சிறையில் விடுதலையை நான் பெற்றேன்!
நான் எனக்குப் பின்னால் விட்டுவந்த சிறைச்சாலையிலிருந்து அத்தனை வித்தியாசப்பட்டதாகத் தோன்றிய தூய்மையான காற்றை அனுபவித்த வண்ணம், அதை ஆழமாக உள்ளிழுத்துக் கொண்டேன். இதை நம்பவே முடியவில்லை . . . கடைசியாக எனக்கு விடுதலை கிடைத்துவிட்டது. விலனு சர் லாட் என்ற பிரான்ஸ் தேசத்துச் சிறைச்சாலையிலிருந்து வெளியேற நான் சுதந்திரம் அடைந்துவிட்டேன். என்னுடைய தாயகமான ஸ்பய்னுக்குத் திரும்பிவர விடுதலைப் பெற்றுவிட்டேன்.
23 வயதில் நான் சிறைச்சாலைக்குள் பிரவேசித்தேன். 1976-ல் எனக்கு 28 வயதாக இருந்தபோது அதிலிருந்து வெளியேறினேன்.
சிறைச்சாலைக்கு வெளியே நான் நடந்துசென்றபோது, மீண்டும் விடுதலை கிடைத்துவிட்டதால் ஏற்பட்ட இனிமையான உணர்வு அதிகமதிகமாகத் தெளிவாகத் தெரிய வந்தது. மறுபடியுமாக, அச்சுறுத்துகின்ற அந்த மதில்களைக் கடைசி முறையாகப் பார்க்க நான் திரும்பினேன். ஒரே ஒரு எண்ணமே என் மனதை ஆக்ரமித்துக் கொண்டிருந்தது. சிறைச்சாலையில் இன்னும் இருக்கையில் நான் ஏற்கெனவே விடுதலையைப் பெற்றுவிட்டேன்!
என்னுடைய சிறைவாழ்க்கையில், நான் ஐந்து வித்தியாசமானத் தண்டனைக்குரிய நிறுவனங்களில் சிறைப்படுத்தப்பட்டிருந்தேன். ஆனால் நான் ஏன் பிரான்ஸ் நாட்டு சிறைச்சாலைகளுக்குச் சென்றேன்? நிச்சயமாகவே எந்த ஒரு மெச்சத்தகுந்த காரணத்துக்காகவும் இல்லை. நான் ஒரு குற்றவாளியாக இருந்தேன். பிளவுப்பட்ட ஒரு குடும்பத்தில் துயர்மிகுந்த ஒரு இளமைப் பருவமும் முன்னுக்குப் பின் முரணாக இருந்த ஆன்மீகக் கல்வியும் கலகத்தனமான மற்றும் பகைமையான ஆளுமையை என்னில் உருப்படுத்தக் காரணமாக இருந்தன. அன்புள்ள ஒரு கடவுள் தம்முடைய சிருஷ்டிகளை அவியாத அக்கினியில் வாதிப்பார் என்பது முன்னுக்குப் பின் முரணாக இருக்க, இதை நிச்சயமாகவே என்னால் ஒப்புக்கொள்ள முடியவில்லை. தொந்தரவு தரும் ஒரு பிள்ளையாக ஆனேன். நான் ஐந்து வித்தியாசமான ஆரம்பப் பள்ளிகளிலிருந்து வெளியேற்றப்பட்டேன்.
பார்செலோனாவில் பிறந்த நான் பகைமை உணர்ச்சி மிகுந்த ஒரு சூழ்நிலைமையில் வளர்ந்துவந்தேன். எனக்கு ஆறு வயதாக இருந்தபோது என்னுடைய பெற்றோர் பிரிந்துவிட்டார்கள். என்னுடைய அப்பாவிடம் நான் ஒப்படைக்கப்பட்டேன். என்றபோதிலும் எனக்குத் தேவையாக இருந்த உறுதியான வழிநடத்துதலை அவர் தரவில்லை. இறுதியில், சுபாவத்தில் நான் கலகத்தனமாகவும் எதிலும் ஸ்திரமற்றவனாகவும் இருந்தபடியால் அவர் என்னை ஒரு குற்றவாளிகளின் சீர்திருத்தப் பள்ளியில் சேர்த்துவிட்டார்.
