விரிவடையும் பாலைவனம் அவை மெய்யாகவே புஷ்பத்தைப்போல செழிக்குமா?
மணல்! மணல்! மணல்! கண்ணுக்கு எட்டிய தூரமெல்லாம் சுட்டெரிக்கும் காற்றினால் வாரியடிக்கப்படும் மணல் தவிர வேறு எதுவும் காணப்படுவதில்லை. தொலைதூரத்தில் கூம்பிவடிவ பிரமாண்டமான மணற்குன்றுகள் 700 அடி (210 மீ) உயரமும் மற்றும் அடிமட்டத்தில் அதற்கு ஆறுமடங்கு அகலமும் உள்ளதாய் மேகமற்ற வானத்தை எட்டும் அளவுக்கு மேல்நோக்கி செல்கிறது. தொடர்ந்து வீசும் காற்று மணலில் பாம்பின் நெளிவு போன்ற வளைவுகளை ஏற்படுத்துகின்றது. சூரிய உஷ்ணம் உக்கிரமாயிருக்கிறது. இதிலிருந்து தங்களை தற்காக்க பாம்புகளும் தவளைகளும்கூட மணலில் அடிப்பாகத்தில் அடைக்கலம் தேடுகின்றன. மணலில் பட்டு எதிரடிக்கும் ஒளி கண்களை குருடாக்குவதாயிருக்கிறது. மினுமினுக்கும் கடும் வெப்பம் கண்களுக்கு வித்தை காட்டுகிறது—ஒன்றுமில்லாத இடத்தில் தண்ணீர் குளம் இருப்பது போன்ற கானல் நீர் காட்சி; சில பொருட்கள் தொலை தூரத்தில் ஒருவிதமாக தோன்றுகிறது. ஆனால் உண்மையில் அவை வேறு பொருளாகவே இருக்கின்றன.
கடும் வலிமையுடன் வீசும் காற்று மணலை குடைந்தெடுத்து மிகத்திரளாய் சுழற்றி அடிக்கின்றன. இவை பகல் வெளிச்சத்தை இருளாக மாற்றக்கூடியது. இவை ஆடைகளுக்குள் உட்புகுந்து தோலில் ஊசி முனையில் குத்துவதை போன்று குத்தக்கூடும். வானங்களின் வர்ணங்களை அவை உரித்தெடுக்கக்கூடும். வாகனங்கள் முன் கண்ணாடிகளை பனிமறைப்பதுபோன்று முற்றிலும் மறைத்துவிடும். அவை பாலைவன கற்களை விநோதமான வடிவங்களில் செதுக்கி உருமாற்றக்கூடும். மேலும் உயரமான தந்திக் கம்பங்களை பாதியளவுக்கு அவை உள்ளே புதைத்துவிடக்கூடும்.
நடுப்பகல் வேளையின்போது வெப்பமானது சுட்டு பொசுக்கும் 125 முதல் 130 டிகிரி ஃபாரன்ஹைட் (52° முதல் 54°C) கொண்டதாகவும் இருக்கக்கூடும். அந்த சமயத்தில் அதனை விஜயம் செய்பவர்கள் புழுக்கத்தால் அயர்வுறுகின்றனர். இரவு நேரங்களில் வெப்பமானியின் பாதரசம் எலும்பை நடுங்கச் செய்யும் கடுங்குளிரான 40 டிகிரிக்கு (4°C) அல்லது அதற்கும் குறைவாக கீழிறங்கக்கூடும். அந்த சமயங்களில் அவை பனிகட்டியாகக்கூடும். தடித்த கம்பளி ஆடைகளை உடுத்தியிருந்தால் அப்போதுங்கூட அவர்கள் குளிர்ச்சியாகவே உணருவார்கள்; அரைகுறையாக ஆடை அணிந்திருந்தால் வேதனையடைவார்கள். தரையிலிருந்து ஒரு அடி மேலே அமர்ந்திருந்தால், அவர்கள் தரைமீது அமர்ந்திருக்கையில் இருப்பதைக் காட்டிலும் 30 டிகிரி (17°) குளிர்ச்சியாக இருக்கிறது. இதற்கும் அதிகமாக தொண்டை வரண்டுவிடுகிறது. தண்ணீருக்காக தேடியலைதல், பாம்புகளின் பயம், தேள் கொட்டும் வேதனை, திடீர் வெள்ள அபாயங்கள், காணாமற்போய்விடும் பயம்—இவையனைத்தும் இந்த அமரிக்கையான வறண்ட உலகமாகிய பாலைவன மணலை கெடுதி அறிவிக்கும் குறியாக ஆக்குகிறது.
