வாழ்க்கையும் ஊழியமும் கூட்டத்துக்குத் தயாரிக்க தேவையான தகவல்கள்
மார்ச் 2-8
பைபிளில் இருக்கும் புதையல்கள் | ஆதியாகமம் 22–23
“ஆபிரகாமின் விசுவாசத்தை கடவுள் சோதித்துப் பார்த்தார்”
மகனை பலிகொடுக்கும்படி ஆபிரகாமிடம் கடவுள் ஏன் கேட்டார்?
ஆபிரகாமிடம் யெகோவா சொன்னதைக் கவனியுங்கள்: “உன் புத்திரனும் உன் ஏக சுதனும் உன் நேச குமாரனுமாகிய ஈசாக்கை . . . தகனபலியாகப் பலியிடு.” (ஆதியாகமம் 22:2) இங்கு ஈசாக்கை, ‘உன் நேச குமாரன்’ என்று யெகோவா குறிப்பிட்டதைப் பார்த்தீர்களா? ஈசாக்கின்மேல் ஆபிரகாம் உயிரையே வைத்திருந்தார் என்று யெகோவாவுக்குத் தெரியும். அதேபோல், தம் மகன் இயேசுமீதும் அவருக்கு அந்தளவு அன்பு இருந்தது. அதனால்தான், இயேசு பூமியில் இருந்தபோது, அவரை “என் அன்பு மகன்” என்று இரண்டு முறை பரலோகத்திலிருந்து சொன்னார்.—மாற்கு 1:11; 9:7.
ஆபிரகாமிடம் ஈசாக்கைப் பலிகொடுக்கும்படி யெகோவா கேட்டபோது “தயவுசெய்து” என்ற அர்த்தத்தைத் தரும் ஓர் எபிரெய வார்த்தையைப் பயன்படுத்தினார். “பலிகொடுக்கும்படி கேட்பது அவருக்கு எவ்வளவு பெரிய இழப்பை ஏற்படுத்துமென கடவுள் புரிந்திருந்தார்” என்பதை இந்த எபிரெய வார்த்தை காட்டுவதாக ஒரு பைபிள் அறிஞர் குறிப்பிடுகிறார். கடவுள் அப்படிக் கேட்டபோது ஆபிரகாம் எந்தளவு மன வேதனை அடைந்திருப்பார் என்று நம்மால் நினைத்துப் பார்க்க முடிகிறது. அது போலவே, தம்முடைய அன்பு மகன் துடிதுடித்து இறந்துபோவதைப் பார்த்து யெகோவாவின் மனம் எந்தளவு ரண வேதனைபட்டிருக்கும் என்பதையும் கற்பனை செய்ய முடிகிறது, அல்லவா? அப்படியொரு ரண வேதனையை அதுவரை யெகோவா அனுபவித்திருக்க மாட்டார், இனியும் அனுபவிக்க மாட்டார்.
ஆகவே, ஆபிரகாமிடம் பலிகொடுக்கும்படி யெகோவா கேட்டது நமக்கு அதிர்ச்சியாக இருந்தாலும், பலிகொடுக்க அவர் அனுமதிக்கவில்லை என்பதை நினைவில் வையுங்கள். ஒரு அப்பாவாக, ஆபிரகாமுக்கு இது எவ்வளவு பெரிய இழப்பாக இருக்கும் என்பதை யெகோவா அறிந்திருந்தார். அதனால்தான், ஈசாக்கை பலியாகக் கொடுக்க அனுமதிக்கவில்லை. என்றாலும், தம் மகன் உயிரைக் கொடுக்க அனுமதித்தார்; ஆம், ‘தமது சொந்த மகனென்றும் பார்க்காமல் நம் எல்லாருக்காகவும் அவரைக் கொடுத்தார்.’ (ரோமர் 8:32) அது தமக்குத் தாங்க முடியாத வேதனையைத் தரும் என்று தெரிந்தபோதிலும் யெகோவா அதை ஏன் ஏற்றுக்கொண்டார்? ‘நாம் வாழ்வு பெறுவதற்காகவே.’ (1 யோவான் 4:9) இந்தச் சம்பவத்தைப் படிக்கும்போதெல்லாம் யெகோவா நம்மேல் எந்தளவு அன்பு வைத்திருக்கிறார் என்பதை நாம் நினைத்துப் பார்க்கலாம். இதற்குக் கைமாறாக நாமும் அவருக்கு அன்பு காட்ட வேண்டாமா?
கடவுளுக்குக் கீழ்ப்படியுங்கள், அவரது வாக்குறுதிகளிலிருந்து நன்மை அடையுங்கள்
6 ‘என் ஜீவனைக்கொண்டு சொல்லுகிறேன் என்று யெகோவாவாகிய ஆண்டவர் சொல்லுகிறார்.’ (எசே. 17:16) இப்படி 40-க்கும் அதிகமான முறை யெகோவா ஆணையிட்டுக் கொடுத்திருக்கிறார்; பாவத்தில் வீழ்ந்த மனிதகுலம் தம் வாக்குறுதிகளில் நம்பிக்கையோடு இருப்பதற்காகவே அப்படிச் செய்திருக்கிறார். யெகோவா ஆபிரகாமுக்கு ஏராளமான வாக்குறுதிகளை ஆணையிட்டுக் கொடுத்தது அதற்கு மிகச் சிறந்த உதாரணம்; ஆபிரகாமின் மகனான ஈசாக்கின் வம்சத்தில்தான் வாக்குப்பண்ணப்பட்ட சந்ததியானவர் வருவாரென்பதை அந்த வாக்குறுதிகள் அனைத்தும் உறுதிப்படுத்தின. (ஆதி. 12:1-3, 7; 13:14-17; 15:5, 18, 21; 21:12) அக்காலத்தில், யெகோவா ஆபிரகாமுக்கு ஒரு கடும் சோதனையை முன்வைத்தார்; அவருடைய அன்பு மகனைத் தமக்குப் பலிசெலுத்தும்படி கட்டளையிட்டார். ஆபிரகாம் உடனடியாகக் கீழ்ப்படிந்தார்; தன் மகனைப் பலிசெலுத்த கத்தியை ஓங்கினார், அப்போது ஒரு தேவதூதர் அவரைத் தடுத்தார். உடனே யெகோவா இவ்வாறு ஆணையிட்டுக் கொடுத்தார்: “நீ உன் புத்திரன் என்றும், உன் ஏக சுதன் என்றும் பாராமல் அவனை ஒப்புக்கொடுத்து இந்தக் காரியத்தைச் செய்தபடியால்; நான் உன்னை ஆசீர்வதிக்கவே ஆசீர்வதித்து, உன் சந்ததியை வானத்து நட்சத்திரங்களைப் போலவும், கடற்கரை மணலைப் போலவும் பெருகவே பெருகப்பண்ணுவேன் என்றும், உன் சந்ததியார் தங்கள் சத்துருக்களின் வாசல்களைச் சுதந்தரித்துக்கொள்ளுவார்கள் என்றும், நீ என் சொல்லுக்குக் கீழ்ப்படிந்தபடியினால், உன் சந்ததிக்குள் பூமியிலுள்ள சகல ஜாதிகளும் ஆசீர்வதிக்கப்படும் என்றும் என்பேரில் ஆணையிட்டேன்.”—ஆதி. 22:1-3, 9-12, 15-18.
