வாழ்க்கையும் ஊழியமும் கூட்டத்துக்குத் தயாரிக்க தேவையான தகவல்கள்
மே 4-10
பைபிளில் இருக்கும் புதையல்கள் | ஆதியாகமம் 36-37
“யோசேப்பு வயிற்றெரிச்சலுக்கு ஆளாகிறார்”
யோசேப்பின் அண்ணன்மார் அவனை வெறுக்கிறார்கள்
இந்தப் பையனைப் பார். எவ்வளவு கவலையாக இருக்கிறான், நம்பிக்கையே இல்லாதவனாக தெரிகிறான். இவன்தான் யோசேப்பு. இவனுடைய அண்ணன்மார் எகிப்துக்குப் போகிற இந்த ஆட்களிடம் இவனை இப்போதுதான் விற்றிருக்கிறார்கள். யோசேப்பு இனி ஓர் அடிமையாக அங்கு இருப்பான். இவனுடைய அண்ணன்மார் இந்தக் கெட்ட காரியத்தை ஏன் செய்தார்கள்? யோசேப்பின் மீதிருந்த பொறாமையால்தான் அப்படிச் செய்தார்கள்.
அவர்களுடைய அப்பா யாக்கோபுக்கு யோசேப்பு என்றால் உயிர். அவனுக்கு அழகான, நீளமான ஒரு அங்கியைச் செய்து கொடுத்து, அவன் மீது தனி பாசத்தைக் காட்டி வந்தார். யோசேப்பிடம் மட்டும் அப்பாவுக்கு இந்தளவு பாசம் இருப்பதைக் கண்ட அந்த 10 அண்ணன்மாரும் அவன் மீது பொறாமைப்பட்டு அவனை வெறுக்க ஆரம்பித்தார்கள். ஆனால் அவர்கள் அவனை வெறுத்ததற்கு இன்னொரு காரணமும் இருந்தது.
யோசேப்பின் அண்ணன்மார் அவனை வெறுக்கிறார்கள்
யோசேப்பு இரண்டு கனவுகளைக் கண்டான். இந்த இரண்டு கனவுகளிலும் அவனுடைய சகோதரர்கள் அவனுக்கு முன்பாக தலைகுனிந்து வணங்குவது போல் கண்டான். இந்தக் கனவுகளை யோசேப்பு தன்னுடைய அண்ணன்மாரிடம் சொன்னபோது அவர்கள் இன்னுமதிகமாக அவனை வெறுக்கத் தொடங்கினார்கள்.
ஒருநாள் யோசேப்பின் அண்ணன்மார் தங்கள் அப்பாவுடைய ஆடுகளை மேய்த்துக் கொண்டிருக்கிறபோது, அவர்கள் நல்லபடியாக இருக்கிறார்களா என்று பார்த்து வரும்படி யோசேப்பிடம் யாக்கோபு சொல்கிறார். யோசேப்பு வருவதைப் பார்த்த அவனுடைய அண்ணன்மாரில் சிலர்: ‘நாம் அவனை இங்கே கொன்று போட்டு விடலாம்!’ என்று சொல்கிறார்கள். ஆனால் மூத்தவனான ரூபன்: ‘வேண்டாம், நீங்கள் அப்படிச் செய்யக் கூடாது!’ என்று சொல்கிறான். எனவே, கொல்வதற்குப் பதிலாக அவனைப் பிடித்து ஒரு வறண்ட குழிக்குள் போட்டு விடுகிறார்கள். இனி அவனை என்ன செய்வதென்று யோசிக்கத் தொடங்குகிறார்கள்.
இந்தச் சமயத்தில் சில இஸ்மவேலர் வருகிறார்கள். யூதா தன்னுடைய மற்ற சகோதரர்களிடம்: ‘இந்த இஸ்மவேலருக்கு நாம் அவனை விற்றுப்போடலாம்’ என்று சொல்கிறான். சொன்னபடியே விற்றுவிடுகிறார்கள். 20 வெள்ளிக் காசுகளுக்கு அவனை விற்றுவிடுகிறார்கள். எவ்வளவு அற்பமான, அன்பற்ற செயல் அது!
இனி யோசேப்பைப் பற்றி அப்பாவிடம் என்ன சொல்லப் போகிறார்கள்? ஒரு வெள்ளாட்டைக் கொல்கிறார்கள், அந்த வெள்ளாட்டின் இரத்தத்தில் யோசேப்பின் அழகிய அங்கியை மறுபடியும் மறுபடியுமாக முக்கி எடுக்கிறார்கள். பின்பு அந்த அங்கியை தங்கள் அப்பாவிடம் காட்டி: ‘நாங்கள் இதைக் கண்டெடுத்தோம். இது யோசேப்பின் அங்கிதானா என்று கொஞ்சம் பாருங்கள்’ என்று சொல்கிறார்கள்.
அது யோசேப்பின் அங்கிதான் என்பதை யாக்கோபு அறிந்துகொள்கிறார். ‘ஐயோ, ஒரு காட்டு மிருகம் யோசேப்பைக் கொன்றுவிட்டதே’ என்று சொல்லி கதறி அழுகிறார். தங்களுடைய அப்பா இப்படி நினைத்துக்கொள்ள வேண்டும் என்பதுதான் அவர்களுடைய திட்டமாக இருந்தது, அவர்கள் திட்டப்படியே நடந்தது. யாக்கோபு ரொம்பவும் கவலையாக இருக்கிறார். பல நாட்களுக்கு அழுதுகொண்டே இருக்கிறார். ஆனால் உண்மையில் யோசேப்பு இறக்கவே இல்லை. அவன் கொண்டு போகப்பட்ட இடத்தில் என்ன நடக்கிறதென்று நாம் பார்க்கலாம்.
