சரியான மதத்திற்காக அவர்கள் தேடுதல்
சிலர், வாழ்க்கையைப்பற்றிய தங்கள் கேள்விகளுக்குத் திருப்திதரும் பதில்களுக்காக சிறுவயது முதற்கொண்டே தேடியிருக்கின்றனர். இளைஞராக இருந்தபோது, மத ஆராதனைகளுக்கு அவர்கள் சென்றிருக்கலாம். ஆனால் பதில்களும் கொடுக்கப்படவில்லை, வாழ்க்கைப் பிரச்னைகளைச் சமாளிப்பதற்குச் சர்ச் சடங்காச்சாரங்கள் தங்களுக்கு உண்மையில் உதவியும் செய்யவில்லையென அவர்களில் பலர் கண்டுள்ளனர்.
மத ஆராதனைகளுக்கு அவர்கள் செல்வது அரிதேயாயினும், தாங்கள் இன்னும் தங்கள் பெற்றோரின் மதத்தைச் சேர்ந்தவர்களென அவர்கள் சொல்லிக்கொள்ளலாம். சர்ச் ஆஃப் இங்லாண்டின் ஒரு பிஷப் சொல்வதன்படி அவர்களுடையது சிறிதே பாதிப்புடைய மீந்துள்ள கொஞ்ச விசுவாசமே. மதத்தைக் கவனிப்புக்கு உதவாததாகத் தள்ளிவைத்துள்ளனர். மற்றவர்கள், மத வட்டாரங்களில் தாங்கள் காணும் பாசாங்குத்தனத்தால் வெறுப்புற்றோராகி, மதத்தை முற்றிலுமாகவே தள்ளிவிட்டிருக்கின்றனர். எனினும் வாழ்க்கையைப் பற்றிய அவர்களுடைய கேள்விகள் தொடர்ந்துகொண்டிருக்கின்றன.
சிலர் ஏன் வினைமையான சந்தேகங்களை உடையோராக இருக்கின்றனர்
வீடற்றோருக்கு உதவிசெய்யவும், வறுமையிலிருப்போருக்கு உணவு பகிர்ந்தளிக்கவும், அறிவு வளர்ச்சிக்குரியவற்றிற்கு ஆதரவளிக்கவும், செயலகங்களைப் பல சர்ச்சுகள் கொண்டுள்ளனவென பெரும்பான்மையர் அறிந்திருக்கின்றனர். ஆனால், கிறிஸ்தவரல்லாதோருக்குள் மட்டுமல்ல கிறிஸ்தவர்களென உரிமை கொண்டாடுவோருக்குள்ளும், மதத்தில் மூலகாரணத்தைக் கொண்டுள்ள வன்முறைச் செயல்களையும் இரத்தம் சிந்துதலையும் பற்றிய செய்தி அறிவிப்புகளையுங்கூட பெரும்பாலும் நாள்தோறும் அவர்கள் கேள்விப்படுகின்றனர். இத்தகைய வன்முறைச் செயல்களில் ஈடுபடுகிற தொகுதியினர் சரியான மதத்தை அனுசரிக்கின்றனரா என்பதைப்பற்றி அவர்கள் சந்தேகித்தால் அது நமக்கு வியப்பூட்ட வேண்டுமா?
மத சூழ்நிலையில் வளர்க்கப்பட்ட பலர், சர்ச்சுகள் ஆதரித்து நடத்தும் அனாதை விடுதிகள் நல்ல ஒரு காரியமென நினைப்பதுண்டு. எனினும், சமீப ஆண்டுகளில், ஒன்றன்பின் ஒன்றாகப் பல இடங்களில் குருமார் தங்கள் பொறுப்பில் ஒப்படைக்கப்பட்ட பிள்ளைகளைப் பாலுறவு ஒழுக்கக்கேட்டுக்குப் பயன்படுத்தினதாக குற்றம் சாட்டப்பட்டதால் திடுக்குற்றிருக்கின்றனர். முதன்முதலில் ஒருசில குருமார்கள் மாத்திரமே குற்றத்துக்காளானவர்களென மக்கள் எண்ணினர். இப்போதோ, சர்ச்சில்தானே அடிப்படையாக ஏதோ தவறாக இருக்கிறதாவென அவர்களில் சிலர் சந்தேகிக்கின்றனர்.
