மாயவித்தைக்குப் பின்னாலிருக்கும் அந்த மர்மம்
பில்லிசூனியம் நீதி விசாரணைக்குரிய குறியிலக்காக ஆகிவிட்டமைக்காக ஐந்நூறு ஆண்டுகளுக்கு முன்பு மக்கள் அதைக் குற்றஞ்சாட்டினார்கள். இந்த விசாரணையில் ஈடுபட்டிருந்தவர்களுக்கு 1484-ல் போப்பாண்டவர் சார்ந்த ஓர் அறிக்கையானது சூனியக்காரர்களை வேட்டையாடும் அவர்களுடைய பணிக்கு அதிகாரப்பூர்வமான ஆதரவைக் கொடுத்தது. இது “சூனியக்காரரின் சம்மட்டி” (Malleus Maleficarium) என்ற பிரசுரம் எழுதப்படுவதற்கு வழிநடத்தியது. சூனியம் மதத்திற்கு எதிரான கொள்கையாக இருப்பதைக் காட்டிலும் மிக மோசமானது என்பதாக அதைச் சுட்டிக்காட்டியது. இதன் விளைவாக ஆயிரக்கணக்கானோர் கொல்லப்பட்டனர்.
நவீன காலங்களில் இந்த நிகழ்ச்சிகளின் பேரில் வியப்புதரும் வித்தியாசமான மனநிலைகள் உருவாகியிருக்கின்றன. நவீன கால விஞ்ஞானம் இதனை விளக்க முடியாத நிலைமையிலிருக்கிறது. இந்த மனநிலையின் மாற்றம் 1848 வரையில் பின்னோக்கிச் செல்வதாகக் கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது. அப்பொழுது நியு யார்க் நகரின் அ.ஐ.மா-விலிருந்த மார்கரெட் மற்றும் கேட்டி ஃபாக்ஸ் என்ற இரண்டு பெண்கள் தங்கள் சிறு இல்லத்தில் திடீரென்று மர்மம் அடங்கிய கதவு தட்டும் சப்தத்தைக் கேட்டனர். இது ஆவி உலகில் உள்ளவர்கள் தொடர்புகொள்ளும் ஒரு முயற்சியாக இருக்கக்கூடும் என்று எண்ணி அவற்றோடு புரியக்கூடிய ஒரு பேச்சுத் தொடர்பை ஏற்படுத்திக்கொள்ள வேண்டும் என்பதற்காக இவர்கள் அதனிடம் ஒரு இரகசிய வார்த்தை (Code) ஒன்றை சொல்லும்படி கேட்டார்கள். பேச்சுத் தொடர்பு ஏற்பட்டது, செய்திகள் வரத்தொடங்கின.
இந்த அனுபவத்தின் செய்தி தொலைதூரம் வரையிலும் பரவியது, அத்துடன் இயல்புக்கு அப்பாற்பட்ட காரியத்தின் பேரில் ஆர்வம் பெருகியது. இதன் விளைவுகளில் ஒன்று ஆவியுலக கொள்கை ஒரு மதமாக ஒழுங்குபடுத்தி அமைக்கப்படலாயிற்று. தங்களுடைய மரித்துப்போன அன்பர்களிடம் ஏதாவது ஒரு தொடர்புகொள்ள வேண்டுமென்று ஏங்கிக்கொண்டிருந்த அநேகரை அது கவர்ந்திழுத்தது.
இயல்புக்கு அப்பாற்பட்டதன் பேரில் விஞ்ஞான ஆராய்ச்சி
தங்களுடைய விஞ்ஞான ஆராய்ச்சிக்காக சங்கங்களை நிறுவுவது இந்த இயல்புக்கு அப்பாற்பட்ட அனுபவத்தின் மற்றொரு விளைவாக இருந்தது. இயல்புக்கு அப்பாற்பட்டதைப் பற்றிய ஆராய்ச்சியானது ஆவியுலக தொடர்பு பற்றிய ஆய்வு (psychical research) என்றறியப்பட்டிருக்கிறது.