புதையல்களைத் தோண்டி எடுங்கள்
ஆபிரகாம் ‘என் நண்பன்’
13 மகனை பலியாகக் கொடுக்கப்போன சமயத்தில் ஆபிரகாம் வேலைக்காரர்களிடம், “நீங்கள் கழுதையை நிறுத்தி இங்கே காத்திருங்கள், நானும் பிள்ளையாண்டானும் அவ்விடமட்டும் போய், தொழுதுகொண்டு, உங்களிடத்துக்குத் திரும்பி வருவோம்” என்றார். (ஆதி. 22:5) அவர் ஏன் அப்படி சொன்னார்? திரும்பவும் மகனோடு வருவதாக பொய் சொன்னாரா? இல்லை. ஈசாக்கைத் திரும்பவும் உயிரோடு எழுப்பும் சக்தி யெகோவாவுக்கு இருக்கிறது என்பதில் ஆபிரகாமுக்கு எந்த சந்தேகமும் இல்லை. (எபிரெயர் 11:19-ஐ வாசியுங்கள்.) ஏனென்றால், அவருக்கும் சாராளுக்கும் வயதான பிறகும்கூட ஒரு குழந்தையைப் பெற்றெடுக்கும் சக்தியை யெகோவா கொடுத்திருந்தார். (எபி. 11:11, 12, 18) யெகோவா தேவனால் முடியாத காரியம் எதுவுமில்லை என்பதை ஆபிரகாம் இதிலிருந்து புரிந்துகொண்டார். அன்று என்ன நடக்கும் என்று ஆபிரகாமுக்குத் தெரியாது. இருந்தாலும், யெகோவா அவருடைய வாக்குறுதிகளை எல்லாம் நிறைவேற்றுவதற்காக ஈசாக்கை உயிரோடு எழுப்புவார் என்று மட்டும் உறுதியாக நம்பினார். அதனால்தான் ஆபிரகாமை, ‘கடவுள்மீது விசுவாசம் வைக்கிற அனைவருக்கும் தகப்பன்’ என்று பைபிள் சொல்கிறது.
it-1-E பக். 853 பாரா. 5-6
முன்னறிதல், முன்தீர்மானித்தல்
தேவைப்படும் சமயத்தில் மட்டும் முன்னறியும் திறனைப் பயன்படுத்துதல். விதி என்ற கோட்பாட்டுக்கும் இதற்கும் சம்பந்தம் இல்லை. கடவுளுடைய முன்னறியும் திறன், அவருடைய நீதியான தராதரங்களோடு ஒத்துப்போக வேண்டும். அதோடு, தன்னுடைய வார்த்தையின் மூலம் தன்னைப் பற்றி அவர் சொல்லியிருக்கிற விஷயங்களோடும் ஒத்துப்போக வேண்டும். ஒரு சூழ்நிலையை நன்றாகச் சோதித்துப்பார்த்து, அந்தச் சூழ்நிலைக்கு ஏற்றபடி கடவுள் ஒரு முடிவு எடுக்கிறார் என்பதை நிறைய பதிவுகள் காட்டுகின்றன. இதை வைத்துப்பார்க்கும்போது, விதி என்ற கோட்பாட்டுக்கும் இதற்கும் சம்பந்தம் இல்லை.
உதாரணத்துக்கு, ஆதியாகமம் 11:5-8-ல் கடவுள் தன்னுடைய கவனத்தை பூமியின் பக்கம் திருப்பியதாகச் சொல்லப்பட்டிருக்கிறது. பாபேலில் இருந்த சூழ்நிலையை சோதித்துப்பார்த்து, அங்கே நடந்துகொண்டிருந்த அநீதியான செயலைத் தடுத்து நிறுத்துவதற்கு என்ன செய்ய வேண்டும் என்ற முடிவை அப்போது அவர் எடுத்ததாகவும் அந்த வசனங்கள் சொல்கின்றன. அடுத்து, சோதோம் கொமோராவின் உதாரணத்தைப் பார்க்கலாம். அங்கே அநியாயம் அக்கிரமம் அதிகமானதற்குப் பிறகு, ‘மற்றவர்கள் புலம்புவதுபோல், அந்த ஜனங்கள் உண்மையிலேயே மோசமாக நடக்கிறார்களா என்று தான் இறங்கிப் போய்’ சோதித்துப்பார்ப்பதென்று (அதாவது, தேவதூதர்களின் மூலம் சோதித்துப்பார்ப்பதென்று) முடிவெடுத்திருப்பதாக ஆபிரகாமிடம் யெகோவா சொன்னார். (ஆதி 18:20-22; 19:1) அடுத்து, ஆபிரகாமின் விஷயத்துக்கு வரலாம். அவரை தனக்கு “நன்றாகத் தெரியும்” என்று யெகோவா சொன்னார். ஈசாக்கை பலி கொடுக்குமளவுக்கு ஆபிரகாம் போனதற்குப் பிறகு, “நீ கடவுள்பயம் உள்ளவன் என்று இப்போது நான் தெரிந்துகொண்டேன். ஏனென்றால், எனக்காக உன்னுடைய ஒரே மகனைக் கொடுப்பதற்குக்கூட நீ தயங்கவில்லை” என்று அவர் சொன்னார்.—ஆதி 18:19; 22:11, 12; நெ 9:7, 8; கலா 4:9.
it-1-E பக். 604 பாரா 5
கிறிஸ்து இறப்பதற்கு முன்பாகவே ஆபிரகாம் எப்படி நீதிமானாக ஏற்றுக்கொள்ளப்பட்டார்?
ஆபிரகாம் தன்னுடைய விசுவாசத்தைச் செயல்களின் மூலம் வெளிப்படுத்தியதால், “அவர் நீதிமானாகக் கருதப்பட்டார்.” (ரோ 4:20-22) அதற்காக, இவரும் கிறிஸ்துவுக்கு முன்பு வாழ்ந்த உண்மையுள்ள மற்றவர்களும் பரிபூரணர்களாகவோ பாவத்திலிருந்து விடுபட்டவர்களாகவோ இல்லை. இருந்தாலும், ‘சந்ததியை’ பற்றிய கடவுளுடைய வாக்குறுதியில் நம்பிக்கை வைத்ததாலும், கடவுளுடைய கட்டளைகளின்படி நடக்க முயற்சி செய்ததாலும், இவர்கள் நீதிமான்களாகக் கருதப்பட்டார்கள். கடவுளுக்கு முன்பு நிற்பதற்குத் தகுதியில்லாத இந்த உலக மக்களைப் போல் இவர்களும் அநீதிமான்களாகக் கருதப்படவில்லை. (ஆதி 3:15; சங் 119:2, 3) கடவுளைவிட்டுப் பிரிந்திருக்கிற இந்த உலக மக்களோடு ஒப்பிடும்போது, யெகோவா இவர்களைக் குற்றமற்றவர்களாகப் பார்க்கிறார். (சங் 32:1, 2; எபே 2:12) அதனால், இவர்கள் பாவ இயல்புள்ளவர்களாக இருந்தாலும், இவர்களுடைய விசுவாசத்தால் கடவுள் இவர்களோடு தொடர்பு வைத்துக்கொண்டார்; இவர்களை ஆசீர்வதித்தார். ஆனாலும், தன்னுடைய பரிபூரணமான, நீதியான தராதரங்களுக்கு உட்பட்டுதான் இதையெல்லாம் செய்தார். (சங் 36:10) பாவத்திலிருந்து தங்களுக்கு விடுதலை தேவை என்பதை இவர்கள் புரிந்துவைத்திருந்தார்கள். சரியான நேரத்தில் கடவுள் அதைத் தருவார் என்றும் காத்திருந்தார்கள்.—சங் 49:7-9; எபி 9:26.
