உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • g95 12/22 பக். 5-6
  • நல்ல கல்விக்கான தேடல்

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • நல்ல கல்விக்கான தேடல்
  • விழித்தெழு!—1995
  • துணை தலைப்புகள்
  • இதே தகவல்
  • தீர்வுகளைத் தேடுதல்
  • வித்தியாசப்பட்ட பலன்கள்
  • நல்ல கல்வி இன்றியமையாதது
  • இன்று பள்ளிகளில் என்ன நடக்கிறது?
    விழித்தெழு!—1995
  • நல்ல கல்விக்குத் திறவுகோல்கள்
    விழித்தெழு!—1995
  • பள்ளிகள் நெருக்கடியில்
    விழித்தெழு!—1994
  • பெற்றோர்களே—உங்கள் பிள்ளைகளுக்கு எத்தகைய எதிர்காலத்தை விரும்புகிறீர்கள்?
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-2005
மேலும் பார்க்க
விழித்தெழு!—1995
g95 12/22 பக். 5-6

நல்ல கல்விக்கான தேடல்

நல்ல கல்வி, இன்றைய சமுதாயத்தில் வாழ்க்கையை வெற்றிகரமாகச் சமாளிக்க பிள்ளைகளைத் தயாராக்குகிறது. நன்றாக வாசிக்கும் மற்றும் எழுதும் திறமையும், கணக்கு செய்வதும் உட்பட கல்வித்திறன்களைக் கொண்டிருக்க உதவுகிறது. மேலுமாக, மற்றவர்களுடன் அவர்கள் கொள்ளும் தொடர்புகள்மீது செல்வாக்கு செலுத்தி, ஆரோக்கியகரமான ஒழுக்கத் தராதரங்களையும் பலப்படுத்துகிறது.

இருந்தாலும், இவை கொடிய காலங்களாய் இருப்பதன் காரணமாக, அப்படிப்பட்ட கல்வியை அளிப்பது மிகவும் கடினமாக இருக்கிறது. நெடுங்கால அனுபவமுள்ள ஆஸ்திரேலிய பள்ளி ஆசிரியர் இவ்வாறு வருத்தந்தெரிவித்தார்: “கீழ்த்தரமான, திட்டும் மொழியைப் பயன்படுத்துகிற, வன்முறை மனச்சாய்வுள்ள பிள்ளைகளை வகுப்புகள் கொண்டிருக்கின்றன: டிவி பார்ப்பதன் காரணமாகத் தூக்கக்குறைவினால் களைப்புற்றிருக்கும் பிள்ளைகள் இருக்கிறார்கள்; ஊட்டச்சத்துக் குறைவுள்ள அல்லது பசியுள்ள பிள்ளைகள் இருக்கிறார்கள்; மேலும் சிட்சையின்றி வளர்க்கப்பட்ட பிள்ளைகள் இருக்கிறார்கள்.” மேலும் ஆசிரியர்கள் உங்களுக்குச் சொல்வார்கள்: “கட்டுக்கடங்காத பிள்ளைகளைப் பயிற்றுவிப்பது கூடாத காரியம்.”

அமெரிக்க ஆசிரியர்களின் கூட்டுக்கழகத்தின் தலைவராகிய ஆல்பர்ட் ஷங்கர், ஆசிரியர்களின் சிக்கலான நிலையை விளக்கினார்: “போதைப்பொருள் மற்றும் மதுபானம் பற்றிய கல்வி, பாலின கல்வி, . . . மாணவருக்கான தன்மதிப்பு பயிற்சிகள், சட்ட விரோத கும்பலைக் கண்டறிதல், . . . மேலும் மற்ற பல காரியங்களையும் அவர்கள் கற்பிக்க வேண்டியவர்களாய் இருக்கிறார்கள். உண்மையான போதிப்பைத் தவிர மற்ற அனைத்தையும் செய்ய வேண்டும். . . . உண்மையில் அவர்கள் சமூகப் பணியாளர்களாக, அம்மாக்களாக, அப்பாக்களாக, சிகிச்சையாளர்களாக, காவலர்களாக, ஊட்டச்சத்து நிபுணர்களாக, பொது சுகாதாரப் பணியாளர்களாக, மருத்துவ தொழிலாளர்களாக இருக்கும்படி கேட்கப்படுகிறார்கள்.”

