“யெகோவாவின் சாட்சிகளைப் பற்றிய எனது அபிப்பிராயத்தை மாற்றிவிட்டீர்கள்”
அக்டோபர் 15, 1998, தேதியிட்ட எமது காவற்கோபுரம் இதழில், யெகோவாவின் சாட்சிகளின் ஊழியத்தைப்பற்றி ஒரு அறிக்கை செய்யப்பட்டது. அதை படித்த பிறகு, போலாந்து நாட்டிலுள்ள ஒரு சிறை அதிகாரியின் வார்த்தைகள்தான் இவை. போலாந்தைச் சேர்ந்த வாவூப் நகரத்திலுள்ள சிறைச்சாலையில் இருக்கும் கைதிகள் மத்தியில், யெகோவாவின் சாட்சிகள் சாதித்த வெற்றியை “கல்நெஞ்சம் கரைகையில்” என்ற கட்டுரை சிறப்பித்துக்காட்டியது.
மேற்குறிப்பிடப்பட்ட காவற்கோபுர பத்திரிகை பொதுமக்களுக்கு வெளியிடப்படுவதற்கு முன்பாக, ஒரு விசேஷ கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டது. வாவூப் சிறைச்சாலையில் இருக்கும் கைதிகளோடு செப்டம்பர் 13, 1998-ல் அக்கூட்டம் நடத்தப்பட்டது. உள்ளூர் சாட்சிகளும் கைதிகளாக இருக்கும் முழுக்காட்டப்பட்டவர்களும் ஆர்வமுள்ளவர்களும் சிறைச்சாலையின் அதிகாரிகளும் அக்கூட்டத்திற்கு அழைக்கப்பட்டிருந்தனர். பின்வருபவை அங்கு கூடியிருந்தவர்கள் உதிர்த்த சில முத்துக்களாகும்.
கடந்த ஐந்து வருடங்களுக்கு முன்பாக சிறைச்சாலையிலேயே முழுக்காட்டப்பட்ட யெகோவாவின் சாட்சியாகிய யெர்சி சொன்னார்: “எங்களுக்கு உதவுவதற்காக அருகாமையிலுள்ள சபைகளைச் சேர்ந்த சகோதர்கள் எவ்வளவு பாடுபட்டிருக்கின்றனர் என்பதை நான் இன்று படிக்கும்போது அதிகமான மகிழ்ச்சியில் பூரித்துப்போகிறேன். முன்னேறுவதற்கு நான் முயற்சித்துக்கொண்டே இருக்கிறேன். யெகோவா எவ்வாறு என்னை வடிவமைக்கிறார் என்பதை என்னால் உணர்ந்துகொள்ள முடிகிறது.”
சிறைச்சாலையில் செய்யப்படும் சாட்சிகளின் வேலையைப்பற்றி மற்றொரு கைதியாகிய ஜெஸ்வாப் சொன்னதை பாருங்களேன்: “தற்போது நான்கு கைதிகள் முழுக்காட்டுதலுக்கு தயாராகி வருகிறார்கள். நமது மன்றத்தில் நடைபெறும் கூட்டங்களில் ஆர்வமுள்ள நபர்கள் தொடர்ந்து கலந்துகொள்ளுகிறார்கள். இந்த ‘பிராந்தியத்தில்’ எங்களுடைய நடவடிக்கையை இன்னும் அதிகமாக தொடருவதற்கு இந்தக் கட்டுரை பலமான உந்துவிப்பை கொடுக்கிறது.” ஜெஸ்வாப் இன்னும் 19 வருடங்கள் சிறையில் தண்டனையை அனுபவிக்க வேண்டும் என்ற நிலையிருக்கும்போதும் என்னே ஒரு நம்பிக்கையான மனநிலை!
வாவூப் சிறைச்சாலையைப் பற்றிய கட்டுரையை படித்தபிறகு சிறை அதிகாரி ஒருவர் சொன்னார்: “எங்களுக்கு விசேஷ புகழ்மாலை சூட்டப்பட்டது. எங்களுடைய சிறைச்சாலை இப்படிப்பட்ட சாதகமான விளம்பரத்தை உலகம் முழுவதுமாக 130 மொழிகளில் பெறும் என்று நான் நினைத்துக்கூட பார்க்கவில்லை. நான் உங்களை நேசிக்கிறேன். குற்றவாளிகளின் சீர்திருத்த வாழ்விற்காக நீங்கள் எடுக்கும் முயற்சிகளை நான் பாராட்டுகிறேன்.” மற்றொரு அதிகாரி, “யெகோவாவின் சாட்சிகளைப் பற்றிய எனது அபிப்பிராயத்தை மாற்றிவிட்டீர்கள். நீங்கள் மதவெறியர்கள் என்பதாக உங்களைப்பற்றி நான் முன்பு நினைத்துக்கொண்டிருந்தேன். ஆனால் இப்பொழுதோ நீங்கள் சரியான நியமங்களைக் கடைப்பிடிக்கும் ஆட்கள் என்பதை புரிந்துகொண்டேன்.”
