விமானம் மால்ட்டாவுக்குக் கடத்தப்பட்டது—ஆனால் நான் உயிர்தப்பினேன்
ஏறக்குறைய இரவு 8 மணி, நவம்பர் 23. என்னோடு வேலை செய்யும் நண்பர் ஜார்ஜ் வெண்டூரிஸுடன் ஏத்தன்ஸ் சர்வதேச விமான நிலையத்தை அடைந்தோம். ஐக்கிய அரபு தேசத்திலுள்ள துபாய்க்குச் (Dubai) சென்றுகொண்டிருந்தோம். நான் வேலை செய்யும் ஒரு நிறுவனத்தின் கப்பல் ஒன்றை சோதனையிடுவதற்காகச் சென்று கொண்டிருந்தோம். எங்களுடைய தொழில் நிறுவனத்தில் நான் சில ஆண்டுகளாகத் தலைமைப் பொறியாளராகப் பணியாற்றி வந்தேன், எனவே இந்தக் குறிப்பிட்ட வேலையில் எனக்குத் துணையாக ஜார்ஜ் என்னுடன் வரவேண்டியதாயிருந்தது.
நாங்கள் துபாய்க்குக் கெய்ரோ வழியாக எகிப்திய விமானம் 648-ல் பயணம் செய்துகொண்டிருந்தோம். பல இடங்களில் சோதனை செய்யப்பட்ட நாங்கள் போயிங் 737 என்ற விமானத்திடம் வந்தோம். எங்கள் கையில் கொண்டு செல்லுமளவுக்கு மட்டுமே எங்களிடம் சாமான்கள் இருந்ததால் நாங்கள் சீக்கிரமாகவே விமானத்திற்குள் செல்ல முடிந்தது. நாங்கள் ஏழாவது வரிசையில் A, B இருக்கைகளில் அமர்ந்தோம் என்று நினைக்கிறேன். கடைசியில் எல்லோரும் ஏறிவிட்ட பின்பு அட்டவணைபடி இரவு 9:00 மணியளவில் விமானம் புறப்பட்டது. விமானம் முழுவதுமாக நிரம்பியில்லை, ஏறக்குறைய நூறுபேர் மட்டுமே இருந்திருப்பார்கள். விமானம் புறப்பட்டு சற்று நேரத்திற்குள் விமானத்தின் பணியாட்கள் குளிர்பானங்களைக் கொண்டுவந்தனர். நாங்கள் விமான நிலையத்தை விட்டு 25 நிமிடங்களாகியிருக்கும், ஒரு மனிதன் விமான ஓட்டிக் கதவுக்கு முன்னாக வந்து நின்றான். ஒரு கையில் துப்பாக்கியையும் மறு கையில் பச்சைநிற வெடி குண்டையுடையவனாயும் இருந்தான். அவன் அரபு மொழியில் சப்தமாகப் பேச ஆரம்பித்தான். நான் கிரேக்கு மொழி பேசுபவனாதலால், எனக்கு அரபு மொழி புரியாது. என்றபோதிலும் இது விமானத்தைக் கடத்தும் ஒரு செயல் என்பது தெளிவானது.
எனவே நாங்கள், எங்களோடு பயணம் செய்த எகிப்திய பயணிகளின் சைகைகளைப் பின்பற்றுகிறவர்களாய் எங்களுடைய இரு கைகளையும் தலைகளுக்குமேல் உயர்த்தினோம். அவன் தான் வைத்திருந்த கைக்குண்டிலிருந்து ஏதோ ஒன்றைத் தன் பல்லால் கடித்துப் பிடுங்க முயற்சி செய்தான். அவன் அதில் வெற்றிகொள்ளவில்லை, ஆதலால் அந்தக் கைக்குண்டை மீண்டும் அவனுடைய சட்டைப் பைக்குள் போட்டான்.
அந்த விமானக்கடத்தி தனிமையாக இல்லை. முன் வரிசைகளில் உட்கார்ந்திருந்தவர்களை பின் இருக்கைகளில் தங்களுக்கு வசதியான இடங்களில் உட்காரச் செய்தான். பின்பு எங்களுடைய டைகளைக் கேட்டான். அடுத்து அவன் ஒவ்வொரு நபராக முன் வரிசையில் உட்காரச் சொன்னான். அவர்களுடைய பயண அனுமதிச் சீட்டுகளை வாங்கினான்.
முன் இருக்கைகளிலிருந்தவர்கள் பின் வரிசைக்குச் சென்றபோது, எனக்குப் பக்கத்தில் எகிப்தியர் ஒருவர் வந்து அமர்ந்தார். அவர் விமானப் பாதுகாப்புக் காவலர் தொகுதியின் தலைவர் என்பதை அறியவந்தேன். இவரை அவன் முன்வர அழைத்து, பயண அணுமதிச்சீட்டை வாங்கிக்கொண்டு, வலுக்காட்டாயமாய்க் கீழே படுக்க வைத்து, டைகளைக் கொண்டு கட்டிவிட்டான். இதற்கு முன்பாகவே விமானத்தின் பிரதான ஓட்டுனர் கட்டப்பட்டுவிட்டார்.
