பண்டைக்கால தொழில்நுட்பம்—நவீனகால அதிசயம்
“பூமியிலே மிக உஷ்ணமான, மிக தரிசான இடங்கள் ஒன்றில் உள்ள அந்த நகரம் [டுர்ஃபான்], பசுமையான ஒரு பாலைவனச்சோலையாகத் திகழ்கிறது. 2,000 வருடத்திற்கு முற்பட்ட அந்தத் தொழில்நுட்பத்திற்கு நன்றி,” இவ்வாறு அறிக்கை செய்தது கனடாவில் உள்ள டோரன்டோவின் தி க்ளோப் அன்ட் மெய்ல்.
டுர்ஃபான் சீனாவில் உள்ள மிக உஷ்ணமான நகரம் என்று மட்டும் அல்ல, ஆனால் பூமியின்மீதுள்ள மிக உஷ்ணமான வறண்ட இடங்களில் ஒன்று எனவும் பெயர்பெற்றதாயிருந்தது. அதன் சுமார் 1,80,000 மக்கள், டக்ளா மக்கான் பாலைவனத்தின் தொடர்ச்சியாகிய, டுர்ஃபான் பள்ளத்தாக்கின் வடமுனையில் வாழ்கின்றனர். மழை பெய்தல் அறியப்படாததாக இருக்கிறது. கடுமையான உஷ்ணத்தின் காரணமாக, பெய்யும் சிறிதளவு மழையும் பூமியில் விழும் முன்பே ஆவியாகிவிடுகிறது. கோடை மாதங்களின்போது, நிழலில் பொதுவாகவே தட்பவெப்பம் 54 டிகிரி செல்சியஸ்-ஐ அடைகிறது.
எனினும், டுர்ஃபானைச் சுற்றி சுமார் 8,000 ஏக்கர் பரப்பிற்கு மரங்களும் புதர்ச்செடிகளும் காணப்படுகின்றன. இவை இந்நகரின் எல்லைக் கோட்டைச்சுற்றி அடிக்கடி வீசியடிக்கும் மணற்புயல்களிலிருந்து அவ்வூர் மக்களைக் காப்பாற்ற உதவுகின்றன. இந்தப் புயல்கள் தக்ல மகான் பாலைவனத்தில் தொடங்கி கட்டடங்களை முழுவதும் புதைத்து, செழிப்பான வயல்வெளிகளை மூடியழிக்கும் அளவுக்குப் பெரிய அளவுகளில் மணலை வாரிக்கொண்டுபோகின்றன. இவ்வாறு மரங்களும் புதர்ச்செடிகளும் நகரத்தின் பாலைவனச்சோலைகளை, பாலைவனத்தின் அழிவுசக்திகளிலிருந்து பாதுகாக்கின்றன.
இத்தகைய சுழன்றெழுகிற மணற்புயல்கள் மற்றும் சுட்டெரிக்கும் தட்பவெப்பநிலை போன்ற எதிர்ப்புச் சூழலின் மத்தியிலும், டுர்ஃபான் ஒரு விவசாய மையமாகத் திகழ்ந்துவருகிறது. இந்த இடம் பாலைவனப் பேரீட்சை, திராட்சை, முலாம்பழங்கள், மாதுளம்பழங்கள், பீச், வாதுமைப்பழங்கள், ஆப்பிள், கத்தரிக்காய், வெங்காயம், கோதுமை, மற்ற தானியவகைகள், சீனாவில் வளரும் நீண்ட இழைமவகை பருத்தி போன்றவை விளையும் பல்வகை அயல்நாட்டு உணவுப் பொருட்களின் ஒரு சிறப்பங்காடியைப் போன்று விளங்குகிறது. நினைவுபடுத்திப் பார்க்கமுடிந்தவரை டுர்ஃபான் தனது விவசாயப் பொருட்களின் தரத்திற்கும் வகைகளுக்கும் அறியப்பட்டு வந்திருக்கிறது. ஆயிரக்கணக்கான வருடங்களாக, செழிப்பு மிக்க ஒரு பாலைவனச்சோலையில் செழித்தோங்கும் ஓர் இனமாக இருந்து வந்திருக்கிறது.