மார்ச் 9-15
பைபிளில் இருக்கும் புதையல்கள் | ஆதியாகமம் 24
“ஈசாக்குக்கு ஒரு மனைவி”
wp16.3 பக். 14 பாரா 3
“சம்மதம்தான்”
ஈசாக்குக்கு கானான் தேசத்திலிருந்து பெண்ணெடுக்கக் கூடாது என்று எலியேசரிடம் ஆபிரகாம் சத்தியம் வாங்கினார். ஏனென்றால், கானானியர்கள் யெகோவாவை மதிக்கவும் இல்லை, அவரை வணங்கவும் இல்லை. அவர்கள் அக்கிரமங்கள் செய்துகொண்டிருந்ததால், யெகோவா அவர்களைச் சீக்கிரத்தில் தண்டிப்பார் என்று ஆபிரகாமுக்குத் தெரிந்திருந்தது. தன்னுடைய செல்ல மகன் அவர்களோடு நெருங்கிப் பழகக் கூடாது என்றும், அவர்களுடைய ஒழுக்கங்கெட்ட வழிகளில் போய்விடக் கூடாது என்றும் ஆபிரகாம் விரும்பினார். அதுமட்டுமல்ல, கடவுளுடைய வாக்குறுதிகள் நிறைவேறுவதில் தன்னுடைய மகனுக்கும் ஒரு முக்கியமான பங்கு இருக்கிறது என்றும் அவருக்குத் தெரிந்திருந்தது.—ஆதி 15:16; 17:19; 24:2-4.
wp16.3 பக் 14 பாரா 4
“சம்மதம்தான்”
ஆரானுக்குப் பக்கத்தில் இருந்த கிணற்றருகே வந்தபோது, தான் யெகோவாவிடம் ஜெபம் செய்ததாக ரெபெக்காளின் வீட்டிலிருந்தவர்களிடம் எலியேசர் சொல்லிக்கொண்டிருக்கிறார். ஈசாக்குக்கு ஒரு பெண்ணைத் தேர்ந்தெடுத்துக் கொடுக்கும்படி அந்த ஜெபத்தில் அவர் கேட்டிருக்கிறார். யாரை ஈசாக்கு கல்யாணம் செய்துகொள்ள வேண்டும் என்று யெகோவா விரும்புகிறாரோ, அந்தப் பெண் கிணற்றுக்குப் பக்கத்தில் வர வேண்டும் என்று ஜெபம் செய்திருக்கிறார். குடிப்பதற்குத் தண்ணீர் வேண்டும் என்று கேட்கும்போது, தனக்கு மட்டுமல்ல ஒட்டகங்களுக்கும் தண்ணீர் கொடுக்க அந்தப் பெண் முன்வர வேண்டும் என்றும் ஜெபம் செய்திருக்கிறார். (ஆதி 24:12-14) அவர் கேட்டதைப் போலவே செய்தது யார்? ரெபெக்காள்தான்! ரெபெக்காளின் குடும்பத்தாரிடம் எலியேசர் சொன்னதெல்லாம் அவளுடைய காதில் விழுந்திருந்தால் அவள் எவ்வளவு சந்தோஷப்பட்டிருப்பாள்!
wp16.3 பக். 14 பாரா. 6-7
“சம்மதம்தான்”
“என்னோடு வர அந்தப் பெண்ணுக்கு விருப்பம் இல்லையென்றால் என்ன செய்வது?” என்று எலியேசர் சில வாரங்களுக்கு முன்பு ஆபிரகாமிடம் கேட்டிருக்கிறார். அதற்கு, “எனக்குக் கொடுத்த உறுதிமொழியிலிருந்து நீ விடுபடுவாய்” என்று ஆபிரகாம் சொல்லியிருக்கிறார். (ஆதி 24:39, 41) பெத்துவேலின் வீட்டிலும் ரெபெக்காளின் விருப்பத்துக்கு மதிப்புக் கொடுத்தார்கள். வந்த காரியம் வெற்றிகரமாக முடிந்த பூரிப்பில், ரெபெக்காளை உடனடியாக கானான் தேசத்துக்குக் கூட்டிக்கொண்டு போகட்டுமா என்று அடுத்த நாள் காலையில் எலியேசர் கேட்கிறார். ஆனால், குறைந்தது பத்து நாளாவது அவள் தங்களோடு இருக்க வேண்டும் என்று குடும்பத்தில் இருந்தவர்கள் ஆசைப்பட்டார்கள். கடைசியாக, “பெண்ணையே கூப்பிட்டு அவளுடைய விருப்பத்தைக் கேட்கலாமே” என்று முடிவெடுத்தார்கள்.—ஆதி 24:57.
ரெபெக்காளின் வாழ்க்கையில் ஒரு பெரிய திருப்புமுனை ஏற்படுகிறது! ரெபெக்காள் இப்போது என்ன முடிவு எடுப்பாள்? தன்னுடைய அப்பாவும் அண்ணனும் ஆசைப்பட்டபடி அவர்களோடு தங்குவாளா? அல்லது, தெரியாத ஒரு இடத்துக்கு புறப்பட்டுப் போவாளா? இல்லையென்றால், யெகோவா வழிநடத்திக்கொண்டிருக்கும் இந்த விஷயத்தில் தனக்கும் ஒரு பங்கு இருப்பதை பாக்கியமாக நினைப்பாளா? அவளுடைய வாழ்க்கையில் இது ஒரு திடீர் மாற்றம்! இதை நினைத்து அவள் பயந்திருக்கலாம்! ஆனால், அவள் என்ன நினைத்தாள் என்பதை அவளுடைய பதில் காட்டியது. “சம்மதம்தான்” என்று அவள் சொன்னாள்.—ஆதி 24:58.
புதையல்களைத் தோண்டி எடுங்கள்
wp16.3 பக். 12-13
“சம்மதம்தான்”
ஒரு நாள் சாயங்காலம், ஜாடியில் தண்ணீர் எடுத்துக்கொண்டு ரெபெக்காள் வருகிறாள். அப்போது, வயதான ஒருவர் அவளிடம் ஓடிவந்து, “தயவுசெய்து உன் ஜாடியிலிருந்து கொஞ்சம் தண்ணீர் கொடு” என்று கேட்கிறார். என்னே ஒரு பணிவான வேண்டுகோள்! அவர் ரொம்பத் தூரம் பயணம் செய்து வந்திருக்கிறார் என்பதை அவள் புரிந்துகொள்கிறாள். உடனடியாக தன்னுடைய தோளில் இருந்த ஜாடியை இறக்கி, அவருக்குத் தண்ணீர் கொடுக்கிறாள். வெறுமனே ‘ஒரு வாய்’ தண்ணீர் மட்டுமல்ல, சில்லென்றிருந்த தண்ணீரைத் தாராளமாக கொடுக்கிறாள். அவருக்குப் பின்னால் பத்து ஒட்டகங்கள் ஓய்வெடுத்துக்கொண்டிருக்கின்றன. அந்த ஒட்டகங்களுக்குத் தேவையான தண்ணீர் தொட்டியில் இல்லாததையும் பார்க்கிறாள். அந்த அன்பான மனிதர் தன்னைப் பார்ப்பதைக் கவனிக்கிறாள். அவருக்குத் தாராளமாக உதவ வேண்டும் என்று ஆசைப்படுகிறாள். அதனால், “உங்களுடைய ஒட்டகங்களுக்கும் போதுமான அளவு தண்ணீர் எடுத்துக் கொடுக்கிறேன்” என்று சொல்கிறாள்.—ஆதி 24:17-19.
