ஏய்ட்ஸ்—உலக சரித்திரத்தில் ஈடிணையற்றது!
1981 வரையாக, அத்தனை அண்மைக் காலம் வரையாகவும் ஏய்ட்ஸ் (Acquired Immune Deficiency Syndrome) என்ற நோய் பொதுவாக அறியப்படாத ஒன்றாகவே இருந்தது. இப்பொழுது அது ஏறக்குறைய ஒவ்வொரு கண்டத்துக்கும் பரவி, உலகத்தைக் கலவரத்துக்குள்ளாக்கியிருக்கிறது.
ஏய்ட்ஸ், மனிதனின் தடைக் காப்பு அமைப்பை—நோயை எதிர்க்கும் உடலின் இயற்கையான ஆற்றலைத் தாக்குகிறது. இதனால் தாக்கப்படுகிறவர் புற்று நோய்க்கும் உயிரைப் போக்கிவிடக்கூடிய மற்ற நோய்களுக்கும் எதிராக தற்காப்புச் செய்துக்கொள்ள இயலாதவராக ஆகிவிடுகிறார். லட்சக்கணக்கான அமெரிக்க நாட்டவரும் பிற தேசங்களிலுள்ள நூறாயிரக்கணக்கான மற்றவர்களும் ஏற்கெனவே இந்தப் பயங்கரமான நோயினால் தாக்கப்பட்டிருக்கிறார்கள்.
1980-81-ல், லாஸ் ஆன்ஜலிஸ் மற்றும் நியு யார்க்கிலுள்ள மருத்துவர்கள், நியுமோசிஸ்ட்டிஸ் காரினி (Pneumocystis carinii)என்றழைக்கப்படும் அபூர்வமாக ஒருவித சளிகாய்ச்சல் நோயாளிகளையும் காப்போஸிஸ் சார்கோமா என்றழைக்கப்படும், சாதாரணமாக மெதுவாக வளரும் புற்றுநோய் நோயாளிகளையும் சந்திக்க ஆரம்பித்தார்கள். இதனால் தாக்கப்பட்டவர்கள் அனைவருமே இளவயது ஆண்புணர்ச்சிக்காரர்களும், போதை மருந்தைத் துர்பிரயோகம் செய்கிறவர்களாகவும் இருந்தார்கள். மருத்துவர்கள் அவர்களின் நோய்க் குறிகளை, “அறியப்படாத ஏதோ ஒரு இயல்வளர்ச்சியின் தடைக் காப்பு சார்ந்த பின்விளைவுகள்” என்பதாக அழைத்தார்கள்.
இந்த நோய்க்கு, “மனிதவர்க்கம் இதுவரை பார்த்திராத மிக மோசமான ஆற்றல் இருப்பதாக “ஐக்கிய மாகாணங்களின் நோய்க் கட்டுப்பாடு மையங்களின் மருத்துவர் வார்ட் கேட்ஸ் பின்னால் தெரிவித்தார். தொற்று நோய் நிபுணர் டாக்டர் ஜான் சீல் இதை ஆமோதித்தார். கடந்த கோடையில், பிரிட்டனின் ஜர்னல் ஆப் தி ராயல் சொஸையிட்டி ஆப் மெடிஸனில், அவர் ஏய்ட்ஸ், “மனித சரித்திரத்தில் ஈடிணையற்ற அளவில் மூன்றாவது உலகின் நுனநெரிசலுள்ள நகரங்கள் மற்றும் கிராமங்கள் முழுவதிலும் உயிரைப் போக்கத்தக்க தொற்று நோயை” உருவாக்க வல்லதாக இருப்பதாக குறிப்பிட்டார்.
உலகம் முழுவதிலும் பரவுகிறது
ஏய்ட்ஸ் முதல் முதலாக 1981-ல் அமெரிக்க ஐக்கிய மாகாணங்களில் காணப்பட்டது. அங்கிருந்து ஆரம்பமாகி இந்த ஒரு தேசத்தில் மட்டுமே, இந்த நோயாளிகளின் எண்ணிக்கை 1985 ஏப்ரலுக்குள் 10,000 ஆகவும் 1986 ஜனவரிக்குள் 16,500 ஆகவும் வளர்ந்துவிட்டிருக்கிறது. ஏற்கெனவே இதனால் 8,400-க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்திருக்கிறார்கள். ஏய்ட்ஸ் ஒரே மாதிரியாக சாவுக்கேதுவானதாக கருதப்படுவதால் மீதமுள்ளவர்களுக்கும் எந்த நம்பிக்கையுமில்லை.
