இபோல்யா பார்த்தா | வாழ்க்கை சரிதை
“ஒரு வார்த்தைகூட சொல்லாமலேயே” என் கணவர் யெகோவாவின் நண்பரானார்!
யெகோவாவுடைய நண்பராக எது எனக்கு உதவி செய்தது என்று கேட்டால் முத்துமுத்தான நிறைய விஷயங்களை சொல்வேன்! அதில் ஒன்று, யெகோவாவின் சாட்சிகள் காட்டிய அன்பும், கனிவும் அக்கறையும்தான். அது என் மனசை ரொம்பவே தொட்டது. அதுமட்டுமல்ல, பைபிளிலிருந்து அவர்கள் சத்தியங்களை சொல்லிக் கொடுத்த விதமும் எனக்கு ரொம்ப பிடித்திருந்தது. மனிதர்கள்மேல் கடவுள் உண்மையாகவே அக்கறை வைத்திருக்கிறார். அவர்களுக்கு ஒரு அற்புதமான எதிர்காலத்தை கொடுக்கப்போகிறார் என்று தெரிந்துகொண்ட உடனே நான் அசந்து போய்விட்டேன். ஆனால், என் கணவருக்கு இதில் எல்லாம் விருப்பமே இல்லை. அதுதான் எனக்கு சவாலே!
எங்களுடைய கல்யாண நாள் அன்று
1952-ல் ருமேனியாவில் நான் பிறந்தேன். என்னுடைய அம்மா ஞானஸ்நானம் எடுத்திருந்தாலும் பெயருக்குத்தான் சாட்சியாக இருந்தார். அதனால், நான் கூட்டங்களுக்கு போனதே இல்லை. அப்போது ருமேனியாவில் கம்யூனிஸ்ட் கட்சி ஆட்சியில் இருந்ததால் சாட்சிகளுடைய பிரசங்க வேலையும் அச்சடிக்கிற வேலையும் தடை செய்யப்பட்டிருந்தது. அதனால், யெகோவா என்றால் யார்... பைபிள் என்ன சொல்லித் தருகிறது... என்பதைப் பற்றியெல்லாம் 36 வயது வரைக்கும் எனக்கு எதுவுமே தெரியாது. 1988-ல் நடந்த ஒரு சம்பவம் என் வாழ்க்கையை அடியோடு மாற்றிவிட்டது.
ஆசையாக ஏற்றுக்கொண்ட அழைப்பு
என்னுடைய கணவர் இஷ்வானுடன் ஸோட்டு மோரே என்ற நகரத்தில் நான் வாழ்ந்து கொண்டிருந்தேன். ஒருநாள் என்னுடைய அம்மா என்னைப் பார்க்க வந்தார். அவர் என்னிடம், “உன்னோட பெரியம்மாவை பார்க்க போறேன். நீயும் வரயா? அதற்கு அப்புறம் நாம இரண்டு பேரும் சேர்ந்து ஷாப்பிங் போகலாம்“ என்று சொன்னார். அப்போது எனக்கு எந்த வேலையும் இல்லாததால், “சரி, வரேன்” என்று சொன்னேன்.
என் பெரியம்மா வீட்டுக்குப் போன போதுதான், அங்கே யெகோவாவின் சாட்சிகளுடைய கூட்டம் நடக்கிறது என்றே எனக்கு தெரியவந்தது. கிட்டத்தட்ட ஒன்பது பேர் அங்கே இருந்தார்கள். என் அம்மா ஆன்மீக விஷயத்தில் திரும்பவும் ஆர்வமாக இறங்கிவிட்டார் என்பதையும் நான் தெரிந்துகொண்டேன். அந்த நாளை என்னால் மறக்கவே முடியாது! அன்றைக்குக் காலையில் நான் கேட்ட விஷயங்கள் என் மனதில் ஆழமாகப் பதிந்துவிட்டது.
கூட்டம் முடிந்த பின்பு அதை நடத்தியவர் என்னிடம் வந்து, “என் பெயர் யானோஸ். நீங்கள் நல்லா கவனித்ததை நான் பார்த்தேன். நீங்கள் கேட்ட விஷயங்கள் உங்களுக்கு பிடிச்சிருந்ததா?“ என்று என்னிடம் கேட்டார். இந்த மாதிரி ஒரு கூட்டத்துக்கு நான் போனதே கிடையாது. எனக்கு திரும்பவும் வருவதற்கு ஆசையாக இருக்கிறது என்று அவரிடம் சொன்னேன். அப்படியென்றால், “உங்களுக்கு பைபிள் படிக்க விருப்பம் இருக்கா?“ என்று அவர் கேட்டார். அந்த அழைப்பை நான் ஆசையாக ஏற்றுக்கொண்டேன். கடவுள்தான் அவருடைய மக்களிடம் என்னை கவர்ந்திழுத்திருக்கிறார் என்று புரிந்துகொண்டேன்.