வெகு காலமாக, முக்கிய பாதை விஞ்ஞானம் இந்த ஆராய்ச்சியை வெறுத்தொதுக்கியது. ஆனால், பின்பு 1882-ல் ஆவியுலக தொடர்பு பற்றிய ஆய்வு சங்கம் இலண்டனில் நிறுவப்பட்டது. “பொதுவாக அங்கீகரிக்கப்பட்டிருக்கும் எந்த ஒரு அடிப்படை விஷயத்திற்கும் சுட்டிக்காட்ட முடியாததைப்போல் தோன்றக்கூடிய மனிதனின் இயல்பு வலிமைகளை மெய்யோ அல்லது ஊகமோ அதனை எந்த ஒரு தப்பெண்ணங்களும் அல்லது முன் சார்பு கருத்துக்களுமின்றி அறிவியல் அடிப்படையிலான ஆவியோடு ஆய்வு செய்வதே” அதனுடைய வெளிப்படுத்தப்பட்ட நோக்கம்.
உயரிய கீர்த்தி பெற்ற விஞ்ஞானிகள் இயல்புக்கு அப்பாற்பட்டவற்றின் ஆராய்ச்சிகளைத் தொடர்ந்தமையால் சமீப காலங்களில் இயல்புக்கு அப்பாற்பட்டவையின் ஆராய்ச்சிகளைப் பற்றிய காட்சி முன்னேறியிருக்கிறது. அக்கறையூட்டும் காரியமானது, மே 18, 1985-ல் எட்டின்பர்க் பல்கலைக்கழகமானது ஓர் அமெரிக்க உளநூல் மருத்துவரான ராபர்ட் மாரிஸ் என்பவர் ஆவியுலக தொடர்பு பற்றிய ஆய்வு கழகத்தின் பேராசிரியராக நியமிக்கப்பட்டிருக்கிறார் என்று அறிவிப்பு செய்தது. தி சன்டே டெலிகிராஃப் அவருக்கு அறியப்படாதவற்றின் பேராசிரியர் என்ற பட்டத்தைச் சூட்டியது. ஆவியுலக தொடர்புக்கு இப்படிப்பட்ட ஒரு முக்கியத்துவத்தைக் கொடுக்கும் கருத்து எதிர்ப்பைப் பெற்றபோதிலும் புதிய விஞ்ஞானி குறிப்பிட்டதாவது:
“ஆவியுலக தொடர்பு பற்றிய இந்த ஆய்வு பிரிட்டிஷ் பல்கலைக்கழகத்தில் புதிதான ஒரு விஷயம் என்பதை இது குறிக்காது. இயல்புக்கு அப்பாற்பட்டவற்றின் ஆராய்ச்சிக்கான சங்கமானது அந்தத் துறையில் பிரிட்டனின் முதன்மையான குழுவாக சில ஆண்டுகளுக்கு முன்பாக அதன் நூற்றாண்டு விழாவைக் கொண்டாடியது. மேலும் அது எப்பொழுதுமே பலமான பல்கலைக்கழக உறுப்பினர் தொடர்புகளைக் கொண்டதாக இருந்திருக்கிறது. கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் ஒழுக்க கோட்பாடு பேராசிரியராக இருந்த ஹென்றி சிட்ஜ்விக் என்பவரே இந்த இயல்புக்கு அப்பாற்பட்டவற்றின் ஆராய்ச்சி சங்கத்தின் முதல் பிரசிடென்டாக இருந்தார். அது முதற்கொண்டு 50 பிரசிடென்டுகளில் சுமார் 28 பிரசிடென்டுகள் பல்கலைக்கழக பேராசிரியர்களாக இருந்திருக்கின்றனர். இரண்டுபேர் நோபல் பரிசு பெற்றவர்களாக இருந்தனர். 44 பிரிட்டிஷ் பல்கலைக்கழகங்களில் எட்டு பல்கலைக்கழகங்கள் தற்போது ஆவியுலக தொடர்பு ஆய்வுகளை நிகழ்த்தி வருகின்றன.”
என்றபோதிலும் இந்த ஆவியுலக தொடர்பு ஆய்வு, இயல்புக்கு அப்பாற்பட்டவற்றின் அறிவியல் ஆய்வுகளோடு சம அந்தஸ்து கொண்டிருக்கிறது என்பதைப் பெரிய அறிவியல் நிறுவனங்கள்—இன்னமும் முறைப்படி அங்கீகரிக்கவில்லை. இயல்புக்கு அப்பாற்பட்ட அனுபவம் என்பதைப்போன்ற இப்படிப்பட்டதோர் காரியம் ஏதும் இல்லை என்று அநேகர் இன்னமும் உரிமை பாராட்டுகின்றனர்.
அது வெறும் மோசடியா?
