உங்கள் நன்கொடைகள் எப்படிப் பயன்படுத்தப்படுகின்றன?
பசுமைத் திட்டங்கள்—நம் சகோதரர்களுக்கும் பூமிக்கும் தரும் நன்மைகள்
ஏப்ரல் 1, 2025
இந்தப் பூமியை நாசமாக்குகிறவர்களிடம் இருந்து அதைப் பாதுகாப்பதற்காக சீக்கிரத்தில் யெகோவா நடவடிக்கை எடுப்பார் என்பது யெகோவாவின் சாட்சிகளாகிய நமக்கு நன்றாகத் தெரியும். (வெளிப்படுத்துதல் 11:18) இருந்தாலும், இந்தப் பூமியை பாதுகாக்க நம்மால் முடிந்த எல்லாவற்றையும் நாம் செய்கிறோம். உதாரணத்துக்கு, யெகோவாவை வழிபடுவதற்காக நாம் பயன்படுத்துகிற கட்டிடங்களை சுற்றுச்சூழலுக்கு எந்தப் பாதிப்பும் வராத விதத்தில் வடிவமைக்கிறோம்.
சுற்றுச்சூழல் பாதிப்பை முடிந்த அளவுக்கு குறைக்க எடுக்கப்படும் முயற்சிகள்தான் பசுமைத் திட்டங்கள். என்னென்ன பசுமைத் திட்டங்களை நாங்கள் செயல்படுத்தியிருக்கிறோம்? இந்தத் திட்டங்கள் எங்களுக்கு கிடைக்கிற நன்கொடைகளை சரியாகப் பயன்படுத்த எப்படி உதவி செய்திருக்கின்றன?
மாநாட்டு மன்றத்துக்கு ஒரு ‘குளிர்ச்சித் தீர்வு’
மொசாம்பிக்கில் இருக்கிற மட்டோலா மாநாட்டு மன்றத்தின் மேற்கூரை இரும்புத் தகடால் செய்யப்பட்டிருந்தது. அதோடு, இரு பக்கமும் திறந்தவெளி. இதனால் சூரியனுடைய வெப்பம் அந்தக் கூரை வழியாக அப்படியே மன்றத்துக்குள் இறங்கும். அதனால் உள்ளுக்குள்ளே அனல் வீசும். உள்ளூர் சகோதரர் இப்படிச் சொல்கிறார்: “சூட்டினால் எங்களுக்கு வேர்த்து வேர்த்துக் கொட்டும். சுத்தமான காற்றை சுவாசிப்பதற்காகவும் சூட்டை தணிப்பதற்காகவும் மாநாடு முடிந்த அடுத்த நொடியே சகோதரர்கள் வெளியே ஓடிவிடுவார்கள்.” சகோதரர்கள் சௌகரியமாக கவனித்துக் கேட்பதற்காக அந்த மன்றத்தில் என்ன மாற்றம் செய்ய வேண்டியிருந்தது?
சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படாத விதத்தில் இந்தப் பிரச்சினைக்கு ஒரு தீர்வை கண்டுபிடிக்க முடிவு செய்தோம். காற்று விசையால் இயங்குகிற ஃபேன்களை பொருத்தினோம். அதே சமயத்தில், வெப்பத்தைத் தடுக்கிற கூரை அமைப்புகளையும் போட்டோம். அது கட்டிடத்துக்குள்ளே இறங்குகிற வெப்பத்தின் தாக்கத்தை குறைக்கிறது. அதுமட்டுமல்ல, அந்த ஃபேன்களால் உள்ளுக்குள்ளே நல்ல காற்றோட்டமும் இருக்கும். இந்த ஃபேன்கள் இயங்குவதற்கு மின்சாரம் தேவையில்லை. அவை காற்றையும் காற்றோட்டத்தையும் பயன்படுத்தி மன்றத்துக்குள்ளே இருக்கிற அனல் காற்றை வெளியேற்றிவிடுகின்றன. இந்த ஃபேன்கள் ஒவ்வொன்றின் விலை கிட்டத்தட்ட 50 டாலர்கள்a (கிட்டத்தட்ட 4300 ரூபாய்).
