உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • g97 2/8 பக். 14-17
  • வனாந்தரமாய் விளைநிலம் மாறுகையில்

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • வனாந்தரமாய் விளைநிலம் மாறுகையில்
  • விழித்தெழு!—1997
  • துணை தலைப்புகள்
  • இதே தகவல்
  • வனாந்தரங்கள் மாறுபடுகின்றன, வரையறைகளும் மாறுகின்றன
  • வனாந்தரமயமாக்குதல்
  • மூலகாரணங்களும் விளைவுகளும்
  • உடனடி தீர்வு இல்லை
  • ‘வனாந்தரம் களிக்கும்’
  • விரிவடையும் பாலைவனம் அவை மெய்யாகவே புஷ்பத்தைப்போல செழிக்குமா?
    விழித்தெழு!—1987
  • உலகை கவனித்தல்
    விழித்தெழு!—2001
  • உலகை கவனித்தல்
    விழித்தெழு!—1998
  • உலகத்தைக் கவனித்தல்
    விழித்தெழு!—1994
மேலும் பார்க்க
விழித்தெழு!—1997
g97 2/8 பக். 14-17

வனாந்தரமாய் விளைநிலம் மாறுகையில்

கிட்டத்தட்ட 100 நாடுகளில், விளைநிலம் மெல்லமெல்ல வனாந்தரமாய் மாறிவருகிறது. அதனால் அது 90 கோடி மக்களைக் காட்டிலும் அதிகமானோரின் வாழ்க்கையைப் பாதிக்கிறது என்று சொல்லப்படுகிறது. மேலும் உலகளவிலான வருவாயில் ஆண்டுதோறும் மதிப்பிடப்பட்ட 4,200 கோடி டாலர் பணத்தை அது நஷ்டப்படுத்துகிறது என்றும் சொல்லப்படுகிறது. ஏழை மக்கள் வாழும் பகுதி மிக மோசமாக பாதிக்கப்பட்டிருந்தாலும் (அவற்றில் 81 நாடுகள், வளரும் நாடுகள்), வனாந்தரமயமாக்குதல் ஒவ்வொரு கண்டத்திலும் உள்ள நாடுகளை அச்சுறுத்துகிறது.

ஐக்கிய நாடுகள் சுற்றுச்சூழல் திட்டம் (UNEP) வனாந்தரமயமாக்குதலை “மிக மோசமான பூகோள சுற்றுச்சூழல் பிரச்சினைகளில் ஒன்று” என்று அழைக்கிறது. அதே சமயத்தில், “வனாந்தரம் விரிவடைந்து வருவதில்லை” என்றும் ஆய்வாளர்கள் கூறுகின்றனர். அது எப்படி?

வனாந்தரங்கள் மாறுபடுகின்றன, வரையறைகளும் மாறுகின்றன

ஆப்பிரிக்காவின் சாஹில் பகுதியில் ஏற்பட்ட நீண்ட வறட்சிக்குப் பிறகு (1968-73), வனாந்தரங்கள் விளைநிலங்களை மேற்கொள்ளுவது பற்றிய கற்பனை மக்களின் மனங்களில் தெளிவாகப் பதிந்தது. என்றபோதிலும், அப்போது விஞ்ஞானிகள் விளக்கின “அடுத்தடுத்து வரும் துக்கமும் அழிவும் பற்றிய காட்சிகள், ஒப்பிடுகையில் குறைந்த கால அளவில் சேகரிக்கப்பட்ட குறைந்தளவு தகவலின் அடிப்படையில் ஒரு திருத்தமற்ற கருத்தை அளித்தன” என்று நெப்ராஸ்கா பல்கலைக்கழகத்தில் (அ.ஐ.மா.) சர்வதேச வறட்சி தகவல் மையத்தின் இயக்குநர் டானல்ட் ஏ. வில்ஹைட் கூறுகிறார்.

