கேள்விப் பெட்டி
◼ சிறைக் கைதிகளுக்கு சாட்சி கொடுக்கையில் என்ன எச்சரிக்கைகளுக்கு நாம் கவனம் செலுத்த வேண்டும்?
உலகம் முழுவதும் ஏறக்குறைய 80 லட்சம் கைதிகள் இருக்கிறார்கள். அவர்களில் சிலர் நற்செய்தியிடம் ஆர்வம் காட்டுகிறார்கள். (1 தீ. 2:4) ஒரு கிளை அலுவலகம் மாதந்தோறும் கைதிகளிடமிருந்தும் அவர்களுடைய குடும்பத்தாரிடமிருந்தும் சுமார் 1,400 கடிதங்களைப் பெறுகிறது. பிரசுரங்கள் அனுப்பும்படி அல்லது நேரில் வந்து சந்திக்கும்படி அவர்கள் எழுதுகிறார்கள். பலர் உண்மையிலேயே ஆர்வம் காட்டுகிறார்கள். அதே சமயத்தில் சிலரோ கடவுளுடைய ஜனங்களை தங்கள் சுயநலத்துக்கு பயன்படுத்திக் கொள்வதற்காக ஆர்வமுள்ளவர்கள் போல் நடிப்பது தெரிய வந்துள்ளது. ஆகவே, சிறைக் கைதிகளுக்கு சாட்சி கொடுப்பது சம்பந்தமாக பின்வரும் எச்சரிக்கைகளுக்கு நாம் அனைவரும் கவனம் செலுத்த வேண்டும்.
பல சந்தர்ப்பங்களிலும் கடிதம் மூலமாக கைதிகளுக்கு சாட்சி கொடுக்கப்பட்டுள்ளது. ஆண் கைதிகளுக்கு சகோதரிகள் கடிதம் எழுதக் கூடாது. அது ஆன்மீக உதவி அளிப்பதாக இருந்தாலும்கூட எழுதக்கூடாது. தகுதி வாய்ந்த சகோதரர்கள் மட்டுமே அந்தப் பொறுப்பை எடுத்துக்கொள்ள வேண்டும். பைபிள் சத்தியத்தில் நிஜமாகவே ஆர்வம் காட்டுகிற பெண் கைதிகளுக்கு கடிதம் எழுத தகுதி வாய்ந்த சகோதரிகளை நியமிக்கலாம். என்னதான் கேட்டாலும்கூட கைதிகளுக்கு பணமோ பரிசுகளோ அனுப்பி வைக்கக்கூடாது.
கைதி ஒருவர் ஆர்வம் காட்டும்போது, அவருடைய பெயரையும் விலாசத்தையும் அந்த சிறைச்சாலைக்கு அருகிலுள்ள சபைக்கு கொடுக்க வேண்டும். வித்தியாசப்பட்ட சூழ்நிலைகள் எழும்பினால் அவற்றை எப்படி சமாளிக்கலாம் என்பதை அங்குள்ள தகுதி வாய்ந்த சகோதரர்கள் பொதுவாக அறிந்திருப்பார்கள். அருகில் எந்த சபை இருக்கிறதென தெரியாவிட்டால், அத்தகவலை கிளை அலுவலகத்துக்கு அனுப்பி வைக்க வேண்டும்.
நியமிக்கப்பட்ட சகோதரர்கள் கைதிகளோடு சேர்ந்து கூட்டங்களை நடத்துவதில் தவறில்லை; அதன் மூலம் ஒரே சமயத்தில் பலர் பைபிளை படிக்கலாம். ஆனால், கைதிகளோடு பிரஸ்தாபிகள் தாராளமாக கூட்டுறவு கொள்ளும் வகையில் விசேஷ நிகழ்ச்சிகளை சிறைச்சாலைகளில் நடத்தக் கூடாது. அதோடு, பிரஸ்தாபிகள் தங்கள் விருப்பப்படி சிறைச்சாலைக்கு போவதும் கைதிகளோடு நெருக்கமாக பழகுவதும் ஞானமற்ற செயல்.
ஆகவே, சிறைக் கைதிகளிடத்தில் நற்செய்தியை பகிர்ந்துகொள்ளும்போது “சர்ப்பங்களைப்போல வினாவுள்ளவர்களும் புறாக்களைப்போலக் கபடற்றவர்களுமாய்” இருப்போமாக.—மத். 10:16.