யேயுகெனியாவைப் போன்ற சிலர் ஒரு காலத்தில் தங்கள் மதத்தில் முழுமையாக ஈடுபட்டிருந்தனர். அர்ஜன்டினாவில் இளம் பெண்ணாக இருந்தபோது, ஈட்டாட்டியின் கன்னியை (Virgin of Itatí) வணங்குவதற்குச் செல்லும் யாத்திரியரைச் சேர்ந்தவளாக இருந்தாள். ஒரு கன்னிமடத்தில் 14 ஆண்டுகள் ஒரு கன்னியாஸ்திரீயாக வாழ்ந்தாள். பின்பு புரட்சி வழிவகைகளின்மூலம் சமுதாயத்தின் சமூக மற்றும் பொருளாதார அமைப்புமுறைகளில் உடனடியான, தீவிர மாற்றத்தைச் சிபாரிசுசெய்த அனைத்து நாட்டு மத-அரசியல் தொகுதியின் பாகமாகும்படி அதை விட்டு விலகினாள். தான் கண்டவையும் அனுபவித்தவையுமானவற்றின் விளைவாக, கடவுளில் விசுவாசத்தையும் நம்பிக்கையையும் இழந்தாள். தான் நம்பக்கூடிய ஒரு மதத்துக்காக அவள் உண்மையில் தேடிக்கொண்டில்லை. ஏழைகளாக இருந்தவர்களுக்கு நீதியைக் கொண்டுவருவதற்கான ஒரு வழியே அவளுக்கு வேண்டியதாக இருந்தது—ஆம், தான் நம்பக்கூடிய ஒரு நண்பரும் அவளுக்கு வேண்டும்.
மற்றவர்கள் சர்ச்சுகளில் நடப்பவற்றைக் கவனித்து சர்ச்சுகளுக்குத் தூரமாக விலகியுள்ளனர். ஸ்புட்னிக் பத்திரிகையில் 1991-ல் ஒரு நாத்திகருடைய கருத்துக்கள் பிரசுரிக்கப்பட்டன, அவர் ஒருசார்பற்றவராகப் பின்வருமாறு கூறினார்: “புறமத மற்றும் கிறிஸ்தவ புராணக்கதைகளின் இயற்பண்புகளுக்கிடையே எந்த முக்கிய வேறுபாட்டையும் நான் காண முடிகிறதில்லை.” ஓர் உதாரணமாக, மாஸ்கோவின் வீதிகளினூடே சென்ற ஒரு பவனியை விவரித்தார், அதில் குருமார்கள் பொன் பூத்தையல் வேலைப்பாடுள்ள அங்கிகளணிந்தவர்களாய், பதனம் செய்யப்பட்ட ஒரு பிணத்தைக் கல் சவப்பெட்டியில் சுமந்துகொண்டு மெதுவாகச் சென்றனர். அது கண்காட்சி சாலையிலிருந்து சர்ச்சுக்குக் கொண்டுசெல்லப்பட்ட “ஓர் ஆர்த்தடாக்ஸ் கிறிஸ்தவ பரிசுத்தவா”னின் உடலாக இருந்தது. அது பூர்வ எகிப்திலிருந்த பூஜாரிகளையும் பதனப்படுத்தப்பட்ட பிணங்களையும் அந்த எழுத்தாளருக்கு நினைப்பூட்டினது. மாஸ்கோவில் சென்ற அந்தப் பவனியில் பங்குகொண்டவர்கள் ‘கிறிஸ்தவ திரித்துவத்தில்’ நம்பினோராக இருக்கையில், எகிப்தியருங்கூட தெய்வங்களின் மும்மையை—ஆஸிரிஸ், ஐஸிஸ், மற்றும் ஹோரஸ்—வணங்கினரென்பதை அவருக்கு நினைப்பூட்டினது.
