உலகத்தைக் கவனித்தல்
மத சம்பந்தமான முன் அறிவிப்பு—இருள் சூழ்ந்திருக்கிறது!
அமெரிக்க சர்ச்சுகளின் எதிர்காலப் போக்கை அடையாளம் கண்டு கொள்ள, அமெரிக்க ஐக்கிய மாகாணங்களில் இல்லினாயிலிலுள்ள கிறிஸ்டியானிட்டி டுடே இன்ஸ்டிட்யூட், எற்பாடு செய்த ப்ராட்ஸ்டண்டு மேதைகளின் ஒரு குழு, அமெரிக்காவில் கிறிஸ்தவ விசுவாசம் ஒரு கடினமான மற்றும் அநிச்சயமான எதிர்காலத்தை எதிர்படுவதாக எச்சரித்தது. உண்மையில் ஒரு சர்ச் தலைவர் பின்வருமாறு சொன்னார்: “சர்ச் அல்ல, தொழில்நுணுக்கத் துறையே நம்முடைய கலாச்சாரத்தில் செல்வாக்கு மிக்க சக்தியாக இருந்து வந்திருக்கிறது”. சர்ச்சிலுள்ள நிலைமைகளைக் குறித்து மேலுமாக குறிப்பிடுகையில், கலிபோர்னியாவிலுள்ள மாலிபூ பீச்சின் பெப்பர்டைன் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஜான் ஜான்ஸ்டன் இவ்விதமாகச் சொன்னார்: “சர்ச்சானது வழியில் செல்பவர்களுக்கு, ஆவிக்குரிய வகையில் உதவாத உணவு பண்டங்களை வழங்கும் ஒரு சிறப்பங்காடியாக மாறிவிட்டிருக்கிறது. போதகரின் பிரசங்கம், வாடிக்கையாளர்களுக்கு ‘வாரத்தின் சிறப்புப் பண்டமாகவும்’ ஈடுபாடு கொள்ள வேண்டிய அவசியமில்லாதிருப்பதே இதற்கு கிடைக்கும் தள்ளுபடியாகவும் இருக்கிறது.”
அறியப்படாத மிகச் சிறந்த விற்பனைப் பொருள்
சமீப வருடங்களில் ஐக்கிய மாகாணங்களில் பைபிளில் விற்பனை வருடத்துக்கு 360 கோடி ரூபாயை எட்டியிருப்பதாக தி ப்ராவிடன்ஸ் சன்டே ஜர்னல் அறிவிக்கிறது. விற்கப்படும் பைபிளில் 80 சதவிகிதத்தை, ப்ராட்டஸ்டண்டு மதத்தைச் சேர்ந்தவர்கள் வாங்குகிறார்கள் என்பதாகச் சுவிசேஷ கிறிஸ்தவ வெளியீட்டாளர்கள் சங்கம் குறிப்பிடுகிறது. மறுபட்சத்தில், கத்தோலிக்கர்கள், பைபிள் சந்தையில் “உறங்குகிற இராட்சதர்களாக” இருக்கிறார்கள் என்பதாக தேசத்தில் அதிகமாகப் பைபிளைப் பிரசுரிக்கும் தாமஸ் நெல்சனின் பிரதிநிதி குறிப்பிட்டார். ஏன்? ஏனென்றால் ஐக்கிய மாகாணங்களில், மிகப் பெரிய மத தொகுதியை உண்டு பண்ணும் கத்தோலிக்கர்களின் மத்தியில் 1965-ல் முடிவடைந்த இரண்டாவது வத்திக்கன் ஆய்வு கூட்டம் நடை வெறுவதற்கு முன்பு வரையாகப் பைபிள் வாசிப்புக்கு முக்கியத்துவம் தரப்படவில்லை.