அத்தகைய அதிசயமான வெற்றி வரலாற்றைக் காத்துவரும் 2,000 வருடத்திற்கு முற்பட்ட தொழில்நுட்பம் என்ன? அந்நகரம் தனது வெற்றிக்கு, “மனிதவர்க்கத்தின் மிகச்சிறந்த புத்திக்கூர்மையுள்ள மற்றும் நீடித்துழைக்கும் பொறியியல் வேலைப்பாடுகளில் ஒன்றான பண்டைக்கால நீர்ப்பாசன அமைப்புக்கு” கடமைப்பட்டிருக்கிறது என தி க்ளோப் அன்ட் மெய்ல் வலியுறுத்திக்கூறுகிறது. அந்தச் செய்தித்தாள் மேலும் கூறுகிறது: “[டுர்ஃபான்] செழித்திருப்பதன் இரகசியம், நீர்ப்பாசன சுரங்கப்பாதைகளாலும் கிணறுகளாலுமான வியக்கத்தக்க ஒரு வலைப்பின்னலேயாம். உள்ளூர் உவிகரின் பேச்சுவகையில் இது காரெட்ஸ் என்று வழங்கப்படுகிறது. இது வடமேற்குத் திசையில் 80 கிலோமீட்டர் [50 மைல்] தொலைவிலுள்ள, பனிமூடிகிடக்கும் டியன் ஷான் மலைகளிலிருந்து ஓடிவரும் தண்ணீரைச் சேகரிக்கிறது.” இந்த நேர்த்தியான நீர்ப்பாசன அமைப்பை உருவாக்கும் நூற்றுக்கணக்கான சுரங்கப்பாதைகள் மூலம் நிலத்திற்கடியில் கொண்டுசெல்லாவிட்டால், இத்தண்ணீர் நகர கால்வாய்களுக்குச் செல்லுமுன்பே ஆவியாகிப்போக வாய்ப்பிருக்கிறது.
உவிகர்கள் தங்களுடைய நீர்ப்பாசன அமைப்பை உருவாக்குவதற்கு வெகு காலத்திற்கு முன்பே, பண்டைக்கால பெர்சியர்கள் இதேபோன்ற நீர்ப்பாசன சுரங்கப்பாதைகளாலான ஒரு வலைப்பின்னலையே உபயோகித்து வந்தனர். என்ஸைக்ளோப்பீடியா ப்ரிட்டானிக்கா இவ்வாறு கூறுகிறது: “பெர்சியர்கள் மலைகளினுள் நிலத்துக்கடியில் பெரும்பாலும் நூற்றுக்கணக்கான அடி ஆழத்தில் 12 மைல் (19 கிலோமீட்டர்) நீளத்திற்குச் சுரங்கப்பாதைகளை, கானாட்களை தோண்டி, நிலத்தடி நீர்மூலங்களை உருவாக்கினர்.” உண்மையிலேயே, இந்தப் பண்டைக்கால நீர்ப்பாசன தொழில்நுட்பம் நவீனகாலத்திலும்கூட ஓர் அதிசயமாகவே இருக்கிறது. ஏனென்றால் பூமியில் அதிக உஷ்ணமும் மிக வறட்சியும் உள்ள இடங்களில் ஒன்றிலுங்கூட ஒரு பாலைவனச்சோலையைக் காத்துவருகிறது.
பழைய மற்றும் புதிய தொழில்நுட்பங்கள் பாலைவனங்களை அழகிய தோட்டங்களாக மாற்றுகையில், அண்மையில் தமது ராஜ்ய அரசாங்கத்தின் மூலம், யெகோவா மனித குடும்பத்தின் திளைப்புக்கு, எல்லா பாலைவனங்களையுமே பூத்துக்குலுங்கச் செய்வார். யெகோவாவின் தீர்க்கதரிசி இவ்வாறு கூறுகிறார்: “வனாந்தரமும் வறண்ட நிலமும் மகிழ்ந்து, கடுவெளி களித்து, புஷ்பத்தைப்போலச் செழிக்கும். அது மிகுதியாய்ச் செழித்துப் பூரித்து ஆனந்தக்களிப்புடன் பாடும்; லீபனோனின் மகிமையும், கர்மேல் சாரோன் என்பவைகளின் அலங்காரமும் அதற்கு அளிக்கப்படும்; அவர்கள் கர்த்தருடைய மகிமையையும், நமது தேவனுடைய மகத்துவத்தையும் காண்பார்கள்.”—ஏசாயா 35:1, 2. (g93 2/22)