என்னுடைய சமயம் வந்தபோது, அவன் அந்த எகிப்திய பாதுகாப்புக் காவலருக்கு அடுத்ததாகக் கூப்பிட்டு, என் பயண அனுமதி சீட்டைப் பெற்றுக்கொண்டு, என்னை சோதனை செய்யாமலேயே உட்காரும்படி சொன்னான். அவனுக்கு வலது பக்கத்தில் மூன்றாவது வரிசையைச் சுட்டிக் காட்டினான்.
பயணத்தில் துப்பாக்கிச்சூடு
ஒருசில நிமிடங்களுக்குள் எனக்குப் பின்னால் துப்பாக்கிச்சூடு. நாங்கள் உடனடியாக இருக்கைகளுக்கிடையே பதுங்கிக்கொண்டோம். உள்ளே காற்றழுத்தம் குறைய ஆரம்பித்தது, மேலேயிருந்து பிராணவாயுப் பைகள் கீழே வந்தன. பயணிகளில் பலர் அதை அணிந்துகொண்டனர், ஆனால் பிராணவாயுக்கான தேவையை நான் உணரவில்லை. விமான ஓட்டி, விமானத்தை மிக வேகமாக தாழ இறக்கினான் என்று நினைக்கிறேன்.
துப்பாக்கிச்சூடு முடிந்தபோது, நான் பின்னால் திரும்பிப் பார்த்தேன். அந்த விமானக் கடத்தல் தொகுதியின் தலைவன் கீழே படுத்துக்கிடந்தான். அவன் இறந்துவிட்டது போலிருந்தது. இன்னொரு மனிதனுங்கூட கீழே விழுந்திருந்தான், மற்றும் இரண்டு விமானப் பணியாட்களும் ஒரு பயணியும் காயமுற்றிருந்தனர்.
அந்த விமானக் கடத்தி ஒரு பயணியிடம் பாஸ்போர்ட் கேட்டான்போலும், அந்தப் பயணி பாதுகாப்புக் காவலரில் ஒருவனாயிருக்க, பாஸ்போர்ட் எடுப்பதற்குப் பதிலாகத் தன் துப்பாக்கியை எடுத்து அந்த விமானக் கடத்தியைச் சுட்டான். ஆனால் அந்தக் காவலன்தானே அவனுக்குப் பின்னாலிருந்த மற்றொரு விமானக்கடத்தியால் சுட்டுக்கொல்லப்பட்டான்.
கீழே விழுந்த அந்தக் காவலனின் துப்பாக்கி என் கால்களிடமாக வந்து விழுந்தது. அதை எடுக்க வேண்டும் என்று நினைத்தேன். ஆனால் ஞானமாக அந்த எண்ணத்தை ஒதுக்கித்தள்ளினேன்—அதை எடுத்திருந்தாலுங்கூட எப்படி உபயோகிப்பது என்பது எனக்குத் தெரிந்திருக்காது.
பின்பு விமான ஓட்டியின் கதவு திறந்தது. உயரமான முகமூடியணிந்த ஒருவன் கைகளில் துப்பாக்கியும் கைகுண்டையும் ஏந்தியவனாய் வந்தான். எனக்குப் பின்னாக இருந்த விமானக் கடத்தியிடம் பேசின பின்பு என்னை நேருக்குநேர் பார்த்த நிலையில், எழுந்திருக்கும்படித் தன் துப்பாக்கியால் சைகை காண்பித்தான். அவன் எதையோ சொன்னான், ஆனால் கீழே விழுந்து கிடந்திருந்த அந்த விமானக் கடத்தியை விமான ஓட்டியின் இருப்பிடத்திற்கு இழுத்துவரும்படி சொன்னான் என்பதை அவன் சைகையிலிருந்து புரிந்துகொண்டேன்.
நான் அதைச் செய்ய ஆரம்பித்தபோது, அவனைத் திருப்பும்படியாகச் சொல்லப்பட்டேன். தனிமையாகத் திருப்ப முடியாததைக் கண்டு அவன் உதவிக்காக ஒருவரை அழைத்தான். அப்பொழுது டெமட்ரிஸ் உல்காரிஸ் வந்தார். அவரை எனக்குப் பல ஆண்டுகளாகத் தெரியும். ஏனென்றால் அவர் எங்களுடைய நிறுவனத்தில் வேலைபார்த்தார். டெமட்ரிஸ் அந்த மனிதனின் கால்களைப் பிடித்துத் தூக்க, நான் தோள்களைப் பிடித்து தூக்கி அவனைத் திருப்பிக் கடத்தினோம். அவனுடைய சட்டைப் பையிலிருந்த கைகுண்டுகளை எடுத்துக்கொள்வதற்காக அவனைத் திருப்பி கடத்தும்படி சொல்லப்பட்டோம்.
