ஆர்மெரோ நிலப்படத்திலிருந்து மறைந்துவிட்டது!
கொலம்பியாவிலுள்ள “விழித்தெழ!” நிருபர் எழுதியது
கொலம்பியாவிலுள்ள மக்கள் ஒரு புதிய தினத்தில் உறக்கத்திலிருந்து விழித்துக் கொண்டார்கள். அது 1985, நவம்பர் 14-ம் தேதி, வியாழக்கிழமையாக இருந்தது. காலைச் செய்திகளைக் கேட்க, நான் வானொலியை திருகிவிட்டேன். “ஆர்மெரோ நிலப்படத்திலிருந்து மறைந்துவிட்டது! . . . சின்சைனாவின் ஒரு பகுதி மண் சரிவில் அடித்து செல்லப்பட்டு விட்டது!” என்பதாக அறிவிப்பாளர் சொன்னபோது என் காதுகளை என்னால் நம்பமுடியவில்லை!
சிறிதளவும் நம்ப முடியாதபடி இருந்த இந்தச் செய்தி அறிக்கையை நான் தொடர்ந்து கேட்டேன். போகோட்டாவுக்கு வடமேற்கில் 55 மைல்கள், (90 கி.மீ.) தொலைவில், 28,000 மக்கள் தொகையைக் கொண்ட, பருத்தி மற்றும் நெல் பயிர் செய்யும் நகரமாகிய ஆர்மெரோ, மண், பனிக்கட்டி மற்றும் எரிமலை குழம்பின் சரிவினால் உண்மையில் நிலப்படத்திலிருந்தே துடைத்தெடுக்கப்பட்டு விட்டது. உயிரிழந்தவர்கள் மற்றும் காணாமற்போனவர்களின் எண்ணிக்கை 21,000-க்கும் மேலாகும் என்பதாக மதிப்பிடப்பட்டது. காப்பி பயிர் செய்வதில் முக்கிய இடமாக இருக்கும், மலைக்கு அடுத்தப் பக்கத்திலுள்ள சின்சைனாவுக்கு பாதிப்பு அவ்வளவு அதிகமாக இருக்கவில்லை. அங்கே சுமார் 2000 பேர் உயிரிழந்தனர். ஆனால் இப்படி இது முழுமையாக சேதமடைய அங்கே என்ன நடந்திருந்தது?
நெவேடா டெல் ரூஸின் உச்சி உருகிவழிந்தது
17,550 அடி உயரமுள்ள (5400மீ) நெவேடா டெல் ரூஸின் பனிமூடிய எரிமலை உச்சியின் வடகிழக்கு பக்கம் இரவு 9 மணி அளவில் வெடித்தது. இது பிரமாண்டமான அளவில் கந்தக எரிமலை சாம்பலைக் கக்கியது. இதோடுகூட, எரிமலை வாயிலிருந்து புறப்பட்ட அதிகமான உஷ்ணத்தால் பனிமூடிய சிகரத்தின் பெரும்பகுதி உருகியது. இதன் விளைவாக, பனி சிகரத்திலிருந்து நிதானமாக வழிந்த பளிங்கு போன்ற நீரோடைகள், உயிரைப் போக்கும், சேறும் உருகிய பனிக்கட்டியும் நிரம்பிய வேகமாக ஓடும் நீரேடைகளாக மாறின. வழுவழுப்பான இந்தக் குழம்பு லாகுன்னில்லா நதியோடு கலந்து வேகமாக கீழ்நோக்கி ஓடியது. போகும் வழியில் அதிக வேகமாக மரங்களையும் கற்பாளங்களையும் சேர்த்துக்கொண்டு 32 மைல்கள் (52 கி.மீ.) தூரத்தைக் கடந்து ஆர்மெரோவில் இறங்கியது.
ஒரு மணி நேரத்துக்குப் பிற்பாடு, குறைந்தபட்சம் 40 அடி (12 மீட்டர்) உயரமுள்ள (ஒரு அறிக்கை இதை 90 அடிக்கும் மேல் என்று குறிப்பிட்டது) சேற்றால் ஆன ஒரு சுவர் உருவானது. இது குறுகலான செங்குத்தான பள்ளத்தாக்கிலிருந்து வெளிப்பட்டு சமவெளி தரையில் பாய்ந்து ஒரு கொடிய துடைப்பத்தைப் போல் அது பரவியது. நேரடியாக இதன் பாதையில் இருந்த ஆர்மெரோ துடைத்தழிக்கப்பட்டது. மேட்டு நிலப்பகுதியில் இருந்த சில வீடுகள் மட்டுமே தப்பின.
