கொடுப்பதன் மேலான மகிழ்ச்சி அதை நீங்கள் அனுபவிக்கிறீர்களா?
விருந்து அறையில் விளக்குகளின் ஒளி மங்கியது. இசை அடங்கியது. நடனம் ஆடுபவர்கள் தங்கள் நடனத்தை நிறுத்திவிட்டார்கள். பலவண்ணத் தாள்களில் சுற்றப்பட்டு ஜொலித்திடும் பெட்டிகள் மலை போல் குவிந்துகிடக்க, விளக்கின் ஒளி வட்டம் அதில் மையம் கொள்கின்றன. பெரிய பெட்டிகளும் உண்டு, சிறிய பெட்டிகளும் உண்டு. சதுரமானபெட்டிகளும் வட்டமான பெட்டிகளும், இளஞ்சிவப்புப் பெட்டிகளும் நீலவண்ணப் பெட்டிகளும், வெள்ளி நிறப் பெட்டிகளும் பொன்வண்ணப் பெட்டிகளும் இருக்கின்றன. அவை அழகிய நாடாக்களால் அலங்காரமாய்க் கட்டப்பட்டிருக்கின்றன. கிளர்ச்சியடைந்த மணப்பெண்ணின் நடுக்கங்காணும் கைகள் அவை ஒவ்வொன்றையும் கவனமாகப் பிரித்திட, தன்னுணர்வு கொண்ட மணமகன் அமைதலாக உதவுகிறான்.
சமையலறைக்கு வேண்டிய தவாக்களும் கலவை இயந்திரங்களும் இருக்கின்றன; உணவறைக்கு வேண்டிய பீங்கான் சாமான்களும் சில்வர் சாமான்களும், மேசை விரிப்புகளும் அவற்றுக்கு ஏற்ற கைத் துடைக்கும் குட்டைகளும் உள்ளன. ஏராளமான துவாலைகளும் துடைக்கத் துணிகளும், வாழ்நாளுக்கெல்லாம் வேண்டிய படுக்கை விரிப்புகளும் தலையணை உறைகளும் இருக்கின்றன. வீட்டின் ஒவ்வொரு அறைக்கும் வேண்டிய கடிகாரங்களும் எல்லாவிதமான சுவையையும் திருப்திசெய்யுமளவுக்குத் தேவையான சமையல் குறிப்பு நூல்களும் உள்ளன.
வெகுமதிகள் ஒவ்வொன்றாகத் திறக்கப்படுகையில் புதுமணத் தம்பதிகளின் “ஆக்களும்” “ஊக்களும்” நன்றியுள்ள இருதயத்தால் பொங்கிவழியும் சொற்களும் கேட்கப்படுகின்றன. கொடுப்பதன் மகிழ்ச்சியை அறிந்தவர்களிடமிருந்து பெற்றுக்கொள்வதன் மகிழ்ச்சியை அவர்கள் அனுபவிப்பவர்களாயிருந்தார்கள்.
விவாகங்கள், நிறைவு விழாக்கள், கிறிஸ்மஸ் பண்டிகைகள், பிறந்த நாட்கள், போன்ற ஏராளமான மற்ற கொண்டாட்டங்கள் வெகுமதிகள் எதிர்பார்க்கப்படும் மற்றும் ஏற்றுக்கொள்ளப்படும் ஒரு சமுதாய சம்பிரதாயமாக இருந்துவருகிறது. இவை அநேக நாடுகளில் எதிர்பார்க்கப்படும் ஒன்றாக இருப்பதால், பெரும்பாலும் கொடுப்பவருக்கு அது இக்கட்டான நிலையை ஏற்படுத்தி, கொடுப்பதிலிருக்கும் மகிழ்ச்சியிலிருந்து அவரைத் திருப்பிவிடுகிறது. என்றபோதிலும், மனமுவந்து கொடுத்தல், எதிர்பார்ப்பு இல்லாத கொடுத்தலும் உண்டு. வெகுமதி சிறியதாயிருந்தாலும் பெரியதாயிருந்தாலும், அது பெற்றுக்கொள்பவருக்குப் பெருமகிழ்ச்சியை ஏற்படுத்துவதுடன்கூட கொடுப்பவருக்கு மிகப் பெருத்த மகிழ்ச்சியை ஏற்படுத்துகிறது.