இந்த உலகத்தில், பெரிதும் சிறிதுமான எத்தனை பாலைவனங்கள் இருக்கிறதென்பதை நிச்சயமாக எவரும் அறிந்திருப்பதாக தெரியவில்லை. இதற்கு ஒரு வெளிப்படையான காரணம்—எவரும் அதை கணக்கிட்டு பார்த்ததாக தெரியவில்லை. “நான் 125-க்கு மேலாக கண்டுபிடித்தேன்” என்றார் ஒரு பிரபலமான பாலைவன கண்டுபிடிப்பாளர். “ஒருவேளை அதற்கு இரண்டு மடங்கு அதிகமானதும் இருக்கலாம்.” பூமியின் ஒவ்வொரு கண்டத்திலும் பாலைவனங்கள் இருக்கின்றன. பூமியின் நிலப்பரப்பில் ஏறக்குறைய ஐந்தில் ஒரு பாகத்தை அவை பற்றியிருக்கின்றன.
எல்லாவற்றிற்கும் மிகப் பெரிய பாலைவனம் வடக்கு ஆப்ரிக்காவில் உள்ள சஹாரா பாலைவனமாகும். இந்த உலகத்தின் பாதியளவு பாலைவனப் பரப்பைக் கொண்டிருக்கிறது—35லட்சம் சதுரமைல்கள் பாலைவன நிலப்பரப்பை கொண்டிருக்கிறது.a அரேபிய தீபகற்பத்திலுள்ள அரேபிய பாலைவனம் மற்றும் தென்மேற்கு ஆப்ரிக்காவில் கலாஹாரி பாலைவனம் 5,00,000 நிலப்பரப்பையும் மற்றும் 2,00,000 சதுரமைல்களையும் தழுவியிருக்கிறது. ஆஸ்திரேலிய பாலைவனம் அளவில் சஹாரா பாலைவனத்தில் இரண்டாவதாக 13 லட்சம் சதுர மைல்களடங்கிய எல்லைப்பரப்பில் பெருமைகொள்கிறது. ஏறக்குறைய கண்டத்தின் பாதியளவு பாலைவனம் சீனாவிலுள்ள கோபி பாலைவனம் ஐக்கிய மாகாணத்திலுள்ள டெக்ஸாஸ் நகர அளவில் சுமார் இருமடங்கு எல்லையை 5,00,000 சதுர மைல்களை கொண்டிருக்கிறது.
வடக்கு அமெரிக்கா அதன் பாலைவனங்களை கொண்டிருக்கிறது—கலிபோர்னியா நகரின் 25 சதவிகிதம் பாலைவனம். அரிசோனா, ஒரிகான், உடா, நெவேடா மற்றும் மெக்ஸிக்கோ அவ்வாறே வறண்டதாகவும் மற்றும் அவ்வாறே வெப்பமானதாகவும் இருக்கிறது. கலிபோர்னியாவின் மரண பள்ளத்தாக்கு உலகிலேயே இரண்டாவதாக மிகமிக உஷ்ணமான பாலைவனமாக அறிக்கை செய்யப்படுகிறது. தென் அமெரிக்கா பூமியிலேயே அதிக வறட்சியான அட்டாகாமா பாலைவனத்தை கொண்டிருப்பதாக குறிப்பிடப்பட்டிருக்கிறது. பெரு என்ற நாட்டு எல்லையின் தென்புரத்திலிருந்து 600 மைல்கள் (970 கி.மீ.) சில்லி நாட்டின் வடக்கு பகுதிவரையாக விரிவடைகிறது. எல்லா பாலைவனங்களும் அதே விசேஷ குணத்தை—வெப்பத்தையும் வறட்சியையும்—கொண்டிருக்கிறது.
