நாடோடி ஒருத்தி “அந்த மார்க்கத்தைக்” கண்டுபிடிக்கிறாள்
1929-ல் ரோமேனியரின் ஒரு குடும்பத்தில் அல்லது அனேகர் எங்களை அழைப்பதுபோல் நாடோடிகளின் குடும்பத்தில் பிறந்தது முதற்கொண்டு, நான் பல வருடங்களாக நாடோடி வாழ்க்கையை வாழ்ந்து வந்தேன். உவேல்ஸ் முழுவதையும், தென் மேற்கு இங்கிலாந்து முழுவதையும் சுற்றிப் பயணம் செய்தேன். இது எளிமையான ஒரு வாழ்க்கை முறையாக இருந்தது. ஆனால் ஒன்று அல்லது இரண்டு வாரத்திற்கு ஒருமுறை நாங்கள் இடம் மாறிச்செல்ல வேண்டியிருந்ததுதானே தொந்தரவாக இருந்தது.
எங்களுடைய பெற்றோர் நான்கு பிள்ளைகளாகிய எங்களுடன், குதிரையினால் இழுக்கப்பட்ட இரண்டு வண்டிகளில் பயணம் செய்தார்கள். பிள்ளைகளாகிய நாங்கள் எங்களுடைய தட்டுமுட்டு சாமான்களை எடுத்துச்சென்ற நான்கு சக்கர “பீப்பாய்” வண்டியில் தூங்கினோம். (அருகே ஒரு வைக்கோல் போர் இருந்தால், நாங்கள் யாவரும் அதன் மீது தூங்கினோம்.) தங்குவதற்கு கூடாரங்களை ஏற்படுத்துவதற்குத் தேவையான பொருட்களையும் சாதனங்களையும் எங்களுடைய இரண்டு சக்கர “தீப்பெட்டி” வண்டி எடுத்துச் சென்றது. குதிரைகளின் மீதுள்ள சுமையைக் குறைக்க, நாங்கள் பொதுவாக நடந்துசென்றோம்.
கூடுமானவரை, வீடுகளில் வசிக்கும் ஆட்களின் கண்களுக்குத் தென்படாத காட்டுப் பகுதிகளில் நாங்கள் கூடாரம் போட்டோம். இது அவர்களுடைய பகைமையைத் தவிர்ப்பதற்கு எங்களுக்கு உதவிசெய்தது. மற்றொரு இடத்திற்குப் பெயர்ந்து செல்வதற்கு முன்பு, அங்கிருக்கும் குப்பைகளை எடுத்துவிடவும் புல்வெளியைப் பெருக்கி சுத்தம் செய்யும்படியும் எங்கள் தகப்பனார் சொல்லுவார். எல்லாவற்றையும் சுத்தமாக வைத்துவிட்டுச் சென்றோம்.
நாடோடியின் வாழ்க்கை முறைகள்
நாங்கள் எவ்வாறு வாழ்க்கையின் தேவைகளைச் சம்பாதித்தோம்? வில்ட்ஷயர் மற்றும் ஹெர்ஃபோர்டுஷயரில் முசுக்கட்டையினச் செடியின் பழங்களை பருவ காலத்தில் பறித்து விற்பனை செய்வதே எங்களுடைய தொழிலாக இருந்தது. இது எப்போதும் மகிழ்ச்சிதரும் காலமாக இருந்தது. நாடோடி குடும்பங்கள் ஒருவரைவிட்டு ஒருவர் தூரமாக தங்கியிருந்தபோதிலும், மாலை வேளைகளில் கூடாரத்திற்கு முன்பு நெருப்பை மூட்டி, பாட்டு இசைத்துக்கொண்டும் பாடிக்கொண்டும் கதை சொல்லிக்கொண்டும் இருப்போம். நாங்கள் ஏழைகளாக இருந்தபோதிலும், பொருளாதார உடைமைகளைக் குறித்த கவலைகளிலிருந்து விலகினவர்களாக இருந்தோம்.
வருடத்தின் மற்ற நேரங்களில், எங்களுடைய தந்தை, சேற்றில் வளரும் நீண்ட நாணற்செடிவகையிலிருந்து பாய்களும் கூடைகளும் செய்வார். நாங்களும் நாணற்செடிகளையும் சிறிய கிளைகளையும் கொண்டு கூடைகளைப் பின்னினோம். அந்த நாணற்பட்டைகளை உறித்து வெளும்பாக்கிட அவற்றை வேக வைப்போம். செடிகளிலிருந்து தயாரித்த சாயங்களை உபயோகித்து என்னுடைய தகப்பனார் அந்தப் பொருட்களில் காட்டு பறவைகள் அல்லது மிருகங்களை வரைந்து அதற்கு வண்ணம் பூசி அதை அழகுபடுத்தி முடிப்பார். பொதுவாக நாடோடி இனத்து ஆண்கள் அவற்றை விற்பனை செய்வதில்லை. எனவே நாங்கள் அதை வீட்டுக்கு-வீடு சென்று, நல்ல விலைக்கு விற்பனை செய்வோம்!
