மூன்றாவது உலகம்—எழுத்தறிவின்மை இடைவெளியை மூடுகிறதா?
நைஜீரியாவிலுள்ள விழித்தெழு! நிருபர் எழுதியது
80கோடிக்கும் மேற்பட்ட ஆட்களால் உலகில் வயது வந்த மக்கள் தொகையில் மூன்றில் ஒரு பங்கு ஆட்களால்—இந்த வார்த்தைகளை வாசிக்க முடியாது. அவர்கள் படிப்பறிவில்லாதவர்களாக இருக்கிறார்கள். ஆப்பிரிக்காவில் 40 சதவிகிதத்தினரே படிப்பறிந்தவர்களாக இருக்கிறார்கள். ஆனால் ஆப்பிரிக்க தேசங்களில் கல்வி வாய்ப்புகள் அதிகரித்துக் கொண்டே இருக்கின்றன. உதாரணமாக நைஜீரியாவில் ஆயிரக்கணக்கில் ஆரம்ப மற்றும் நடுநிலைப் பள்ளிகளும் 20-க்கும் மேற்பட்ட பல்கலைகழகங்களும் இருக்கின்றன. ஆனாலும் எழத்தறிவின்மை தொடர்ந்து இருந்துகொண்டே இருக்கிறது.
வட ஆப்பிரிக்காவில் ஆயிரக்கணக்கான வருடங்களாக எழுத படிக்கத் தெரியாதவர்கள் இருந்து வருகிறார்கள். வட ஆப்பிரிக்க முகமதியர்களின் செல்வாக்கு பாலைவன ஆப்பிரிக்காவிலுள்ளவர்கள் கல்வியைப் பெற்றுக்கொள்ள உதவி செய்தது. ஆனால் ஆராபிய மொழியில் மத சம்பந்தமான ஆராய்ச்சியில் ஈடுபட்டவர்களே பொதுவாக இதனால் பயனடைந்தார்கள். பெரும்பாலான மற்றவர்கள் எழுத்து வாசனை இல்லாதவர்களாகவே இருந்தார்கள்.
ஐரோப்பிய பாணி வாசிப்பு முறையையும் எழுத்து முறையையும் போர்ச்சுகல் நாட்டு வணிகர்கள் 16-ம் நுற்றாண்டில் அறிமுகப்படுத்த ஆரம்பித்தார்கள். ஆனால் 19-ம் நுற்றாண்டில் ஆப்பிரிக்க தேசங்கள் குடியேற்ற நாடுகளின் ஆட்சியின் கீழ் வந்தபோது, ரோமன் கத்தோலிக்க மற்றும் புராட்டஸ்டண்ட் மிஷன் பள்ளிகள் நிறுவப்பட்டன. அந்த சமயத்தில் ஐரோப்பாவில் இருந்ததுபோலவே வெகு சிலரே பள்ளிக்குச் சென்றார்கள். வேளாண்மை சமுதாயம் கல்வியின் மதிப்பை உணருவதில் மந்தமாகவே இருந்தது. பிள்ளைகள் தொழிலாளர் தொகுதியில் இன்றியமையாத பாகமாக இருந்தனர். பாடங்களை கற்றுக்கொள்ள வகுப்பறைகளுக்கு இவர்களை அனுப்புவதற்கு சமுதாயம் தயங்கியது.
மத சம்பந்தமான பிரச்னைகள் குறுக்கிடுகின்றன
தங்களுடைய பிள்ளைகள் மற்றொரு மதத்தின் செல்வாக்கின் கீழ் வருவதை விரும்பாத முகமதிய தலைவர்கள், மிஷன் பள்ளிகள் ஆரம்பிக்கப்படுவதை எதிர்த்தார்கள். மதம் கற்பிக்கப்படக்கூடாது என்பதை குடியேற்ற நிர்வாகம் ஓப்புக்கொள்ளும் வரையாக வட நைஜீரியாவின் ஆராபிய இளவரசர்கள் அரசாங்க பள்ளிகள் ஆரம்பிக்கப்படுவதையும்கூட எதிர்த்தனர். அப்பொழுதும்கூட பெண்கள் பள்ளிகளில் சேர்க்கப்படவில்லை.
