உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • g96 6/22 பக். 18-23
  • நான் ஒரு சட்டவிரோதியாய் இருந்தேன்

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • நான் ஒரு சட்டவிரோதியாய் இருந்தேன்
  • விழித்தெழு!—1996
  • துணை தலைப்புகள்
  • இதே தகவல்
  • நான் ஏன் ஒரு சட்டவிரோதியானேன்
  • சட்டவிரோதச் செயல்
  • சிறைவாசமும் தண்டனைத்தீர்ப்பும்
  • பைபிள் சத்தியங்களைக் கற்றல்
  • தனி மதகுருவிடமிருந்து எதிர்ப்பு
  • சிறையில் ஒரு ராஜ்ய மன்றம்
  • சிறையில் முழுக்காட்டப்பட்டேன்
  • சிறையில் சீஷராக்குதல்
  • மிகுந்த மகிழ்ச்சிக்கான வாய்ப்புகள்
  • நீதிக்கான ஒரே நம்பிக்கை
  • பலனுள்ள ஒரு வாழ்வு
  • சிறையில் விடுதலையை நான் பெற்றேன்!
    விழித்தெழு!—1988
  • “யெகோவாவின் சாட்சிகளைப் பற்றிய எனது அபிப்பிராயத்தை மாற்றிவிட்டீர்கள்”
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-1999
  • அன்று கெர்ஜிக்கும் சிங்கம் இன்று சாதுவான ஆட்டுக்குட்டி
    விழித்தெழு!—1999
  • அன்று அரசியல் புரட்சியாளன் இன்று நடுநிலை கிறிஸ்தவன்
    விழித்தெழு!—2002
மேலும் பார்க்க
விழித்தெழு!—1996
g96 6/22 பக். 18-23

நான் ஒரு சட்டவிரோதியாய் இருந்தேன்

அது மே 1, 1947-ல் சிசிலியில் நடந்தது. குழந்தைகளைக் கொண்ட பெண்கள் உள்ளிட்ட சுமார் 3,000 மக்கள், வருடாந்தர தொழிலாளிகள் தினத்தை முன்னிட்டு, ஒரு மலைப்பாதையில் கூடியிருந்தனர். அருகிலிருந்த குன்றுகளில் மறைவாயிருந்த அபாயத்தை அவர்கள் அறியாதிருந்தனர். அதைத் தொடர்ந்து நடந்த பயங்கரமான சம்பவத்தைப் பற்றிய தகவலை ஒருவேளை நீங்கள் வாசித்திருக்கலாம், அல்லது திரைப்படங்களில்கூட பார்த்திருக்கலாம். 11 பேர் கொல்லப்படுவதிலும், 56 பேர் காயமடைவதிலும் விளைவடைந்த அப் படுகொலை போர்ட்டெலா டெலா ஜினேஸ்ட்ரா படுகொலை என்று அழைக்கப்பட்டிருக்கிறது.

அந்தப் பயங்கரமான சம்பவத்தில் நான் பங்கெடுத்திராதபோதிலும், அதற்குப் பொறுப்பாளிகளான தனிநாடு உரிமைகோருபவர்களின் அணியில்தான் இருந்தேன். அவர்களின் தலைவர் ஸால்வாட்டோர் ஜூலியானோ, அவரோடு சேர்ந்துதான் நான் மான்ட்டிலேப்பர் என்ற கிராமத்தில் வளர்ந்துவந்திருந்தேன். அவர் என்னைவிட ஒரே ஒரு வயது பெரியவர். 1942-ல், எனக்கு 19 வயதாயிருந்தபோது, இரண்டாம் உலகப் போரின் சமயத்தில் இராணுவத்தில் சேரும்படி கட்டாயப்படுத்தப்பட்டேன். அவ்வருட ஆரம்பத்தில் வீட்டா மோட்டிஜியைக் காதலித்துத் திருமணம் செய்திருந்தேன். காலப்போக்கில், எங்களுக்கு மூன்று மகன்கள் ஆகிவிட்டனர்; முதல் மகன் 1943-ல் பிறந்தான்.

நான் ஏன் ஒரு சட்டவிரோதியானேன்

இரண்டாம் உலகப் போர் முடிவடைந்த ஆண்டான 1945-ல், வாலண்டியர் ஆர்மி ஃபார் சிசிலியன் இன்டிபென்டென்ஸ் (EVIS) படையின் மேற்குப் பிரிவில் நான் சேர்ந்தேன். இது, மூவ்மென்ட் ஃபார் தி இன்டிபென்டென்ஸ் ஆஃப் சிசிலி (MIS) என்றறியப்பட்ட தனிநாடு உரிமைகோரும் அரசியல் கட்சியின் துணைப்படையாக இருந்தது. ஏற்கெனவே சட்டத்திற்கு அடங்காதவராய் சுற்றித்திரிந்த ஸால்வாட்டோர் ஜூலியானோ, எங்கள் பிரிவுக்குப் பொறுப்பாளராக EVIS மற்றும் MIS-ஐச் சேர்ந்த உயர் அதிகாரிகளால் நியமிக்கப்பட்டிருந்தார்.