விமானக் கடத்திகளில் ஒருவன் அந்தக் கைக்குண்டுகளை எடுத்த பின்பு, விழுந்து கிடந்த அவனுக்குக் கொஞ்சம் தண்ணீர் கொடுக்க அனுமதி கேட்டோம், ஆனால் அனுமதி வழங்கப்படவில்லை, ஒருவேளை அவனை உயிர்பிழைக்க வைக்க முடியாது என்பதை அறிந்திருந்தார்கள் போலும். எனவே நாங்கள் அந்தக் கதவண்டையில் அவனை நேராக உட்கார வைத்தோம். பாதுகாப்புக் காவலனை முன்னாக இழுத்துவரும்படியாகச் சொல்லப்பட்டோம். இந்தச் சமயத்தில்தான் தளத்தில் துப்பாக்கிகள் இருப்பதைக் கண்டு அவற்றை ஒரு விமானக் கடத்தி ஒன்று சேர்த்தான்.
பாதுகாப்புக் காவலனை முன்பக்கத்திற்குக் கொண்டுவருகையில் அவனுடைய காயங்களைக் கட்டி அவனுக்கு முதலுதவி செய்ய நினைத்தோம். ஆனால் அவனுடைய தலை முதல் வரிசை இருக்கைகளிடம் நெருங்கியபோது, விமானக் கடத்தி எங்களை நிற்கச் சொன்னான். இரண்டு உணவுத் தட்டுகளை காலிசெய்ய—அந்த உணவைக் கீழே கொட்டிவிடச் சொல்லப்பட்டேன். அந்தத் தட்டுகளை முதல் இருக்கையில் வைக்கும்படியும், அவற்றின் மீது அந்தக் காவலனின் தலையைப் பிடித்திருக்கவும் சொல்லப்பட்டேன்.
அப்படியிருந்த அவனை சுட்டுக்கொல்லப்போகிறான் என்பது எனக்குத் தெரியவந்தபோது: “வேண்டாம்!” என்று அலறினேன். என்னுடைய முகத்தைக் கைகளால் மூடிக்கொண்டு, பயணிகள் பக்கமாகத் திரும்பி, “அவனைக் கொல்லப்போகிறான்!” என்றேன். ஆச்சரியம் என்னவெனில், அந்த விமானக் கடத்தி எனக்கு ஒன்றும் செய்யவில்லை. இந்தக் காவலனின் தலையை நேராகப் பிடித்தான், ஆனால் அவனைக் கொல்லவில்லை. பின்பு அவன் முதல் வரிசையில் எனக்குப் பக்கத்தில உட்கார்ந்தான்.
ஒருசில நிமிடத்திற்குப் பின்பு என்னால் அங்கு உட்கார முடியவில்லை, எனவே என் கைகளைத் தூக்கியவாறு நான் பின் இருக்கைகளுக்குச் சென்றேன். ஐந்தாவது அல்லது ஆறாவது வரிசையில் ஒரு இருக்கையில் அமர்ந்தேன். என்னுடைய உதவியாளன் ஜார்ஜ் வென்டூரிஸ் எனக்குப் பின்னே வந்து அமர்ந்தான்.
பயணப்பணியாளர் தலைவன் தன் கட்டுகளை அவிழ்த்துக்கொண்டு, பாஸ்போர்ட்டுகளை வாங்குவதற்குப் பயன்படுத்தப்பட்ட மற்றொரு பணியாளனை அழைத்தான். நாங்கள் விமான நிலையத்தில் இறங்கும் நேரம் வந்துவிட்டது. ஆனால் இறங்குவதற்கு முன்பு மரித்துக்கொண்டிருந்த அல்லது மரித்துப்போன அந்தக் கடத்தற்காரனைப் பிடித்து கட்டிவைக்கும்படி விமானப் பணியாருக்கு உத்தரவிடப்பட்டது.
மால்ட்டாவுக்கு வந்து சேர்ந்தோம்
விமானக் கடத்திகள் வந்து சேரவேண்டிய இடம் எதுவாயிருப்பினும், நாங்கள் இரண்டு மணிநேர பயணத்திற்குப் பின்பு மால்ட்டா வந்து சேர்ந்தோம். விமானம் இறங்கியதும் கதவு திறந்தது, மருத்துவர் ஒருவர் வந்தார். உயிரிழந்த விமானக்கடத்தியைப் பரிசோதனை செய்துபார்க்கச் சொல்லப்பட்டார். மருத்துவர் பார்த்து தலையை அசைத்தார். பின்பு அந்தக் காவலனின் உடலை பரிசோதனை செய்ய எழுந்தார். ஆனால் விமானக் கடத்தி அதற்குச் சம்மதிக்கவில்லை.
