உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • mwbr22 செப்டம்பர் பக். 1-12
  • வாழ்க்கையும் ஊழியமும் கூட்டத்துக்குத் தயாரிக்க தேவையான தகவல்கள்

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • வாழ்க்கையும் ஊழியமும் கூட்டத்துக்குத் தயாரிக்க தேவையான தகவல்கள்
  • வாழ்க்கையும் ஊழியமும் கூட்டத்தை தயாரிக்க தேவையான தகவல்கள்—பயிற்சி புத்தகம் 2022
  • துணை தலைப்புகள்
  • செப்டம்பர் 5-11
  • செப்டம்பர் 12-18
  • செப்டம்பர் 19-25
  • செப்டம்பர் 26–அக்டோபர் 2
  • அக்டோபர் 3-9
  • அக்டோபர் 10-16
  • அக்டோபர் 17-23
  • அக்டோபர் 24-30
  • அக்டோபர் 31–நவம்பர் 6
வாழ்க்கையும் ஊழியமும் கூட்டத்தை தயாரிக்க தேவையான தகவல்கள்—பயிற்சி புத்தகம் 2022
mwbr22 செப்டம்பர் பக். 1-12

வாழ்க்கையும் ஊழியமும் கூட்டத்துக்குத் தயாரிக்க தேவையான தகவல்கள்

செப்டம்பர் 5-11

பைபிளில் இருக்கும் புதையல்கள் | 1 ராஜாக்கள் 9-10

“யெகோவாவுடைய ஞானத்தைப் புகழுங்கள்”

w99 7/1 பக். 30 பாரா 6

அறிவு தாகத்தை தீர்த்த பயணம்

சாலொமோனை சந்தித்த சூட்டோடு சூடாக அந்த ராணி அவரை “கடினமான கேள்விகள்” மூலம் சோதிக்க ஆரம்பித்தாள். (1 இராஜாக்கள் [அரசர்கள்] 10:1, பொது மொழிபெயர்ப்பு) இதில் உபயோகித்த எபிரெய வார்த்தையை “விடுகதைகள்” என்றும் மொழிபெயர்க்கலாம். அப்படியென்றால் அந்த ராணி விளையாட்டுத்தனமான கேள்விகளை கேட்டாள் என்பதாக நாம் நினைக்க முடியாது. அக்கறைக்குரிய விஷயம் என்னவென்றால் சங்கீதம் 49:4-ல் பாவம், மரணம், மீட்பு போன்ற கேள்விகளுக்கு விடையளிக்கும் சமயத்திலும் அதே எபிரெய வார்த்தை பயன்படுத்தப்பட்டிருக்கிறது. அப்படியென்றால் சேபாவின் ராணி சாலொமோனிடம் கருத்தாழமிக்க அர்த்தம் பொதிந்த விஷயங்களைப் பற்றி விவாதித்திருக்க வேண்டும்; அவை சாலொமோனின் ஞானத்தை சல்லடைபோட்டு சலிப்பதுபோல் சோதித்திருக்கும் என்பதில் சந்தேகமேயில்லை. ‘தன் மனதிலிருந்த எல்லாவற்றையும் குறித்து அவனிடத்தில் சம்பாஷித்தாள்’ என்பதாக அதைப் பற்றி பைபிள் விளக்குகிறது. ‘சாலொமோன் அவளுடைய கேள்விகளுக்கெல்லாம் விடை கூறினார். அவள் கேட்டதில் பதிலளிக்க இயலாதபடி எதுவும் அரசருக்கு புதிராகத் தோன்றவில்லை.’—1 அரசர்கள் 10:2, 3, பொ.மொ.

w99 11/1 பக். 20 பாரா 6

தாராளகுணம் ததும்புகையில்

அவள் கேட்டவையும் பார்த்தவையும் அவளை வியக்க வைத்தது! அந்த ராஜஸ்திரீ மனத்தாழ்மையுடன் பதிலளித்தாள்: “எப்போதும் உமக்கு முன்பாக நின்று, உம்முடைய ஞானத்தைக் கேட்கிற உம்முடைய ஊழியக்காரரும் சந்தோஷமுள்ளவர்கள்.” (1 இராஜாக்கள் 10:4-8, NW) சாலொமோனின் ஊழியர்கள் செல்வ செழிப்பில் திளைத்திருந்தனர். ஆனால், இதனால்தான் அவர்கள் சந்தோஷமுள்ளவர்கள் என அவள் சொல்லவில்லை. மாறாக, கடவுளால் அருளப்பட்ட சாலொமோனின் ஞானத்தை எப்போதும் கேட்கும் பாக்கியத்திற்காகவே அவர்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்களாக இருந்தார்கள். படைப்பாளருடைய ஞானத்திலும் அவருடைய குமாரனுடைய ஞானத்திலும் திளைத்து அதனால் சந்தோஷமடையும் இன்றைய யெகோவாவின் ஜனங்களுக்கு சேபாவின் ராஜஸ்திரீ என்னே ஒரு சிறந்த மாதிரி!

w99 7/1 பக். 30 பாரா 7

அறிவு தாகத்தை தீர்த்த பயணம்

சேபாவின் ராணி சாலொமோனுடைய ஞானத்தையும், அவருடைய ஆட்சியில் இருந்த செழிப்பையும் பார்த்தபோது ‘பிரமைகொண்டாள்.’ (1 இராஜாக்கள் 10:4, 5) அந்த ராணி ‘பேச்சற்றுபோனதாக’ சிலர் இந்த வார்த்தைகளுக்கு அர்த்தம் கொள்கின்றனர். ஒரு வல்லுனர் அவள் மயக்கம்போட்டு விழுந்திருக்க வேண்டும் என்பதாக குறிப்பிடுகிறார். என்ன ஆகியிருந்தாலும் சரி, தான் கண்டதையும் கேட்டதையும் வைத்து அந்த ராணி அசந்துபோய்விட்டாள். சாலொமோனுடைய ஊழியர்களெல்லாம் சந்தோஷமானவர்கள் என்பதாக குறிப்பிட்டாள், ஏனெனில் அவர்கள் எப்போதும் ராஜாவுடைய ஞானத்தை கேட்டார்கள். சாலொமோனை அரியணையில் அமரச் செய்ததற்காக அவள் யெகோவாவை துதித்தாள். அதன் பிறகு அவள் விலையுயர்ந்த பரிசுகளை ராஜாவுக்கு அளித்தாள்; பொன்னின் மதிப்பு மட்டுமே இப்போதைய மதிப்பின்படி சுமார் 4,00,00,000 டாலர். சாலொமோனும் அந்த ராணிக்கு பரிசுகளை அளித்து, ‘அவள் விரும்பி கேட்டவற்றையெல்லாம் கொடுத்தார்.’—1 அரசர்கள் 10:6-13 பொ.மொ.

புதையல்களைத் தோண்டி எடுங்கள்

w08-E 11/1 பக். 22 பாரா. 4-6

உங்களுக்குத் தெரியுமா?

சாலொமோன் ராஜாவிடம் எவ்வளவு தங்கம் இருந்தது?

சாலொமோனுக்குத் தீருவின் ராஜா நான்கு டன் தங்கம் கொடுத்ததாகவும், சேபா தேசத்து ராணியும் அதே அளவு தங்கம் கொடுத்ததாகவும், சாலொமோனின் ஆட்கள் ஓப்பீரிலிருந்து 15 டன்னுக்கும் அதிகமான தங்கத்தைக் கப்பல்களில் கொண்டுவந்ததாகவும் பைபிள் சொல்கிறது. “ஒவ்வொரு வருஷமும் சாலொமோனுக்குக் கிடைத்த தங்கத்தின் எடை 666 தாலந்து.” அது, 25 டன்னுக்கும் அதிகம். (1 ராஜாக்கள் 9:14, 28; 10:10, 14) சாலொமோனிடம் உண்மையிலேயே இவ்வளவு தங்கம் இருந்ததா? அந்தக் காலத்து அரண்மனைகளில் எந்த அளவுக்கு தங்கத்தைச் சேமித்து வைத்திருந்தார்கள்?

ஒரு நம்பகமான பழைய காலத்து கல்வெட்டை அறிஞர்கள் கண்டுபிடித்தார்கள். அதில் கிட்டத்தட்ட சாலொமோனுடைய அதே காலத்தில் வாழ்ந்த ஒரு பார்வோனைப் பற்றி சொல்லப்பட்டிருந்தது. அவனுடைய தெய்வத்தின் ஆலயத்துக்காக 13.5 டன் தங்கத்தை அவன் கொடுத்ததாக அந்தக் கல்வெட்டில் சொல்லப்பட்டிருந்தது.