சிசிலி தீவுக்காகவும் எங்கள் மக்களுக்காகவும் கொண்டிருந்த அன்பில் நாங்கள் ஒன்றுபட்டிருந்தோம். நாங்கள் அனுபவித்த அநீதிகளுக்காகக் கோபமுற்றிருந்தோம். ஆகவே அமெரிக்க ஐக்கிய மாகாணங்களின் 49-வது மாகாணமாக சிசிலியைச் சேர்த்துக்கொள்ளும்படி விரும்பிய ஜூலியானோ இயக்கத்தின் அணியில் சேர்ந்தேன். இது சாத்தியமென்று நம்புவதற்குக் காரணம் இருந்ததா? நிச்சயமாகவே இருந்தது, ஏனெனில் தாங்கள் அமெரிக்க ஐக்கிய மாகாண அரசுடன் நெருங்கிய உறவை வைத்திருந்ததாகவும், அவ்வாறு சேர்த்துக்கொள்வதற்கு ஐக்கிய மாகாணத்தின் ஜனாதிபதி ஹாரி எஸ். ட்ரூமேன் ஆதரவாக இருந்தார் என்றும் MIS அதிகாரிகள் எங்களுக்கு உறுதியளித்திருந்தனர்.

சட்டவிரோதச் செயல்

ஆட்களைக் கடத்திச்செல்வதும், மீட்புப் பணத்துக்காகப் பிரபலமானவர்களைப் பிடித்துவைத்திருப்பதுமே எங்கள் பிரிவின் முக்கிய வேலையாய் இருந்தது. தேவையான பொருட்களை வாங்குவதற்கு வேண்டிய நிதியை இவ்விதத்தில் நாங்கள் பெற்றோம். “எங்கள் விருந்தாளிகள்” என்று நாங்கள் அழைத்த, கடத்திச் செல்லப்பட்ட எவருக்கும் நாங்கள் எந்தத் தீங்கும் செய்யவில்லை. அவர்களை விடுவிக்கையில், மீட்புப் பணமாக நாங்கள் பெற்றிருந்த செலவீட்டுத் தொகையைத் திரும்பப் பெற்றுக்கொள்வதற்கு ஒரு ரசீதை அவர்களிடம் கொடுத்தோம். நாங்கள் வெற்றியடைந்த பிறகு அவர்கள் பணத்தைத் திரும்பப் பெறுவதற்கு அந்த ரசீதைப் பயன்படுத்திக் கொள்ளும்படி அவர்களிடம் கூறப்பட்டது.

சுமார் 20 ஆட்களைக் கடத்தும் செயல்களிலும், ஒரு தேசிய இராணுவமயமாக்கப்பட்ட காவல் படையாய் இருந்த, காராபின்யேரி படைக் குடியிருப்பின்மீது ஆயுதமணிந்து தாக்குதல் நடத்தியதிலும் நான் பங்கெடுத்தேன். என்றபோதிலும், ஒருவரையும் ஒருபோதும் நான் கொல்லாதிருந்ததைச் சொல்லுவதற்குச் சந்தோஷப்படுகிறேன். தனிநாடு உரிமைகோரி நாங்கள் நடத்திய தாக்குதல்கள் போர்ட்டெலா டெலா ஜினேஸ்ட்ரா கிராமத்தில் நடத்தப்பட்ட மதியற்ற செயலால் உச்சநிலையை அடைந்தன. அது ஜூலியானோ பிரிவைச் சேர்ந்த சுமார் ஒரு டஜன் ஆட்களால் ஏற்பாடு செய்யப்பட்டதாயும், கம்யூனிஸ்ட் கட்சிக்கு எதிராக இயக்கப்பட்டதாயும் இருந்தது.

பாமர மக்களைக் கொல்லுவது—அயலகத்தார் மற்றும் ஆதரவாளர்கள் உள்ளிட்டு—வேண்டுமென்றே செய்யப்படாதபோதிலும், எங்களுக்கு ஆதரவு தெரிவித்தவர்களும் எங்களால் பாதுகாக்கப்பட்டவர்களாய் எண்ணியவர்களும், நாங்கள் அவர்களுக்கு நம்பிக்கைதுரோகம் செய்துவிட்டதாக நினைத்தார்கள். அது முதற்கொண்டு, சட்டவிரோதிகளடங்கிய ஜூலியானோ அணியை தேடிப் பிடிக்கும் செயல் விடாமுயற்சியுடன் நடைபெற்றது. காவல் படைக்கு துப்பு கிடைத்தபிறகு, என் கூட்டாளிகளில் பலர் பிடிபட்டனர். மார்ச் 19, 1950-ல் நான் பிடிபட்டு கைது செய்யப்பட்டேன். அக் கோடைகாலத்தில் ஜூலியானோவும் கொல்லப்பட்டார்.

