வாழ்க்கையும் ஊழியமும் கூட்டத்துக்குத் தயாரிக்க தேவையான தகவல்கள்
© 2022 Christian Congregation of Jehovah’s Witnesses
ஜனவரி 2-8
பைபிளில் இருக்கும் புதையல்கள் | 2 ராஜாக்கள் 22-23
“ஏன் மனத்தாழ்மையாக இருக்க வேண்டும்?”
யெகோவாவின் தயவை பெற்ற பணிவான யோசியா
இப்போது ஆலயத்தை பழுதுபார்க்கும் வேலை துவங்குகிறது. வேலையாட்கள் சுறுசுறுப்புடன் பழுது பார்த்துக் கொண்டிருக்கின்றனர். தன் பொல்லாத முன்னோர் பாழாக்கிய ஆலயத்தை இப்போது இந்த வேலையாட்கள் சரிசெய்வதற்காக யோசியா யெகோவாவுக்கு நன்றி தெரிவிக்கிறார். வேலை துரிதமாக நடந்துகொண்டிருக்கும் இந்தச் சமயத்தில், சாப்பான் அவரைப் பார்க்க வருகிறார். அவர் கையில் ஏதோ சுருள் இருப்பதுபோல தெரிகிறதே, அது என்ன? ‘மோசேயைக்கொண்டு கட்டளையிடப்பட்ட கர்த்தருடைய நியாயப்பிரமாணப் புஸ்தகமே’ அது. அதை பிரதான ஆசாரியனாகிய இல்க்கியா ஆலயத்தில் கண்டெடுத்ததாக அவர் சொல்கிறார். (2 நாளாகமம் 34:12-18) இது உண்மையில் நியாயப்பிரமாண சட்டங்களின் மூலப்பிரதி. என்னே ஓர் அருமையான கண்டுபிடிப்பு!
அந்தப் புத்தகத்திலுள்ள ஒவ்வொரு வார்த்தையையும் கேட்க யோசியா ஆவலாக இருக்கிறார். சாப்பான் அதை வாசிக்க வாசிக்க, அதிலுள்ள ஒவ்வொரு சட்டமும் தனக்கும், நாட்டு மக்களுக்கும் எவ்வாறு பொருந்துகிறது என்பதை கூர்ந்து கவனிக்கிறார். அந்தப் புத்தகம் உண்மை வணக்கத்தை முக்கியமாக வலியுறுத்துகிறது, அவருடைய கவனத்தை மேலுமாக ஈர்க்கிறது. மக்கள் பொய் வணக்கத்தில் ஈடுபட்டால் அப்போது அவர்களுக்கு வரும் வாதைகளை அது முன்னறிவிக்கிறது. அவர்கள் நாடுகடத்தப்படுவார்கள் என்பதையும் சொல்கிறது. கடவுளுடைய எல்லா சட்டங்களும் சரியாக செய்யப்படவில்லை என உணர்ந்த யோசியா, தன் வஸ்திரத்தை கிழித்துக்கொண்டு, இல்க்கியா, சாப்பான் மற்றும் அநேகருக்கு இந்தக் கட்டளையை கொடுக்கிறார்: ‘கண்டெடுக்கப்பட்ட இந்தப் புஸ்தகத்தின் வார்த்தைகளைக் குறித்து கர்த்தரிடத்தில் விசாரியுங்கள்; நம்முடைய பிதாக்கள் இந்தப் புஸ்தகத்தின் வார்த்தைகளுக்குச் செவிகொடாதபடியினால், நம்மேல் பற்றியெரிந்த கர்த்தருடைய உக்கிரம் பெரியது.”—2 இராஜாக்கள் 22:11-13; 2 நாளாகமம் 34:19-21.
யெகோவாவின் தயவை பெற்ற பணிவான யோசியா
இப்போது கடவுளுடைய வார்த்தையை விசாரிப்பதற்காக யோசியாவின் தூதுவர்கள் எருசலேமிலிருக்கும் உல்தாள் எனும் தீர்க்கதரிசினியை சந்திக்கச் செல்கின்றனர். உல்தாள் யெகோவாவின் வார்த்தையிலிருந்து வெளிப்படுத்திய செய்தியுடன் அவர்கள் திரும்புகின்றனர். கண்டெடுக்கப்பட்ட புதிய புத்தகத்தில் பதிவுசெய்யப்பட்டிருந்த உபத்திரவங்கள் எல்லாம், பொய் மதத்தில் மூழ்கியிருந்த அந்தத் தேசத்திற்கு நிச்சயம் வரும் என்பதுதான் அந்த செய்தி. ஆனாலும், யோசியா தன்னை யெகோவாவிற்கு முன் தாழ்மை படுத்தியதால், அந்த உபத்திரவங்கள் அவருடைய வாழ்நாட் காலத்தில் வராது. உபத்திரவங்கள் வருமுன்னே அவர் சமாதானத்துடனே பிதாக்களண்டையில் சேர்க்கப்படுவார்.—2 இராஜாக்கள் 22:14-20; 2 நாளாகமம் 34:22-28.
புதையல்களைத் தோண்டி எடுங்கள்
வளர்ப்பு எப்படியிருந்தாலும் வாழ்வில் வெற்றிபெறலாம்
தன் சிறுவயதில் இப்படிப்பட்ட மோசமான சூழ்நிலைமைகளில் வளர்ந்தாலும், யோசியா யெகோவாவுக்குப் பிரியமானதையே செய்ய தொடங்கினார். அவருடைய ஆட்சியில் வெற்றி மேல் வெற்றி வந்து குவிந்ததால், பைபிள் கூறுகிறதாவது: “கர்த்தரிடத்துக்குத் தன் முழு இருதயத்தோடும் தன் முழு ஆத்துமாவோடும் தன் முழு பலத்தோடும் மோசேயின் நியாயப்பிரமாணத்திற்கு ஏற்றபடியெல்லாம் செய்ய மனதைச் சாய்த்தான்; அவனைப் போலொத்த ராஜா அவனுக்குமுன் இருந்ததுமில்லை, அவனுக்குப்பின் எழும்பினதுமில்லை.”—2 இராஜாக்கள் 23:19-25.
மோசமான சூழலில் பிள்ளைப்பருவத்தைக் கழித்தவர்களுக்கு யோசியாவின் முன்மாதிரி எவ்வளவு உற்சாகம் அளிப்பதாய் இருக்கிறது! அவருடைய முன்மாதிரியிலிருந்து நமக்கு என்ன பாடம்? சரியான பாதையைத் தெரிந்துகொள்ளவும் அதில் தொடரவும் யோசியாவுக்கு எது உதவியது?
ஜனவரி 9-15
பைபிளில் இருக்கும் புதையல்கள் | 2 ராஜாக்கள் 24-25
“அவசர உணர்வோடு இருங்கள்”
யெகோவாவின் நியாயத்தீர்ப்பு நாள் சமீபம்!