விளையாட்டுப் பொருட்கள் வேண்டாம், அன்பைக் கொடுங்கள்
ஆஸ்திரேலியாவில் விளையாட்டுப் பொருட்களை உற்பத்தி செய்யும் ஒரு கம்பெனி, 400 பிள்ளைகளிடம் எது அவர்களுக்கு அதிகமான இன்பத்தைக் கொடுத்தது என்பதாகக் கேட்டபோது, கிடைத்த பதில்கள் முற்றிலும் எதிர்பாராதவையாக இருந்தன. விளையாட்டுப் பொருட்களைவிட, பெரும்பாலான பிள்ளைகள் தங்களுடைய பெற்றோரின் அதிகமான நேரத்தை விரும்பி கேட்கிறவர்களாக இருந்தனர் என்பதாக தி வெஸ்ட் ஆஸ்திரேலியன் தெரிவிக்கிறது. ஆறு வயது பையன், இரவு உணவைக் குடும்பமாகச் சேர்ந்து உண்பதையே தான் மிகவும் விரும்பியதாகச் சொன்னான். அனைவரும் ஒன்றாகச் சேர்ந்து இருப்பதால் “நீங்கள் ஒருவரைப் பற்றி ஒருவர் கவலைப்பட வேண்டியதில்லை” என்பதாக அவன் சொன்னான். பிள்ளைகள் குடும்ப தொகுதிக்கு முதலிடத்தைக் கொடுத்து, ஒன்றாய் சேர்ந்திருப்பதைத் “தலையாய் முக்கியத்துவமுடையதாக” கருதியதாகக் கம்பெனி அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
“ஆதியாகமம் விளக்கத்துக்கு” தடையுத்தரவு!
ஆஸ்திரேலியாவிலுள்ள குவின்ஸ்லாண்டில் அரசாங்க பள்ளிகளில், ஒன்றையொன்று எதிர்க்கும் பரிணாமக் கோட்பாட்டையும் சிருஷ்டிப்பின் கோட்பாட்டையும் கற்பிப்பதற்குச் சம அளவு நேரம் ஒதுக்கப்பட்ட போதிலும் நியு செளத் வேல்ஸில் “ஆதியாகமம் விளக்கத்துக்கு” தடையுத்தரவு போடப்பட்டிருப்பதாக தி சிட்னி மார்னிங் ஹெரால்ட் தெரிவிக்கிறது. சிருஷ்டிப்பை ஒரு விஞ்ஞான ஆதாரமுள்ள கோட்பாடாக விடாப்பிடியாக மனமார கற்பிக்கும் எந்த ஒரு ஆசிரியருக்கும் எதிராக இலாக்காவில் நடவடிக்கை எடுக்கப்படும் என்பதாக எல்லா உயர்நிலைப் பள்ளி முதல்வர்களையும் கல்வித்துறை இயக்குநர்—முதல்வர் எச்சரித்தார்.
பிரசங்கிப்பதற்கு மிகச் சிறந்த முறை
பெரும்பாலான மேற்கத்திய தேசங்களில், மத சம்பந்தமான நிகழ்ச்சிநிரல்களுக்கு முன்னொருபோதும் இராத அளவுக்கு அதிகமாகத் தொலைக்காட்சி பயன்படுத்தப்பட்டு வருகிறது. ஆஸ்திரேலியாவில் அவர்களுடைய ஊழியத்துக்கு டிவி யை எவ்வளவு சிறப்பாகப் பயன்படுத்திக் கொள்ளலாம் என்பதைப் பாதிரிமார்களுக்குக் கற்பிக்கப் பயிற்சிகள் அளிக்கப்படுகின்றன. என்றபோதிலும், டிவி யில் சுவிசேஷ வேலையின் மதிப்பைப் பற்றிக் குறிப்பிடுகையில், சர்ச் ஊழியரான டாக்டர் பீட்டர் ஹார்ஸ்பீல்ட் பின்வருமாறு தெரிவித்தார்: “அப்போஸ்தலர்களுடைய நாட்களில் டிவி இருந்திருக்குமேயானால், கிறிஸ்தவத்தைப் பற்றி இன்னும் அதிகமான ஆட்கள் தெரிந்து கொண்டிருப்பார்கள். ஆனால் வெகு சிலரே கிறிஸ்தவர்களாக மாறியிருப்பார்கள். டிவி யினால் அனேக ஆட்களைச் சென்றெட்டலாம் . . ., ஆனால் ஒரு நபரோடு நேருக்கு நேர் பேசுவதே, மத சம்பந்தமான செய்தித் தொடர்புக்கு எப்பொழுதும் மிகச் சிறந்த வழிமுறையாக இருந்திருக்கிறது.”