உதாரணமாக, சில்லியிலுள்ள அட்டாகாமா பாலைவனத்தில் மிக அபூர்வமாக மழை பெய்யும் இடங்கள் இருக்கின்றன. இதனால் அந்த பிராந்தியத்தில் வாழ்ந்த ஒருவர் பின்வருமாறு புலம்பினார். “ஒரு சில ஆண்டுகளுக்கு ஒருமுறை மூடுபனி இருக்கிறது—ஆனால் அதன் துளிகளோ வெகு கொஞ்சம்.” அதே பாலைவனத்தில் மற்ற இடங்களில் ஒரு 14 ஆண்டு காலப்பகுதியின்போது மழையோ அல்லது பனிபொழிவோ இல்லை என்று அதிகாரப்பூர்வ அறிக்கைகள் கூறுகின்றன. அட்டாகாமாவின் மற்ற இடங்களில் 50 ஆண்டு காலமாக மழையில்லை என்று அதிகாரப்பூர்வமற்ற அறிக்கைகள் காட்டுகின்றன. மேலும் அதிக வறண்ட பகுதிகளிலும்கூட மழை பதிவு செய்யப்படவேயில்லை. தென்மேற்கு ஆப்ரிக்காவில் உள்ள நாஹீம் பாலைவனத்தில் வருடாந்தர மழை அளவு ஒன்றின் கீழ் எட்டு அங்குலம் முதல் ஆறு அங்குகலம்வரை (0.3 செ.மீ. முதல் 15 செ.மீ.) சஹாராவின் பிராந்தியங்களில் ஒரு இரண்டு ஆண்டுகால பகுதியில் மழைபொழிவு பூஜ்யமாக இருந்தது. மழை பொழிவு ஒழுங்கற்றதாக இருக்கக்கூடும். “கோபி பாலைவனத்தில் ஒரு சமயம் ஆடுகள் தண்ணீரில்லாமல் மாண்டு கொண்டிருந்தன. அடுத்த நாள் கடுமையான பெருமழையினால் விலங்குகளும் மக்களும் மூழ்கிப் போய்விட்டனர்” என்றார். ஒரு நீடித்த அனுபவமுடைய பாலைவன கண்டுபிடிப்பாளர்.
விரிவடையும் பாலைவனம்
இன்று செய்தித்தாளின் ஒரு பகுதி பூமியின் பாலைவனங்களைக் குறித்து உலகம் வெளிப்படுத்தும் சோக கருத்துகளுக்கு ஒதுக்கப்படுகிறது. அவை பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளாக இருந்துவந்தபோதிலும் ஏன் இப்பொழுது அந்த பாலைவனங்கள் அவப்பெயரை பெறுகின்றன? நமது மிகப்பெரிய ஏரிகளும் மற்றும் நீரோட்டங்களும் மனிதனால் மாசுப்படுத்தப்பட்டிருக்கிறது. அவற்றின் மீன்கள் மனிதனால் பொறுப்பற்ற விதத்தில் ஆறுகளில் கொட்டக்கூடிய நச்சு நிரம்பிய இரசாயன பொருட்களை உட்கொண்டவையாக இருக்கின்றன. மேலும் மனிதனால் அனுப்பப்படும் விண்வெளி கப்பல் மூலமாக ஆகாயமுங்கூட கோளை சுற்றும் “கழிவு பொருட்களின் காட்சியை கொண்டிருக்கிறது. ஆனால் பாலைவனத்தை பொருத்தமட்டிலோ, அவற்றின் சில பகுதிகளை மனிதன் கீழ்ப்படுத்திக் கொண்டபோதிலும் அவை எதற்காக ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக அறியப்பட்டிருக்கின்றனவோ அவற்றின் இயற்பியல் சார்ந்த குறிப்பிடத்தக்க தனிச்சிறப்புகள் பெரும்பாலானவற்றையும் மற்றும் தாவரங்களையும் விலங்கு வாழ்க்கையையும் அவை இன்னமும் தக்கவைத்துக் கொண்டிருக்கின்றன.