2 செப்பனியா உரைத்த இந்தத் தீர்க்கதரிசனம், யூதாவிலிருந்து அசுத்தமான வணக்கத்தை நீக்க வேண்டிய அவசியத்தை இளம் யோசியாவுக்கு இன்னும் அதிகமாக உணர்த்தியது என்பதில் சந்தேகமில்லை. ஆனால் தேசத்திலிருந்து பொய் மதத்தை ஒழிக்க ராஜா எடுத்த நடவடிக்கை மக்களிடமிருந்த எல்லா பொல்லாப்பையும் நீக்கிவிடவுமில்லை அல்லது அவருடைய தாத்தா மனாசே ராஜா ‘எருசலேமைக் குற்றமற்ற இரத்தத்தால் நிரப்பிய’ பாவங்களை நிவிர்த்தி செய்யவுமில்லை. (2 இராஜாக்கள் 24:3, 4; 2 நாளாகமம் 34:3) ஆகவே யெகோவாவின் நியாயத்தீர்ப்பு நாள் கட்டாயமாக வரவிருந்தது.
எரேமியா புத்தகத்திலிருந்து சிறப்பு குறிப்புகள்
வருடம் பொ.ச.மு. 607. அது சிதேக்கியா ராஜாவுடைய ஆட்சியின் 11-ஆம் வருடம். பாபிலோன் ராஜாவான நேபுகாத்நேச்சார் கடந்த 18 மாதங்களாக எருசலேமைச் சுற்றி முற்றுகை போட்டிருந்தார். நேபுகாத்நேச்சாருடைய ஆட்சியின் 19-ஆம் வருடம் ஐந்தாம் மாதம் ஏழாம் நாள், காவல் சேனாதிபதியாகிய நெபுசராதான் எருசலேமுக்கு ‘வருகிறார்.’ (2 இராஜாக்கள் 25:8) அவர் ஒருவேளை நகரத்தின் மதில்களுக்கு வெளியேயிருந்த தன்னுடைய கூடாரத்தை விட்டு வெளியே வந்து, சூழ்நிலையைப் பார்த்து நடவடிக்கை எடுப்பதற்குத் திட்டமிடுகிறார். மூன்று நாட்களுக்குப் பிறகு, அந்த மாதத்தின் பத்தாம் நாளில் அவர் எருசலேமுக்கு ‘வருகிறார்’ அதாவது எருசலேமில் நுழைகிறார். ‘நகரத்தைத் தீக்கொளுத்துகிறார்.’—எரேமியா 52:7, 12.
புதையல்களைத் தோண்டி எடுங்கள்
இரண்டு இராஜாக்கள் புத்தகத்திலிருந்து சிறப்பு குறிப்புகள்
24:3, 4. மனாசே குற்றமற்ற இரத்தத்தைச் சிந்தினதால், யூதாவுக்கு ‘மன்னிப்பை அருள [யெகோவா] சித்தமில்லாதிருந்தார்.’ குற்றமற்றவர்களின் இரத்தத்தைக் கடவுள் மதிக்கிறார். குற்றமற்றவர்களின் இரத்தத்தைச் சிந்துவதற்கு காரணமானோரை அழிப்பதன் மூலம் அவர்களை யெகோவா பழிவாங்குவார் என்பதில் நாம் உறுதியோடிருக்கலாம்.—சங்கீதம் 37:9-11; 145:20.
ஜனவரி 16-22
பைபிளில் இருக்கும் புதையல்கள் | 1 நாளாகமம் 1-3
“பைபிள்—கட்டுக்கதை அல்ல, நிஜம்”
w09-E 9/1 பக். 14 பாரா 1
ஆதாம் ஏவாள்—உண்மையிலேயே வாழ்ந்தார்களா?
1 நாளாகமம் 1-9 அதிகாரங்களிலும் லூக்கா 3-வது அதிகாரத்திலும் இருக்கும் வம்சாவளிப் பட்டியல்களில் 48 அல்லது 75 தலைமுறைகளைப் பற்றிச் சொல்லப்பட்டிருக்கிறது. லூக்கா புத்தகத்தில் இருக்கிற பட்டியல் இயேசு வந்த வம்சாவளியைப் பற்றிச் சொல்கிறது. 1 நாளாகமம் புத்தகத்தில் இருக்கிற பட்டியல் இஸ்ரவேல் தேசத்தின் ராஜாக்கள் மற்றும் குருமார்களுடைய வம்சாவளியைப் பற்றிச் சொல்கிறது. இந்த இரண்டு பட்டியல்களிலுமே, பிரபலமாக இருந்த சாலொமோன், தாவீது, யாக்கோபு, ஈசாக்கு, ஆபிரகாம், நோவா மற்றும் ஆதாமுடைய பெயர்கள் இருக்கின்றன. இந்த இரண்டு பட்டியல்களிலும் இருக்கிறவர்கள் நிஜமாகவே வாழ்ந்தவர்கள். அப்படியென்றால் இந்த இரண்டு பட்டியல்களிலுமே சொல்லப்பட்டிருக்கிற முதல் மனிதன் ஆதாமும் நிஜமாகவே வாழ்ந்தவன்தான்.
நோவா காலத்து பெருவெள்ளம் கற்பனையல்ல, நிஜம்
நோவா நிஜமாகவே வாழ்ந்தவர் என்று பைபிளிலுள்ள இரண்டு வம்சாவளி பட்டியல் காட்டுகின்றன. (1 நாளாகமம் 1:4; லூக்கா 3:36) இந்தப் பட்டியலைத் தயாரித்த எஸ்றா, லூக்கா ஆகிய இரண்டு பேருமே கவனமாக ஆராய்ச்சி செய்தவர்கள். இயேசு கிறிஸ்து நோவாவுடைய வம்சத்திலிருந்து வந்தார் என்று லூக்கா ஆராய்ந்து எழுதியிருக்கிறார்.
w09-E 9/1 பக். 14-15
ஆதாம் ஏவாள்—உண்மையிலேயே வாழ்ந்தார்களா?