தெளிவான எச்சரிப்பு இல்லை
தப்பிப் பிழைத்த அநேகரிடம் நான் பேசினபோது, அவர்கள் புதன்கிழமை பிற்பகல் காற்றில் கந்தகத்தின் நெடி அதிகமாக இருந்ததாக தெரிவித்தார்கள். சுமார் 4 மணி அளவில் அமைதலாக நகரத்தின் மேல் சாம்பல் விழ ஆரம்பித்தது. ஆனால் இது அவ்வளவாக பயத்தை உண்டுபண்ணவில்லை. ஏனென்றால் இந்த எரிமலை இவ்விதமாகவே ஏறக்குறைய ஓராண்டு காலமாக செயல்பட்டு வந்தது.
அந்த புதன்கிழமை பிற்பகல், போகோட்டாவிலிருந்து ஆர்மெரோவிற்கு வந்த ஜோர்ஜ் காஸ்டில்லா என்னிடம் பின்வருமாறு சொன்னார்: “யாரோ ஒருவர் சர்ச்சின் ஒலி பெருக்கியின் மூலமாக நகரத்து ஜனங்களை அமைதியாக இருக்கும்படியும், வீடுகளில் தங்கியிருந்து, தங்கள் முகங்களை ஈரமான கைக்குட்டைகளால் மூடிக்கொள்ளும்படியும் சொன்னார். சர்ச்சிலிருந்து கிடைத்த தகவலின்படி, அந்த நபர், உள்நாட்டு பாதுகாப்புத் துறையின் நெருக்கடி குழுவின் உறுப்பினர் ஆவர். மாலை ஆராதனையில் பங்கு கொண்டவர்கள், பயப்படுவதற்கு எந்த காரணமுமில்லை என்பதாக உறுதியளிக்கப்பட்டார்கள்.
ஏழரை மணி அளவில் பலத்த மழைபெய்ய ஆரம்பித்தது. அது திடீரென நின்றுவிட்டது. அதன் பிற்பாடு, வித்தியாசமான மென்மையும் வெப்பமுமான மணல் இறங்கி வந்து சீக்கிரத்தில் கூரைகளையும் தெருக்களையும் மூட ஆரம்பித்தது. இது முற்றிலும் புதிதாக இருந்தது. அதிகமதிகமான ஆட்கள் அசெளகரியமாக உணர்ந்தார்கள். ஒரு சிலர் தங்கள் வீடுகளை பூட்டிவிட்டு, மேட்டு நிலங்களை நோக்கி ஓடிப்போனார்கள். பெரும்பாலான ஆட்கள் தங்கிவிட்டார்கள்.
சிறிது நேரம் கழித்து சரிவுகளின் உயரத்திலிருந்து வானொலி தொலைப்பேசியில் எச்சரிப்பு செய்திகள் ஆர்மெரோவுக்கு அனுப்பப்பட்டன. எரிமலையின் ஒரு பகுதி பிரமாண்டமான வெடிப்புக்குள்ளாகியிருக்கிறது. எனவே ஆர்மெரோ நகரத்தினர் உடனடியாக வெளியேற்றப்பட வேண்டும் என்று எச்சரித்தது. பிற்பகல் 10:13 மணி, செஞ்சிலுவை சங்கத்தின் பிரதிநிதியோடு வானொலியில் பேசிக் கொண்டிருந்த ஆர்மெரோவின் நகர முதல்வர் ராமோன் அன்டோனியோ ராட்டிரிக்ஸ் திடீரென குறுக்கிட்டு உணர்ச்சி மேலிட, “தண்ணீர் வந்துவிட்டது” என்று சொன்னார். இந்த பனிப்பாறைச் சரிவுக்கு 32 மைல்களைக் கடந்துவர 1 1/4 மணி நேரம் ஆகியிருந்தது.
“எரிமலை குழம்பு வருகிறது!”
தப்பிப்பிழைத்தவர்கள் இதே கதையையே என்னிடம் சொன்னார்கள். சிலர், தங்கள் கூரைகளில் பெய்த பலத்த மணல் மழையால் விழித்துக் கொண்டார்கள். மற்றவர்கள் வெளியே சப்தத்தையும் கூக்குரலையும் கேட்டு விழித்துக் கொண்டார்கள். துயரம் மிகுந்தவர்களாய், தங்களின் பிள்ளைகளையும் குடும்ப அங்கத்தினர்களையும் அவர்களின் படுக்கையிலிருந்து எழுப்பினார்கள். திடீரென விளக்குகள் அணைந்து போயின. ஜனங்கள் தங்களுடைய வீட்டுக் கதவுகளை உதைத்து திறக்க முற்பட்டு, “லோக்குனில்லா வருகிறது, ஓடுங்கள் ஓடுங்கள். தண்ணீர் நம்மீது விழுகிறது. எரிமலை குழம்பு வருகிறது!” என்று கூக்குரலிட்டார்கள்.