அதே எழுத்தாளர் அன்பைப்பற்றிய கிறிஸ்தவ பொதுக்கருத்துக்கு—“தேவன் அன்பாகவே இருக்கிறார்,” மற்றும் “உன் பிறனிலும் அன்புகூருவாயாக” என்பதற்கு—இணையொத்த எதையும் புறமத எகிப்தில் காணவில்லையெனக் குறிப்பிட்டார். ஆனால் அவர் சொன்னதாவது: “உலகத்தில் சகோதர அன்பு கிறிஸ்தவ உலகம் என்று தன்னை அழைத்துக்கொள்ளும் அந்தப் பாகத்திலுங்கூட வெற்றிப்பெற தவறியுள்ளது.” இதைப் பின்தொடர்ந்து அவர், அரசாங்க விவகாரங்களில் வலுக்கட்டாயமாகச் சர்ச் தன்னை உட்படுத்துவதிலிருந்து வரும் கெட்ட விளைவுகளைப்பற்றிய குறிப்புகளைச் சொன்னார். அவர் கண்டது, தான் தேடிக்கொண்டிருந்ததை கிறிஸ்தவமண்டல சர்ச்சுகள் அளித்தனவென உணரும்படி அவரைத் தூண்டுவிக்கவில்லை.
மாறாக, திருப்திதரும் பதில்களை மற்றவர்கள் கண்டடைந்திருக்கின்றனர், ஆனால் கிறிஸ்தவமண்டலத்தின் சர்ச்சுகளில் அல்ல.
மரித்தோரைப்பற்றிய சத்தியத்தை அவள் கற்றுக்கொண்டாள்
மாக்தலேனா, இப்பொழுது 37 வயதானவள், பல்கேரியாவில் வாழ்கிறாள். அவளுடைய மாமனார் 1991-ல் மரித்தப் பின்பு, அவள் மிகச் சோர்வுற்றிருந்தாள். ‘மரித்தோர் எங்கே செல்கின்றனர்? என் மாமனார் எங்கே இருக்கிறார்?’ என்று மறுபடியும் மறுபடியுமாகத் தன்னைக் கேட்டுக்கொண்டிருந்தாள். அவள் சர்ச்சுக்குச் சென்றாள், வீட்டில் ஒரு சிலைக்கு முன்பாக ஜெபித்தாள், எனினும் அவளுக்குப் பதில்கள் கிடைக்கவில்லை.
பின்பு ஒரு நாள் அயலகத்திலுள்ள ஒருவர், தன் வீட்டுக்கு வரும்படி தொலைபேசியில் அழைத்தார். யெகோவாவின் சாட்சிகளுடன் படித்துக்கொண்டிருந்த ஓர் வாலிபன் அந்த அயலாரைக் காண வந்திருந்தான். கடவுளுடைய ராஜ்யத்தைப் பற்றியும் மக்கள் மகிழ்ச்சியில் என்றென்றுமாக வாழக்கூடிய ஒரு பரதீஸாக இந்தப் பூமியை மாற்றுவதற்கான அவருடைய நோக்கத்தைப்பற்றியும் அவன் பேசினபோது செவிகொடுத்துக் கேட்டாள். நீங்கள் பூமியில் பரதீஸில் என்றும் வாழலாம் என்ற புத்தகம் மேசையின்மீது இருந்தது. அந்த இளைஞன் அதைப் பயன்படுத்தி, பிரசங்கி 9:5-ல் (NW) உள்ள பைபிள் வசனத்துக்கு அவளுடைய கவனத்தை வழிநடத்தினான், அது சொல்வதாவது: “மரித்தோரைக் குறித்ததிலோ, அவர்கள் எதைப்பற்றியும் உணர்வுள்ளோராக