கடவுள் தீமையை அனுமதிப்பதை சிலர் எவ்விதமாக விளக்குகிறார்கள்
மனித துன்பங்களைப் படைத்ததில் கடவுள் குற்றமுள்ளவரா அல்லது குற்றமற்றவரா? தனிப்பட்டதாக இருந்தாலும் சரி, சான் ரமோனில் சம்பவித்தது போன்று பெரிய அளவிலிருந்தாலும் சரி, விபத்துக்களின் சமயத்தில் இந்தக் கேள்வி அச்சுறுத்தும் உருவில் பெரியதாக தோன்றி முன்னால் நிற்கின்றது. பிரிட்டிஷ் பத்திரிக்கை தி ஈவான்ஜலிக்கல் குவாட்டர்லி சொல்வதாவது: “எல்லாம் வல்ல, அன்புள்ள ஒரு கடவுளில் நம்பிக்கை வைப்பதற்கு மிகப் பெரிய தடையாக இருப்பது உலகில் காணப்படும் அநியாயமான துன்பங்களே.”
ஆகவே துன்பங்களுக்கு உண்மையில் அவர் காரணமாக இல்லாவிட்டாலும்கூட, அதை சகித்துக் கொண்டிருப்பதற்காக சிலர் கடவுளை குற்றஞ்சாட்டுகிறார்கள். இறைமையியல் வல்லுநர் ஜான் K. ராத் எழுதியதாவது: “வரலாறு தானே கடவுளுக்கு எதிராக குற்றச்சாட்டுப் பத்திரமாக இருக்கிறது . . . கடவுளின் பொறுப்பை இலேசாக எடுத்துக் கொள்ளாதீர்கள்.”
ஆனால் அகஸ்டின் முதற்கொண்டு மத சம்பந்தமாக ஆலோசிக்கும் திறம் படைத்த மனிதர்கள், கடவுள் குற்றமற்றவர் என்பதற்காக சொல்வன்மையோடு விளக்கந் தந்திருக்கிறார்கள். இந்த முயற்சிக்கு பதினேழாம் நூற்றாண்டு தத்துவ ஞானியான லீப்நிஸ் ஒரு புதிய சொல்லை—தியோடிஸி (theodicy) அல்லது “கடவுளின் நியாயம்” என்ற சொல்லை உருவாக்கினார்—பக்கம் 6-ஐ பார்க்கவும்.
நவீன இறைமையியல் சாட்சிக் கூண்டில் நிற்கிறது
கடவுளை குற்றச்சாட்டிலிருந்து விடுவிக்கும் முயற்சி நவீன காலங்கள் வரையாக வந்திருக்கிறது. கிறிஸ்தவ விஞ்ஞான சர்ச்சின் ஸ்தபகரான மேரி பேக்கர் எட்டி, தீமை என்பதே இல்லை என்பதாக அதை மறுப்பதன் மூலம் பிரச்னையை தீர்க்க முயன்றார். விஞ்ஞானத்தையும் உடல் ஆரோக்கியத்தையும் வேதாகமத்தின் திறவு கோலாகக் கொண்டு என்ற புத்தகத்தில் அவள் எழுதியதாவது: “கடவுள் . . . ஒருபோதும் மனிதனை பாவம் செய்யும் திறமையோடு உண்டுபண்ணவில்லை . . . ஆகவே தீமை என்பது ஒரு பொய் தோற்றமே, அதற்கு உண்மையான ஆதாரமில்லை”—தடித்த எழுத்துக்கள் எங்களுடையவை.
துன்பத்தில் நன்மை இருப்பதாக நம்புவதன் அடிப்படையில், மற்றவர்கள் கடவுளை மன்னித்திருக்கிறார்கள். ஒரு ரபி ஒரு சமயம் சொன்னதாவது: “மனிதனை மேன்மைப்படுத்துவதற்காக, அவனுடைய பெருமையை, அற்பத்தனமான எண்ணங்களைச் சுத்திகரிப்பதற்காக துன்பம் வருகிறது.” இதே போன்ற கருத்தில், பூமியில் துன்பமனுபவிப்பது, “எதிர்கால பரலோக ராஜ்யத்தில் வாழ்வதற்காக, ஒழுக்கமுள்ள ஆட்களாக நம்மை தயார் செய்வதற்கு அவசியமாயிருக்கிறது” என்பதாகச் சில இறைமையியல் வல்லுநர்கள் விளக்கந்தந்திருக்கிறார்கள்.
ஆனால் மனிதர்களை சுத்திகரிக்க அல்லது தண்டிக்க கடவுள் விபத்துக்களைக் கொண்டு வருகிறார் அல்லது அனுமதிக்கிறார் என்று நம்புவது நியாயமாக இருக்கிறதா? நிச்சயமாகவே சான் ரமோனில் உயிரோடே புதைக்கப்பட்டவர்களுக்கு அவர்களுடைய நல்நடத்தையை மேம்படுத்திக்கொள்ள வாய்ப்பிருக்கவில்லை. தப்பிப் பிழைத்திருப்பவர்களுக்கு ஒரு பாடத்தைக் கற்பிக்கும் பொருட்டு கடவுள் அவர்களை பலிகொடுத்தாரா? அப்படியானால், கற்பிக்கப்பட்ட பாடம்தான் என்ன?