ஆயிரக்கணக்கான ஆட்கள் தங்களின் வீடுகளைவிட்டு, மோட்டார் வண்டிகளிலும் மோட்டார் சைக்கிள்களிலும், டிரக்குகளிலும் கண்மூடித்தனமாக தெருக்களினூடே தங்கள் வண்டிகளின் ஒலிப்பானை அலறவிட்டு, பாதையிலிருக்கும் ஜனங்களைப் பற்றி கவலைப்படாமல் ஓட்டிக்கொண்டு போனார்கள். அநேகர் சேற்று சுவருக்குள் ஓடி சிக்கிக் கொண்டார்கள். எங்கும் திகில் பரவியது.
இந்த எதிர்பாராத இருளில் நெருங்கிக் கொண்டிருந்த பனிப்பாறைச் சரிவு பயங்கரமான சத்தத்தை உண்டுபண்ணியது. போகோட்டாவிலிருந்து வந்த ஜோர்ஜ் காஸ்டில்லா சொன்னபடி, இரண்டு ஜம்போ ஜெட் விமானங்கள் தாழ்வாக பறக்கும்போது உண்டாகும் சப்தத்தைப் போல அது இருந்தது. இந்த சுழலும் குழம்பு நதிக்கரைகளின் மீது ஏறி வீடுகளுக்கும் மேலே உயர்ந்து, நகரத்தின் மத்திப பாகத்தை துடைத்தழித்து இறங்கிப் போனது. வீடுகள், சர்ச்சுகள், பண்டகச்சாலைகள் மற்றும் அநேக கட்டிடங்கள் முழுமையாக மூடப்பட்டு சீக்கிரத்தில் அடித்துச் செல்லப்பட்டன, குழந்தைகள் தங்கள் பெற்றோரின் கரங்களிலிருந்து பறிக்கப்பட்டு சேற்றில் புதைக்கப்பட்டார்கள் அல்லது அவர்களை மரணத்திலிருந்து காப்பாற்ற முடியாமல் போய்விட்டது.
“இப்பொழுது நாம் உண்மையிலேயே மரிக்கப்போகிறோம்”
ஆர்மெரோவிலுள்ள யெகோவாவின் சாட்சிகளோடு கூட்டுறவுக் கொண்ட 9 குழந்தைகளின் தாய் ஒப்துல்லியா அர்ஸ் மோரில்லே இந்தப் பனிப்பாறைச் சரிவால் முழுமையாக பாதிக்கப்பட்ட போதிலும், இந்த கதையைச் சொல்வதற்கு உயிரோடிருந்தாள். அவள் பின்வருமாறுச் சொன்னாள்: “என் குழந்தைகளோடு நான் தெருவில் ஓடி பெட்ரோல் டிரக்கின் மீது ஏற முயற்சித்தேன். அப்போது தண்ணீர் வந்தது. நான் தரையில் வீழுந்தேன். தண்ணீர் மிக உயரமாக வந்து அதிகதிகமாக சப்தத்தை விளைவித்தது. நான் யெகோவா, யெகோவா என்று கூக்குரலிட்டேன். இப்பொழுது உண்மையிலேயே மரிக்கப் போகிறோம். இது தான் முடிவு! பிற்பாடு தண்ணீரோடு அநேக கட்டைகளும் குச்சுகளும் வந்தன. அவைகளில் ஒன்று எனது இடது பக்கமாக ஒதுங்கியது. அப்போது எனது பிடியிலிருந்த என் சிறிய மகள் நழுவிப்போனாள்.
“ஒரு மரக்கட்டையோடு மின்சார கம்பிகளுக்குள் நான் சிக்கிக் கொண்டேன். காப்பிக் கொட்டை மூட்டைகளின் மேல் ஏறியிருந்த எனது மகள்களில் ஒருத்தி, ‘குனிந்துகொள்!’ என்று சத்தம் போட்டாள். நான் குனிந்து கொண்டபோது என்மேல் ஒரு இரயில் வண்டி ஓடுவதுபோல நான் உணர்ந்தேன். அது சேறாக இருந்தது. என்னால் மேற்கொண்டு பார்க்க முடியவில்லை. ஏனென்றால் நான் சேற்றுக்குள் புதைந்துவிட்டிருந்தேன். நான் முழுமையுமாக மூடப்பட்டிருந்தேன்.
