புற்றுநோய் இல்லாமல் போகும்போது
“2100 வருடத்துக்குள், உயிரியல் அடிப்படை ஆராய்ச்சியின் முன்னேற்றங்கள், தற்சமயம் முற்றிலும் முன் காணமுடியாத வழி முறைகளால், புற்றுநோயை தடை செய்வதை அனுமதிக்கும்.”—புற்றுநோய்க்கான காரணங்கள்.
பைபிள் தீர்க்கதரிசனத்தின் பிரகாரம், புற்றுநோய் இன்னும் விரைவிலேயே இல்லாமல்போகும். நிச்சயமாக மேலே மேற்கோள் காண்பிக்கப்பட்ட புத்தகத்தினுடைய ஆசிரியரின்படி “தற்சமயம் முற்றிலும் முன் காணமுடியாத வழிமுறைகளின்”படி அல்ல. நாம் ஏன் அவ்விதமாக உறுதியாகச் சொல்கிறோம்?
ஏனென்றால் 1900 ஆண்டுகளுக்கு முன்பாக பூமிக்கு அனுப்பப்பட்ட கிறிஸ்து இயேசு, மனிதவர்க்கத்துக்கு ஜீவனையும் உடல் ஆரோக்கியத்தையும் மீட்டுக்கொடுக்கும் வல்லமை அளிக்கப்பட்டிருந்தார். ஒரு சமயம் நோயாளியைப் பார்க்காமலே கூட “வீட்டிலே திமிர்வாதமாய்க் கிடந்த கொடிய வேதனை”பட்டுக் கொண்டிருந்த ரோம நூற்றுக்கு அதிபதி ஒருவனின் வேலைக்காரனை குணப்படுத்தினார். (மத்தேயு 8:5-13) மற்றொரு சமயம், ஜுரமாய்க் கிடந்த தம்முடைய சீஷனாகிய பேதுருவின் மாமியை குணப்படுத்தினார். அதை எவ்விதமாகச் செய்தார்? “அவர் அவள் கையைத் தொட்டவுடனே ஜுரம் அவளைவிட்டு நீங்கிற்று.”—மத்தேயு 8:14-17.
இயேசுவின் ஊழியத்தை அலசிப் பார்க்கையில், அவர் வித்தியாசமான வயதுகளிலிருந்த இருபாலாரின் பல்வேறு நோய்களையும் குணப்படுத்தியது தெரிகிறது. சப்பாணிகளை, ஊனமுற்றோரை, குருடரை, செவிடரை, சந்திரரோகிகளை திமிர்வாதக்காரரை, பெரும்பாடுள்ள ஒரு ஸ்திரீயை, சூம்பின கையுடையவரை, நீர்க்கோவை வியாதியுள்ளவரை சுகப்படுத்தினார். அவர் மரித்தோரையும் கூட உயிர்த்தெழுப்பினார். அதை எவ்விதமாகச் செய்தார்? ஏதாவது விசேஷமான சிகிச்சை முறையின் மூலமாகவா?
உண்மையில் அது ஹிம்னோதெரப்பி, சைக்கோதெரப்பி அல்லது எந்த மருத்துவ அணுகுமுறையினாலும் அல்ல அல்லது இயேசுவின் சொந்த ஞானமும் அறிவும் அல்லது வல்லமையும் அதற்குக் காரணமாக இல்லை. மீமானிட ஊற்றுமூலத்திலிருந்து, அது அற்புதமான குணப்படுத்தலாக இருந்தது. (மத்தேயு 8:17; ஏசாயா 53:4) அவருடைய பிதாவின் ஆவியும் வல்லமையுமே நோய்களைக் குணமாக்கின. என்றபோதிலும், கிறிஸ்துவின் நாளிலிருந்த சிறுபான்மையானோருக்கு மாத்திரமே இது பயன்படுத்தப்பட்டது, குணப்படுத்தப்பட்டவர்களைப் பின்னால் மரிப்பதிலிருந்தும் தடைசெய்ய முடியவில்லை. அப்படியானால் அது உண்மையில் என்ன நோக்கத்தைச் சேவித்தது,
இயேசு செய்த சுகப்படுத்தல்கள், கீழ்ப்படிதலுள்ள அனைத்து மனிதவர்க்கமும் கடவுள் மீட்டுக்கொடுக்கும் நல்ல உடல் ஆரோக்கியம் மற்றும் ஜீவனின் பரிசிலிருந்து நன்மையடையப்போகிற அந்த நாளை சுட்டிக் காண்பித்தது. இதன் காரணமாகவே ஆவியால் ஏவப்பட்ட பைபிளின் வாக்கு பின்வருமாறு இருக்கிறது; “இதோ, மனுஷர்களிடத்திலே தேவனுடைய வாசஸ்தலமிருக்கிறது, அவர்களிடத்திலே அவர் வாசமாயிருப்பார்; அவர்களும் [இங்கே பூமியில்] அவருடைய ஜனங்களாயிருப்பார்கள். . . . அவர்களுடைய கண்ணீர் யாவையும் தேவன் துடைப்பார்; இனி மரணமுமில்லை, துக்கமுமில்லை, அலறுதலுமில்லை, வருத்தமுமில்லை. முந்தினவைகள் ஒழிந்துபோயின.”—வெளிப்படுத்தின விசேஷம் 21:3, 4.
ஒழிந்துபோக இருக்கும் முந்தினவைகளில் புற்றுநோயும் அதன் காரணங்களும் இடம்பெறும். கிறிஸ்துவால் ஆளப்படும் கடவுளுடைய ராஜ்ய அரசாங்கத்தின்கீழ் மரணத்துக்கேதுவான சூழ்நிலை காரணக்கூறுகள் துடைத்தழிக்கப்பட்டுவிடும். சோர்வுண்டாக்கும் அழுத்தங்கள் நீக்கப்படும். மனிதனின் நோய்தடை காப்பு அமைப்பு அது திட்டமிடப்பட்டபடி செயல்படும். மெய்யான ஆவிக்குரிய மதிப்பீடுகளை மையமாகக் கொண்ட ஆரோக்கியமான மனதோடு ஆரோக்கியமான சரீரங்களும் ஒத்துழைக்கும்.—ஏசாயா 33:24; 35:5, 6.
இவை அனைத்தும் மெய்யாக இருப்பதற்கு மிகவும் கவர்ச்சிமிக்கதாக உங்களுக்குத் தோன்றுகிறதா? என்றபோதிலும் பைபிள் சொல்லும் விதமாகவே நமக்கு கடவுளின் உறுதிமொழி இருக்கிறது: “சிங்காசனத்தின்மேல் வீற்றிருந்தவர்: இதோ நான் சகலத்தையும் புதிதாக்குகிறேன். . . . இந்த வசனங்கள் சத்தியமும் உண்மையுமானவைகள், இவைகளை எழுது” என்றார். (வெளிப்படுத்தின விசேஷம் 21:5) மரணம் வரையாகவும் கூட புற்றுநோயின் வேதனைகளைச் சகித்துக்கொள்ள வேண்டியவர்களாக இருக்கும் சில யெகோவாவின் சாட்சிகளுக்குப் பெலனைக் கொடுப்பது இந்த உயிருள்ள நம்பிக்கையே. யெகோவா தேவன் “புதிய வானத்தையும் புதிய பூமியையும்” வாக்களித்திருக்கிறார் என்பதை அவர்கள் அறிவார்கள்.—ஏசாயா 65:17, 18. (g86 10/8)