ஆகவே, கெட்ட காரியங்கள் நல்ல ஆட்களுக்கு நேரிடும்போது என்ற குஷ்னரின் புத்தகம் பொதுமக்கள் அனைவரின் பாராட்டுக்குரியதாக இருப்பதைப் புரிந்து கொள்ளமுடிகிறது. அதன் ஆசிரியர் தனிப்பட்ட வகையில் துன்பத்தின் வேதனையை அறிந்திருந்தபடியால், கடவுள் நல்லவர் என்பதை மீண்டும் நிச்சயப்படுத்தி வாசகர்களுக்கு ஆறுதலளிக்க அவர் முற்பட்டிருக்கிறார். என்றபோதிலும் பழிபாவமறியாதவர்கள் துன்பமனுபவிப்பதைக் கடவுள் ஏன் அனுமதிக்கிறார் என்பதை விளக்க வரும்போது குஷ்னரின் விளக்கம் விநோதமான போக்கில் செல்கிறது. “நீதிமான்கள் சமாதானமான, மகிழ்ச்சியான வாழ்க்கையை வாழவேண்டும் என்று கடவுள் விரும்புகிறார். ஆனால் சில சமயங்களில் அவரால்கூட அதைச் செய்ய முடிவதில்லை” என்று குஷ்னர் விளக்கினார்.
அப்படியென்றால் குஷ்னர், கடவுளைப் பொல்லாதவராக அல்ல, ஆனால் பலவீனமானவராக, சர்வ வல்லமைக்கும் சற்று குறைவானவராகவே விவரிக்கிறார். ஆனால் குஷ்னர் வாசகர்களை தெய்வீக உதவிக்காக வேண்டிக் கொள்ளும்படியாக இன்னும் உற்சாகப்படுத்தியது அக்கறைக்குரியதாக இருக்கிறது. ஆனால் வரையரைக்குட்பட்டவராக கருதப்படும் இந்தக் கடவுள் உண்மையில் உதவியாக இருக்கக்கூடுமா என்பதைப் பற்றிய விஷயத்தில் குஷ்னர் தெளிவாக ஒன்றும் சொல்வதில்லை.
ஒரு பூர்வ கால விவாதம்
ஆக உலகில் மதசம்பந்தமாக ஆலோசிக்கும் திறம்படைத்த ஆட்கள், கடவுளுக்கு எதிரான குற்றச் சாட்டுக்கு நம்பத்தகுந்த விளக்கத்தைத் தந்து, தீமையினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உண்மையான ஆறுதலை அளிப்பதில் தவறிவிட்டிருக்கிறார்கள். ஒருவேளை விசாரணைக்குட்படுத்தப்படவேண்டியவர் கடவுளல்ல ஆனால் இறைமையியலாக இருக்க வேண்டும்! ஏனென்றால் ஒன்றுக்கொன்று முரணாக இருக்கும் இந்த விளக்கங்கள் சுமார் நாலாயிரம் ஆண்டுகளுக்கு முன்பாக சொல்லப்பட்ட வெற்று விளக்கங்களையே எதிரொலிக்கின்றன. அந்தச் சமயத்தில் தொடர்ச்சியான பல துன்பங்களுக்குப் பலியாளான, செல்வந்தனும் பெரியவனுமாயிருந்த கிழக்கத்தியப் புத்திரனாகிய யோபு என்ற பெயர் கொண்ட கடவுள் பயமுள்ள ஒரு மனிதனின் துன்பங்களை மையமாகக் கொண்டு ஒரு விவாதம் நடந்தது. ஒன்றன்பின் ஒன்றாக அவன் செல்வத்தை இழந்து பிள்ளைகளை மரணத்தில் பறிகொடுத்து கடைசியாக அருவருப்பான ஒரு நோயினால் தாக்கப்பட்டு துன்பமனுபவித்தான்.—யோபு 1:3, 13-19; 2:7
நண்பர்களென்னப்பட்ட மூன்று பேர் யோபுவுக்கு உதவ முன்வந்தார்கள். ஆனால் ஆறுதல் சொல்வதற்குப் பதிலாக இறைமையியலை வைத்து அவனை தாக்கினார்கள். அவர்களுடைய விவாதத்தின் சுருக்கம் பின்வருமாறு: ‘யோபுவே, கடவுள் உமக்கு இதைச் செய்திருக்கிறார்! நீர் செய்திருக்கக்கூடிய பாவத்துக்காக நீர் தண்டிக்கப்படுகிறீர்! தவிர, கடவுளுக்கு அவருடைய ஊழியர்களில் விசுவாசமே கிடையாது.’ (யோபு 4:7-9, 18) கடவுள் ஏன் அவனை வெளித்தோற்றத்துக்கு ‘தமக்கு இலக்காக நிறுத்தினார்’ என்பதை யோபுவினால் புரிந்துகொள்ள முடியவில்லை. (யோபு 16:11, 12) அவனுக்கு மேன்மையுண்டாக, யோபு தன்னுடைய உத்தமத்தைக் காத்துக்கொண்டு, நேரடியாக ஒருபோதும் தீமைக்கு காரணமாக கடவுளை குற்றஞ்சாட்டவில்லை.
ஆனால் யோபுவின் தேற்றரவாளர்களோ துன்பமனுபவிக்கும் ஒவ்வொரு நபரும் செய்த தவறுக்காக தண்டிக்கப்படுகிறார் என்பதாகச் சொல்வதன் மூலம், உண்மையில், ‘கடவுளை பொல்லாதவரென்று அறிவித்தார்கள்.’ (யோபு 32:3) ஆனால் விரைவில் கடவுள் அவர்களுடைய தவறான கருத்துக்களை திருத்தினார்.
(g87 10⁄8)