சிறைவாசமும் தண்டனைத்தீர்ப்பும்

நீதி விசாரணை செய்வதற்காக என்னைப் பிடித்துவைத்திருந்த பலெர்மோ சிறையொன்றில், என் இளம் மனைவியையும் மூன்று மகன்களையும் விட்டுப் பிரிந்திருந்ததற்காக மனம் வருந்தினேன். ஆனாலும், சரியென்று நான் உணர்ந்ததற்காகப் போராடும் ஆவல் முற்றிலும் மனமுறிவடைவதிலிருந்து என்னைப் பாதுகாத்தது. எனக்குக் கிடைத்த நேரத்தைப் பயன்படுத்திக்கொள்ளும்படி வாசிக்க ஆரம்பித்தேன். பைபிளை வாசிக்கும்படி ஒரு புத்தகம் என் ஆவலைத் தூண்டியது. அது 19-வது நூற்றாண்டின்போது அரசியல் காரணங்களுக்காக சிறைவாசமிருந்த ஓர் இத்தாலியரான ஸில்வியோ பெலிக்கோவின் சுயசரிதை.

தான் சிறையில் இருக்கையில் ஓர் அகராதியையும் ஒரு பைபிளையும் எப்போதும் தன்னிடம் வைத்திருந்ததாக பெலிக்கோ எழுதியிருந்தார். நானும் என் குடும்பத்தாரும் ரோமன் கத்தோலிக்கராக இருந்தபோதிலும், பைபிளைப் பற்றி உண்மையிலேயே நான் எதுவும் கேள்விப்படவில்லை. ஆகவே ஒரு பிரதியைப் பெற்றுத் தரும்படி அதிகாரிகளுக்கு வேண்டுகோள் விடுத்தேன். அது தடைசெய்யப்பட்டிருந்ததாக என்னிடம் கூறப்பட்டது, ஆனால் மத்தேயு, மாற்கு, லூக்கா, யோவான் சுவிசேஷங்களின் ஒரு பிரதி என்னிடம் கொடுக்கப்பட்டது. பிறகு, முழு பைபிளின் ஒரு பிரதியை நான் பெறமுடிந்தது, அதை இன்னும் பொக்கிஷமாய்க் கருதும் ஞாபகார்த்தப் பொருளாக வைத்திருக்கிறேன்.

முடிவாக, 1951-ல் என்மீதான வழக்கு விசாரணை ரோமுக்கு அருகில், விட்டர்போவில் ஆரம்பித்தது. அது 13 மாதங்களுக்கு நீடித்தது. மீந்திருந்த என் வாழ்நாட்காலத்தின் இருமடங்கும், அதோடு 302 ஆண்டுகளும் சேர்த்து தண்டனைத்தீர்ப்பாக வழங்கப்பட்டது! அது நான் இனி ஒருபோதும் சிறையிலிருந்து வெளியேறப் போவதில்லை என்பதை அர்த்தப்படுத்தியது.

பைபிள் சத்தியங்களைக் கற்றல்

பலெர்மோவில் இருந்த சிறைக்குத் திரும்பியபோது, ஜூலியானோவின் அப்பா வழி உறவுமுறையில் சகோதரனும், எங்கள் பிரிவைச் சேர்ந்தவருமாயிருந்த ஒருவர் சிறை வைக்கப்பட்டிருந்த பகுதியிலேயே நானும் சிறையிலடைக்கப்பட்டேன். நான் கைது செய்யப்பட்டதற்கு மூன்று ஆண்டுகளுக்கு முன்பு அவர் கைதாகியிருந்தார். ஆரம்பத்தில், அவர் ஸ்விட்ஸர்லாந்திலிருந்து வந்திருந்த யெகோவாவின் சாட்சிகளில் ஒருவரைச் சிறையில் சந்தித்திருந்தார், அவர் ஆச்சரியமூட்டும் பைபிள் வாக்குகளைப் பற்றி இவரிடம் பேசியிருந்தார். அந்த மனிதர் கடவுளுடைய ராஜ்யத்தின் நற்செய்தியைப் பிரசங்கித்துக் கொண்டிருந்தபோது, ஓர் உடன் சாட்சியோடு பலெர்மோவில் கைது செய்யப்பட்டிருந்தார். (மத்தேயு 24:14) மதகுருக்களின் தூண்டுதலால் அவர் கைது செய்யப்பட்டிருந்தார் என்பதாகப் பின்பு எனக்குக் கூறப்பட்டது.

சட்டவிரோத நடவடிக்கைகளில் நான் ஈடுபட்டிருந்தபோதிலும், கடவுளிலும் சர்ச் போதனைகளிலும் நம்பிக்கை வைத்திருந்தேன். ஆகவே புனிதர்களாக அழைக்கப்பட்டவர்களுக்கு மரியாதை செலுத்துவது வேதப்பூர்வமற்றது என்றும் பத்துக் கட்டளைகளில் ஒன்று வணக்கத்தில் சொரூபங்களைப் பயன்படுத்துவதைத் தடைசெய்தது என்றும் கற்றபோது அதிர்ச்சியடைந்தேன். (யாத்திராகமம் 20:3, 4) காவற்கோபுரம், விழித்தெழு! பத்திரிகைகளுக்குச் சந்தா செய்தேன், அவை எனக்கு மிகவும் மதிப்புள்ளவையாய் ஆயின. நான் வாசித்த அனைத்தையும் புரிந்துகொள்ளவில்லை, ஆனால் அதிகமாய் வாசிக்க வாசிக்க, சிறையிலிருந்தல்ல, ஆனால் மதசம்பந்தமான பொய்கள், ஆவிக்குரிய குருட்டுத்தனம் ஆகிய சிறையிலிருந்து வெளியேற வேண்டிய தேவையிருந்ததை அதிகமாய் உணர்ந்தேன்.