இத்தகைய பொருட்களை எப்படிச் செய்வதென்று தகப்பனார் எங்களுக்குக் கற்றுக்கொடுத்தார். காகிதம் மற்றும் மரத்தினால் எவ்வாறு பூக்களைச் செய்வது, குதிரைகளை எவ்வாறு பழக்கப்படுத்துவது, மேலும் காட்டு மூலிகைகளை எவ்வாறு அடையாளம் கண்டுகொள்வது, மற்றும் அதை எவ்வாறு மருந்தாக பயன்படுத்துவது போன்றவற்றையுங்கூட நாங்கள் கற்றுக்கொண்டோம். குப்பைக் கொட்டிலிற்கு எங்களைக் கூட்டிச்சென்று, உணவு உட்பட உபயோகமான பொருட்களை எவ்வாறு பிரித்தெடுப்பது என்றும் எங்களுக்குக் காட்டினார். எங்களுடைய உணவுக்கு தேவையான காட்டுப் பன்றிகள், முயல்கள் மற்றும் வேறு பல வேட்டை பிராணிகளைப் பிடிக்க நாங்கள் அறிந்திருந்தோம். இவற்றின் இருப்பு குறைந்தபோது, பண்ணையாளர்களிடமிருந்து ஓரிரண்டு கோழி குஞ்சுகளை எடுத்துக்கொள்வதில் தவறு ஒன்றையும் நாங்கள் காணவில்லை. அது அவருக்கு நஷ்டத்தை ஏற்படுத்திவிடாது என்று கருதினோம். நாங்கள் பசியாயிருந்தோமே என்று நியாயநிரூபணம் செய்தோம். அதற்குப் பிறகு நாங்கள் பூனிக்காஞ்சொறிச் செடிகள், ரோஜா கிளைகள், தேன் எடுக்கப்படக்கூடிய பூக்கள், எல்லா வகையான காட்டு மூலிகை செடி வகைகள் மற்றும் சுவைமிகுந்த உணவாகிய நத்தைகளையுங்கூட எல்லோருக்கும் சமைக்க கற்றுக்கொண்டோம். ஆனால் உணவு இல்லாமற்போன அனேக சமயங்களும் இருந்தன.
நான்கு வயதாக இருந்த சமயத்திலிருந்தே என்னுடைய தாய், பிச்சை எடுக்கவும் விற்கவும் திருடவும் எனக்குக் கற்றுக்கொடுத்தாள். நான் வறுமைக் கோலத்திலும் காலணிகளின்றி இருக்கிறேனா என்பதைப் பார்த்துக்கொள்வாள், அதற்குப் பிறகு, என்னைத் தனியாக ஒரு வீட்டிற்கு அனுப்பி, அங்கு வாசலிலிருந்து அழும்படியாக எனக்கு கட்டளையிடுவாள். எனக்கு அழுவது போன்று தோன்றவில்லையென்றால், என் கால்களில் அடி கொடுப்பாள், உடனே என்னுடைய கண்களில் கண்ணீர் ததும்பும்! அந்த வீட்டுக்காரரிடம் எனக்குச் சாப்பிடுவதற்கு ஒன்றுமில்லை என்று சொல்லுவேன். கந்தலான அழுக்கான உடையுடன் இருக்கும் சிறு பெண்ணின் வேண்டுகோளைச் சிலர்தானே மறுக்கக்கூடும்.
நாடோடிகள் மத்தியில் பொதுவாக இருக்கும் இன்னொரு தொழிலையும் நான் கற்றுக்கொண்டேன்: குறிசொல்லுதல். உண்மையில், “குறி சொல்லுதல்” என்பது வெறுமென ஆட்களைப் பார்ப்பது, கவனிப்பது மற்றும் அவர்கள் என்ன கேட்கிறார்கள் என்பதை உணர்ந்துகொள்வது ஆகியவற்றைவிட சற்று அதிகம் மட்டுமே உட்படுத்தியது. பிற்கால ஆண்டுகளில் இந்தக் குறிசொல்லும் தொழிலில் மனிதனுக்கு மிஞ்சிய சக்திகளும் உட்பட்டிருந்தன என்பதை அறிந்துகொண்டேன். ஆகிலும் என்னைக் குறித்ததில், அட்டைகள், தேயிலை, உள்ளங் கைகளிலுள்ள கோடுகள் ஆகியவற்றைப் பயன்படுத்துதல் வெறுமென மற்றவர்களை ஏமாற்றுவதற்கான முறைகளாக மட்டுமே இருந்தன. அதுவும் அவர்கள் என்னுடன் ஒத்துழைக்கும்போது மட்டுமே நான் வெற்றி கண்டேன்.