கிரேக்கர் அனைவரும் விமானத்தின் வலது பக்கத்தில் உட்காரும்படிச் சொன்னான். 17 கிரேக்கர்கள் இருந்தார்கள், கடைசியில் 5 பேர் மட்டுமே உயிர்தப்பினர்.
பிலிப்பீனோ பெண்கள் அனைவரும் முன்பக்கத்திற்கு வரவேண்டும் என்று பணியாளன் அறிவித்தான். மற்ற பெண்களுங்கூட அழைக்கப்பட்டார்கள், மொத்தத்தில் 11 பெண்கள் மருத்துவருடன் விமானத்தைவிட்டுச் செல்லும்படி அனுமதிக்கப்பட்டனர்.
சுட்டு வீழ்த்த ஆரம்பிக்கின்றனர்
பயணியர் பணியாள் இஸ்ரேலியப் பெண்கள் எங்கே என்று கேட்டார். தாங்கள் விடுதலை செய்யப்படப்போகிறார்கள் என்று நினைத்து ஓர் இளம்பெண் உடனடியாக பதில் சொன்னாள். ஆனால் அவள் முன்னாக வந்தபோது முகமூடியணிந்த ஒரு மனிதன் அவளைப் பிடித்து இழுத்து, இறங்கும் வாயிலினிடமாகத் தள்ளினான், ஆகையால் என்ன நடந்தது என்பதை என்னால் பார்க்கமுடியவில்லை. ஆனால் ஒரு துப்பாக்கிச் சூடு சத்தம் தொடர்ந்தது, நாங்கள் இருக்கைகளுக்குள் பதுங்கினோம். ‘தொப்’ என்று ஒரு சப்தம் கேட்டது. அந்தப் பெண்மணி தன் தலையை திடீரென்று திருப்பியதால் துப்பாக்கி தோட்டா அவளை நேராய் சுடாமல் அவள் தலைப்பக்கமாகச் சென்றது என்று பின்னால் கேள்விப்பட்டோம். அவள் படிக்கட்டுகளுக்கு இடையில் விழுந்து, விமானத்திற்குக் கீழே ஒளிந்துகொண்டு, கடைசியில் உயிர்த்தப்பினாள்.
அந்த விமானக் கடத்திகளுக்கு எரிபொருள் தேவைப்பட்டதால் அதற்காக மிரட்டிக்கொண்டிருந்தனர். ஒருசில நிமிடங்களில் இரண்டாவது இஸ்ரேலியப் பெண் அழைக்கப்பட்டாள், ஆனால் அவள் எழுந்திருக்கவில்லை. பயணியர் பணியாள் அந்தப் பெண்ணின் பாஸ்போர்ட்டை எடுத்துக்கொண்டுவந்து அவளை அடையாளங்கண்டான். அவளை எழுந்திருக்கும்படி சொன்னான், அவள் எழுந்திருக்கவில்லை. எனவே அந்த விமானக்கடத்தி அரபுமொழி பேசிய இரண்டு பயணிகளை அவளிடம் அனுப்பி, அவளைப் பலவந்தமாகக் கொண்டுவரச் சொன்னான். அந்தச் சமயத்தில்தானே எல்லோருமே அதிர்ச்சியடைய ஆரம்பித்தனர்.
அந்தப் பெண்மணி அழுதுகொண்டிருந்தாள். தரையிலே விழுந்து கதற ஆரம்பித்தாள். விமான ஓட்டியிடம் சற்று பேசிவிட்டு வந்த அவன் அவளை வெளியே தள்ளினான். மறுபடியுமாக ஒரு துப்பாக்கிச் சூடு. அவள் அடிப்பட்டு கீழே தொப் என்று விழுந்த சப்தம் கேட்டது. இப்பொழுது நேரம் நள்ளிரவைக் கடந்து விட்டது.
சிறிது நேரத்திற்குள், வேறு மூன்று பேர் அழைக்கப்பட்டார்கள், ஓர் இளம் மனிதனும் இரண்டு பெண்களும். அவர்களுடைய பெயர்களிலிருந்து அவர்கள் அமெரிக்கர்கள் என்பதைத் தெரிந்து கொண்டோம். அவர்களை முன்னால் கொண்டுவந்து நிறுத்தி கைகளைப் பின்னால் வைத்து கட்டும்படியாகப் பணியாட்களிடம் சொன்னான்.
ஒரு மணிநேரம் கடந்தது. அந்த விமானக்கடத்தி அமெரிக்க இளைஞனை அழைத்தான். அந்த இளைஞனின் அமைதி என்னை வெகுவாகக் கவர்ந்தது. அவன் எழுந்துநின்று ஒரு பரிசைப் பெற்றுக்கொள்ளப்போவதுபோல் அந்த விமானக் கடத்தியிடம் சென்றான்—மிக அமைதியாக, மறுபடியும் ஒரு சப்தம், கதவு மூடியது. நான் பார்க்கவில்லையென்றாலும், அந்தப் பையன் வெளியே செல்லும் வாயில் படிகட்டுகள் வழியாய் விழுந்தான். ஆச்சரியத்திற்குரியதென்னவெனில், அந்த முதல் இஸ்ரேலியப் பெண்மணிபோல இவனும் துப்பாக்கிச்சூடுக்கு இறையாகாமல் உயிர்தப்பினான்.