மகா அலெக்ஸாண்டர் (கி.மு. 336-323) சூசான் என்ற பெர்சிய நகரத்தைப் பிடித்தபோது, அங்கிருந்து சுமார் 1,180 டன் தங்கத்தைக் கைப்பற்றியதாகவும், பெர்சியா முழுவதிலும் இருந்து ஏறக்குறைய 7,000 டன் தங்கத்தைக் கைப்பற்றியதாகவும் சொல்லப்படுகிறது. இதையெல்லாம் வைத்துப் பார்க்கும்போது சாலொமோனிடம் அவ்வளவு தங்கம் இருந்ததாக பைபிள் சொல்வது உண்மைதான் என்று நாம் நம்பலாம்.

செப்டம்பர் 12-18

பைபிளில் இருக்கும் புதையல்கள் | 1 ராஜாக்கள் 11-12

“உங்களுடைய துணையை ஞானமாகத் தேர்ந்தெடுங்கள்”

w18.07 பக். 18 பாரா 7

“யார் யெகோவாவின் பக்கம் இருக்கிறீர்கள்?”

7 தன்னுடைய இளவயதில், சாலொமோனுக்கு யெகோவாவோடு நல்ல பந்தம் இருந்தது. அவருக்கு நிறைய ஞானத்தையும், எருசலேமில் அழகான ஒரு ஆலயத்தைக் கட்டும் முக்கியமான வேலையையும் யெகோவா தந்தார். ஆனால், யெகோவாவோடு தனக்கு இருந்த நட்பை அவர் இழந்தார். (1 ரா. 3:12; 11:1, 2) “ராஜாவின் இதயம் கடவுளைவிட்டு விலகாமல் இருக்க வேண்டுமானால் அவர் நிறைய மனைவிகளை வைத்துக்கொள்ளக் கூடாது” என்று கடவுளுடைய சட்டம் சொல்லியிருந்தது. (உபா. 17:17) ஆனால் இந்தச் சட்டத்துக்குக் கீழ்ப்படியாமல், 700 பெண்களைக் கல்யாணம் செய்துகொண்டார்; 300 மறுமனைவிகளை வைத்துக்கொண்டார். (1 ரா. 11:3) அதுவும், அவர்களில் நிறைய பேர், பொய்த் தெய்வங்களைக் கும்பிட்ட வேறு தேசத்துப் பெண்கள்! இதிலிருந்து, வேறு தேசத்துப் பெண்களைக் கல்யாணம் செய்யக் கூடாதென்று கடவுள் போட்டிருந்த சட்டத்துக்கும் அவர் கீழ்ப்படியவில்லை என்று தெரிகிறது.—உபா. 7:3, 4. 

w19.01 பக். 15 பாரா 6

உங்கள் இதயத்தை எப்படிப் பாதுகாத்துக்கொள்ளலாம்?

6 சாத்தான், யெகோவாவின் தராதரங்களை ஒதுக்கித்தள்ளும் ஒரு கலகக்காரன்; சுயநலவாதி! நாமும் அவனைப் போலவே ஆக வேண்டும் என்று ஆசைப்படுகிறான். ஆனால், அவனைப் போலவே யோசிப்பதற்கும் செயல்படுவதற்கும் அவனால் நம்மைக் கட்டாயப்படுத்த முடியாது. அதனால், வேறு வழிகளில் தன்னுடைய ஆசையை நிறைவேற்ற முயற்சி செய்கிறான். உதாரணத்துக்கு, அவனால் கறைபடுத்தப்பட்டிருக்கிற மக்கள் நம்மைச் சுற்றிலும் இருக்கும்படி செய்கிறான். (1 யோ. 5:19) கெட்ட ஆட்களோடு சகவாசம் வைத்துக்கொண்டால், நம்முடைய யோசிக்கும் விதமும் செயல்படும் விதமும் பாதிக்கப்படும் என்று நமக்குத் தெரிந்திருந்தும், நாம் அவர்களோடு நேரம் செலவிடுவோம் என்று அவன் எதிர்பார்க்கிறான். (1 கொ. 15:33) அவனுடைய தந்திரம் சாலொமோன் ராஜாவின் விஷயத்தில் பலித்தது. பொய்த் தெய்வங்களைக் கும்பிட்ட பெண்கள் நிறைய பேரை அவர் கல்யாணம் செய்துகொண்டார். கடைசியில், அவருடைய “மனைவிகள் அவர்மீது அதிக செல்வாக்கு செலுத்தினார்கள்.” அதோடு, யெகோவாவைவிட்டு “கொஞ்சம் கொஞ்சமாக அவருடைய இதயத்தை வழிவிலகச் செய்தார்கள்.”—1 ரா. 11:3; அடிக்குறிப்பு.

w18.07 பக். 19 பாரா 9

“யார் யெகோவாவின் பக்கம் இருக்கிறீர்கள்?”

9 ஆனால், பாவத்தை யெகோவா கண்டும்காணாமல் இருக்க மாட்டார். “சாலொமோனின் இதயம் இஸ்ரவேலின் கடவுளான யெகோவாவைவிட்டு வழிவிலகிப்போனதால் யெகோவாவுக்கு அவர்மீது பயங்கர கோபம் வந்தது” என்று பைபிள் சொல்கிறது. சாலொமோனுக்கு உதவ யெகோவா முயற்சி செய்தார். எப்படி? “அவர் இரண்டு தடவை தரிசனம் தந்திருந்தார், மற்ற தெய்வங்களை வணங்கக் கூடாது என்று எச்சரித்திருந்தார். அப்படி எச்சரித்திருந்தும் யெகோவாவுடைய கட்டளைக்கு சாலொமோன் கீழ்ப்படியவில்லை.” அதனால், கடவுளுடைய தயவையும் ஆதரவையும் அவர் இழந்தார்! அவருடைய வம்சத்தில் வந்தவர்களுக்கு, முழு இஸ்ரவேல் ராஜ்யத்தை ஆளும் வாய்ப்பை யெகோவா கொடுக்கவில்லை; நூற்றுக்கணக்கான வருஷங்களாக, கஷ்டங்கள் அவர்களை வாட்டியெடுத்தன.—1 ரா. 11:9-13.

புதையல்களைத் தோண்டி எடுங்கள்

w18.06 பக். 14 பாரா. 1-4

கடவுளின் தயவைப் பெற்றுக்கொள்ள அவர் முயற்சி செய்திருக்கலாம்!

கலகம் செய்த கோத்திரங்களை எதிர்த்துப் போர் செய்வதற்காக ரெகொபெயாம் தன்னுடைய படைகளை ஒன்றுதிரட்டினார். அப்போது, தீர்க்கதரிசியான செமாயாவை அனுப்பி யெகோவா இப்படிச் சொன்னார்: “உங்கள் சகோதரர்களான இஸ்ரவேலர்களை எதிர்த்து நீங்கள் போர் செய்யக் கூடாது. அவரவர் தங்களுடைய வீடுகளுக்குத் திரும்பிப் போய்விட வேண்டும். ஏனென்றால், நான்தான் இப்படி நடக்க வைத்தேன்.”—1 ரா. 12:21-24.—அடிக்குறிப்பைப் பாருங்கள்.

யெகோவாவுக்குக் கீழ்ப்படிவது ரெகொபெயாமுக்கு சுலபமாக இருந்திருக்குமா? “முள்சாட்டையால் அடிப்பேன்” என்று மக்களிடம் சொல்லிவிட்டு, இப்போது அவர்களுடைய கலகத்தை அடக்க ஒன்றுமே செய்யவில்லை என்றால் அவரைப் பற்றி மக்கள் என்ன நினைப்பார்கள்? (2 நாளாகமம் 13:7-ஐ ஒப்பிடுங்கள்.) மக்கள் என்ன நினைத்தாலும் சரி, அவரும் அவருடைய படையில் இருந்தவர்களும், “யெகோவாவின் வார்த்தைக்குக் கீழ்ப்படிந்தார்கள். யெகோவா சொன்னபடியே தங்கள் வீடுகளுக்குத் திரும்பிப் போனார்கள்.”

இதிலிருந்து நமக்கு என்ன பாடம்? மக்கள் நம்மைக் கேலி கிண்டல் செய்தாலும், யெகோவாவுக்குக் கீழ்ப்படிவதுதான் எப்போதுமே ஞானமானது. நாம் அப்படிச் செய்தால், கடவுள் நம்மை எப்போதும் ஆசீர்வதிப்பார்.—உபா. 28:2.