காலப்போக்கில், கடவுளை மகிழ்விக்க என் பழைய ஆளுமையைக் களைந்துபோட்டு புதிய ஆளுமையை—சாந்தமாயும், கிறிஸ்து இயேசுவினுடையதைப் போன்றதாயுமிருந்த ஆளுமையை—தரித்துக் கொள்ள வேண்டும் என உணர்ந்தேன். (எபேசியர் 4:20-24) என்னில் ஏற்பட்ட மாற்றம் படிப்படியானதாய் இருந்தது. ஆனாலும் கிட்டத்தட்ட உடனடியாகவே என் உடன் சிறைவாசிகளுக்காகக் காரியங்களைச் செய்ய ஆரம்பித்தேன், மேலும் நான் கற்றுவந்த மகத்தான காரியங்களைப் பற்றி அவர்களிடம் பேச முயன்றேன். இவ்விதத்தில், 1953-ல் எனக்கு ஒரு மகிழ்ச்சியான காலக்கட்டம் ஆரம்பித்தது. ஆனால் அதற்குத் தடைகளும் இருந்தன.

தனி மதகுருவிடமிருந்து எதிர்ப்பு

நான் காவற்கோபுரம், விழித்தெழு! பத்திரிகைகளுக்குச் சந்தா செய்து ஆறு மாதம் கழிந்தபிறகு, அவற்றின் தபால் பட்டுவாடா தடைபட்டது. சிறைவாசிகளின் அஞ்சல் போக்குவரத்தைத் தணிக்கை செய்பவரிடம் சென்று நடந்ததைத் தெரிவித்தேன். தபால் பட்டுவாடாவை நிறுத்தி வைத்திருந்தது சிறையின் தனி மதகுரு என்று அவர் என்னிடம் கூறினார்.

அத் தனி மதகுருவைப் பார்க்க அனுமதியளிக்கும்படி நான் கேட்டேன். எங்கள் கலந்தாலோசிப்பின்போது, பைபிளிலிருந்து எனக்குத் தெரிந்திருந்த கொஞ்சத்தை வைத்து, வணக்கத்தில் சொரூபங்களைப் பயன்படுத்துவதைப் பற்றி யாத்திராகமம் 20:3, 4 மற்றும் ஏசாயா 44:14-17 உள்ளிட்ட வசனங்களைக் காட்டினேன். மேலும் “பூமியிலே ஒருவனையும் உங்கள் பிதா என்று சொல்லாதிருங்கள்” என்று மத்தேயு 23:8, 9-ல் பதிவாகியுள்ள இயேசுவின் வார்த்தைகளை அவருக்கு வாசித்துக் காட்டினேன். கோபமடைந்தவராக, நான் படிக்காதவனாய் இருந்தபடியால் என்னால் பைபிளைப் புரிந்துகொள்ள முடியவில்லை என்பதாக பதில் கூறினார்.

நான் ஏற்கெனவே என் ஆளுமையை மாற்ற ஆரம்பித்திருந்தது நல்லதாகிவிட்டது—இல்லாவிட்டால் நான் என்ன செய்திருந்திருப்பேன் என்று எனக்கே தெரியாது. அமைதியுடன், நான் பதிலுரைத்தேன்: “ஆம், அது உண்மைதான்; நான் படிக்காதவன். ஆனால் நீங்கள் படித்திருக்கிறீர்கள், ஆயினும் பைபிள் சத்தியங்களை எனக்குப் போதிக்கும்படி நீங்கள் ஒன்றுமே செய்யவில்லை.” யெகோவாவின் சாட்சிகளுடைய பிரசுரங்களைப் பெற வேண்டுமானால் கத்தோலிக்க மதத்தைவிட்டு விலகுவதற்காக நீதித் துறைக்கு விண்ணப்பிக்க வேண்டியிருக்கும் என்று அத் தனி மதகுரு கூறினார். நான் உடனே அவ்விதம் செய்தேன், ஆனால் என் விண்ணப்பம் அங்கீகரிக்கப்படவில்லை. என்றபோதிலும், பின்னர், நான் யெகோவாவின் சாட்சிகளில் ஒருவராக என்னைப் பதிவு செய்ய முடிந்தது, அப் பத்திரிகைகளை மீண்டும் பெறவும் முடிந்தது. ஆனால் நான் விடாப்பிடியாய் இருக்க வேண்டியதிருந்தது.