ஒட்டகங்களுக்குக் கொஞ்சம் தண்ணீர் மட்டும் கொடுத்தால் போதும் என்று ரெபெக்காள் நினைக்கவில்லை. அவை திருப்தியாகும்வரை தண்ணீர் கொடுப்பதாக அவள் சொல்வதை கவனியுங்கள். பயங்கர தாகத்தில் இருக்கும் ஒரு ஒட்டகம் 95 லிட்டர் வரை தண்ணீர் குடிக்கும்! 10 ஒட்டகங்களும் அவ்வளவு தாகமாக இருந்திருந்தால், ரெபெக்காள் மணிக்கணக்காக வேலை செய்ய வேண்டியிருந்திருக்கும்! ஆனால், ஒட்டகங்கள் அந்தளவுக்குத் தாகமாக இல்லை என்பது தெரிகிறது. இந்த விஷயம் ரெபெக்காளுக்கு முன்பே தெரியுமா? இல்லை! முன்பின் தெரியாத அந்த வயதானவருக்கு உதவ அவள் ஆசையாக இருந்தாள்; அவருக்காகக் கடினமாக உழைக்கவும் தயாராக இருந்தாள். அவளுடைய உதவியை அவர் ஏற்றுக்கொண்டார். அவள் ஓடியோடி ஜாடியில் தண்ணீர் நிரப்புவதையும், அதைத் தொட்டியில் திரும்பத் திரும்ப ஊற்றுவதையும், அந்தப் பெரியவர் கவனமாகப் பார்த்துக்கொண்டிருந்தார்.—ஆதி 24:20, 21.
wp16.3 பக். 13, அடிக்குறிப்பு.
“சம்மதம்தான்”
அந்தப் பெரியவரை ரெபெக்காள் சந்தித்தபோது ஏற்கெனவே சாயங்காலம் ஆகியிருந்தது. கிணற்றுக்குப் பக்கத்திலேயே அவள் மணிக்கணக்காக இருந்துவிட்டதாக பதிவுகள் காட்டுவதில்லை. எப்படி? அவள் வேலையை முடித்துவிட்டு வந்தபோது அவளுடைய குடும்பத்தில் இருந்தவர்கள் ஏற்கெனவே தூங்கிவிட்டதாக பைபிள் சொல்வதில்லை. அதுமட்டுமல்ல, அவள் ஏன் இன்னும் வீட்டுக்கு வரவில்லை என்று அவளைத் தேடி யாரும் போனதாகவும் பைபிள் சொல்வதில்லை.
wp16.3 பக். 15 பாரா 3
“சம்மதம்தான்”
இந்தக் கட்டுரையின் ஆரம்பத்தில் சொல்லப்பட்டிருக்கும் அந்த நாள் கடைசியாக வந்தது. நெகேபை தாண்டி அவர்கள் போய்க்கொண்டிருந்தபோது, சாயங்காலமாகிவிட்டது. காட்டுவெளியில் ஒருவர் நடந்துகொண்டிருக்கும் காட்சி ரெபெக்காளின் கண்ணில் படுகிறது. அவர் ஏதோ ஆழ்ந்த யோசனையில் இருப்பதுபோல் அவளுக்குத் தெரிகிறது. அவள் “உடனே, ஒட்டகத்தைவிட்டு இறங்கினாள்.” ஒட்டகம் மண்டிபோட்டு குனியும்வரை காத்திருக்காமல் சட்டென அவள் இறங்கியிருக்கலாம். “நம்மைச் சந்திப்பதற்காக ஒருவர் வருகிறாரே, அவர் யார்?” என்று தன்னுடைய ஊழியரிடம் கேட்டாள். அவர் ஈசாக்குதான் என்று தெரிந்தவுடன் முக்காடு போட்டுக்கொண்டாள். (ஆதி 24:62-65) வருங்கால கணவருக்கு மரியாதை கொடுப்பதற்காக அப்படிச் செய்திருக்கலாம். இப்படி மரியாதை காட்டுவதெல்லாம் இன்றைக்கு ஒத்துவராது என்று சிலர் நினைக்கலாம். ஆனால், ஆண்களும் சரி பெண்களும் சரி, மனத்தாழ்மை காட்டுவதைப் பற்றி ரெபெக்காளிடமிருந்து கற்றுக்கொள்ளலாம். இந்த அருமையான குணத்தை வளர்த்துக்கொள்ள வேண்டுமென்றுதான் நாம் எல்லாரும் ஆசைப்படுவோம், இல்லையா?
மார்ச் 16-22
பைபிளில் இருக்கும் புதையல்கள் | ஆதியாகமம் 25-26
“மூத்தமகன் உரிமையை ஏசா விற்கிறான்”
it-1-E பக். 1242
யாக்கோபு
ஈசாக்கின் செல்ல மகன் ஏசா, முரடனாகவும் அங்கும் இங்கும் அலைந்து திரிந்து வேட்டையாடுபவனாகவும் இருந்தான். ஆனால், தன் அம்மாவின் பிரியத்தை சம்பாதித்திருந்த யாக்கோபு, ‘குற்றமற்றவனாகவும் [எபிரெயுவில், டேம்] கூடாரத்தில் தங்குபவனாகவும் இருந்தான்.’ அவன் மேய்ப்பனாகவும் இருந்தான். அவனை நம்பி வீட்டு வேலைகளை ஒப்படைக்க முடிந்தது. (ஆதி 25:27, 28, அடிக்குறிப்பு) கடவுளுடைய அங்கீகாரத்தைச் சம்பாதித்திருந்த வேறு சிலரைப் பற்றிச் சொல்லும்போதும் டேம் என்ற இந்த எபிரெய வார்த்தை பயன்படுத்தப்பட்டிருக்கிறது. உதாரணத்துக்கு, “இரத்தவெறி பிடித்தவர்கள் குற்றமற்றவர்களை வெறுக்கிறார்கள்.” ஆனால், “[குற்றமற்றவனுடைய] எதிர்காலம் நிம்மதியாக இருக்கும்” என்று யெகோவா வாக்குக் கொடுக்கிறார். (நீதி 29:10, அடிக்குறிப்பு; சங் 37:37) யோபுவைப் பற்றிச் சொல்லும்போது, அவர் “நேர்மையானவராகவும் குற்றமற்றவராகவும் [எபிரெயுவில், டேம்] இருந்தார்” என்று பைபிள் சொல்கிறது.—யோபு 1:1, 8; 2:3.
ஏன் நன்றி காட்ட வேண்டும்?