வாவூப் சிறைச்சாலையின் டைரக்டர் மாரிக் ஜியோஸ் புன்முறுவலோடு சொன்னார்: “நீங்கள் இங்கு முதலாவதாக வந்தபோது, பெரிதாக எதையும் சாதிக்கப்போவதில்லை என்பதாக நினைத்தோம். பைபிள் மூலமாக குற்றவாளிகளின் மறுவாழ்வுக்காக ஆர்வமுடைய மற்றொரு மதம் என்பதாகத்தான் உங்களை நினைத்தோம். ஆரம்பத்தில் நீங்கள் கண்டடைந்த வெற்றியை பார்க்கும்போது நாங்கள் உங்களுக்கு முழு ஒத்துழைப்பு தர தீர்மானித்துவிட்டோம். கொஞ்சம்கூட களைப்படையாமல் நீங்கள் கடந்த ஒன்பது வருடங்களாக இங்கு வந்துகொண்டே இருக்கிறீர்கள். இதுவரையாக நீங்கள் சாதித்த அனைத்திற்கும் என்னுடைய மனமார்ந்த பாராட்டுதல்களை உரித்தாக்குகிறேன்.”
வாவூப் சிறைச்சாலையில் இருக்கும் பொதுவான கைதிகள் அந்தக்கட்டுரையை எவ்வாறு ஏற்றுக்கொண்டார்கள்? அங்கிருந்த சிறைக்கைதிகள் அவ்வளவு ஆர்வத்தோடு அந்த இதழை படித்ததால், சாட்சிகள் கொண்டுபோன எல்லா பத்திரிகையும் தீர்ந்துபோனது என்றால் பார்த்துக்கொள்ளுங்களேன். சிறை அதிகாரிகளும் கூடுதலாக 40 பத்திரிகைகள் தங்களுக்கு வேண்டுமென்று ஆர்வத்தோடு கேட்டார்கள். அதிகரித்திருக்கும் இந்த தேவையை நிவர்த்தி செய்வதற்காக, உள்ளூர் சபைகள் கூடுதலாக 100 பத்திரிகைகளை சிறையிலுள்ள சகோதரர்களுக்கு கொடுத்து உதவின. அதேசமயம் சிறையில் நடைபெறும் கூட்டங்களுக்கு ஆஜராவோரின் எண்ணிக்கையும் மடமட-வென்று அதிகரித்துவிட்டது.
பியோட் ஹோடுன் என்ற பெயருடைய சிறை அதிகாரி யெகோவாவின் சாட்சிகளோடு நெருக்கமாக ஒத்துழைத்தார். அவர் சொன்னார்: “சிறைச்சாலையிலுள்ள எல்லா இடங்களிலும் இருக்கும் காட்சிப் பொருள்களை வைக்கும் பெட்டியில் இந்தக் கட்டுரையை பார்வைக்கு வைப்பதற்கு தீர்மானித்திருக்கிறோம். இந்த சிறைச்சாலையில் இன்னும் உங்களோடு பைபிளை படிக்காத எல்லா கைதிகளும் இந்த பத்திரிகையை படிப்பார்கள் என்பதாக நாங்கள் நம்புகிறோம்.”
சாட்சிகளின் அருமையான முன்மாதிரியும் பிரசங்கிக்க வேண்டும் என்ற திடத்தீர்மானமும் தொடர்ந்து அநேக நல்ல பயன்களை ஏற்படுத்தியிருக்கின்றன. அந்த சிறைச்சாலையில் முழுக்காட்டுதல் பெறுமளவுக்கு முன்னேற்றம் செய்த 15 கைதிகளோடு சிறை அதிகாரிகள் 2 பேரும் தங்களுடைய வாழ்க்கையை யெகோவாவுக்கு ஒப்புக்கொடுத்திருக்கின்றனர். மற்றொரு சிறை அதிகாரியும் ஒரு பைபிள் படிப்பிற்காக கேட்டிருக்கிறார். இருப்பினும் வாவூப் சிறைச்சாலையில் பிரசங்கித்ததால் தங்களுக்கு கிடைத்த வெற்றிக்கான எல்லா புகழையும் யெகோவா தேவனுக்கே சகோதரர்கள் அர்ப்பணிக்கிறார்கள்.—1 கொரிந்தியர் 3:6, 7.
[பக்கம் 28-ன் படம்]
ஒரு சிறை கைதியும் மூன்று சாட்சிகளும் சிறைச்சாலையிலுள்ள லெக்சர் ஹாலில் பத்திரிகைகளை அளிக்கிறார்கள்