சிறையில் ஒரு ராஜ்ய மன்றம்

என் குடும்பத்திற்கு அனுப்புவதற்கு பணம் சம்பாதிக்க ஒரு வேலைக்காக அந்தச் சிறை இயக்குநரிடம் சிலகாலமாகக் கேட்டுக்கொண்டிருந்தேன். எனக்கு ஒரு வேலையளித்தால் பிறகு மற்றவர்களுக்கும் ஒரு வேலையளிக்க வேண்டியதிருக்குமென்றும், அதுவோ முடியாத காரியமென்றும் அவர் எப்போதும் கூறிவந்தார். ஆனால் ஆகஸ்ட் 5, 1955 அன்று காலையில், அவ்வியக்குநர் என்னிடம் ஒரு நல்ல செய்தி கூறினார்—நான் அச் சிறையினுள் ஓர் எழுத்தர் வேலையை ஏற்றுக்கொள்ள இருந்தேன்.

சிறை இயக்குநரின் மதிப்பைச் சம்பாதிக்க என் வேலை எனக்குதவியது, அவரும் பைபிள் படிப்பிற்காகக் கூட்டங்களை நடத்துவதற்கு சேமிப்புக்கிடங்கைப் பயன்படுத்திக் கொள்ளும்படி தயவுடன் அனுமதியளித்தார். ஆகவே 1956-ல், உடைந்துபோன ஃபைல் அலமாரிகளிலிருந்து எடுக்கப்பட்ட மரக்கட்டையைப் பயன்படுத்தி, யெகோவாவின் சாட்சிகள் கூட்டம் நடத்தும் இடங்களை அழைக்கும் ராஜ்ய மன்றமாகக் கருதப்படும் ஒன்றுக்காகப் பெஞ்சுகளைச் செய்தேன். அங்கு ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் பிற சிறைவாசிகளுடன் கூடினேன், மேலும் எங்கள் பைபிள் கலந்தாலோசிப்புகளுக்காக வந்திருந்தவர்களின் உச்சக்கட்ட ஆஜர் எண்ணிக்கை 25-ஐ நாங்கள் எட்டினோம்.

காலப்போக்கில், அத் தனி மதகுரு நான் நடத்திவந்த கூட்டங்களைப் பற்றி அறிந்து கொண்டார், மிகவும் ஆக்ரோஷமடைந்தார். அதன் விளைவாக, 1957-ன் கோடைகாலத்தில், பலெர்மோவிலிருந்து எல்பா தீவிலுள்ள போர்ட்டோ ஆட்ஸுரோ சிறைச்சாலைக்கு நான் மாற்றப்பட்டேன். இந்த இடம் பயங்கரத்திற்குப் பேர்போனதாயிருந்தது.

சிறையில் முழுக்காட்டப்பட்டேன்

நான் அங்குப் போய்ச் சேர்ந்தபோது, 18 நாட்களாக தனியறைச் சிறையடைப்பில் போடப்பட்டேன். அங்கு என் பைபிளைக்கூட வைத்திருக்க அனுமதி கிடைக்கவில்லை. அதன்பிறகு, கத்தோலிக்க மதத்தை நான் விட்டுவிலகுவதற்கு அனுமதி அளிக்கக் கோரி நீதித்துறைக்கு மறுபடியும் வேண்டுகோள் விடுத்தேன். என்றபோதிலும், இம்முறை, ரோமிலுள்ள யெகோவாவின் சாட்சிகளுடைய கிளை அலுவலகத்திடம் உதவிக்காகக் கேட்டிருந்தேன். பத்து மாதங்களுக்குப் பிறகு, நீண்டநாள் காத்திருந்த பதில் வந்தது. அத் துறை என் மதமாற்றத்தை அங்கீகரித்தது! நான் பைபிளையும், பத்திரிகைகளையும், அதோடு மற்ற பைபிள் பிரசுரங்களையும் வைத்திருக்கலாம் என்பது மட்டுமன்றி, யெகோவாவின் சாட்சிகளில் ஓர் ஊழியர் என்னை ஒழுங்காக சந்திக்க முடியும் என்பதையும் இது அர்த்தப்படுத்தியது.

இத்தாலியிலிருந்த யெகோவாவின் சாட்சிகளுடைய கிளை அலுவலகத்திலிருந்த கூஜப்பே ரோமனோ என்னை முதன்முதலாகச் சந்தித்தபோது, நான் அடைந்த மகிழ்ச்சிக்கு எல்லையே இல்லை. முடிவில் சிறை அதிகாரிகளின் அனுமதியுடன், யெகோவாவுக்கு நான் ஒப்புக்கொடுத்திருந்ததைத் தண்ணீர் முழுக்காட்டுதலின் மூலம் அடையாளப்படுத்தும்படி ஏற்பாடுகள் செய்யப்பட்டன. அக்டோபர் 4, 1958 அன்று, சிறை இயக்குநர், ஒழுங்கு அதிகாரி, மற்றும் பிற அதிகாரிகளின் முன்னிலையில், சிறையின் தோட்டத்துக்குத் தண்ணீர் பாய்ச்சுவதற்குப் பயன்படுத்தும் பெரிய தொட்டியில் என்னை மற்றொரு உடன் சிறைவாசியுடன் சகோதரர் ரோமனோ முழுக்காட்டினார்.

