ராஜ்ய அறிவிப்பாளர் அறிக்கை
ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் ராஜ்ய விதையைப் பரவச் செய்தல்
கடவுளுடைய வார்த்தையாகிய பைபிள் சுறுசுறுப்பான உழைப்பை ஊக்குவிக்கிறது. அரசனாகிய சாலொமோன் இவ்வாறு சொன்னார்: “காலையிலே உன் விதையை விதை; மாலையிலே உன் கையை நெகிழவிடாதே; அதுவோ, இதுவோ, எது வாய்க்குமோ என்றும், இரண்டும் சரியாய்ப் பயன்படுமோ என்றும் நீ அறியாயே.”—பிரசங்கி 11:6.
பொருத்தமான ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும், யெகோவாவின் சாட்சிகள், கடவுளுடைய ராஜ்யத்தைப் பற்றிய நற்செய்தியைப் பிரசங்கிப்பதன்மூலம் “விதையை” விதைக்கிறார்கள். 230-க்கு மேற்பட்ட நாடுகளிலும் தீவுகளிலும் அவர்கள், தொடர்ந்து, “இடைவிடாமல் உபதேசஞ்செய்து கிறிஸ்துவாகிய இயேசுவை நற்செய்தியாகப் பிரசங்கித்து” வருகிறார்கள். (அப்போஸ்தலர் 5:42) பிரசங்க ஊழியத்தில் யெகோவாவின் சாட்சிகள் எவ்வாறு ‘தங்கள் கைகளை நெகிழவிடுகிறதில்லை’ என்பதைப் பின்வரும் அனுபவங்கள் விளக்கிக் காட்டுகின்றன.
◻ வெர்தி முனை குடியரசில், யெகோவாவின் சாட்சிகளில் ஒருவரான ஓர் பெண்மணி, வெளி ஊழியத்தில் ஈடுபட்டிருக்கையில் ஒரு சிறைச்சாலை வழியாக நடந்து சென்றுகொண்டிருந்தார்கள். அந்தச் சிறைச்சாலையின் முற்றத்தில், கைதிகள் சிலர் ஒரு மரத்தில் ஏறி அமர்ந்திருந்தனர். கீழே அந்தச் சாட்சியைக் கண்டு, பத்திரிகைகள் சில தரும்படி சத்தமிட்டுக் கேட்டனர். இந்தச் சாட்சி, காவற்கோபுரம், விழித்தெழு! பத்திரிகைகளின் பல பிரதிகளை ஒரு கல்லோடு சேர்த்துக் கட்டி, சிறைச்சாலையின் மதில்களுக்கு அப்பால் விழும்படி அவற்றை எறிந்தார்கள். அக்கறை காட்டப்பட்டதின் முதல் பலனாக, 12 பைபிள் படிப்புகள் தொடங்கப்பட்டன. அந்தக் கைதிகளில் மூவர் தங்கள் வாழ்க்கையை யெகோவாவுக்கு ஒப்புக்கொடுத்து, தண்ணீர் முழுக்காட்டுக்குத் தங்களை உட்படுத்தியிருக்கின்றனர். அந்தக் கைதிகளில் ஒருவர், இப்போது ஓர் ஆண்டுக்கு மேல், முழுநேர பிரசங்கியாக, அல்லது பயனியராகச் சேவித்துக்கொண்டிருக்கிறார். எனினும், சிறைச்சாலையில் வெளி ஊழிய நடவடிக்கைகளை அவர்கள் எவ்வாறு நிறைவேற்றுகிறார்கள்? முதலாவதாக அந்தச் சிறைச்சாலை பிராந்தியங்களாகப் பிரித்துக்கொள்ளப்படுகிறது. பின்பு அந்தப் பிராந்தியம் அந்த மூன்று சாட்சிகளுக்குள் பகிர்ந்துகொள்ளப்பட்டு அறையறையாகச் சென்று ஊழியம் செய்யப்படுகிறது. உலகைச் சுற்றிலும் யெகோவாவின் சாட்சிகள் மறுசந்திப்பு செய்யும் அதே வகையில் இந்த ராஜ்ய அறிவிப்பாளர்கள், அக்கறை காட்டுவோரைத் திரும்பச் சந்திக்கிறார்கள். எனினும் ஒரு வேறுபாடு என்னவென்றால், பைபிள் படிப்புகள் அடிக்கடி நடத்தப்படுகின்றன. வாரத்தில் ஒருமுறை அல்லது இருமுறை மாத்திரமே ஒரு மணிநேரம்போல் பைபிள் படிப்பு நடத்துவதற்குப் பதிலாக, சில கைதிகள் ஒவ்வொரு நாளும் படிப்பு நடத்துகிறார்கள்! கூடுதலாக, சபை கூட்டங்கள் எல்லாவற்றையும் சிறைச்சாலைக்குள் நடத்த சிறைச்சாலையின் பொது நிர்வாகஸ்தர் சாட்சிகளுக்கு அனுமதி அளித்திருக்கிறார்.
◻ போர்த்துகலில் ஒரு பெண்மணி, தன் பாட்டியம்மாள் இறந்தபோது காவற்கோபுர சங்க பிரசுரங்கள் பலவற்றைப் பரம்பரை சொத்தாகச் சுதந்தரித்தார்கள். அவர்கள் யெகோவாவின் சாட்சிகளில் ஒருவராக இல்லாததனால், அந்தப் புத்தகங்களை வைத்திருப்பதில் அவர்களுக்கு அக்கறை இருக்கவில்லை. எனினும், அவற்றை அழித்துப்போடவும் அவர்கள் விரும்பவில்லை. ஒருநாள் வீடுவீடாக செய்யும் ஊழியத்தில் அவர்களைச் சந்தித்த யெகோவாவின் சாட்சிகளில் ஒருவரிடம் அந்தப் புத்தகத் தொகுப்பைப் பற்றி சொன்னார்கள். அந்தப் புத்தகத் தொகுப்பின் உண்மையான மதிப்பைப் பற்றி அவர்கள் ஏதாவது அறிந்திருக்கிறார்களா என்று அந்தச் சாட்சி கேட்டார்கள். அந்த பெண்மணி இவ்வாறு பதில் சொன்னார்கள்: “உண்மையில், அவற்றின் மெய்யான மதிப்பு எனக்குத் தெரியாது, ஆனால் அதை நான் எவ்வாறு கண்டுபிடிப்பது?” இந்தப் பெண்மணி பைபிள் படிப்புக்குச் சம்மதித்தார்கள், சீக்கிரத்தில் தன் பாட்டியம்மாளின் புத்தகத் தொகுப்பை அரும் செல்வமென மதிக்கத்தொடங்கினார்கள். இப்போது அவர்களும் யெகோவாவின் முழுக்காட்டப்பட்ட ஒரு சாட்சியாக இருக்கிறார்கள். மேலும், அவர்களுடைய மகளும் குடும்பத்தின் நெருங்கிய நண்பர் ஒருவருங்கூட பைபிள் படித்துவருகிறார்கள். இந்தப் புத்தகத் தொகுப்பு எத்தகைய மதிப்புவாய்ந்த பரம்பரை சொத்தாக நிரூபித்தது!