மட்டோலா மாநாட்டு மன்றத்தில் காற்று விசையில் இயங்கும் ஃபேன்கள்
இப்போது மாநாட்டு மன்றத்தில் இருக்கிற சகோதர சகோதரிகளால் சுத்தமான காற்றை சுவாசிக்க முடிகிறது. மன்றத்துக்குள் காற்றோட்டம் நன்றாக இருப்பதால் முன்பு இருந்த மாதிரி ஈரப்பதம் வருவது, பூஞ்சை பிடிப்பது ரொம்பவே குறைந்திருக்கிறது. அதுமட்டுமல்ல, மன்றத்திற்குள் கார்பன் டை ஆக்சைடின் அளவு குறைந்திருக்கிறது, ஆக்ஸிஜனின் அளவு அதிகரித்திருக்கிறது. அதனால் மாநாட்டுக்கு வருகிறவர்களால் சௌகரியமாக உட்கார்ந்து நன்றாக கவனிக்க முடிகிறது. நாம் முன்பு பார்த்த அந்த சகோதரர் இப்படி சொல்கிறார்: “இப்போதெல்லாம் மாநாடு முடிந்த உடனே நாங்கள் வெளியே ஓட வேண்டியதில்லை. அதற்கு பதிலாக, மத்தியானம் சாப்பாட்டு நேரத்தில் கூட உள்ளேயே இருந்து எங்கள் நண்பர்களோடு பேசி சிரித்து சந்தோஷமாக இருக்கிறோம். இந்தப் புதிய கூரைக்கு அடியில் உட்காரும்போது, ஒரு பெரிய மரத்தடியில் உட்காருவது போல் அவ்வளவு புத்துணர்ச்சி!”
இப்போது நம் சகோதரர்கள் மாநாடுகளை ரொம்ப என்ஜாய் பண்ணுகிறார்கள்
சூரிய ஆற்றலை பயன்படுத்துதல்
உலகம் முழுவதும் இருக்கிற எங்களுடைய நிறைய கட்டிடங்களில் ஒளி மின்னழுத்த அமைப்புகளை (photovoltaic systems [PV]) பொருத்தியிருக்கிறோம். இந்த அமைப்பு, சோலார் பலகைகளை பயன்படுத்தி சூரிய ஒளியை—அள்ள அள்ளக் குறையாத ஆற்றலை—மின்சாரமாக மாற்றுகிறது. அதுமட்டுமல்ல, புதைபடிவ எரிபொருளிலிருந்து கிடைக்கிற மின்சாரத்தை நாங்கள் அதிகமாக சார்ந்திருக்க வேண்டிய அவசியமில்லை. இந்த முறையை பயன்படுத்துவதால் காற்று மாசுபடுவதையும் குறைக்க முடிகிறது. எங்களுக்கு கிடைக்கிற நன்கொடைகளையும் சேமிக்க முடிகிறது.
2023-ல் ஸ்லோவீனியா கிளை அலுவலகத்தில் இந்த PV அமைப்பு பொருத்தப்பட்டது. அந்தக் கட்டிடத்துக்கு தேவைப்படுகிற 30 சதவீத ஆற்றல் இதிலிருந்துதான் கிடைக்கிறது. ஏதோ ஒரு கட்டத்தில், கிளை அலுவலகத்துக்கு தேவைப்படுவதை விட அதிகமான மின்சாரம் உற்பத்தியானால், அது உள்ளூரில் இருக்கிற நகராட்சிக்கு கொடுக்கப்படும். இந்த PV முறையை அமைப்பதற்கு 3,60,000 டாலர்கள் (கிட்டத்தட்ட 2.8 கோடி ரூபாய்) செலவானது. இது நமக்கு நஷ்டம் இல்லை, ஏனென்றால் கிளை அலுவலகத்தில் மின்சாரக் கட்டணம் முன்பை விட இப்போது குறைந்திருக்கிறது. இதற்காக நாம் போட்ட பணத்தை விட அதிகமான பணத்தை வெறும் நான்கு வருடத்தில் சேமித்திருப்போம்.