இன்னொரு மணிநேரம் கடந்தது, அவன் மற்றொரு அமெரிக்கப் பெண்மணியை அழைத்தான், அதே கதை தொடர்ந்தது—துப்பாக்கிச்சூடு, கீழே விழும் சப்தம். மணி காலை மூன்று அல்லது நான்காக இருக்கும். மழை பெய்துகொண்டிருந்தது, இது அந்த இரவை அதிகக் கடுமையாக ஆக்கினது. பயணிகளோ தங்கள் இருக்கைகளைவிட்டு அசையவில்லை.
அமைதியாக இருந்தது—அழுகையோ, கூக்குரலோ அல்லது எந்த சப்தமோ இருக்கவில்லை. ஆனால் பின்வரும் வார்த்தைகள் மெதுவாக ஒலித்தன: “இதோ, இஸ்ரேலியப் பெண்ணை சுட்டுவிட்டான்,” “பாவம் அந்தப் பெண்மணி,” “இப்போது அவன் அமெரிக்கனை சுட்டுவிட்டான்.” மேலும் அவர்களுக்குள்ளிருந்த கேள்விகள்: “இது என்ன?” “இது எப்படித் தொடரமுடியும்?” “அவன் இப்பொழுது என்ன செய்யப்போகிறான்?”
நானோவென்றால், ஒவ்வொரு துப்பாக்கிச் சத்தத்திற்கும் யெகோவாவை நோக்கி ஜெபித்தேன். அவருக்குச் சித்தமானால் அந்த நபரை அவர் நினைவுகூர்ந்து, கடவுளுடைய புதிய ஒழுங்குமுறையில் ஜீவனைப் பெறும் வாய்ப்பைக் கொடுப்பாராக என்று அவரிடம் விண்ணப்பித்தேன்.
அதற்கிடையில், கதிரவன் உதயமாக ஆரம்பித்தது. கதவு திறந்தது. விமானக் கடத்திகளுக்குத் துணையாக இருந்த இருவர் வெளியே சென்று அவர்களுக்குச் சாப்பிட ரொட்டி கொண்டுவந்தனர். சிலர் சாப்பிட்டனர், மற்றவர்கள் சாப்பிடவில்லை. குடிப்பதற்கு எங்களுக்குத் தண்ணீரும் கொடுத்தனர்.
விமானக் கடத்திகள் தொடர்ந்து சுட்டு வீழ்த்திக்கொண்டிருந்ததால், அவர்களுடைய கோரிக்கை நிறைவேற்றப்படுவதற்கு மிக உயர்ந்த கிரயத்தை உட்படுத்துகிறது என்று நாங்கள் நினைத்தோம். அடுத்தது நாங்கள் சுட்டு வீழ்த்தப்படுவோம் என்று எண்ணிக்கொண்டிருந்தோம். ஆனால் அந்த அமெரிக்கப் பெண்மணி சுடப்பட்டதற்குப் பின்பு பல மணிநேரங்கள் கடந்ததால், ஏதோ ஒரு ஒப்பந்தம் செய்யப்படுகிறது என்று நம்ப ஆரம்பித்தோம்.
மதிய நேரம், விமானத்தின் கதவு திறக்கப்பட்டது, மற்றொரு அமெரிக்கப் பெண்மணி அழைக்கப்பட்டு சுட்டுக்கொல்லப்பட்டாள். இது நடந்தபோது நாங்கள் ஒவ்வொருவரும் அடுத்ததாக பலியாவோமோ என்று பயந்துகொண்டிருந்தோம். ஆனால், பிற்பகல் கடந்து இரவுநேரம் வந்தபோது, ஒருவருமே அழைக்கப்படவில்லை. அவர்களுக்குள் ஒரு ஒப்பந்தம் ஏற்பட்டுவிட்டது என்று நாங்கள் நினைத்தோம்.
நீர் அதிக அமைதியாக இருக்கிறீர்
அந்த நாளிலே நான் எனக்குள்ளே பின்வருமாறு நினைத்துக்கொண்டேன்: ‘இன்று ஞாயிற்றுக்கிழமை, பைரேஸிலுள்ள சபையில் இப்பொழுது பொதுப்பேச்சு நடந்துகொண்டிருக்கும்,’ பின்பு நான் ஒரு கூட்டத்திலிருப்பதுபோல் மனதுக்குள்ளேயே ஒரு ஜெபம் செய்தேன். பின்பு பொதுப்பேச்சு முடிந்திருக்கும் என்று எனக்குள்ளே சொல்லிக்கொண்டு என் காவற்கோபுரம் பத்திரிகையை வெளியே எடுத்தேன். காவற்கோபுரப் படிப்பில் உட்கார்ந்து கொண்டிருப்பதுபோல் கற்பனை செய்தேன். சங்கீதம் 118:6-லுள்ள வசனம் என் ஞாபகத்திற்கு வந்தது: “யெகோவா நம் பக்கத்திலிருக்க, மனுப்புத்திரனுக்கு ஏன் பயப்பட வேண்டும்?”