இல்லை.” அந்தச் சாயங்காலம் இன்னுமதிகம் வாசித்தாள். மரித்தோர் பரலோகத்திலோ நரகத்திலோ மற்றொரு வாழ்க்கைக்குச் சென்றில்லை, நல்ல தூக்கத்தில் இருப்பதுபோல் அவர்கள் எதைப்பற்றியும் உணர்வுள்ளோராக இல்லை என கற்றறிந்தாள். அவ்விடத்திலிருந்த யெகோவாவின் சாட்சிகளுடைய சபைக் கூட்டம் ஒன்றுக்கு வரும்படியான அழைப்பை சந்தோஷமாய் ஏற்றாள். கூட்டம் முடிந்த பின்பு ஒழுங்கான ஒரு பைபிள் படிப்பை ஏற்றாள். யெகோவாவுக்கு ஜெபங்கள் செலுத்தும் முறையைக் கூட்டத்தில் கவனித்திருந்ததால், தானும் தன்னில் ஆழமாய் வேரூன்றியிருந்த பலவீனத்தை மேற்கொள்ள உதவிசெய்யும்படி யெகோவாவை நோக்கி ஜெபிக்கத் தொடங்கினாள். அவளுடைய ஜெபம் பதிலளிக்கப்பட்டபோது, தான் சரியான மதத்தை கண்டுபிடித்துவிட்டாளென அறிந்துகொண்டாள்.
உட்பொருளுள்ள வாழ்க்கையை அவர்கள் கண்டடைந்தார்கள்
பெல்ஜியத்தில் தீவிர கத்தோலிக்க செல்வாக்குள்ள ஒரு குடும்பத்தில் ஆன்ட்ரே வளர்க்கப்பட்டிருந்தார் மற்றும் அவ்விடத்து மதகுருவுக்கு உதவியாளராகச் சேவித்திருந்தார். எனினும், அந்தச் சமயத்தின்போது, சர்ச்சின்பேரில் தனக்கிருந்த மதிப்பை அடியோடு அழித்துப்போடச் செய்த காரியங்களைக் கண்டார். இதன் விளைவாக, அவர் பெயரளவில் மாத்திரமே கத்தோலிக்கராக இருந்தார்.
15 ஆண்டுகளாக கால்பந்தாட்டப் போட்டியில் விளையாடுவதைத் தொழிலாகக் கொண்டிருந்தார். ஒரு சந்தர்ப்பத்தின்போது அவனுடைய ஆட்டக்குழு இத்தாலியில் ஒரு பந்தய விளையாட்டை ஆடினபோது, போப்பைக் காண்பதற்கு அழைக்கப்பட்டனர். அந்தச் சந்திப்பைப்பற்றியதில் ஆவிக்குரிய கட்டியெழுப்புதலான எதுவும் இருக்கவில்லை, மேலும் போப்பைச் சூழ்ந்திருந்த உலகப்பிரகாரமான செல்வம் ஆன்ட்ரேக்கு மனக்குழப்பத்தை உண்டாக்கியது. சர்ச்சைப்பற்றிய அவருடைய சந்தேகங்கள் மேலும் ஆழமாயின. அவருடைய தனிப்பட்ட வாழ்க்கை, முறிவுற்ற இரண்டு திருமண இணைப்புகளால் மகிழ்ச்சியற்றிருந்தது. உலக நிலைமை அவருக்கு ஏமாற்றத்தைக் கொடுத்தது. 1989-ல் அவர் தன் டைரியில் பின்வருமாறு எழுதினார்: ‘நம்மைச் சுற்றி நிகழ்ந்துகொண்டிருக்கும் இந்த எல்லா மூடத்தனமான காரியங்களின் உட்பொருள்தான் என்ன?’ தன் மதத்திலிருந்து எந்தப் பதில்களும் அவருக்குக் கிடைக்கவில்லை.