நரகத்தைப் பற்றிய பயங்கள்
அனேக ரோமேனியர்களைப் போலவே என் தந்தையும் மதபக்கி மிகுந்தவர். அவர் சர்ச்சுக்குப் போனார் என்று நான் குறிப்பிடவில்லை. சர்ச்சுக்கும் அவருக்கும் வெகுதூரம். சர்ச்சுகளின் வெளிவேஷமும் சடங்குமுறைகளும் அவை “அந்தக் கிழவனை” [பிசாசை அப்படியாகக் குறிப்பிடுவார்] சேர்ந்தவை என்று காண்பிக்கிறது என்று அவர் சொல்வதுண்டு. ஒவ்வொரு நாள் காலையும், வெயிலடித்தாலுஞ்சரி மழைபெய்தாலுஞ்சரி, என் தகப்பனார் திறந்த வெளிக்குச்சென்று முழங்காற்படியிட்டு கடவுளிடம் சப்தமாக ஜெபிப்பார். சில சமயங்களில் அவருடைய ஜெபங்கள் எங்களைத் தூக்கத்திலிருந்து எழுப்பிவிடும். தான் ஏன் அவ்வளவு சப்தமாக ஜெபிக்கிறார் என்று நான் கேட்டேன்: “கடவுள் எனக்குக் குரல் கொடுத்திருக்கிறார், எனவே அவரிடம் பேசும்போது நான் அதைப் பயன்படுத்த வேண்டும்,” என்றார்.
எனவே என் தகப்பனாரிடமிருந்து நான் கடவுளைக் குறித்தும், இயேசுவைக் குறித்தும் சிருஷ்டிப்பைக் குறித்தும் கற்றுக்கொண்டேன். ஒருமுறை நாங்கள் ஒரு சுண்ணாம்புக் களத்தினருகே எங்கள் கூடாரத்தை அமைத்தோம். அந்தச் சுண்ணாம்பு சுரங்கத்தில் வெட்டியெடுக்கப்பட்ட பாறைகள் சூளையிடப்பட்டு சுண்ணாம்புத் தூள் எடுக்கப்பட்டது. அந்தச் சூட்டைத் தணித்திடுவதற்காக நாங்கள் சூளை மீது ஏறுவது வழக்கம். அப்பொழுது என் தந்தை, நரகம் இதுபோன்ற ஒன்று. இரவும் பகலும் எரிந்துகொண்டே இருக்கும் என்று எங்களிடம் சொன்னார். நான் கெட்ட பிள்ளையாக இருந்தால் அங்குதான் செல்வேன் என்று சொன்னார். அந்த எண்ணமே எனக்குள் அச்சத்தை ஏற்படுத்தியது!
இப்படியாக எங்கள் பெற்றோர் பலமான கட்டுப்பாட்டை வைத்திருந்தனர். நாங்கள் முகத்தை அலங்கரிக்கும் வஸ்துக்களையோ அல்லது குட்டையான உடைகளையோ அணியக்கூடாது. புகைபிடிக்கவுங்கூடாது. விவாகமான எனது 25 வயது சகோதரன் எங்களைப் பார்க்க வந்திருந்த ஒரு சமயம் எனக்கு ஞாபகமிருக்கிறது. என் தகப்பனார் முன்னிலையில் தெரியாமல் சிகரெட்டைப் பற்ற வைத்தான், அப்பொழுது என் தகப்பனார் அதை கையிலிருந்து விழும்படி ஒரே குத்துவிட்டார்!
குடும்ப பிரச்னைகள்
நான் 11 வயதாயிருந்தபோது, என் பெற்றோரின் விவாக வாழ்க்கை முறிந்தது, அவர்கள் இரண்டாம் முறையாக, ஏன், கடைசி முறையாகப் பிரிந்தனர். நான் என் தகப்பனுடன் இருந்தேன். எனது 19 வயது வரை நாங்கள் பயணம் செய்துகொண்டிருந்தோம். பின்பு நான் ஒரு இராணுவத்தானை விவாகம் செய்துகொண்டேன். அவன் ஒரு ரோமேனியன் அல்ல. எனவே என் தகப்பனார் மிகவும் விசனப்பட்டு 15 ஆண்டுகளாக என்னைப் பார்க்க வரவில்லை.