புதையல்களைத் தோண்டி எடுங்கள்
it-1-E பக். 678
ஏதோம்
(ஏதோம்) [சிவப்பு], ஏதோமியர்கள்.
யாக்கோபுடைய அண்ணனான ஏசாவுக்குக் கொடுக்கப்பட்ட இன்னொரு பெயர்தான் ஏதோம். (ஆதி 36:1) சிவப்பான கூழுக்காக தன்னுடைய மூத்த மகனின் உரிமையை விற்றதற்காக ஏசாவுக்கு இந்தப் பெயர் கொடுக்கப்பட்டது. (ஆதி 25:30-34) எதேச்சையாக, இந்தப் பெயருக்கு ஏற்றதுபோல் ஏசா பிறந்தபோது சிவப்பாக இருந்தார் (ஆதி 25:25), பிற்பாடு அவரும் அவருடைய சந்ததியும் வாழ்ந்த தேசத்தின் சில பகுதிகளும் இதே நிறத்தில் இருந்தது.
it-1-E பக். 561-562
கவனித்துக்கொள்ளும் பொறுப்பு
ஒரு மந்தையை தன்னுடைய கவனிப்பில் வைத்துக்கொள்வதாக அல்லது அதைப் பாதுகாப்பதாக ஒரு மேய்ப்பர் சொல்கிறார் என்றால், சட்டப்படி அந்த மிருகங்களைத் தன்னுடைய பொறுப்பில் எடுத்துக்கொள்வதைக் காட்டினார். இதன் மூலமாக அந்த மந்தையின் சொந்தக்காரரிடம், தான் அந்த மந்தைக்குத் தேவையான சாப்பாடு கொடுப்பதாகவும் அதை யாரும் திருடிவிடாமல் பார்த்துக்கொள்வதாகவும் உறுதியளிக்கிறார். ஒருவேளை ஏதாவது ஆகிவிட்டால், தான் அதற்கு நஷ்டஈடு கொடுப்பதாகவும் ஒத்துக்கொள்கிறார். அதற்காக, என்ன நடந்தாலும் அவர்தான் பொறுப்பாளி என்று சொல்லிவிட முடியாது. ஏனென்றால், மனித கட்டுப்பாட்டை மீறிய சில விஷயங்கள் நடக்கும்போது, உதாரணத்துக்கு கொடிய மிருகங்கள் ஏதாவது தாக்கும்போது அவர் நஷ்டஈடு கொடுத்தாக வேண்டிய அவசியம் இல்லை, என்று அந்தச் சட்டம் சொன்னது. ஆனால் அதற்கு தகுந்த ஆதாரங்களை, உதாரணத்துக்கு மிருகத்தின் சிதைந்துபோன உடலை அந்த மந்தையின் சொந்தக்காரரிடம் காட்ட வேண்டி இருந்தது. மந்தையின் சொந்தக்காரர் அந்த ஆதாரங்களை ஆராய்ந்து பார்த்து, தன் மந்தையைக் கவனித்துக்கொண்டவர் நிரபராதி என்ற தீர்ப்பைக் கொடுக்க வேண்டியிருந்தது.
இதே நியமம்தான் ஒருவருடைய பொறுப்பில் விடப்படுகிற எந்தவொரு விஷயத்துக்கும் பொருந்தும். அது குடும்ப உறவுகளாக இருந்தாலும்சரி. உதாரணத்துக்கு, ஒரு குடும்பத்தின் மூத்த மகன் தன்னுடைய தம்பிகளுக்கும் தங்கைகளுக்கும் சட்டப்படி பாதுகாவலராக இருந்தார். இதிலிருந்து, ரூபன் ஒரு மூத்த மகனாக யோசேப்பின் உயிரைப் பற்றி ஏன் கவலைப்பட்டார் என்று நம்மால் புரிந்துகொள்ள முடிகிறது. இந்தப் பதிவு ஆதியாகமம் 37:18-30-ல் இருக்கிறது. யோசேப்பின் மற்ற அண்ணன்கள் எல்லாம் அவரைக் கொல்வது பற்றிப் பேசிக்கொண்டு இருந்தபோது ரூபன் மட்டும், “‘நாம் அவனைச் சாகடிக்க வேண்டாம்’ என்றான்.” “எப்படியாவது அவர்களிடமிருந்து அவனைக் காப்பாற்றித் தன்னுடைய அப்பாவிடம் ஒப்படைக்க வேண்டும் என்று நினைத்து, ‘அவனைக் கொன்றுவிடாதீர்கள். . . . அவனுக்கு வேறு ஒன்றும் செய்துவிடாதீர்கள்’ என்றான்.” யோசேப்பு காணவில்லை என்பது ரூபனுக்கு தெரியவந்தபோது பயங்கரமாக கவலைப்பட்டு, “தன் உடையைக் கிழித்துக்கொண்டான்.” அதோடு, “தம்பியைக் காணோமே! ஐயோ! இப்போது நான் என்ன செய்வேன்?” என்று சொன்னார். யோசேப்பு காணாமல் போனதற்கு தான் பதில் சொல்ல வேண்டியிருக்கும் என்பது ரூபனுக்கு தெரியும். இதிலிருந்து தப்பிப்பதற்காக யோசேப்பின் அண்ணன்கள் எல்லாம் சேர்ந்து பொய்யான ஆதாரங்களைத் திரட்டினார்கள். ஒரு கொடிய மிருகம் யோசேப்பை கொன்றுவிட்டது என்று தங்களுடைய அப்பாவை நம்பவைப்பதற்காக ஒரு வெள்ளாட்டுக்கடாவின் ரத்தத்தில் யோசேப்பின் அங்கியை முக்கி எடுத்தார்கள். இந்தப் பொய்யான ஆதாரத்தை எடுத்துக்கொண்டுபோய் குடும்பத்துக்கு நீதிபதியாக இருந்த தங்களுடைய அப்பா யாக்கோபிடம் கொடுத்தார்கள். ரத்தக்கறை படிந்த யோசேப்பின் அங்கியைப் ஆராய்ந்து பார்த்த யாக்கோபு, யோசேப்பு கொல்லப்பட்டார் என்றும் ரூபன் அதற்கு பொறுப்பாளி இல்லை என்றும் முடிவு செய்தார்.—ஆதி 37:31-33.