ரெகொபெயாம் யெகோவாவுக்குக் கீழ்ப்படிந்ததால் என்ன நடந்தது? யூதா மற்றும் பென்யமீன் கோத்திரங்களுக்கு அவர் தொடர்ந்து ராஜாவாக இருந்தார். அதோடு, அந்தக் கோத்திரங்களைச் சேர்ந்த பகுதிகளில் புதிய நகரங்களைக் கட்டினார். சில நகரங்களை “மிகவும் வலுப்படுத்தினார்.” (2 நா. 11:5-12) எல்லாவற்றையும்விட, கொஞ்சக் காலத்துக்கு யெகோவாவின் சட்டங்களுக்குக் கீழ்ப்படிந்தார். பத்து கோத்திர ராஜ்யத்தில் இருந்தவர்கள் சிலைகளை வணங்க ஆரம்பித்ததால், அங்கிருந்த நிறைய பேர், ரெகொபெயாமையும் உண்மை வணக்கத்தையும் ஆதரிப்பதற்காக எருசலேமுக்குப் போனார்கள். (2 நா. 11:16, 17) யெகோவாவுக்குக் கீழ்ப்படிந்ததால் ரெகொபெயாமின் ராஜ்யம் பலமடைந்தது.

செப்டம்பர் 19-25

பைபிளில் இருக்கும் புதையல்கள் | 1 ராஜாக்கள் 13-14

“நாம் ஏன் திருப்தியாகவும் அடக்கமாகவும் இருக்க வேண்டும்?”

w08 8/15 பக். 8 பாரா 4

முழு இருதயத்தோடு உண்மையுள்ளவர்களாய் நிலைத்திருங்கள்

4 அதன்பிறகு, யெரொபெயாம் ராஜா தேவனுடைய மனுஷனிடம், “நீ என்னோடேகூட வீட்டுக்கு வந்து இளைப்பாறு; உனக்கு வெகுமானம் தருவேன்” என்கிறார். (1 இரா. 13:7) இப்பொழுது தீர்க்கதரிசி என்ன செய்வார்? தான் கண்டனத்தீர்ப்புச் செய்தியை அறிவித்ததால் ராஜாவின் உபசரிப்பை உதறித்தள்ளுவாரா? (சங். 119:113) அல்லது, ராஜாவின் மனம் மாறியதுபோல் தெரிந்ததால் அவரது அழைப்பை ஏற்றுக்கொள்வாரா? நண்பர்களுக்குப் பரிசுப் பொருள்களை வாரிவழங்கும் அளவுக்கு யெரொபெயாமிடம் ஏராளமான செல்வம் கொட்டிக்கிடக்கிறது. அப்படியிருக்க, தீர்க்கதரிசியின் உள்ளத்தில் துளியளவு பொருளாசை இருந்ததென்றாலும்கூட, ராஜாவின் வெகுமானம் அவருக்குப் பெரும் சோதனையாகவே இருக்கும். ஆனால், “நீ அப்பம் புசியாமலும், தண்ணீர் குடியாமலும், போனவழியாய்த் திரும்பாமலும் இரு” என்று யெகோவா ஏற்கெனவே அவரிடம் கட்டளையிட்டிருக்கிறார். ஆகவே, “நீர் எனக்கு உம்முடைய வீட்டில் பாதி கொடுத்தாலும், நான் உம்மோடே வருவதுமில்லை, இந்த ஸ்தலத்தில் அப்பம் புசிப்பதுமில்லை, தண்ணீர் குடிப்பதுமில்லை” என்று தீர்க்கதரிசி திட்டவட்டமாகச் சொல்கிறார். பின்னர் பெத்தேலிலிருந்து வேறு வழியாகத் திரும்புகிறார். (1 இரா. 13:8–10) தீர்க்கதரிசி எடுத்த தீர்மானத்திலிருந்து, இருதயப்பூர்வமான உண்மைத்தன்மையைக் குறித்து நாம் என்ன பாடத்தைக் கற்றுக்கொள்கிறோம்?—ரோ. 15:4.

w08 8/15 பக். 11 பாரா 15

முழு இருதயத்தோடு உண்மையுள்ளவர்களாய் நிலைத்திருங்கள்

15 தேவனுடைய தீர்க்கதரிசி செய்த தவறிலிருந்து நாம் வேறு என்ன பாடத்தைக் கற்றுக்கொள்கிறோம்? “உன் சுயபுத்தியின்மேல் சாயாமல், உன் முழு இருதயத்தோடும் கர்த்தரில் நம்பிக்கையாயிரு” என்று நீதிமொழிகள் 3:5 கூறுகிறது. தேவனுடைய தீர்க்கதரிசி அதுவரை யெகோவாமீது நம்பிக்கை வைத்தே எல்லாவற்றையும் செய்தார், இப்போதோ சுயமாகத் தீர்மானம் செய்தார். அவர் செய்த தவறின் காரணமாகத் தன் உயிரையும் இழந்தார், கடவுளிடம் தனக்கிருந்த நல்ல பெயரையும் இழந்தார். பணிவோடு, உண்மையுள்ளவர்களாய் யெகோவாவுக்குச் சேவை செய்வதன் அவசியத்தை இந்தத் தீர்க்கதரிசியின் அனுபவம் எவ்வளவு தெளிவாக வலியுறுத்துகிறது!

w08 8/15 பக். 9 பாரா 10

முழு இருதயத்தோடு உண்மையுள்ளவர்களாய் நிலைத்திருங்கள்

10 வயதான தீர்க்கதரிசியின் கபடநாடகத்திற்குப் பின்னால் என்ன இருந்திருக்கலாமென்று தேவனுடைய தீர்க்கதரிசி பலமுறை யோசித்துப் பார்த்திருக்க வேண்டும். ‘முற்றிலும் வித்தியாசமான ஒரு செய்தியை என்னிடம் சொல்லும்படி இன்னொருவரிடம் தம் தூதரை யெகோவா அனுப்பியிருப்பாரா?’ என்று அவர் யோசித்துப் பார்த்திருக்கலாம். யெகோவாவிடமே கேட்டு இதைத் தெளிவுபடுத்தியிருக்கலாம்; ஆனால் அவர் அப்படிச் செய்ததாக பைபிள் குறிப்பிடுவதில்லை. மாறாக, ‘அவர் இவரோடே திரும்பிப் போய், இவர் வீட்டிலே அப்பம் புசித்துத் தண்ணீர் குடித்தார்.’ அது யெகோவாவுக்குப் பிடிக்கவில்லை. கடைசியில், வஞ்சிக்கப்பட்ட தீர்க்கதரிசி யூதாவுக்குத் திரும்பிச் செல்கிற வழியில், ஒரு சிங்கம் அவரைக் கொன்றுபோட்டது. அந்தத் தீர்க்கதரிசிக்கு ஏற்பட்ட சோக முடிவைப் பாருங்கள்!—1 இரா. 13:19–25.

புதையல்களைத் தோண்டி எடுங்கள்

w11 1/1 பக். 21 பாரா 5

நாம் செய்கிற நல்லதைப் பார்க்கிறார்

மிக முக்கியமாக, யெகோவாவைப் பற்றி, அதுவும், நம்மிடத்தில் அவர் எதைப் பார்க்கிறார் என்பதைப் பற்றி 1 இராஜாக்கள் 14:13-லிருந்து ஓர் அருமையான விஷயத்தை நாம் கற்றுக்கொள்கிறோம். அபியாவிடத்தில் ஏதோவொரு நல்ல காரியம் ‘காணப்பட்டது’ என்பதை மறந்துவிடாதீர்கள். துளியளவாவது நல்லது இருக்குமா என்பதைக் கண்டுபிடிக்க அபியாவின் இருதயத்தை யெகோவா அலசிப் பார்த்திருப்பார் எனத் தெரிகிறது. அவருடைய குடும்பத்தாருடன் ஒப்பிடுகையில், அபியா “கல் மத்தியில்” கண்டெடுக்கப்பட்ட நல்முத்தாய் இருந்தார் என்று ஓர் அறிஞர் சொல்கிறார். அபியா செய்த நல்ல காரியத்தை யெகோவா பொக்கிஷமாய்ப் போற்றி, அதற்குப் பலனளித்தார்; மோசமான குடும்பத்தைச் சேர்ந்த இவருக்கு மட்டும் யெகோவா கருணை காட்டினார்.

