நம்முடைய நன்கொடைகள் எப்படி பயன்படுத்தப்படுகின்றன
இயேசுவின் வாழ்க்கை ஒரு வரலாறு—திரைக்குப் பின்னால்
அக்டோபர் 1, 2024
யெகோவாவின் சாட்சிகள் ஆசை ஆசையாக எதிர்பார்த்துக் கொண்டிருந்த இயேசுவின் வாழ்க்கை ஒரு வரலாறு! வீடியோ தொடரின் பாகம் 1, இந்த வருஷம் வெளியிடப்பட்டது. லட்சக்கணக்கானவர்கள் இதை ஏற்கெனவே பார்த்துவிட்டார்கள். 18 பாகங்கள் கொண்ட இந்த தொடரில், இது முதல் பாகம்தான். இந்த வீடியோ தொடர்களை வெற்றிகரமாக வெளியிட திரைக்கு பின்னால் சகோதர சகோதரிகள் எவ்வளவு கடினமாக வேலை செய்திருக்கிறார்கள், அதற்கு நீங்கள் எப்படி ஆதரவு கொடுத்திருக்கிறீர்கள்?
படக் குழுவினரைக் கவனித்துக்கொள்ளுதல்
இயேசுவின் வாழ்க்கை வீடியோ தொடருக்கான நிறைய காட்சிகள் ஆஸ்திரலேசியா கிளையில் படம்பிடிக்கப்பட்டன. ஒவ்வொரு காட்சியும் படம் பிடிக்கப்பட்டபோது, அந்த செட்டில் கிட்டத்தட்ட 50 முதல் 80 ஆட்கள் வரை இருந்தார்கள்.a அவர்கள் எல்லாருக்கும் மதிய உணவு, ராத்திரி உணவு, ஸ்நாக்ஸ் ஆகியவை பரிமாறப்பட்டன. என்னென்ன உணவு வகைகள் பரிமாறப்பட வேண்டும் என்று ரொம்ப நாட்களுக்கு முன்பே திட்டமிடப்பட்டன. உணவு சேவை துறையில் வேலை செய்கிற எஸ்தர் இப்படிச் சொல்கிறார்: “தரமான உணவு பொருள்களை பல்வேறு வியாபாரிகளிடம் இருந்து சிறந்த விலையில் வாங்கினோம். தேவையான அளவுக்கு உணவுகளை சமைத்ததால் உணவுப் பொருள்களை வீணாக்காமல் இருக்க முடிந்தது.“ ஒரு நாளுக்கு ஒருவருக்கான சாப்பாடு செலவு மட்டும் கிட்டத்தட்ட 4 அமெரிக்க டாலர்.
படப்பிடிப்பு குழுவினருக்கு சாப்பாடு மட்டுமல்ல, பாதுகாப்பும் தேவைப்பட்டது. எதிலிருந்து பாதுகாப்பு? ஆஸ்திரேலியாவில் பொதுவாக நிறைய நாட்களில் வானம் ரொம்ப தெளிவாக இருக்கும், மிதமான வெயில் இருக்கும். ஆனால் அந்த வெயிலில் சூரியனிலிருந்து வருகிற ஆபத்தான கதிர்வீச்சுகளும் அதிகமாக இருக்கும். தளத்தில் இருப்பவர்களை வெயில் அதிகம் தாக்காமல் இருப்பதற்கும், சூட்டினால் அவர்கள் சோர்வடையாமல் இருப்பதற்கும் உதவியாளர்களாக சேவை செய்த சகோதர சகோதரிகள் கடினமாக உழைத்தார்கள். அதற்காக நிறைய கூடாரங்களையும் குளிரூட்டும் இடங்களையும் அமைத்தார்கள். அதோடு குடைகள், தண்ணீர், சன்ஸ்கிரீன் போன்றவை எப்போதும் அதிகமாக இருக்கிற மாதிரி பார்த்துக்கொண்டார்கள். ஆடியோ/வீடியோ துறையில் வேலை செய்கிற கெவின் இப்படிச் சொல்கிறார்: “இப்படிப்பட்ட வேலைகளை செய்த நிறைய சகோதர சகோதரிகள் பகுதிநேர பெத்தேல் ஊழியர்கள். அவர்கள் இந்த வேலையை மட்டுமல்ல, இன்னும் நிறைய வேலைகளையும் தாழ்மையாகவும் சந்தோஷமாகவும் செய்தார்கள். இவர்கள் இல்லை என்றால் இந்த ப்ராஜெக்ட்-ஐ செய்திருக்க வாய்ப்பே இல்லை.“
வெளிப்புற படப்பிடிப்பு