“சேற்றின் இழுப்பு சக்தி என்னை கீழே இழுப்பதை நான் உணர்ந்தேன். சப்தம் போட நான் முயற்சித்தேன். என் வாய் சேற்றால் நிரம்பியது. எனக்கு மூச்சு திணறியது. நான் நீந்தி மிக முயற்சி செய்து என்னுடைய முகத்தை சகதிக்கு மேலே கொண்டு வந்தேன். என் கையால் என் வாயிலிருந்த சேற்றை அத்தனை வேகமாக எடுத்துப் போட்டதால், என் முகத்தை கிழிப்பது போன்ற ஒரு உணர்வு எனக்கு எற்பட்டது. நான் மூழ்கிவிடப் போகிறேன் என்பது நிச்சயமாக இருந்தது. ஆனால் முடிவில் என்னால் சுவாசிக்கவும் சப்தமிடவும் முடிந்தது. என்னுடைய முகத்தை சேற்றிலிருந்து வெளியே கொண்டுவந்தபோது எனக்கு சோர்வு குறைந்தது!” ஆனால் முடிவாக அநேக மணிநேரங்களுக்கு பின்னரே அவள் மீட்கப்பட்டாள்.
எலினா டி வைடஸ் என்ற ஒரு சாட்சியும் அவளுடைய குடும்பமும் நகரத்துக்குப் பின்னால் மேட்டு நிலப்பகுதிக்குச் சென்றுவிட்டார்கள். அவள் பின்வருமாறு தெரிவித்தாள்: “நாங்கள் மலை அடிவாரத்தை நெருங்கியபோது எங்களுக்கு பின்னால் பிரளயத்துக்குள் மூழ்கிப் போன ஜனங்களின் அழு குரலையும் கூக்குரலையும் கேட்டோம். சிறிது நேரம் கழிந்தபின்பு, மற்றவர்கள் சேற்றினால் முழுமையாக மூடப்பட்டவர்களாய் வந்து சேர ஆரம்பித்தார்கள். “அது விளைவித்த பயங்கரமான சத்தத்தை எங்களால் கேட்க முடிந்தது. அது பயங்கரமாக இருந்தது. ‘காப்பாற்றுங்கள்! காப்பாற்றுங்கள்! உதவி! உதவி! எங்களை சாகும்படி விடாதீர்கள்!’ என்ற ஜனங்களின் அழுகைக் குரல் கேட்டது.”
கடைசியாக எல்லாம் முடிந்து பயங்கரமான நிசப்தம் நிலவியது. மை போன்ற இருள் இருந்தது. ஆர்மெரோவுக்கு வெளியே இருந்த பண்ணையில் பாதுகாப்பாக இருந்த ஜோர்ஜ் காஸ்டெல்லா “மரணத்தின் சூழ்நிலை அந்த இரவில் இருந்ததை” தான் உணர்ந்ததாகச் சொன்னார். தப்பிப் பிழைத்தவர்கள்—வயதானவர்கள், வாலிபர்கள்—பெரும்பாலும் காயமடைந்தவர்களாய் சகதியிலிருந்து வெளியே வந்து கொண்டிருந்தார்கள். உறக்கத்தில் நடப்பவர்களைப் போல் நடைபிணமாக அவர்கள் காணப்பட்டார்கள். அவர்களுடைய பார்வை வெறுமையாக இருந்தது. அவர்கள் தண்ணீர் கேட்டார்கள். வேறு எழுவும் கேட்கவில்லை. அது பயங்கரமாக இருந்தது!”
இதற்கிடையில் ஒப்துலியா ஆர்ஸ் தன்னுடைய தலையை சேற்றிலிருந்து வெளியே கொண்டுவர இன்னமும் முயற்சித்துக் கொண்டிருந்தாள். அவளுக்கும் அவளைப்போல தப்பிப் பிழைத்த ஆயிரக்கணக்கானோருக்கும் அவர்களின் வாழ்க்கையில் மறக்கமுடியாத நீண்ட இரவாக அது இருந்தது.
சேற்றால் மூடப்பட்ட உடல்கள்
பொழுது விடிந்தபோது விமானத்திலிருந்து பயிர்களுக்கு மருந்து தெளிக்க தனியாக வந்த ஒரு ஆள், செழிப்பான நிலங்களைக் கொண்ட, தனக்கு கீழிருந்த சம வெளியை மேலிருந்து பார்த்தான். அவன் கண்களை அவனால் நம்ப முடியவில்லை. மலைகளுக்கு அருகில் செழிப்பான ஆர்மெரோ இருப்பதற்கு பதிலாக, அவன் சாம்பல் நிறமான, சேற்றால் மூடப்பட்ட வெளிப்புறத்தைப் பார்த்தான். இங்கே நூற்றுக்கணக்கான மனித, மிருக உடல்கள் மிதப்பதை அவன் பார்த்தான். அவன் பின்வருமாறு சொன்னான்: “நகரம் பெரிய கடற்கரையைப் போலவும், ஒரு சில வீடுகள் மட்டுமே இருப்பதையும் நான் பார்த்தேன். மரத்தின் உச்சிகளிலும் அவற்றின் மேலும், மலைகளின் பக்கங்களிலும் ஜனங்கள் கிடப்பதை நான் பார்த்தேன்.”