செப்டம்பர் 26–அக்டோபர் 2

பைபிளில் இருக்கும் புதையல்கள் | 1 ராஜாக்கள் 15-16

“ஆசாவைப் போல நீங்களும் தைரியமாக நடந்துகொள்கிறீர்களா?”

w12 8/15 பக். 8 பாரா 4

‘உங்கள் செயல்களுக்கேற்ற கைமாறு கிடைக்கும்’

இஸ்ரவேல் இரண்டு ராஜ்யங்களாகப் பிரிக்கப்பட்டதற்குப் பின்வந்த 20 வருடங்களில் யூதா பொய் மதப் பழக்கவழக்கங்களில் ஊறிப்போயிருந்தது. கி.மு. 977-ல் ஆசா அரச பீடத்தில் அமர்ந்தபோது, அரசவையில் இருந்தவர்களும்கூட கானானியர்களின் கருவளக் கடவுட்களை வணங்குவதில் மூழ்கிப்போயிருந்தார்கள். ஆனால், நாளாகமப் புத்தகத்தில் உள்ள பதிவு, ‘ஆசா தன் தேவனாகிய யெகோவாவின் பார்வைக்கு நன்மையும் செம்மையுமானதைச் செய்தார்’ என்று சொல்கிறது. ஆசா, ‘வேற்றுப் பலிபீடங்களையும், தொழுகை மேடுகளையும் அகற்றினார்; சிலைத்தூண்களை உடைத்தெறிந்தார்; அசேராக் கம்பங்களை வெட்டி வீழ்த்தினார்.’ (2 நா. 14:2, 3; பொது மொழிபெயர்ப்பு) அதுமட்டுமல்ல, மதத்தின் போர்வையில் ஓரினப்புணர்ச்சியில் ஈடுபட்டுவந்த விலை ஆடவர்களை யூத ராஜ்யத்திலிருந்து ஒழித்துக்கட்டினார். அதோடு ஆசா நிறுத்திக்கொள்ளவில்லை. ‘தங்கள் பிதாக்களின் தேவனாகிய யெகோவாவைத் தேடவும், [கடவுளுடைய] நியாயப்பிரமாணத்தின்படியும் கற்பனையின்படியும் செய்யவும்’ மக்களை உற்சாகப்படுத்தினார்.—1 இரா. 15:12, 13; பொ.மொ.; 2 நா. 14:4.

w17.03 பக். 19 பாரா 7

முழு இதயத்தோடு யெகோவாவுக்குச் சேவை செய்யுங்கள்!

7 நாம் யெகோவாவுக்கு முழு இதயத்தோடு பக்தியைக் காட்டுகிறோமா இல்லையா என்று எப்படித் தெரிந்துகொள்ளலாம்? அதற்கு, நாம் ஒவ்வொருவரும் இப்படிக் கேட்டுக்கொள்ள வேண்டும்: ‘கஷ்டமா இருந்தாலும் நான் யெகோவாவுக்குக் கீழ்ப்படிவேனா? யெகோவாவோட சபையை சுத்தமா வைச்சுக்கணுங்கிறதுல நான் உறுதியா இருப்பேனா?’ தன்னுடைய பாட்டியை ராஜமாதா அந்தஸ்திலிருந்து இறக்குவதற்கு ஆசாவுக்கு எவ்வளவு தைரியம் தேவைப்பட்டிருக்கும்! சிலசமயங்களில், ஆசாவைப் போலவே நீங்களும் தைரியமாகச் செயல்பட வேண்டியிருக்கலாம். உதாரணத்துக்கு, உங்கள் குடும்பத்தில் இருக்கிற ஒருவரோ, நெருங்கிய நண்பரோ ஏதாவது பாவம் செய்துவிடலாம். மனம் திருந்தாததால், அவர் சபை நீக்கம் செய்யப்படலாம். அப்போது நீங்கள் என்ன செய்வீர்கள்? அவரோடு எந்தத் தொடர்பும் வைத்துக்கொள்ளாமல் இருப்பதற்கு உறுதியாக இருப்பீர்களா? உங்கள் இதயம் உங்களை என்ன செய்யத் தூண்டும்?

it-1-E பக். 184-185

ஆசா

ஆசா எல்லா சமயத்திலும் யெகோவாமேல் முழு நம்பிக்கை வைக்கவில்லை. அதனால், சிலசமயங்களில் முட்டாள்தனமாகத் தீர்மானம் எடுத்தார். ஆனாலும், அவரிடம் சில நல்ல குணங்கள் இருந்தன. தேசத்திலிருந்து அவர் பொய் வணக்கத்தை ஒழித்துக்கட்டினார். அவர் செய்த தவறுகளைவிட அவரிடம் இருந்த நல்ல குணங்களும், அவர் செய்த நல்ல விஷயங்களும்தான் அதிகம். அதனால்தான், கடவுளுக்கு உண்மையாக இருந்த யூதா தேசத்து ராஜாக்களில் அவரையும் ஒருவராக பைபிள் சொல்கிறது.—2நா 15:17.

புதையல்களைத் தோண்டி எடுங்கள்

w98 9/15 பக். 21-22 பாரா 8

கடவுள் உங்களுக்கு நிஜமானவரா?

உதாரணமாக, எரிகோவை திரும்ப எடுப்பித்துக் கட்டினால் கிடைக்கும் தண்டனையைப் பற்றிய தீர்க்கதரிசனத்தையும் அவற்றின் நிறைவேற்றத்தையும் வாசியுங்கள். யோசுவா 6:26 (தி.மொ.) இவ்வாறு குறிப்பிடுகிறது: “அக்காலத்திலே யோசுவா: இந்த எரிகோ பட்டணத்தைக்கட்ட எழும்பும் மனுஷன் யெகோவாவின் சந்நிதியில் சாபத்திற்குரியவன்; அஸ்திபாரமிடுமையில் மூத்தமகனை இழப்பான்; வாசலைவைக்கையில் இளையமகனை இழப்பான்.” இது சுமார் 500 வருடங்களுக்குப் பிறகு நிறைவேறியது. 1 இராஜாக்கள் 16:34-ல் (தி.மொ.) நாம் இவ்வாறு வாசிக்கிறோம்: “அவன் [ஆகாப் ராஜாவின்] நாட்களிலே பேதேல் ஊரானாகிய ஈயேல் எரிகோவைக் கட்டினான்; யெகோவா நூனின் குமாரனாகிய யோசுவாவைக் கொண்டு சொல்லியிருந்த வார்த்தையின்படியே, அவன் அதின் அஸ்திபாரத்தைப் போட்டபோது அபிராம் என்னும் தன் மூத்த குமாரனையும், அதில் வாசல்களை வைத்தபோது செகூப் என்னும் தன் இளைய குமாரனையும் இழந்தான்.” மெய்யான தேவன் மட்டுமே இத்தகைய தீர்க்கதரிசனங்களை ஏவி அது நிறைவேறுவதை உறுதிப்படுத்திக்கொள்ள முடியும்.

அக்டோபர் 3-9

பைபிளில் இருக்கும் புதையல்கள் | 1 ராஜாக்கள் 17-18

“நீங்கள் இன்னும் எத்தனை நாளைக்குத்தான் இரண்டு மனதாக இருப்பீர்கள்?”

w17.03 பக். 14 பாரா 6

விசுவாசத்தோடு இருங்கள் ஞானமான தீர்மானம் எடுங்கள்!

6 வாக்குக் கொடுக்கப்பட்ட தேசத்தில் இருந்தபோது, யெகோவாவை வணங்குவதா அல்லது மற்ற கடவுள்களைக் கும்பிடுவதா என்று இஸ்ரவேலர்கள் தீர்மானிக்க வேண்டியிருந்தது. (யோசுவா 24:15-ஐ வாசியுங்கள்.) அது ஒரு சாதாரண தீர்மானம் போல் இருந்திருக்கலாம். ஆனால், அவர்களுடைய வாழ்வும் சாவும் அந்தத் தீர்மானத்தில்தான் அடங்கியிருந்தது. நியாயாதிபதிகளின் காலத்திலும், இஸ்ரவேலர்கள் தொடர்ந்து தவறான தீர்மானங்களை எடுத்தார்கள். யெகோவாவை வணங்குவதை நிறுத்திவிட்டு, பொய்க் கடவுள்களைக் கும்பிட ஆரம்பித்தார்கள். (நியா. 2:3, 11-23) பிறகு, தீர்க்கதரிசியான எலியாவின் காலத்திலும், யெகோவாவை வணங்குவதா அல்லது பொய்க் கடவுளான பாகாலைக் கும்பிடுவதா என்று கடவுளுடைய மக்கள் தீர்மானிக்க வேண்டியிருந்தது. (1 ரா. 18:21) ‘யெகோவாவுக்குச் சேவை செய்வது எப்போதுமே சிறந்தது என்பதால் அவர்கள் தீர்மானம் எடுப்பதொன்றும் அவ்வளவு கஷ்டம் இல்லையே’ என்று நீங்கள் ஒருவேளை யோசிக்கலாம். சொல்லப்போனால், உயிரில்லாத கடவுளைக் கும்பிட ஞானமான ஒருவர் விரும்ப மாட்டார். அப்படியிருந்தும், இஸ்ரவேலர்களால் ஒரு தீர்மானத்துக்கே வர முடியவில்லை. அவர்கள் “இரண்டு கருத்துகளுக்கு நடுவே நொண்டி நொண்டி” நடந்ததாக பைபிள் சொல்கிறது. அப்போது, எலியா ஒரு ஞானமான விஷயத்தைச் செய்தார். அதாவது, உண்மைக் கடவுளான யெகோவாவை வணங்கும்படி அவர்களை உற்சாகப்படுத்தினார்.