நான் கிட்டத்தட்ட எப்போதுமே காவற்கோபுரத்தை மற்ற சிறைவாசிகளுடன் சேர்ந்து படிக்க முடிந்தபோதிலும், கிறிஸ்துவின் வருடாந்தர மரண நினைவுநாளை நான் மட்டும் தனியே ஆசரிக்க வேண்டியிருந்தது, ஏனெனில் இந்த ஆசரிப்பு சூரிய மறைவுக்குப் பிறகு நடத்தப்படுகிறது. என் உடன் சாட்சிகளுடன் கூடிவந்திருப்பதாகக் கற்பனை செய்துகொண்டு, நான் என் கண்களை மூடி ஜெபிப்பேன்.

சிறையில் சீஷராக்குதல்

1968-ல், பஸ்ஸேரோ மாகாணத்தைச் சேர்ந்த ஃபோஸோம்புரோனேயிலுள்ள ஒரு சிறைக்கு நான் மாற்றப்பட்டேன். அங்கு பைபிள் சத்தியங்களைக் குறித்து மற்றவர்களிடம் பேசுவதிலிருந்து நான் நல்ல பலன்களைப் பெற்றேன். அங்கு மருத்துவமனையில் நான் வேலைபார்த்ததால், சாட்சி கொடுப்பதற்கான சந்தர்ப்பங்களைப் பெறுவது எளிதாய் இருந்தது. ஓர் உடன் சிறைவாசியான ஏமான்வெலே ஆல்ட்டாவில்லாவின் முன்னேற்றத்தைக் காண்பது விசேஷ மகிழ்ச்சியை அளித்தது. இரு மாதப் படிப்பிற்குப் பிறகு, தான் அப்போஸ்தலர் 19:19-ல் கூறப்பட்ட ஆலோசனையைப் பொருத்த வேண்டும் என்று உணர்ந்து, மந்திரக்கலை சம்பந்தமான தன் புத்தகத்தை அவர் அழித்துவிட்டார். பிறகு, ஏமான்வெலே யெகோவாவின் சாட்சிகளில் ஒருவராகிவிட்டார்.

அதற்கடுத்த ஆண்டில், நேபிள்ஸிலிருந்து வளைகுடாவுக்குக் குறுக்கே அமைந்திருந்த புரோச்சிடா தீவிலிருந்த சிறைக்கு நான் மாற்றப்பட்டேன். நன்னடத்தை காரணமாக, நான் மறுபடியும் மருத்துவமனையில் வேலைசெய்ய நியமிக்கப்பட்டேன். அங்கு திடப்படுத்துதலைப் பெற்றிருந்த ஒரு கத்தோலிக்கராயிருந்த உடன் சிறைவாசியான மார்யோ மோரேனோவைச் சந்தித்தேன். அவரும் ஒரு பொறுப்பான பதவியில், கணக்கு வைப்புத் துறையில் வேலை செய்துவந்தார்.

ஒருநாள் மாலையில், வாசிப்பதற்கு ஏதாவது இருக்கிறதா என்று மார்யோ என்னிடம் கேட்டார், நான் நித்திய ஜீவனுக்கு வழிநடத்துகிற சத்தியம் என்ற புத்தகத்தை அவரிடம் கொடுத்தேன். a தான் வாசித்த விஷயத்தின் முக்கியத்துவத்தை உடனடியாக அவர் புரிந்துகொண்டதால், நாங்கள் ஒரு பைபிள் படிப்பை ஆரம்பித்தோம். ஒரு நாளுக்கு மூன்று பாக்கெட் சிகரெட் புகைப்பதை மார்யோ நிறுத்திவிட்டார். அதோடு, சிறையில் செய்யப்பட்டு வரும் கணக்கு வைப்பு வேலையிலும்கூட நேர்மையுடன் நடந்துகொள்ள வேண்டும் என்று அவர் உணர்ந்தார். தனக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டிருந்த பெண்ணிடம் சாட்சி பகர ஆரம்பித்தார், அவரும் பைபிள் போதனைகளை ஏற்றுக்கொண்டார். அதன்பிறகு சீக்கிரத்திலேயே, அவர்கள் சிறையில் திருமணம் செய்துகொண்டனர். 1975-ல் நேபிள்ஸில் நடந்த ஒரு மாநாட்டில் மார்யோவின் மனைவி முழுக்காட்டப்பட்டார். அதே நாளில் சிறையில் தன் கணவர் முழுக்காட்டப்பட்டிருந்தார் என்பதைக் கேள்விப்பட்டபோது அவர் மிகுந்த மகிழ்ச்சியடைந்தார்!

புரோச்சிடாவில் என்னைச் சந்தித்த சாட்சிகளுடன் வாராந்திர கலந்தாலோசிப்புக்கு எனக்கு அனுமதி அளிக்கப்பட்டது. சாப்பாட்டைத் தயாரிக்கவும், பார்வையாளர்களின் கூடத்தில் வைத்து அதைப் பரிமாறவும் எனக்கு அனுமதியளிக்கப்பட்டது. ஒரே நேரத்தில் பத்துப்பேர் வரை இருக்கலாம். யெகோவாவின் சாட்சிகளுடைய பயணக் கண்காணிகள் சந்தித்தபோது, அவர்களுடைய சிலைடுகளைக் காட்ட நான் அனுமதி பெற்றேன். ஒருமுறை 14 சாட்சிகளைக் கொண்ட சந்திப்பின்போது, காவற்கோபுர படிப்பை நடத்தும் மகிழ்ச்சியைப் பெற்றிருந்தேன். அதிகாரிகள் என்னை முற்றிலும் நம்பியதாகத் தோன்றினது. குறிக்கப்பட்ட நாட்களில், மாலைப்பொழுதில், ஒவ்வொரு தனிச்சிறையாகச் சென்று பிரசங்கிப்பேன்.