சர்ச்சுக்குப் போகிற நிறைய பேர் முக்கியமாக நினைக்கிற ஒரு போதனைதான் மீட்புவிலை. மக்களைப் பாவத்திலிருந்து மீட்பதற்காக இயேசு கிறிஸ்து பரிபூரணமான தன் உயிரைக் கொடுத்ததாக இந்தப் போதனை சொல்கிறது. (மத்தேயு 20:28; யோவான் 3:16) மீட்புவிலை என்றால் என்ன? ஒரு நபரையோ பொருளையோ மீட்பதற்காகக் கொடுக்கப்படும் தொகைதான் மீட்புவிலை. இந்தத் தொகை அந்த நபருடைய அல்லது பொருளுடைய மதிப்புக்குச் சரிசமமாக இருக்க வேண்டும். அதனால்தான் இயேசுவை “சரிசமமான மீட்புவிலை” என்று பைபிள் சொல்கிறது. (1 தீமோத்தேயு 2:6) அவருடைய மீட்புவிலை எதனோடு சரிசமமாக இருக்கிறது? “ஆதாமினால் எல்லாரும் சாகிறதுபோல், கிறிஸ்துவினால் எல்லாரும் உயிரோடு எழுப்பப்படுவார்கள்” என்று பைபிள் சொல்கிறது. (1 கொரிந்தியர் 15:22) இயேசு கொடுத்த பரிபூரணமான உயிர், ஆதாம் கொடுத்த பரிபூரணமான உயிருக்குச் சரிசமமாக இருந்தது. (ரோமர் 5:12) அப்படியென்றால் ஒரு விஷயம் தெளிவாகத் தெரிகிறது. ஆதாம் என்ற ஒருவன் உண்மையிலேயே வாழவில்லை என்றால் கிறிஸ்து கொடுத்த மீட்புவிலைக்கு அர்த்தமே இல்லாமல் போயிருக்கும்.
புதையல்களைத் தோண்டி எடுங்கள்
it-1-E பக். 911 பாரா. 3-4
வம்சாவளி
பெண்களின் பெயர்கள். முக்கியமான சரித்திர சம்பவங்களோடு சம்பந்தப்பட்ட பெண்களுடைய பெயர்கள் வம்சாவளிப் பதிவுகளில் இருக்கின்றன. உதாரணத்துக்கு, ஆதியாகமம் 11:29, 30-ல் சாராய் (சாராள்) பற்றிச் சொல்லப்பட்டிருக்கிறது. ஏனென்றால், வாக்குக் கொடுக்கப்பட்ட சந்ததி, ஆபிரகாமின் மற்ற மனைவிகள் மூலம் அல்ல, சாராய் மூலமாக வரவேண்டியிருந்தது. அதே வசனங்களில் மில்காளுடைய பெயர் வந்ததற்கு காரணம், அவள் ஈசாக்கின் மனைவி ரெபெக்காளுடைய பாட்டி. ரெபெக்காளும் ஆபிரகாமும் சொந்தக்காரர்கள்தான் என்பதை இதிலிருந்து புரிந்துகொள்கிறோம். இதில் என்ன விசேஷம் என்று நீங்கள் யோசிக்கலாம். ஈசாக்கு மற்ற தேசத்து பெண்களைக் கல்யாணம் செய்யாமல் சொந்தத்துக்குள்தான் கல்யாணம் செய்ய வேண்டியிருந்தது. அதைத்தான் அவர் செய்தார் என்று இந்தப் பதிவிலிருந்து தெரிந்துகொள்கிறோம். (ஆதி 22:20-23; 24:2-4) ஆதியாகமம் 25:1-ல் ஆபிரகாம் கேத்தூராள் என்ற பெண்ணைக் கல்யாணம் செய்ததாகச் சொல்லப்பட்டிருக்கிறது. சாராள் இறந்த பிறகு ஆபிரகாம் இன்னொரு கல்யாணம் செய்துகொண்டார் என்பது இதிலிருந்து தெரிகிறது. அதுமட்டுமல்ல, பிள்ளையைப் பெற்றெடுக்கும் சக்தியை ஆபிரகாமுக்கு யெகோவா அற்புதமாகக் கொடுத்து 40 வருஷங்களுக்குப் பிறகும் அவருக்கு அந்தச் சக்தி இருந்திருக்கிறது என்பது தெரிகிறது. (ரோ 4:19) அடுத்த சில வசனங்களிலிருந்து கேத்தூராள் மூலமாகத்தான் மீதியானியர்களும் மற்ற சில அரேபிய இனத்தாரும் வந்திருக்கிறார்கள் என்று தெரிகிறது. இதிலிருந்து இஸ்ரவேலர்களும் அவர்களும் சொந்தக்காரர்கள் என்பதைத் தெரிந்துகொள்கிறோம்.
லேயாள், ராகேல், மற்றும் யாக்கோபுடைய மறுமனைவிகளின் பெயர்களோடு சேர்த்து அவர்கள் பெற்றெடுத்த மகன்களுடைய பெயர்களும் வம்சாவளிப் பதிவுகளில் இருக்கின்றன. (ஆதி 35:21-26) அந்த மகன்களிடம் யெகோவா நடந்துகொண்ட விதத்தைப் புரிந்துகொள்ள அவை நமக்கு உதவி செய்கின்றன. பெண்களுடைய பெயர் வம்சாவளி பதிவுகளில் வந்ததற்கு இன்னொரு காரணம், குடும்ப சொத்து அவர்களுடைய குடும்பத்தைவிட்டு வெளியே போகவில்லை என்பதைக் காட்டுவதற்காகத்தான். (எண் 26:33) தாமார், ராகாப் மற்றும் ரூத்தின் பெயர்கள்கூட வம்சாவளி பதவிகளில் வந்திருக்கின்றன. இவர்கள் ஒவ்வொருவரும் மேசியாவுடைய மூதாதையாக ஆகும் அளவுக்கு விசேஷமாக ஏதோவொன்றைச் செய்திருந்தார்கள்.—ஆதி 38; ரூ 1:3-5; 4:13-15; மத் 1:1-5.
ஜனவரி 23-29
பைபிளில் இருக்கும் புதையல்கள் | 1 நாளாகமம் 4-6
“நான் செய்யும் ஜெபங்கள் என்னைப் பற்றி என்ன சொல்கின்றன?”
‘ஜெபத்தைக் கேட்கிறவர்’
யாபேஸ் பயபக்தியோடு அடிக்கடி ஜெபம் செய்பவர். அவர் தன் ஜெபத்தின் ஆரம்பத்தில் கடவுளுடைய ஆசிக்காகக் கெஞ்சிக் கேட்டார். பிறகு மூன்று வேண்டுகோள்களை முன்வைத்தார்; அவருக்கு எவ்வளவு விசுவாசம் இருந்தது என்பதை இந்த வேண்டுகோள்கள் படம்பிடித்துக் காட்டுகின்றன.
முதலில், ‘என் எல்லையைப் பெரிதாக்கும்’ என்று சொல்லி கடவுளிடம் யாபேஸ் மன்றாடினார். (வசனம் 10) மக்கள் மத்தியில் கௌரவமாய் இருந்த யாபேஸ் மற்றவர்களுடைய நிலத்தை அபகரிப்பவரும் அல்ல, அதன்மேல் ஆசைப்படுபவரும் அல்ல. அதனால், நிலத்திற்காக அவர் மன்றாடியிருக்க மாட்டார், மக்கள்மீது இருந்த அக்கறையினால்தான் அப்படி மன்றாடியிருப்பார். தன் பிராந்தியத்தை பெரிதாக்கினால் அங்கு குடியிருக்கும் பெரும்பாலான மக்களுக்கு உண்மைக் கடவுளை வழிபட தன்னால் உதவ முடியும் என்ற எண்ணத்தில் அவர் அப்படி ஜெபித்திருப்பார்.