ia பக். 88 பாரா 15

தூய வழிபாட்டுக்குத் தூணாய் நின்றார்

15 அவர் சொன்னதைக் கேட்டு, பாகால் பூசாரிகள் இன்னும் அதிக வெறித்தனமாய் நடந்துகொள்கிறார்கள்; அவர்கள் ‘உரத்த சத்தமாய்க் கூப்பிட்டு, தங்கள் வழக்கத்தின்படியே இரத்தம் தங்கள்மேல் வடியுமட்டும் கத்திகளாலும் ஈட்டிகளாலும் தங்களைக் கீறிக்கொள்கிறார்கள்.’ ஆனால் இதுவும் பலிப்பதில்லை! ‘எந்தக் குரலும் கேட்பதில்லை, எந்தப் பதிலும் வருவதில்லை, கவனிப்பார் யாருமில்லை.’ (1 இரா. 18:28, 29; பொ.மொ.) நிஜத்தில் பாகால் என யாருமே இல்லை. யெகோவாவிடமிருந்து தந்திரமாய் மக்களைத் திசைதிருப்ப சாத்தான் உருவாக்கிய கற்பனை கடவுள்தான் அவன். யெகோவாவை விட்டுவிட்டு வேறெந்த எஜமானருக்குச் சேவை செய்தாலும் ஏமாற்றம்தான் மிஞ்சும், சொல்லப்போனால் தலைகுனிவுதான் ஏற்படும்.—சங்கீதம் 25:3-ஐயும் 115:4-8-ஐயும் வாசியுங்கள்.

ia பக். 90 பாரா 18

தூய வழிபாட்டுக்குத் தூணாய் நின்றார்

18 எலியா ஜெபம் செய்வதற்குமுன் அந்தக் கூட்டத்தார், ‘பாகால் வெறும் கற்பனை என்று இப்போது தெரிந்துவிட்டது, யெகோவாவும் அப்படித்தானோ’ என நினைத்திருக்கலாம். ஆனால், அவர் ஜெபம் செய்த பின்பு, அவர்கள் அப்படி நினைப்பதற்கு வாய்ப்பே இல்லாமல் போகிறது. ‘உடனே யெகோவாவின் நெருப்பு கீழே இறங்கி அந்த எரிபலியையும், விறகுக் கட்டைகளையும், கற்களையும், மணலையும் சுட்டெரித்து வாய்க்கால் நீரையும் வற்றச் செய்கிறது.’ (1 இரா. 18:38, பொ.மொ.) எவ்வளவு அற்புதமான பதில்! இப்போது ஜனங்கள் என்ன செய்கிறார்கள்?

புதையல்களைத் தோண்டி எடுங்கள்

ia பக். 86, பெட்டி

எலியாவின் நாட்களில் எவ்வளவு காலம் வறட்சி?

நீண்ட நாள் நீடித்த வறட்சி விரைவில் நீங்கிவிடுமென ஆகாப் ராஜாவிடம் யெகோவாவின் தீர்க்கதரிசி எலியா சொன்னார். வறட்சியைப் பற்றி முதன்முதலில் அறிவித்த நாளிலிருந்து ‘மூன்றாம் வருடத்தில், அவர் அப்படிச் சொன்னதாகத் தெரிகிறது. (1 இரா. 18:1) எலியா அதைச் சொன்னவுடனேயே யெகோவா மழை பொழியச் செய்தார். மூன்றாம் வருடம் நடந்துகொண்டிருந்தபோதே வறட்சி முடிவுக்கு வந்தது என்றும், அதனால் மூன்று வருடங்கள் முழுமையாக முடிந்திருக்காது என்றும் சிலர் நினைக்கலாம். ஆனால், “மூன்றரை வருடங்களுக்கு” மழை பெய்யவில்லை என இயேசுவும் யாக்கோபும் குறிப்பிட்டார்கள். (லூக். 4:25; யாக். 5:17) அப்படியென்றால், இது ஒரு முரண்பாடா?

நிச்சயமாகவே இல்லை. பூர்வ இஸ்ரவேலில் கோடைக்காலம் நீண்ட காலத்திற்கு இருந்தது, கிட்டத்தட்ட ஆறு மாதங்கள்கூட நீடித்தது. அப்படிப்பட்ட கோடைக்காலம் வழக்கத்திற்கு மாறாக நீடித்தபோதுதான்... கடுமையாக இருந்தபோதுதான்... வறட்சியைப் பற்றி முதன்முதலில் ஆகாபிடம் எலியா அறிவிக்க வந்தார். அப்படியானால், வறட்சி ஆரம்பித்து ஏற்கெனவே கிட்டத்தட்ட ஆறு மாதங்கள் ஆகியிருந்தன. ஆகவே, ‘மூன்றாம் வருடத்தில்’ எலியா அதன் முடிவைக் குறித்து சொன்னபோது, அது ஆரம்பித்து ஏற்கெனவே கிட்டத்தட்ட மூன்றரை வருடங்கள் ஆகியிருந்தன. கர்மேல் மலையில் நடந்த அந்த மாபெரும் பரீட்சையைக் காண மக்கள் எல்லோரும் திரண்டிருந்த சமயத்தில், அந்த ‘மூன்றரை வருடங்கள்’ முழுமையாக முடிந்திருந்தன.

அதோடு, எலியா முதன்முதல் ஆகாபைச் சந்தித்த காலம் ஏன் பொருத்தமானதெனக் கவனியுங்கள். பாகால் “மேகங்களில் பவனி வரும் தெய்வம்,” அதாவது கோடைக்கு முடிவுகட்டி மழையை அருளும் தெய்வம், என்று மக்கள் நம்பிவந்தார்கள். கோடைக்காலம் வழக்கத்தைவிட அதிகமாக நீடித்ததால், ‘பாகால் என்ன செய்கிறார்? எப்போது மழை தருவார்?’ என மக்கள் யோசிக்க ஆரம்பித்திருப்பார்கள். தான் சொல்லும்வரை மழையோ பனியோ பெய்யாது என எலியா அறிவித்தபோது பாகால் பக்தர்கள் இடிந்துபோயிருப்பார்கள்.—1 இரா. 17:1.

அக்டோபர் 10-16

பைபிளில் இருக்கும் புதையல்கள் | 1 ராஜாக்கள் 19-20

“ஆறுதலுக்காக யெகோவாவையே நம்பியிருங்கள்”

w19.06 பக். 15 பாரா 5

வேதனையில் தவிக்கும்போது யெகோவாவை நம்பியிருங்கள்

5 ஒன்று ராஜாக்கள் 19:1-4-ஐ வாசியுங்கள். யேசபேல் ராணி தனக்குக் கொலை மிரட்டல் விட்டபோது எலியா பயந்துவிட்டார். அதனால், பெயெர்-செபாவுக்கு ஓடிப்போனார். “தான் சாக வேண்டுமென்று” வேண்டிக்கொள்ளும் அளவுக்கு அவர் நொந்துபோயிருந்தார். அவர் ஏன் அப்படி உணர்ந்தார்? அவரும் “நம்மைப் போன்ற மனிதர்தான், நமக்கு இருக்கும் உணர்ச்சிகள்தான் அவருக்கும் இருந்தன.” (யாக். 5:17) அவருக்கு இருந்த வேதனையாலும் உடல் களைப்பாலும் அவர் அப்படித் துவண்டுபோயிருக்கலாம். மக்கள் யெகோவாவை வணங்க வேண்டும் என்பதற்காக தான் எடுத்த முயற்சியெல்லாம் வீணாகிவிட்டதாக அவர் நினைத்திருக்கலாம். இஸ்ரவேல் தேசத்தின் நிலைமை முன்னேறவே இல்லை என்பதாகவும், தான் மட்டும்தான் யெகோவாவை இன்னும் வணங்கிக்கொண்டிருப்பதாகவும் அவர் நினைத்திருக்கலாம். (1 ரா. 18:3, 4, 13; 19:10, 14) யெகோவாவுக்கு உண்மையோடு இருந்த இந்தத் தீர்க்கதரிசி இப்படியெல்லாம் நினைத்தது நமக்கு ஆச்சரியமாக இருக்கலாம். ஆனால், அவருடைய உணர்ச்சிகளை யெகோவா புரிந்துகொண்டார்.