என்றபோதிலும் ஏறத்தாழ ஒவ்வொரு வாரமும் பின்வரும் தலையங்கங்கள் கதையை எடுத்துரைக்கின்றன—“பாலைவனம் பரவுவதானது பஞ்சத்தை குறித்துக்காட்டும் பெருங்கேடாக காணப்படுகிறது” என்று தி நியு யார்க் டைம்ஸ் அறிக்கை செய்கிறது. “ஆப்ரிக்காவினூடே நாசகரமான வறட்சி சாஹெல்-ஐ மற்றொரு பாலைவனமாக மாற்றுகிறது” என்கிறது தி அட்லாண்டா ஜெர்னல் அண்டு கான்ஸ்டிடியூஷன் தலையங்கம். “பாலைவனம் தொடர்ந்து பரவுகிறது,” தி போஸ்டன் க்ளோப். “உலகத்தின் பயிரிடத்தகுந்த நிலம் சீரழிகிறது,” தி டொராண்டோ ஸ்டார். “ஒரே ஆண்டில், பெருமளவான பயிர்நிலத்தை சஹாரா விழுங்கிவிடுகிறது,” என்று அறிவிக்கிறது மற்றொன்று. பரவிவரும் பாலைவன அச்சுறுத்தல் பேரில் ஏராளமாக எழுதப்படுகிறது.
இப்பொழுது தலையங்கத்திற்கு கீழே வாசியுங்கள். “சஹாரா ஒரு ஆண்டிற்கு 6 முதல் 12 மைல்கள் [10 முதல் 20 கி.மீ.] என்ற விகிதத்தில் கடந்த பத்து ஆண்டுகளுக்கு மேலாக அதன் பாலைவன வறண்ட நிலப்பகுதியை தெற்கு புரமாய் விஸ்தரித்திருக்கிறது. படிப்படியாக அதன் தென்னக எல்லையிலுள்ள வரட்சி குறைந்த சாஹேல் பகுதியை இணைக்கிறது” என்று தி நியு யார்க் டைம்ஸ் ஜனவரி 2, 1985 சொல்லுகிறது.
சுமார் 5,20,00,000 ஏக்கர் நிலம் ஒவ்வொரு ஆண்டும் பாலைவனமாக [தரிசுநிலமாக] மாறிவருகின்றன. . . . இந்த பிரச்னை முக்கியமாக ஆப்ரிக்காவிலும், இந்தியாவிலும் மற்றும் தென் அமெரிக்காவிலும் ஏற்படுகிறது” என்று ஜுன் 11, 1984-ன் போஸ்டன் க்ளோப் அறிக்கை செய்கிறது.
பாலைவனம் விரிவடைதலானது சில நாடுகள் நிலைத்திருப்பதையே அச்சுறுத்திக் கொண்டிருக்கிறது. இதில் மாரிடானியா நாடும் உட்படுகிறது. அங்கே சஹாரா பாலைவனம் ஒரு ஆண்டிற்கு 4 மைல்கள் [6 கி.மீ.] என்ற விகிதத்தில் தெற்கே நகர்ந்து செல்வதாக அரசாங்க அதிகாரிகள் சொல்லுகின்றனர். அந்த நாட்டின் மர அடர்த்தியுள்ள பிராந்தியங்களில் சிங்கங்கள் வாழ்ந்த நாட்களை குறித்து மாரிடானியா மக்கள் பேசுகின்றனர். அதே பிராந்தியம் இன்று காய்ந்துபோன மரங்களடங்கிய வறண்ட நிலப்பரப்பாகவும் மற்றும் மணலை வாரி வீசியடிக்கும் நிலமாகவும் இருக்கிறது என்று தி அட்லாண்டா ஜெர்னல் அண்டு கான்ஸ்டிடியூஷன், ஜனவரி 20, 1985-ன் இதழ் சொல்லுகிறது.
விரிவடையும் பாலைவனம் பற்றிய இந்த பூகோள இயல் நிகழ்ச்சி புதிதான ஒன்றல்ல. என்றபோதிலும் இந்த தீய ஊடுருவல் போக்கை வருணிப்பதற்கு ஒரு புதிய [ஆங்கில] வார்த்தை உருவாக்கப்பட்டிருக்கிறது—“டிஸர்ட்டிஃபிக்கேஷன்” [பாலைவனமாக்குதல்] உலகத்தின் சில பாகங்களில் இது வீடுகளில் பேசப்படும் ஒரு சர்வசாதாரண வார்த்தையாக தீவிரமாக ஆகிவருகிறது. பாலைவனமாகும் (தரிசுநிலமாக மாறும்) இக்காரியம் தற்போது சுமார் நூறு நாடுகளை பாதிக்கிறது. முக்கியமாய், மெய்யாகவே பாலைவனத்தால் சூழ்ந்திருக்கக்கூடிய வளர்ச்சியடையாத ஆப்ரிக்க நாடுகளை இது பாதிக்கிறது.