கிளை அலுவலகங்களில் நிரந்தரமாக போடப்பட்ட செட்டுகளில் அல்லது ஸ்டுடியோக்களில் சில காட்சிகளை அந்தளவு தத்ரூபமாக படம்பிடிக்க முடியவில்லை. அப்படிப்பட்ட சமயங்களில், படப்பிடிப்பு வெளியிடங்களில் நடத்தப்பட்டது. பைபிளில் இருக்கிற பழங்காலத்துக் காட்சிகளைப் படம்பிடிப்பதற்காக மின்சார கம்பிகளோ தார் போடப்பட்ட சாலைகளோ இந்தக் காலத்து வீடுகளோ இல்லாத இடங்களில் படப்பிடிப்பு நடத்த வேண்டியிருந்தது. அதற்காக, படப்பிடிப்புக் குழுவினர் அடிக்கடி ரொம்ப தூரத்துக்குப் பயணம் செய்ய வேண்டியிருந்தது. அவர்களுக்குத் தேவையான உடைகள், சாமான்கள், கருவிகள் எல்லாவற்றையும் நன்றாக பேக் செய்து, கொண்டுபோய் படப்பிடிப்பு நடக்கும் இடத்தில் பத்திரமாக வைக்க வேண்டியிருந்தது. படப்பிடிப்பு ஆரம்பிக்கும் முன்பே, அங்கே சுத்தமான குடிநீர், கழிவறை வசதிகள், ஜெனரேட்டர்கள் ஆகியவை இருக்கின்றவா என்பதை இணை தயாரிப்பு ஒருங்கிணைப்பாளர்கள் பார்த்துக்கொண்டார்கள். உள்ளூரில் உபசரிக்கும் குணமுள்ள சகோதர சகோதரிகளின் வீட்டில் படக் குழுவினர் தங்க வைக்கப்பட்டார்கள். அதோடு, தங்கும் வசதியுள்ள வாகனங்களிலோ, ஹோட்டல்களிலோ, கேபின்களிலோ தங்க வைக்கப்பட்டார்கள்.
வெளியில் படப்பிடிப்பு நடத்தும்போது வித்தியாசமான சவால்களை சந்திக்க வேண்டியிருக்கும்
வெளியில் படப்பிடிப்பு நடத்த அதிகம் செலவாகும், நேரம் நிறைய எடுக்கும், வேலை செய்கிறவர்களும் களைத்து சோர்ந்துபோவார்கள். அதனால், 2023-ல் ஆளும் குழு கிட்டத்தட்ட 25 லட்சம் அமெரிக்கா டாலர் (சுமார் 3 கோடி ரூபாய்) மதிப்புள்ள ஒரு வீடியோ திரையை வாங்குவதற்கு அனுமதி தந்தது. இந்த தொழில்நுட்பத்தால் காட்சிகள் ரொம்ப தெளிவாக வீடியோ திரையில் காட்டப்படும். திரையில் ஓடுகிற காட்சியில் உள்ள வெளிச்சத்திற்கு ஏற்ற மாதிரி, வெளிச்சம் அமைக்கப்படும். அதனால் அந்த இடத்துக்கே போய் படம் பிடித்த மாதிரி காட்சிகள் ரொம்ப தத்ரூபமாக இருக்கும். அதோடு, வெளிப்புற படப்பிடிப்புக்கு ஆகிற எக்கச்சக்க செலவுகளை நம்மால் தவிர்க்க முடிகிறது. ஆஸ்திரலேசியா கிளை அலுவலகக் குழுவின் அங்கத்தினராக இருக்கிற டாரன் இப்படிச் சொல்கிறார்: “படம் பிடிப்பதற்காக இந்த வீடியோ திரையை பயன்படுத்துவதால் நடிகர்கள் அவ்வளவு சீக்கிரமாக சோர்வடைவதில்லை. ஒரு சில காட்சிகளை திரும்பத் திரும்ப எத்தனை தடவை வேண்டுமானாலும் எங்களால் படம் பிடிக்க முடிகிறது. உதாரணத்துக்கு வெளியே படப்பிடிப்பை நடத்தினால், சூரியன் மறைவதை ஒருசில நிமிடங்களுக்குள் படம் பிடித்துவிட வேண்டும், இல்லாவிட்டால் அது மறைந்துவிடும். ஆனால் இந்த வீடியோ திரையை பயன்படுத்துவதால், எங்களுக்கு தேவையான காட்சி கிடைக்கிற வரைக்கும் சூரிய மறைவை திரும்பத் திரும்ப உருவாக்க முடிகிறது.“
படப்பிடிப்புக்கு முன்பு, புதிதாக பொருத்தப்பட்ட வீடியோ திரை அட்ஜஸ்ட் செய்யப்படுகிறது, பரிசோதிக்கப்படுகிறது
“பெரிய தியாகம் பண்ண மாதிரி நான் உணரவே இல்லை”
இயேசுவின் வாழ்க்கை வீடியோ தொடரின் ஒவ்வொரு பாகத்துக்கும் நூற்றுக்கணக்கான நடிகர்களும் அதற்கும் அதிகமாக படப்பிடிப்பு குழுவினர்களும் தேவைப்பட்டார்கள். அவர்களை கவனித்துக்கொள்வதற்காக சகோதர சகோதரிகள் எடுத்த முயற்சிகளைப் பற்றி அவர்கள் என்ன நினைக்கிறார்கள்?