ia பக். 103 பாரா 13

கடவுளிடம் ஆறுதல் பெற்றார்

13 தன் உயிரை எடுத்துக்கொள்ளச் சொல்லி, சூரைச்செடியின் கீழ் படுத்துக்கொண்டு தனது அன்பு தீர்க்கதரிசி புலம்புவதை மேலிருந்து யெகோவா பார்க்கிறார். அப்போது அவருக்கு எப்படியிருந்திருக்கும்? சொல்லவே வேண்டியதில்லை. எலியா கண்ணயர்ந்ததும் யெகோவா ஒரு தேவதூதனை அவரிடம் அனுப்புகிறார். அந்தத் தேவதூதன் எலியாவை மெதுவாகத் தட்டியெழுப்பி, “எழுந்து சாப்பிடு” என்று சொல்கிறார். தேவதூதன் கொண்டுவந்த சூடான ரொட்டியை எலியா சாப்பிட்டுவிட்டு தண்ணீர் குடிக்கிறார். தேவதூதனுக்கு நன்றி சொல்கிறாரா? சாப்பிட்டார், குடித்தார், மீண்டும் தூங்கிவிட்டார் என்றுதான் பதிவு சொல்கிறது. பேசக்கூட முடியாத அளவுக்கு எலியா கவலையில் துவண்டுபோயிருக்கிறாரா? அது நமக்குத் தெரியாது, ஆனால் அந்தத் தேவதூதன் திரும்பவும் எலியாவை எழுப்புகிறார், ஒருவேளை விடியற்காலையில். “எழுந்து சாப்பிடு” என்று மறுபடியும் சொல்கிறார்; அதோடு, “இது உன் சக்திக்கு மிஞ்சிய பயணம்” என்று சொல்கிறார்; இந்த வார்த்தைகள் அர்த்தம் பொதிந்த வார்த்தைகள்.—1 இரா. 19:5-7, NW.

ia பக். 106 பாரா 21

கடவுளிடம் ஆறுதல் பெற்றார்

21 இந்தப் பிரம்மாண்டமான இயற்கைச் சக்திகள் எதிலும் யெகோவா இல்லை என்று பதிவு திரும்பத் திரும்பச் சொல்கிறது. யெகோவா ஒன்றும் புராணக் கதைகளில் வரும் இயற்கைக் கடவுள் அல்ல, உதாரணத்திற்கு மழைக்கான தெய்வமாக வழிபடப்பட்ட பாகாலைப் போன்றவர் அல்ல என்பது எலியாவுக்கு நன்றாகத் தெரியும். உண்மையில், பிரம்மாண்டமான இயற்கைச் சக்திகளைப் படைத்தவரே யெகோவாதான்; அவருடைய படைப்புகளைவிட அவர் மகா சக்தியுள்ளவர். அவர் குடிகொள்ள வானாதி வானங்கள்கூட போதாதே! (1 இரா. 8:27) அப்படியென்றால், யெகோவா ஏன் இயற்கைச் சக்திகளை எலியா கண்முன் காட்டினார்? எலியாவின் பயத்தைப் போக்குவதற்காகவே. மகா சக்திபடைத்த யெகோவாவே அவருடன் இருக்கும்போது ஆகாபுக்கும் யேசபேலுக்கும் துளிகூட அஞ்ச வேண்டியதில்லை!—சங்கீதம் 118:6-ஐ வாசியுங்கள்.

ia பக். 106 பாரா 22

கடவுளிடம் ஆறுதல் பெற்றார்

22 தீப்பிழம்பு மறைந்தவுடன், எங்கும் ஒரே நிசப்தம்! பின்பு, ‘சாந்தமான, மெல்லிய குரலை’ எலியா கேட்கிறார். மனக்குமுறல்களைக் கொட்டச் சொல்லி மீண்டும் அந்தக் குரல் அவரிடம் தெரிவிக்கிறது; அவர் இரண்டாவது முறை தன் கவலைகளையெல்லாம் கொட்டுகிறார். அது அவருக்கு இன்னும் ஆசுவாசமாய் இருந்திருக்கும். அதன் பின்பு அந்த “சாந்தமான, மெல்லிய குரல்” சொல்கிற விஷயம் அவருக்கு இன்னும் அதிக ஆறுதல் தருகிறது. எலியா நினைப்பதுபோல் அவர் லாயக்கற்றவர் அல்ல என்பதை யெகோவா அவருக்கு உறுதிப்படுத்துகிறார். எப்படி? இஸ்ரவேலில் பாகால் வழிபாட்டை ஒழிக்க வேண்டுமென்ற தமது நோக்கத்தைப் பற்றி எலியாவுக்கு விவரமாகத் தெரியப்படுத்துகிறார்; இதன் மூலம், எலியா செய்த வேலை எதுவும் வீண் இல்லை... தமது நோக்கம் வேகமாக நிறைவேறப்போகிறது... என்ற உறுதியை அளிக்கிறார். அதோடு, திட்டவட்டமான கட்டளைகள் சிலவற்றை யெகோவா கொடுத்து மீண்டும் அவரை அனுப்புகிறார்; இதன் மூலம், அவருடைய நோக்கத்தை நிறைவேற்றுவதில் எலியாவுக்கு இன்னமும் பங்கு இருக்கிறது என்பதைத் தெரியப்படுத்துகிறார்.—1 இரா. 19:12-17, NW.

புதையல்களைத் தோண்டி எடுங்கள்

w97 11/1 பக். 31 பாரா 1

சுயதியாகத்துக்கும் உண்மைப்பற்றுறுதிக்கும் ஒரு முன்மாதிரி

கடவுளுடைய ஊழியர்களில் அநேகர் இன்று அதேப்போன்ற சுயதியாக மனப்பான்மையை வெளிப்படுத்துகின்றனர். தொலைவிலுள்ள பிராந்தியங்களில் நற்செய்தியைப் பிரசங்கிப்பதற்கு அல்லது பெத்தேல் குடும்பத்தின் அங்கத்தினர்களாக சேவிப்பதற்கு சிலர் தங்களுடைய ‘வயல்களை,’ பிழைப்புக்காக அவர்கள் செய்துகொண்டிருந்த வேலைகளைவிட்டு வந்திருக்கிறார்கள். மற்றவர்கள் சங்கத்தின் கட்டுமான திட்டங்களில் வேலைசெய்வதற்காக அயல்நாடுகளுக்குப் பயணம் செய்திருக்கிறார்கள். அநேகர் தாழ்வானவை என்றழைக்கப்படும் வேலைகளைச் செய்ய இசைந்துள்ளனர். இருந்தபோதிலும், யெகோவாவுக்காக ஊழியஞ்செய்கிற எவருமே அற்பமான சேவையை செய்துகொண்டில்லை. யெகோவா தம்மை மனப்பூர்வமாய் சேவிக்கிற யாவரையும் போற்றுகிறார், அவர்களுடைய சுயதியாக மனப்பான்மையை அவர் ஆசீர்வதிப்பார்.—மாற்கு 10:29, 30.

