இளைஞர் கேட்கின்றனர் . . .
நான் ஏன் என்னுடைய பெற்றோரின் மதத்தை ஏற்றுக்கொள்ள வேண்டும்?
“நான் சிறியவனாக இருந்தபோது அது என்மீது திணிக்கப்பட்டது, மனிதர்களின் மனநிலை எனக்கு பிடிக்கவில்லை.” “எனக்கு முதிர்ச்சி வந்தபோது அதை நான் விட்டுவிட்டேன்.” தனி நபர்களின் கருத்தறிந்து பொது கருத்தறியும் ஆய்வாளர்களிடம் இரண்டு முன்னாள் கத்தோலிக்கர்கள், அவர்கள் ஏன் சர்ச்சிலிருந்து விலகிக் கொண்டார்கள் என்ற கேள்விக்குக் கொடுத்த விடைகளாக இவை இருந்தன. காரியங்களைப் பற்றிய இவர்களுடைய இந்த நோக்குநிலை, தங்களின் பெற்றோர்களின் மதத்தை ஏற்றுக்கொள்வதற்குத் தார்மீக கடமையுணர்ச்சி உள்ளவர்களாக உணராத அநேக இளைஞர்களின் மனநிலையை பிரதிபலிப்பதாக இருக்கிறது.
என்றபோதிலும் இளைஞர்களுக்கு கட்டாயமாகவே மதத்தில் பற்று இல்லை என்பதை இது அர்த்தப்படுத்தாது. ஜெர்மனியில் இளைஞர்கள், மதம் உட்பட, “பழமையான மதிப்பீடுகளுக்குத்” திரும்பிக் கொண்டிருப்பதாகச் சொல்லப்படுகிறது. ஐக்கிய மாகாணங்களில் மத சம்பந்தமான நம்பிக்கையைப் பற்றிய ஒரு நுணுக்கமான ஆராய்ச்சி, “அமெரிக்காவிலுள்ள இளைஞர்கள் தங்களுடைய மதசம்பந்தமான நம்பிக்கைகளைக் குறித்து முக்கியமாக அக்கறையுள்ளவர்களாக” இருப்பதை வெளிப்படுத்தியது. “இந்த அக்கறையே ஒரு அமைப்பாக செயல்படும் சர்ச்சில் கடுமையாகவும் தொடர்ந்தும் குறைகாணும்படியாக அவர்களைச் செய்கிறது.”—The Search for America’s Faith, G. காலப், D. பாலிங் எழுதியது.
அவ்விதமாகச் செய்யாமலிருக்க ஒப்புக்கொள்ளத்தக்க காரணங்கள்
என்றபோதிலும் சில ஆட்களுக்கு தங்களின் பெற்றோருடைய மதத்தை பின்பற்றாதிருப்பதற்கு ஒப்புக்கொள்ளத்தக்க காரணங்கள் இருக்கின்றன. கத்தோலிக்கர்கள் ஏன் சர்ச்சை விட்டு விலகிவிட்டிருக்கிறார்கள் என்பதன் பேரில் செய்யப்பட்ட சுற்றாய்வில், “ஒரு மனிதன், விதிமுறைகளை சிறிதளவு மீறினாலும் நரகத்துக்குத் தீர்ப்பளிக்கப்படுவதைக்” குறித்து குறைபட்டுக்கொண்டான். மற்றொருவர் அதிகமாக சடங்குகள் இருப்பதைக் குறித்தும் மற்றவர்கள் பைபிள் வெகு குறைவாக இருப்பதைக் குறித்தும் எதிர்ப்பு தெரிவித்தார்கள்.—The Record, அக்டோபர் 27, 1985.