சமீபத்தில், ஏய்ட்ஸ் நோயாளிகளின் எண்ணிக்கை ஒன்பது மாதங்களில் இரண்டு மடங்காவதை அறிக்கை காண்பிக்கின்றது. இந்த வேகம் தொடருமேயானால் பத்தாண்டுகளின் முடிவில் அமெரிக்க நாட்டவரில் 5 லட்சம் பேர் ஏய்ட்ஸினால் பாதிக்கப்பட்டிருப்பார்கள். 1918-19 வரையாக பரவிய ஸ்பானிஷ் காய்ச்சல் என்ற தொற்று நோயினால் இறந்தவர்களின் எண்ணிக்கைக்கு இது ஒத்ததாக இருக்கிறது. ஆகவே ஏய்ட்ஸ் “இந்த அல்லது வேறு எந்த ஒரு நூற்றாண்டின் மிகவும் கொடிய தொற்று நோய்களில் ஒன்று” என்பதாக அழைக்கப்பட்டிருப்பதுக் குறித்து ஆச்சரியப்படுவதற்கில்லை.
அறியப்பட்ட ஏய்ட்ஸ் நோயாளிகளில் பெரும்பாலானோர் முதலில் அமெரிக்க ஐக்கிய மாகாணங்களில் இருந்தபோதிலும் சீக்கிரத்தில் ஏய்ட்ஸ் உலகம் முழுவதிலும் பரவியது. தி நியு யார்க் டைம்ஸ் இவ்விதமாக அறிவித்தது: “ஜெனீவாவிலும் பாரிஸிலும் ஏய்ட்ஸின் அதிகரிப்பு லாஸ் ஆன்ஜலீஸோடு ஒப்பிடத்தக்க வகையில் இருக்கிறது. ஐக்கிய மாகாணங்களுக்கு வெளியே, அதன் அதிகரிப்பை இது காண்பிக்கிறது.” 1985 அக்டோபர் 28, டைம் பத்திரிகை பின்வருமாறு சொன்னது: “300 நோயாளிகளைக் கொண்ட மேற்கு ஜெர்மனியில், HTLV-III கிருமிகளைக் கொண்டவர்கள் 1,00,000 பேர் இருப்பதாக ராபர்ட் காக் நிறுவனம் மதிப்பிடுகிறது.”
கடந்த வசந்த கால அறிக்கை ஒன்றின்படி ஐரோப்பாவில் இந்நோய் இருப்பதாக கண்டுபிடிக்கப்பட்ட நோயாளிகளில் 61 சதவிகிதத்தினர் ஒரு வருடத்துக்குள்ளும் 83 சதவிகிதத்தினர் மூன்று வருடங்களுக்குள்ளும் உயிரிழந்தனர்.
காரணத்தை அடையாளங் கண்டுகொள்ளல்
1984-ம் ஆண்டின் முற்பகுதியில் வெவ்வேறு கண்டங்களிலுள்ள இரண்டு வெவ்வெறு ஆய்வு குழுக்கள், ஏய்ட்ஸ் கிருமிகளைத் தனியே பிரித்தெடுத்து விட்டதாக அறிவித்தன. பாரீஸிலுள்ள பாஸ்டர் நிறுவனத்தின் பேராசிரியர் லூக் மான்டேக்னரும் ஐக்கிய மாகாணங்களிலுள்ள தேசீயப் புற்றுநோய் நிறுவனத்தின் டாக்டர் ராபர்ட் கேலோவும் தனித்தனியாக, ஏய்ட்ஸுக்குக் காரணமாக இருக்கக்கூடிய கிருமிகளைத் தனியே பிரித்தெடுத்துவிட்டதாக அறிவித்தனர். இந்தக் கிருமி T-4 லிம்போசிஸ்ட்ஸ் (lymphocytes) என்றழைக்கப்படும் இரத்தத்திலுள்ள வெள்ளை அணுக்களின் ஒரு பிரிவைத் தாக்குகிறது. ஆகவே பிரெஞ்சு நாட்டவர் இதை LAV (lyphadenopathy-associated virus) என்றும் அமெரிக்க நாட்டவர் HTLV (human T-Cell lymphotropic virus III) என்பதாகவும் அழைத்தனர்.
அனைத்து தேசங்களிலுமுள்ள இந்த நோய் எங்கிருந்து வந்தது? அது எவ்விதமாக இத்தனை வேகமாக பரவியது? என்ன முன்னெச்சரிக்கையான நடவடிக்கைகளை எடுப்பது ஞானமாக இருக்கும்? பின்வரும் கட்டுரைகள் இந்த முக்கியமான கேள்விகளை ஆராய்கின்றன. (g86 4/22)
[பக்கம் 3-ன் படம்]
ஏய்ட்ஸ் கிருமி, வெள்ளை இரத்த அணுவிலிருந்து வளரத் தொடங்குகிறது