இரண்டாவதாக, கடவுளுடைய “கரம்” தன்னோடு இருக்கும்படி வேண்டினார். கடவுளுடைய கரம் என்பது அவருடைய சக்தியைக் குறிக்கிறது; தம்மை வழிபடுவோருக்கு உதவ இதைப் பயன்படுத்துகிறார். (1 நாளாகமம் 29:12) யாபேஸ் தன் மனதின் வேண்டுதலைப் பெற கடவுளையே நோக்கியிருந்தார்; ஏனென்றால், அவர்மீது விசுவாசம் வைக்கிறவர்களுக்கு உதவுவதில் அவருடைய கரம் குறுகியதல்ல.—ஏசாயா 59:1.
மூன்றாவதாக, “தீங்கு என்னைத் துக்கப்படுத்தாதபடிக்கு அதற்கு என்னை விலக்கிக் காத்தருளும்” என்று யாபேஸ் ஜெபித்தார். “தீங்கு என்னைத் துக்கப்படுத்தாதபடிக்கு” என்று சொன்னபோது, தனக்கு எந்தத் தீங்கும் வரக்கூடாது என்று கேட்கவில்லை; மாறாக, துக்கத்தில் மூழ்கிவிடாதபடி அல்லது தீங்கினால் உண்டாகும் விளைவுகள் தன்னை நிலைகுலையச் செய்யாதபடி காத்தருளும் என்றே ஜெபித்தார்.
யாபேசின் ஜெபத்திலிருந்து நாம் என்ன தெரிந்துகொள்கிறோம்? உண்மை வழிபாட்டின் மீது அவருக்கு ஆர்வம் இருந்ததை... ஜெபத்தைக் கேட்கிறவர் மீது நம்பிக்கை இருந்ததை... தெரிந்துகொள்கிறோம். அவருடைய ஜெபத்திற்கு யெகோவா எப்படிப் பதிலளித்தார்? ‘அவர் வேண்டிக்கொண்டதைத் தேவன் அருளினார்’ என்ற வார்த்தைகளுடன் இந்தச் சுருக்கமான பதிவு முடிவடைகிறது.
புதையல்களைத் தோண்டி எடுங்கள்
ஒன்று நாளாகம புத்தகத்திலிருந்து சிறப்பு குறிப்புகள்
5:10, 18-22. சவுல் ராஜாவின் காலத்தில், யோர்தானுக்குக் கிழக்கேயிருந்த கோத்திரத்தார், எண்ணிக்கையில் இருமடங்குக்கும் அதிகமாக இருந்த ஆகாரியரை முறியடித்தார்கள். இதற்குக் காரணம், இந்தக் கோத்திரத்திலிருந்த பராக்கிரமசாலிகள் யெகோவாமீது நம்பிக்கை வைத்ததும், அவரது உதவியை நாடியதுமே ஆகும். அப்படியானால், சமாளிக்க முடியாத எதிரிகளோடு ஆன்மீகப் போர் தொடுக்கையில் நாமும் யெகோவாமீது முழு நம்பிக்கை வைப்போமாக.—எபேசியர் 6:10-17.
ஜனவரி 30–பிப்ரவரி 5
பைபிளில் இருக்கும் புதையல்கள் | 1 நாளாகமம் 7-9
“யெகோவாவின் உதவியோடு கஷ்டமான பொறுப்புகளைக்கூட உங்களால் செய்ய முடியும்”
ஒன்று நாளாகம புத்தகத்திலிருந்து சிறப்பு குறிப்புகள்
9:26, 27. லேவிய வாயிற்காவலர்களிடம் மிகப் பெரிய பொறுப்பு ஒப்படைக்கப்பட்டிருந்தது. ஆலயத்தின் பரிசுத்தமான பகுதிகளுக்குச் செல்லும் வாயிலின் திறவுகோல் அவர்களிடம் கொடுக்கப்பட்டிருந்தது. ஒவ்வொரு நாளும் கதவுகளைத் திறந்து வைப்பதில் உண்மையுள்ளவர்களாய் இருந்தார்கள். நம் பிராந்தியத்தில் உள்ள மக்களைச் சந்தித்து அவர்கள் யெகோவாவை வணங்குபவர்களாக ஆவதற்கு உதவிசெய்யும் பொறுப்பு நம்மிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. லேவிய வாயிற்காவலர்களைப் போல நாமும் நம்பகமானவர்களாக இருக்க வேண்டும், அல்லவா?
பினெகாஸ் போல சவால்களைச் சந்திப்பீர்களா?
பினெகாஸுக்குப் பூர்வ இஸ்ரவேலில் மிகப் பெரிய பொறுப்புகள் இருந்தன; என்றாலும், தைரியத்துடன்... விவேகத்துடன்... யெகோவாமீது நம்பிக்கையுடன்... செயல்பட்டதால் சவால்களை அவரால் வெற்றிகரமாய்ச் சந்திக்க முடிந்தது. கடவுளுடைய சபையை பினெகாஸ் கண்ணும் கருத்துமாய்க் கவனித்து வந்ததால் யெகோவாவின் அங்கீகாரத்தைப் பெற்றார். சுமார் 1,000 ஆண்டுகளுக்குப்பின், கடவுளுடைய சக்தியால் தூண்டப்பட்டு எஸ்றா இவ்வாறு எழுதினார்: “எலெயாசாரின் குமாரனாகிய பினெகாஸ் அவர்கள்மீது தலைவராய் இருந்தார்; யெகோவா அவரோடு இருந்தார்.” (1 நா. 9:20, NW) இன்றைக்குக் கடவுளுடைய மக்களை வழிநடத்துகிற அனைவரோடும், சொல்லப்போனால் உண்மையோடு அவருக்குச் சேவை செய்கிற கிறிஸ்தவர்கள் அனைவரோடும் யெகோவா இருப்பாராக.
புதையல்களைத் தோண்டி எடுங்கள்
யெகோவாவைப் புகழ்ந்து பாடுங்கள்!
6 ஆம், பாடல்களைப் பாடித் தம்மைத் துதிக்கும்படி தீர்க்கதரிசிகள் மூலம் யெகோவா தம் ஊழியர்களுக்குச் சொன்னார். ஆசாரிய கோத்திரத்தைச் சேர்ந்த பாடகர்கள் மற்ற லேவியர் செய்த வேலையிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டிருந்தார்கள்; இதனால் பாடல்களை இயற்றுவதற்கும் ஒத்திகை பார்ப்பதற்கும் அவர்களுக்குப் போதுமான நேரம் இருந்திருக்கும்.—1 நா. 9:33.