மே 11-17
பைபிளில் இருக்கும் புதையல்கள் | ஆதியாகமம் 38-39
“யெகோவா யோசேப்பை ஒருபோதும் கைவிடவில்லை”
யோசேப்பு சிறையில் அடைக்கப்படுகிறான்
எகிப்துக்குக் கொண்டு போகும்போது யோசேப்புக்கு 17 வயதுதான். அங்கே போத்திபார் என்ற ஓர் ஆளிடம் அவன் விற்கப்படுகிறான். போத்திபார் என்பவன் பார்வோன் என்றழைக்கப்படுகிற எகிப்திய ராஜாவிடம் வேலை செய்பவன்.
யோசேப்பு தன் எஜமானரான போத்திபாருக்காக மாடாய் உழைக்கிறான். அவன் பெரியவனாக ஆனபோது, போத்திபார் தன் முழு வீட்டையும் கவனிக்கும் பொறுப்பை அவனிடம் ஒப்படைக்கிறான். அப்படியானால், யோசேப்பு இப்போது ஏன் சிறையில் இருக்கிறான்? போத்திபாரின் மனைவியே இதற்குக் காரணம்.
யோசேப்பு சிறையில் அடைக்கப்படுகிறான்
யோசேப்பு பெரியவனாக வளர்ந்து ரொம்ப அழகான வாலிபனாக ஆகிறான். அவன் தன்னோடு படுக்க வேண்டுமென்று போத்திபாரின் மனைவி விரும்புகிறாள். ஆனால் இது தவறு என்று யோசேப்பு அறிந்திருந்ததால், அப்படிச் செய்ய மறுக்கிறான். அதனால் போத்திபாரின் மனைவி கோபமடைகிறாள். தன் கணவன் வீட்டுக்கு வந்ததுமே அவனிடம்: ‘அந்தக் கெட்ட யோசேப்பு என்னோடு படுக்க முயற்சி செய்தான்’ என்று பொய் சொல்கிறாள். போத்திபார் தன் மனைவி சொல்வதை நம்பி யோசேப்பின் மீது கடுங்கோபங்கொண்டு அவனைச் சிறையில் அடைக்கிறான்.
கடவுளுக்குக் கீழ்ப்படிந்த ஒரு அடிமை
மீதியானிய வியாபாரிகள் யோசேப்பை எகிப்துக்குக் கொண்டுபோனார்கள். அங்கே போத்திபார் என்ற பெரிய அதிகாரியிடம் அடிமையாக விற்றுவிட்டார்கள். ஆனால் யெகோவா யோசேப்போடு இருந்தார். யோசேப்பு நன்றாக வேலை செய்வதை போத்திபார் பார்த்தார். அவரை நம்பி வேலைகளைக் கொடுக்கலாம் என்று நினைத்தார். அதனால், சீக்கிரத்திலேயே தனக்குச் சொந்தமான எல்லாவற்றையும் யோசேப்பின் பொறுப்பில் விட்டுவிட்டார்.
யோசேப்பை யெகோவா மறக்கவே இல்லை
யோசேப்பு சிறையில் இருந்தபோது எகிப்தின் ராஜா, அதாவது பார்வோன் கனவுகளைக் கண்டான். அந்தக் கனவுகளுக்கு யாராலும் அர்த்தம் சொல்ல முடியவில்லை. யோசேப்பால் அர்த்தம் சொல்ல முடியும் என்று பார்வோனிடம் அவனுடைய வேலைக்காரன் ஒருவன் சொன்னான். உடனே, யோசேப்பைக் கூட்டிக்கொண்டு வர பார்வோன் ஆள் அனுப்பினான்.
பார்வோன் அவரிடம், ‘என் கனவுகளுக்கு உன்னால் அர்த்தம் சொல்ல முடியுமா?’ என்று கேட்டான். யோசேப்பு பார்வோனிடம், ‘ஏழு வருஷங்களுக்கு எகிப்தில் நிறைய உணவு இருக்கும், அதற்குப் பிறகு ஏழு வருஷங்களுக்கு பஞ்சம் இருக்கும். அதனால், புத்திசாலியான ஒருவரைத் தேர்ந்தெடுத்து உணவை சேர்த்துவையுங்கள். அப்போதுதான் உங்கள் மக்கள் சாப்பாடு இல்லாமல் கஷ்டப்பட மாட்டார்கள்’ என்று சொன்னார். அதற்கு பார்வோன், ‘நான் உன்னையே தேர்ந்தெடுக்கிறேன். எகிப்தில் நீதான் எனக்கு அடுத்த பதவியில் இருப்பாய்’ என்றான். பார்வோனின் கனவுகளுக்கு யோசேப்பால் எப்படி அர்த்தம் சொல்ல முடிந்தது? யெகோவாதான் உதவி செய்தார்.