எனக்குப் பின்னால் உட்கார்ந்துகொண்டிருந்த என்னுடைய உதவியாளன் ஜார்ர்ஜ் வெண்டுரிஸ் ஒருமுறை என்னிடம்: “சார், நீங்கள் அமைதியாக இருந்தீர்கள் என்பது எனக்குத் தெரியும், ஆனால் நீங்கள் அளவுக்கு மிஞ்சி அமைதலாக இருக்கிறீர்கள்!” என்றான்.
அவனைப் பார்த்து நான்: “இதோ பார் மகனே, இங்கு ஒரு சாதாரணப் பிரச்னை இருக்கிறது. ஒன்று நாம் உயிரோடிருப்போம், அல்லது மரிப்போம். பிரச்னை நம்முடையதல்ல. கடவுளில் நம்பிக்கையாயிரு. அவர் நாம் மரிப்பதை அனுமதித்தால், அது அவருடைய அனுமதி. எனவே கவலைப்பட்டுக்கொண்டிராதே,” என்றேன்.
“எனக்கு வாசிப்பதற்கு ஏன் ஏதாவது கொடுக்கக்கூடாது?” என்று கேட்டான். நான் காவற்கோபுரம் பத்திரிகையைக் கொடுத்தேன்.
ஒரு கிறிஸ்தவ மூப்பனாக பணிபுரியும் நான் பைரேஸ் சபையில் படிப்பு முடிந்துவிட்டிருக்கும் என்று நினைத்துக்கொண்டு மற்றொரு ஜெபத்தை செய்தேன். என்ன நடக்கப்போவதை யெகோவா அனுமதிக்கிறாரோ, அதை ஏற்றுக்கொள்ள நான் தயாராக இருக்கிறேன் என்று அவரிடம் சொல்லி என்னை அவருடைய கரங்களில் ஒப்படைத்தேன்.
என்னுடைய மனைவிக்கு ஒரு சிறிய கடிதத்தை எழுத நினைத்தேன்: ‘கேத்தியும் பிள்ளைகளும், நாம் ராஜ்யத்தில் சந்திப்போம்.” ஆனால் எழுதுவதற்கு என் பேனாவை எடுத்த உடனே, எனக்குள் ஒரு யோசனை, ‘நீ இங்கு என்ன செய்துகொண்டிருக்கிறாய்? நீதிபதியாக நடிக்கிறாயா? காரியம் யெகோவாவின் கரத்திலிருக்கிறது என்று சற்று முன்புதானே சொன்னாய்?’ நான் மரித்துவிடுவேன் என்று எழுதுவதற்கு எனக்கு உரிமை இல்லை என்று உணர்ந்தேன். எனவே எதையும் எழுதாமல் என் பேனாவைத் திரும்ப அதனிடத்தில் வைத்துவிட்டேன்.
மீட்கப்படுதலும் உயிர்தப்பித்தலும்
திடீரென்று, மாலை 8:30 மணிபோல் இயந்திரத் துப்பாக்கிகள் சுடப்படும் சப்தம் கேட்டது, வெளியிலே ஆனால் விமானத்திலிருந்துங்கூட துப்பாக்கிச்சூடு இருந்தது, அநேகமாக அந்த விமான கடத்திகளிடமிருந்து. நாங்கள் தரையிலே விழுந்தோம். ஒரு வெடிப்பு ஏற்பட்டது, விளக்குகள் துண்டிக்கப்பட்டன.
‘விளக்குகள் இல்லாததால், ’நான் மெதுவாக அசையலாம்,’ என்று நினைத்தேன். எழுந்து நின்றேன். நான் எழுந்த உடனேயே ஒரு எரியும் உணர்வைப் பெற்றேன். ஏதோ ஒரு வகை வாயு, எனவே நான் சுவாசிக்கவில்லை. ஜார்ஜ் என்னிடம், “அவர்கள் நம்மை உயிரோடே எரிக்கப் போகிறார்கள்,” என்றான். என்னால் பேச முடியவில்லை. உயிர்த்தப்புவதற்காக நான் மெதுவாக சுவாசித்தேன்.