அடுத்த நாள் யானோஸ் எனக்கு ஐடாவை அறிமுகப்படுத்தினார். அவர்தான் எனக்கு பைபிளை சொல்லிக்கொடுத்தார். யெகோவாவின் சாட்சிகளோடு நான் பைபிள் படிப்பது இஷ்வானுக்கு தெரிந்தால் என்ன ஆகுமோ என்று பயந்தேன். நிறைய தடவை அவரிடம் இதை பற்றி பேச முயற்சி செய்தேன். ஆனால் அதையெல்லாம் கேட்க அவருக்கு துளி கூட இஷ்டம் இல்லை. நான் பைபிள் படிப்பது அவருக்கு பிடிக்கவில்லை என்று எனக்கு புரிந்தது.
இருந்தாலும் நான் தொடர்ந்து படித்தேன். 1989 ஆகஸ்டில் ஞானஸ்நானம் எடுத்தேன். அதற்கு அப்புறம் நான்கு மாதம் கழித்து ருமேனியாவில் நிலைமை தலைகீழானது. அங்கே ஆட்சியில் இருந்த கம்யூனிஸ்ட் கட்சி அதன் அதிகாரத்தை இழந்தது. அதன் தலைவர் கொலை செய்யப்பட்டார்.
எதிர்ப்பு அதிகமானது
ஆட்சி மாறியதால் கடவுளை வழிபடுவதற்கு யெகோவாவின் சாட்சிகளுக்கு நிறைய சுதந்திரம் கிடைத்தது. அதனால், நாங்கள் வெளிப்படையாக கூட்டங்களை நடத்தினோம், ஊழியமும் செய்தோம். ஆனால், என்னுடைய சுதந்திரம் போய்விட்டது என்றுதான் சொல்வேன். ஏனென்றால், “நீ என்ன வேண்டுமானாலும் நம்பிக்கோ, எனக்கு அதை பத்தி கவலை இல்லை. ஆனால் கடவுளை பத்தி சொல்றேன்னு வீட்டுக்கு வீடு போற வேலைய மட்டும் வெச்சுக்காத” என்று இஷ்வான் என்னிடம் சொல்லிவிட்டார்.
என்ன நடந்தாலும் நான் ஊழியத்தை நிறுத்தக் கூடாது என்பதில் உறுதியாக இருந்தேன். (அப்போஸ்தலர் 4:20) அதனால், எவ்வளவு ஜாக்கிரதையாக இருக்க முடியுமோ அவ்வளவு ஜாக்கிரதையாக இருக்க முயற்சி செய்தேன். ஆனால், ஒருநாள் நான் வீட்டுக்கு வீடு ஊழியம் செய்துகொண்டிருந்தபோது இஷ்வானுடைய நண்பர்கள் என்னை பார்த்துவிட்டார்கள். அதை இஷ்வானிடம் போட்டுக்கொடுத்துவிட்டார்கள். நான் வீட்டுக்குப் போன உடனே, “நீ என்னையும் நம் குடும்பத்தையும் அவமானப்படுத்துர” என்று அவர் கோபத்தில் கத்தினார். என்னுடைய கழுத்தில் கத்தியை வைத்து, “இனிமேல் நீ ஊழியத்துக்கு போனா உன்னை கொன்னுடுவேன்” என்று மிரட்டினார்.
நான் இஷ்வானிடம் பேசி புரிய வைக்க முயற்சி செய்தேன். நான் அவர்மேல் எவ்வளவு அன்பு வைத்திருக்கிறேன் என்பதையும் சொன்னேன். இதை எல்லாம் கேட்டபோது அவர் கொஞ்ச நாளைக்கு அமைதியாக இருந்தார். இருந்தாலும், ஒரு நெருங்கிய சொந்தக்கார பெண்ணின் கல்யாணத்தில் நடந்த மத சடங்குகளில் கலந்துகொள்ள மாட்டேன் என்று சொன்னபோது மறுபடியும் அவருக்கு கோபம் தலைக்கேறியது. அதனால் என்னை ரொம்ப கேவலமாக திட்டினார்.
13 வருஷமாக, இஷ்வானின் கோபத்தை நான் சகித்துக்கொள்ள வேண்டியிருந்தது. அந்த சமயத்தில் “உன்னை விவாகரத்து பண்ணிவிடுவேன்” என்று சொல்லியும் மிரட்டுவார். சில நேரத்தில் கதவைப் பூட்டி வைத்துக்கொண்டு, என்னை வீட்டுக்குள்ளே விடமாட்டார். சில நேரத்தில் “உன் துணிமணி எல்லாம் எடுத்துகிட்டு வீட்டை விட்டு வெளியே போ!” என்று சொல்வார். அப்போதெல்லாம் என் மனசுக்கு ரொம்ப வேதனையாக இருக்கும்.