புதையல்களைத் தோண்டி எடுங்கள்
it-2-E பக். 555
ஓனேன்
(ஓனேன்) [“ஆண்மை; அபாரமான ஆற்றல்” ஆகிய அர்த்தங்களைத் தரும் மூல வார்த்தையிலிருந்து வந்திருக்கிறது].
யூதாவுக்கும் சூவா என்ற கானானியனுடைய மகளுக்கும் பிறந்த இரண்டாவது மகன்தான் இவன். (ஆதி 38:2-4; 1நா 2:3) இவனுடைய அண்ணன் ஏர், யெகோவாவுக்குப் பிடிக்காததைச் செய்துவந்ததால் அவனை யெகோவா கொன்றுபோட்டார். ஏருக்கு அதுவரை குழந்தை இல்லை. அதனால், கொழுந்தனுடைய கடமையை நிறைவேற்றும்படி, அதாவது, விதவையாகிவிட்ட தாமாரை (ஏரின் மனைவியை) கல்யாணம் செய்யும்படி, ஓனேனிடம் யூதா சொன்னார். ஒருவேளை ஓனேனுக்கு மகன் பிறந்துவிட்டால், அந்தப் பிள்ளை ஏரின் வாரிசாகவே கருதப்படும், ஓனேனின் வாரிசாக அல்ல. ஏரின் சொத்தும் அந்தப் பிள்ளைக்கே சொந்தமாகும். ஆனால் மகனே பிறக்கவில்லை என்றால், முதல் மகனுக்குச் சேர வேண்டிய சொத்தெல்லாம் ஓனேனுக்கே வந்துசேரும். அதனால், தாமாருடன் உடலுறவு கொண்டபோது ஓனேன், “தன் விந்துவைத் தரையில் விழவைத்தான்.” அப்படியென்றால், அவன் இங்கு சுய இன்பப் பழக்கத்தில் ஈடுபட்டானா? இல்லை. இது நமக்கு எப்படித் தெரியும்? பதிவு சொல்கிறபடி, “தன்னுடைய அண்ணனின் மனைவியோடு உறவுகொண்ட” சமயங்களில் அவன் விந்துவை விழவைத்தான். அப்படியென்றால், விந்து வெளிப்படுவதற்குச் சற்று முன்பு வேண்டுமென்றே அவன் தன் ஆண் உறுப்பைத் தாமாரின் கருப்பை வாய்க் குழாயிலிருந்து வெளியே இழுத்துக்கொண்டான். குழந்தையில்லாத ஓனேன், தன் அப்பாவுக்கு கீழ்ப்படியாததாலும், பேராசைப்பட்டதாலும், திருமணம் என்ற புனித ஏற்பாட்டுக்கு எதிராகப் பாவம் செய்ததாலும் யெகோவாவினால் கொல்லப்பட்டான்.—ஆதி 38:6-10; 46:12; எண் 26:19.
வாசகரிடமிருந்து வரும் கேள்விகள்
வாக்குக் கொடுத்தபடி தனது மகன் சேலாவை தாமாருக்கு கொடுக்காமல் போன விஷயத்தில் யூதா தவறு செய்துவிட்டார். கோயில் வேசி என நினைத்து ஒரு பெண்ணுடன் உறவு கொண்டதிலும் தவறிவிட்டார். இது கடவுளின் நோக்கத்திற்கு முரணாக இருந்தது, ஏனென்றால் திருமண ஏற்பாட்டிற்குள் மட்டுமே பாலுறவு அனுமதிக்கப்பட்டிருந்தது. (ஆதியாகமம் 2:24) ஆனால் உண்மையில் யூதா ஒரு வேசியுடன் உறவு கொள்ளவில்லை. மாறாக, கொழுந்தனை மணமுடிக்கும் முறைமையின்படி தன்னை அறியாமலேயே சேலாவின் ஸ்தானத்தை வகித்து, பிறக்கும் குழந்தைக்கு சட்டப்பூர்வ தகப்பனானார்.
தாமாரைப் பொறுத்தவரை, அவளுடைய செயல் ஒழுக்கயீனமான செயல் அல்ல. அவளுக்குப் பிறந்த இரட்டைக் குமாரர்கள் வேசிக்குப் பிறந்த பிள்ளைகளாக கருதப்படவில்லை. கொழுந்தனை மணமுடிக்கும் வழக்கத்தின்படி மோவாபிய பெண் ரூத்தை பெத்லகேம் ஊரானாகிய போவாஸ் விவாகம் செய்துகொண்டபோது, தாமாரின் மகனாகிய பேரேசைக் குறித்து பெத்லகேம் ஊரைச் சேர்ந்த மூப்பர்கள் நல்ல விதமாகவே பேசினார்கள். அவர்கள் போவாஸிடம் இவ்வாறு கூறினார்கள்: “இந்தப் பெண்ணிடத்திலே கர்த்தர் உனக்கு அருளிச் செய்யப்போகிற சந்தானத்தினாலே, உன் வீடு தாமார் யூதாவுக்குப் பெற்ற பேரேசின் வீட்டைப் போல ஆகக்கடவது.” (ரூத் 4:12) பேரேசும்கூட இயேசு கிறிஸ்துவின் முன்னோர்கள் பட்டியலில் குறிப்பிடப்பட்டிருக்கிறார்.—மத்தேயு 1:1-3; லூக்கா 3:23-33.
