நமது அழகிய பூமி—இதில் எவ்வளவை நாம் நமது பிள்ளைகளுக்கு விட்டுச் செல்வோம்?
பிரசுரமாகியுள்ள அறிக்கைகளின்படி, 1970 முதற்கொண்டு 17 கோடி குழந்தைகள் உலகத்தில் பிறந்திருக்கிறார்கள். இவர்கள் ஒரு தேசத்தை உண்டுபண்ணுவார்களேயானால், அதுவே உலகின் மிகப் பெரிய தேசமாக இருக்கும். அவர்களுக்கு என்ன விதமான ஒரு உலகை நாம் விட்டுச் செல்கிறோம் என்று கேட்பது நியாயமாக இருக்கிறதல்லவா?
25 ஆண்டுகளுக்கு முன்பாக அமெரிக்க பொது சுகாதார சேவையின் பிரபல மருத்துவர் ஒருவர் குறிப்பிட்டதாவது:“ மண்ணியல் தொடக்க காலத்தில் வாழ்ந்து மறைந்து போன ஊருமினத்தைச் சேர்ந்த டைனோசார்ஸ் விலங்கு வகையை (dinosaurs) மனிதனும் சேர்ந்துக் கொண்டு, மறைந்து போகும் அளவுக்கு சுற்றுப்புறச் சூழலை ஏதோ ஒன்று கெடுத்து விடக் கூடும் என்ற ஓயாத பயத்தில் நாம் அனைவரும் வாழ்ந்து வருகிறோம்.”
இடைப்பட்ட ஆண்டுகளில் இந்த பயம் தீவிரமாகியிருக்கிறது. கடந்த ஆண்டு ஏறக்குறைய நூறு உயிரியல் அறிஞர்கள் கலந்து கொண்டு பேசிய ஒரு கருத்தரங்கில், டைனோசார்ஸுகளுக்கு ஏற்பட்டது போன்று மொத்த அளவில் அழியும் அலையைக் குறித்து எச்சரிப்பு கொடுக்கப்பட்டது. ஆனால் இந்த முறை இது இயற்கை சம்பவமாக இராமல் “மனிதர்களின் நடவடிக்கை”களினால் நிகழ்வதாக இருக்கும்.
உவர்ல்ட் வாட்ச் நிறுவனம் கடந்த ஆண்டு உலகின் நிலை 1987 என்ற அதன் அறிக்கையை வெளியிட்டது. அது சொன்னதாவது: “நிலைகுலையாத ஒரு சமுதாயம் அடுத்த சந்ததியின் வருங்கால வாய்ப்பு வளங்களைக் குறைக்காமலே தன்னுடைய தேவைகளைப் பூர்த்தி செய்து கொள்கிறது. பெரும் அளவில், இன்றைய சமுதாயம் இந்த விதியில் தோல்வியடைந்து விட்டிருக்கிறது. உயிரின வாழ்க்கைச் சூழலின் வலுவான ஆதாரம் குறித்து கேள்விகள் ஒவ்வொரு கண்டத்திலும் எழுப்பப்பட்டு வருகிறது. மனிதனுடைய செயல்களின் அளவு, பூமி குடியிருப்புக்கு தகுதியுள்ளதாக இருக்குமா என்றே அச்சுறுத்த ஆரம்பித்துவிட்டிருக்கிறது.”
ஒவ்வொரு வருடமும் 8 கோடியே 30 லட்சம் என்பதாக அதிகரித்து வரும் 500 கோடி ஆட்களின் தேவைகள், இயற்கை கோளாறை மட்டுப்படுத்தும் பூமியின் புதுப்பிக்கும் திறமைகளைத் திணறச் செய்துவிடுகிறது என்பதாக நிறுவனத்தின் அறிக்கை குறிப்பிடுகிறது.