ஆசிரியர்கள் காலப் மற்றும் போலிங் பின்வருமாறு சொல்கிறார்கள்: பருவ வயதினர் ஆன்மீகக் கேள்விகளில் நிலையான அக்கறையை காண்பிக்கிறார்கள். . . . அதே சமயத்தில் ஒரு தொகுதியாக இவர்கள் ஸ்தபிக்கப்பட்ட மதத்திலிருந்து வெகு தொலைவில் இருக்கிறார்கள் . . . இளைஞர்களின் ஆழ்ந்த ஆவிக்குரிய பசியை ஸ்தபிக்கப்பட்ட சர்ச் தீர்த்து வைக்கவில்லை என்பது தெளிவாக இருக்கிறது. “ஸ்தாபிக்கப்பட்ட சர்ச்” என குறிப்பிடுகையில், முக்கிய சர்ச்சுகளை—கத்தோலிக்க, புராட்டஸ்டண்டு ஆர்த்தடாக்ஸ் அல்லது யூத சர்ச்சுகளை—அவர்கள் அர்த்தப்படுத்துகிறார்கள்.
மெத்தடிஸ்ட் சர்ச்சை சேர்ந்த ஒருவர் சொன்னதாக இவர்கள் பின்வருமாறு குறிப்பிடுகிறார்கள்: “சர்ச்சுகள் தங்களுடைய கட்டடங்களுக்கு வராதவர்களை சென்றெட்டவும் விசுவாசியாதவர்களுக்கு உதவி செய்யவும் முயல வேண்டும்.” ஆய்வில் பங்குகொண்ட இளைஞர்களில் பெரும்பாலானோர் “தாங்கள் கேட்கப்பட்டால் சர்ச் நடவடிக்கைகளுக்கு ஒழுங்கான ரீதியில் தங்களுடைய நேரத்தில் கொஞ்சத்தை அர்ப்பணிக்க தயாராய் இருப்பதாகச்” சொன்னார்கள். அவ்விதமாக அவர்கள் கேட்கப்படுவதில்லை என்று தெரிகிறது.
தீர்மானிப்பது எப்படி
அநேக இளைஞர்கள் ஆன்மீகக் கேள்விகளில் அக்கறையுள்ளவர்களாயிருந்தும் அவர்களுடைய ஆன்மீகப் பசி பெற்றோரின் “ஸ்தாபிக்கப்பட்ட சர்ச்சு”களினால் தீர்க்கப்படவில்லையென்றால், அவர்கள் எங்கே செல்ல வேண்டும்? ஓர் இளைஞன் தன் பெற்றோரின் மதத்தை தெரிந்துகொள்வதா வேண்டாமா என்பதை எதன் அடிப்படையில் தீர்மானிக்க முடியும்?
பெற்றோரின் மதத்திலேயே தொடர்ந்து உறுப்பினர்களாக இல்லாதிருப்பதற்குச் சில கத்தோலிக்கர்கள் கொடுத்த காரணங்களில் ஒன்று, “பைபிள் வெகு குறைவாக” இருக்கிறது என்பது அக்கறையூட்டுவதாக இருக்கிறது. பைபிளானது “கிறிஸ்தவத்தின் பரிசுத்த புத்தகம்” என்பதாக விளக்கப்படுகிறது. ஆம், கிறிஸ்தவம் என்பதாக உரிமை பாராட்டும் எந்த மதத்தையும் மதிப்பிட பைபிளே அளவுகோலாக இருக்கிறது. உண்மையில் எந்த தத்துவத்தையும் பைபிளில் காணப்படும் “நித்திய சத்தியங்களோடு ஒப்பிடமுடியாது என்பதாகச் சொல்லப்பட்டிருக்கிறது. ஆகவே உங்கள் பெற்றோரின் மதம் என்னவாக இருந்தபோதிலும் அதன் போதகங்களை பைபிளோடு ஒப்பிட்டுப் பார்ப்பது மிகச் சிறந்ததாக இருக்கும்.