உயிர் நிறையைக் (உயிர்ப்பொருட்களின் அளவு [biomass]) கண்டறியும், தொழில் நுட்பத்தில் மிகவும் முன்னேற்றமடைந்த முறையில் எடுக்கப்பட்ட செயற்கைக்கோள் படங்கள், உலர்ந்த மற்றும் ஈரமான காலங்களின்போது, தாவரங்களின் அளவும் மாறுபடுவதைக் காட்டுகின்றன. இந்த மாற்றங்களே, “வனாந்தரம் விரிவதாகவும் சுருங்குவதாகவும் தோன்றச் செய்கின்றன” என்று நிபுணர்கள் கூறுகின்றனர். ஆகவே, வனாந்தரங்கள் “மாறுபடுகின்றன” ஆனால் எப்பொழுதும் “விரிவடைபவையாய்” இல்லை. அப்படியிருந்தாலும், “வனாந்தரமயமாக்குதல் நிகழ்ந்து வருகிறது” என்று டாக்டர் வில்ஹைட் அழுத்திக் கூறுகிறார். ஆனால் இது உண்மையில் எதை அர்த்தப்படுத்துகிறது?

வனாந்தரமயமாக்குதல்

“வனாந்தரமயமாக்குதல்” என்பது வனாந்தரங்கள் விரிந்து சுருங்குவதுடன் பெரும்பாலும் குழப்பிக்கொள்ளப்படுகிறது. என்றபோதிலும், வனாந்தரமயமாக்குதல், வித்தியாசமான நிகழ்வைக் குறிப்பிட்டுக் காட்டுவதாய் ஒரு தொகுதியைச் சேர்ந்த ஆய்வாளர்கள் விளக்குகின்றனர். இருந்துவரும் வனாந்தரங்களின் ஓரத்தில் விரிந்து சுருங்குதல் நடைபெறும்போது, வனாந்தரமயமாக்குதல் மிதமிஞ்சி வறட்சியான பகுதிகளில் நிகழுகிறது. அவற்றுள் சில எந்தவொரு வனாந்தரத்திலிருந்தும் தொலைதூரத்தில் இருக்கலாம். பூமியின் நிலப்பரப்பில் 35 சதவீதத்தை உருவாக்கும் அப்படிப்பட்ட வேளாண்மைக்குரிய, ஏராளமான பரப்பளவுடைய வறண்ட நிலப்பகுதிகள், மெல்லமெல்ல வனாந்தரங்களாகி வருகின்றன. அந்தச் சம்பவமே இப்போது வனாந்தரமயமாக்குதல் என்று கருதப்படுகிறது.

ஆனாலும், வனாந்தரமயமாக்குதல் எங்கு நடக்கிறது என்பதைப் பற்றிய பரந்த நோக்கின் மத்தியிலும், இரண்டு சம்பவங்களுக்கு இடையில் இருக்கும் குழப்பமும் தொடர்ந்து இருந்துவருகிறது. ஏன்? அபிவிருத்தி சம்பந்தமான பிரச்சினைகளை விசேஷமாய்க் கையாளும், லண்டனில் தலைமைக் காரியாலயத்தைக் கொண்ட ஒரு தகவல் அமைப்பான பானாஸ் ஒரு காரணத்தைக் குறிப்பிட்டுக் காட்டுகிறது. சில சமயங்களில், “‘வனாந்தரமயமாக்குதல்’ என்ற சிக்கலான முறைக்காக அரசியல் ஆதரவைப் பெறுவதைவிட, வனாந்தரங்களை விரிவாக்குவதைப் பற்றிப் பேசி, அரசியல் ஆதரவைப் பெறுவது எளிது என்பதனால், கொள்கையை ஏற்படுத்துபவர்கள் வனாந்தரங்களை விரிவாக்குவதைப் பற்றித் தொடர்ந்து பேசுகின்றனர்.”