என் அப்பாவிடமாக எனக்கிருந்த கசப்பான பகைமை உணர்ச்சியை என்னால் தவிர்க்க முடியவில்லை. நான் கைவிடப்பட்டவனாக உணர்ந்தேன். சீர்த்திருத்தப் பள்ளியிலிருந்து நான் திருந்தியவனாக வெளியேறவில்லை என்பதைச் சொல்லவே தேவையில்லை.
பிரான்ஸ் நாட்டுப் படையா அல்லது ஸ்பய்ன் நாட்டுச் சிறையா?
சட்டத்தை மீறிய குற்றத்துக்காக நான் இருமுறை கைது செய்யப்பட்டேன். அதற்குப் பின்பு நான் கடத்தலில் ஈடுபட்டு பிரான்ஸுக்கு ஓட வேண்டிய நிலை ஏற்பட்டது. அந்தச் சமயம் எனக்கு வயது 20. பிரான்ஸ் நாட்டு காவல் படையினரால் நான் கைது செய்யப்பட்டேன். இவர்கள் பிரான்ஸ் அயல்நாட்டுப் படையணியை சேர்ந்துகொள்வது அல்லது ஸ்பய்ன் தேசத்து காவல்படையினரிடம் ஒப்படைக்கப்படுவது—இதில் ஏதாவது ஒன்றைத் தெரிந்துகொள்ளும்படியாகச் சொன்னார்கள். நான் படையணியைச் சேர்ந்துகொள்ள முடிவு செய்தேன்.
மூன்று ஆண்டுகள் படையில் பணியாற்றியும் என் ஆளுமையில் எந்த விரும்பத்தக்க ஒரு மாற்றமும் ஏற்படவில்லை. முதல் இராணுவச் சேவைக்குப் பின்பு எனக்கு மூன்று மாத கால விடுப்பு கொடுக்கப்பட்டது. இந்தச் சமயம் என்னோடு இராணுவத்தில் வேலை செய்துவந்த சிலரோடு சேர்ந்துகொண்டு நாங்கள் மகிழ்ச்சியோடு காலத்தைக் கழிக்கத் தீர்மானித்தோம். செலவு செய்வதற்கு தேவைப்பட்ட பணத்துக்காகவும், கட்டுப்பாடில்லாத களியாட்டமான எங்களுடைய வாழ்க்கை முறையில் தொடர்ந்திருப்பதற்காகவும் நாங்கள் திருட வேண்டியதாக இருந்தது. இந்தத் “தொழில்” எனக்கு நன்றாகத் தெரிந்திருந்தது. சில மாதங்களுக்குப் பின்பு காவல்துறையினர் எங்களைக் கைது செய்துவிட்டார்கள்.
பல குற்றச்சாட்டுகள் என் மீது சுமத்தப்பட்டன. இவைகளில் கள்ளப் பத்திரங்களை உருவாக்குவதும் எல்லாவற்றையும்விட மோசமானது ஆயுதந்தரித்துக் கொள்ளையடிப்பதும் ஆட்களைக் கடத்திச் செல்லுவதும் இடம் பெற்றிருந்தன. இந்த முறை விடுதலைக்கும் சுதந்திரத்துக்குமான என்னுடைய ஆசைக்காக நான் உயர்ந்த விலையைக் கொடுக்க வேண்டியதாயிற்று—எட்டு ஆண்டுகால சிறை தண்டனை! பிரான்ஸுக்குத் தெற்கே மார்ஸெய்ல்ஸில் லேபொமே சிறைச்சாலையில் இராணுவப் பகுதிக்கு நான் கொண்டு செல்லப்பட்டேன். அங்கே சிறையின் 63 தனியறைகளிலுள்ள கைதிகளுக்கு அறையறையாகச் சென்று உணவு பரிமாறும் வேலை எனக்குக் கொடுக்கப்பட்டது. தனியறைகளையும் நடைப்பாதைகளையும்கூட நான் சுத்தம் செய்ய வேண்டும்.