பேராபத்து விளைந்த அந்தப் பகுதியின் விளிம்பில் தப்பிப் பிழைத்தவர்கள், உயிரற்ற சடலங்களைப்போல் தோற்றமளித்ததை, காப்பாற்ற வந்தவர்கள் பார்த்தார்கள். தப்பிப் பிழைத்தவர்கள் சாம்பல் நிறமான சேற்றால் மூடப்பட்டவர்களாய் மயக்கமடைந்தவர்களைப் போல அங்குமிங்கும் அலைந்து கொண்டிருந்தார்கள். அவர்கள் தங்களுக்கு நேசமானவர்களைத் தேடிக் கொண்டிருந்தார்கள். குழந்தைகளும் வயதானவர்களும் அதிக துயரத்தால் அழுது கொண்டிருந்தார்கள். ஆறுதல்படுத்த முடியாத அளவில் தாய்மார்கள் கதறிக்கொண்டு தங்கள் குழந்தைகளைத் தேடிக் கொண்டிருந்தார்கள். சகதியிலிருந்து அப்போதுதானே வெளிவந்த மற்றவர்கள் உள்ளாடை மட்டுமே அணிந்தவர்களாய், சிலைகளைப் போல் நின்று கொண்டிருந்தார்கள். சிலரின் இரவு உடை பனிப்பாறை சரிவின் சீற்றத்தால் முழுமையுமாக கிழித்தெரியப்பட்டிருந்தது. மேலும் சிலர் அதிகம் பாதிக்கப்பட்டிருந்தார்கள்.
உயிரோடிருந்த ஜனங்கள், தங்கள் கழுத்து வரையாக புதைக்கப்பட்டவர்களாய், நகர முடியாதவர்களாய் உதவிக்காக கதறுகிறவர்களாய் காணப்பட்டார்கள். சதுப்பு நிலத்தின் ஓரங்களில் இருந்தவர்கள் தங்கள் பக்கத்திலிருந்தவர்களை நெருங்க தீவிரமாக முயற்சி செய்தார்கள். சிறு பலகைகளை உபயோகித்து ஒருசிலரை அவர்களால் காப்பாற்ற முடிந்தது. சிலர் சகதிக்குள் நுழைய முயற்சித்து தாங்களும் உள் இழுக்கப்படுவதை உணர்ந்து பின்வாங்கினார்கள். காப்பாற்ற வந்த ஒருவர், மற்றவர்களுக்கு உதவி செய்ய ஒரு டிராக்டரை ஓட்ட முயற்சித்தார். மூன்று கெஜங்கள் செல்வதற்குள் (3 மீட்டர்) டிராக்டர் அமிழ்ந்து விட்டது.
இரவு குளிராக இருந்ததால், ஒப்திலியா அர்ஸுக்கு, சேற்றின் வெப்பம் இதமாக இருந்தது. இரவு முழுவதும் அவளுக்கு கண் அயர்ந்துபோகும் போதெல்லாம் அவள் முகம் சேற்றுக்குள் அமிழ்ந்துவிட, காற்றுக்காக திணறும்போது அவள் விழித்துக் கொண்டாள். ஒருவரும் அவளைப் பார்க்கவில்லை.
“எதிர்பாராத இடங்களில் கைகள் மேலெழுந்தன”
முழு இருதயத்தோடும் உடனடியாகவும் நாடு முழுவதும் இதற்கு பிரதிபலித்தது. தனிப்பட்ட நபர்களும் நிறுவனங்களும் உதவி செய்ய முன்வந்தார்கள். இராணுவம் உள்துறை பாதுகாப்பு பிரிவுகள், காவல்துறை மேலும் செஞ்சிலுவைச் சங்கம் மீட்பு குழுக்கள் அப்பகுதிக்கு விரைந்தன. ஆயிரக்கணக்கான வாலண்டியர்கள் மருத்துவர்கள், அறுவை மருத்துவர்கள், சுகாதார அதிகாரிகள், பொறியாளர்கள் மற்றும் நிவாரண ஆட்கள் தங்கள் சேவைகளை முன்வந்து அளித்தார்கள். யெகோவாவின் சாட்சிகள் போகோட்டாவிலிருந்து மூன்று வண்டிகள் நிறைய பொருட்களை உதவிக்காக அனுப்பி வைத்தார்கள்.