“மாறிவரும் அறிவு, ‘வனாந்தரமயமாக்குதல்’ உண்மையில் என்ன என்பதைப் பற்றி கணிசமானளவு சர்ச்சையைத் தூண்டுவித்துள்ளது” என்று பானாஸ் குறிப்பிட்டுக் காட்டுகிறது. என்ன பிரச்சினை? வனாந்தரமயமாக்குதலுக்குக் காரணம் மனிதரா அல்லது சீதோஷ்ணநிலையா என்பது. முதலில், வனாந்தரமயமாக்குதலை, “பெரும்பாலும் மனிதன் விளைவிக்கும் கேட்டால், வறண்ட மற்றும் பகுதி-வறண்ட நிலப்பகுதிகளிலும், வறட்சியாயும் பகுதி-ஈரப்பதமாயும் உள்ள நிலப்பகுதிகளிலும் ஏற்படும் நிலச் சீரழிவு என்று வரையறுக்க ஐநா முன்மொழிந்தது.” (நேரெழுத்துக்கள் எங்களுடையவை.) இந்த வரையறை பல நாடுகளை விசனப்படுத்தியது என்பதாக சுற்றுச்சூழல் மற்றும் அபிவிருத்திக்கான சர்வதேச நிறுவனத்தில் வறண்ட நிலங்களுக்கான திட்ட இயக்குநராகப் பணியாற்றும் காமிலா டூல்மின் கூறுகிறார். ஏனெனில் இது வனாந்தரமயமாக்குதலுக்கான பொறுப்பை மனிதனின்மீது வைக்கிறது. இவ்வாறு, சமீபத்தில், அந்த வரையறையின் கடைசி பகுதி “சீதோஷ்ணநிலை வேறுபாடுகள் மற்றும் மனித நடவடிக்கைகளால் விளைவடைகின்றன” என்று மாற்றப்பட்டது. (நேரெழுத்துக்கள் எங்களுடையவை.) இந்தப் புதிய வரையறை வனாந்தரமயமாக்குதலுக்கான குற்றத்தை மனிதர் மீதும் சீதோஷ்ணநிலை மீதும் சுமத்துகிறது. ஆனால் இது சர்ச்சையைத் தீர்க்கவில்லை. ஏன் தீர்க்கவில்லை?

“வரையறைகள் அதிகரிப்பதும் அதைத் தொடர்ந்த கருத்துவேறுபாடும், உண்மையில், ஆபத்தில் இருப்பதாகக் கருதப்படும் பல நாடுகளுக்கு அதிகப்படியான நிதியைத் திரட்டுவதன் ஒரு முயற்சியாய் இருக்கிறது என்பதாக சில நிபுணர்கள் நம்புகின்றனர்” என்று பானோஸ் கூறுகிறது. தொடர்ந்துவரும் கருத்துவேறுபாட்டின் விளைவானது, “அந்தச் சொற்றொடரே கிட்டத்தட்ட அர்த்தமற்றுப்போகும்படி செய்யப்பட்டிருக்கிறது.” “வனாந்தரமயமாக்குதல்” என்ற சொற்றொடரையே முற்றிலும் விட்டுவிட வேண்டும் என்று உணருவோரும் உள்ளனர். ஆனாலும், அந்த வார்த்தையை மாற்றீடு செய்வது நிச்சயமாகவே அந்தப் பிரச்சினையைத் தீர்த்துவைக்கவோ, அல்லது அதற்கான காரணங்களை நீக்கிவிடவோ போவதில்லை. வனாந்தரமயமாக்குதலுக்குக் காரணங்கள் யாவை?

மூலகாரணங்களும் விளைவுகளும்

ஆலன் கிரேஞ்சரால் எழுதப்பட்ட வனாந்தரமயமாக்குதல் (ஆங்கிலம்) என்ற புத்தகம், மிதமிஞ்சிய சாகுபடி, மிதமிஞ்சிய மேய்ச்சல், மோசமான நீர்ப்பாசன முறைகள் ஆகியவற்றை மூலகாரணங்களாக குறிப்பிட்டுக் காட்டுகிறது. இவற்றில் இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட காரணங்கள் ஒரே சமயத்தில் நிகழும்போது, வனாந்தரமயமாக்குதல் பொதுவாக ஏற்படுகிறது. மேலும், ஜனத்தொகை, சீதோஷ்ணநிலை, மற்றும் சமூக பொருளியல் சார்ந்த நிலைகள் ஆகியவற்றில் ஏற்படும் மாற்றங்கள் போன்ற துணைக் காரணிகள் இப் பிரச்சினையை இன்னும் மோசமாக ஆக்குகின்றன.