அக்டோபர் 17-23

பைபிளில் இருக்கும் புதையல்கள் | 1 ராஜாக்கள் 21-22

“அதிகாரத்தைப் பயன்படுத்தும் விஷயத்தில் யெகோவாவைப் போலவே நடந்துகொள்ளுங்கள்”

cl அதி. 6 பக். 59 பாரா 5

அழிக்கும் வல்லமை—‘யெகோவா யுத்தத்தில் வல்லவர்’

மூல மொழி பைபிள்களில், எபிரெய வேதாகமத்தில் கிட்டத்தட்ட முன்னூறு தடவையும் கிறிஸ்தவ கிரேக்க வேதாகமத்தில் இரண்டு தடவையும் கடவுள் “சேனைகளின் யெகோவா” என அழைக்கப்படுகிறார். (1 சாமுவேல் 1:11, NW) சர்வலோகப் பேரரசராக, யெகோவா தேவதூதர்களின் திரளான சேனைக்கு தலைவராக இருக்கிறார். (யோசுவா 5:13-15; 1 இராஜாக்கள் 22:19) இந்த சேனையின் அழிக்கும் வல்லமை பிரமிக்கத்தக்கது.—ஏசாயா 37:36

w21.02 பக். 4 பாரா 9

“ஒவ்வொரு ஆணுக்கும் கிறிஸ்து தலையாக இருக்கிறார்”

9 மனத்தாழ்மை. யெகோவாதான் எல்லாரையும்விட ஞானமுள்ளவர்! இருந்தாலும் தன்னுடைய ஊழியர்கள் சொல்வதை அவர் காதுகொடுத்து கேட்கிறார். (ஆதி. 18:23, 24, 32) தன்னுடைய அதிகாரத்தின் கீழ் இருப்பவர்கள் கருத்து சொல்வதற்கும் இடம்கொடுக்கிறார். (1 ரா. 22:19-22) யெகோவா பரிபூரணமானவராக இருந்தாலும், நம்மிடமிருந்து பரிபூரணத்தை எதிர்பார்ப்பதில்லை. நாம் நல்லபடியாக வாழ்வதற்கு அவர் உதவுகிறார். (சங். 113:6, 7) சொல்லப்போனால், அவர் நமக்குத் ‘துணையாக’ இருப்பதாக, அதாவது நம்முடைய உதவியாளராக இருப்பதாக, பைபிள் சொல்கிறது. (சங். 27:9; எபி. 13:6) யெகோவாவின் மனத்தாழ்மையால்தான் தன்னால் பெரிய பெரிய வேலைகளைச் செய்ய முடிந்தது என்று தாவீதும் ஒத்துக்கொண்டார்.—2 சா. 22:36.

it-2-E பக். 245

பொய்

உண்மையை ஏற்றுக்கொள்ள விருப்பம் இல்லாதவர்கள் “வஞ்சகத்தின் பிடியில்” சிக்கிக்கொள்வதற்கு யெகோவா விட்டுவிடுகிறார். அதனால் அவர்கள் “பொய்யை நம்பி” ஏமாந்துபோகிறார்கள். (2தெ 2:9-12) ஆகாப் ராஜாவுடைய விஷயத்தில் இதுதான் நடந்தது. ஆகாபின் தீர்க்கதரிசிகளைப் பொய் சொல்ல வைப்பதற்காக ஒரு தேவதூதர், தன்னுடைய சக்தியைப் பயன்படுத்துவதற்கு யெகோவா அவரை அனுமதித்தார். அப்படிப்பட்ட செய்தியைச் சொல்ல வேண்டும் என்றுதான் அந்த தீர்க்கதரிசிகள் விரும்பினார்கள்; அவர்களிடமிருந்து அப்படிப்பட்ட செய்தியைக் கேட்க வேண்டும் என்றுதான் ஆகாபும் விரும்பினார். அதனால் அந்தத் தீர்க்கதரிசிகள் சொன்ன பொய்யை நம்பி அவர் ஏமாந்துபோனார். கடைசியில் உயிரையும் இழந்தார்.—1ரா 22:1-38; 2நா 18.

புதையல்களைத் தோண்டி எடுங்கள்

w21.10 பக். 3 பாரா. 4-6

உண்மையிலேயே மனம் திருந்துவது என்றால் என்ன?

4 ஒரு கட்டத்தில், ஆகாபுக்கும் யேசபேலுக்கும் முடிவுகட்ட வேண்டும் என்று யெகோவா நினைத்தார். அதனால், அவர்களுக்குத் தண்டனை கொடுக்கப்போவதாக எலியா தீர்க்கதரிசி மூலம் சொன்னார். அவர்களுடைய வம்சத்தில் வருகிற எல்லாரையும் அடியோடு அழிக்கப்போவதாகச் சொன்னார். அதைக் கேட்டதும் ஆகாப் தலையில் இடி விழுந்த மாதிரி இருந்தது! அதனால், அகங்காரம் பிடித்த அந்த ராஜா யெகோவாவுக்கு முன்னால் ‘தாழ்மையாக நடந்துகொண்டார்.’—1 ரா. 21:19-29.

5 அந்தச் சமயத்தில், ஆகாப் ராஜா தாழ்மையாக நடந்துகொண்டாலும் அவர் உண்மையிலேயே மனம் திருந்தவில்லை. எப்படிச் சொல்கிறோம்? இஸ்ரவேல் தேசத்திலிருந்து பாகால் வணக்கத்தை ஒழித்துக்கட்ட அவர் எந்த முயற்சியும் எடுக்கவில்லை. யெகோவாவை வணங்கும்படி மற்றவர்களை ஊக்கப்படுத்தவும் இல்லை. அவர் உண்மையிலேயே மனம் திருந்தவில்லை என்பதை அவர் செய்த மற்ற விஷயங்களிலிருந்தும் தெரிந்துகொள்கிறோம்.

6 கொஞ்சக் காலத்துக்குப் பின்பு, சீரியர்களை எதிர்த்துப் போர் செய்ய உதவும்படி யூதா ராஜாவான யோசபாத்தை ஆகாப் ராஜா கூப்பிட்டார், அவரும் வந்தார். ஆனால், போருக்குப் போவதற்கு முன்பு என்ன செய்ய வேண்டுமென யெகோவாவின் தீர்க்கதரிசியிடம் கேட்கலாம் என்று யோசபாத் சொன்னார். ஆனால், ஆகாபுக்கு அந்த யோசனை அவ்வளவாகப் பிடிக்கவில்லை. அதனால், “இன்னும் ஒருவன் இருக்கிறான். அவன் மூலமாகவும் யெகோவாவிடம் விசாரிக்கலாம். ஆனால், அவனை எனக்குச் சுத்தமாகப் பிடிக்காது. ஏனென்றால், இதுவரை அவன் என்னைப் பற்றி நல்ல விஷயத்தைத் தீர்க்கதரிசனமாகச் சொன்னதே கிடையாது, கெட்ட விஷயத்தைத்தான் சொல்வான்” என்று ஆகாப் சொன்னார். இருந்தாலும், ஆகாபும் யோசபாத்தும் மிகாயா தீர்க்கதரிசியிடம் விசாரித்தார்கள். ஆகாப் சொன்னதுபோல் மிகாயாவும் கெட்ட செய்தியைத்தான் சொன்னார். இப்போது, ஆகாப் என்ன செய்திருக்க வேண்டும்? யெகோவாவிடம் மன்னிப்பு கேட்டிருக்க வேண்டும். அப்படிச் செய்வதற்குப் பதிலாக, அந்தத் தீர்க்கதரிசியை ஆகாப் சிறையில் தள்ளினார். (1 ரா. 22:7-9, 23, 27) அவரைச் சிறையில் போட்டதால் அவர் சொன்னது நடக்காமல் போய்விட்டதா? இல்லை. அவர் சொன்னது அப்படியே நடந்தது. அந்தப் போரில் ஆகாப் செத்துப்போனார்.—1 ரா. 22:34-38.

அக்டோபர் 24-30

பைபிளில் இருக்கும் புதையல்கள் | 2 ராஜாக்கள் 1-2

“பயிற்சி கொடுப்பதில் ஒரு நல்ல முன்மாதிரி”

w15 4/15 பக். 13 பாரா 15

மூப்பர்களே, தகுதி பெற மற்றவர்களுக்கு உதவுங்கள்!

15 பயிற்சி பெறும் சகோதரர்கள் எலிசா தீர்க்கதரிசியிடம் இருந்து இன்னொரு முக்கியமான விஷயத்தை கற்றுக்கொள்ளலாம். எலிசா தனக்கு பயிற்சி கொடுத்த எலியாவுக்கு மரியாதை கொடுத்தார். எரிகோவில் இருந்த சில தீர்க்கதரிசிகளை சந்தித்து பேசியதற்கு பின்பு, எலியாவும் எலிசாவும் யோர்தான் நதிக்கு போனார்கள். அங்கே எலியா, ‘தன் சால்வையை எடுத்து முறுக்கித் தண்ணீரை அடித்தார்; அது இருபக்கமாகப் பிரிந்தது.’ நதியை கடந்ததற்கு பின்பு இரண்டு பேரும் பேசிக்கொண்டே போனார்கள். எலியா சொன்ன எல்லா விஷயத்தையும் எலிசா கவனமாக கேட்டார். அவரிடம் இருந்து நிறைய விஷயங்களை கற்றுக்கொண்டார். ஆனால், தனக்கு எல்லாமே தெரியும் என்று எலிசா நினைக்கவில்லை. எலியா சுழல்காற்றில் பரலோகத்துக்கு எடுத்துக்கொள்ளப்பட்டதற்கு பின்பு, எலிசா யோர்தானுக்கு போனார். அங்கே, எலியாவுடைய சால்வையை எடுத்து தண்ணீரை அடித்து, “எலியாவின் தேவனாகிய கர்த்தர் எங்கே” என்று சொன்னார். தண்ணீர் மறுபடியும் இரண்டாகப் பிரிந்தது.—2 இரா. 2:8-14.

w15 4/15 பக். 13 பாரா 16

மூப்பர்களே, தகுதி பெற மற்றவர்களுக்கு உதவுங்கள்!

