உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • g94 8/8 பக். 3-4
  • பள்ளிகள் நெருக்கடியில்

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • பள்ளிகள் நெருக்கடியில்
  • விழித்தெழு!—1994
  • துணை தலைப்புகள்
  • இதே தகவல்
  • பள்ளியில் வன்முறை
  • பெற்றோரே—உங்கள் பிள்ளையின் ஆலோசகராயிருங்கள்
    விழித்தெழு!—1994
  • நல்ல கல்விக்கான தேடல்
    விழித்தெழு!—1995
  • இன்று பள்ளிகளில் என்ன நடக்கிறது?
    விழித்தெழு!—1995
  • ஆசிரியர் பணி தியாகங்களும் அபாயங்களும்
    விழித்தெழு!—2002
மேலும் பார்க்க
விழித்தெழு!—1994
g94 8/8 பக். 3-4

பள்ளிகள் நெருக்கடியில்

எழுதப் படிக்க, கணக்குப் போட கற்றுக்கொள்வதைவிட அதிகத்தைக் கற்றுக்கொள்ளவேண்டும் என்றே பெற்றோர் தங்களுடைய பிள்ளைகளைப் பள்ளிக்கு அனுப்புகின்றனர். அனைத்தையும் உள்ளடக்கிய ஒரு கல்வியை பள்ளிகள் கொடுக்கவேண்டும் என்றும், பெற்றோர் அவர்களைப்பற்றி பெருமைப்படுமளவுக்கு இளைஞரை பெரிய ஆட்களாக வளர உதவும் ஒன்று என்றும் அவர்கள் எதிர்பார்க்கின்றனர். ஆனால் அவர்களுடைய எதிர்பார்ப்பு பெரும்பாலும் ஏமாற்றமாகவே மாறிவிடுகிறது. ஏன்? ஏனென்றால் உலகமுழுவதிலும் பள்ளிகள் நெருக்கடியில் இருக்கின்றன.

அநேக நாடுகளில் பணப் பற்றாக்குறையும் ஆசிரியர்களின் பற்றாக்குறையும் பிள்ளைகளின் கல்வியை ஆபத்திற்கு உள்ளாக்குகின்றன. உதாரணமாக, ஐக்கிய மாகாணங்கள் முழுவதும், சமீப ஆண்டுகளில் ஏற்பட்ட நிதிப் பின்னடைவு, சில பள்ளிகளைப் ‘பழையப் பாடப் புத்தகங்களை’ திரும்ப பைண்டு செய்து கொடுக்கவும், ‘கூரையின் பூச்சு இடிந்து விழும்படி விட்டுவைக்கவும், கலைப்பயிற்சி மற்றும் விளையாட்டு நிகழ்ச்சிகளை ரத்துசெய்யவும், ஒரே சமயத்தில் நாள் கணக்கில் மூடிக்கிடக்கவும்’ செய்தது என்று டைம் பத்திரிகை குறிப்பிடுகிறது.

ஆப்பிரிக்காவில் அதேபோல் கல்வி வளங்கள் போதாதளவு இருக்கின்றன. லாகோஸின் டெய்லி டைம்ஸ் சொல்லுகிறபடி, நைஜீரியா நாட்டில் ஒவ்வொரு 70 மாணவர்களுக்கும் ஒரேவொரு ஆசிரியர் மட்டுமே இருக்கிறார்; அதுவும் “ஒவ்வொரு மூன்று ஆசிரியர்களிலும் ஒருவர் தகுதியற்றவராய் இருக்க அதிக வாய்ப்பு இருக்கிறது.” தென் ஆப்பிரிக்காவில், ஆசிரியர்களுக்கான பஞ்சம் மட்டுமில்லாமல் அளவுக்கதிகமான மாணவர்களைக் கொண்ட வகுப்பறைகளும் அரசியல் கொந்தளிப்பும் செளத் ஆஃப்ரிக்கன் பேனராமா “கறுப்பர்கள் பள்ளிகளில் குழப்பம்” என்றழைக்கிற நிலையை உருவாக்கியுள்ளன.