வனாந்தரமயமாக்குதலால் ஏற்படும் ஒரு தெளிவான பாதிப்பு, உணவுப்பொருட்களை விளைவிக்க முடியாத வகையில் வறண்ட நிலத்தின் அழிவாகும். இது உலகமெங்கும் நடைபெற்று வருகிறது. ஆனால் குறிப்பாக முழுக்கண்டத்தின் 66 சதவீத நிலப்பரப்பு வனாந்தரமாக அல்லது வறண்ட நிலமாக இருக்கும் ஆப்பிரிக்காவில் இது நிகழ்ந்து வருகிறது. என்றபோதிலும், வனாந்தரமயமாக்குதலால் கூடுதலாக கசப்பான பின்விளைவுகளும் ஏற்படுகின்றன. அது போருக்கு வழிநடத்துகிறது. “சமூக மற்றும் அரசியல் நிலையற்றுப் போவதற்கும், இரத்தம் சிந்துதல் மற்றும் போர் ஆகியவற்றுக்கும் வழிநடத்தும் சிக்கலான பின்னிப்பிணைந்த காரணங்களில், சுற்றுச்சூழல் சீரழிவு பேரளவு காரணமாய் இருந்துவருகிறது” என்று கிரீன்வார்—என்வைரன்மென்ட் அண்ட் கான்ஃப்ளிக்ட் என்ற புத்தகம் குறிப்பிடுகிறது.

போர்களைத் தடுக்க எடுக்கும் முயற்சிகளும் சுற்றுச்சூழலுக்கு சேதம் விளைவித்து, வறுமையைக் கூட்டுகின்றன. எப்படி? “நிலச் சீரழிவால் விளைவடையும், இயற்கை வளத்தின் குறைபாட்டைப் பற்றி சண்டைகள் போடுவதால், அரசியலில் ஏற்பட்ட நிலையற்ற தன்மையை எதிர்ப்பட்டதால், வன்முறையைத் தடுக்க அரசாங்கங்கள் பெரும்பாலும் ராணுவ முறைகளைப் பயன்படுத்துவதன் மூலம் செயல்படுகின்றன. இந்த விதத்தில், இருப்பில் இருக்கும் பணத்தை அரசாங்கங்கள் வறுமையை ஒழிப்பதற்குப் பயன்படுத்துவதைக் காட்டிலும், ராணுவ வரவுசெலவு திட்டத்திற்கு உட்படுத்துகின்றன” என்று பானோஸ் விளக்குகிறது. என்றபோதிலும், வனாந்தரமயமாக்குதலின் பின்விளைவுகளை எதிர்த்துப் போராடுவதற்குப் பதிலாக, அது ஏற்படுவதற்குக் காரணமாயிருப்பதை எதிர்த்துப் போராடுவதற்கு என்ன செய்யப்படலாம்?

உடனடி தீர்வு இல்லை

13 மாதங்களாக அந்தக் கேள்வியைப் பற்றி சிந்தித்துக்கொண்டிருந்ததற்குப் பின்பு, 100-க்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்த பிரதிநிதிகள், “வனாந்தரமயமாக்குதலை எதிர்த்துப் போராட ஐநா ஒப்பந்தத்தை” ஏற்றுக்கொண்டனர். அதாவது, ஐநா-வின்படி, வனாந்தரமயமாக்குதலை எதிர்ப்பதில் “ஒரு முக்கிய முன்னேற்றப் படியை எடுத்து வைக்கும்” ஒரு திட்டம். அந்த ஒப்பந்தத்தின்படி, மற்றவற்றோடுகூட, வனாந்தரமயமாக்குதலுக்கு எதிராக பயன்படுத்தப்படும் தொழில்நுட்பங்களை வளர்ந்த நாடுகளிடமிருந்து வளரும் நாடுகளுக்கு மாற்றுவது, ஆய்வு மற்றும் பயிற்சித்திட்டங்களை நிறுவுவது, மேலும் விசேஷமாக, உள்ளூர் மக்களின் அறிவை மேம்பட்ட விதத்தில் பயன்படுத்திக்கொள்வது ஆகியவற்றைத் தேவைப்படுத்தியது. (ஐநா கிரானிகில்) இந்தப் புதிய ஒப்பந்தம், வறண்ட நிலம் சீரழிவதைத் தடுத்துநிறுத்துமா?