நான் பார்த்துக்கொண்டிருந்த திசை முழுவதும் இருள் நிறைந்திருந்தது. ஆனால் “அந்தப் பக்கம்,” என்று ஒரு குரல் கேட்டது. நான் திரும்பிப் பார்த்தபோது ஓர் ஒளிக்கதிர் காணப்பட்டது, எனவே அந்தத் திசையில் சென்றேன். ஒரு சில வினாடிகளுக்குள் நான் ஒரு வாயில் பக்கமாக இருப்பதைக் கண்டேன். அது ஒருவேளை விமானத்தின் இறக்கைகள் பக்கத்திலுள்ள அவசர வாயிலாக இருக்கலாம். இறக்கையிலிருந்து விழுத்தேனா அல்லது குதித்தேனா என்பது எனக்கு ஞாபகமில்லை.
எனக்கு ஞாபகமிருக்கும் இன்னொரு காரியம், நான் கீழே படுத்திருப்பதும் என்மீது ஒருவர் ஏறியிருப்பதுமாகும். என் தலையை ஒருவன் பிடித்திருந்தான். நான் விமானத்திற்கு வெளியே இருப்பதாக உணர்ந்தேன், மற்றும் இவர்கள் தாமே எங்களை மீட்கும் பணியில் ஈடுபட்டவர்கள்.
நான் மறுபடியும் சுவாசிக்க ஆரம்பித்தேன். சுத்தமான காற்று இருந்தபோதிலும், நான் இன்னும் அந்த விஷவாயுவை சுவாசித்துக்கொண்டிருப்பதாக உணர்ந்தேன். தொடர்ந்து பல நாட்களுக்கு இந்த உணர்வு இருந்துவந்தது. எனக்குப் பின்னால் மற்றவர்களும் விழுந்தார்கள். நாங்கள் எழுந்திருக்க முயன்றோம். ஆனால் அதற்கு அனுமதிக்கப்படவில்லை. எனவே சில பெட்டிகளுக்கிடையே பதுங்கி பதுங்கி தவழ்ந்து சென்றோம். அங்குதானே நாங்கள் பரிசோதிக்கப்பட்டோம். பின்பு ஒரு காரில் மருத்துவமனைக்குக் கூட்டிச்செல்லப்பட்டோம்.
விமானத்தைக் கைக்குண்டுகளால் தாக்கிய எகிப்திய அதிகாரிகள் ஏறக்குறைய 60 பேரை சுட்டு வீழ்த்தினர். வருத்தத்திற்குரிய காரியம், என் நண்பர் ஜார்ஜ் வெண்டூரிஸும் கொல்லப்பட்டவர்களில் ஒருவரானார்.
மருத்துவமனையில்
நாங்கள் புனித லூக்கா மருத்துவமனைக்கு வந்துசேர்ந்தபோது, “அவசரப் பிரிவு!” என்ற வார்த்தை ஒலிப்பதைக் கேட்டேன். எங்களை மருத்துவர் பார்க்க வந்தார். என்னுடைய உள்கால்சட்டை தவிர மற்ற உடைகள் முழுவதையும் கழற்றினார்கள். பின்பு உள்ளே கொண்டுசென்றார்கள். நான் வேதனையிலிருந்தேன், எண் கண்கள் எனக்குத் தொந்தரவு கொடுத்துக்கொண்டிருந்தது. சீக்கிரத்திலேயே நான் ஒன்றையும் பார்க்கமுடியவில்லை, எனவே நான் கதற ஆரம்பித்தேன், மருத்துவர் வந்தார், அவர் என் கண்களில் எதையோ வைத்தார்.
அவர்கள் எனக்குக் கட்டுகளைக் கட்டி ஊசிமூலம் உணவளிக்க ஆரம்பித்தனர். ஒரு துவாலினால் கழுவப்பட்ட எனக்கு வேதனை குறைய ஒரு ஊசி போட்டார்கள். நான் யெகோவாவின் சாட்சியாக இருப்பதால், எனக்கு இரத்தமேற்ற வேண்டாம் என்று என் அறைகுறை ஆங்கிலத்தில் சொன்னேன். அப்பொழுது விமான நிலையத்திற்கு வந்திருக்கும் ஒரு மருத்துவத்துறை முதலுதவி வாகனத்தில் மால்ட்டாவைச் சேர்ந்த சாட்சி ஒருவர் வேலை செய்கிறார் என்று என்னிடம் சொல்லப்பட்டது, அவர் என்னிடம் பேச வந்தபோது அவர் சொன்னார், “கவலைப்பட வேண்டாம், அவர்கள் இரத்தமேற்ற மாட்டார்கள்.”
கடைசியில் ஒரு மருத்துவர் வந்தார். அந்தப் பெண்மருத்துவர் அதிக நிதானமானவராக இருந்தார். அவளுடைய முகத்தைப் பார்க்க முடியவில்லை, ஆனால் குரல் ஞாபகமிருக்கிறது. என்னுடைய வீட்டிற்குத் தொலைபேசி மூலம் தொடர்புகொண்டு, நான் உயிரோடே இருக்கிறேன் என்பதைத் தெரிவிக்கும்படியாக அந்த மருத்துவரைக் கேட்டுக்கொண்டேன். அவர்களைக் குறித்துக் கவலைப்பட்டேன்.