விநோதமான ஒரு சந்திப்பு
ஒரு நாள் குறிப்பிட்ட தனி அறைக்கு உணவு பரிமாறச் சென்றபோது என்னோடு வந்த அதிகாரி, “இவர்கள் சாட்சிகள்” என்பதாகச் சொன்னார். அறைக் கதவுகளின் கீழ்ப்பகுதியினூடாக உணவு வேகமாகப் பரிமாறப்பட்டதன் காரணமாக அந்தச் சமயத்தில் என்னால் அவர்களைப் பார்க்க முடியவில்லை. என்றபோதிலும் என் மனதில் எனக்குத் தோன்றிய முதல் எண்ணம், ‘ஏதோ ஒரு குற்றச் செயலுக்கு இவர்கள் சாட்சிகளென்றால், இவர்கள் ஏன் சிறையில் இருக்கிறார்கள்?’ என்பதே. உண்மையில் அவர்கள் யெகோவாவின் சாட்சிகள், மனச்சாட்சியின் காரணமாக போரை எதிர்ப்பவர்களாக இருந்தார்கள்.
சில நாட்களுக்குப் பின்பு, அவர்களுடைய அறைகளைச் சுத்தம் செய்துகொண்டிருந்தபோது என்னோடு வேலை செய்துகொண்டிருந்தவன், பிரெஞ்சு மொழியில் நீல நிற அட்டையுடைய ஒரு புத்தகத்தைக் கண்டான். சாட்சிகள் வேறு அறைகளுக்கு இடம் மாற்றம் செய்யப்பட்டிருந்தார்கள். எவரோ ஒருவர் இதைவிட்டுச் சென்றிருக்க வேண்டும். அதை அவன் என்னிடம் கொடுத்தான். நான் அதை என்னுடைய உடைமைகளோடு சேர்த்து வைத்துக்கொண்டேன். பின்னால், சலிப்பாகவும் சோர்வாகவும் இருந்த ஒரு நாள், நான் அதை வாசிக்க ஆரம்பித்தேன். அது “நித்திய ஜீவனுக்கு வழிநடத்துகிற சத்தியம்” என்ற புத்தகமாகும். இரண்டாவது அதிகாரத்தைப் பாதி வாசித்துக் கொண்டிருந்தபோது எனக்கு களைப்பாக இருந்தது. என்றாலும் அதைக் கீழே வைப்பதற்கு முன்பாக அதன் பக்கங்களைப் திருப்பிப் பார்த்தேன். பக்கம் 95-லுள்ள படம் என்னுடைய கவனத்தைக் கவர்ந்தது: “1914” “சந்ததி” மற்றும் “முடிவு”. என்னுடைய ஆவலை இது தூண்டிட நான் முழு அதிகாரத்தையும் வாசித்தேன்.
பின்னால் நான் சாட்சிகளைத் தேடி நூலகத்துக்குச் சென்றேன். அவர்களில் ஒருவரிடம் “இந்த 1914-ஐப் பற்றி உங்கள் பைபிளிலிருந்து எனக்குக் காண்பியுங்கள்” என்று கேட்டேன். சாட்சி சற்று ஆச்சரியத்துடன், “முதலில் இந்த மற்றொரு புத்தகத்தை வாசியுங்கள், அப்பொழுது பதிலை நீங்களே கண்டுபிடித்துவிடலாம்” என்று சொல்லி “உம்முடைய சித்தம் பூமியில் செய்யப்படுவதாக” என்ற புத்தகத்தை என்னிடம் கொடுத்தார்.
அடுத்த நாள் உடற்பயிற்சி நேரத்தின்போது அதிகமானத் தகவலை அவர்களிடம் விசாரித்துக் கேட்டேன். ஒரு பைபிள் படிப்பு ஆரம்பிக்கப்பட்டு தினந்தோறும் நடத்தப்பட்டது! என்னுடைய கேள்விகளுக்கு முடிவே இருக்கவில்லை: “சுதாட்டத்தைப் பற்றி என்ன?” என்று கேட்டேன். “அது கிறிஸ்தவ குணங்களாக இல்லாத பேராசையையும் துர்இச்சையையும் உட்படுத்துகிறது” என்பதே பதிலாக இருந்தது. (கொலோசெயர் 3:5) இப்படியாகப் பழக்கவழக்கங்கள், ஒழுங்கங்கள் மற்றும் கோட்பாடுகளைப் பற்றிய பல கேள்விகளைக் கேட்டுக் கொண்டே இருந்தேன். ஒவ்வொரு பதிலுக்கும் பைபிள் ஆதாரமிருந்தது.
