ்ரவேலர்களின் நடுவில் என் பரிசுத்த பெயரை மகிமைப்படுத்துவேன். என்னுடைய பரிசுத்தமான பெயரைக் கெடுக்க இனி யாரையும் விட மாட்டேன். நான் யெகோவா என்றும் இஸ்ரவேலின் பரிசுத்தமான கடவுள் என்றும் எல்லா தேசத்தாரும் தெரிந்துகொள்வார்கள்.”
w12-E 9/1 பக். 21 பாரா 2
‘நான் யெகோவா என்று எல்லா தேசத்தாரும் தெரிந்துகொள்வார்கள்.’
“என்னுடைய பரிசுத்தமான பெயரைக் கெடுக்க இனி யாரையும் விட மாட்டேன்” என்று யெகோவா சொல்கிறார். அநீதி ஏற்படும்போது, மனிதர்கள் யெகோவாமேல் பழிபோடுவதன் மூலம் அவருடைய பெயரைக் கெடுக்கிறார்கள். எப்படி? பைபிளில், “பெயர்” என்ற வார்த்தை, பெரும்பாலும் நற்பெயரைக் குறிக்கிறது. கடவுளுடைய பெயர், “அவர் எப்படிப்பட்டவர், அதாவது, தன்னை அவர் எப்படி வெளிப்படுத்தியிருக்கிறார் என்றும், அவருடைய புகழையும் அவருடைய மதிப்பையும் அது வெளிக்காட்டுகிறது என்றும்” ஒரு ஆராய்ச்சி புத்தகம் சொல்கிறது. யெகோவாவுடைய பெயர் அவருக்கு இருக்கிற நற்பெயரையும் அர்த்தப்படுத்துகிறது. அநீதியைப் பற்றி யெகோவா என்ன நினைக்கிறார்? அவர் அதை வெறுக்கிறார்! அநீதியால் பாதிக்கப்பட்டவர்கள்மேல் அவர் கரிசனை காட்டுகிறார். (யாத்திராகமம் 22:22-24) கடவுள் எதையெல்லாம் வெறுக்கிறாரோ அவற்றிற்கெல்லாம் அவர்தான் காரணம் என்று சொல்வதன் மூலம் மக்கள் அவருடைய நல்ல பெயரைக் கெடுக்கிறார்கள். இப்படி, அவருடைய ‘பெயரை அவமதிக்கிறார்கள்.’—சங்கீதம் 74:10.