16 எலிசா செய்த முதல் அற்புதத்தைக் கவனித்தீர்களா? எலியா கடைசியாக செய்த அற்புதத்தை போலவேதான் எலிசாவும் செய்தார். எலியா பரலோகத்துக்கு எடுத்துக்கொள்ளப்பட்டதற்கு பின்பு, அவர் செய்த வேலையை இப்போது எலிசா செய்ய வேண்டியிருந்தது. ஆனால், அந்த வேலையை வித்தியாசமாக செய்ய வேண்டும் என்று அவர் நினைக்கவில்லை. அதற்கு பதிலாக, எலியா சொல்லிக் கொடுத்த மாதிரியே செய்தார். இதிலிருந்து நாம் என்ன தெரிந்துகொள்கிறோம்? எலிசாவுக்கு எலியாமீது ரொம்ப மரியாதை இருந்தது என்று தெரிந்துகொள்கிறோம். எலிசா அப்படி செய்ததால், மற்ற தீர்க்கதரிசிகளும் அவரை நம்பினார்கள். (2 இரா. 2:15) எலிசா 60 வருடங்கள் ஒரு தீர்க்கதரிசியாக சேவை செய்தார். அப்போது, எலியாவைவிட நிறைய அற்புதங்களை செய்ய யெகோவா அவருக்கு உதவி செய்தார். பயிற்சி பெறும் சகோதரர்கள் இதிலிருந்து என்ன கற்றுக்கொள்ளலாம்?

புதையல்களைத் தோண்டி எடுங்கள்

w05 8/1 பக். 9 பாரா 2

இரண்டு இராஜாக்கள் புத்தகத்திலிருந்து சிறப்பு குறிப்புகள்

2:11—‘எலியா சுழல்காற்றிலே ஏறிப்போன’ அந்தப் ‘பரலோகம்’ எது? இது இப்பிரபஞ்சத்தின் தொலைதூரப் பகுதியும் அல்ல, கடவுளும் தேவதூதர்களும் வாசஞ்செய்கிற ஆவிப் பகுதியும் அல்ல. (உபாகமம் 4:19; சங்கீதம் 11:4; மத்தேயு 6:9; 18:10) எலியா ஏறிச்சென்ற அந்தப் ‘பரலோகம்’ வளிமண்டலமாகிய ஆகாயத்தைக் குறிக்கிறது. (சங்கீதம் 78:26; மத்தேயு 6:26) அந்த அக்கினி ரதம், வளிமண்டத்தின் வழியே வேகமாக சென்று பூமியில் வேறொரு இடத்திற்கு எலியாவை மாற்றியிருப்பதாகத் தெரிகிறது; அங்கே அவர் சில காலம் வாழ்ந்து வந்தார். சொல்லப்போனால், சில வருடங்களுக்குப் பிறகு யூதாவின் ராஜாவான யோராமுக்கு அவர் கடிதமும் எழுதியிருக்கிறார்.—2 நாளாகமம் 21:1, 12-15.

அக்டோபர் 31–நவம்பர் 6

பைபிளில் இருக்கும் புதையல்கள் | 2 ராஜாக்கள் 3-4

“உன்னுடைய மகனைத் தூக்கிக்கொள்”

w17.12 பக். 4 பாரா 7

“அவன் உயிரோடு வருவான் என்று எனக்குத் தெரியும்”

7 பைபிளில் பதிவு செய்யப்பட்டிருக்கும் இரண்டாவது உயிர்த்தெழுதலை எலிசா தீர்க்கதரிசி செய்தார். சூனேம் ஊரில், ஒரு இஸ்ரவேலப் பெண் வாழ்ந்துவந்தாள். அவளுக்குப் பிள்ளைகளே இல்லை. அவள் எலிசாவை நன்றாக உபசரித்துவந்தாள். அதனால், யெகோவா அவளுக்கும் அவளுடைய வயதான கணவருக்கும் ஒரு மகனைக் கொடுத்து ஆசீர்வதித்தார். ஆனால், சில வருஷங்களுக்குப் பிறகு, அந்தப் பையன் இறந்துவிட்டான். அப்போது அவள் எப்படித் துடிதுடித்துப்போயிருப்பாள்! துக்கம் தாங்க முடியாமல், எலிசாவைப் பார்ப்பதற்காக 30 கிலோமீட்டர் (19 மைல்) தூரத்தில் இருந்த கர்மேல் மலைக்கு அவள் போனாள். அந்தப் பையனை உயிரோடு எழுப்புவதற்காக எலிசா தன்னுடைய ஊழியன் கேயாசியை முதலில் அனுப்பினார். ஆனால், கேயாசியால் அந்தப் பையனை உயிரோடு எழுப்ப முடியவில்லை. பிறகு, எலிசாவைக் கூட்டிக்கொண்டு அந்தப் பெண் தன்னுடைய வீட்டுக்கு வந்துசேர்ந்தாள்.—2 ரா. 4:8-31.

w17.12 பக். 5 பாரா 8

“அவன் உயிரோடு வருவான் என்று எனக்குத் தெரியும்”

8 அவளுடைய வீட்டுக்குள் வைக்கப்பட்டிருந்த அந்தப் பையனின் உடலுக்குப் பக்கத்தில் போய் எலிசா ஜெபம் செய்தார். யெகோவா அந்த ஜெபத்தைக் கேட்டு ஒரு அற்புதத்தைச் செய்தார். அந்தப் பையனை உயிரோடு எழுப்பினார்! மகனை மறுபடியும் உயிரோடு பார்த்தபோது அந்தப் பெண்ணுக்கு எவ்வளவு சந்தோஷமாக இருந்திருக்கும்! (2 ராஜாக்கள் 4:32-37-ஐ வாசியுங்கள்.) அப்போது, அவள் அன்னாளின் ஜெபத்தை நினைத்துப் பார்த்திருக்கலாம். ரொம்பக் காலமாகக் குழந்தை பாக்கியம் இல்லாமல் இருந்த அன்னாளை யெகோவா ஆசீர்வதித்ததால் அவள் சாமுவேலைப் பெற்றெடுத்தாள்; அப்போது அன்னாள் யெகோவாவைப் புகழ்ந்து, “உங்களால் . . . ஒருவரைக் கல்லறைக்கு அனுப்பவும் முடியும், அங்கிருந்து எழுப்பவும் முடியும்” என்று சொன்னாள். (1 சா. 2:6) சூனேமில் இருந்த பையனை யெகோவா நிஜமாகவே உயிரோடு எழுப்பினார்! இப்படி, இறந்தவர்களைத் தன்னால் உயிரோடு எழுப்ப முடியும் என்பதை யெகோவா நிரூபித்தார்.

புதையல்களைத் தோண்டி எடுங்கள்

it-2-E பக். 697 பாரா 2

தீர்க்கதரிசி

“தீர்க்கதரிசிகளின் மகன்கள்.” இந்த வார்த்தைகள் குறிப்பிட்ட ஒரு சமுதாயத்தைச் சேர்ந்தவர்களைக் குறிக்கலாம். அல்லது, ஒருவேளை எலிசா மாதிரியான கண்காணிகளிடமிருந்து பயிற்சி எடுத்துக்கொண்ட தீர்க்கதரிசிகளின் குழுவைக் குறிக்கலாம். அல்லது, அவர்கள் எல்லாரும் ஒன்றுசேர்ந்து வாழ்கிற தீர்க்கதரிசிகளின் சங்கத்தைக் குறிக்கலாம். மக்களிடம் போய் தீர்க்கதரிசனம் சொல்வதற்கான நியமிப்பு அவர்கள் ஒவ்வொருவருக்கும் கிடைத்தது. அவர்களைப் பற்றி பைபிள் சொல்வதை வைத்துப் பார்க்கும்போது அவர்கள் எளிமையாக வாழ்ந்திருக்கிறார்கள் என்று தெரிகிறது.—1ரா 20:35-42; 6:1-7; 9:1, 2; 2ரா 4:38.

    தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்