11 நன்றி காட்டாமல் போன சிலரைப் பற்றி நாம் பைபிளில் வாசிக்கிறோம்; அவர்கள் அப்படி நடந்துகொண்டது வருத்தமான விஷயம்! ஏசாவைப் பற்றி யோசித்துப்பாருங்கள். யெகோவாவை நேசித்த, அவரை உயர்வாக மதித்த ஒரு பெற்றோரால் வளர்க்கப்பட்டிருந்தாலும் பரிசுத்த காரியங்களை அவன் அலட்சியம் செய்தான். (எபிரெயர் 12:16-ஐ வாசியுங்கள்.) தனக்கு நன்றி இல்லை என்பதை அவன் எப்படிக் காட்டினான்? கொஞ்சம்கூட யோசிக்காமல், சிறிதளவு கூழுக்காகத் தன்னுடைய மூத்த மகன் உரிமையைத் தன்னுடைய தம்பி யாக்கோபிடம் விற்றுவிட்டான். (ஆதி. 25:30-34) பிற்பாடு, தான் எடுத்த தீர்மானத்தை நினைத்து அவன் ரொம்பவே வருத்தப்பட்டான். ஆனால், மூத்த மகன் உரிமைக்கான ஆசீர்வாதத்தை அவன் உயர்வாக மதிக்காததால், அந்த உரிமை தனக்குக் கிடைக்காததைப் பற்றிக் குறை சொல்ல அவனுக்கு எந்தக் காரணமும் இருக்கவில்லை.
it-1-E பக். 835
மூத்த மகன், மிருகங்களுக்கு பிறந்த முதல் ஆண் குட்டி
ஆரம்பக் காலத்திலிருந்தே மூத்த மகனுக்குக் குடும்பத்தில் மதிப்பான ஒரு ஸ்தானம் இருந்தது. தன்னுடைய அப்பாவுக்குப் பிறகு மூத்த மகன்தான் குடும்பத் தலைவராக ஆனார். அப்பாவின் சொத்தில் அவருக்கு இரண்டு பங்கு கிடைத்தது. (உபா 21:17) யோசேப்பு ஏற்பாடு செய்த விருந்தில், மூத்த மகன் உரிமைப்படி ரூபனை உட்கார வைத்தார். (ஆதி 43:33) ஆனால், ஒருவருக்குப் பிறந்த பிள்ளைகளைப் பற்றிய பட்டியலில், எல்லா சமயத்திலும் மூத்த மகனுக்கு பைபிள் முதலிடம் கொடுப்பதில்லை. அதற்குப் பதிலாக, பேர் பெற்ற அல்லது யெகோவாவுக்கு உண்மையாக இருந்த மகனுக்கே பெரும்பாலும் முதல் இடம் கொடுக்கிறது.—ஆதி 6:10; 1நா 1:28; ஆதி 11:26, 32; 12:4-ஐ ஒப்பிடுங்கள். மூத்த மகன் உரிமை; சொத்து ஆகிய தலைப்புகளையும் பாருங்கள்.
புதையல்களைத் தோண்டி எடுங்கள்
வாசகர் கேட்கும் கேள்விகள்
இப்போது திரும்பவும் எபிரெயர் 12:16-ஐப் பார்க்கலாம். “உங்களில் யாரும் பாலியல் முறைகேட்டில் ஈடுபடுகிறவராகவோ, ஏசாவைப் போல் பரிசுத்த காரியங்களை மதிக்காதவராகவோ இல்லாதபடி எச்சரிக்கையாக இருங்கள்; அவன் ஒரேவொரு வேளை உணவுக்காகத் தன்னுடைய மூத்தமகன் உரிமையைக் கொடுத்துவிட்டான்” என்று அந்த வசனம் சொல்கிறது. அதில் அப்போஸ்தலன் பவுல் சொன்ன குறிப்பு என்ன?
மேசியாவின் வம்சாவளியைப் பற்றி பவுல் பேசவில்லை. “நீங்கள் போகிற பாதைகளை எப்போதும் நேராக்குங்கள்” என்று கொஞ்சம் முன்புதான் கிறிஸ்தவர்களை அவர் உற்சாகப்படுத்தினார். ஏனென்றால், அந்தக் கிறிஸ்தவர்கள் தங்களுடைய பாதைகளை நேராக்கும்போது பாலியல் முறைகேட்டில் ஈடுபட்டு ‘கடவுளுடைய அளவற்ற கருணையை இழந்துவிட’ மாட்டார்கள். (எபி. 12:12-16) ஒருவேளை அவர்கள் அப்படி பாலியல் முறைகேட்டில் ஈடுபட்டால், ஏசாவைப்போல்தான் இருப்பார்கள். ஏனென்றால், அவன் ‘பரிசுத்த காரியங்களை மதிக்காமல்,’ கடவுளுக்குப் பிடிக்காத காரியங்களைச் செய்தான்.
முற்பிதாக்களின் காலத்தில் வாழ்ந்த ஏசாவுக்கு, பலிகள் செலுத்தும் பாக்கியம்கூட சிலசமயங்களில் கிடைத்திருக்கும். (ஆதி. 8:20, 21; 12:7, 8; யோபு 1:4, 5) ஆனால், அவன் ஆன்மீகக் காரியங்களை மதிக்காததால் ஒரேவொரு வேளை உணவுக்காக அப்படிப்பட்ட அருமையான பாக்கியங்களை இழந்தான். ஆபிரகாமின் சந்ததிக்கு வரவிருந்த கொடுமைகளிலிருந்து தப்பிக்க வேண்டும் என்றுகூட அவன் நினைத்திருக்கலாம். (ஆதி. 15:13) அதோடு, பொய் கடவுள்களை வணங்கிய இரண்டு பெண்களைக் கல்யாணம் செய்ததன் மூலம், தான் ‘பரிசுத்த காரியங்களை மதிக்கவில்லை’ என்பதையும், கடவுளுக்குப் பிடிக்காத காரியங்களைச் செய்வதிலேயே தனக்கு ஆர்வம் இருந்ததையும் காட்டினான். இதன் மூலம் தன் அப்பா அம்மாவுக்கு மிகுந்த வேதனையைக் கொடுத்தான். (ஆதி. 26:34, 35) உண்மைக் கடவுளை வணங்குகிற பெண்ணைத்தான் கல்யாணம் செய்ய வேண்டுமென்று உறுதியாக இருந்த யாக்கோபுக்கும் ஏசாவுக்கும் எவ்வளவு வித்தியாசம்!—ஆதி. 28:6, 7; 29:10-12, 18.