நாடோடியின் வழிகளை விட்டுவிடுவது நான் எண்ணிப்பார்த்ததைவிட அதிகக் கடினமாயிருந்தது. என்னுடைய வாழ்க்கையில் முதல் முறையாக நான் ஒரு வீட்டிலே வசிக்கலானேன். ஒரு வீட்டை எப்படி வைப்பது, கவனித்துக்கொள்வது, வீட்டு அடுப்பில் எப்படிச் சமைப்பது என்பதைக்கூட நான் அறிந்தில்லை.
பின்பு என்னுடைய தாய் காசநோய்க்குள்ளாகி என்னுடைய உதவியை நாடினாள். அவளைக் கவனித்துக்கொண்டிருந்த எனக்கு அந்த நோய் தொற்றிவிட்டது. ஐந்து ஆண்டுகள் மருத்துவ மனையிலிருந்த நான் ஒரு சிறுநீரகத்துடனும் முக்கால் நுரையீரலுடனும் வெளியே வந்தேன். இதற்குள்ளாக என் கணவர் என்னை விவாகரத்து செய்துவிட்டு மறுவிவாகம் செய்துகொண்டார். நானுங்கூட மறுவிவாகம் செய்துகொண்டேன். ஆனால் கடினமான—சில சமயங்களில் வன்மையான—பத்து வருடங்களுக்குப் பின்பு இந்த விவாகமுங்கூட விவாகரத்தில் முடிவடைந்தது.
“அந்த மார்க்கத்தைக்” கண்டுபிடித்தல்
1959-ம் ஆண்டு என் வாழ்க்கையில் ஒரு பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியது. யெகோவாவின் சாட்சிகளாயிருந்த இரண்டு பெண்கள் என்னை சந்தித்தார்கள். நான் அவர்களுக்குச் செவிகொடுத்து இரண்டு பைபிள் பத்திரிகைகளை வாங்கிக்கொண்டேன். ஆனால் எனக்கு வாசிக்கத் தெரியாது என்பதை அவர்களுக்குத் தெரியப்படுத்தவில்லை. அவர்களில் ஒருத்தி, மேரி நைட்டிங்கேல் என்னை மறுபடியும் சந்திக்க வந்தாள். நான் அதிகமாக ஆழ்ந்துவிட விரும்பவில்லை என்றாலும் அவள் மறுபடியுமாக வருவதாகச் சொன்னபோது அதற்கு மறுப்புத் தெரிவிக்கவில்லை. வாரத்திற்கு இருமுறை வந்தாள், சில சமயங்களில் பத்திரிகைகளை விட்டுச் சென்றாள். அவள் சென்றபின்பு, எனக்கு அப்பத்திரிகைகளை வாசிக்கமுடியவில்லையே என்ற வெறுப்புணர்ச்சியில் அவற்றைத் துண்டுதுண்டாகக் கிழித்தெரிந்தேன்.
ஆனால் கிறிஸ்தவ வழியைக் குறித்து அவள் என்னிடம் சொல்லிவந்ததை நான் வெகுவாக வரவேற்றேன், விசேஷமாக யெகோவா, நீதி மற்றும் விடுதலையளிக்கும் தேவன் என்ற கருத்து எனக்குப் பிடித்தமாயிருந்தது. (அப்போஸ்தலர் 9:2) என்னுடைய தகப்பனார் நம்பினதுபோல அவர் மனிதர்களை ஒரு எரியும் நரகத்தில் தள்ளி வதைப்பதில்லை. ஏன், பைபிள் சொல்லும் நரகம், வெறுமென பிரேதக்குழியைக் குறிக்கிறது என்பதைக் கற்றுக்கொண்டேன்! (சங்கீதம் 37:28) மற்றும், பூமிக்குரிய ஒரு பரதீஸைப்பற்றிய கடவுளுடைய மகத்தான வாக்குத்தத்தத்தையும் குறித்து நான் கற்றுக்கொண்டேன்.