குறிப்பிடத்தக்க மாற்றத்தை ஏற்படுத்துவதற்கு, வார்த்தைகளும், செயலில் காட்டப்படும் ஆதரவும் தேவை என்று பானோஸ் கூறுகிறது. 1977-க்கும் 1988-க்கும் இடையில், வனாந்தரமயமாக்குதலுக்கு எதிராக எடுக்கும் நடவடிக்கைகளுக்காக ஆண்டுக்கு சுமார் 100 கோடி டாலர் செலவிடப்பட்டது என்று அந்த ஒப்பந்தக் கூட்டத்தை ஒழுங்குபடுத்தியவர்களில் ஒருவரான ஹாமா ஆர்பா டியாலோ அறிக்கை செய்தார். என்றபோதிலும், உண்மையான முன்னேற்றத்தைச் செய்வதற்கு, இந்த 81 வளரும் நாடுகளும் அந்தப் பணத்தைப் போன்று சுமார் நான்கு முதல் எட்டு மடங்கு பணத்தைச் செலவிட வேண்டும் என்று UNEP கூறுகிறது.

ஆனால் அந்தப் பணத்தைக் கட்டப்போவது யார்? “வனாந்தரமயமாக்குதலுக்கு எதிரான வேலைக்கு, தொழில்ரீதியில் முன்னேற்றம் அடைந்த நாடுகளிலிருந்து வேறு வகையில் குறைந்த பணமே கிடைக்கும்,” என்று பானோஸ் எச்சரிப்பதோடு, “வனாந்தரமயமாக்குதலால் துன்புறும் ஏழை நாடுகள், அந்த ஒப்பந்தத்தால் உடனடி தீர்வு கிடைக்குமென்று எதிர்பார்ப்பது நிஜமாய் நடப்பதல்ல” என்றும் அது கூறுகிறது. என்றாலும், உலகளவில் வனாந்தரமயமாக்குதலைப் பற்றி இப்போது கலந்தாலோசிக்கப்பட்டு வருவது, பொதுப்படையாய் அறியப்பட்டு வரும் அளவை அதிகரிக்கிறது; “அதுவே ஒரு சாதனையாய் இருக்கிறது” என்று நம்பிக்கையான ஒரு குறிப்பைக் கூறி பானோஸ் முடிக்கிறது.

‘வனாந்தரம் களிக்கும்’

கடந்த பத்தாண்டுகளின்போது, வனாந்தரமயமாக்குதல் தொடர்ந்து நடைபெற்றால் ஏற்படப்போவதாய் இருந்த பேரழிவைப் பற்றிய அதிகப்படியான உணர்வை மனிதகுலத்திற்கு ஏற்படுத்துவதில் பல ஆண்களும் பெண்களும் வெற்றியடைந்திருக்கின்றனர். “மனிதன் வருமுன் காடு, வந்தபின் வனாந்தரம்” போன்ற வாசகங்கள் அந்தச் சூழ்நிலையை மாற்றும்படி மக்களுக்கு அழைப்பை விடுக்கின்றன.

ஆனாலும், வனாந்தரமயமாக்குதல் பிரச்சினை சிக்கலானது என்பதை நன்கறிந்தவர்களும் உணருகின்றனர். இன்றைய உலகளாவிய பிரச்சினைகளைக் கையாளும்போது, எவ்வளவு நல்லெண்ணமுடைய மனிதனுக்கும் வரைமுறைகள் இருக்கின்றன என்பதைப் போற்றும் அளவுக்கு அவர்கள் நடைமுறையானவர்களாய் இருக்கின்றனர்.