ஒப்புக்கொள்ள வேண்டிய ஒரு காரியம், அதிகம் இருப்பவர் அதிகம் கொடுக்கிறார். உதாரணமாக, அமெரிக்காவைச் சேர்ந்த 19-வது நூற்றாண்டு தொழிலதிபர் ஆன்ட்ரு கார்னகி தன்னுடைய நாட்டின் முதல் கோடீஸ்வரராக இருந்திருக்கக்கூடும். மாறாக, தன்னுடைய பதினெட்டு ஆண்டு சம்பாத்தியத்தில் 90 சதவிகிதத்தைப் பகிர்ந்தளித்தார். அவர் தன்னுடைய தனிப்பட்ட முதலீட்டை வற்றச்செய்கிறார் என்று அவருடைய காரியதரிசி எச்சரித்தபோது, அவர் மகிழ்ச்சியுடன், “அதைக் கேட்பதில் நான் மகிழ்ச்சியடைகிறேன், அது தொடரட்டும்,” என்றார். அதே சகாப்தத்தில் உலகிலேயே மிகப் பெரிய பணக்காரர்களில் ஒருவராகிய ஜான் D. ராக்ஃபெல்லர் தன்னுடைய வாழ்நாளில் ரூ.1,000 கோடி ($75 கோடி) கொடுத்திருக்கிறார். எல்விஸ் பிரஸ்லி என்ற பாடகன் “டஜன் கணக்கில் காடிலாக் கார்களை கொடுப்பது வழக்கம்” என்று எழுதப்பட்டிருக்கிறது, அப்படிச் செய்வதில் அவன் முழு மகிழ்ச்சியைக் கண்டான்.
ஒரு புதிய வழக்கம் அல்ல
வெகுமதிகள் கொடுக்கும் பழக்கத்திற்கு ஏறக்குறைய மனிதனின் வயது. மக்களுடைய வாழ்க்கையில் இது மனிதனின் ஆரம்பகாலமுதல் ஒரு முக்கியமான பாகத்தை வகித்துவந்திருக்கிறது. யெகோவா ரெபேக்காளை ஈசாக்குக்கு மனைவியாக நியமித்திருக்கிறார் என்பதற்கான அத்தாட்சியைக் கண்டு ஆபிரகாமின் ஊழியக்காரன் அவளுக்கு நகைகளை வெகுமதியாகக் கொடுத்தான். அதோடுகூட, “அவள் சகோதரனுக்கும் தாய்க்கும் சில உசிதமான பொருட்களையும் கொடுத்தான்.” (ஆதியாகமம் 24:13-22; 50-53, தி.மொ.) யோபுவுக்கு ஏற்பட்ட கஷ்டங்கள் கடந்துபோன பின்பு, அவனுடைய சகோதரர்களும் சகோதரிகளும் முன்னாள் சிநேகிதர்களும் அவனுக்கு வெகுமதிகளைக் கொடுத்தார்கள்—அவர்கள் ஒவ்வொருவரும் “அவனுக்கு ஒரு தங்கக் காசையும் பொன் மோதிரத்தையும் கொடுத்தார்கள்.”—யோபு 42:10, 11, தி.மொ.
பெயர் அறியப்படாதிருக்கும் சேபா தேசத்து ராஜஸ்திரீ சாலொமோன் அரசனைச் சந்திக்க வந்தபோது, அவனுக்குக் கடவுள் கொடுத்திருந்த ஞானத்தைக் கண்டு ஆச்சரியப்பட்டு, ஞானத்தில் சிறந்து விளங்கிய இந்த மனிதனிடமிருந்து காரியங்களைக் கேட்டு பலன் பெற முடிகிறதற்காக அவனுடைய ஊழியர்கள் மகிழ்ச்சியுள்ளவர்கள் என்றாள். அவள் அந்தளவுக்கு உந்துவிக்கப்பட்டதால், சாலொமோனுக்கு 120 தாலந்து (ரூ.70,00,00,000 மதிப்புள்ள) பொன்னும், இரத்தினக்கற்களும், விலையுயர்ந்த தைலமும் வெகுமதியாகக் கொடுத்தாள். தன்னுடைய சிறிய ராஜ்யத்தின் பொக்கிஷசாலையின் இருப்பைச் சற்று வற்றச்செய்திருக்கக்கூடும் என்றாலும், கொடுப்பதன் மகிழ்ச்சியை அவள் அனுபவித்தாள் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை. சாலொமோனும் கொடுப்பதன் மகிழ்ச்சியை அனுபவிப்பவனாயிருந்தான், ஏனென்றால் அவன் கைமாறாகக் கொடுத்த வெகுமதிகள் அவள் கொடுத்ததைவிட அதிகமாய் இருந்தது.—2 நாளாகமம் 9:12; அமெரிக்கன் மொழிபெயர்ப்பு, மொஃபட்.