வேதியல் தூய்மைக்கேடு வளிமண்டலத்திலுள்ள ஓசோன் அடர்த்தியை குறைவுறச் செய்வதால், இது “தோல் புற்று நோய்க்கும், மனித தடைக்காப்பு அமைப்பு பழுதாவதற்கும், பயிர் வளர்ச்சியைத் தாமதப்படுத்தவும்” செய்கிறது.
அமில மழை தொடருமேயானால், அதிகமதிகமான ஏரிகளும் காடுகளும் மறைவது மட்டுமல்லாமல், மண் அதிகமாக அமிலத் தன்மையுள்ளதாகி “அதிலிருந்து பழைய நிலைக்கு மீண்டும் வர நூற்றாண்டுகள் ஆகாவிட்டாலும் பல பத்தாண்டுகள் ஆகும்.”
உச்ச அளவு பயிர் செய்யும் பழக்கத்தினால் “மேல் மண் இழப்பின் அளவு புதிய மண் உற்பத்தித் திறனுக்கு அப்பால் சென்றுவிட்டிருக்கிறது.”
மரங்களை வெட்டி வீழ்த்துவது வளிமண்டலத்திலிருந்து பயன்படுத்தப்படும் கார்பன் டைஆக்சைடின் அளவைக் குறைத்துவிடுகிறது. மேற்கொண்டு வளர்ச்சியடைய திறனற்ற மரங்களை எரிப்பதால் மீதமுள்ள தாவரங்களும் சமுத்திரமும் எடுத்துக் கொள்ளக் கூடியதற்கும் அதிகமான அளவில் கார்பன் டை ஆக்சைட் வெளியாகிறது. இதன் விளைவாக, பசுமையால் ஏற்படும் குளிர்ச்சி மறைந்து உஷ்ணமாக, இது பனிக்கட்டிப் பாளங்கள் உருகுவதற்கும் கரையோர பட்டணங்களில் வெள்ளம் ஏற்படவும் காரணமாகிவிடுகிறது.
வெப்பமண்டல காடுகள் இழக்கப்படுவது, மழை பெய்வதற்கு போதிய தண்ணீர் சுழற்சி இல்லாமல் போய்விடுவதை அர்த்தப்படுத்துகிறது. இது பாலைவனங்கள் உருவாவதற்கு வழிநடத்துகிறது.
மனிதன் சுற்றுப்புறச் சூழலுக்கு எதிராக செய்திருக்கும் பாவங்களில் சில— நச்சுத்தன்மையுள்ள வேதியல் பொருட்கள், கழிவுநீர், பக்குவப்படுத்தப் படாத எண்ணெய், அணுசக்தி விபத்துக்கள், கதிரியம், மின்காந்த அலைகள், கல்நார்—பட்டியல் நீண்டு கொண்டே போகிறது.
உலகின் நிலை 1987 பின்வருமாறு எச்சரிக்கைச் செய்கிறது: “பூமி குடியிருப்புக்கு தகுதியுள்ளதாக இருப்பதற்கு இன்றியமையாததாக இருக்கும் இத்தனை அநேக அமைப்புகள் முன்னொரு போதும் ஒரே சமயத்தில் சமநிலை தவறியதாகிவிட்டது கிடையாது. சுற்றுப்புறச் சூழல் சம்பந்தப்பட்ட புதிய பிரச்னைகள், காலப்பகுதியிலும் நிலயியல் நிலப்பரப்பிலும் இப்பொழுதுள்ள அரசியல் மற்றும் சமுதாய நிறுவனங்களின் அதிகாரத்துக்கு அப்பால் சென்றுவிட்டிருக்கின்றன. எந்தத் தனி ஒரு தேசத்தாலும் பூமியின் சீதோஷண நிலையை நிலவரப்படுத்தி, ஓசோன் மண்டலத்தைப் பாதுகாத்து, கிரகத்துக்கு போர்வையாக அமைந்திருக்கும் காடுகளையும் மண்ணையும் அழியாது பாதுகாத்து அல்லது ஏரிகளும் ஓடைகளும் அமிலத்தன்மையுள்ளதாவதை மாற்றி விடவோ முடியாது. விடாது உறுதியுடன் அனைத்து நாடுகளும் இதற்கு பொறுப்பேற்றுக் கொண்டால் மாத்திரமே முடியும்.”