மருத்துவமனையின் இயக்குநர் வந்தார் என்று நினைக்கிறேன். அவர் என் கையைப் பிடித்து, “உங்களுடைய பெயர் என்ன?” என்று கேட்டார். பின்பு கிரீஸிலுள்ள காவற்கோபுர சங்கத்தின் கிளைக்காரியாலயத்திலுள்ள சாட்சிகள் தொலைபேசியில் தொடர்புகொண்டிருப்பதாகக் கேள்விப்பட்டேன். நான் உயிரோடிருக்கிறேன் என்பதை நிச்சயப்படுத்திக்கொண்டு அவர்களுக்குத் தெரிவிப்பதற்காக அந்த மருத்துவமனை இயக்குநர் என்னைப் பார்க்க வந்தார். திங்கட்கிழமை காலையில் இது நடந்தது.
செவ்வாய்க்கிழமை என்னுடைய மனைவியும் மகனும் மால்ட்டாவுக்கு வந்தார்கள். அவளுடைய கையைத் தொட்டதும் அது என் மனைவி என்பதை அறிந்துகொண்டேன். அவளைக் கட்டியணைத்து யெகோவாவுக்கு நன்றி சொன்னேன். என்னுடைய மகனும் வந்தான், நான் வேலை செய்யும் நிறுவனத்தின் மேலாளரும் வந்தார்.
இது சமயம் வரை எனக்கு சுவாசிப்பதற்காக பிராணவாயு கொடுத்துக்கொண்டிருந்தார்கள். மற்றும் ஒரு மருத்துவச்சி வந்து என் முகத்தைத் திருப்பி பின்னால் ஒரு அடி கொடுத்தாள். சளி வெளியேறுவதற்காக அப்படிச் செய்தாள். நான் பார்க்க முடிந்தபோது, சளி கருமை நிறமாக இருப்பதைப் பார்த்தேன். விஷ வாயுவால் அது அந்நிறத்தைப் பெற்றிருக்க வேண்டும். புதன் கிழமையன்று என் கட்டுகள் அவிழ்க்கப்பட்டன. ஆனால் வெளிச்சத்தைப் பார்ப்பது எனக்குக் கஷ்டமாக இருந்தது.
அந்த நாளில் அநேக செய்தித்தாள் நிருபர்கள் வந்தார்கள், ஆனால் மருத்துவர்கள் அவர்களை உள்ளே அனுமதிக்கவில்லை. அதற்குள் காவல் துறையினர் வந்து நான் ஒரு அறிக்கை கொடுக்கவேண்டும் என்றார்கள். பின்பு அவர்கள் என்னிடம், “உங்களுக்கு இவ்வளவு விஷயம் தெரிந்திருக்க, நீங்கள் ஒரு புத்தகமே வெளியிடலாம்” என்றார்கள். அதற்குப் பின்பு தூதரகத்திலிருந்து ஒரு பிரதிநிதியும், குற்றவழக்கு நடத்துபவரும் ஒரு டேப் ரிக்கார்டரில் மொழிபெயர்ப்பாளர் உதவிகொண்டு என்னுடைய அறிக்கைகளை எடுத்துக்கொண்டனர்.
இது முடிந்தபோது, என்னுடைய மகனும் மனைவியும் மருத்துவமனையிலிருந்து போகவேண்டியதாயிருந்தது. நான் சுகமடைந்து அவர்களோடு சேர்ந்து பயணம் செய்யும் நிலை வரும்வரை அவர்கள் மால்ட்டாவிலுள்ள சாட்சிகள் வீட்டில் தங்கியிருந்தார்கள். எகிப்திய விமானம் எண் 648 கடத்திச் செல்லப்பட்டபோது அந்தப் பயங்கரமான சம்பவத்தில் உயிர்த்தப்பிய சிலரில் நானும் ஒருவனாயிருப்பதற்கு நான் அதிக நன்றியுள்ளவனாயிருக்கிறேன்.—எலியாய் ரூஸீஸ் கூறியது. (g86 6/22)
[பக்கம் 14-ன் சிறு குறிப்பு]
அவன் தன் துப்பாக்கியை எடுத்து அந்த விமானக்கடத்தியைச் சுட்டான்
[பக்கம் 16-ன் சிறு குறிப்பு]
இன்னொரு அமெரிக்கப் பெண்மணியும் அழைக்கப்பட்டு சுட்டுக்கொல்லப்பட்டாள்
[பக்கம் 17-ன் படம்]
எனக்குப் பார்க்க முடியவில்லை, நான் அதிக வேதனையிலிருந்தேன்
[பக்கம் 18-ன் படம்]
என்னுடைய மனைவியும் மகனும் என்னை மருத்துவமனையில் பார்க்க வந்தார்கள்