இதையெல்லாம் சகித்துக்கொள்ள எனக்கு எது உதவி செய்தது தெரியுமா? நான் ஜெபம் பண்ணினேன், பொறுமையாக இருக்க உதவ சொல்லி யெகோவாவிடம் கேட்டேன். யெகோவா எனக்கு எப்போதுமே ஆதரவாக இருக்கிறார் என்பதையும் நான் உணர்ந்தேன். (சங்கீதம் 55:22) சபையில் இருக்கிறவர்களும் எனக்கு தூண் மாதிரி இருந்தார்கள். “யெகோவாவுக்கு சேவை செய்வதை விட்டுவிடாதே” என்று சொல்லி மூப்பர்களும் அனுபவமுள்ள சில சகோதரிகளும் என்னை உற்சாகப்படுத்திக்கொண்டே இருந்தார்கள். “நீ விட்டு கொடுக்காமல் கடவுளுக்கு உண்மையாக இருந்தால் ‘ஒரு வார்த்தைகூட சொல்லாமலேயே’ கணவரை யெகோவாவின் நண்பராக்கமுடியும்” என்று பைபிள் வார்த்தைகளை அவர்கள் எனக்கு ஞாபகப்படுத்திக்கொண்டே இருந்தார்கள். (1 பேதுரு 3:2) இந்த வார்த்தைகள் என் வாழ்க்கையில் நிஜமானது.
துக்கத்திலும் ஒரு சந்தோஷம்!
2001-ல் இஷ்வான் பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டார். அவரால் சுத்தமாகவே நடக்க முடியவில்லை. ஒரு மாதத்துக்கு ஆஸ்பத்திரியில் இருந்தார், பல வாரங்களுக்கு சிகிச்சை எடுக்க வேண்டியிருந்தது. அந்த சமயத்தில் ஒரு நிமிஷம் கூட அவரை விட்டு எங்கேயும் போகாமல் பக்கத்திலேயே இருந்து பார்த்துக்கொண்டேன். அவருக்கு ஊட்டி விட்டேன், அவர் கூட நிறைய பேசினேன். அவருக்கு எந்தக் குறையும் இல்லாத மாதிரி பார்த்துக்கொண்டேன்.
சபையில் இருக்கிற எல்லாரும் மாறி மாறி அவரை பார்க்க வந்தார்கள். சகோதர சகோதரிகளுடைய அன்பையும் அக்கறையையும் இஷ்வான் முதன்முதலாக அப்போதுதான் நேருக்கு நேர் பார்த்தார். வீட்டு வேலைகளை செய்வதற்கு நிறைய பேர் எங்களுக்கு உதவி செய்தார்கள். எங்களுக்கு ஆறுதலும் ஆதரவும் தேவைப்படுகிற சமயத்திலெல்லாம் மூப்பர்கள் ஓடோடி வந்து உதவி செய்தார்கள்.
இதையெல்லாம் பார்த்து இஷ்வானுடைய மனசு உருகிவிட்டது. “உன்னை நான் ரொம்ப கஷ்டப்படுத்திட்டேன். என்னை நெனச்சா எனக்கே கேவலமாக இருக்கு” என்று சொன்னார். அவருடைய நண்பர்கள் யாருமே ஒருதடவை கூட அவரை வந்து பார்க்கவில்லை என்பதையும் அவர் புரிந்துகொண்டார். ஆஸ்பத்திரியிலிருந்து வீட்டுக்கு வந்த உடனே என்னிடம், “நான் பைபிள படிச்சு யெகோவாவின் சாட்சியா ஆக ஆசைப்படறேன்” என்று சொன்னார். சந்தோஷத்தில் எனக்கு அழுகையே வந்துவிட்டது.
மே 2005-ல் இஷ்வான் ஞானஸ்நானம் எடுத்தார். அவரால் நடக்க முடியாததால் சகோதரர்கள் அவரை ஒரு வீல்சேரில் ஞானஸ்நானம் எடுக்கிற குளம் வரைக்கும் கொண்டுபோய், பின்பு அப்படியே மெதுவாக அவரை தண்ணீருக்குள் தூக்கிக் கொண்டு போய் அவருக்கு ஞானஸ்நானம் கொடுத்தார்கள். இஷ்வான் ரொம்ப ஆர்வமாக ஊழியம் செய்ய ஆரம்பித்துவிட்டார். அவரோடு ஊழியம் செய்த அந்த நினைவுகள் இன்னும் என் மனதில் பசுமையாக இருக்கிறது. என்ன ஒரு ஆச்சரியம் பாருங்கள்! ஒரு காலத்தில் கடவுளுடைய வார்த்தையை மற்றவர்களிடம் சொன்னதற்காக என்னை கத்தியைக் காட்டி மிரட்டியவர் இன்றைக்கு அதே செய்தியை என் கையை கோர்த்துக்கொண்டு மற்றவர்களிடம் போய் சந்தோஷமாக சொல்கிறார்.