மே 18-24
பைபிளில் இருக்கும் புதையல்கள் | ஆதியாகமம் 40-41
“யெகோவா யோசேப்பை விடுவிக்கிறார்”
பார்வோனின் கனவுகள்
இரண்டு வருஷம் ஓடிவிடுகிறது, யோசேப்பு இன்னும் சிறையில்தான் இருக்கிறார். அவரைப் பற்றிய நினைப்பே பானபாத்திரக்காரனுக்கு வரவில்லை. பின்பு ஒருநாள் பார்வோன் இரண்டு விசேஷ கனவுகளைக் காண்கிறான். அவற்றின் அர்த்தம் புரியாமல் குழம்புகிறான். பார்வோன் அங்கே தூங்கிக் கொண்டிருப்பதை நீ பார்க்கிறாயா? அடுத்த நாள் காலையில் அவன் தன்னுடைய ஞானிகளை வரவழைத்து கனவுகளில் பார்த்த காரியங்களை அவர்களுக்குச் சொல்கிறான். ஆனால் அந்தக் கனவுகளின் அர்த்தத்தை அவர்களால் சொல்ல முடியவில்லை.
கடைசியில், பானபாத்திரக்காரனுக்கு யோசேப்பின் ஞாபகம் வருகிறது. அவன் பார்வோனிடம்: ‘நான் சிறையில் இருந்தபோது கனவுகளின் அர்த்தத்தைச் சொல்கிற ஒரு ஆள் அங்கிருந்தார்’ என்று சொல்கிறான். உடனடியாக யோசேப்பைச் சிறையிலிருந்து அழைத்து வரும்படி பார்வோன் உத்தரவிடுகிறான்.
யோசேப்பிடம் பார்வோன் தன் கனவுகளைச் சொல்கிறான்: ‘ஏழு கொழுத்த அழகிய பசுக்களைப் பார்த்தேன், பின்பு, எலும்பும் தோலுமாயிருந்த ஏழு மெலிந்த பசுக்களையும் நான் பார்த்தேன். இந்த மெலிந்த பசுக்கள் அந்தக் கொழுத்தப் பசுக்களை விழுங்கிவிட்டது போல் கண்டேன்.
‘என்னுடைய இரண்டாவது கனவில் செழுமையாய் முற்றியிருந்த ஏழு தானியக் கதிர்கள் ஒரே தாளில் ஓங்கி வளர்ந்திருப்பதைக் கண்டேன். பின்பு காய்ந்து போயிருந்த ஏழு தானியக் கதிர்களைக் கண்டேன். காய்ந்து போயிருந்த தானியக் கதிர்கள் அந்த ஏழு நல்ல தானியக் கதிர்களை விழுங்கத் தொடங்கியது போல் கண்டேன்.’
பார்வோனின் கனவுகள்
யோசேப்பு பார்வோனிடம்: ‘இந்த இரண்டு கனவுகளும் ஒரே காரியத்தைக் குறிக்கின்றன. அந்த ஏழு கொழுத்தப் பசுக்களும் அந்த ஏழு செழுமையான தானியக் கதிர்களும் ஏழு வருஷங்களைக் குறிக்கின்றன. அந்த ஏழு மெலிந்த பசுக்களும் அந்த ஏழு காய்ந்த தானியக் கதிர்களும் அதற்கு அடுத்து வரும் ஏழு வருஷங்களைக் குறிக்கின்றன. எகிப்தில் ஏழு வருஷம் ஏராளமான உணவு இருக்கும். அதன் பின்பு ஏழு வருஷத்திற்கு பஞ்சம் இருக்கும்’ என்று சொல்கிறார்.
‘எனவே, அந்த ஏழு நல்ல வருஷத்தில் உணவைச் சேர்த்து வைக்கும் பொறுப்பை ஒரு ஞானமுள்ள ஆளுக்கு கொடும். அப்போதுதான் அடுத்து வரும் அந்த ஏழு வருட பஞ்சத்தின்போது மக்கள் பட்டினியால் வாட மாட்டார்கள்’ என்றும் பார்வோனிடம் சொல்கிறார்.
பார்வோனின் கனவுகள்
பார்வோனுக்கு இந்த ஆலோசனை ரொம்ப பிடித்துவிட்டது. அதனால் உணவைச் சேகரித்து, அதைச் சேமித்து வைக்கும் பொறுப்பை யோசேப்புக்கே அளிக்கிறான். பார்வோனுக்கு அடுத்த மிக முக்கியமான ஸ்தானம் யோசேப்புக்குக் கிடைக்கிறது.
எட்டு வருஷத்திற்குப் பின், பஞ்ச காலத்தின்போது சில ஆட்கள் தன்னிடம் வருவதை யோசேப்பு பார்க்கிறார். அவர்கள் யார் என்று உனக்குத் தெரியுமா? அவருடைய 10 அண்ணன்மாரே அவர்கள்! கானானில் அவர்கள் வீட்டில் உணவு குறைந்துவிட்டதால் அவர்களது அப்பா யாக்கோபு அவர்களை எகிப்துக்கு அனுப்பியிருக்கிறார். யோசேப்பு தன்னுடைய அண்ணன்மாரை அடையாளம் கண்டுகொள்கிறார், ஆனால் அவர்களுக்கு யோசேப்பை அடையாளம் தெரியவில்லை. ஏன் என்று உனக்குத் தெரியுமா? ஏனென்றால் யோசேப்பு பெரியவராக வளர்ந்துவிட்டார், அதோடு, வித்தியாசமான உடைகளை உடுத்தியிருந்தார்.