“நரகத்துக்கு தீர்ப்பளிக்கப்படுதல்” என்பது முன்னால் தெரிவிக்கப்பட்ட ஓர் ஆட்சேபனையாக இருந்தது. மரணத்துக்குப் பின் ஏதோ ஒரு விதமான தண்டனையைக் குறித்து பெரும்பாலான மேற்கத்திய மற்றும் கிழக்கத்திய மதங்கள் கற்பிப்பதன் காரணமாக கெட்டவர்கள் நரகத்துக்குப் போகிறார்கள் என்பதாக உங்களுடைய பெற்றோரின் மதம் போதிப்பதற்கு வாய்ப்பிருக்கிறது. இன்று அநேக குருமார்கள் நரகத்துக்குத் தீர்ப்பளிக்கப்படுகிறவர்கள் சரீரப்பிரகாரமாய் வாதிக்கப்படாமல், “தேவனுடைய தரிசனத்தை இழந்தவர்களாய் ஒழுக்க ரீதியில் வாதிக்கப்படுகிறார்கள் என்பதாகச் சொல்லி, நரகத்தின் வெப்பத்தைத் தணிக்கிறார்கள். ஆனால் நித்தியமாக சரீரப்பிரகாரமாய் வாதிக்கப்படுவதை எண்ணிப் பார்க்கையில் ஏற்படுவது போல நித்தியமாக ஒரு நபர் ஒழுக்கரீதியில் வாதிக்கப்படுவதைப் பற்றிய எண்ணமும்கூட ஓர் இளைஞனாக உங்களை அதிர்ச்சியடையச் செய்கிறதல்லவா?
மனித ஆத்துமா சாகக்கூடும் என்றும் மரணத்துக்குப் பின்பு உயிர்வாழ்வதற்கான நம்பிக்கை, மரித்தோரை உயிர்த்தெழுப்பும் கடவுளுடைய வல்லமையின் பேரில் சார்ந்ததாக இருக்கிறது என்றும் வேண்டுமென்றே பொல்லாப்பைச் செய்கிறவர்களுக்கு தண்டனை நித்திய வாதனை அல்ல, ஆனால் மரணமே என்றும் பைபிள் கற்பிக்கிறது. (எசேக்கியேல் 18:4; அப்போஸ்தலர் 24:15; ரோமர் 6:23)a இது கடவுளை கனவீனப்படுத்தும் நரக அக்கினி கோட்பாட்டைக் காட்டிலும் அதிகமாக உங்களுடைய நேர்மையுணர்வை திருப்தி செய்வதாக இருக்கிறதல்லவா? யெகோவாவின் சாட்சிகள் கற்பிக்கும் பைபிளின் “நித்திய சத்தியங்களில்” இவை சிலவாக இருக்கின்றன.
சாட்சிகளின் இளைஞர்களும்கூட தீர்மானிக்க வேண்டும்
யெகோவாவின் சாட்சிகளாக இருக்கும் பெற்றோரால் வளர்க்கப்பட்டிருக்கும் பருவ வயதினரைப் பற்றியதென்ன? “நான் ஏன் என்னுடைய பெற்றோரின் மதத்தை ஏற்றுக்கொள்ள வேண்டும்?” என்ற கேள்வியை அவர்கள் எதிர்படுவதில்லை என்பதாக நாங்கள் சொல்கிறோமா? நிச்சயமாக இல்லை? அவர்கள் தங்களுடைய வாழ்க்கையை யெகோவா தேவனுக்கு ஒப்புக்கொடுக்கப் போகிறார்களா இல்லையா என்பதாக தனிப்பட்ட வகையில் தீர்மானிக்க வேண்டிய ஒரு சமயம் அவர்களுடைய வாழ்க்கையில் வருகிறது.
மற்ற இளைஞர்களைப் போலவே அவர்கள், “என்னுடைய பெற்றோரின் மதம் தான் உண்மையான மதம் என்று நான் எவ்விதமாக நிச்சயமாயிருக்கலாம்?” என்பதாக தங்களைத் தாங்களே கேட்டுக் கொள்கிறார்கள். மற்றவர்களைப் போலவே அவர்களும் அதனுடைய போதகங்கள் பைபிளுக்கு இசைவாக இருக்கிறதா என்பதை நிச்சயப்படுத்திக்கொள்ள வேண்டும்.