இது ஏன் ஆசிரியர்களிடமிருந்து எதிர்பார்க்கப்படுகிறது? வடகிழக்கு ஐக்கிய மாகாணங்களில் ஒரு பெரிய நகரின் வகுப்பறை யாராலானது என்பதைப் பற்றி ஒரு சுருக்க உரை, ஏன் என்பதைக் குறிப்பிடுகிறது. 23 மாணவர்களையுடைய ஒரு சராசரி வகுப்பைப் பற்றி ஒரு நிபுணரின் கூற்றுகளை தி நியூ யார்க் டைம்ஸ் அறிக்கை செய்தது. “8 முதல் 15 பேர் பெரும்பாலும் வறுமையில் வாழ்பவர்களாக இருக்கவேண்டும்; 3 பேர் போதைப்பொருட்களுக்காளான தாய்மாருக்குப் பிறந்திருக்கவேண்டும்; 15 பேர் ஒற்றைப் பெற்றோருடன் வாழ்பவர்களாக இருக்கவேண்டும்” என்று அவர் சொன்னார்.

தெளிவாகவே, குடும்பம் சிதைவுறும் போக்கில் இருக்கிறது. ஐக்கிய மாகாணங்களில், கிட்டத்தட்ட ஒவ்வொரு 3 குழந்தை பிறக்கையில் 1 முறைதகாத வகையில் பிறந்ததாகவும், ஒவ்வொரு 2 திருமணங்களில் 1 மணவிலக்கில் முடிவடைவதாகவும் இருக்கிறது. இருந்தாலும், திருமணத்திற்கு புறம்பான உறவுகளால் ஏற்படும் குழந்தை பிறப்புகளின் சதவீதம், கிரேட் பிரிட்டன், டென்மார்க், பிரான்ஸ், ஸ்வீடன் ஆகிய இடங்களில் இன்னும் அதிகமாகவே இருக்கிறது. பள்ளிகளில் இந்த நிலைமை உருவாக்குகிற நெருக்கடியைச் சமாளிப்பதற்கு என்ன முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகின்றன?

தீர்வுகளைத் தேடுதல்

பல்வேறு சோதனைப் பள்ளிகள் அல்லது மாற்றுப் பள்ளிகள் அமைக்கப்பட்டிருக்கின்றன. இவை வழக்கமாக சிறியவையாய்—நெருங்கிய மேற்பார்வையைச் சாத்தியமாக்குபவையாய்—இருந்து, மேம்பட்ட விதத்தில் பிள்ளைகளின் தேவைகளைப் பூர்த்தி செய்யும் முயற்சியில் அவற்றில் பல தங்கள் சொந்த பாடத்திட்டத்தை உருவமைக்கின்றன. நியூ யார்க் நகரில், 1993 முதற்கொண்டு அப்படிப்பட்ட சிறிய பள்ளிகள் திறக்கப்பட்டிருக்கின்றன; இன்னும் 50 திட்டமிடப்பட்டிருக்கின்றன. “[பள்ளி] வன்முறைதான் இந்த சோதனையைத் தொடங்கி வைத்தது,” என்று தி நியூ யார்க் டைம்ஸ் குறிப்பிட்டது. 1992-ற்குள் 500-க்கும் அதிகமான மாற்றுப் பள்ளிகள், 3,33,000 மாணவர்களுடன் ரஷ்யாவில் தொடங்கப்பட்டுள்ளன.