பிப்ரவரி 6-12
பைபிளில் இருக்கும் புதையல்கள் | 1 நாளாகமம் 10-12
“கடவுளுடைய விருப்பத்தைச் செய்யவே எப்போதும் ஆசைப்படுங்கள்”
‘உம் சித்தத்தைச் செய்ய எனக்குப் போதித்தருளும்’
12 தாவீது திருச்சட்ட நியமங்களை நன்கு புரிந்திருந்தார், அவற்றின்படி வாழவும் விரும்பினார்; இவ்விஷயங்களிலும் தாவீது நமக்கு முன்மாதிரி! உதாரணத்திற்கு, ‘பெத்லகேமிலிருந்த கிணற்றின் தண்ணீரைக் குடிப்பதற்கான’ தன் ஆசையை அவர் ஒருநாள் வெளிப்படுத்தினார். அச்சமயத்தில் பெத்லகேம் பெலிஸ்தரின் கைவசம் இருந்தது. என்றபோதிலும், தாவீதின் ஆட்களில் மூன்று பேர் துணிந்துபோய் அந்தக் கிணற்றிலிருந்து தண்ணீர் கொண்டுவந்தார்கள். ஆனால், ‘தாவீது அதைக் குடிக்க மனதில்லாமல் அதை யெகோவாவுக்கென்று ஊற்றிப்போட்டார்.’ ஏன்? காரணத்தை அவரே சொன்னார்: ‘நான் இதைச் செய்யாதபடிக்கு, என் தேவன் என்னைக் காத்துக்கொள்ளக்கடவர்; தங்கள் பிராணனை எண்ணாமல் போய் அதைக் கொண்டுவந்த இந்த மனுஷரின் இரத்தத்தைக் குடிப்பேனோ . . . அதைக் குடிக்க மாட்டேன்.’—1 நா. 11:15-19.
13 இரத்தத்தைத் தரையிலே யெகோவாவுக்கென்று ஊற்றிவிட வேண்டும், அதைச் சாப்பிடக் கூடாது என்று திருச்சட்டம் சொன்னதை தாவீது அறிந்திருந்தார். அதற்கான காரணத்தையும் அறிந்திருந்தார். ஆம், “மாம்சத்தின் உயிர் இரத்தத்தில் இருக்கிறது” என்பதை அவர் அறிந்திருந்தார். ஆனால் அது தண்ணீர்தானே, இரத்தம் இல்லையே. பிறகு ஏன் அதைக் குடிக்க மறுத்தார்? அந்தச் சட்டத்தில் பொதிந்துள்ள நியமத்தை அவர் நன்கு புரிந்திருந்தார். அந்த மூன்று ஆட்களுடைய விலைமதிப்பில்லா இரத்தத்திற்குச் சமமாக அந்தத் தண்ணீரை அவர் பார்த்தார். அதனால்தான், அதைக் குடிப்பது பற்றி அவரால் நினைத்துக்கூட பார்க்க முடியவில்லை. அதைத் தரையிலே ஊற்றிப்போட்டார்.—லேவி. 17:11; உபா. 12:23, 24.
கடவுளுடைய சட்டங்களும் நியமங்களும் உங்கள் மனசாட்சியைப் பயிற்றுவிக்கட்டும்!
5 கடவுளுடைய சட்டங்கள் நமக்கு உதவ வேண்டுமென்றால், அவற்றை வெறுமனே படித்தாலோ அவற்றைத் தெரிந்துவைத்திருந்தாலோ மட்டும் போதாது. அவற்றை நாம் நேசிக்க வேண்டும், மதிக்க வேண்டும். “கெட்டதை வெறுத்துவிடுங்கள், நல்லதை நேசியுங்கள்” என்று பைபிள் சொல்கிறது. (ஆமோ. 5:15) இதை எப்படிச் செய்வது? யெகோவா ஒரு விஷயத்தை எப்படிப் பார்க்கிறாரோ அதேபோல் நாமும் பார்க்கக் கற்றுக்கொள்ள வேண்டும். இதைக் கொஞ்சம் யோசித்துப்பாருங்கள்: உங்களுக்குத் தூக்கம் சரியாக வருவதில்லை என்று வைத்துக்கொள்வோம். அதற்காக டாக்டரிடம் போகிறீர்கள். நீங்கள் சத்தான உணவைச் சாப்பிட வேண்டுமென்றும், இன்னும் கொஞ்சம் உடற்பயிற்சி செய்ய வேண்டுமென்றும், வாழ்க்கையில் சில மாற்றங்களைச் செய்ய வேண்டுமென்றும் அவர் சொல்கிறார். நீங்களும் அதன்படி செய்கிறீர்கள். அப்போது நல்ல பலன்கள் கிடைக்கின்றன. இப்போது அந்த டாக்டரின் அறிவுரையைப் பற்றி நீங்கள் எப்படி உணர்வீர்கள்?
6 அதேபோல், பாவத்தால் வரும் மோசமான விளைவுகளிலிருந்து நம்மைப் பாதுகாக்கவும், நம் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தவும் கடவுள் நமக்குச் சட்டங்களைக் கொடுத்திருக்கிறார். உதாரணத்துக்கு, பொய் சொல்வதை... ஏமாற்றுவதை... ஒழுக்கக்கேட்டில் ஈடுபடுவதை... வன்முறையில் இறங்குவதை... அல்லது பேய்களோடு சம்பந்தப்பட்ட விஷயங்களில் ஈடுபடுவதை... தவிர்க்க வேண்டுமென்று பைபிள் கற்பிக்கிறது. (நீதிமொழிகள் 6:16-19-ஐ வாசியுங்கள்; வெளி. 21:8) பைபிள் கற்பிக்கிறபடி நடந்துகொள்ளும்போது, அதாவது யெகோவாவுக்குக் கீழ்ப்படியும்போது, நமக்கு அருமையான பலன்கள் கிடைக்கின்றன. அந்தப் பலன்களை அனுபவிக்கும்போது, அவர்மீதும் அவருடைய சட்டங்கள்மீதும் நமக்கு அன்பு அதிகமாகிறது.
புதையல்களைத் தோண்டி எடுங்கள்
it-1-E பக். 1058 பாரா. 5-6
இதயம்
“முழு இதயத்தோடு” சேவை செய்வது. சிலர் இரண்டு எஜமான்களுக்குச் சேவை செய்ய முயற்சி செய்யலாம். இல்லையென்றால், மனதில் ஒன்றை வைத்துக்கொண்டும் வெளியே ஒன்றைச் சொல்லிக்கொண்டும் மற்றவர்களை ஏமாற்றலாம். இப்படிப்பட்டவர்களுக்கு ‘இரண்டு இதயம்’ இருப்பதாக பைபிள் சொல்கிறது. அதாவது, அவர்களுடைய இதயம் இரண்டுபட்டிருப்பதாகச் சொல்கிறது. (1நா 12:33, அடிக்குறிப்பு; சங் 12:2) இப்படிப்பட்ட வெளிவேஷத்தை இயேசு கடுமையாகக் கண்டனம் செய்தார்.—மத் 15:7, 8.