என்னைக் கட்டிப் போட்டிருந்த கயிறுகளையும் சங்கிலிகளையும் நான் அவிழ்த்துக்கொள்வது போலவும் என்னுடைய பெரும்பகுதியான வாழ்க்கையை நெருக்கிக் கொண்டிருந்த ஒரு வார்ப்பிலிருந்து நான் தப்பித்துக் கொண்டிருப்பது போலவும் உணர்ந்தேன். சிறைச்சாலை சுவர்கள் இனிமேலும் என் மீது இல்லாததுபோல எனக்குத் தோன்றியது. அந்தப் பைபிள் சத்தியங்கள் புதிய ஒரு அனுபவ எல்லையை எனக்குத் திறந்து வைத்தது. இன்றுள்ள “காரிய ஒழுங்கான” மனித சமுதாயத்தினுடைய இடத்தை கடவுளுடைய நீதியையும் நியாயத்தையும் நேசிக்கும் ஒரு புதிய சமுதாயம் எடுத்துக்கொள்ளும் என்பதை நான் கற்றறிந்தேன். என்னுடைய ஆள்தன்மை மாறியது. சிறைச்சாலையில் நான் சுதந்திரமாக இருப்பதை உணர ஆரம்பித்தேன்!—மத்தேயு 24:3; 2 பேதுரு 3:13.
அறைக்கு அறை பிரசங்க வேலை
மதம் மாற்றுவது சிறைச்சாலையில் தடை செய்யப்பட்டிருந்தது. ஆனால் சிறையின் அறைகளில் உணவு பரிமாற எனக்கு அதிகாரமளிக்கப்பட்டிருந்தது. நான் அனுபவித்து வந்த அதே சுதந்திர உணர்வை மற்றவர்களாடு பகிர்ந்துகொள்ள வேண்டும் என்ற தூண்டுதலை நான் உணர்ந்தேன். (யோவான் 8:32) ஆகவே நான் தரையைச் சுத்தம் செய்து கொண்டிருந்தாலும், உணவு பரிமாறினாலும், கனமான உலோகக் கதவுகளின் கீழேப் பத்திரிக்கைகளை உள்ளே போட்டுவந்தேன். என்ன பத்திரிக்கைகளை நான் விட்டு வந்திருக்கிறேன் என்பதை நினைவில் கொள்ள நான் அறைக்கு-அறை பதிவுச் சீட்டு ஒன்றையும் வைத்திருந்தேன். மகிழ்ச்சியான நாட்கள் ஆரம்பமாகிவிட்டன.
அந்தச் சிறையிலிருந்து, பாரிஸிலுள்ள ஒன்று உட்பட பல்வேறு சிறைகளுக்கு எனக்கு மாற்றலானது. நான் எந்த அளவுக்கு ஆபத்தானவன் என்பதைத் தீர்மானிக்க கொஞ்சக் காலத்துக்குக் கண்காணிப்பின்கீழ் வைக்கப்பட்டேன். சிறைச்சாலையில் மாற்றத்தை நான் எதிர்பார்த்துக் கொண்டிருந்ததன் காரணமாக, பிரான்ஸுக்கு தென்மேற்கே ஈஸெஸுக்கு அனுப்பப்படும்படி விண்ணப்பித்தேன். அங்கு சாட்சிகள் இருப்பதாக எனக்குச் சொல்லப்பட்டிருந்தது.
ஆம், அங்கே ஒரு சகோதரர் இருந்தார். ஆனால் அந்தச் சிறையில் நான் இருந்த மூன்று வருடங்களின்போதும் நாங்கள் ஒருவரையொருவர் சந்திக்கவே இல்லை. நான் செல்ல அனுமதி இல்லாத ஒரு பகுதியில் அவர் இருந்தார். என்றாலும் நான் என்னுடைய நடவடிக்கைகளை மிகச் சிறப்பான வழியில் ஒழுங்குபடுத்தி அமைத்துக்கொண்டேன். சிறையில் பத்திரிக்கைகளை விநியோகம் செய்யவும் அநேக பைபிள் படிப்புகளைத் துவங்கவும் ஆரம்பித்தேன். ஒவ்வொரு ஞாயிறும் அங்கிருந்த இரு கைதிகளோடு காவற்கோபுரம் படிப்பையும்கூட என்னால் நடத்த முடிந்தது. கடைசியாக, எனக்கு மூன்று பைபிள் படிப்புகள், ஒன்று பிரான்ஸ் நாட்டவனோடும் ஒன்று ஸ்பய்ன் நாட்டவனாடும் மற்றொன்று மொராக்கோ நாட்டவனோடும் இருந்தன.