ஜெர்மனியில் “ஜனங்களுடைய வீடுகளுக்குச் சுவிசேஷ வேலையை” எடுத்துச் செல்வதற்காக கார்ல்ஹென்ஸ் ஸ்டால் என்ற பிஷப் 4200 வட்டார ஆட்சிக் குழுக்களுக்கு எழுதிய கடிதத்தில் ஒரு செயல் முறையை எடுத்துரைத்திருந்தார். கடந்த கால சுவிசேஷ முயற்சிகள் பயனற்றதாக இருந்ததைச் சுட்டிக்காட்டி ஜெர்மன் செய்தித் தாள் ரெய்னிஷ்சர் மெர்கர்/கிறைஸ்ட் அண்டு வெல்ட் உண்மையாக வெற்றியடைவதற்குச் சூழ்ச்சி முறைகளையும் திட்டம் தீட்டுவதையும் விட அதிகம் தேவைப்படுகிறது என்பதாகக் குறிப்பிட்டிருந்தது. விசுவாசத்தைக் கட்டியெழுப்புவதற்காகத் திட்டமிடப்பட்ட கடந்த கால நடவடிக்கைகள் குறிப்பிட்ட ஒரு குறைபாட்டின் காரணமாகத் தோல்வியடைந்திருக்கின்றன. அதாவது “இன்று வல்லுநர்களாக இருக்கும் அனேக ஊழியர்களை நாம் கொண்டிருக்கிறோம். ஆனால் வீட்டுக்கு வீடு நடந்து சென்று ஒவ்வொரு நபரிடமாகவும் பேசும் கடவுளின் ஊழியன் நம்மிடம் இல்லை.”
“கடத்திச் செல்பவர்களின் சிறப்புச் சாதனம்”
23 அவுன்ஸ்கள் (0.7 கி.) எடையுள்ளதும் 5850 ரூபாய் விலையுள்ளதும், அதன் பாகங்கள் பிரித்தெடுக்கப்படுகையில் விமான நிலையத்தின் ஊடு கதிர் பொறியில் காட்டிக் கொடுக்காததும் எது? ஆம், அது தான் கடத்திச் செல்பவரின் சிறப்புச் சாதனம் என்பதாக விளையாட்டுப் பெயரால் அழைக்கப்படும் ப்ளாஸ்டிக் துப்பாக்கியாகும். கடத்திச் செல்பவர், துப்பாக்கியைப் பிரித்தெடுத்து அதிலுள்ள ஒரு சில உலோக பாகங்களைத் தனித்தனியாகப் பயணமூட்டையில் ஒளித்து வைத்து, பாதுகாப்புக்காக விமான நிலையத்தில் பயன்படுத்தும் ஊடுகதிர் பொறியினால் கண்டு பிடிக்கப்படாமல் உள்ளே எடுத்துச் செல்வதைக் கூடிய காரியமாக்குவதால் இது இப்பெயர் பெற்றது. தி க்ளாக் 17 ப்ளாஸ்டிக் துப்பாக்கி ஆஸ்டிரியாவில் இராணுவ மற்றும் காவல் துறை கருவிகளைப் பிரத்தியேகமாக உற்பத்தி செய்யும் உயர்தர தொழில் நுணுக்க தொழிற்கூடத்தில் உற்பத்தி செய்யப்படுகிறது. 1985 முதற்கொண்டு துப்பாக்கி உற்பத்தி செய்யப்பட்டு நார்வே, ஸ்வீடன் மற்றும் கனடாவுக்கு விநியோகிக்கப்பட்டு வருகிறது. பயங்கரவாதிகளுக்கு இது சரியான ஒரு கருவியாக இருக்கக்கூடும் என்பதாகச் சில அதிகாரிகள் பயப்படுகிறார்கள்.