ஆனால் படிப்படியாக பள்ளி அமைப்புகள் முன்னேறவும் விரிவாகவும் ஆரம்பித்தன. மகளிர் பள்ளிகள் ஆரம்பிக்கப்பட்டன. ஒதுக்கமாயிருந்த பகுதிகளுக்கும் கல்வி பரவியது. ஆனால் சமுதாயத்தில் பெரும் பகுதியை கல்வி சென்றெட்டாமலே இருந்தது. புதிதாக சுதந்திரம் அடைந்த ஆப்ரிக்க தேசங்களில் பெரும் எண்ணிக்கையில் மக்கள், அரைகுறையாக படித்தவர்களாக அல்லது படிப்பு வாசனையே இல்லாதவர்களாக இருந்தார்கள்.
சமீபகால பலன்கள்
பெரும்பாலான அரசாங்கங்கள் பொது மக்களுக்கு கல்வி புகட்ட திட்டங்களை தீட்டியிருக்கின்றன. 200 லட்சம் மக்கள் தொகையைக் கொண்ட டான்சானியாவில் இப்பொழுது 60 சதவிகிதத்தினர் படித்தவர்களாக இருக்கிறார்கள். எத்தியோப்பியாவிலும் நல்ல பலன்கள் கிடைத்திருக்கின்றன. ஆனால் அடிக்கடி அரசாங்கம் மாறுவதாலும் நிலையற்ற பொருளாதார நிலைமையினாலும் மேற்கு ஆப்பிரிக்க திட்டங்கள் முன்னேறாமலே இருந்திருக்கின்றன. கானாவில் யெகோவாவின் சாட்சிகளின் ஒரு ஊழியனாக இருக்கும் ஆல்பர்ட் குவாக்கி “சாதனையின் தரம் அவ்வளவு குறைந்துவிட்டிருப்பதன் காரணமாக, பள்ளியில் 10 வருடங்கள் படித்த பின்பும்கூட ஒரு சராசரி பிள்ளியால் எந்த மொழியையும் வாசிக்கவோ எழுதவோ முடிவதில்லை” என்று குறிப்பிடுகிறார். நைஜீரியாவிலுள்ள பல்கலைகழகத்தில் படித்துக் கொண்டிருக்கும் அபியோலா மெதேயின்லோ “நடுநிலைப் பள்ளிகளில் படித்து முடித்து வெளியே வருகிறவர்களால் அடிப்படையான ஆங்கில வார்த்தைகளை எழுத்துக்கூட்ட முடிவதில்லை” என்று சொல்லுகிறார்.
இலவச கல்வி திட்டங்கள், எவ்விதமாக அநேகமாக பண பற்றாக்குறையினாலும், பள்ளி கட்டிடங்கள், கற்பிப்பதற்கு சாதனங்கள் மற்றும் தகுதியுள்ள ஆசிரியர்கள் இல்லாமையினாலும் இயலாத நிலையில் இருக்கின்றன என்பதை நைஜீரியாவின் அகில உலக ஆரம்ப கல்வி (UPE-Universal Primary Education) விளக்குகிறது. உண்மைதான். 1976-ல் UPE திட்டம் ஆரம்பமானது முதற்கொண்டு அரம்ப பள்ளியில் சேர்ந்து படிக்கும் பிள்ளைகளின் எண்ணிக்கை 80 லட்சத்திலிருந்து 1983-ல் 160 லட்சமாக உயர்ந்திருக்கிறது. ஆனால் இந்த பள்ளிகள் ஆரம்பிக்கப்பட்ட பின்பு, விரைவில் வகுப்பறைகளில் மாணவர்களின் எண்ணிக்கை அதிகமானது. அவர்கள் வித்தியாசமான நேரங்களில் சுற்று முயையிலோ அல்லது மரத்தடியிலோ படிக்க ஆரம்பித்தார்கள். அநேகர் கல்லின் மீது உட்கார வேண்டியிருந்தது. அல்லது சொந்தமாக முக்காலிகளையும் பள்ளி சாதனங்களையும் கொண்டுவர வேண்டியதாக இருந்தது. தகுதிப்பெற்ற ஆசிரியர்கள் வெகு சிலரே இருந்ததால் ஆயிரக்கணக்கான தகுதி பெற்றிராத ஆசிரியர்களை வேலைக்கு அமர்த்த வேண்டியதாக இருந்தது. ஆனால் இவை அனைத்தின் மத்தியிலும் நைஜீரிய பிள்ளைகளின் மத்தியில் படிப்பறிவின் இடைவெளி குறைந்துகொண்டே வருகிறது.
