நாடோடிகள்—அவர்கள் தவறாகப் புரிந்துகொள்ளப்பட்டிருக்கிறார்களா?
பிரிட்டன் “விழித்தெழு! நிருபர் எழுதியது
“இந்த நாடோடிகள் இங்கும் வந்துவிட்டார்கள்!” இந்தச் செய்தியை நகர்ப்புற மக்களில் சிலர்தான் வரவேற்பார்கள். அனேகர் இந்த நாடோடிகளைத் திருடர்களாக நோக்குகின்றனர், சமுதாயத்தில் வாழ தகுதியற்றவர்கள் என்று கருதுகிறார்கள்.a அவர்கள் தங்கும் பகுதிகளின் அழகைத் தங்கள் ஒழுங்கற்ற அசுத்தமான கூடாரங்களால் கெடுக்கின்றனர், என்றபோதிலும் இந்த உணர்வு இரு சாராருக்கும் இருக்கும் ஒன்று. நாடோடிகளாக இல்லாத மக்களை இந்த நாடோடிகள் கஸி அல்லது கார்ஜியஸ் என்று அழைக்கின்றனர். இந்த வார்த்தை இதையொத்திருக்கும் மற்ற வார்த்தைகளும் “நாட்டுப்புறத்தான்” அல்லது “காட்டுமிராண்டிகள்” என்று அர்த்தப்படுகின்றன.
இந்த நாடோடிகள் யார்? ஓரிடத்தில் நிலையாய் வாழும் சமுதாயத்திற்கும் இவர்களுக்குமிடையே ஒரு நட்புறவைக் காத்துக்கொள்வது ஏன் கடினமாக இருக்கிறது? அவர்கள் உண்மையிலேயே சமுதாயத்தில் வாழ தகுதியற்ற ஏறுமாறான மக்கள் கூட்டமா அல்லது ஒருவேளை தவறாக புரிந்துகொள்ளப்பட்டிருக்கிறார்களா?
அவர்களுடைய சரித்திரம் ஒரு புதிர்
பொதுவாக நாடோடி என்ற வார்த்தை “இடம் விட்டு இடம் பெயர்ந்து செல்லும் வாழ்க்கை வழியை அல்லது நாடோடி இனம் சார்ந்த ஒருவனைக்” குறிக்கிறது. உண்மைதான் நாடோடிகள் தங்களுக்கென்று ஒரு மொழியைக் கொண்டிருக்கும் ஓர் இனத்தவராவர். தங்களை ரோம் என்று அழைத்துக்கொள்கின்றனர். இதற்குத் தங்கள் மொழியில் “மனிதன்” என்பது பொருள். இந்த வார்த்தையிலிருந்துதான் “ரோமானி” என்ற வார்த்தை வருகிறது—குறவர்களுக்கான இன்னொரு அர்த்தம். என்றபோதிலும் இந்த நாடோடி இனத்தவரின் ஆரம்ப சரித்திரம் வெகு காலமாக ஒரு புதிராக இருந்துவந்தது.