ஐக்கிய நாட்டு சங்கம் பரிகாரம் தேடக்கூடிய ஒரு பிரச்னையாக இது இருக்கிறது. “இதை நாம் ஒரு மாபெரும் பிரச்னையாக நோக்க வேண்டும்” என்றார். காஹபா காரார் என்பவர். இவர் ஐ.நா.சு.அ.-வின் (ஐக்கிய நாட்டு சங்கத்தின் சுற்றுபுரசுழல் அமைப்புத்திட்டம்) பாலைவனமாகுதல் கிளை அலுவலகத்தின் முதல்வர். “இந்த நூற்றாண்டின் முடிவிற்குள்ளாக உலகத்தில் தற்போதுள்ள சாகுபடி நிலத்தின் மூன்றிலொரு பாகத்தை நாம் இழந்துவிடக்கூடும்” என்று அவர் சொன்னார். ஐ.நா. அறிக்கைபடி, பூமியிலுள்ள நிலப்பரப்பின் 35 சதவிகிதத்தை அல்லது சுமார் 4,50,00,000 சதுர மைல்களை மற்றும் 20 சதவிகிதமான அதன் ஜனத்தொகையினரை—சுமார் 85 கோடி மக்களை—பாலைவனம் (தரிசுநிலம்) அச்சுறுத்திக் கொண்டிருக்கிறது. உண்மையில் இந்த உலகில் பாலைவனமாகும் பாதிப்பிற்குள்ளாகாத இடமே இல்லை” என்று சொன்னார் காரார்.
1977-ல் நெய்ரோபி, கென்யாவில் 94 நாடுகள் ஒன்றுகூடி, இந்த நூற்றாண்டின் திருப்பத்திற்குள்ளாக பாலைவனம் பெருகுவதை தடைசெய்யும் “செயல் திட்டம்” ஒன்றை ஒத்துக்கொண்டன. ஆனால் தேசங்களுக்கிடையிலுள்ள பொது வேறுபாட்டின் காரணமாகவும் மற்றும் பண உதவியில்லாமையாலும் இனிமேலும் நடைமுறைபடுத்த முடியாது என்று கருதப்பட்டு அந்த திட்டம் கைவிடப்பட்டது. 2,000 ஆண்டிற்குள்ளாக, பாலைவனம் பரவுதலை நிறுத்துவதற்கு 20-க்கும் மேற்பட்ட ஆண்டுகளுக்கு சுமார் 9,000 கோடி ரூபாய் (90 பில்லியன் டாலர்கள் U.S.) அல்லது ஒரு ஆண்டிற்கு 450 கோடி ரூபாய் (4.5 பில்லியன் டாலர்கள்) செலவு பிடிக்கும் என்று 1980 ஐ.நா.சு.அ. மதிப்பிடுகிறது. இந்த மணல் உலகம் விரிவடைவதை எவ்வளவு வினைமையான பிரச்னையாக வல்லுநர்கள் கருதுகிறார்கள்? “பாலைவனங்களாக (தரிசுநிலங்களாக) மாறும் இந்த தற்போதைய வேகம் தொடருமானால் 2,000-ம் ஆண்டிற்குள்ளாக சூழ்நிலையானது பூகோள பெருந்தீங்காக மாறிவிடும்.