1974-ல், வெவ்வேறு சிறைகளில் 24 ஆண்டுகளைக் கழித்தபிறகு, மன்னிப்புக்கோரி ஒரு விண்ணப்பம் அனுப்பும்படி என்னைச் சந்தித்த ஒரு நீதிபதி உற்சாகப்படுத்தினார். அவ்வாறு செய்வதை நான் பொருத்தமானதாக எண்ணவில்லை, ஏனெனில் அது, போர்ட்டெலா டெலா ஜினேஸ்ட்ரா படுகொலைக்கு உடந்தையாய் இருந்ததாக ஒப்புக்கொள்வதாய் இருக்கும், ஆனால் நானோ அதில் பங்கு பெறாதிருந்திருந்தேன்.

மிகுந்த மகிழ்ச்சிக்கான வாய்ப்புகள்

1975-ல் சிறையைவிட்டு ஒரு குறிப்பிட்ட நேரத்திற்கு வெளியே செல்ல அனுமதியளிக்கும் ஒரு புதுச்சட்டம் அமலுக்கு வந்தது. இவ்வாறு, நேபிள்ஸ் நகரில் நடந்த யெகோவாவின் சாட்சிகளுடைய மாநாட்டில் முதல் முறையாக ஆஜராகும் வாய்ப்பை நான் பெற்றேன். மறக்க முடியாத ஐந்து நாட்களை அனுபவித்தேன், அப்போது நான் முன்னொருபோதும் காணாதிருந்த பல கிறிஸ்தவ சகோதர சகோதரிகளைச் சந்தித்தேன்.

முடிவில் என்னை விசேஷமாக சந்தோஷப்படுத்தின விஷயம், பல்லாண்டுகளுக்குப் பிறகு, என் குடும்பத்தோடு மறுபடியும் ஒன்றுசேர்ந்தது. என் மனைவி, வீட்டா, எனக்கு உண்மையுள்ளவளாய் நிலைத்திருந்தாள், என் மகன்களோ இப்போது தங்கள் 20-களிலும் 30-களிலுமுள்ள இளைஞர்களாய் இருந்தனர்.

அதற்கடுத்த ஆண்டில்—சிறையிலிருந்து பல தடவை விடுமுறையில் வெளிவருவதை அனுபவித்த ஆண்டில்—சிறையிலிருந்து விடுதலை பெறுவதற்கு விண்ணப்பிக்கும்படி எனக்கு ஆலோசனை கூறப்பட்டது. நன்னடத்தைச் சோதனைமுறை விடுதலையளிக்கும் மாஜிஸ்ட்ரேட் என்னைப் பற்றிய தன் அறிக்கையில், என்னுடைய விண்ணப்பம் ஏற்றுக்கொள்ளப்படும்படி சிபாரிசு செய்தார். “நிச்சயமாகச் சொல்லப்படலாம்—ஜூலியானோவின் கட்டளைகளைச் செயற்படுத்திய இரத்தவெறி பிடித்த இளைஞனோடு ஒப்பிடுகையில், இன்று மான்னினோ வேறொரு மனிதன்; அவன் அடையாளம் தெரியாதபடி முற்றிலும் மாறிவிட்டான்” என்று அவர் எழுதினார்.

காலப்போக்கில், புரோச்சிடாவிலுள்ள சிறை அதிகாரிகள் எனக்கு மன்னிப்பு அளிக்கும்படி வேண்டினர். முடிவில், மன்னிப்பு அளிக்கப்பட்டது, டிசம்பர் 28, 1978-ல் நான் சிறையிலிருந்து விடுதலை பெற்றேன். 28 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையிலடைக்கப்பட்டிருந்து ஒரு சுதந்திர மனிதனாவது என்னே மகிழ்ச்சி!

நீதிக்கான ஒரே நம்பிக்கை

ஸால்வாட்டோர் ஜூலியானோவின் கட்டளைப்படி ஆட்களைக் கடத்திச் செல்பவனாய், என் குடும்பத்துக்கும் என் நாட்டினருக்கும் மெய்யான விடுதலையளிக்கும் என்று நான் நம்பிவந்த ஒன்றுக்காகப் போராடியிருந்தேன். இருப்பினும், மனிதர் எவ்வளவுதான் உண்மை மனதுள்ளோராய் இருந்தாலும், நான் ஓர் இளைஞனாக மனமார விரும்பிய நீதியை அவர்கள் ஒருபோதும் நடைமுறைப்படுத்த முடியாது என்று பைபிளிலிருந்து நான் கற்றுக்கொண்டேன். நன்றிதெரிவிக்கும் விதத்தில், தம் குமாரன் இயேசு கிறிஸ்துவின் கைகளிலுள்ள கடவுளுடைய ராஜ்யம் மட்டுமே அநீதியிலிருந்து மிகவும் அத்தியாவசியமாய்த் தேவைப்படும் விடுதலையை அளிக்க முடியும் என்பதைக் காண பைபிள் அறிவு எனக்கு உதவியது.—ஏசாயா 9:6, 7; தானியேல் 2:44; மத்தேயு 6:9, 10; வெளிப்படுத்துதல் 21:3, 4.