it-2-E பக். 245 பாரா 6
பொய்
கெட்ட எண்ணத்தோடு சொல்லப்படும் பொய்களை பைபிள் கண்டனம் செய்கிறது என்பதில் சந்தேகமே இல்லை. அதற்காக, தகவல்களைத் தெரிந்துகொள்வதற்கு உரிமை இல்லாதவர்களிடம் எல்லா உண்மைகளையும் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. அதனால்தான், “பரிசுத்தமானதை நாய்களுக்குக் கொடுக்காதீர்கள்; உங்களிடமுள்ள முத்துக்களைப் பன்றிகளுக்கு முன்னால் போடாதீர்கள்; அவை தங்கள் கால்களால் அவற்றை மிதித்துப்போட்டு, திரும்பிவந்து உங்களைக் குதறிவிடும்” என்று இயேசு அறிவுரை கொடுத்தார். (மத் 7:6) அவர்கூட சில சமயங்களில் எல்லா தகவல்களையும் சொல்லவில்லை; சில கேள்விகளுக்கு நேரடியான பதில்களையும் சொல்லவில்லை. ஏனென்றால், அது தேவையில்லாத பிரச்சினைகளைக் கொண்டுவரும் என்பது அவருக்குத் தெரியும். (மத் 15:1-6; 21:23-27; யோவா 7:3-10) யெகோவாவை வணங்காதவர்களிடம் ஆபிரகாம், ஈசாக்கு, ராகாப், மற்றும் எலிசா ஆகியவர்கள் தகவல்களை வேறு மாதிரி சொல்லியிருக்கிறார்கள். சில சமயங்களில் அவர்கள் முழு விவரங்களையும் சொல்லவில்லை.—ஆதி 12:10-19; அதிகாரம் 20; 26:1-10; யோசு 2:1-6; யாக் 2:25; 2ரா 6:11-23.
மார்ச் 23-29
பைபிளில் இருக்கும் புதையல்கள் | ஆதியாகமம் 27-28
“தனக்குக் கிடைக்க வேண்டிய ஆசீர்வாதத்தை யாக்கோபு பெற்றுக்கொள்கிறார்”
ரெபெக்காள் தேவபக்தியுள்ள சுறுசுறுப்பான ஒரு பெண்
யாக்கோபுவை ஏசா சேவிப்பான் என்பதை ஈசாக்கு அறிந்திருக்கிறாரா இல்லையா என பைபிள் சொல்வதில்லை. எப்படியிருந்தாலும், ஆசீர்வாதம் யாக்கோபுக்கு உரியது என்பதை யாக்கோபும் ரெபெக்காளும் அறிந்திருக்கிறார்கள். வேட்டையாடிய மிருகத்தை சமைத்து ஏசா தனது தகப்பனுக்கு கொண்டு வரும்போது அவனை ஈசாக்கு ஆசீர்வதிக்க எண்ணியிருப்பதை கேள்விப்பட்டு ரெபெக்காள் உடனடியாக செயல்படுகிறாள். இளமையில் இருந்த உறுதியும் ஆர்வமும் அவளைவிட்டு இன்னும் பிரியவில்லை. இரண்டு வெள்ளாட்டுக் குட்டிகளைக் கொண்டு வரும்படி யாக்கோபுவிடம் ‘கட்டளையிடுகிறாள்.’ உடனே தனது கணவனுக்குப் பிடித்த உணவை சமைக்கிறாள். இப்பொழுது, யாக்கோபு ஆசீர்வாதத்தைப் பெற ஏசாவைப் போல பாவனை செய்ய வேண்டும். யாக்கோபு மறுப்பு தெரிவிக்கிறான். தன்னுடைய தகப்பன் இந்தக் கபட நாடகத்தை அறிந்து தன்னை சபித்துவிடக்கூடும் என பயப்படுகிறான்! ஆனால் ரெபெக்காள் அவனை வற்புறுத்துகிறாள். “என் மகனே, உன்மேல் வரும் சாபம் என்மேல் வரட்டும்” என கூறுகிறாள். பிறகு உணவு சமைத்து, யாக்கோபுக்கு மாறுவேடம் தரித்து, தன்னுடைய கணவனிடம் அனுப்புகிறாள்.—ஆதியாகமம் 27:1-17;NW.
ரெபெக்காள் ஏன் இப்படி செயல்படுகிறாள் என்பதற்குரிய காரணம் கொடுக்கப்படவில்லை. அவளுடைய செயலுக்கு அநேகர் கண்டனம் தெரிவிக்கின்றனர், ஆனால் பைபிள் அப்படி செய்வதில்லை, ஆசீர்வாதத்தை யாக்கோபு பெற்றுவிட்டான் என்பது ஈசாக்குக்குத் தெரியவந்தபோது அவரும் அதற்கு கண்டனம் தெரிவிக்கவில்லை. மாறாக, யாக்கோபுக்கு இன்னுமதிக ஆசீர்வாதத்தை அவர் தருகிறார். (ஆதியாகமம் 27:29; 28:3, 4) தனது குமாரர்களைப் பற்றி யெகோவா முன்னறிவித்ததை ரெபெக்காள் அறிந்திருக்கிறாள். ஆகவேதான், சரியாகவே யாக்கோபுக்கு செல்ல வேண்டிய ஆசீர்வாதத்தை அவன் பெறுவதற்கு நடவடிக்கைகள் எடுக்கிறாள். இது யெகோவாவின் சித்தத்திற்கு இசைவாக இருக்கிறது என்பதில் சந்தேகமில்லை.—ரோமர் 9:6-13.
வாசகரிடமிருந்து வரும் கேள்விகள்
ரெபெக்காளும் யாக்கோபும் ஏன் அந்த விதமாய் நடந்துகொண்டார்கள் என்பதைப் பற்றிய விவரங்கள் அனைத்தையும் பைபிள் தருவதில்லை; எனினும், திடீரென இத்தகைய சூழ்நிலை எழுந்ததாக அது குறிப்பிடுகிறது. ரெபெக்காளும் யாக்கோபும் செய்ததை கடவுளுடைய வார்த்தை அங்கீகரிக்கவும் இல்லை, கண்டிக்கவும் இல்லை; ஆக, பொய் சொல்வதற்கோ ஏமாற்றுவதற்கோ இச்சம்பவத்தை முன்னுதாரணமாக எடுத்துக்கொள்ள முடியாது என்பதை நாம் மனதில் வைக்க வேண்டும். இருப்பினும், பைபிள் அந்தச் சூழ்நிலையைக் குறித்து தகவல் தருகிறது.
முதலாவதாக, தன் தகப்பனின் ஆசீர்வாதத்தைப் பெற யாக்கோபுக்கு உரிமை இருந்தது, அந்த உரிமை ஏசாவுக்கு இருக்கவில்லையென அந்தப் பதிவு தெளிவாய் காட்டுகிறது. முன்னர், இந்த இரட்டையரில் ஒருவரான ஏசா, ஒரு வேளை உணவுக்காக தன் சேஷ்ட புத்திரபாகத்தை, அதாவது தலைமகன் உரிமையை மதிக்காமல் விற்றுப்போட்டிருந்தார்; அப்போது அதை யாக்கோபு முறைப்படி வாங்கியிருந்தார். ஏசா ‘தன் சேஷ்ட புத்திரபாகத்தை அலட்சியம் பண்ணினார்.’ (ஆதியாகமம் 25:29-34) எனவே, நியாயமாய் தனக்குச் சேர வேண்டிய ஆசீர்வாதத்தைப் பெற்றுக்கொள்ளவே யாக்கோபு தன் தகப்பனை அணுகினார்.