சிறைச்சாலையில் நடுநிலைமைப் பரீட்சை
எந்த ஒரு சிறைச்சாலையிலும் ஒருமைப்பாட்டுணர்ச்சி கைதிகளுடைய நெறிமுறையின் பாகமாக இருக்கிறது. ஒவ்வொருவரும் அவருடைய கடந்தகால வாழ்க்கை, இனம் மற்றும் தேசம் ஆகியவற்றை மறந்து, ஒவ்வொரு கைதியும் ஒரே ‘நச்சுக் கொடி’யாகிய சிறையில் பொதுவான ஒரு ‘தெப்பூழ்க் கொடி’யால் பிணைக்கப்பட்டிருப்பதாக உணரும் சில சமயங்கள் உண்டு. ஒருவர் குற்றம் புரிவதன் மூலமாக, கைதிகள் அணியில் சேர்ந்துகொள்கிறார். பொதுவாயுள்ள இந்த அக்கறை—உங்கள் அறைக்கு தீ வைப்பது, வலியத் தாக்குவது மற்றும் வேலை நிறுத்தம் செய்வது போன்ற சிறைச்சாலைக் கலவரங்களில் பெரும்பான்மையினர் விரும்பும் சமயத்தில் பங்குகொள்வதை இது வற்புறுத்துகிறது. என்றாலும் இப்பொழுது அந்த “அணி”யிலிருந்து நான் என்னை விலக்கிக் கொண்டேன். நான் நடுநிலைமையைக் காத்துக்கொண்டு மற்ற கைதிகளின் நடவடிக்கைகளில் ஈடுபடாதிருக்க வேண்டும்.
என்னுடைய நடுநிலைமையின் காரணமாக நான் பழிவாங்கப்பட்டேன். மூன்று தடவைகள் என்னை அடித்துவிட்டார்கள். ஒரு முறை ஒரு வாளித் தண்ணீர் என் தலையின் மீது ஊற்றப்பட்டது. என்னைக் கொல்லப் போவதாக மிரட்டல்கள் வந்தன. என்றபோதிலும் இது எனக்கு ஆச்சரியமாக இருந்தது. ஏனென்றால் நான் எதிர்பார்த்ததில் இது மிக குறைவானதாக இருந்தது. மற்றவர்கள் புரட்சிகளில் கலந்துகொள்ள மறுத்ததற்காக கத்தியால் குத்தப்பட்டும் மிக மோசமாக அடிக்கப்பட்டுமிருக்கிறார்கள். அப்படியென்றால் நான் எவ்விதமாக சுலபமாகத் தப்பித்துக்கொண்டு வந்தேன்? காலம் சென்றபோது எனக்குப் பாதுகாவலர் ஒருவர் இருந்தது எனக்குத் தெரியவந்தது. அது எப்படி?
பாரிஸிலிருந்து ஈஸெஸ் சிறைக்கு நான் மாற்றப்பட்டபோது, அங்கே மற்றொரு கைதிக்கு நான் சாட்சி கொடுத்தேன். அவன் அதிக செல்வாக்குள்ள ஒரு கைதி, அதிகாரத்தின்மீது பகைமைக் கொண்டு பெருங்குற்றமிழத்தவன். நாங்கள் ஒரு பைபிள் படிப்பை ஆரம்பித்தோம். ராஜ்ய செய்தி அவனுடைய மனதை வெகுவாகக் கவர்ந்தபோதிலும் அவனுடைய வாழ்க்கையை மாற்றிக்கொள்ள அது போதுமானதாக அவனுக்கு இல்லை. படிப்பை நிறுத்திவிட்டான். ஆனாலும் அவனே எனக்குப் பாதுகாவலனாக ஆனான்! கைதிகள் ஆர்பாட்டம் செய்யத் தீர்மானித்தபோதெல்லாம் எனக்காக அவன் குறுக்கிட்டு, என்னை மாத்திரம் விட்டுவிடும்படியாக எச்சரித்தான். ஆனால் அதன் பிறகு அவன் வேறு ஒரு சிறைச்சாலைக்கு மாற்றப்பட்டன்.