மீட்பு குழுக்கள் மற்ற நாடுகளிலிருந்து பறந்து வந்தன. சீக்கிரத்தில் உள்ளுர் மற்றும் அயல்நாட்டைச் சேர்ந்த 30 ஹெலிகாப்டரில் அந்தப் பகுதி முழுவதையும் அலசிப் பார்த்து, உயிரோடிருப்பவர்களைத் தேடினார்கள். மீட்கும் பணியை வானிலிருந்து மட்டுமே செய்ய வேண்டியதாக இருந்தது. ஏனென்றால் கனமான சேற்றில் எடுத்த முயற்சிகள் தோல்வியிலேயே முடிவடைந்தன.
அழிவு பிரமாண்டமான அளவில் இருந்ததன் காரணமாக, உயிரோடிருக்கும் சில நபர்களைத் தேடுகிற வேலையும் இறந்த அநேகரைத் தோண்டி எடுக்கும் வேலையும் தாமதமாக நடந்தது. தப்பிப் பிழைத்த நூற்றுக்கணக்கான ஆட்களைக் கொண்டு வந்த மீட்பு வேலையாட்கள், இன்னும் அநேகர் காப்பாற்றப்பட காத்திருப்பதாக தெரிவித்தார்கள். மீட்பு பணி ஒன்றில் ஈடுபட்டிருந்த ஒருவர் பின்வருமாறு சொன்னார்: “அங்கு ஒருவரும் இல்லை என்பதாக ஒருவர் நினைக்கக்கூடும். ஆனால் ஹெலிகாப்டர் நெருங்கும்போது, சற்றேனும் எதிர்பாராத இடங்களிலிருந்து பிழைத்திருப்பவர் ஒருவர் கைகளை உயர்த்தி தன்னை காப்பாற்றும்படி கூப்பிடுகிறார்.”
தங்கள் தலைக்கு மேல் ஹெலிகாப்டர்கள் ஒவ்வொரு முறையும் கடந்துபோகும்போது கைகளை ஆட்டும் நபர்களில் ஒருவராக ஒப்திலியா இருந்தாள். அவள் தலையை உலர்ந்த சேறு மூடியிருந்தது. அவளால் தன் கையை மணிகட்டுவரையில் மட்டுமே மெதுவாக ஆட்டமுடிந்தது. அவள் நாள் முழுவதும் அவர்களின் கவனத்தைக் கவர முயற்சி செய்தாள். ஒருவரும் அவளை கவனிக்கவில்லை. தன்னை ஒருவரும் பார்க்க மாட்டார்கள் என்று அவள் கவலைப்பட ஆரம்பித்தாள். அவள் தொடர்ந்து ஜெபித்துக் கொண்டிருந்தாள். கவலை மிகுந்த முடிவில்லாத மற்றொரு இரவுக்குள் அவள் பிரவேசித்தாள். அவள் சேற்றுக்குள் அடைப்பட்டு இருந்தபோது, அடிப்பட்ட இடத்தில் அதிகமாக வேதனையை அனுபவித்தாள்.
வெள்ளிக்கிழமை பொழுது விடிந்தபோது, அந்தப் பகுதியை அலசிக் கொண்டிருந்த மீட்பு பணியாளர்கள் முடிவில் அவளை காணும் வரையாக தன்னுடைய சக்தியை எல்லாம் திரட்டி, கூக்குரலிட்டுக் கொண்டிருந்தாள். 11 மணி அளவில் அவள் இழுக்கப்படும்போது, வலியின் காரணமாக அவள் கதறினாள். முழுமையாக விடுவிக்கப்பட்டு ஹெலிகாப்டருக்குள் இழுத்துக்கொள்ளப்பட்டாள். அவள் முதலுதவி நிலையத்துக்கு உடனடியாக கொண்டு செல்லப்பட்டு, பின்பு மருத்துவ மனைக்கு அழைத்துச் செல்லப்பட்டாள். அவள் 35 மணி நேரம் சேற்றில் அமிழ்ந்திருந்தாள்.
அவளுடைய பிள்ளைகளுக்கு என்ன நடந்தது? அவளின் இரண்டு குழந்தைகள் இறந்து போயின. மற்ற குழுந்தைகள் சதுப்பு நில ஓரங்களுக்கு இழுத்துச் செல்லப்பட்டு பிற்பாடு காப்பாற்றப்பட்டனர் என்பதை பின்னால் அவள் தெரிந்து கொண்டாள்.