இந்த ப்ராஜெக்ட்டில் கலந்துகொள்வதற்காக மெல்பர்னில் இருக்கும் தன்னுடைய வீட்டிலிருந்து 700 கிலோமீட்டர் பயணம் செய்து வந்த ஆம்பர் இப்படிச் சொல்கிறார்: “விமான நிலையத்தில் காலடி எடுத்து வைத்த அந்த நொடியிலிருந்தே பெத்தேலில் இருக்கிற சகோதர சகோதரிகள் என்னை அன்பாக கவனித்துக்கொண்டார்கள். அவர்களோடு சேர்ந்து சாப்பிடுவதற்கும் டீ குடிப்பதற்கும் கூப்பிட்டார்கள். படப்பிடிப்பு நடத்துகிற இடத்தில் இருந்தவர்களும் என்னைப் பார்த்துப் பார்த்து கவனித்துக்கொண்டார்கள்.என்மேல் பாசத்தை பொழிந்தார்கள். அந்த முழு பயணமுமே எனக்கு ஆசீர்வாதங்களை அள்ளி அள்ளிக் கொடுத்தது. பெரிய தியாகம் பண்ண மாதிரி நான் உணரவே இல்லை.“
தயாரிப்பு குழுவில் வேலை செய்கிற டெரிக் இப்படிச் சொல்கிறார்: “ஆரம்பத்திலிருந்தே நிறைய டிபார்ட்மென்ட்கள் எங்களுக்கு ரொம்ப உதவி செய்தன. அதுமட்டுமல்ல, நிறைய சகோதர சகோதரிகள் இந்த ப்ராஜெக்ட்டுக்காக தங்களுடைய நேரம், பணம் பொருள், சக்தி எல்லாவற்றையும் கொடுத்தார்கள், அதற்காக நான் ரொம்ப நன்றியோடு இருக்கிறேன். அவர்கள் மனப்பூர்வமாக உதவுகிறார்கள், ஆதரவாக, அன்பாக இருக்கிறார்கள். உண்மையாகவே, யெகோவா எங்கள் மேலும் அவர்கள் மேலும் ஆசீர்வாதத்தை பொழிந்திருக்கிறார். திரையில் வந்த காட்சிகளையும் திரைக்கு பின்னால் நாங்கள் எடுத்த முயற்சிகளையும் யெகோவா கவனித்திருக்கிறார் என்பதில் எனக்கு எந்த சந்தேகமும் இல்லை.“
donate.jw.org மூலமாகவும் மற்ற வழிகளிலும் இந்த வீடியோ தொடருக்கு நீங்கள் நன்கொடைகள் மூலமாக ஆதரவு கொடுத்ததற்கு ரொம்ப ரொம்ப நன்றி!
a ஆஸ்திரலேசியா கிளை அலுவலகம் நிறைய நாடுகளில் நடக்கிற நம்முடைய வேலையை மேற்பார்வை செய்கிறது. அதில் ஆஸ்திரேலியா மற்றும் தென் பசிபிக்-ல் இருக்கிற நிறைய இடங்களும் அடங்கும். இந்த கிளை அலுவலகம் ஆஸ்திரேலியாவில் இருக்கிற சிட்னியில் ஒதுக்குப்புறமான ஒரு இடத்தில் இருக்கிறது.