நைஜீரியாவின் முதியோர் கல்வி திட்டங்களும் இதே பிரச்னைகளை எதிர்படுகிற்ன. ஆகவே சமுதாயங்களும் குடும்பங்களும் ஆசிரியர்களும் சுய உதவி திட்டங்களை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறார்கள். குடும்பத்தில் படிக்க தெரிந்தவர்கள், படிக்க தெரியாத மற்றொருவருக்கு உதவி செய்யும்படியாக உற்சாகப்படுத்தப்படுகிறார்கள். மதசம்பந்தமான குழுக்கள், சமூக அமைப்புகள், மற்றும்— வானொலி, டெலிவிஷன், செய்திதாள்கள் போன்ற—சாதனங்கள், மக்கள் எழுதவும் படிக்கவும் கற்றுக்கொள்ள உதவும் நிகழ்ச்சிகளை கொண்டிருக்கும்படியாக அழைக்கப்படுகின்றன.
ஆனால் நைஜீரியாவிலுள்ள 250 மொழிகளில் ஏதோ ஒரு மொழியை மட்டுமே பேசுபவருக்கு, அவருடைய மொழியில் வாசிப்பதற்கு அவ்வளவு புத்தகங்கள் இல்லாவிட்டால் அவர் எவ்விதமாக கற்றுக்கொள்ள முடியும்? இவர்கள் எழுதவும் படிக்கவும் கற்றுக்கொண்டாலும்கூட, அவர்களுடைய மொழியில் வாசிப்பதற்கு அவர்களுக்கு எந்த புத்தகங்களோ அல்லது செய்தி தாள்களோ இல்லாவிட்டால் இந்த புதிய திறமையை அவர்கள் எவ்வாறு காத்துக்கொள்ள முடியும்? அநேகர் கற்றுக்கொள்ள சிரத்தை எடுத்துக் கொள்ளாததற்கும் கற்றுக்கொள்ளும் சிலர் மறுபடியுமாக படிப்பறியாதவர்களாக மாறிவிடுவதற்கும் இவை காரணங்களாக இருக்கின்றன. நைஜீரியாவில் இன்னும் 270 லட்சம் படிப்பறியாதவர்கள் இருப்பதைக் குறித்து ஆச்சரியப்படுவதற்கில்லை. தங்களுடைய பிள்ளைகளின் பாடங்களில் இவர்களுக்கு உதவி செய்ய முடியாததன் காரணமாக, இந்த பிள்ளைகளும்கூட பள்ளியைவிட்டு வெளியேறிய பின்பு படிப்பறிவை இழந்துவிடக்கூடும்.