it-1-E பக். 341 பாரா 6
ஆசீர்வாதம்
மூதாதையர்களின் காலத்தில், அப்பாக்கள் தங்களுடைய இறப்புக்குக் கொஞ்சம் முன்பு, தங்கள் மகன்களை ஆசீர்வதிப்பது வழக்கமாக இருந்தது. இது மிக முக்கியமாகவும் உயர்வாகவும் கருதப்பட்டது. இப்படித்தான், தன்னுடைய மூத்த மகன் ஏசா வந்திருப்பதாக நினைத்துக்கொண்டு ஈசாக்கு யாக்கோபை ஆசீர்வதித்தார். ஈசாக்கின் கண் பார்வை சுத்தமாக மங்கியிருந்ததாலும் வயதாகியிருந்ததாலும், ஏசாவை ஆசீர்வதிப்பதற்கு முன்பாகவே யாக்கோபை ஆசீர்வதித்தார். அதாவது, பேர்புகழும் வளமான வாழ்க்கையும் யாக்கோபுக்கு கிடைக்கும் என்று அறிவித்தார். இந்த ஆசீர்வாதங்களை நிறைவேற்றும்படி யெகோவாவிடம் வேண்டிக்கொண்டார் என்பதில் சந்தேகமில்லை. (ஆதி 27:1-4, 23-29; 28:1, 6; எபி 11:20; 12:16, 17) பிற்பாடு, யாக்கோபு என்று தெரிந்தே ஈசாக்கு அவரை அதிகமாக ஆசீர்வதித்தார். (ஆதி 28:1-4) இறப்பதற்கு முன்பு யாக்கோபு என்ன செய்தார்? யோசேப்பின் இரண்டு மகன்களை முதலில் ஆசீர்வதித்துவிட்டு, தன்னுடைய மகன்களை ஆசீர்வதித்தார். (ஆதி 48:9, 20; 49:1-28; எபி 11:21) அதேபோல் மோசேயும், தான் இறப்பதற்கு முன்பு முழு இஸ்ரவேல் தேசத்தையும் ஆசீர்வதித்தார். (உபா 33:1) இவர்கள் சொன்ன ஆசீர்வாதங்கள் நிறைவேறியதைப் பார்க்கும்போது, இவர்கள் சொன்னதெல்லாம் தீர்க்கதரிசனம்தான் என்று தெரிகிறது. சிலசமயங்களில், மற்றவர்களை ஆசீர்வதித்தவர்கள், யாரை ஆசீர்வதிக்கிறார்களோ அவர்களுடைய தலையின்மேல் கையை வைத்து ஆசீர்வதித்திருக்கிறார்கள்.—ஆதி 48:13, 14.
புதையல்களைத் தோண்டி எடுங்கள்
உங்கள் துணையுடன் பேச்சுத்தொடர்பு கொள்ள வழிகள்
ஈசாக்கும் ரெபெக்காளும் நன்கு பேச்சுத்தொடர்பு கொள்ளும் திறமைகளை வளர்த்திருந்தார்களா? அவர்களுடைய மகன் ஏசா, ஏத்தின் மகள்கள் இருவரை விவாகம் செய்தபின், குடும்பத்தில் பெரும் பிரச்சினை எழுந்தது. ஈசாக்கிடம் ரெபெக்காள், “ஏத்தின் குமாரத்திகளினிமித்தம் என் உயிர் எனக்கு வெறுப்பாயிருக்கிறது; இந்தத் தேசத்துப் பெண்களாகிய ஏத்தின் குமாரத்திகளில் யாக்கோபு [அவர்களுடைய இளைய மகன்] ஒரு பெண்ணைக் கொள்வானானால் என் உயிர் இருந்து ஆவதென்ன”? என்று “சொல்லிக்கொண்டே இருந்தாள்.” (ஆதியாகமம் 26:34; 27:46; NW) அவள் தன் கவலையைப் பற்றி தெள்ளத் தெளிவாக பேசினாள் என்பது தெரிகிறது.
கானானிய பெண்களில் ஒருத்தியை மனைவியாக தேர்ந்தெடுக்க வேண்டாம் என்று தன்னுடைய இரட்டைக் குமாரர்களில் ஒருவரான யாக்கோபிடம் ஈசாக்கு கூறினார். (ஆதியாகமம் 28:1, 2) ரெபெக்காள் தனது கருத்தை தெளிவாகச் சொல்லியிருந்தாள். மிகவும் உணர்ச்சிப்பூர்வமான ஒரு குடும்ப விவகாரத்தை இந்தத் தம்பதியர் நன்கு கலந்து பேசியிருந்தார்கள். இதனால், இன்றைக்கு நமக்கும் சிறந்த உதாரணமாய் திகழ்கிறார்கள். ஆனால், துணைவர் ஒத்துப்போகவில்லையென்றால் என்ன செய்யலாம்?
ஆதியாகம புத்தகத்திலிருந்து சிறப்பு குறிப்புகள்—II
28:12, 13—‘ஒரு ஏணியைக்’ குறித்து யாக்கோபு கண்ட சொப்பனத்தின் அர்த்தம் என்ன? இந்த “ஏணி” பார்ப்பதற்கு கற்களாலான படிக்கட்டு போல் இருந்திருக்கலாம்; வானத்திற்கும் பூமிக்கும் இடையே பேச்சுத்தொடர்பு இருந்ததை அது சுட்டிக்காட்டியது. கடவுளுடைய தூதர்கள் அதில் ஏறி இறங்கியது, யெகோவாவுக்கும் அவருடைய அங்கீகாரத்தைப் பெற்ற மனிதருக்கும் இடையே அவர்கள் ஏதோவொரு முக்கியமான வழியில் பணிவிடை செய்ததை காட்டியது.—யோவான் 1:51.
மார்ச் 30–ஏப்ரல் 5
பைபிளில் இருக்கும் புதையல்கள் | ஆதியாகமம் 29-30
“யாக்கோபு கல்யாணம் செய்கிறார்”
யாக்கோபு ஆன்மீக விஷயங்களை உயர்வாக மதித்தார்
பெண் வீட்டாருக்கு மணமகள் விலை கொடுத்து நிச்சயமும் முடிக்கப்பட்டது. மோசேயின் நியாயப்பிரமாணம் பிற்பாடு வரையறுத்தபடி ஒரு கன்னி கற்பழிக்கப்பட்டால் 50 வெள்ளிக்காசு தண்டம் கட்ட வேண்டும். இது “அதிகபட்ச மணமகள் விலையாக” இருந்தது, ஆனால் பொதுவாக கொடுக்கப்பட்ட மணமகள் விலையோ “மிக மிகக் குறைவாக” இருந்தது என அறிஞரான கார்டன் வீனம் கூறுகிறார். (உபாகமம் 22:28, 29) மணமகள் விலை கொடுக்க யாக்கோபிடம் பணம் இல்லை. அதனால் லாபானிடத்தில் ஏழு வருஷம் வேலை செய்ய முன்வந்தார். “பண்டைய பாபிலோனியர் காலத்தில் சாதாரண வேலையாட்கள் ஒரு மாதத்திற்கு அரை வெள்ளிக்காசு முதல் ஒரு வெள்ளிக்காசு வரை சம்பளமாக பெற்றார்கள். (ஏழு ஆண்டுகளுக்கு 42 முதல் 84 வெள்ளிக்காசுகள்)” அப்படியென்றால், “ராகேலை மணமுடிக்க யாக்கோபு மணமகள் விலையாக ஒரு பெருந்தொகையை லாபானுக்கு கொடுக்க முன்வந்தார்” என வீனம் சொல்கிறார், லாபான் அதற்கு உடனடியாக சம்மதித்தார்.—ஆதியாகமம் 29:19.