ஏமாற்றமும் மகிழ்ச்சியும்
வெப்பமண்டல சூரியனின் கீழ் சேறு கெட்டியாகத் தொடங்கியது. எனவே ஆட்களை வெளியே எடுக்க நேரம் தேவைப்பட்டது. அநேக ஆட்களின் நிலைமை பரிதாபமாக இருந்தது. உதவிக்காக அலறும் அல்லது உயிர் இருக்கிறது என்பதற்கு அடையாளமாக உதடுகளை அசைக்கும் அநேக தலைகள் அந்த நிலத்துக்கு வெளியே காணப்பட்டன. உடைந்த பொருள் குவியலுக்கு அடியில் மாட்டிக் கொண்டவர்கள், இறக்கும்படியாக புறக்கணிக்கப்பட்டார்கள்.
12 வயது பள்ளிச் சிறுமி ஓமைரா சான்சேஸின் அனுபவம் இதயத்தைத் துணுக்குறச் செய்தது. அவளின் வீரச் செயலும், நம்பிக்கையூட்டிய சம்பாஷணையும், பத்திரிக்கையாளர்களும் மீட்புப் பணியாளர்களும் மெச்சும்படியாக இருந்தது. அவள் கான்கிரீட் பாலத்துக்கும் இறந்த அவளின் அத்தையின் உடலுக்குமிடையே மாட்டிக் கெண்டாள். மீட்பு பணி ஆட்கள் அவளை வெளியே கொண்டுவர 60 மணி நேரம் போராட வேண்டியதாக இருந்தது. முடிவில் பனிப்பாறை சரிவு ஏற்பட்டு மூன்று நாட்கள் சென்ற பின்பு இதயம் நின்று போனதால் இறந்துபோனாள். அவள் மாட்டிக்கொண்ட அதே நிலையில், கழுத்து சேற்றுக்கும் தண்ணீருக்கும் மேலே இருந்தபடி மாண்டாள். மீட்புக் குழுவும், பத்திரிக்கையாளர்களும் முழு தேசமும் அவளுக்காக அழுதது.
நான்கு வயது கில்லர் மோ பேயஸ், துயர சம்பவம் நடந்து 60 மணி நேரம் ஆன பின்பு, அசையாமலும் நிர்வாணமாகவும் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு மீட்டுக் கொள்ளப்பட்டான். அந்தப் பாழன சாம்பல் நிற வெளியில் அவன் இறக்காமல் தூங்கிக் கொண்டிருந்ததை எவரும் எதிர்பார்க்கவில்லை. இறங்கும் ஹெலிகாப்டர் சத்தத்தால் அவன் விழித்துக் கொண்டான். அவன் தடுமாற்றத்தோடு உட்கார்ந்து கொண்டான். போதுமான இடைவெளியில் ஹெலிகாப்டர் இறக்கப்பட்டு அதற்குள் அவன் இழுத்துக் கொள்ளப்பட்டான், இந்த நிகழ்ச்சி மீட்பு பணியாளர்களுக்கு மகிழ்ச்சியைக் கொடுத்தது.
சமயமும் எதிர்பாராத சம்பவமும்
ஆர்மெரோவில் நடந்த இந்தத் துயரச் சம்பவத்தில் 21,000 ஆட்களும் சின்சைனாவில் 2000-க்கும் மேற்பட்ட ஆட்களும் காணாமற் போனார்கள் என்று மதிப்பிடப்பட்டது. ஆர்மெரோவில் மீட்கப்பட்ட 5400 நபர்களில் 2000 ஆட்கள் நாடு முழுவதுமிருந்த மருத்துவ மனைகளில் சிகிச்சையளிக்கப்பட்டார்கள். அநேகரின் கைகளும் கால்களும் பிரளயத்தின் சீற்றத்தால் மோசமாக முறிந்துபோயிருந்தன. அழுகிய தசையின் காரணமாக, அவர்களுடைய கைகளும் கால்களும் வெட்டி எடுக்கப்பட்டன. ஆர்மெரோவில் வங்கி ஊழியராக இருந்த யெகோவாவின் சாட்சிகளில் ஒருவரான எப்பி பேனியா கேம்ப்போஸ் இவர்களில் ஒருவராக இருந்தாள். இவள் அழுகிய தசையின் விளைவுகளால் மரித்துப் போனாள்.
யெகோவாவின் சாட்சிகளுடைய ஆர்மெரோ சபையைச் சேர்ந்த 59 நபர்களில் 40 பேர் அதிகமாக பாதிக்கப்பட்டிருந்த நகரில் வாழ்ந்தபடியால், இருக்கும் இடம் தெரியாமல் காணாமற் போனார்கள். சின்சைனா சபையைச் சேர்ந்த மூன்று ஆட்கள் தங்கள் உயிரை இழந்தார்கள். 30 ஆட்கள் தங்கள் உறைவிடங்களையும் உடைமைகளையும் இழந்து போனார்கள்.