தான் சிறுவனாக இருக்கையில், தன்னுடைய சகோதரர்கள் தனக்கு முன் தலைகுனிந்து வணங்குவது போல் தான் கண்ட கனவு அவருடைய நினைவுக்கு வருகிறது. இதைப் பற்றி வாசித்தது உனக்கு நினைவிருக்கிறதா? எனவே, ஒரு நல்ல காரணத்திற்காகத்தான் கடவுள் தன்னை எகிப்துக்கு அனுப்பியிருக்கிறார் என்பதை யோசேப்பு புரிந்துகொள்கிறார். யோசேப்பு என்ன செய்வார் என்று நீ நினைக்கிறாய்? நாம் பார்க்கலாம்.
புதையல்களைத் தோண்டி எடுங்கள்
w15-E 11/1 பக். 9 பாரா. 1-3
உங்களுக்குத் தெரியுமா?
பார்வோனைப் பார்க்கப் போவதற்கு முன்பு யோசேப்பு ஏன் சவரம் செய்தார்?
பார்வோன் தனக்கு வந்த இரண்டு குழப்பமான கனவுகளுக்கு அர்த்தம் சொல்வதற்காக எபிரெய கைதியான யோசேப்பை உடனடியாக கூட்டிக்கொண்டு வரும்படி கட்டளைப் போட்டார் என்று ஆதியாகமம் புத்தகம் சொல்கிறது. அந்தச் சமயத்தில் யோசேப்பு சிறையில் தள்ளப்பட்டு பல வருஷங்கள் ஆகியிருந்தன. பார்வோன் தன்னை உடனடியாக கூப்பிட்டு அனுப்பி இருந்தாலும் யோசேப்பு சவரம் செய்துவிட்டுதான் போனார். (ஆதியாகமம் 39:20-23; 41:1, 14) அவ்வளவாக முக்கியமாக தோன்றாத இந்தச் சின்னத் தகவலைக்கூட ஆதியாகமத்தை எழுதியவர் பதிவு செய்ததிலிருந்து என்ன தெரிகிறது? அந்த எழுத்தாளர் எகிப்திய பழக்கவழக்கங்களை நன்றாகத் தெரிந்து வைத்திருந்தார் என்று தெரிகிறது.
எபிரெயர்கள் உட்பட பல பூர்வ கால தேசத்தாருக்கு தாடி வளர்ப்பது சகஜமான ஒரு விஷயமாக இருந்தது. ஆனால், அதற்கு நேர்மாறாக, “கிழக்கத்திய நாடுகளில் இருந்த பூர்வ கால எகிப்தியர்கள் மட்டும் தாடி வளர்க்கவில்லை” என்று ஜான் மெக்ளின்டாக் மற்றும் ஜேம்ஸ் ஸ்ட்ராங் எழுதிய சைக்ளோப்பீடியா ஆஃப் பிப்ளிக்கல், தியாலஜிக்கல் அண்டு எக்ளிஸியாஸ்டிக்கல் லிட்டரேச்சர் சொல்கிறது.
தாடியை மட்டும்தான் அவர்கள் சவரம் செய்தார்களா? ஓர் ஆண் கோயிலுக்குள் போவதற்குமுன் கடைப்பிடிக்கவேண்டிய சில எகிப்திய சடங்குமுறைகளை, பார்வோனைப் பார்க்கப் போவதற்கு முன்பும் கடைப்பிடிக்க வேண்டுமென எதிர்பார்க்கப்பட்டிருக்கலாம் என்று பைபிள் சம்பந்தமான தொல்பொருள் ஆராய்ச்சி (ஆங்கிலம்) என்ற பத்திரிகை சொல்கிறது. இது உண்மையாக இருந்ததென்றால், யோசேப்பு தன்னுடைய தலையிலும் உடலிலும் இருந்த எல்லா முடியையும் சவரம் செய்திருக்க வேண்டியிருந்திருக்கும்.
w09 11/15 பக். 28 பாரா 14
கடவுளுடைய ஊழியர்களுக்குத் தேவை பண்புள்ள நடத்தை
14 பூர்வ காலங்களில் வாழ்ந்த தேவபக்திமிக்க பெற்றோர், பண்பாக நடந்துகொள்ளத் தங்களுடைய பிள்ளைகளுக்கு வீட்டிலேயே பயிற்சி அளித்தார்கள். உதாரணமாக, ஆபிரகாமும் அவருடைய மகனும் ஒருவரையொருவர் எப்படி மரியாதையோடு அழைத்துக்கொண்டார்கள் என்பதை ஆதியாகமம் 22:7-ல் கவனியுங்கள். யோசேப்பின் பெற்றோரும்கூட அவருக்கு நல்ல பயிற்சியை அளித்திருந்தார்கள். அதனால்தான், சிறையில் அடைக்கப்பட்டிருந்த சமயத்தில், மற்ற கைதிகளிடம் அவர் பண்போடு நடந்துகொண்டார். (ஆதி. 40:8, 14) உயர்ந்த ஸ்தானத்திலுள்ள ஒருவரை எப்படி அழைக்க வேண்டுமென்று அறிந்திருந்தார்; பார்வோனிடம் அவர் பேசிய வார்த்தைகளே அதற்கு அத்தாட்சி.—ஆதி. 41:16, 33, 34.