“ஜிப்ஸி” (gypsy) என்ற ஆங்கில வார்த்தை “இஜிப்ஷியன்” (Egyptian, எகிப்தியன்) என்ற ஆங்கில வார்த்தையிலிருந்து வருகிறது. ஆனால் அவர்கள் ஆதியில் எகிப்திலிருந்து வந்தவர்கள் என்று உரிமைப்பாராட்டினாலும் அது சரியாக இருக்க முடியாது. 1780-களில் கிரெல்மன் என்னும் பெயர்கொண்ட மொழிநூல் வல்லுநர் இந்தக் குறவர்களின் அல்லது நாடோடிகளின் ரோமானி மொழிக்கும் வடஇந்திய இந்தோ-ஆரிய மொழிகளுக்கும் ஏராளமான சம்பந்தம் இருப்பதைக் குறிப்பிட்டார். அவருடைய ஆய்வுகளின்படி இந்த நாடோடிகளின் தாயகம் இந்தியாவாகத்தான் இருக்க வேண்டும் என்ற முடிவைக் கொடுத்தது. இன்று இது பொதுவாக அங்கீகரிக்கப்பட்ட ஒரு உண்மையாகும். என்றபோதிலும் அவர்கள் தங்களுடைய மேற்கத்திய பயணத்தை எப்பொழுது, ஏன் தொடர்ந்தனர் என்பது இன்னும் ஒரு புதிராகவே இருக்கிறது. நாடோடி இனத்தார் தானே எந்தவித சரித்திர பதிவுகளையும் கொண்டிராததனால், அவர்களைப் பற்றிய சரித்திரக் குறிப்புகள், அவர்கள் பயணம் செய்திருந்த அல்லது நாடோடிகளாகத் தங்கியிருந்த தேசங்களின் சரித்திரத்தில்தான் இங்குமங்குமாகக் காணப்படுகிறது.
அப்படிப்பட்ட பதிவுகள், அவர்களுடைய வரவு அனேகமாக விரும்பப்படாததாயிருந்தது என்பதைத் தெளிவுபடுத்துகிறது. ஆம், கட்டுப்பாடுகளற்ற அவர்களுடைய வாழ்க்கைமுறை—அவர்கள் அவ்வப்போது மேற்கொண்ட பேரிறைவேட்டை அல்லது கொள்ளை, கடுமையான துன்புறத்துதலை ஏற்படுத்தியிருக்கிறது. 16-ம் நூற்றாண்டில் இங்கிலாந்து அவர்களை நாட்டிலிருந்து துரத்தியதுமட்டுமின்றி, தொடர்ந்திருப்பவர்களுக்கு மரண தண்டனையையும் விதித்தது! ரோமேனியா என்று அழைக்கப்படும் இடத்திலுள்ளவர்கள்கூட கடுமையாக நடத்தப்பட்டனர். அங்கு இவர்கள் அடிமைகளாக வாங்கப்பட்டும் விற்கப்பட்டும் வந்தார்கள். இது 19-ம் நூற்றாண்டின் மத்தியம்வரை தொடர்ந்தது. 1726-ல் சார்ல்ஸ் VI என்ற ஜெர்மனியின் சக்கரவர்த்தி இந்தக் குறவர் கூட்டம் தூக்கிலிடப்பட வேண்டும் என்று அறிக்கையிட்டார். அவர்களுடைய பெண்களின் மற்றும் பிள்ளைகளின் காதுகள் வெட்டப்படவேண்டும். அவர்கள் திரும்ப வந்தால் அவர்களை அடையாளங் கண்டுகொள்வதற்காக அப்படிச் செய்யப்பட வேண்டும் என்று அறிக்கையிட்டார். பிரான்ஸ், ஜெர்மனி, டென்மார்க் மற்றம் சுவீடனில் குறவர்கள் நாய்களால் துரத்தப்பட்டு மான்வேட்டை “விளையாட்டு” போன்று வேட்டையாடப்பட்டனர்.
நவீன நாளில் எப்படி? நாஸிய ஆட்சி குறவர் கூட்டத்தை “மக்கள் விரோதிகள்” என்று குறிப்பிட்டது, மற்றும் அவர்களைக் கொன்று குவிக்கும் பாதையில் சென்றது. 4,00,000-ற்கும் அதிகமான நாடோடிகள் கொல்லப்பட்டனர்.