ஆபத்தான பாதுகாப்பு
தங்களையும் தங்களின் குடும்பங்களையும், வீடு புகுந்து கொள்ளையடிக்கும் திருடர்களிடமிருந்தும் கற்பழிப்பவர்களிடமிருந்தும் பாதுகாத்துக் கொள்ளும் எண்ணத்தோடு அனேகக் கதவுகளிலும் ஜன்னல்களிலும் “கம்பிகளை” (burglar bars) பொருத்தி வைத்திருக்கிறார்கள். ஆனால், தி நியு யார்க் டைம்ஸின் பிரகாரம் இவர்கள் தங்களைப் பெரும் ஆபத்திற்குட்படுத்திக் கொள்கிறார்கள். வாஷிங்டன் டி.சி.யிலுள்ள தீ இலாக்கா அதிகாரியான காப்டன் ரிச்சர்ட் க்ளார்க் விளக்குகிறார்: “நீங்கள் ஒரு கோட்டைக்குள் வசித்தால் . . . வெளியேயிருந்து உள்ளே நுழையும் ஒருவரிடமிருந்து ஓரளவு உங்களைப் பாதுகாத்துக் கொள்ளலாம். ஆனால் நீங்கள் உள்ளே உங்களைப் பூட்டியும் கொள்கிறீர்கள்.” “வீடுகளில் ஏற்படும் தீ விபத்துக்களில் அனேகர் உயிரிழப்பதற்கு” இந்தக் கம்பிகளே காரணமாக இருந்திருக்கிறது என்பதாகத் தீயணைப்பு அதிகாரிகள் தெரிவிக்கிறார்கள். இந்தக் காரணத்தினால் கட்டவிழ்ப்பதற்கு வசதியில்லாதக் கம்பிகள் அல்லது இயக்குவதற்குத் திறவு கோலைத் தேவைப்படுத்தும் கம்பிகள் சில பெரிய நகரங்களில் சட்டத்துக்கு மாறானதாக இருக்கிறது. இது போன்ற கருவிகளை நீங்கள் பயன்படுத்தினால், தீ ஏற்படும்போது நீங்களும் உங்களுடைய குடும்பமும் எளிதில் வெளியேற முடியுமா?
ஆரோக்கியமான இருதயங்கள்
“வளர்ச்சியடைந்த தேசங்களில், இருதய நோயினால் அவதிப்படும் 50% சராசரியோடு ஒப்பிடுகையில், எஸ்கிமோ என்ற மக்களில் சுமார் 5% மட்டுமே இதனால் அவதிப்படுகின்றனர்” என்பதாக ஏஷியா வீக் அறிவிக்கிறது. ஏன்? அதற்குக் காரணம் அவர்களுடைய உணவு பழக்கமே என்பதாக ஆஸ்திரேலிய விஞ்ஞானிகளின் குழு சொல்கிறது. எஸ்கிமோக்கள் மீன் சாப்பிடுகிறவர்கள். மீன் எண்ணெய்யால் இரத்தத்திலுள்ள கொழுப்பு அளவு கணிசமாகக் குறைக்கப்படுகிறது, என்றும் இது இருதய நோயினால் ஏற்படும் அபாயதைக் குறைக்கிறது என்றும் மெல்போர்ன்ஸ் பேய்க்கர் மருத்துவ ஆராய்ச்சி நிறுவனத்தின் விஞ்ஞானிகள் சொல்கிறார்கள். இரத்த கொழுப்பின் அளவைக் குறைப்பதாகச் சொல்லப்படும் max EPA என்ற பொருள் மீன் எண்ணெயிலும் குளிர்ந்த நீரில் வாழும் பல்வகை மீன்களிலும் காணப்படுகிறது என்பதாக விஞ்ஞானிகள் சொல்கிறார்கள்.
பில்லிசூனிய பைத்தியம்
ஆப்பிரிக்காவில் அனேக பகுதிகளில், மின்னலினால் தாக்கப்படுதல் போன்ற இன்னல்களுக்குப் பில்லிசூனிய மருத்துவர்கள் பொறுப்பாக இருப்பதாக நம்பப்படுகிறார்கள். அண்மையில் மூன்று மாத காலப் பகுதிக்குள் தென் ஆப்பிரிக்காவிலுள்ள வடக்குப் பகுதியில் ராமோகோப்பா கிராமத்தின் அருகே பத்து பேர் மின்னலினால் உயிரிழந்திருப்பதாகச் சொல்லப்படுகிறது. கடைசியாக இதற்குப் பள்ளியில் படிக்கும் 16 வயது பையன் பலியானான். அதிர்ச்சியும் ஆவேசமுமாய் அவனுடைய சகப் பள்ளி மாணவர்கள் இதற்குக் காரணமாக அவர்கள் கருதிய கிராமத்திலுள்ள பில்லிசூனிய மருத்துவர்களைப் பழி வாங்கினார்கள். “வாலிபர்கள் கோபவேசத்தோடு அங்குமிங்கும் பாய்ந்து சென்று, அவர்கள் சந்தேகித்தவர்களின் வீடுகளையும் வியாபார ஸ்தலங்களையும் எரித்துப் போட்டார்கள்” என்பதாக ஜோஹன்ஸ்பர்க்கின் தி ஸ்டார் அறிவிக்கிறது.