என் ஆளுமையில் ஏற்பட்ட மாற்றத்தைப் பற்றி பல செய்தித்தாள்கள் அறிக்கையை வெளியிட்டன, அதற்கெல்லாம் அத்தகைய பைபிள் அறிவுதான் காரணமாயிருந்தது. உதாரணமாக, “எல்லா சிறைவாசிகளும் ஃபிராங்க்கைப் போன்றே இருந்தால், சிறைகள் மறைந்துவிடும்; அவனது நடத்தை குற்றஞ்சாட்டப்படாததாய் இருந்திருக்கிறது, அவன் ஒருபோதும் சண்டை போடவில்லை, சிறியளவில்கூட அவன் கடிந்துகொள்ளப்படவில்லை” என்று புரோச்சிடா சிறையின் மேற்காப்பாளர் கூறியிருந்ததை பாயேஜெ ஸேரா மேற்கோள் காட்டினது. மற்றொரு செய்தித்தாளான ஆவேநிரே, “அவன் வழக்கத்துக்கு முரணான, ஒரு முன்மாதிரியான சிறைவாசி. அவன் மறுசீரடைந்தது எல்லா எதிர்பார்ப்பையும் கடந்துவிட்டது. நிறுவனங்களிடமும் சிறை அதிகாரிகளிடமும் அவன் மரியாதையுள்ளவன், மேலும் ஓர் அசாதாரணமான ஆன்மீகத்தைப் பெற்றிருக்கிறான்” என்று கூறினது.

பலனுள்ள ஒரு வாழ்வு

1984-லிருந்து, யெகோவாவின் சாட்சிகளுடைய சபையொன்றில் ஒரு மூப்பராகவும், முழு நேர ஊழியர்கள் அழைக்கப்படுகிறபடி ஒரு பயனியராகவும் சேவித்து வந்திருக்கிறேன். 15 ஆண்டுகளுக்கு முன்பு நான் பைபிள் அறிவைப் பகிர்ந்திருந்த ஒரு சிறைக்காவலர், தானும் தன் குடும்பமும் யெகோவாவின் சாட்சிகளாகியதைத் தெரிவிப்பதற்கு 1990-ல் எனக்கு ஃபோன் செய்தார்.

ஆனால் ஜூலை 1995-ல் மிகவும் மகிழ்ச்சியான அனுபவம் எனக்குக் கிடைத்தது. அவ்வாண்டில் என் அருமை மனைவி, வீட்டாவின் முழுக்காட்டுதலைப் பார்ப்பதற்கு ஆஜராகியிருந்தேன். பல்லாண்டுகளுக்குப் பிறகு, பைபிளின் போதனைகளை அவள் தனதாக்கிக்கொண்டிருந்தாள். ஒருவேளை என் மூன்று மகன்களும் நான் சொல்வதை இப்போது விசுவாசிக்காமல் இருந்தாலும், கடவுளுடைய வார்த்தையிலிருந்து நான் கற்றிருப்பதை என்றாவது ஒருநாள் ஏற்றுக்கொள்வர்.

பிறர் பைபிள் சத்தியங்களைக் கற்றுக்கொள்வதில் நான் பெற்ற அனுபவங்கள் எனக்கு எல்லையற்ற மகிழ்ச்சியை அளித்துள்ளன. நித்திய ஜீவனுக்கு வழிநடத்துகிற அறிவைப் பெற்றிருப்பதும், நேர்மை இருதயமுள்ளோரிடம் அதைப் பகிர்ந்துகொள்ள முடிவதும் எவ்வளவு பலனளிப்பதாய் இருந்திருக்கிறது!—யோவான் 17:3.—ஃபிராங்க் மான்னினோவால் கூறப்பட்டது.

[அடிக்குறிப்பு]

a உவாட்ச் டவர் பைபிள் அண்ட் டிராக்ட் சொஸைட்டி ஆஃப் இண்டியாவால் பிரசுரிக்கப்பட்டது.

[பக்கம் 18-ன் படம்]

சிசிலியில் படுகொலை நடந்த மலைப்பாதை

[பக்கம் 19-ன் படம்]

1942-ல் நாங்கள் திருமணம் செய்துகொண்டபோது

[பக்கம் 21-ன் படம்]

சிறைக்காவலர்களுடன் நான் அடிக்கடி பைபிள் சத்தியங்களைப் பகிர்ந்துகொண்டேன்

[பக்கம் 23-ன் படம்]

என் மனைவியுடன்

    தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்