நைஜீரியாவுக்கு 1992-க்குள் எழுத்தறிவின்மையை முற்றிலுமாக அகற்றிவிட வேண்டும் என்ற ஆவலான இலக்கு இருக்கிறது. ஆனால் கடந்த காலம் இத்தகைய ஒரு நம்பிக்கைக்கு ஆதாரத்தை கொடுப்பதில்லை. (g85 9/22)
[பக்கம் 21-ன் பெட்டி]
பள்ளி இலஞ்ச ஊழலோடு இந்தியாவின் போராட்டம்
இந்தியாவின் பத்திரிக்கை எழுத்தாளர் சமீபத்தில் இவ்விதமாக எழுதினார்: “இந்தியாவின் கல்வியில் மெதுவாக கடைத்தெரு சூழ்நிலை வந்துக் கொண்டிருக்கிறது. அது விற்பவர்களின் சந்தையாக இருக்கிறது. எந்த ஒரு பற்றாக்குறை நிலையிலும் தவிர்க்கமுடியாத இயல்பான விளைவுகளாக தோன்றும் அக்கறையின்மையும் இலஞ்ச ஊழலும் ஒவ்வோரு வருடமும் அதிகரித்துக் கொண்டே வருகிறது.”
அதே விதமாகவே இந்தியாவிலுள்ள ஒரு பத்திரிக்கை நிருபர் இவ்விதமாக குறிப்பிடுகிறார்: “எங்கு பார்த்தாலும் இலஞ்ச ஊழல் இருக்கிறது. தங்களுடைய பிள்ளைகளை பள்ளியில் சேர்க்க விரும்பும் பெற்றோர்களிடமிருந்து பகிரங்கமாகவே நன்கொடையையும் இலஞ்சத்தையும் வாங்கிக்கொண்டு பள்ளி அதிகாரிகள் அதை அனுபவித்து வருகிறார்கள். மாணவர்கள் பகிரங்கமாகவே ஏமாற்றுகிறார்கள். அது கட்டுக்கடங்காமல் போய்விட்டிருக்கிறது. கிராமப் புறங்களில் ஆசிரியர்கள் அடிக்கடி தங்களுடைய நிலங்களை கவனிப்பதற்காக 10-15 நாட்களுக்கு மறைந்து போய்விடுகிறார்கள். ஆனால் மேற்பார்வையாளர் பள்ளியை பார்வையிட வரும்போது அவர்கள் மறுபடியும் காணப்படுகிறார்கள். இந்த மேற்பார்வையாளர்கள் கிராமத்து மக்களிடமிருந்தும் ஆசிரியர்களிடமிருந்தும் கோதுமை, அரிசி, சக்கரை ஆகியவற்றை பெரும் அளவில் இலஞ்சமாக பெற எதிர்பார்க்கிறார்கள். இதற்கு கைமாறாக படிப்பறிவின்மை எவ்விதமாக கிராமத்தில் துடைத்து அழிக்கப்படுகிறது என்பதைப் பற்றிய உற்சாகமூட்டும் அறிக்கைளை அவர்கள் எழுதிவிட்டு போய்விடுகிறார்கள்.”
[பக்கம் 21-ன் பெட்டி]
உயர்நிலைப் பள்ளியும் மூன்றாவது உலகமும்
உலகின் தேசங்களிலுள்ள பெரும்பாலானவர்களுக்கு கல்வியளிக்க போதிய உயர்நிலைப்பள்ளிகள் இல்லை” என்பதாக எழுத்தாளர் ஜீன் மேராப் குறிப்பிடுகிறார் . . . உயர்நிலைப் பள்ளிகளிலுள்ள பருவ பயதினரின் வீதம்:
அல்ஜீரியாவில் 19 சதவிகிதம்
ப்ரேஸிலில் 18 சதவிகிதம்
கேம்பியாவில் 9 சதவிகிதம்
இந்தியாவில் 28 சதவிகிதம்
இந்தோனீசியாவில் 20 சதவிகிதம்
ஈராக்கில் 38 சதவிகிதம்
கென்னியாவில் 15 சதவிகிதம்
பாக்கிஸ்தானில் 17 சதவிகிதம்
தாய்லாந்தில் 26 சதவிகிதம்
[பக்கம் 21-ன் படம்]
பூட்டான் . . .
[படத்திற்கான நன்றி]
FAO Photo/F. Mattioli
. . . மற்றும் ஸ்வேஸிலாந்து பள்ளியில்