பாலைவனமாக மாறிவரும் இந்த இயல்பான காரியத்தை ஒருவர் எண்ணிப் பார்க்கையில், சில அக்கறை தூண்டும் கேள்விகள் எழுப்பப்படுகின்றன: கட்டுப்படுத்த முடியாததாக தோன்றும் இந்த பாலைவன விஸ்தரிப்பை நற்பயன் அளிக்கக்கூடிய விதத்தில் தடுத்து நிறுத்தக்கூடிய என்ன செயல் திட்டத்தை ஐ.நா. நிறுவக்கூடும்? தொடர்ந்து பாலைவனமாக மாறிவரும் அந்த பூகோள வெருந்தீங்கைக் காணக்கூடிய வருங்கால கூர்நோக்குடைய, நல்ல செயல் திட்டங்களைக் கொண்ட மனிதருடைய எண்ணங்களை இந்த ஐ.நா. அடக்கியாண்டு முழு ஒத்திசைவுக்கு கொண்டுவரக்கூடுமா? “பாலைவனமாக்கப்படுதல்” என்ற வார்த்தையைக் குறித்து ஒரு எழுத்தாளர் சொல்வதாவது, இது, “மனித செயல்கள் காரணமாக பாலைவனம் விரிவடைகிறது என்ற கருத்தைத் தெரிவிக்கும் வார்த்தை” பாலைவனமாக மாறும் அடிப்படை காரணத்தை ஊர்ஜீதப்படுத்துகிறவராய் ஐ.நா.சு.அ. செயலாட்சிதுறை இயக்குநரான டாக்டர் மொஸ்தஃபா கே. டோல்பா சொன்னதாவது: இன்னும் அநேகர் நம்பிக்கை கொண்டிருப்பதுபோல் இதற்கு முக்கிய காரணம் மழையிண்மை அல்ல. ஆனால் மிதமிஞ்சிய வேளாண்மை, மிதமிஞ்சிய புல்மேய்ச்சல், மோசமான நீர்பாசன செயல்முறைகள் மற்றும் காட்டின் மரங்களை வெட்டி அகற்றுதல் ஆகியவற்றின் மூலம் மனிதர் இயற்கை மூலப்பொருளை மிதமிஞ்சி பயன்படுத்துவதே இதற்கு முக்கிய காரணம்.”
ஜனத்தொகை அதிகரிக்கும்போதும் மற்றும் ஜனத்தொகை வளர்ச்சியை தாங்கமுடியாத புதிய இடங்கள் குடியேற்றுவிக்கப்படும்போதும் இயற்கை மூலப்பொருட்களை மிதமிஞ்சி பயன்படுத்தும் இப்படிப்பட்ட செயலானது தீவிரப்படுத்தப்படுகிறது. அதிகரித்துக் கொண்டிருக்கும் பொதுமக்களுக்கு உணவளிப்பதற்கும் வீடுகளை கட்டுவதற்கும் அடுப்பு எரிக்க விறகுகளை பயன்படுத்துவதற்கும் கண்ணுக்கெட்டிய ஒவ்வொரு மரமும் வெட்டி வீழ்த்தப்படுகிறது. இப்பொழுது மரம் மற்றும் கட்டைகரி பற்றாக்குறையும் வந்துவிட்டது,” என்கிறார் மாரிட்டானியா, ஆப்ரிக்காவின் இயற்கை பாதுகாப்பு இயக்குநர். “இன்னமும் ஜனங்கள் வெட்டிக்கொண்டே இருக்கிறார்கள். அல்லா தங்களுக்கு மழையையும் மரத்தையும் அருளுவார் என்று அவர்கள் நினைக்கிறார்கள்.” அவர்களுடைய ஆடுமாடுகள் உயிர்ப்பிழைப்பதற்காக வேண்டி தங்களால் இயன்ற அளவுக்கு தாவரங்களின் ஒவ்வொரு தழையையும் சாப்பிட்டுவிடுகின்றன. இதன் விளைவானது வெறுமையாக்கப்பட்ட இந்த நிலமானது மிகக் கடுமையான சூரிய உஷ்ணத்தால் வாட்டப்பட்டு கடினமான கற்களாகிவிடுகிறது. தாவர வளர்ச்சிக்கு தேவையான நுண்ம உயிரினத்தை கொன்றுவிடுகிறது. தாவரங்கள் குறைகையில் பாலைவனம் (தரிசுநிலம்) அதிகரிக்கிறது.
அடுத்தபடியாக வருவது மணல் வாரிக் காற்று, சுற்றியுள்ள வறண்ட நிலங்களிலிருக்கும் அந்த மணல் காற்றினால் வாரியெடுக்கப்பட்டு, மற்ற நிலப் பகுதியின் மீது கொட்டப்படுகிறது. இப்படியாக வரட்சி குறைந்த நிலப்பகுதி விழுங்கப்படுவதை நிறுத்த ஒன்றும் செய்ய முடியவில்லை. தெருக்களில் குவிகிறது மற்றும் வீடுகளுக்குள் வீசியடிக்கப்படுகிறது. மக்கள் அங்கிருந்து வெளியேறி புதிய பிராந்தியங்களுக்கு செல்லும்படி செய்துவிடுகிறது. இப்படியாக இது முடிவடையாத ஒரு சுழற்சியாக தோன்றுகிறது.