ஏறக்குறைய இந்தச் சமயத்தில் மற்றொரு ஆர்ப்பட்டம் ஏற்பாடு செய்யப்பட்டது. அவர்கள் சிறைச்சாலைக்குத் தீ வைக்கத் திட்டமிட்டார்கள். பழிவாங்கும் எந்தச் செயலையும் தவிர்ப்பதற்காக தனியறையில் அடைத்து வைக்கப்படும்படியாக நான் கேட்டுக் கொண்டேன். தனிக் காவலில் நான் ஒன்பது நாட்களைக் கடத்திவிட்டேன். பத்தாவது நாள் ஒரு கலவரம் ஏற்பட்டு தீ வைக்கப்படுவதில் அது முடிவடைந்தது. இதனால் ஏற்பட்ட நாசம் முழுமையாக இருந்ததால் பாதுகாப்புப் படையினர் குறுக்கிட வேண்டியதாயிற்று. அதிர்ஷ்டவசமாக எனக்கு எந்தவிதக் காயமும் ஏற்படவில்லை
இவை அனைத்தின் மத்தியிலும், சிறைச்சாலையினுள் பிரசங்க வேலையை ஒழுங்குபடுத்திச் செய்ய முடிந்ததே எனக்கு மிகவும் ஆச்சரியமாக இருந்தது. மதம் மாற்றுவது தடை செய்யப்பட்டிருந்தபோதிலும், சிறை நிர்வாகி என் பக்கமாக இருந்து, “இந்தக் கருத்துக்கள் எவருக்கும் தீங்கிழைக்க முடியாது” என்று சொன்னார். ஒவ்வொரு பகுதியிலும் இருந்த நம்பத்தக்க கைதிகளிடம் பேசி, நான் தட்டச்சு செய்திருந்த துண்டுப் பிரதிகளை அவர்கள் விநியோகிக்கும்படிச் செய்தேன். சிறையில் என்னால் போக முடியாத இடங்களுக்கு அவர்களால் போக முடிந்தது. அவர்களின் இந்த உதவிக்காக நான் அவர்களுக்குக் காப்பி வாங்கிக் கொடுத்துக் கடனைத் தீர்த்துக் கொண்டேன்.
முழுக்காட்டுதலும் நன்மை செய்வதற்காக விடுதலை பெற்றதும்
உள்ளூர் பிரெஞ்சு மொழி சபையிலுள்ள சகோதரர்கள் என்னை சந்தித்தார்கள். கடைசியாக முழுக்காட்டுதல் பெற விரும்பும் என்னுடைய ஆசையை சகோதரர்களிடம் தெரிவித்தேன். என்றாலும் இதை எவ்விதமாகச் செய்வது? சிறைச்சாலையினுள் இது சாத்தியமில்லை. இதற்காக வெளியே செல்ல என்னை அவர்கள் அனுமதிப்பார்களா? இந்த எண்ணம் வெறும் கனவாகத் தோன்றியது. ரோடஸ் நகரில் சிறைச்சாலைக்கு வெகு அருகாமையிலேயே ஒரு வட்டார மாநாடு நடக்கவிருந்தது. இதற்குச் செல்ல நான் துணிந்து, அனுமதி கேட்டேன்.
நான் எதிர்பார்த்தற்கு எதிர்மாறாக, எனக்கு மூன்று நாட்கள் விடுப்பு தரப்பட்டது. உள்ளூர் சபையிலுள்ள சகோதரர்கள் மட்டுமே என்னை அழைத்துச்சொல்ல வேண்டும் என்று சொல்லப்பட்டேன். சிறைச்சாலை அதிகாரிகளில் சிலர் இந்தத் தீர்மானத்தை எதிர்த்தனர். நான் திரும்பி வரமாட்டேன் என அவர்கள் உறுதியாக நம்பினார்கள். ஆனால் அனுமதி ஏற்கெனவே கொடுக்கப்பட்டாயிற்று.
1975, மே 18-ம் தேதி தண்ணீர் முழுக்காட்டுதலின் மூலம் என்னுடைய ஒப்புக்கொடுத்தலை நான் அடையாளப்படுத்தினேன். நன்மை செய்வதற்காக நான் விடுவிக்கப்பட்டிருந்தேன்! நிச்சயமாகவே நான் சிறைக்குத் திரும்பியபோது எனக்கு அனுமதி அளித்ததற்கு எதிர்ப்புத் தெரிவித்தவர்கள் ஆச்சரியப்பட்டார்கள். இதற்குப் பிறகு இரண்டு தடவைகள், ஒவ்வொரு முறையும் ஆறு நாட்கள் வரையாக வெளியே செல்ல நான் அனுமதிக்கப்பட்டிருந்தேன். பிரசங்கிப்பதற்காகவும் சகோதரர்களைச் சந்திப்பதற்காகவும் இந்த நாட்களை நான் பயன்படுத்திக் கொண்டிருந்தேன். என்னே ஒரு மெய்யான சுதந்திர உணர்வு!