மே 25-31
பைபிளில் இருக்கும் புதையல்கள் | ஆதியாகமம் 42-43
“யோசேப்பு சுயக்கட்டுப்பாட்டை அதிகமாகக் காட்டுகிறார்”
“நான் கடவுளுக்கு இணையானவனா?”
யோசேப்போ அவர்களை பார்த்த உடனே அடையாளம் கண்டுகொண்டார். அதுமட்டுமல்ல, அவர்கள் காலில் விழுந்ததும் சிறுவயதில் “அவர்களைக்குறித்துத் தான் கண்ட சொப்பனங்களை நினைத்து” பார்த்தார். யோசேப்பின் அண்ணன்கள் அவருடைய காலில் விழுந்து வணங்குவார்கள் என்று அந்த கனவில் யெகோவா வெளிப்படுத்தியிருந்தார். அவர் கண்ட கனவு அப்படியே நிறைவேறியது! (ஆதியாகமம் 37:2, 5-9; 42:7, 9) இப்போது யோசேப்பு என்ன செய்வார்? அவர்களை கட்டி தழுவுவாரா? இல்லை, பழிக்குப்பழி வாங்குவாரா?
நல்லதோ கெட்டதோ எதுவாக இருந்தாலும் உணர்ச்சிவசப்பட்டு நடந்துக் கொள்ளக்கூடாது என்பதில் யோசேப்பு தெளிவாக இருந்தார். நடக்கிற சம்பவங்களை யெகோவாதான் வழிநடத்துகிறார். யாக்கோபுடைய மகன்கள் ஒரு பெரிய தேசமாக ஆவார்கள் என்பதாக யெகோவா வாக்கு கொடுத்திருந்தார். (ஆதியாகமம் 35:11, 12) யோசேப்பின் அண்ணன்கள் இன்னும் கோபக்காரர்களாக, சுயநலவாதிகளாக, மோசமானவர்களாக இருந்தால் என்ன நடக்கும்? கடவுள் கொடுத்த வாக்குறுதி பாதிக்கப்படுமா? அதுமட்டுமல்ல, யோசேப்பு கோபப்பட்டிருந்தால், ஊரில் இருக்கிற அப்பாவுக்கும், தம்பிக்கும் என்ன ஆகும்?! அவர்கள் அப்பாவையும் தம்பியையும் ஏதாவது செய்துவிடுவார்களா? முதலில் அவர்கள் இரண்டு பேரும் உயிரோடு இருக்கிறார்களா? இந்த கேள்விகள் அவருடைய மனதில் எழும்பியிருக்கும். அதனால், தான் யார் என்பதை யோசேப்பு அவருடைய அண்ணன்களுக்கு சொல்லவில்லை. அவர்கள் இப்போது மாறியிருக்கிறார்களா என்று தெரிந்துகொள்ள அவர்களை சோதித்துப் பார்க்கவும் விரும்பினார். அதன்பிறகு யெகோவாவின் விருப்பப்படி அவர்களை நடத்தலாம் என்று நினைக்கிறார்.
“நான் கடவுளுக்கு இணையானவனா?”
யோசேப்புக்கு வந்ததை போன்ற பிரச்சினைகள் உங்களுக்கு வராமல் இருக்கலாம். ஆனால், இன்றைக்கு அநேக குடும்பங்களில் சண்டை-சச்சரவு, போட்டி-பொறாமை இருப்பதைப் பார்க்க முடிகிறது. ஒருவேளை, இதுபோன்ற சூழ்நிலைகளை எதிர்ப்பட்டால் நீங்கள் எப்படி நடந்து கொள்வீர்கள்? உணர்ச்சிவசப்பட்டு எதையாவது செய்துவிடுவீர்களா? அல்லது, கடவுள் சொல்வதைக் கேட்டு நடப்பீர்களா? யோசேப்பு கடவுள் சொன்னதைக் கேட்டு நடந்தார். (நீதிமொழிகள் 14:12) குடும்பத்தில் இருக்கிறவர்களோடு சமாதானமாக இருப்பது முக்கியம்தான். ஆனால், யெகோவாவோடும் இயேசுவோடும் நல்ல நட்பை வைத்துக்கொள்வது அதைவிட முக்கியம்.—மத்தேயு 10:37.
“நான் கடவுளுக்கு இணையானவனா?”
அண்ணன்கள் மனது மாறியிருக்கிறார்களா என்று தெரிந்துகொள்வதற்கு யோசேப்பு அவர்களை சோதித்துப் பார்க்கிறார். முதலில் ஒரு மொழிபெயர்ப்பாளர் மூலமாக அவர்களிடம் கடுமையாக பேசுகிறார். நாட்டை வேவு பார்க்க வந்தவர்கள் என்று அவர்களை குற்றம் சாட்டுகிறார். அவர்கள் அதை மறுக்கிறார்கள்; தங்களைப் பற்றியும் தங்கள் குடும்பத்தைப் பற்றியும் சொல்கிறார்கள். அதுமட்டுமல்ல அவர்களுக்கு ஒரு தம்பி இருப்பதாகவும் சொல்கிறார்கள். இதை கேட்டதும் யோசேப்பின் மனதில் மகிழ்ச்சி பெருக்கெடுத்தது. இருந்தாலும் அதை அவர் வெளியே காட்டிக்கொள்ளவில்லை. ஆனால் ‘நிஜமாகவே பென்யமீன் உயிரோடு இருக்கிறானா?’ என்ற சந்தேகமும் அவருக்கு இருந்தது. அதனால் ‘அவர்களை சோதிக்கிறார்.’ அவர்களுடைய தம்பியை பார்த்தே ஆக வேண்டும் என்று சொல்கிறார். கடைசியாக அவருடைய அண்ணன்களில் ஒருவரை பணையமாக வைத்துக்கொண்டு மற்றவர்களை வீட்டுக்கு அனுப்பிவிடுகிறார்; திரும்பி வரும்போது அவர்களுடைய தம்பியை கூட்டிக்கொண்டு வரும்படி சொல்கிறார்.—ஆதியாகமம் 42:9-20.