வளைந்து செல்லும் காந்த விசைத் துருவம்
பூமியின் வட காந்த விசைத் துருவம் “1904-ல் இருந்த இடத்திலிருந்து வட மேற்காகச் சுமார் 480 மைல்கள் [770 கி.மீ] தொலைவிலுள்ள ஒரு இடத்தில் இப்பொழுது இருக்கிறது” என்பதாக சயன்ஸ் டைஜஸ்ட் சொல்கிறது. இது ஏன்? கிரகத்தின் உருக்கி வார்க்கப்பட்ட மையப் பகுதி விலகிச் செல்கிறது. மையப் பகுதிதானே பூமியின் காந்த விசை ஆற்றல் களத்தைத் தோற்றுவிப்பதால் காந்த விசைத் துருவத்தின் இடமும் பல வருடங்களில் மாறிவிட்டிருக்கிறது. கனடாவைச் சேர்ந்த நில இயல் ஆய்வாளர்கள் இது வடக்கே 77 டிகிரியிலும் மேற்கே 102.3 டிகிரியிலும் இருப்பதாக மிகத் துல்லிபமாக குறிப்பிட்டிருக்கிறார்கள். காந்த ஆற்றலுள்ள திசைக்காட்டி மிகுத் தொலைவில் வடக்கே 800 மைல்கள் [1290 கி.மீ] தொலைவிலுள்ள மெய்யான வட துருவத்தைச் சுட்டிக்காட்டாமல் இதைச் சுட்டிக்காட்டுகிறது என்பதைத் தெரிந்து கொள்ளும் போது இது அக்கறையைத் தூண்டுவதாக இருக்கிறது!
மழைக் குறிப்பு
மழைப் பெய்யப் பண்ணும் பொருட்டு மேகத்தில் விதைப்பது அனேகமாக வெற்றியடையவில்லை. ஆனால் இந்தச் செயல்முறையில் மீண்டும் அக்கறை ஏற்பட்டிருப்பதாக இலண்டனில் தி டைம்ஸ் அறிவிக்கிறது. ஏன்? ஏனென்றால் எருசலேமின் எபிரேய பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த பேராசிரியர் ஆவரகாம் காகின், மழையைப் பெய்யப்பண்ணும் துல்லியமான முறையைக் கண்டுபிடித்து விட்டதாகத் தெரிவிக்கிறார். தேவைப்படுவது என்ன? ஒரு விமானத்திலிருந்து, சுமார் நான்கிலிருந்து ஆறு மைல்கள் (6-9 கி.மீ) உயரத்தில் சுமார் 6,50,000 கனசதுர கஜங்கள் (5,00,000 கனசதுர மீட்டர்கள்) தண்ணீருள்ள பொருத்தமான அளவான ஒரு மேகத்திற்குள் சரியான அளவு உறை கரியீருரகைப் பாளம் (dry ice) அல்லது வெள்ளி கறைகையை (Silver iodide) செலுத்தவும். விளைவு? இரண்டு மடங்கு அதிகமான மழை. அனைத்துலகிலும் மழை உண்டு பண்ணுவதில் பிரசித்திப் பெற்றவராக அறியப்பட்டிருக்கும் பேராசிரியர் காகின் சில பகுதிகளில் 18-25 சதவிகிதம் அதிகமான மழையை உண்டு பண்ணுவதில் ஏற்கெனவே வெற்றியடைந்து விட்டார்.