கடைசியாக, 1976 ஜனவரியில், நன்நடத்தைக்காக மூன்று ஆண்டுகள் தண்டனை குறைக்கப்பட்டு நான் விடுதலையளிக்கப்பட்டேன். நான் பிரான்ஸ்-ஸ்பேய்ன் எல்லையைக் கடந்து சென்றேன். என்னுடைய வாழ்க்கையில் மிகவும் கடுமையான ஐந்து ஆண்டுகள் செலவழிந்துவிட்டன. பார்செலோனாவுக்கு வந்தபோது உடனடியாக நான் யெகோவாவின் சாட்சிகளோடுத் தொடர்புகொண்டேன். இயல்பான வாழ்க்கைக்கு நான் கொண்டிருந்தத் தாகம்தானே என்னே!
உண்மையிலேயே சீர்படுவதற்குரிய வழி
இப்பொழுது எனக்கு விவாகமாகி, எங்களுக்கு இரண்டு மகன்களும் ஒரு மகளும் இருக்கிறார்கள். என்னுடைய இளமைப் பருவத்தில் நான் அனுபவிக்காத ஐக்கியப்பட்ட மகிழ்ச்சியான குடும்ப வாழ்க்கையை இப்பொழுது நான் அனுபவித்து சந்தோஷமடைகிறன். யெகோவா என்னிடமாகத் தயை பெருத்திருப்பதை நான் காண்கிறேன். ‘அவர் நம்முடைய பாவங்களுக்குத் தக்கதாக நமக்குச் செய்யாமலும் நம்முடைய அக்கிரமங்களுக்குத் தக்கதாக நமக்குச் சரிக்கட்டாமலும் இருக்கிறார். எனென்றால் அவருடைய கிருபை அவ்வளவு பெரிதாயிருக்கிறது’ என்பதை சங்கீதம் 103 வசனம் 8-14-ல் நான் வாசிக்கும்போது, அன்புள்ள ஒரு கடவுளால் மாத்திரமே இந்த ஊழல் நிறைந்த காரிய ஒழுங்கை மாற்றி அமைக்க முடியும் என்பதை நான் புரிந்துகொள்கிறேன்.
சீர்த்திருத்துவதற்குச் சிறைச்சாலைக்கு வல்லமை இல்லை என்பதும், அவை ஒருபோதும் அவ்விதமாகச் செய்யாது என்பதுமே என்னுடைய அனுபவத்திலிருந்து தெளிவாகத் தெரிகிறது. அந்த வல்லமையானது மனதை ஏவுகின்ற உள்ளார்ந்த வலிமையிலிருந்தும் தூண்டுதலிலிருந்துமே வர வேண்டும். (எபேசியர் 4:23) சிறைச்சாலையிலிருக்கையில், இன்னும் தங்களை அதிகமாக இழிவுபடுத்திக் கொண்டு விடுவிக்கப்படுகையில், மாற்றமுடியாத வண்ணம் தார்மீக ரீதியிலும், உணர்ச்சிப் பூர்வமாகவும் பாதிக்கப்படுகிறவர்கள் அநேகர் இருக்கிறார்கள்.
சந்தோஷத்திற்குரிய விதமாக என்னுடைய விஷயத்தில் நான் விடுதலையாவதற்கு வெகு முன்பாகவே வெளியேறமுடியாத அந்த சிறைச்சாலை மதில்கள் நொறுங்கிவிட்டன. கடவுளுடைய வார்த்தையின் சத்தியத்தை அடைத்துவைக்கக் கூடியது எதுவுமில்லை. அதைச் சிறைபடுத்தவும் முடியாது. அது எனக்குத் தெரியும். ஏனென்றால் சிறைச்சாலையிலிருக்கையிலேயே நான் விடுதலையைப் பெற்றுக்கொண்டேன்!—என்ரிக் பார்பர் கொன்சாலஸ் கூறியது. (g87 9⁄22)
[பக்கம் 25-ன் படங்கள்]
முன்னாள் குற்றவாளி என்ரிக் பார்பர் கொன்சாலஸ் தன் மனைவியோடும் பிள்ளைகளோடும் பைபிளை படிக்கிறார்