இவ்விதமாக பொறுப்பேற்றுக் கொள்வது மிகவும் மெதுவாயிருப்பதாக தோன்றுகிறது. காலம் கடந்துகொண்டே போகிறது. கோடிக்கணக்கான பணம் ஆயுதப் போட்டிக்கு செலவிடப்படுகிறது; கைவிடாது நம்மை ஆதரித்து வரும் சுற்றுப்புறச் சூழலைப் பாதுகாப்பதற்கு சிறு தொகையே செலவிடப்படுகிறது. இது அசட்டை செய்யப்படுமேயானால் நாம் மாண்டுவிடுவோம். 1983 முதற் கொண்டு ஐக்கிய மாகாணங்கள் மாத்திரமே, போர்த்திற பாதுகாப்பு முன்முயற்சி ஆராய்ச்சிக்காக 11,700 கோடி ரூபாய் செலவழித்திருக்கிறது. 1986 முதல் 1991 வரையாக இதற்காக இன்னும் 42,900 கோடி ரூபாய் தேவையாக இருப்பதாக அது தெரிவிக்கிறது. ஆனால் சுற்றுப்புறச் சூழலின் விஷயத்தில் இது கஞ்சத்தனமாக உள்ளது. தொழில் துறையில் வளர்ச்சியடைந்துள்ள மற்ற நாடுகளும் இதேவிதமாகச் செய்கின்றன. உலகின் நிலை 1987 இந்த நெருக்கடியைச் சுருக்கமாக பின்வருமாறு சொல்கிறது: “நாம் பூமியோடு சமாதானம் பண்ணிக் கொள்ளும் பொருட்டு ஒருவரோடொருவர் சமாதானம் பண்ணிக் கொள்வதற்குரிய நேரம் வந்துவிட்டது.”
“நிலைகுலையாத ஓர் எதிர்காலம், ஒரே சமயத்தில் கார்பன் டை ஆக்சைடின் பெருக்கத்தை தடை செய்து, ஓசோன் மண்டலத்தைப் பாதுகாத்து, காடுகளையும் மண்ணையும் பழைய நிலைக்கு கொண்டு வந்து, மக்கள் தொகை பெருக்கத்தை நிறுத்தி, ஆற்றலின் சக்தியை உயர்த்தி, புதுப்பிக்கப்படத்தக்க ஆற்றல் வளங்களைப் பெருக்குவதை நம்மிடம் கேட்கிறது. உடனடி கவனத்தைத் தேவைப்படுத்தும் இத்தனை பல சிக்கலான பிரச்னைகளை எந்த ஒரு சந்ததியும் ஒருபோதும் எதிர்ப்பட்டதில்லை. முந்தைய தலைமுறையினர் எப்பொழுதும் எதிர்காலத்தைப் பற்றி அக்கறையுள்ளவர்களாக இருந்திருக்கின்றனர். ஆனால் நம்முடைய பிள்ளைகள் சுதந்தரித்துக்கொள்ளப்போகிற பூமி குடியிருப்புக்குத் தகுதியுள்ளதாக இருக்குமா என்பதை முடிவு செய்யும் தீர்மானங்களை எதிர்ப்படுவதில் நாம் முதலாவதாக இருக்கிறோம்,” என்பதாக இந்த அறிக்கை குறிப்பிடுகிறது.
நச்சுத்தன்மை வாய்ந்த வேதியல் பொருட்களினால் வளர்ந்து வரும் நெருக்கடியை பின்வரும் கட்டுரை காண்பிக்கிறது. (g87 7⁄22)