நல்ல ஆட்களுக்கு ஏன் கெட்ட காரியங்கள் நேரிடுகின்றன?
எல்சால்வடாரில் சான் சால்வடார் எரிமலையின் அடிவாரத்திலிருப்பது சான் ரமோன் நகரமாகும். 1982 செப்டம்பர் 19-ம் தேதி காலை அது மூன்று பிரமாண்டமான சேற்று அலைகளால் தாக்கப்பட்டது. கூடவே பெய்த பலத்த மழையின் காரணமாக, முதல் அலை சுமார் இரண்டு மாடிகள் உயரத்துக்கு எழும்பி கற்பாளங்களையும் அடிமரங்களையும் வாரிக்கொண்டு சென்றது. இது 160 அடி ஆழமும் 250 அடி அகலமுமுள்ள செங்குத்தான பள்ளத்தாக்கை உருவாக்கி, அது எரிமலையின் பக்கத்தில் உருண்டோடுகையில் அதன் வேகமும் அளவும் அதிகமானது. அடிவாரத்துக்கு வந்து சேர்ந்த போது, அதன் பாதையிலிருந்த செங்கல் கட்டடங்களின் மீது மோதி அது உள்ளே சென்றது.
பயங்கரமான ஒரு நொடிப்பொழுதில், கட்டுக்கடங்காத அலையினால் அன்னாவின் வீடு நொறுங்கியது. அவளுடைய மகள்கள் அவளை இறுக்கமாக பிடித்துக் கொண்டு, “எங்களுக்காக ஜெபியுங்கள்” என்று கதறினார்கள். சேறு அவர்களை விழுங்கியது . . .
ஆனால் தற்செயலாக கூரை ஓடு ஒன்று அன்னாவின் முகத்துக்கு எதிராக வந்து பதிந்துவிட அவளுக்குச் சுவாசிக்க கொஞ்சம் இடம் கிடைத்தது. “நான் உதவிக்காக கதரிக் கொண்டே இருந்தேன்” என்று அவள் சொல்கிறாள். சுமார் நான்கு மணிநேரங்களுக்குப் பின்பு அக்கம் பக்கத்திலுள்ளவர்கள் , அவர்களுடைய அழுகுரலைக் கேட்டு அவளை விடுவிக்க ஆரம்பித்தார்கள், சேற்றுக்குள் புதைந்துவிட்டிருந்த அவளுடைய மகள்களின் உடல்கள் அவளை அழுத்திக் கொண்டிருக்க அக்குள் வரையாக அவள் சேற்றில் புதைந்திருந்தாள்.
சான் ரமோன் குடிமக்கள் மனத்தாழ்மையும் சிநேக உணர்வும் நிறைந்தவர்கள். புதிதாக விவாகம் செய்து கொண்டிருந்த மிகுவெலும் சிஸிலியாவும், மற்றும் கட்டி அணைத்துக் கொண்டு காணப்பட்ட ஐந்து உறுப்பினர்களையுடைய ஒரு குடும்பம் உட்பட மரித்தவர்களில், அநேக ஒப்புக் கொடுக்கப்பட்ட கிறிஸ்தவர்கள் அடங்குவர்.
ஆனால் விபத்துக்கள் நல்ல ஆட்களுக்கும் கெட்ட ஆட்களுக்குமிடையே வித்தியாசம் பார்ப்பதில்லை. இதுவே அன்புள்ள ஒரு கடவுளில் நம்பிக்கை வைப்பதோடு ஒத்துப்போகாத உண்மையாய் இருப்பதாக அநேகர் காண்கிறார்கள். “என்ன விதமான கடவுள், இப்படிப்பட்ட அனாவசியமான உயிரிழப்புக்களை அனுமதிப்பார்?” என்பதாக அவர்கள் கேட்கிறார்கள். அல்லது வயதானவர்கள் வீடுகளை இழந்து நிற்பதையும், கடினமாக உழைக்கும் குடும்பங்கள் தங்கள் வாழ்நாள் சேமிப்பு முழுவதையும் இழந்து நிற்பதையும், வாழ்க்கையின் ஆரம்பத்திலிருக்கும் இளவயது ஆண்களும் பெண்களும் சாவுக்கேதுவான நோயினால் பீடிக்கப்பட்டு நிற்பதையும் சர்வ வல்லமையுள்ள ஒரு கடவுள் எவ்விதமாக பார்த்துக் கொண்டு ஒன்றுமே செய்யாமலிருக்க முடியும்?
ஹாரால்ட் S. குஷ்னர் என்ற ஒரு யூத ரபி தன் மகன் அபூர்வமான ஒரு நோயினால் மரித்துவிடுவான் என்பதை அறிந்தபோது, இப்படிப்பட்ட கேள்விகளைக் கேட்டார். குழப்பமடையச் செய்யும் இந்த அநீதி குஷ்னரை தடுமாற வைத்தது. “நான் ஒரு நல்ல மனிதனாகவே இருந்திருக்கிறேன். கடவுளுடைய பார்வையில் செம்மையானதைச் செய்ய முயற்சி செய்திருக்கிறேன் . . . நான் கடவுளுடைய வழிகளைப் பின்பற்றி நடந்து அவருடைய வேலையை செய்து கொண்டிருப்பதாக எண்ணிக் கொண்டிருந்தேன். எவ்விதமாக இது என்னுடைய குடும்பத்துக்கு நேரிடக்கூடும்?” என்பதாக கேட்கிறார். பதில்களைக் கண்டு பிடிக்க அவர் செய்த முயற்சியின் விளைவே “கெட்ட காரியங்கள் நல்ல ஆட்களுக்கு நேரிடும் போது” என்ற அவருடைய பிரசித்திப் பெற்ற புத்தகமாகும்.
கடவுள் தீமையை ஏன் அனுமதிக்கிறார் என்ற கேள்விக்கு பதிலளிக்க முயற்சி செய்துள்ள அநேக இறைமையியல் வல்லுநர்களில் குஷ்னரும் ஒருவர். உண்மையில், கடவுள் மீது மனிதன் விசாரணை நடத்திக் கொண்டிருக்கிறான். குஷ்னரும் மற்ற இறைமையியல் வல்லுநர்களும் என்ன தீர்ப்பை வழங்கியிருக்கிறார்கள்? அவர்களுடைய தீர்ப்பு நியாயமானதாக இருக்கிறதா? (g87 10⁄8)