அவர்களுடைய இன்றைய வாழ்க்கை
இந்தக் கடுமையான துன்புறுத்தல் மத்தியிலும் நாடோடிக்கூட்டம் ஜரோப்பாவிலும், ஐக்கிய மாகாணங்களிலும், தென் அமெரிக்காவிலும் ஆஸ்திரேலியாவிலும் செழிக்கின்றது. ஒரு பொதுமொழி, தொடர்ந்து செல்லவேண்டும் என்ற அணையா ஆர்வம், கூடாரங்கள் மத்தியில் எழுதப்படாத ஒரு கலாச்சாரம், ஓர் உயர்ந்த ஜாதி மக்கள் என்ற அவர்களுடைய உறுதியான நம்பிக்கை ஆகிய காரியங்கள் இந்த வித்தியாசமான பரவிக்காணப்படும் நாடோடிகளின் அடையாளத்தைக் காத்துக்கொள்ள உதவியிருக்கின்றன. என்றபோதிலும் காலம் சில மாற்றங்களை ஏற்படுத்தியிருக்கிறது.
அவர்களில் சிலருக்கு நிலையான வாழ்க்கையைக் கொண்டிருக்க வேண்டும் என்ற விருப்பம் இருந்தபோதிலும் ஆயிரக்கணக்கானோர் இன்னும் இடம் மாறிச் செல்கின்றனர். என்றபோதிலும் சிலர் வர்டாஸ் என்ற வண்ணமயமான குதிரை வண்டிகளில் பயணம் செய்கின்றனர். மேற்கு ஐரோப்பாவில் நாடோடிகள் பலர் சொந்த மோட்டார் வாகனங்களைப் பயன்படுத்துகின்றனர். இதனால் அவர்களுடைய பழைய சாயலை இழக்க ஆரம்பித்தனர். என்றபோதிலும், கிழக்கத்திய ஐரோப்பா மற்றும் ஸ்பேன் தேசங்களில் அவர்களுடைய பழைய கலாச்சாரம்—நடனம், இசை, குறிசொல்லுதல், கரடி வளர்ப்பு, குதிரை வியாபாரம் மற்றும் தங்களுக்கென்றிருக்கும் தனிமுறை வாழ்க்கைத் தொழில்—இன்னும் ஊசலாடுகிறது. ஸ்பானிய குறவரின் ரோம தெய்வத்திற்குரிய நடனங்களும் தங்களுடைய ஹங்கேரிய சகோதரரின் இசையும் இன்றும் ஆயிரக்கணக்கானோரை மகிழ்விக்கிறது.
கடுமையான துன்புறுத்தல்கள் குறைந்துவிட்டபோதிலும், இந்த நாடோடி இனத்தவர் இன்றும் கஷ்டப்படுகிறார்கள். உதராணமாக, பிரிட்டிஷ் அரசின் 1982 அறிக்கைபடி, “இங்கிலாந்திலும் வேல்ஸிலும் 8 முதல் 9000 குறவர் குடும்பங்கள் இருக்கின்றனர். அவர்களில் பாதிபேர் அவர்களுக்கென்று ஒதுக்கீடு செய்யப்பட்ட நிரந்தர இடங்களில் வாழ்கின்றனர். மற்றவர்கள் தங்களுடைய கூடார வண்டிகளை அவர்களுக்கென்று ஒதுக்கப்படாத இடங்களில் நிறுத்திக்கொள்கின்றனர். இதனால் எந்த சமயத்திலும் அந்த இடங்களிலிருந்து துரத்தப்படுகின்றனர், அல்லது அப்பகுதியில் வாழும் குடிமக்களின் எரிச்சலுக்கு இறையாகின்றனர்.”
நவீனமயமாக்கப்பட்டிருக்கும் இந்தக் காலத்தில் இந்த நாடோடி இனத்தவர் தங்கள் கல்வி நிலையைக் குறித்து யோசனை செய்யும்படி வற்புறுத்தப்பட்டிருக்கின்றனர். கடந்த காலங்களில், கல்வி, காலத்தை வீணாக்கும் ஒன்று என்று கருதப்பட்டது. என்றபோதிலும், தேசிய நாடோடி இனத்தவர் ஆலோசனைக் குழுவினரின் சமீப அறிக்கையின்படி, “எங்கள் பிள்ளைகளுக்கும் கல்வி தேவை, அப்பொழுதுதான் அவர்கள் நிலையான வாழ்க்கையையுடைய சமுதாயத்தின் பிள்ளைகளுடன் பழகவும் சமாதானமான கூட்டு வாழ்கை நடத்தவும் முடியும்.’