நாம் கடவுளைச் சந்தோஷப்படுத்த வேண்டும் என்றால், இரண்டுபட்ட இதயத்தோடு அல்ல, முழு இதயத்தோடு அவருக்குச் சேவை செய்ய வேண்டும். (1நா 28:9) இதற்கு நாம் நிறைய முயற்சி செய்ய வேண்டியிருக்கிறது. ஏனென்றால், இதயம் “நயவஞ்சகமானது.” அது ‘கெட்ட காரியங்கள் பக்கமாகச் சாய்கிறது.’ (எரே 17:9, 10; ஆதி 8:21, அடிக்குறிப்பு) முழு இதயத்தோடு யெகோவாவுக்குத் தொடர்ந்து சேவை செய்ய நமக்கு எவையெல்லாம் உதவி செய்யும்? உருக்கமாக ஜெபம் செய்வதும் (சங் 119:145; புல 3:41), தவறாமல் பைபிளைப் படிப்பதும் (எஸ்றா 7:10; நீதி 15:28), மும்முரமாக ஊழியம் செய்வதும் (எரே 20:9-ஐ ஒப்பிடுங்கள்), முழு இதயத்தோடு யெகோவாவுக்குச் சேவை செய்கிறவர்களோடு பழகுவதும் (2ரா 10:15, 16-ஐ ஒப்பிடுங்கள்) உதவி செய்யும்.
பிப்ரவரி 13-19
பைபிளில் இருக்கும் புதையல்கள் | 1 நாளாகமம் 13-16
“வழிநடத்துதலின்படி நடந்தால் வெற்றி நிச்சயம்”
“யெகோவா எங்கே?” என்று நீங்கள் கேட்கிறீர்களா?
12 உடன்படிக்கைப் பெட்டி இஸ்ரவேலரிடம் திருப்பி கொடுக்கப்பட்டு கீரியாத்யாரீமில் பல வருடங்கள் வைக்கப்பட்டிருந்த பிறகு அதை எருசலேமிற்கு எடுத்துச் செல்ல தாவீது ராஜா விரும்பினார். அவர் ஜனங்களின் தலைவர்களோடு ஆலோசனை பண்ணி, ‘அவர்களுக்கு சம்மதமும் யெகோவாவுக்கு சித்தமும் இருந்தால்’ உடன்படிக்கைப் பெட்டியை அங்கிருந்து எடுத்துச் செல்லலாம் என்று கூறினார். இதைப் பற்றிய யெகோவாவின் சித்தத்தை அறிந்துகொள்ள தாவீது போதியளவு ஆராயவில்லை. அப்படி செய்திருந்தால், உடன்படிக்கைப் பெட்டியை வண்டியில் ஏற்றியிருக்கவே மாட்டார்கள். கடவுள் தெளிவாக கூறியிருந்தபடி, கோகாத்திய லேவியர்கள் அதை தங்கள் தோள்களில் சுமந்து சென்றிருப்பார்கள். தாவீது அடிக்கடி யெகோவாவிடம் விசாரித்தபோதிலும் இந்த சந்தர்ப்பத்தில் சரியான விதத்தில் விசாரிக்க தவறினார். அதன் விளைவு படுமோசமாக இருந்தது. “நாம் நம்முடைய தேவனாகிய கர்த்தரை நியாயமானபடியே தேடாதேபோனபடியினாலும், அவர் நமக்குள்ளே அடி விழப்பண்ணினார்” என தாவீதே பின்னர் ஒப்புக்கொண்டார்.—1 நாளாகமம் 13:1-3; 15:11-13; எண்ணாகமம் 4:4-6, 15; 7:1-9.
“யெகோவா எங்கே?” என்று நீங்கள் கேட்கிறீர்களா?
13 ஒருவழியாக, லேவியர்கள் உடன்படிக்கைப் பெட்டியை ஓபேத்ஏதோமின் வீட்டிலிருந்து எருசலேமிற்கு சுமந்து வந்தபோது தாவீது இயற்றிய ஒரு பாடலை பாடினார்கள். “கர்த்தரையும் அவர் வல்லமையையும் நாடுங்கள்; அவர் சமுகத்தை நித்தமும் தேடுங்கள். அவர் செய்த அதிசயங்களையும் அவருடைய அற்புதங்களையும், அவர் வாக்கின் நியாயத்தீர்ப்புகளையும் நினைவுகூருங்கள்” என்ற உருக்கமான நினைப்பூட்டுதலும் அதில் அடங்கியிருந்தது.—1 நாளாகமம் 16:11, 13.
புதையல்களைத் தோண்டி எடுங்கள்
நித்திய ராஜாவான யெகோவாவை வழிபடுங்கள்
14 தாவீது, பரிசுத்தமான ஒப்பந்தப் பெட்டியை எருசலேமுக்குக் கொண்டுவந்த சமயத்தில், லேவியர்கள் யெகோவாவைத் துதித்துப் பாடினார்கள். “‘யெகோவா ராஜாவானார்’ என்று எல்லாத் தேசங்களிலும் அறிவிக்கப்படுவதாக” என்ற முக்கியமான குறிப்பு அந்தப் பாடலில் இடம்பெற்றிருந்தது. (1 நா. 16:31, NW) ‘யெகோவா நித்திய ராஜாவாக இருக்கிற அதே சமயத்தில் எப்படி ராஜாவாக ஆக முடியும்?’ என்று ஒருவர் நினைக்கலாம். யெகோவா தம் அதிகாரத்தைப் பயன்படுத்தும்போது அல்லது தமக்குப் பிரதிநிதியாக ஒருவரை நியமிக்கும்போது ராஜாவாக ஆகிறார். இதைத் தெளிவாகப் புரிந்துகொள்வதற்கு தாவீதிடம் யெகோவா சொன்னதைக் கவனியுங்கள். தாவீது மரிப்பதற்கு முன்பே அவருடைய அரசாட்சி என்றென்றைக்கும் நிலைக்குமென யெகோவா அவருக்கு வாக்கு கொடுத்தார். “நான் உனக்குப் பின்பு உன் கர்ப்பப்பிறப்பாகிய உன் சந்ததியை எழும்பப்பண்ணி, அவன் ராஜ்யத்தை நிலைப்படுத்துவேன்” என்று சொன்னார். (2 சா. 7:12, 13) அந்த “சந்ததி” 1,000-க்கும் அதிகமான வருடங்களுக்குப் பின் தோன்றியபோது, யெகோவா கொடுத்த வாக்கு நிறைவேறியது. அந்த ராஜா யார், அவர் எப்போது ராஜாவானார்?