ஒரு காலத்தில் எங்கு மிகுதியான மழை பொழிவு இருந்ததோ அங்கே புதிதாக வெறுமையாக்கப்பட்டிருக்கும் நிலமானது சூரிய ஒளியை எதிரொளிக்கிறது. இது வளிமண்டலத்தின் வெப்பஞ்சார்ந்த விசையியக்க வியலை பாதிப்பதாகவும், மழை பொழிவை தடுக்கக்கூடியதாகவும் பாலைவனம் விரிவடைவதை துரிதப்படுத்துவதாகவும் பின்பு அந்த நிலை தீவிரமடைவதாகவும் வல்லுநர்கள் சொல்லுகின்றனர். மக்கள் தங்கள் விதையை விதைப்பதற்காக வறண்ட நிலத்தை தோண்டுகின்றனர், ஆனால் கடைசியில், எதுவும் முளைப்பது இல்லை. தேசத்தை பஞ்சம் பின்தொடர்ந்து வேட்டையாடுகிறது. இது எப்பொழுது முடிவடையும்?
பாலைவனம் மெய்யாகவே புஷ்பத்தைப்போல செழிக்குமா?
சுமார் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பாக, இந்த பூமியிலுள்ள பாலைவனத்தின் எதிர்காலம் மற்றும் அவற்றின் அற்புதமான மாற்றம் குறித்து எழுதுவதற்கு தீர்க்கதரிசியாகிய ஏசாயா பரிசுத்த ஆவியினால் ஏவப்பட்டான். இது ஐக்கிய நாட்டு சங்கத்தின் ஒரு “செயல்திட்டத்தின்” மூலம் அல்ல. ஆனால் இயேசு கிறிஸ்துவினுடைய ராஜ்ய ஆட்சியின் மூலமாக மட்டுமே நிகழும். மேலும் இங்கே இந்த மகத்தான தீர்க்கதரிசனத்தில் இப்பொழுது நிறைவேற்றமடைவதற்கு வெகு அருகாமையிலிருக்கக்கூடிய அந்த வார்த்தை மனமுறிவுக்குரிய ஒன்றல்ல, ஆனால் நம்பிக்கைக்குரிய ஒன்றாகும். “வனாந்தரமும் வறண்டநிலமும் மகிழ்ந்து, கடுவெளி [பாலைவனம், NW] களித்து, புஷ்பத்தைபோலச் செழிக்கும். அது மிகுதியாய்ச் செழித்துப்பூரித்து ஆனந்தக்களிப்புடன் பாடும்; லீபனோனின் மகிமையும், கர்மேல் சாரோன் என்பவைகளின் அலங்காரமும் அதற்கு அளிக்கப்படும்; அவர்கள் கர்த்தருடைய மகிமையையும், நமது தேவனுடைய மகத்துவத்தையும் காண்பார்கள். . . . வனாந்தரத்திலே தண்ணீர்களும் கடுவெளியிலே [பாலைவனத்திலே, NW] ஆறுகளும் பாய்ந்தோடும். வெட்டாந்தரை தண்ணீர்த்தடாகமும், வறண்ட நிலம் நீரூற்றுகளுமாகும்; வலுசர்ப்பங்கள் தாபரித்துக்கிடந்த இடங்களிலே புல்லும் கொறுக்கையும் நாணலும் உண்டாகும்.”—ஏசாயா 35:1-7.
காற்றினால் வாரியடிக்கப்படக்கூடியதும், சுட்டெரிக்கப்படக்கூடியதுமான இந்த பூமியிலிருக்கும் பாலைவனங்களின் மணலுக்கு பரிசுத்த ஆவியினால் ஏவப்பட்டு எழுதப்பட்டிருக்கும் வாக்களிக்கப்பட்ட எதிர்காலம் இதுவே. (g86 3/22)
[அடிக்குறிப்பு]
a One sq mi = 2.6 sq km.
[பக்கம் 26-ன் சிறு குறிப்பு]
“ஒரு சில ஆண்டுகளுக்கு ஒருமுறை மூடுபனி இருக்கிறது—ஆனால் அதன் துளிகளோ வெகு கொஞ்சம்.”
[பக்கம் 27-ன் வரைப்படம்]
(முழு வடிவத்திலுள்ள படத்திற்கு புத்தகத்தைப் பார்க்கவும்)
உலகத்தின் பாலைவன பகுதிகள் வெள்ளை நிறத்தால் காட்டப்படுகிறது