வாழ்க்கைப் போக்கில் மாற்றங்கள்
நவீன மயமாக்கப்பட்டிருக்கும் இந்தக் காலம் நாடோடிகளின் பிழைப்புக்குறிய வாழ்க்கைப் போக்கிலும் சில மாற்றங்களைச் செய்யும்படி வற்புறுத்தியிருக்கிறது. கடந்த காலங்களில் பருவ கால பயிர்த் தொழில்களைச் செய்துவந்தனர். சாதாரணமாக அவர்கள் பண்ணையில் வேலை செய்யும் சமயங்களில் அந்தப் பண்ணையாளர்களின் நிலத்தில் தங்குவதற்கு அனுமதிக்கப்பட்டனர். என்றபோதிலும் இயந்திரமயமாக்கப்பட்டிருக்கும் இந்த நாட்களில் அவர்களுக்கு இந்தப் பயிர்த்தொழில் வாய்ப்புகளை வெகுவாகக் குறைத்துவிட்டிருக்கிறது. இவர்களுடைய சேவை தேவைப்படாததால் அந்தப் பண்ணையாளர்கள் இவர்களைத் தங்களுடைய நிலத்தில் குடியேற அனுமதிப்பதில்லை. இப்படியாக இந்த நாடோடி கூட்டத்தினர் நகர்புறங்களுக்கும் செல்ல வற்புறுத்தப்பட்டிருக்கின்றனர். அங்கு ஓட்டை உடைசல்கள் வியாபாரமும், கட்டிட வேலைகளும் இவர்களுக்கு வேலை வாய்ப்புகளைக் கூட்டியிருக்கிறது.
இந்த நாடோடிகள் விலங்குகளுடன் தொடர்புடையவர்களாதலால், ஊர் ஊராகச் செல்லும் பொருட்காட்சிகளுடனும் சர்க்கஸ்களுடனும் தங்களைச் சேர்த்துக்கொண்டிருக்கின்றனர். இவர்கள் இசை ஆர்வம் கொண்டவர்களாதலால், இவர்களில் சிலர் நல்ல பொழுதுபோக்குகளை வழங்குகின்றனர். பெண்கள் மனிதனின் இயல்புகளை நன்கு கவனிப்பவர்களாதலால், “குறிசொல்லும்” தொழிலை இவர்கள் மேற்கொண்டிருக்கின்றனர். (பின்வரும் கட்டுரையை வாசியுங்கள்.) அப்படிப்பட்ட தொழில்களுக்கு இந்த நாடோடிகள் மிகவும் பொருத்தமானவர்கள். இந்தத் தொழிலில் அவர்கள் ஒரே இடத்தில் அனேக நாட்கள் தங்கவேண்டிய அவசியமில்லை. பொருள் சம்பந்தமான காரியங்களைச் சேர்த்து வைப்பதைவிட ஊர் ஊராகச் சுற்றித்திரியும் சுதந்திர வாழ்க்கையே அவர்களுக்குப் பெரும் பொக்கிஷம்.
நாடோடி இனத்தவரில் ஒருவரின் நேரடியான கதை பின்வருமாறு. அவள் எப்படி புதியதோர் வாழ்க்கை முறையை, மிகச் சிறந்ததோர் வாழ்க்கை முறையைத் தெரிந்துகொண்டாள் என்பதை இது காட்டுகிறது. (g86 5/22)
[அடிக்குறிப்புகள்]
a “குறவர்கள்” அல்லது “நாடோடிகள்” என்ற வார்த்தை கெட்ட பெயரை அவர்களுக்கு ஏற்படுத்தியிருப்பதால், சில இடங்களில் இவர்கள் “பயணிகள்” என்று அழைக்கப்படுவதையே விரும்புகின்றனர்.