மாய சக்தியால் செய்யப்படுகிறது என்று உரிமை பாராட்டப்படும் சில அனுபவங்கள் சந்தேகமின்றி மோசடி என்பது உண்மையே. ஒரு மதகுருவின் நான்கு இளம் பெண்மணிகளையும் அவர்களுடைய பணிப்பெண்ணையும் சம்பந்தப்பட்ட ஒரு உதாரணத்தைக் கவனியுங்கள். ஒரு பெண் அறையிலிருந்து வெளியே அனுப்பப்பட்டாள். மற்றவர்கள் பரிசோதனை செய்யும் குழுவினருடன் தங்கியிருந்தனர். ஒரு பொருள், அதாவது சீட்டாட்டம் விளையாடும் சீட்டு போன்ற ஒரு பொருள் தேர்ந்தெடுக்கப்பட்டது. பின்பு வெளியே அனுப்பப்பட்ட அந்தப் பெண் மறுபடியும் அறையினுள் அழைக்கப்பட்டு எந்தப் பொருள் தேர்ந்தெடுக்கப்பட்டது என்பதை சிந்தனை மாற்றம் மூலம் கண்டறியும்படி அவளிடம் சொல்லப்பட்டது. வழக்கமாக அவள் சரியான விவரிப்புகளைக் கொடுத்தாள். ஆகிலும் சில ஆண்டுகளுக்குப் பிற்பாடு ஆவியுலக தொடர்பு பற்றிய ஆராய்ச்சி சங்கத்தின் உறுப்பினர்கள் பரிசோதனை செய்தபோது, பார்வை மற்றும் ஒலி எழுப்பும் அறிகுறிகளால் எமாற்றியதாக அவர்களில் இரண்டு பெண்கள் ஒப்புக்கொண்டார்கள்.
வெகு சமீபத்தில், மந்திரவாதி ஜேம்ஸ் ராண்டி என்பவர் அதிக அனுபவமுள்ள பரிசோதனையாளர்களுங்கூட வஞ்சிக்கப்படக்கூடும் என்பதைக் காட்டுவதற்கு ஒரு சூழ்ச்சியை ஏற்பாடு செய்தார். வைத்திய கலையில் ஆய்வுகளை நிகழ்த்திவந்தவரும் வாஷிங்டன் பல்கலைக்கழகத்தில் இயற்பியல் ஆய்வின் இயக்குநருமான டாக்டர் பீட்டர் பிலிப்ஸ் என்பவரோடு வேலை செய்வதற்கு இரண்டு இளம் மந்திரவாதிகளை அவர் ஏற்பாடு செய்தார். “மைக் எட்வர்ட்ஸ் [இளம் மந்திரவாதிகளில் ஒருவன்] என் கையிலிருந்த ஒரு சாவியை தொடாமலேயே அதை வளைத்தான் என்பதை நான் தொடர்ந்து நம்புகிறேன்” என்று எழுதினார் பிலிப்ஸ். ஆனால் அவர் தெளிவாகவே வஞ்சிக்கப்பட்டவராக இருந்தார், இதை அவர் பின்னால் ஒப்புக்கொண்டார். இப்படிப்பட்ட அருஞ்செயல்கள் கைச்சாலவித்தையால் செய்யப்படுகிறது. இயல்புக்கு அப்பாற்பட்ட சக்தியால் அல்ல என்று மந்திரவாதிகள் உரிமை பாராட்டுகிறார்கள்.
தெளிவாகவே, ஏமாற்று வேலையின் எடுத்துக்காட்டுகள் இருக்கின்றன. என்றாலும் ஆர்த்தர் ஜே. எல்லிசன் என்பவர் 1982-ல் இயல்புக்கு அப்பாற்பட்ட அறிவியல் ஆராய்ச்சி சங்கத்திற்காக ஆற்றிய தலைவருக்குரிய தனது சொற்பொழிவில், “இந்த உலக முழுவதிலுமிருக்கும் நமது இயல்பான அனுபவங்களைப் பிரதிநிதித்துவம் செய்யக்கூடிய தற்போதைய அறிவியல் செயல்களுக்குப் பொருந்தாத அனுபவங்கள் இருக்கிறதென்பதற்குச் சிறந்த ஆதாரங்கள் இருக்கின்றன” என்ற கருத்தை வலியுறுத்தினார். இந்த அனுபவங்களுக்குப் பின்னாலிருக்கும் அந்த மர்மம் என்ன?
அது மனதின் சக்தியா?