மறுபட்சத்தில், தி டோரன்டோ ஸ்டார் அறிக்கை செய்தது: “ஆயிரக்கணக்கானோர் தங்கள் பிள்ளைகளைத் தனிப்பட்ட தனியார் பள்ளிகளுக்கு அனுப்புகின்றனர்.” கனடாவைச் சேர்ந்த ஆன்டரியோ மாவட்டத்தில் மட்டும், ஏறக்குறைய 75,000 பிள்ளைகள் தனியார் பள்ளிகளுக்குச் செல்கின்றனர். இவை இப்போது ரஷ்யா முழுவதிலும் காணப்படுகின்றன; சீனாவில் அவை “இளவேனிற்கால மழைக்குப்பின் துளிர்த்துவரும் மூங்கில் குருத்துக்களைப்போல்” தோன்றியிருக்கின்றன என்று சைனா டுடே பத்திரிகை சொல்லுகிறது. தனியார் பள்ளிகளின் கையேடு (ஆங்கிலம்) ஐக்கிய மாகாணங்களிலுள்ள அதுபோன்ற கிட்டத்தட்ட 1,700 பள்ளிகளைப் பட்டியலிடுகிறது; அங்கு வருடாந்தர கற்பிப்பு கட்டணம் $20,000-ஆக அல்லது அதற்கும் அதிகமாக இருக்கலாம்.

இன்னும் வேறு சில பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளை வீட்டில் வைத்துக் கற்பிப்பதைத் தெரிந்துகொண்டிருக்கிறார்கள். ஐக்கிய மாகாணங்களில் மட்டும், வீட்டு-கல்வியின் எண்ணிக்கை 1970-ல் சுமார் 15,000-லிருந்து 1995-ல் பத்து லட்சம் வரையாகவும் அதிகரித்திருக்கிறது.

வித்தியாசப்பட்ட பலன்கள்

உலகெங்குமுள்ள எல்லா பள்ளி அமைப்பு முறைகளுக்கும் அதையொத்த பலன்கள் கிடைக்கிறதில்லை. ஜூலை 1993-ல், ஐ.மா. கல்வியாளர் தொகுதி ஒன்றிடம் ஷங்கர் சொன்னார்: “மற்ற நாடுகள் பள்ளிகளை இயக்கி, ஓரளவிற்கு நம்மைவிட சிறந்த பலன்களைப் பெறுகின்றன.” உதாரணமாக, ரஷ்யாவிலிருந்து ஐக்கிய மாகாணங்களுக்குக் குடிபெயர்ந்து வந்திருந்த ஒரு தம்பதியைச் சந்தித்ததைப் பற்றி அவர் சொன்னார். அவர் கூறியதாவது: “மிகவும் நல்ல தனியார் பள்ளி ஒன்றில் அவர்கள் குழந்தையைச் சேர்த்திருந்தபோதிலும்கூட, எட்டாம் வகுப்பிலுள்ள அவர்களுடைய மகள், அங்கு ரஷ்யாவில் மூன்றாம் வகுப்பில் படித்திருந்ததையே இப்போது படித்துக்கொண்டிருந்தாள்.”

முன்னாள் சோவியத் யூனியன், கிட்டத்தட்ட அங்குள்ள எல்லா மக்களுக்கும் வாசிக்கவும் எழுதவும் கற்றுக்கொடுத்த ஒரு பள்ளி அமைப்பு முறையைக் கொண்டிருந்தது. மறுபட்சத்தில், ஐ.மா. கல்வித் துறை கணக்கின்படி, 2.7 கோடி அமெரிக்கர்களால் ஒரு தெரு அடையாளத்தை அல்லது பஸ்ஸிலுள்ள ஒரு எண்ணை அடையாளம் காண முடியாது. மேலும் “25 சதவீதம் வரையான தொடக்கப் பள்ளியிலுள்ள பிள்ளைகள் வாசிக்கவோ எழுதவோ தெரியாமலே மேல்நிலைப் பள்ளிக்குப் போய்க்கொண்டிருந்தனர்” என்று ஆஸ்திரேலியாவின் கேன்பரா டைம்ஸ் அறிக்கை செய்தது.