பிப்ரவரி 20-26
பைபிளில் இருக்கும் புதையல்கள் | 1 நாளாகமம் 17-19
“ஆசை கைகூடவில்லை என்றாலும் சந்தோஷத்தை விட்டுவிடாதீர்கள்”
யெகோவாவின் அமைப்புக்கு நன்றியுள்ளவர்களாய் இருப்போமாக!
எபிரெய வேதாகமம் குறிப்பிடுகிற முக்கியமான ஆட்களில் பூர்வ இஸ்ரவேலைச் சேர்ந்த தாவீதும் ஒருவர். மேய்ப்பராகவும் இசைக் கலைஞராகவும் தீர்க்கதரிசியாகவும், அரசராகவும் இருந்த தாவீது, யெகோவாவில் அசைக்க முடியாத நம்பிக்கை வைத்திருந்தார். அதுமட்டுமல்ல, யெகோவாவோடு நெருக்கமான பந்தத்தையும் கொண்டிருந்தார். அதனால், கடவுளுக்காக ஒரு வீட்டைக் கட்ட ஆசைப்பட்டார். அந்த வீடு, அதாவது ஆலயம் இஸ்ரவேலில் மெய் வணக்கத்திற்கு மையமாக இருக்கவிருந்தது. ஆலயமும் அதில் நடக்கும் வேலைகளும் கடவுளுடைய மக்களுக்கு சந்தோஷத்தையும் ஆசீர்வாதத்தையும் அளிக்கும் என்பதை தாவீது அறிந்திருந்தார். எனவே, தாவீது இவ்வாறு பாடினார்: “உம்முடைய பிராகாரங்களில் வாசமாயிருக்கும்படி நீர் [யெகோவா] தெரிந்துகொண்டு சேர்த்துக்கொள்ளுகிறவன் பாக்கியவான்; உம்முடைய பரிசுத்த ஆலயமாகிய உமது வீட்டின் நன்மையால் திருப்தியாவோம்.”—சங்கீதம் 65:4.
இப்போது இருக்கும் பொறுப்புகளைச் சந்தோஷமாக செய்யுங்கள்
11 யெகோவாவின் சேவையில் நீங்கள் எந்த வேலையைச் செய்தாலும் அதில் மூழ்கிவிடுங்கள். அப்போது உங்களுக்குச் சந்தோஷம் கிடைக்கும். பிரசங்க வேலையை “முழுமூச்சோடு” செய்யுங்கள், சபை வேலைகளையும் சுறுசுறுப்பாகச் செய்யுங்கள். (அப். 18:5; எபி. 10:24, 25) நன்றாகத் தயாரித்துவிட்டு கூட்டத்துக்குப் போங்கள். மற்றவர்களை உற்சாகப்படுத்துகிற பதில்களைச் சொல்லுங்கள். வார நாட்களில் நடக்கிற கூட்டங்களில், உங்களுக்கு மாணவர் நியமிப்பு கிடைத்தால் அதை லேசாக எடுத்துக்கொள்ளாதீர்கள். சபையில் ஏதாவது வேலையைச் செய்யச் சொல்லி உங்களிடம் சொன்னால் அதை நேரத்துக்குள் செய்யுங்கள். மற்றவர்களுடைய நம்பிக்கையைச் சம்பாதியுங்கள். எந்த நியமிப்பையுமே, ‘இது ஒன்னும் அவ்வளவு முக்கியம் இல்ல. இதுக்கெல்லாம் இவ்வளவு நேரம் செலவு பண்ண வேண்டியது இல்ல’ என்று நினைக்காதீர்கள். உங்களுடைய திறமைகளை மெருகேற்றிக்கொண்டே இருங்கள். (நீதி. 22:29) யெகோவாவின் சேவையில் உங்களுக்கு இருக்கிற வேலைகளையும் நியமிப்புகளையும் முழுமூச்சோடு செய்யுங்கள். இதையெல்லாம் நீங்கள் எந்தளவுக்கு நன்றாகச் செய்கிறீர்களோ அந்தளவுக்குச் சீக்கிரம் முன்னேறுவீர்கள், உங்கள் சந்தோஷமும் அதிகமாகும். (கலா. 6:4) இப்படிச் செய்தால், மற்றவர்களுக்குப் பொறுப்பு கிடைக்கும்போது, அதைப் பார்த்து நீங்கள் சந்தோஷப்படுவீர்கள்.—ரோ. 12:15; கலா. 5:26.
புதையல்களைத் தோண்டி எடுங்கள்
w20.02 பக். 12, பெட்டி
யெகோவா அப்பாமேல் நாம் உயிரையே வைத்திருக்கிறோம்!
யெகோவா என்னை கவனிக்கிறாரா?
‘கோடிக்கணக்கான ஜனங்க இருக்குற இந்த பூமியில யெகோவா என்னை போய் கவனிப்பாரா’ என்று யோசித்திருக்கிறீர்களா? இதேபோல் நிறைய பேர் யோசித்திருக்கிறார்கள். உதாரணத்துக்கு, “யெகோவாவே, அற்ப மனுஷனை நீங்கள் கண்ணெடுத்துப் பார்ப்பதற்கும், அவனைக் கவனிப்பதற்கும் அவன் யார்?” என்று தாவீது ராஜா கேட்டார். (சங். 144:3) யெகோவாவுக்குத் தன்னைப் பற்றி நன்றாகத் தெரியும் என்பதில் தாவீது உறுதியாக இருந்தார். (1 நா. 17:16-18) அதேபோல், நீங்கள் யெகோவாமேல் வைத்திருக்கிற அன்பை அவர் கவனிக்கிறார் என்ற உறுதியை பைபிள் மற்றும் அமைப்பு மூலம் தருகிறார். இதை நீங்கள் நம்பலாமா? இதோ, சில அத்தாட்சிகள்:
• நீங்கள் பிறப்பதற்கு முன்பே யெகோவா உங்களை கவனித்திருக்கிறார்.—சங். 139:16.
• உங்களுடைய யோசனைகளைப் பற்றியும் உணர்ச்சிகளைப் பற்றியும் யெகோவாவுக்கு நன்றாகத் தெரியும்.—1 நா. 28:9.
• யெகோவா உங்கள் ஒவ்வொருவருடைய ஜெபங்களையும் கேட்கிறார்.—சங். 65:2.
• உங்கள் செயல்கள் யெகோவாவைச் சந்தோஷப்படுத்தலாம் அல்லது துக்கப்படுத்தலாம்.—நீதி. 27:11.
• தன்னிடம் யெகோவா உங்களை ஈர்த்திருக்கிறார்.—யோவா. 6:44.
• நீங்கள் இறந்துவிட்டாலும், உங்களை மறுபடியும் உயிரோடு கொண்டுவருமளவுக்கு அவருக்கு உங்களைப் பற்றி நன்றாகத் தெரியும். அந்தச் சமயத்தில், புதிய உடலையும் மனதையும் உங்களுக்குக் கொடுப்பார்! உங்கள் நினைவுகளையும் சுபாவத்தையும் அப்படியே திரும்பத் தருவார்.—யோவா. 11:21-26, 39-44; அப். 24:15.