இந்தத் துயர சம்பவம் நடந்து 6 வாரங்கள் சென்ற பின்பு, ஆர்மெரோவில் எட்டு வருடங்கள் வசித்த செர்வெஸியோ மசியா என்ற ஒருவரோடு அந்த இடத்தை மறுபடியும் நான் பார்த்தேன். சரியாக அவரால் ராஜ்ய மன்றம் எங்கிருந்தது என்பதை அடையாளங் காண்பிக்க முடியவில்லை. அந்த அளவுக்கு அழிவு முழுமையாக இருந்தது. நகரம் இருந்த இடத்தில் இப்போது சாம்பல் நிறமான அகன்ற கற்பாளங்கள் சிதறிய மிக பிரமாண்டமான விசிறி வடிவத்தாலான கடற்கரை தென்பட்டது.
மற்ற எவரையும் போலவே யெகோவாவின் சாட்சிகளுங்கூட விபத்துகளாலும் இயற்கை கோளாறுகளாலும் பாதிக்கப்படும் நிலையில் இருக்கிறார்கள் என்பது தெளிவாக இருக்கிறது. இப்படிப்பட்ட சமயங்களில் பிரசங்கி 9:11, 12-லுள்ள நியமம் எவ்விதமாக பொருந்துகிறது என்பதை நம்மால் பார்க்க முடிகிறது: “நான் திரும்பிக் கொண்டு சூரியனுக்குக் கீழே கண்டதாவது: “ஓடுகிறதற்கு வேகமுள்ளவர்களின் வேகமும் யுத்தத்துக்குச் சவுரியவான்களின் சவுரியமும் போதாது, . . . தயவு அடைகிறதற்கு வித்துவான்களின் அறிவும் போதாது; அவர்களெல்லாருக்கும் சமயமும் எதிர்ப்பாறாத சம்பவமும் நேரிட வேண்டும் . . . மனுபுத்திரர் பொல்லாத காலத்திலே சடிதியில் தங்களுக்கு நேரிடும் ஆபத்தில் அகப்படுவார்கள். (NW)”
என்றபோதிலும் பைபிள் தெளிவாக கற்பிக்கிற விதமாகவே, “நீதிமான்களும் அநீதிமான்களுமாகிய” மரித்தோர் உயிர்த்தெழுந்து வருவார்கள். இயேசு கிறிஸ்து சொன்னார்: “நானே உயிர்த்தெழுதலும் ஜீவனுமாயிருக்கிறேன், என்னை விசுவாசிக்கிறவன் மரித்தாலும் பிழைப்பான்.” கடவுளுடைய ராஜ்ய ஆட்சிக்கும் பூமியின் மீது பரதீஸிய நிலைமைகள் நிலைநாட்டப்படுவதற்கும் காலம் நெருங்கிவிட்டது என்பதாக பைபிள் காண்பிக்கிறது. அப்பொழுது மரித்தோர், மெய்யான வாழ்க்கையை, நித்திய ஜீவனை அடையும் வாய்ப்பைப் பெற்றுக்கொள்வர்.—அப்போஸ்தலர் 24:15; யோவான் 5:28, 29; 11:25; 17:3. (g86 5/8)
[பக்கம் 13-ன் வரைப்படம்/படம்]
(For fully formatted text, see publication.)
நேவேடா டெல் ருஸ்
ஆர்மெரோ
[பக்கம் 14-ன் படம்]
பனிப்பாறைச் சரிவின் ஆற்றலில் அழிந்த மனநோய் மருத்துவமனையும் கட்டிடத்தின் எஞ்சிய பகுதியைச் சுற்றிய இரும்பு பாளங்களும்
[பக்கம் 15-ன் படம்]]
இந்தத் தெருவில் மண்ணில் கிடந்த ஒரு பல்கலைக்கழக பட்ட சான்றிதழ்—சிதறிப் போன ஒரு குடும்பத்தின் சோகத்துக்கு ஒரு அத்தாட்சி
[பக்கம் 16-ன் படம்]
இந்த மரம் 25 அடி உயரத்துக்கு சேற்றில் புதைந்துவிட்டது. ஒரு அங்குல அளவு இரும்பு கம்பிகள் அதனை சுற்றிக் கொண்டது. தூரத்தில் ஆர்மெரோவின் வியாபார மையம் பாலைவனம் போல காட்சியளிக்கிறது
ஒப்துலியா ஆர்ஸ் மொரில்லோ சேற்றில் 35 மணி நேரம் இருந்தும் உயிர்தப்பினாள்