தற்போது பள்ளிகளில் நெருக்கடி ஏறக்குறைய எவ்விடத்திலும் ஓரளவுக்குக் காணப்படுகிறது. “பள்ளி அமைப்புமுறை கடும் நெருக்கடியில் இருக்கிறது என்று பேட்டி காணப்பட்ட 72.6 சதவீத சோவியத் ஆசிரியர்கள் ஒத்துக்கொண்டார்கள்” என்று புதிய ரஷ்யாவில் கல்வியும் சமுதாயமும் (ஆங்கிலம்) என்ற 1994 புத்தகம் சொல்லுகிறது. மாஸ்கோவிலுள்ள நெடுங்கால அனுபவமுள்ள ஆசிரியராகிய டான்யாவின்படி, “பெற்றோர் மற்றும் பிள்ளைகள்தாமேயும் இனிமேலும் கல்வியை மதிப்பதில்லை” என்பதே நெருக்கடிக்கான முக்கிய காரணம். உதாரணமாக, “ஒரு ஆசிரியர், வழக்கமான ஒரு பேருந்து ஓட்டுனர் சம்பாதிக்கும் அளவில் பாதியே—அல்லது அதைவிட மிகக் குறைவாகவும்கூட—சம்பாதிக்கிறார்” என்று அவர் குறிப்பிட்டார்.

நல்ல கல்வி இன்றியமையாதது

மனித சமுதாயம் இன்னும் அதிகமாக சிக்கலானதாகையில், நல்ல கல்வி இன்னுமதிக முக்கியத்துவமுடையதாகிறது. பல இடங்களில், ஓரிளம் மனிதன் தன்னையும் தன் வருங்கால குடும்பத்தையும் பராமரிப்பதற்குத் தேவையான ஒரு வேலையைப் பெறுவதற்குத் தேவையானளவு கல்வித் தகுதி அதிகரித்து வந்திருக்கிறது. ஆகவே, அடிப்படை கல்வித் திறமைகளில் தேர்ச்சி பெற்றிருப்பவர்கள் மிகச் சிறந்த வேலை வாய்ப்புகளைக் கொண்டிருப்பார்கள். வேலையின் விண்ணப்பதாரரால் அந்த வேலையை எவ்வளவு நன்றாகச் செய்ய முடியும் என்பதே, வேலையில் அமர்த்துகிறவர்கள் முக்கியமாகக் கவனிக்கும் காரியம்.

மேல்நிலைப் பள்ளியில் படித்து முடித்த அநேகரைப் பற்றி, வேலை வாய்ப்பு அலுவலக மேலாளர் ஒருவர் இதைக் கவனித்தார்: “அவர்கள் வேலை செய்வதற்குக் கற்றுக்கொடுக்கப்படவில்லை.” அவர் மேலுமாகச் சொன்னார்: “இளைஞருடன் செயல்தொடர்பு கொள்கையில் ஏற்படும் பிரச்சினையாக வேலைக்கு அமர்த்தியிருப்பவர்கள் நிலையாக என்னிடம் சொல்வது என்னவென்றால், அவர்களுக்கு மிக நன்றாக வாசிக்கவோ எழுதவோ தெரிவதில்லை. வேலைக்கான விண்ணப்பத்தாளை அவர்களால் பூர்த்தி செய்ய முடியாது.”

பெற்றோர் தங்கள் பிள்ளைகள் நல்ல கல்வியைப் பெற வேண்டுமென்று நிச்சயமாகவே விரும்புவார்கள்; இளைஞரும் ஞானமாக அதைப் பெற விரும்புவார்கள். ஆனால் அதற்குத் தேவையான முக்கிய திறவுகோல்களை அவர்கள் பயன்படுத்துவது முக்கியம். இந்தத் திறவுகோல்கள் யாவை, அவை எவ்வாறு பயன்படுத்தப்படலாம்?

[பக்கம் 6-ன் சிறு குறிப்பு]

ரஷ்யாவில், “ஒரு ஆசிரியர், வழக்கமான ஒரு பேருந்து ஓட்டுனர் சம்பாதிக்கும் அளவில் பாதியே சம்பாதிக்கிறார்”

    தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்