என்றபோதிலும், அதே சமயத்தில், கோளத்தின் எதிர்காலத்தைப் பற்றி கவலைப்படும் ஆட்களுக்கு, இந்தப் பூமியின் படைப்பாளர் இதையும், இன்னும் பிற சுற்றுச்சூழல் பிரச்சினைகளையும் பலனுள்ள விதத்தில் கையாளுவார் என்பதை அறிவது உற்சாகமளிப்பதாய் இருக்கும். மேலும், பைபிளில் பதிவாகியுள்ள கடவுளுடைய வாக்குகள் எப்பொழுதுமே உண்மையாய் நடந்தேறியுள்ளதால், வனாந்தரம் மற்றும் சீரழிந்த நிலத்தின் எதிர்காலத்தைப் பற்றி ஏசாயா தீர்க்கதரிசி எழுதும்படி ஏவியிருப்பதன் நிறைவேற்றத்தைக் காண எதிர்பார்த்து இருப்பது நடைமுறையானதே. அவர் இவ்வாறு எழுதினார்: “வனாந்தரமும் வறண்ட நிலமும் மகிழ்ந்து, கடுவெளி களித்து, புஷ்பத்தைப்போலச் செழிக்கும். . . . வனாந்தரத்திலே தண்ணீர்களும், கடுவெளியிலே ஆறுகளும் பாய்ந்தோடும். வெட்டாந்தரை தண்ணீர்த்தடாகமும், வறண்ட நிலம் நீரூற்றுகளுமாகும்.” (ஏசாயா 35:1-7; 42:8, 9; 46:8-10) சமீப எதிர்காலத்தில், வனாந்தரமயமாக்குதல் நிறுத்தப்பட்டு மாற்றியமைக்கப்படுவதைக் காண்பது எவ்வளவு மகிழ்ச்சியாய் இருக்கும்!

[பக்கம் 16-ன் பெட்டி]

வனாந்தரம் அல்லது வறண்ட நில சதவீதம்

ஆசியா 46%

ஆப்பிரிக்கா 66%

ஆஸ்திரேலியா 75%

உலகம் 41%

ஐரோப்பா 32%

தென் அமெரிக்கா 31%

வட அமெரிக்கா 34%

[பக்கம் 17-ன் பெட்டி]

நீர்ப்பாசனம் விளைநிலத்தை வனாந்தரமாக மாற்றுகிறதா?

நீர்ப்பாசனம்—நிலத்துக்கு நீர் பாய்ச்சுதல்—விளைநிலத்தை வனாந்தரமாக மாற்ற முடியுமா? ஆம், முறையற்ற நீர்ப்பாசனம் அவ்வாறு மாற்றுகிறது. நீர்ப்பாசனம் செய்யப்பட்ட நிலம் சரியாக வடிக்கப்படாவிட்டால் இது நிகழுகிறது. முதலில், அந்த மண்ணில் நீர் தேங்கிவிடுகிறது; பிறகு அது உவர்மண்ணாகிறது; அதன் பிறகு, அதன் மேற்பரப்பில் உப்புப் படிந்த ஓடு உண்டாகிறது. “புதிய நீர்ப்பாசன முறைகள் ஆரம்பிக்கப்படுகையில், வெகுவேகமாய், முறையற்ற நீர்ப்பாசனம் நிலத்தை வனாந்தரமாக மாற்றிவருகிறது” என்று பானாஸ் குறிப்பிடுகிறது.

[பக்கம் 16-ன் வரைப்படம்]

வனாந்தரம்

ஆபத்தில்

[படத்திற்கான நன்றி]

Mountain High Maps® Copyright © 1995 Digital Wisdom, Inc.

[பக்கம் 15-ன் படங்கள்]

விளைநிலம் மெல்லமெல்ல வனாந்தரமாய் மாறிவருகிறது

    தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்