ஆக, மூன்று மாதங்களுக்குப் பின்பு, எழுதபடிக்க எனக்குத் தெரியாது என்பதை ஒப்புக்கொண்டேன். என்றபோதிலும் நான் எழுதபடிக்கக் கற்றுக்கொள்ள வேண்டும் என்றும் அதற்குத் தான் உதவி செய்வதாகவும் அந்தப் பெண்மணி கூறினாள். அது மிகவும் கடினமான ஒரு காரியம், ஏனென்றால், என் தாய் மொழியோ ரோமேனி, நான் பேசும் ஆங்கிலமோ அதிக மோசம், கொச்சையாக இருந்தது. என்னுடைய பிள்ளைகள் பள்ளிக்குச்செல்ல ஆரம்பித்தபோது அவர்கள் எழுதுவதையும் படிப்பதையும் ஒரு பெக்கிஷமாகக் கருதினர், எனக்கும் உதவி செய்ய மனமுள்ளவர்களாயிருந்தனர், நான்கு வருடங்களுக்குப் பின்பு, டிசம்பர் 1963-ல் முழுக்காட்டுதல் பெற்றேன். நான் “அந்த மார்க்கத்தைக்” கண்டுபிடித்துவிட்டேன். மேரி தொடர்ந்து வாரத்திற்கு இருமுறை உதவிவந்தாள், இப்படியாக ஐந்து வருடங்களுக்கு உதவினாள். அவள் இதைத் தொடர்ந்து செய்தது எனக்குள் ஆச்சரியத்தையும் ஆனந்தத்தையும் பெருக்கியது. நான் கல்வியறிவில்லாத ஒரு நாடோடி என்று என்னை அவள் அசட்டை செய்யவில்லை, அல்லது எனக்குக் கற்பிப்பதில் உட்பட்டிருந்த கஷ்டத்தையும் பெருட்படுத்தவில்லை.
எனக்கு ஆறுதலாகவும், என்னை மகிழ்வித்ததுமான நற்செய்தியை அறிவிப்பதில் அதிக ஆர்வம் கொண்ட நான் 1972-ல் ஒரு பயனியராக, முழுநேர பிரசங்கியாக ஆனேன். “அந்த மார்க்கத்தைக்” குறித்து அறிந்துகொள்ள அனேகருக்கு உதவும் இந்த ஆத்தும திருப்தி மிகுந்த ஊழியத்தை நான் இன்னமும் அனுபவித்து வருகிறேன். என்னுடைய சொந்த மகள் டெனீஸ் முழுநேர ஊழியத்தில் என்னோடு சேர்ந்துகொண்டதில் நான் கண்ட மகிழ்ச்சி சொல்லிலடங்காதது! என்னுடைய மகன் ஸ்டீபனும் ஐந்து ஆண்டுகளாக ஒரு பயனியராக இருந்ததானது, அவன் இப்பொழுது சபையிலும் ஒரு தகப்பனாகவும் தனது பொறுப்புகளை சரிவர நிறைவேற்றி வருவதற்கு அஸ்திபாரமாக இருந்தது.
என் தகப்பனாரும் நானும் ஒப்புரவானோம் என்பதைத் தெரிவிப்பதில் எனக்கு மிகுந்த மகிழ்ச்சி. அவர் தனது முடிவு காலத்தில் அவ்வப்போது என்னுடன் தங்கி சாட்சிகளின் கூட்டங்களில், விசேஷமாக மதச் சடங்குகளிலிருந்து விலகியதும் பைபிளுக்கு முக்கியத்துவமளித்ததுமான கூட்டங்களில் கலந்துகொள்வதையும் விரும்பினார். அவர் 87 வயதில் காலமானார். அவருடைய விருப்பத்திற்கிசைவாகவும் ரோமேனியரின் வழக்கத்தின்படியும் அவருடைய சகோதரர் என் தகப்பனாரின் வீட்டையும் அவருடைய உடைமைகளையும் சுட்டெரித்தார்.
பயணங்களும், கூடாரமிட்டு தீ மூட்டி, பாட்டிசைத்து மகிழும் நாடோடி வாழ்க்கை எனக்கு இப்பொழுது ஒரு பழைய ஞாபகமாக இருக்கிறது. கல்வியறிவில்லாமை மற்றும் ஆவிக்குரிய அறியாமை என்ற இருளிலிருந்து விடுவிக்கப்பட்டிருப்பதற்காக நான் அதிக நன்றியுள்ளவளாயிருக்கிறேன். யெகோவாவின் உதவியால் நான் மேன்மையான ஒரு “மார்க்கத்தைக்” கண்டுபிடித்திருக்கிறேன்.—பெரில் டக் கூறியது. (g86 5/22)
[பக்கம் 18-ன் படம்]
இடது பக்கத்தில் நிற்கும் பெரில் டக் தனது சொந்த குடும்ப அங்கத்தினருடன் காணப்படுகிறாள்