it-2-E பக். 108 பாரா 4
யோசேப்பு
நடந்ததையெல்லாம் வைத்து, யோசேப்பின் அண்ணன்களுக்கு ஒரு விஷயம் புரிய ஆரம்பித்தது. பல வருஷங்களுக்கு முன்பு தங்கள் தம்பியை அடிமையாக விற்றதற்காக கடவுள் இப்போது தண்டனை கொடுக்கிறார் என்று புரிந்துகொண்டார்கள். அப்போது, செய்த தவறைப் பற்றித் தங்களுடைய தம்பிக்கு முன்பு பேசினார்கள். அதுவரை, தங்கள் முன்பு இருப்பது யோசேப்பு என்பதை அவர்கள் அடையாளம் கண்டுபிடிக்கவில்லை. அவர்கள் பேசிய விஷயங்கள் அவர்கள் மனம் திருந்தி இருந்ததைக் காட்டின. அதைக் கேட்ட யோசேப்பின் உணர்ச்சிகள் பொங்கின. அதனால், அவர்களைவிட்டு அவர் தள்ளிப்போய் அழுதார். பிறகு, தன்னுடைய அண்ணன்கள் கடைசி தம்பியை கூட்டிக்கொண்டு வரும் வரைக்கும் அவர் சிமியோனை மட்டும் அங்கேயே பிடித்து கட்டிவைத்தார்.—ஆதி 42:21-24.
புதையல்களைத் தோண்டி எடுங்கள்
it-2-E பக். 795
ரூபன்
ரூபனிடம் இருந்த சில நல்ல குணங்கள் அவர் செய்த விஷயங்களில் பளிச்சிடுகின்றன. யோசேப்பைக் கொல்வதற்குப் பதிலாக வறண்டுபோன தண்ணீர் தொட்டிக்குள் அவனைத் தள்ளிவிடும்படி தன்னுடைய ஒன்பது சகோதரர்களிடம் சொன்னார். ரகசியமாகத் திரும்பிவந்து யோசேப்பை தொட்டியிலிருந்து தூக்கி அவனைக் காப்பாற்றிவிடலாம் என்று நினைத்து அப்படிச் சொன்னார். (ஆதி 37:18-30) 20-க்கும் அதிகமான வருஷங்களுக்குப் பிறகு, எகிப்தில் யோசேப்பின் சகோதரர்கள் உளவாளிகள் என்று குற்றம் சுமத்தப்பட்டார்கள். அதற்குக் காரணம், தாங்கள் யோசேப்பை மோசமாக நடத்தியதுதான் என்று இந்தச் சகோதரர்கள் பேசிக்கொண்டார்கள். அப்போது ரூபன், யோசேப்பைக் கொல்வதற்கு அவர்கள் தீட்டிய சதித்திட்டத்தில் தனக்கு எந்த பங்கும் இருக்கவில்லை என்பதை அவர்களுக்கு ஞாபகப்படுத்தினார். (ஆதி 42:9-14, 21, 22) இன்னொரு சந்தர்ப்பத்தில், இந்தச் சகோதரர்கள் இரண்டாவது தடவை எகிப்துக்கு போகும்போது யாக்கோபு பென்யமீனை அவர்களோடு அனுப்ப மறுத்தார். அப்போது ரூபன் தன்னுடைய இரண்டு மகன்களையும் யாக்கோபிடம் ஒப்படைத்து, “அவனை [பென்யமீனை] நான் திரும்பவும் உங்களிடம் கொண்டுவந்து சேர்க்கவில்லை என்றால், என்னுடைய இரண்டு மகன்களைக் கொன்றுவிடுங்கள்” என்று சொன்னார்.—ஆதி 42:37.
ஆதியாகம புத்தகத்திலிருந்து சிறப்பு குறிப்புகள்—II
43:32—எபிரெயர்களுடன் சாப்பிடுவதை எகிப்தியர் ஏன் அருவருப்பானதாக கருதினார்கள்? மத சம்பந்தமான தப்பெண்ணம் அல்லது இனப் பெருமை அதற்கு முக்கிய காரணமாக இருந்திருக்கலாம். மேய்ப்பர்களும்கூட எகிப்தியரின் பார்வையில் அருவருப்பானவர்களாக காணப்பட்டார்கள். (ஆதியாகமம் 46:34) ஏன்? எகிப்தியருடைய ஜாதியின் அடிப்படையில் மேய்ப்பர்கள் மட்டமான நிலையில் இருந்திருக்கலாம். அல்லது, வயல்வெளிகள் குறைவாக இருந்த அந்த தேசத்தில் தங்களுடைய மந்தைகளுக்காக மேய்ச்சலிடங்களைத் தேடிச் சென்றவர்கள்மீது எகிப்தியர் வெறுப்பை காட்டியிருக்கலாம்.