மனதுக்குச் சில மறைவான சக்திகள் இருக்கின்றன, அசாதாரண செயல்களைச் செய்வதற்கு அவை அழைக்கப்படலாம் என்று சிலர் நம்புகின்றனர். ஆனால் மேசையை உலுக்குவதற்கு, உவிஜா பலகையின் முள்காட்டியை அசைப்பதற்கு, உலோக பொருட்துண்டுகளை வளைப்பதற்கு மனதுக்குச் சக்தி உண்டா? அல்லது மற்ற காரியங்களை நிறைவேற்றுவதற்கு அது சக்தியை வெளிப்படுத்தக்கூடுமா?
“உவிஜா பலகையின் மாயத்துக்குப் பின்னாலுள்ள இரகசியம்” என்ற தலைப்பைக் கொண்ட ஓர் கட்டுரையில் மந்திரவாதியான ஹென்றி கோர்டன் எழுதியதாவது: “ஒரு காணக்கூடாத சக்தி இருக்கிறது, ஆனால் இயல்புக்கு அப்பாற்பட்ட எதுவும் இத்துடன் சம்பந்தப்பட்டில்லை.”
“உளநூலில் அது தன்னியக்கமுடையது என அழைக்கப்படுகிறது,” என்கிறார் கோர்டன். “தன்னியக்கம் என்பது ஓர் தன்னுணர்வற்ற எண்ணத்திற்கு இயக்கு விசையாக அல்லது தசையின் பிரதிபலிப்பாக இருக்கிறது . . . இந்த உளநூல் செயற்பாடுகள் தானே இயற்பியல் நியதிக்கு அப்பாற்பட்ட செயல் என்றழைக்கப்படுகிற அநேக காரியங்களுக்குக் காரணமாக இருக்கிறது” என்றும் அவர் குறிப்பிடுகிறார்.
இதுவே பொதுவாக உரிமை பாராட்டப்படுகிறது. உதாரணமாக, போர்கலையில் சிறந்தவர்கள் கி சக்தி என்றழைக்கப்படும் ஒன்றை பிரயோகிக்க முடியும். “ஒரு முனையில் [அடிவயிற்றின் கீழ்பாகத்தில்] உன்னுடைய சிந்தனையை ஒருமுகப்படுத்துவதன் மூலம் உன்னுடைய கி சக்தி அல்லது மனதை பொழிய கற்றுக்கொள். பின்பு உன் கையை நீட்டு” என்று சொல்லுகிறது போர்கலை பத்திரிகையான பிளாக் பெல்ட். “அந்த ஒரு முனையிலிருந்து உன்னுடைய புயத்தின் வழியாகவும் விரலின் வழியாகவும் தண்ணீர் அல்லது சக்தி பொழிவதாக பாவனை செய்” என்றும் சொல்லுகிறது.
“ஒருவர் எவ்வளவாய் தன் கி-யை தொடர்ந்து பயிற்றுவிக்கிறானோ அவ்வளவாய் தன்னுடைய மாணவர்கள் தன்னை ஒருபோதும் மிஞ்ச முடியாது” என்று பிளாக் பெல்ட் சொல்கிறது. பிளாக் பெல்ட் “ஆய்கிடோ [போர்கலைகளில் ஒன்று] ஸ்தபகரான ஆசிரியர் மோரிஹி உயெஷிபா என்பவர் இப்பொழுது எண்பது வயதை தாண்டிவிட்டார் என்றாலும் அவரை ஒருவரும் எதிர்பட முடியாது. ஒரே நேரத்தில் இருபது பலமான மனிதரை தூக்கியெறியும் திறமையுள்ளவராக அவர் இருக்கிறார். வயதாக, வயதாக அவர் அதிக பலமுள்ளவராக ஆகியிருக்கிறார். உங்களுடைய ஐந்து புலன்களோடுகூட கி-யையும் கூடுதலான ஒன்றாக அங்கீகரிக்க வேண்டும்.”
ஆனால் இப்படிப்பட்ட அசாதாரண வல்லமைக்கு உண்மையிலேயே மனித மனம்தான் ஊற்றுமூலமா? அறிவியல் அடிப்படையில் விளக்க முடியாத வீர செயல்களை ஆட்கள் நடப்பிப்பதற்கு மனம் சக்தியளிக்கிறதா?