ஜெர்மனியில் வளர்ந்து வந்த ரூத் என்ற பெண், ஒரு வாலிபப் பெண்ணாக இருந்தபோது, தன்னிடம் என்ன எதிர்பார்க்கப்பட்டது என்பதை அறிந்தவளாய் “சரியான” பதில்களை கொடுத்ததை ஒப்புக்கொள்கிறாள். உதாரணமாக, “உன்னுடைய வாழ்க்கையில் நீ எதற்கு முதலிடம் கொடுக்கிறாய்?” என்பதாக கேட்கப்பட்டபோது அவள் “கடவுளுடைய ராஜ்யம்” என்று பதிலளித்தாள். என்றபோதிலும் அவள் மேலுமாகச் சொல்கிறாள்: “இதுதான் சரியான பதில் என்று நான் அறிந்திருந்தேன். ஆனால் அதற்குப் பின்பு, ‘இது உண்மையா?’ என்று நான் என்னையே கேட்டுக்கொண்டேன்.” வாழ்க்கையின் அந்த கட்டத்தில் கடவுளுடைய ராஜ்யத்தைக் காட்டிலும் அவளுடைய பள்ளி படிப்பே அவளுக்கு முக்கியமானதாக இருந்தது என்பதை ஒப்புக்கொள்ள அவள் போதிய அளவு நேர்மையுள்ளவளாக இருந்தாள்.
பின்னால் ரூத் தன்னைத்தானே பின்வருமாறு கேட்டுக்கொண்டாள்: “இத்தனை அநேக வித்தியாசமான கருத்துக்கள் இருப்பதன் காரணமாக, சிறு பிராயம் முதல் நான் பெற்றுக்கொண்டிருப்பதே சத்தியம் என்று எனக்கு எப்படி நிச்சயமாகத் தெரியும்? பின்வரும் மூன்று வேதவசனங்கள் அவளுக்கு உதவிசெய்தன: மத்தேயு 7:15-20 (அவர்களுடைய கனிகளினாலே அவர்களை அறிவீர்கள்), யோவன் 13:35 (“நீங்கள் ஒருவரிலொருவர் அன்புள்ளவர்களாயிருந்தால் அதினால் நீங்கள் என்னுடைய சீஷர்களென்று எல்லாரும் அறிந்துகொள்வார்கள்”), மற்றும் மத்தேயு 24:14 (ராஜ்யத்தினுடைய இந்தச் சுவிசேஷம் பூலோகமெங்குமுள்ள சகல ஜாதிகளுக்கும் சாட்சியாகப் பிரசங்கிக்கப்படும்). மற்ற மதங்கள் நல்ல கனிகளை பிறப்பிக்காததை அவள் கண்டாள். யெகோவாவின் சாட்சிகள் மத்தியில் “தன்னலமில்லாமல் கடவுளுடைய ராஜ்யத்தின் நற்செய்தியை பிரசங்கிப்பதில் சுறுசுறுப்பாக இருந்த சர்வ தேசீய ஐக்கியப்பட்ட சகோதரத்துவத்தை” அவள் கவனித்தாள். அவளுடைய தாய் அவளை வளர்த்த அதே மதத்தை தொடர்ந்து பின்பற்றுவதை அவள் தெரிந்துகொண்டாள்.
அதேவிதமாகவே, ப்ரான்ஸில் சாட்சிகளாக இருக்கும் பெற்றோரால் டார்க்கஸ் வளர்க்கப்பட்டாள். பைபிள் பிரசுரங்களை வெகு குறைவாக படிப்பதும் பள்ளியில் தத்துவங்களை வெகு அதிகமாக படிப்பதும் அவளுடைய இளம் மனதில் சந்தேகங்கள் எழும்ப காரணமாயிருந்ததை இப்பொழுது அவள் ஒப்புக்கொள்கிறாள். என்றாலும் அவளுடைய பெற்றோர் அவளுக்கு கற்பித்த பைபிள் சத்தியங்கள் இல்லாதிருந்தால், அவளுடைய வாழ்க்கை எவ்விதமாக இருக்கும் என்பதை கற்பனை செய்ய அவள் முயன்றாள். அது வெறுமையாகவே இருக்கும் என்பதை உணர்ந்தாள். ஆகவே, பொருத்தமான உதவி புத்தகங்களோடு பைபிள் தீர்க்கதரிசனங்களை அவள் கருத்தூன்றி படிக்க ஆரம்பித்தாள். அவள் சொல்கிறாள்: “என்னிடம் சத்தியமிருக்கிறது என்பதை நான் கடைசியாக உறுதியாய் நம்பியபோது, நான் முழுக்காட்டுதல் பெற்றேன்.” டார்க்கஸ் தன் பெற்றோரின் மதத்தை தொடர்ந்து பின்பற்ற முடிவு செய்தாள்.