பிப்ரவரி 27–மார்ச் 5
பைபிளில் இருக்கும் புதையல்கள் | 1 நாளாகமம் 20-22
“யெகோவாவின் சேவையை நல்லபடியாகச் செய்ய இளைஞர்களுக்கு உதவுங்கள்”
“[இந்த] விஷயங்களை உண்மையுள்ள ஆட்களிடம் சொல்”
8 ஒன்று நாளாகமம் 22:5-ஐ வாசியுங்கள். இவ்வளவு பெரிய வேலையைச் செய்வதற்குச் சாலொமோனுக்கு அனுபவம் போதாது என்று தாவீது நினைத்திருக்கலாம். அந்த ஆலயம் “மிக மிகப் பிரமாண்டமாய்” கட்டப்பட வேண்டியிருந்தது. சாலொமோனோ ‘சின்னப் பையனாகவும் அனுபவம் போதாதவராகவும்’ இருந்தார். ஆனாலும், இந்த விசேஷமான வேலையைச் செய்து முடிப்பதற்கு யெகோவா சாலொமோனுக்கு உதவி செய்வார் என்று தாவீதுக்குத் தெரிந்திருந்தது. அதனால், அந்தப் பிரமாண்டமான வேலையைச் செய்து முடிப்பதற்குத் தன்னால் முடிந்ததையெல்லாம் செய்தார்.
“[இந்த] விஷயங்களை உண்மையுள்ள ஆட்களிடம் சொல்”
7 யெகோவாவுக்கு ஓர் ஆலயத்தைக் கட்ட வேண்டுமென்று தாவீது உண்மையிலேயே ரொம்ப ஆசையாக இருந்தார். அதனால், இது அவருக்கு ஏமாற்றமாக இருந்திருக்கலாம். இருந்தாலும், தன்னுடைய மகன் சாலொமோன் முன்நின்று செய்யவிருந்த அந்த வேலைக்கு தாவீது முழு ஆதரவு கொடுத்தார். வேலையாட்களை ஒழுங்கமைக்கவும், இரும்பு, செம்பு, வெள்ளி, தங்கம், மற்றும் மரங்கள் ஆகியவற்றைச் சேகரிக்கவும் தாவீது உதவி செய்தார். அந்த ஆலயம், சாலொமோனின் ஆலயம் என்று பிற்பாடு அழைக்கப்பட்டது. ஆலயத்தைக் கட்டிய பெருமை யாருக்குப் போய்ச் சேரும் என்பதைப் பற்றியெல்லாம் தாவீது கவலைப்படவில்லை. அதற்குப் பதிலாக, “என் மகனே, உன் கடவுளாகிய யெகோவா உனக்குத் துணையாக இருப்பார்; அவர் உன்னைப் பற்றிச் சொன்னபடியே உன் கடவுளாகிய யெகோவாவுக்கு நீ வெற்றிகரமாக ஒரு ஆலயத்தைக் கட்டு” என்று சொல்லி சாலொமோனுக்கு உற்சாகம் கொடுத்தார்.—1 நா. 22:11, 14-16.
பெற்றோர்களே, ஞானஸ்நானம் எடுக்க உங்கள் பிள்ளைகளுக்கு உதவுகிறீர்களா?
14 யெகோவாவின் சேவையில் வைக்க வேண்டிய இலக்குகளைப் பற்றி உற்சாகமூட்டும் விதத்தில் பேசுவதன் மூலம், பெற்றோர்கள் எடுக்கிற முயற்சிகளுக்கு மூப்பர்கள் ஆதரவு தரலாம். தனக்கு ஆறு வயது இருக்கும்போது, சகோதரர் ரஸல் தன்னிடம் பேசியதைப் பற்றி ஒரு சகோதரி இப்படிச் சொன்னார்: “என்னோட ஆன்மீக இலக்குகள பத்தி 15 நிமிஷம் அவரு என்கிட்ட பேசுனாரு.” அதனால் என்ன பலன் கிடைத்தது? பிற்பாடு அந்தச் சகோதரி பயனியர் சேவையை ஆரம்பித்தார், 70 வருஷங்களுக்கும்மேல் தொடர்ந்து பயனியர் சேவை செய்தார்! உற்சாகமூட்டும் வார்த்தைகள் ஒருவருடைய வாழ்க்கையையே மாற்றிவிடுகிறது என்பது எவ்வளவு உண்மை! (நீதி. 25:11) மூப்பர்கள், பெற்றோர்களையும் பிள்ளைகளையும் அழைத்து ராஜ்ய மன்றத்தில் சில வேலைகளைக் கொடுக்கலாம். பிள்ளைகளுடைய வயதுக்கும் திறமைக்கும் ஏற்றபடி, அவர்களுக்கு அந்த வேலைகளைப் பிரித்துக் கொடுக்கலாம்.
15 இளைஞர்கள்மேல் அக்கறை காட்டுவதன் மூலம், சபையில் இருக்கிற மற்றவர்களும் அவர்களுக்கு உதவலாம். உதாரணத்துக்கு, இளைஞர்கள் யெகோவாவிடம் நெருக்கமான பந்தத்தை வளர்த்துவருவதற்கான அறிகுறிகளை நீங்கள் கவனிக்கலாம். ஒரு பிள்ளை கூட்டங்களில் அருமையாக பதில் சொல்லலாம் அல்லது வார மத்தியில் நடக்கிற கூட்டத்தில் ஏதாவது நியமிப்பைச் செய்யலாம். பள்ளியில் சாட்சி கொடுக்கலாம் அல்லது கெட்டது செய்வதற்கான தூண்டுதல் வந்தும் சரியானதைச் செய்யலாம். அப்படிப்பட்ட பிள்ளைகளை உடனடியாகப் பாராட்டுங்கள். கூட்டங்களுக்கு முன்னும் பின்னும் இளம் பிள்ளைகளோடு பேசுவதை ஒரு குறிக்கோளாக வைத்துக்கொள்ளுங்கள். நாம் அப்படிச் செய்யும்போது, தாங்களும் ‘மாபெரும் சபையின்’ பாகம்தான் என்பதை பிள்ளைகள் உணருவார்கள்.—சங். 35:18.
புதையல்களைத் தோண்டி எடுங்கள்
ஒன்று நாளாகம புத்தகத்திலிருந்து சிறப்பு குறிப்புகள்
21:13-15. தம் ஜனங்கள் பட்ட அவஸ்தையை சகிக்க முடியாமல் அந்த வாதையை நிறுத்தும்படி தேவதூதனுக்கு யெகோவா கட்டளையிட்டார். உண்மையிலேயே “அவருடைய இரக்கங்கள் மகா பெரியது.”