சோகத்தில் வாடிய சகோதரிகள் ‘இஸ்ரவேல் வீட்டைக் கட்டியவர்கள்’
யாக்கோபை ஏமாற்றவேண்டுமென்று லேயாளும் திட்டம் போட்டாளா? அல்லது வெறுமனே அப்பா பேச்சு கேட்டு நடந்தாளா? அப்போது ராகேல் எங்கே இருந்தாள்? அங்கு என்ன நடந்துகொண்டிருந்தது என்பது அவளுக்குத் தெரியுமா? அப்படியானால், அவளுக்கு எப்படி இருந்திருக்கும்? கெடுபிடியாக நடந்துகொள்ளும் தன் தந்தையை மீறி அவளால் செயல்பட முடிந்திருக்குமா? இந்தக் கேள்விகளுக்கெல்லாம் பைபிள் எவ்வித பதிலையும் தருவதில்லை. இந்த விஷயத்தைக் குறித்து ராகேலும் லேயாளும் எப்படி உணர்ந்திருந்தாலும் சரி, யாக்கோபு மிகவும் கோபமடைந்தார். லாபானின் மகள்களிடமல்ல, லாபானிடமே யாக்கோபு இவ்வாறு தர்க்கம் செய்தார்: “ராகேலுக்காக அல்லவா உம்மிடத்தில் வேலை செய்தேன்; பின்னை ஏன் எனக்கு வஞ்சகம் பண்ணினீர்.” லாபானின் பதில்? “மூத்தவள் இருக்க இளையவளைக் கொடுப்பது . . . வழக்கம் அல்ல. இவளுடைய ஏழு நாளை நிறைவேற்று; அவளையும் உனக்குத் தருவேன்; அவளுக்காகவும் நீ இன்னும் ஏழு வருஷம் என்னிடத்தில் வேலைசெய் என்றான்.” (ஆதியாகமம் 29:25-27) இவ்வாறு பலதாரமணம் முடிக்கும் சிக்கலில் யாக்கோபு வசமாக மாட்டிக்கொண்டார். இது கடும் பொறாமையை ஏற்படுத்தவிருந்தது.
it-2-E பக். 341 பாரா 3
கல்யாணம்
கொண்டாட்டம். இஸ்ரவேல் தேசத்தில் கல்யாணம் என்பது பெரிய ஒரு நிகழ்ச்சியாக நடத்தப்படவில்லை. ஆனால், அது சந்தோஷமான ஒரு கொண்டாட்டமாக இருந்தது. கல்யாண நாளன்று, மணப்பெண் தன்னுடைய வீட்டிலிருந்தபடியே நன்றாக அலங்காரம் செய்துகொள்வாள். முதலில், குளித்துவிட்டு வாசனை எண்ணெயைத் தடவிக்கொள்வாள். (ரூ 3:3-ஐ ஒப்பிடுங்கள்; எசே 23:40) பிறகு, மார்க்கச்சையையும் வெள்ளை உடையையும் போட்டுக்கொள்வாள். சில சமயங்களில் பணிப்பெண்களின் உதவியோடு இதைச் செய்வாள். அவளுடைய வசதிவாய்ப்புக்கு தகுந்தபடி கைவேலைப்பாடுகளால் அந்த உடை அலங்கரிக்கப்பட்டிருக்கும். (எரே 2:32; வெளி 19:7, 8; சங் 45:13, 14) அவளிடம் நகைகள் இருந்தால் அவற்றையும் போட்டுக்கொள்வாள். (ஏசா 49:18; 61:10; வெளி 21:2) ஒரு மெல்லிய துணியால் தன்னை மூடிக்கொள்வாள். அது முக்காடுபோல், தலைமுதல் கால்வரை நீளமாக இருந்தது. (ஏசா 3:19, 23) அதனால்தான், லாபானால் யாக்கோபை சுலபமாக ஏமாற்ற முடிந்தது. ராகேலுக்கு பதிலாக லேயாளை லாபான் அனுப்பியிருக்கிறார் என்பதை யாக்கோபாலும் கண்டுபிடிக்க முடியவில்லை. (ஆதி 29:23, 25) ரெபெக்காளும்கூட ஈசாக்கை சந்தித்தபோது முக்காடு போட்டுக்கொண்டாள். (ஆதி 24:65) மணமகனுக்கு, அதாவது மணமகனுடைய அதிகாரத்துக்கு, மணப்பெண் கட்டுப்பட்டிருப்பதை இது காட்டியது.—1கொ 11:5, 10.
புதையல்களைத் தோண்டி எடுங்கள்
it-1-E பக். 50
தத்தெடுப்பது
அடிமைப் பெண்கள் மூலம் யாக்கோபுக்குப் பிறந்த பிள்ளைகளைத் தங்களுடைய பிள்ளைகளாகத்தான் ராகேலும் லேயாளும் பார்த்தார்கள். (ஆதி 30:3-8, 12, 13, 24) யாக்கோபின் சட்டப்பூர்வ மனைவிகளின் பிள்ளைகளோடு சேர்ந்து இந்தப் பிள்ளைகளுக்கும் சொத்தில் பங்கு கிடைத்தது. இந்தப் பிள்ளைகளும் யாக்கோபின் பிள்ளைகள்தான்! அதோடு, அந்த அடிமைப் பெண்கள் ராகேல் மற்றும் லேயாளின் சொத்தாக இருந்தார்கள். அதனால், அந்த அடிமைப் பெண்கள் மூலம் பிறந்த பிள்ளைகள், ராகேலுக்கும் லேயாளுக்கும் சொந்தமானவர்களாக இருந்தார்கள். அவர்கள் மீது இவர்களுக்கு முழு உரிமை இருந்தது.
ஆதியாகம புத்தகத்திலிருந்து சிறப்பு குறிப்புகள்—II
30:14, 15—தூதாயீம் கனிகளுக்காக தன் கணவரோடு உடலுறவு கொள்ளும் வாய்ப்பை ராகேல் ஏன் விட்டுக்கொடுத்தாள்? பூர்வ காலங்களில், தூதாயீம் கனி மயக்க மருந்தாகவும் வலிப்பு நோயைத் தடுக்கவும் அல்லது அதிலிருந்து விடுபடவும் பயன்படுத்தப்பட்டது. பாலியல் ஆசையைத் தூண்டுவதற்கு, கருவளத்தை அதிகரிப்பதற்கு, அல்லது கருத்தரிப்பதில் உதவுவதற்கு அதற்கு சக்தி இருப்பதாகக்கூட நம்பப்பட்டது. (உன்னதப்பாட்டு 7:13) ராகேல் என்ன உள்நோக்கத்துடன் விட்டுக்கொடுத்தாள் என்பதைப் பற்றி பைபிள் சொல்வதில்லை. கருத்தரிப்பதற்கும் அதன் மூலம் மலடி என்ற நிந்தையை போக்குவதற்கும் இந்த தூதாயீம் கனிகள் உதவும் என அவள் ஒருவேளை நினைத்திருக்கலாம். என்றாலும், சில வருடங்களுக்குப் பிறகுதான் யெகோவா ‘அவளை கர்ப்பந்தரிக்கும்படி செய்தார்.’—ஆதியாகமம் 30:22-24.