சந்தேகமின்றி, போதுமான ஆசிரியர்களையும் எல்லா வசதிகளையும் கொண்ட ஒரு பள்ளிதானே கல்வியின் வெற்றிக்கு உத்தரவாதம் அளிக்கிறதில்லை. எடுத்துக்காட்டாக, ஆஸ்திரியாவில், 14 வயதினரில் கிட்டத்தட்ட மூன்றிலொரு பாகத்தினருக்கு ஒரு எளிய கூட்டல் கழித்தல் கணக்குக்கூட போடமுடியாது அல்லது சரியாக வாசிக்கமுடியாது என்று அறிக்கை செய்யப்பட்டது. பிரிட்டனில், கணிதத்திலும், அறிவியலிலும், தேசிய மொழியிலும் மாணவர்களின் தேர்ச்சி வீதங்கள் “ஜெர்மனி, பிரான்ஸ், ஜப்பான் ஆகிய நாடுகளில் உள்ள வீதங்களைவிட மிகக் குறைவு,” என்று லண்டனின் தி டைம்ஸ் கூறுகிறது.

ஐக்கிய மாகாணங்களில், மாணவர்கள் தேர்வுகளில் நல்ல மதிப்பெண்களைப் பெற்றாலும், அநேகருக்கு ஒரு நல்ல கட்டுரை எழுதவோ, கணக்குப் போடவோ, பல்வேறு பாடங்களின் அல்லது ஆவணங்களின் முக்கியக் குறிப்புகளுடைய ஒரு சுருக்கத்தைத் தயாரிக்கவோ தெரியாமல் இருக்கிறது என்று ஆசிரியர்கள் குறைபட்டுக் கொள்கின்றனர். இவற்றின் விளைவாக, உலகமுழுவதுமுள்ள கல்வி நிபுணர்கள் பள்ளிப் பாடத்திட்டத்தையும் மாணவர்களின் முன்னேற்றத்தைக் கணிக்க பயன்படுத்தப்படும் முறைகளையும் மீண்டும் பரிசீலனை செய்து வருகிறார்கள்.

பள்ளியில் வன்முறை

பள்ளிகளில் அச்சுறுத்தும் அளவுக்கு அதிகரித்துக்கொண்டிருக்கும் வன்முறையை அறிக்கைகள் வெளிப்படுத்துகின்றன. பள்ளி சிறுவர்களில் 15 சதவீதத்தினர் “வன்முறையாக நடந்துகொள்ளவும் தயாராயிருக்கின்றனர் என்றும், 5 சதவீதத்தினர் காட்டுமிராண்டித்தனமாக நடந்துகொள்ளவும் தயங்குவதில்லை, அதாவது தற்காப்பின்றி தரையில் விழுந்து கிடக்கும் ஒரு நபரை உதைப்பார்கள்,” என்றும் ஜெர்மனியில் நடந்த ஆசிரியர்கள் மாநாடு ஒன்றில் சொல்லப்பட்டது.—ஃப்ராங்க்ஃபர்ட்டர் ஆல்கெமைனா ட்ஸைடுங்.

அளவுக்குமீறி மிருகத்தனமாக நடந்துகொண்ட தனிப்பட்ட சம்பவங்கள் மிகுந்த கவலையை உண்டாக்குகின்றன. பாரிஸ் நகர மேல்நிலைப் பள்ளியின் கழிவறை ஒன்றில் 15-வயது பெண்ணொருத்தி, நான்கு வாலிபப் பையன்களால் கற்பழிக்கப்பட்டாள். இது ஆர்ப்பாட்டம் நடத்தி பள்ளியில் பலத்த பாதுகாப்பு வேண்டுமென கோரும்படி மாணவமாணவிகளைத் தூண்டிற்று. பாலின குற்றச்செயல்களும் பயமுறுத்திப் பணம்பறித்தலும் உணர்ச்சிப்பூர்வமான வன்முறையும் அதிகரிப்பதைப்பற்றி பெற்றோர் கவலையடைகிறார்கள். அத்தகைய சம்பவங்கள் ஐரோப்பாவில் மட்டுமல்ல, ஆனால் உலகம் பூராவும் மிகப் பரவலாக நடந்துவருகின்றன.