1990-ல் ஐஸ்லாந்தில் கால்பந்தாட்டப் பயிற்சியாசிரியராக ஆன்ட்ரே வேலை செய்துகொண்டிருந்தபோது, யெகோவாவின் சாட்சிகளுடைய ஒரு மிஷனரியாகிய ஈரஸ் அவரைச் சந்தித்தாள். அவர் புத்தகத்தை ஏற்றுக்கொண்டு திரும்ப வரும்படி அந்த மிஷனரிக்கு அழைப்புக் கொடுத்தார். அவள் தன் கணவன் ஜெல்லுடன் திரும்பிவந்தாள். கடைசியாக அவர்கள் உட்கார்ந்து ஆன்ட்ரேயுடன் பேச முடிந்தபோது, பைபிளைப் புரிந்துகொள்வதில் அவர் வெகு கூர்ந்த அக்கறையுடையவராக இருந்தது தெளிவாயிற்று. அவருடைய மனைவி ஆஸ்ட்டாவும் அவரோடு சேர்ந்து அக்கறை காட்டினாள். தன் பயிற்சியளிக்கும் நேரங்களுக்கு இடையே மத்தியான வேளையில் அவருக்கு மூன்று மணிநேரங்கள் ஓய்வு இருந்தன, அந்த நேரத்தை பைபிள் படிப்புக்காகப் பயன்படுத்த அவர்கள் தீர்மானித்தனர். “வெறுமனே இளைப்பாறிக்கொண்டிருப்பதைப் பார்க்கிலும் பைபிளைப் படிப்பதால் நான் அதிக இளைப்பாறுதலடைந்தவனாக உணருகிறேன்” என்று அவர் சொன்னார். படிப்படியாய் பைபிள் அவர்களுடைய கேள்விகளுக்குப் பதிலளித்தது. யெகோவாவிலும் அவருடைய ராஜ்யத்திலும் அவர்களுடைய விசுவாசம் மெல்ல வளர்ந்தது. ‘நடந்துகொண்டிருக்கும் மூடத்தனமான எல்லா காரியங்களிலிருந்தும்’ விடுதலையாகிய சமாதானமுள்ள ஒரு புதிய உலகத்தைப்பற்றிய பைபிளின் மகிமையுள்ள வாக்குகள் அவர்களுக்கு மெய்ம்மையாயின. ஆன்ட்ரேயும் ஆஸ்ட்டாவும் புதிதாகக் கண்டடைந்த தங்கள் விசுவாசத்தை மற்றவர்களோடு இப்பொழுது பகிர்ந்துகொண்டிருக்கின்றனர்.
முடிவில் தாங்கள் சரியான மதத்தைக் கண்டடைந்தார்களென மாக்தலேனாவும், ஆன்ட்ரேயும், ஆஸ்ட்டாவும் உறுதியாய் நம்புகின்றனர். யேயுகெனியாவும், அரசியல் வழிவகைகளின்மூலம் உலகத்தின் பிரச்னைகளைத் தீர்க்க முயற்சி செய்தபின்பு, சரியான ஒன்றாகத் தனக்குத் தோன்றும் மதத்தைக் கடைசியாக யெகோவாவின் சாட்சிகளுக்குள் கண்டடைந்தாள். ஆனால் ஒரு மதம் சரியானதா என்பதை உண்மையில் தீர்மானிப்பது எது? பின்வரும் கட்டுரையை தயவுசெய்து பாருங்கள்.
[பக்கம் 7-ன் படம்]
திருப்தியான பதில்களுக்காகத் தாங்கள் தேடுவதில் யெகோவாவின் சாட்சிகளோடு ஒழுங்கான பைபிள் படிப்பு ஒன்றை வைத்துக்கொண்டிருப்பது ஐம்பது லட்சத்துக்கு மேற்பட்ட ஆட்களுக்கு உதவிசெய்கிறது