என்ஃபீல்ட், இலண்டன், இங்கிலாந்தில் இயல்புக்கு அப்பாற்பட்ட சக்தி பற்றிய ஆராய்ச்சி சங்கத்திற்காக பரிசோதனையில் ஈடுபட்ட ஏவல் வகை சார்ந்த ஒரு செயலை சற்று கவனித்துப் பாருங்கள். இவ்வகையான ஒரு செயலைக் குறித்து, இயல்புக்கு அப்பாற்பட்ட காரியங்களின் பேரில் பல புத்தகங்களை இயற்றிய பிரையன் இங்லிஸ் விவரிப்பதாவது: “மர்மங்களடங்கிய தட்டும் ஒசைகள், மேசை நாற்காலி போன்றவை அசைவதும் உடைவதும் அடிக்கடி பல வாரங்களாக நிகழ்கிறது; இதனால் பரிசோதனை செய்பவர்கள் அந்த இடத்தை இயன்றளவுக்கு பல்வேறு வகை நவீன ஆற்றல்களுள்ள ரிக்கார்டர்களைப் பயன்படுத்தும் ஆய்வுகூடமாக மாற்ற முடிகிறது.”
இந்த என்ஃபீல்ட் விவகாரத்தில் [ஏவல் செயல்களில் ஈடுபட்ட] அந்த ஆள் பரிசோதிக்கப்படுவதற்கு மனமுள்ளவராக இருந்தார். என்றபோதிலும், அங்கு நடைபெற்று வந்த அந்தக் காரியங்கள் எங்களுக்கு முற்ற முழுக்க ஒத்துழைப்பு தரவில்லை என்று அந்த இரண்டு பரிசோதனையாளர்களும் சொல்லுகிறார்கள். நிகழ்ச்சிகளை உற்று கவனித்துக் கொண்டிருப்பவர்களின் முயற்சிகளை மனமுறிவடையச் செய்தது. கெடுக்கும் நோக்கத்தில் இன்பம் காண்பதுபோல் அது தோன்றியது. உதாரணமாக டேப் ரிக்கார்டர்களின் இயக்கத்தில் இடையில் சில குறிக்கீடுகளும் பழுதும் ஏற்பட்டன. சில சமயங்களில் உற்பத்தியாளர்கள் முன்னொருபோதும் எதிர்ப்பட்டிராத வகையான பழுதுகளும் ஏற்பட்டிருக்கின்றன.”
இப்படிப்பட்ட அனுபவங்கள், மனித மனதுக்கு அப்பாற்பட்ட சக்தி இதில் உட்பட்டிருக்கிறது, என்பதைச் சுட்டிக் காட்டுகின்றன. இப்படிப்பட்ட ஒரு சக்தி ஒரு ஆளின் மனதிலிருந்து உற்பத்தியாகுமானால் அதனை உற்று கவனிப்பவர்களின் பரிசோதனைக்குரிய முயற்சிகளை அது ஏன் முறியடிக்க வேண்டும்? அவர்களுடைய பதிவு செய்யும் சாதனங்களை ஏன் இயங்காமற்போகும்படி செய்ய வேண்டும்? அதிலும் முக்கியமாக அந்த ஆள் பரிசோதனை செய்யப்படுவதற்கு மனமுள்ளவனாக இருக்கையில் ஏன் அப்படிப்பட்ட காரியம் நிகழ வேண்டும்?
ஒப்புக்கொள்ளப்பட்டுள்ளபடி, மனித மூளையானது ஒரு மகத்தான படைப்பாக இருக்கிறது. அதைக்குறித்து இன்னும் அதிகம் கற்றறிய வேண்டியது இருக்கிறது. எனினும் அது தட்டுவதற்கு தூக்குவதற்கு அல்லது பொருளை அசைப்பதற்குச் சக்தியை வெளிவிட முடியாது. மேலும் ஐம்புலன்களின் உதவியில்லாமல் சுயமாக காரியங்களை அறியும் ஆற்றல் மனித மூளைக்குக் கிடையாது.
ஆகவே அறிவியல் ஆராய்ச்சியின் பிரகாரம் “மிகைப்படியான புலன் உணர்வின்” (ESP) குறிப்பிடத்தக்க பல்வேறு வகைகளில் இன்று நடப்பிலிருக்கின்றன. என்றாலும் அது எவ்வாறு செயலாற்றுகிறது என்பது தெளிவாக இல்லை. விஞ்ஞானிகளுக்கு அது புதிராகவே இருக்கிறது.
அப்படியானால் இந்த மர்மத்திற்கு விளக்கம் உண்டா? (g86 8/22)
[பக்கம் 6-ன் படம்]
உவிஜா பலகையின் முள்காட்டியை அசைப்பதற்கு மனதுக்கு சக்தி உண்டா?