ஸ்லோவீனியா கிளை
2024-ல், இலங்கை கிளை அலுவலகத்தில் PV பலகைகளையும் பெரிய பேட்டரியையும் நாங்கள் பொருத்தினோம். அதற்காக கிட்டத்தட்ட 30 லட்சம் டாலர்கள் (கிட்டத்தட்ட 25 கோடி ரூபாய்) செலவானது. கிளை அலுவலகத்துக்கு தேவைப்படுகிற 70 சதவீத மின்சாரம் இதிலிருந்து கிடைக்கிறது. இது நமக்கு நஷ்டம் இல்லை. இதற்காக நாம் போட்ட பணத்தை விட அதிகமான பணத்தை வெறும் மூன்று வருஷத்தில் சேமித்திருப்போம். அதே வருடம், நெதர்லாந்து கிளை அலுவலகத்திலும் நாங்கள் PV அமைப்பை பொருத்தினோம். அதற்கு 11 லட்சம் டாலர்கள் (கிட்டத்தட்ட ஒன்பது கோடி ரூபாய்) செலவானது. கிளை அலுவலகத்துக்கு தேவைப்படுகிற 35 சதவீத மின்சாரம் இதிலிருந்து கிடைக்கிறது. இது நமக்கு நஷ்டம் இல்லை. இதற்காக நாம் போட்ட பணத்தை விட அதிகமான பணத்தை வெறும் ஒன்பது வருஷத்தில் சேமித்திருப்போம்.
நெதர்லாந்து கிளை
மெக்சிகோவில் இருக்கிற நிறைய மொழிபெயர்ப்பு அலுவலகங்களிலும் (RTO) நாங்கள் PV அமைப்புகளை பொருத்தியிருக்கிறோம். அதில் ஒன்று, சிஹுவாஹுவாவில் இருக்கிற டாரஹுமாரா (சென்ட்ரல்) மொழிபெயர்ப்பு அலுவலகம். குளிர்காலத்தில் இங்கே வெப்பநிலை 0 டிகிரி செல்சியஸுக்கும் கீழே போய்விடும். ஆனால், வெயில் காலத்தில் 40 டிகிரி செல்சியஸை தாண்டிவிடும். போதாக்குறைக்கு மின்சார கட்டணமும் ரொம்ப அதிகம். அதனால், வெப்பமூட்டுகிற, குளிரூட்டுகிற சாதனங்களை அங்கே இருக்கிற சகோதரர்கள் பயன்படுத்துவதில்லை. RTO-ல் சேவை செய்கிற ஜோனத்தன் இப்படி சொல்கிறார்: “நாங்கள் குளிர் காலத்தில் கம்பளிகளையும் கதகதப்பான துணிகளையும் போட்டுக்கொள்வோம். வெயில் காலத்தில் ஜன்னல்களை திறந்து வைத்துக்கொள்வோம்.”
2024-ல் இந்த RTO-ல் PV அமைப்பு பொருத்தப்பட்டது. இதை பொருத்துவதற்கு 21,480 டாலர்கள் (கிட்டத்தட்ட 17 லட்சம் ரூபாய்) செலவானது. இது நமக்கு நஷ்டம் இல்லை. இதற்காக நாம் போட்ட பணத்தை விட அதிகமான பணத்தை வெறும் ஐந்து வருஷத்துக்குள் நாம் சேமித்திருப்போம். அங்கே இருக்கிற நம்முடைய சகோதரர்களால் இப்போது வெப்பமூட்டுகிற, குளிரூட்டுகிற சாதனங்களை அடிக்கடி பயன்படுத்த முடிகிறது. ஜோனத்தன் இப்படி சொல்கிறார்: “எங்களுடைய வேலையை நாங்கள் என்ஜாய் பண்ணி செய்கிறோம். இன்னும் நிறைய செய்ய முடிகிறது, நன்றாகவும் செய்ய முடிகிறது. அமைப்பின் பணத்தை RTO ஞானமாகவும் சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படாத விதத்திலும் பயன்படுத்துவதை நினைக்கும்போது எனக்கு ரொம்ப சந்தோஷமாக இருக்கிறது.”