உயர்நிலைப் பள்ளி மற்றும் மேல்நிலைப் பள்ளி மாணவமாணவியர் சம்பந்தப்பட்டிருந்த வன்முறையின் ஒரு திடீர் அதிகரிப்பை ஜப்பானின் கல்வி அமைச்சகம் அறிக்கை செய்கிறது. தி ஸ்டார் என்ற தென் ஆப்பிரிக்க செய்தித்தாள் “துப்பாக்கி-ஏந்தும் மாணவர் பள்ளிகளைக் கட்டுப்படுத்துகின்றனர்” என்ற தலைப்புச் செய்தியில், சவீட்டோவில் உள்ள அநேக வகுப்பறைகளில் நடக்கும் காட்சியை, ஐக்கிய மாகாணங்களில் 19-ம் நூற்றாண்டில் இருந்துவந்த “கலகமும் போராட்டமும்” நிறைந்த, “the Wild West” என்றறியப்படும் நிலைமைக்கு ஒப்பிட்டது. நியூ யார்க் நகரத்தின் வன்முறைக்கு பெயர்போன நிலைகூட லண்டனின் தி கார்டியன் விவரிக்கிற விதமாக, “பள்ளிப் பிள்ளைகளுக்காக குண்டு துளைக்காத உடை கேட்டு வந்த நிறைய ஆர்டர்களைப்பற்றி ஒரு பாதுகாப்பு நிறுவனம் விடுத்த அறிவிப்போடு ஒரு புதிய உச்சநிலையை” அடைந்திருக்கிறது.

பள்ளி வன்முறை என்னும் தொற்று நோயால் பிரிட்டனும் அல்லல்படுகிறது. “கடந்த 10 வருடங்களில், ஆயுதங்களை ஏந்தும் மனப்பான்மை அதிகரித்து வந்திருப்பதை நாங்கள் கவனித்திருக்கிறோம். அந்த மனப்பான்மை இப்போது குறைந்த வயதுள்ளவர்களிடமும் காணப்படுகிறது; மேலும் ஆண்களிடமிருந்து பெண்களிடம் பரவிக்கொண்டிருக்கிறது,” என்று ஆசிரியர் சங்கத்தைச் சேர்ந்த ஒரு அதிகாரி கூறுகிறார்.

அப்படியானால், சில பெற்றோர் தங்களுடைய பிள்ளைகளைப் பள்ளியிலிருந்து நிறுத்திவிட்டு வீட்டிலேயே கற்றுக் கொடுக்கிறார்கள் என்றால் அதில் ஒன்றும் ஆச்சரியமில்லை.a வீட்டில் கற்றுக்கொடுப்பதை நடைமுறையற்றதாகக் காண்பவர்கள் தங்கள் பிள்ளைகள் மீது பள்ளியின் கெட்ட பாதிப்புகளைப்பற்றி அடிக்கடி கவலைப்படுவதோடு, இதை எப்படி எதிர்த்துப் போராடுவது என்றும் சிந்திக்கின்றனர். பள்ளியில் தங்கள் பிள்ளைகள் எதிர்ப்படும் பிரச்சினைகளை மேற்கொள்வதில் அவர்களுக்கு உதவிசெய்ய பெற்றோர் என்ன செய்யலாம்? பள்ளியிலிருந்து பிள்ளைகள் மிகச் சிறந்த பலனடைவதை நிச்சயப்படுத்திக்கொள்ள பெற்றோர் எவ்வாறு ஆசிரியர்களோடு ஒத்துழைக்கலாம்? அடுத்துவரும் கட்டுரைகள் இக்கேள்விகளுக்கான பதில்களைத் தருகின்றன.

[அடிக்குறிப்புகள்]

a ஜூலை 8, 1993, விழித்தெழு! இதழில் வெளிவந்த “வீட்டுக் கல்வி—அது உங்களுக்கு ஏற்றதா?” என்ற கட்டுரை இந்தத் தெரிவைப்பற்றி கலந்தாலோசிக்கிறது.

    தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்