இஷ்வான் யெகோவாவை இன்னும் அதிகமாக நேசிக்க ஆரம்பித்தார். அவர் எப்போதும் பைபிளை படித்துக்கொண்டே இருப்பார், வசனங்களை மனப்பாடம் பண்ணி வைத்துக்கொள்வார். அந்த வசனங்களைப் பற்றி சகோதர சகோதரிகளிடம் பேசுவது அவருக்கு ரொம்ப பிடிக்கும். அவர்களை உற்சாகப்படுத்துவதற்காக இந்த வாய்ப்புகளைப் பயன்படுத்திக்கொள்வார்.
மண்டல மாநாட்டில் நண்பர்களோடு
இஷ்வானுடைய உடல்நலம் மோசமாகிக்கொண்டே போனது. அவருக்கு விட்டுவிட்டு பக்கவாதம் வந்ததால் அவரால் பேசவே முடியாமல் போனது. கடைசியில் படுத்த படுக்கையாகிவிட்டார். இதனால் அவர் யெகோவாவுக்கு சேவை செய்வதை நிறுத்திவிட்டார் என்று நினைக்கிறீர்களா? இல்லவே இல்லை! அவர் படிக்கிற பழக்கத்தை மட்டும் விடவே இல்லை. அவரால் எவ்வளவு முடியுமோ அந்தளவுக்கு அதை செய்துகொண்டே இருந்தார். சகோதர சகோதரிகள் அவரை பார்க்க வரும்போது ஸ்க்ரீன் பொருத்தப்பட்ட எலெக்ட்ரானிக் கருவியை பயன்படுத்தி அவர்களிடம் பேசுவார். அவர்களுடைய விசுவாசத்தைப் பலப்படுத்துவார். ஒரு சகோதரர் இப்படி சொன்னார்: “இஷ்வானை பார்க்கும்போது எனக்கு ரொம்ப சந்தோஷமாக இருக்கும். அவரைப் பார்த்துவிட்டு வரும்போதெல்லாம் ஒரு புதுத் தெம்பு கிடைத்த மாதிரி ரொம்ப உற்சாகமாக இருப்பேன்.”
டிசம்பர் 2015-ல் இஷ்வான் இறந்துவிட்டார். நான் அப்படியே சோகத்தில் இடிந்துபோய்விட்டேன். ஆனால் அந்த சமயத்தில் எனக்கு மன அமைதி இருந்தது என்பதை நான் சொல்லியே ஆக வேண்டும். அதற்குக் காரணம் என்னவென்றால், இஷ்வான் சாவதற்கு ரொம்ப நாள் முன்னாடியே யெகோவாவுடைய நண்பராகிவிட்டார். அதுமட்டுமல்ல, இஷ்வானும் என்னுடைய அம்மாவும் யெகோவாவுடைய ஞாபகத்தில் இருக்கிறார்கள். யெகோவா கொண்டு வரப்போகிற புதிய உலகத்தில் அவர்களை கட்டிப்பிடித்து வரவேற்கும் அந்த நாளுக்காக ஆசை ஆசையாக காத்துக்கொண்டிருக்கிறேன்.
நான் என் பெரியம்மாவை பார்க்க போய் 35 வருஷங்களுக்கு மேல் ஆகிவிட்டது. ஆனாலும் என்னால் அந்த நாளை மறக்கவே முடியாது. எனக்கு இப்போது 70 வயசுக்கு மேல் ஆகிவிட்டது. இப்போது நான் ஒரு ஒழுங்கான பயனியராக சேவை செய்துகொண்டிருக்கிறேன். எனக்காக யெகோவா செய்த எல்லா நல்ல விஷயங்களுக்கும் நன்றி சொல்ல இதை விட வேறு வழி இருக்குமா என்ன? (சங்கீதம் 116:12) புயல் மாதிரி எதிர்ப்புகள் வந்தாலும் அமைதியாக இருக்கவும் உண்மையாக இருக்கவும் யெகோவா எனக்கு உதவி செய்தார். எப்படிப்பட்ட எதிர்ப்புகள் இருந்தாலும் சூழ்நிலைகள் எப்படி வேண்டுமானாலும் மாறலாம் என்பதை நான் தெரிந்துகொண்டேன். நடக்கவே நடக்காது என்று நினைத்த ஒரு விஷயம் என் வாழ்க்கையில் நடந்தது! ஆமாம், நான் ஒரு வார்த்தைகூட சொல்லாமலேயே என்னுடைய கணவர் யெகோவாவின் நண்பரானார்!