டாரஹுமாரா (சென்ட்ரல்) மொழிபெயர்ப்பு குழுவினர் இப்போது அதிக சௌகரியமான சூழலில் வேலை செய்கிறார்கள்
மழைநீர் சேகரிப்பு
ஆப்பிரிக்காவில் சில ராஜ்ய மன்றங்களில் தண்ணீர் தட்டுப்பாடு இருக்கிறது. அப்படியே தண்ணீர் கிடைத்தாலும் அது குடிப்பதற்கு ஏற்றதாக இருக்காது. அதனால் ராஜ்ய மன்றத்திலிருந்து பல கிலோமீட்டர் தூரத்துக்குப் போய் சகோதரர்கள் தண்ணீர் கொண்டு வர வேண்டியிருக்கும். மற்ற சில ராஜ்ய மன்றங்களில் சகோதரர்கள் தண்ணீர் லாரியில் வரும் தண்ணீரை விலைக்கு வாங்குவார்கள். அதற்கு செலவும் அதிகம், சுற்றுச்சூழலுக்கு பாதிப்பும் இருக்கும்.
தண்ணீர் பிரச்சினையை சரி செய்வதற்காக மேற்கூரை வடிகால்களையும் பெரிய தண்ணீர் தொட்டிகளையும் ஆப்பிரிக்காவில் இருக்கிற நிறைய ராஜ்ய மன்றங்களில் நாங்கள் அமைத்தோம். இதை அமைப்பதற்கு முன்பு, அங்கே இருக்கிற வானிலை மற்றும் சீதோஷ்ண நிலை பற்றி சகோதரர்கள் நன்றாகத் தெரிந்துகொண்டார்கள். அப்போதுதான் அந்த ராஜ்ய மன்றத்தில் மழைநீரை சேகரிப்பதற்கான சிறந்த வழிகளை கண்டுபிடிக்க முடியும். இவற்றை ராஜ்ய மன்றத்தில் பொருத்துவதற்கு 600 டாலரிலிருந்து 3000 டாலர்கள் வரைக்கும் (கிட்டத்தட்ட 52,000 முதல் 2,60,000 ரூபாய் வரை) செலவானது. அப்படி செய்ததால் ராஜ்ய மன்றத்துக்கான செலவுகளை குறைக்க முடிந்தது. ஏனென்றால், இனிமேல் சகோதரர்கள் காசு கொடுத்து தண்ணீர் வாங்க வேண்டிய அவசியமில்லை.
தென் ஆப்பிரிக்கா, புதடிட்ஜாபா-வில் இருக்கிற ராஜ்ய மன்றத்தின் தண்ணீர் தொட்டி
இந்த மழைநீர் சேகரிப்பு முறைகளால் நம்முடைய சகோதரர்களுக்கு நிறைய நன்மை கிடைத்திருக்கிறது. மொசாம்பிக்கில் இருக்கிற நோமியா என்ற சகோதரி சொல்கிறார்: “முன்பெல்லாம் நாங்கள் ரொம்ப தூரம் போய் தண்ணீர் எடுத்துக்கொண்டு வருவோம். ராஜ்ய மன்றத்துக்கு திரும்பி வரும்போது நொந்து நூலாகிவிடுவோம். தண்ணீர் தட்டுப்பாடு இருந்ததால் எங்களை சுத்தமாக வைத்துக்கொள்வது ரொம்ப கஷ்டமாக இருந்தது. இப்போது எல்லாரும் கை கழுவுவதற்கு போதுமான தண்ணீர் இருக்கிறது. நாங்கள் ராஜ்ய மன்றத்துக்கு வேர்த்து விறுவிறுத்து வருவதில்லை. அதனால் கூட்டங்களை என்ஜாய் பண்ணுகிறோம். ரொம்ப ரொம்ப நன்றி!”
தென் ஆப்பிரிக்காவில் ஒரு சகோதரியும் அவருடைய மகனும் சேகரிக்கப்பட்ட மழைநீரை பயன்படுத்துகிறார்கள்
இந்த பசுமை திட்டங்களுக்கான பணம் எங்கிருந்து நமக்கு கிடைக்கிறது? donate.jw.org-ல் மூலமாகவும் மற்ற வழிகளிலும் உலகளாவிய வேலைக்கு கிடைக்கிற நன்கொடைகள் மூலம். தாராளமாக நீங்கள் கொடுக்கிற நன்கொடைக்கு ரொம்ப நன்றி!
a இந்தக் கட்டுரையில் வரும் டாலர்கள் அனைத்தும் அமெரிக்க டாலர்கள்.