மிருகங்களுக்குக் கருத்தடை
மிருகங்களில் புணருவதற்கான தூண்டுதலை நிரந்தரமாக அழித்துவிடும் கருத்தடைக் குண்டு ஆஸ்திரேலியாவிலுள்ள மெல்பர்னில் உருவாக்கப்பட்டிருக்கிறது. இது கங்காருகளிலும் சிறிய கங்காருகளிலும் பரிசோதிக்கப்பட்டு 100 சதவிகிதம் வெற்றியடைந்திருப்பதாகச் சொல்லப்படுகிறது. ஆடுகள், பன்றிகள் மற்றும் யானைகள் போன்ற மற்ற மிருகங்களிலும் அது அதேவிதமாக பயனுள்ளதாக இருப்பதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கிறார்கள். அது எவ்விதமாகச் செலுத்தப்படுகிறது? இந்த உயிர் குண்டு ஒரு துப்பாக்கியிலிருந்து, மிருகத்தின் பின் புறத்துக்குள் வெடிக்கப்படுகிறது என்பதாக சிட்னி செய்தித்தாளாகிய தி ஆஸ்திரேலியன் அறிவிக்கிறது. ஒரு சில நாட்களுக்கு அந்த இடம் சற்று மென்மையாக இருப்பதைத் தவிர, பக்க பாதிப்புக்கள் எதுவும் இதனால் ஏற்படுவதில்லை. எல்லா வயதிலுள்ள ஆண் அல்லது பெண் மிருகங்களின் மீது இது பயனுள்ளதாக இருக்கிறது. ஆஸ்திரேலியாவில் கங்காருகளும் கங்காரு குட்டிகளும் எங்கும் திரிந்து கொண்டிருப்பதால் இது உழவர்களுக்கு ஒரு வரப் பிரசாதமாக வரவேற்கப்படுகிறது.
ஈடிணையற்ற பிறப்பு
இலத்தீன் அமெரிக்காவில், கூண்டில் அடைத்துவைக்கப்பட்ட நிலையில் பிறக்க இருந்த அன்டெஸின் பெரிய தென் அமெரிக்க கழுகு வகை, கொஞ்சம் உதவியோடுதானே பிறந்தது என்பதாக மெக்ஸிக்கோ நகரின் தினசரி செய்தித் தாளாகிய எல் யூனிவர்ஸல் தெரிவிக்கிறது. “உயிரோடு வெளி வருவதை உறுதி செய்ய முட்டையை உடைப்பதற்கு மருத்துவ தலையீடு அவசியமாக இருந்தது” என்பதாகச் செய்தித் தாள் குறிப்பிடுகிறது. பறவையின் எடை 5 அவுன்ஸ்களாக (140 கிராம்) இருந்தது. அது உயிர் பிழைப்பதை நிச்சயப்படுத்திக் கொள்ள ஒரு அடை காப்புக் கருவியில் உடனடியாக வைக்கப்பட்டது. அதற்குக் குதிரை மாம்சமும் உப்புக் கரைசலும் சேர்ந்த ஒரு விசேஷ உணவு ஊட்டிவிடப்பட்டது. அன்டீஸின் கழுகு 8 வயதில் பால் முதிர்ச்சியை அடைந்து, 50 வருடங்கள் கூண்டில் வாழக்கூடும்.
சாவுக்கு வழிவகுக்கும் எடை
இலட்சக்கணக்கானோர் வறுமையோடு சம்பந்தப்பட்ட வியாதிகளினால் மரித்துப் போகயில், அளவுக்கு அதிகமாக சாப்பிடுவதன் விளைவாக இன்னும் எண்ணற்ற மற்ற அனேகர் மரித்துப் போவது வேடிக்கையாக இருக்கிறது. இந்த வருடம் ஆஸ்திரேலியாவில் 60 சதவிகித மரணம் ஏதாவது ஒரு வகையில் உணவு பழக்கத்தோடு சம்பந்தப்பட்டதாக இருக்கும் என்பதாக சிட்னியில் வெளியாகும் சன்-ஹெரால்ட் அறிவிக்கிறது. இங்குள்ள ஆயிரக்கணக்கான பிள்ளைகளைப் போலவே, ஆஸ்திரேலியாவில், வளர்ந்த மனிதர்களில் மூன்றில் ஒருவர் தேவைக்கு மேல் அதிக எடையுள்ளவராக இருக்கிறார். ஆஸ்திரேலியாவின் இருதய நிறுவனம் உணவுக்கும் உடற்பயிற்சிக்கும் கவனம் செலுத்தும்படியாக வற்புறுத்தியபோதிலும் ஆஸ்திரேலிய மக்களில் 94 சதவிகிதத்தினர் உடற்பயிற்சியை விட டெலிவிஷனையும் வீடியோக்களையும் பார்ப்பதையே விரும்புவதாக அண்மையில் நடத்தப்பட்ட சுற்றாய்வு காண்பிக்கிறது. (g86 6/22)