“சர்ச்சுகள் தங்களுடைய கட்டடங்களுக்கு வராதவர்களை சென்றெட்டவும் விசுவாசியாதவர்களுக்கு உதவி செய்யவும்” முயற்சி செய்வதில்லை என்பதாக குறைபட்டுக்கொண்ட மெத்தடிஸ்ட் மதப் பிரிவைச் சேர்ந்த இளைஞனைப் போலில்லாமல், ரூத்தும் டார்க்கஸும், அதையேச் செய்வதில் மற்ற யெகோவாவின் சாட்சிகளோடு பங்குகொள்வதில் மகிழ்ச்சியடைகிறார்கள். இளைஞர்களும் முதியவர்களுமாகிய சாட்சிகள் அனைவருமே, பிரசங்க வேலைக்கு “தங்களுடைய நேரத்தில் கொஞ்சத்தை” அர்ப்பணிக்குமாறு அழைக்கப்படுகின்றனர். அதிகமதிகமான இளம் சாட்சிகள் கடவுளுடைய ராஜ்யம் வெகு சீக்கிரத்தில் நம்முடைய பூமிக்கு பரதீஸான நிலைமைகளைக் கொண்டு வரும் என்ற நற்செய்தியை பிரசங்கிக்கும் முழு நேர ஊழியர்களாக மாறி வருகிறார்கள்.—மத்தேயு 6:10.
தெரிவு உங்களுடையது
ஆவிக்குரிய குறிக்கோள் இல்லாத ஒரு வாழ்க்கை, வாழ்க்கையே இல்லை என்பதாக அதிகமதிகமான இளைஞர்கள் உணருவது தெரிகிறது. என்றபோதிலும் நாம் பார்த்த விதமாகவே, அநேக இளைஞர்களின் “ஆழமான ஆன்மீகப் பசியை “ஸ்தாபிக்கப்பட்ட சர்ச்சுகள்” தீர்த்து வைக்கவில்லை.
“நான் ஏன் என்னுடைய பெற்றோரின் மதத்தை ஏற்றுக்கொள்ள வேண்டும்?” என்ற கேள்வியை நீங்கள் எதிர்படுகையில், அவைகளின் நம்பிக்கையை பைபிளில் காணப்படும் “நித்திய சத்தியங்களோடு” ஏன் ஒப்பிட்டு பார்க்கக்கூடாது? இந்தப் பத்திரிகையை பிரசுரிப்பவர்களுக்கு எழுதுங்கள் அல்லது ஒருவேளை உங்கள் பள்ளியில் அல்லது நீங்கள் வேலை செய்யுமிடத்தில் யெகோவாவின் சாட்சிகள் எவருடனாவது தொடர்பு கொண்டு இந்த சரிபார்த்தலைச் செய்ய உங்களுக்கு உதவக்கூடிய பைபிள் படிப்பு உதவி புத்தகங்களைக் கேட்டு பெற்றுக்கொள்ளுங்கள். அதன் பின்பு நீங்கள் உங்கள் பெற்றோரின் மதத்தைப் பின்பற்ற வேண்டுமா வேண்டாமா என்பதைக் குறித்து உங்களுடைய சொந்தத் தீர்மானத்தைச் செய்யுங்கள். தெரிவு உங்களுடையதே! (g86 11⁄22)
[அடிக்குறிப்புகள்]
a முழு விளக்கத்துக்கு உவாட்ச் டவர் பைபிள் அண்டு டிராக்ட் சொஸயிட்டி வெளியிட்டிருக்கும் ‘இருப்பதெல்லாம் இந்த வாழ்க்கை தானா?’ என்ற புத்தகத்தைப் பார்க்கவும்.
[பக்கம் 15-ன் சிறு குறிப்பு]
“பருவ வயதினர் ஆன்மீகக் கேள்விகளில் நிலையான அக்கறையை காண்பிக்கிறார்கள்”
[பக்கம் 16-ன் சிறு குறிப்பு]
இளைஞர்கள், தங்களின் பெற்றோர்கள் அவர்களுக்கு பைபிள் சத்தியத்தைக் கற்பித்திருக்கிறார்களா என்பதை சரிபார்க்க வேண்டும்