பூர்வகால கிறிஸ்தவர்கள் தேவையிலிருந்த தங்களுடைய சகோதரர்களுக்கு வெகுமதிகள் அல்லது நன்கொடைகள் கொடுத்தனர். பவுல் அப்போஸ்தலன் மக்கெதோனியாவிலும் அக்காயாவிலும் இருந்த கிறிஸ்தவர்களைக் குறித்து எழுதிய போது, யூதேயாவில் தேவையிலிருந்த தங்கள் சகோதரர்களுக்குக் கொடுப்பதில் தங்களுடைய வறுமையிலும் திராணிக்கு அதிகமாகக் கொடுத்தார்கள் என்று குறிப்பிட்டான். அவர்கள் “பொருள்சகாயம் செய்ய விருப்பங்கொண்டிருக்கிறார்கள்,” என்றான்.—ரோமர் 15:26, 27.
பேசும் “வெகுமதிகள்”
அன்பையும் நட்பையும் உருவாக்குவதற்கும் பலப்படுத்துவதற்கும், நாம் மற்றவர்களில் அக்கறை கொண்டிருக்கிறோம் என்பதை அவர்களுக்குக் காண்பிப்பதற்கும் வெகுமதிகள் கொடுப்பது மனிதனின் அடிப்படை வழியாக இன்றும் இருந்துவருகிறது என்பது தெளிவாக இருக்கிறது.
“உன்னை நேசிக்கிறேன்,” என்று சொல்லும் வகையில் விவாகத் துணைவர்கள் ஒருவருக்கொருவர் வெகுமதிகளைப் பரிமாரிக்கொள்வதும் உண்டு—அது ஒரு சாதாரண இனிப்புகள் கொண்ட பெட்டியாக இருக்கலாம் அல்லது ஒரு மலர்ச் செண்டாகவும் இருக்கலாம். பிள்ளைகள் தங்கள் பெற்றோருக்குக் கொடுக்கும் வெகுமதிகளும் உண்டு. எந்த அன்புள்ள பெற்றோர் தங்கள் பிள்ளைகளுக்கு எப்பொழுதும் கொடுத்துக்கொண்டில்லை? உள்ளம் உடைந்தவர்களைத் தேற்றவும், சோர்ந்த ஆத்துமாக்களை ஊக்குவிக்கவும், “விரைவில் சுகம்பெறுவீர்களாக” என்று சொல்வதற்கும், காண்பிக்கப்பட்ட தயவுக்கும் உபசரிப்புக்கும் போற்றுதல் காண்பிப்பதற்கும், அல்லது வெறுமென, “ஒரு நல்ல சமயத்தைக் கொண்டிருந்தேன்” என்று சொல்வதற்கும் வெகுமதிகள் உள்ளன.
வறுமையிலிருப்பவர்களுக்கு, நாம் ஒருவேளை பார்க்க சந்தர்ப்பமில்லாதவர்களும், அவர்களுடைய நன்றியின் வார்த்தைகளை நமக்கு எட்டச்செய்ய முடியாதவர்களுமாகிய பெருஞ்சேதத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்குக் கொடுக்கும் வெகுமதிகளும் உண்டு. நோயளிக்கு ஒரு பை நிறைய பழம், வீட்டை விட்டு வெளியே செல்ல முடியாத நிலையிலிருப்பவர்களுக்கு வீட்டுச்செடிகள், ஒரு நெருங்கிய நண்பருக்கு ஓர் அணிகலன்—இவை அதிகத்தைக் குறித்திடும் சிறிய காரியங்கள். மகிழ்ச்சியோடு கொடுப்பதுதானே இருதயப்பூர்வமானது. பெரும்பாலும் போற்றப்படுகிற வெகுமதிகள் இவைகளே.
கொடுப்பதற்கு இருக்கும் எல்லா சமயங்களிலும் உலகத்திலே அதிக வெளிப்படையானதும் பகட்டாரவாரமும் கொண்டது கிறிஸ்மஸ் சமயமாகும். ஆடல் பாடல் களியாட்டுடன்கூடிய கொடுத்தலை உள்ளடக்கிய இது, பழங்காலத்துடன் வேர்கொண்ட ஒன்று. பயத்துடன் பலரும் ஆர்வத்துடன் சிலரும் எதிர்நோக்கும் ஓன்று. பொருள் சம்பந்தமாகப் பெருஞ்சேதத்துக்கும் செழிப்புக்குமான வித்தியாசத்தைக் குறிக்கக்கூடும். வெகுமதிகள் நண்பர்களுக்கிடையே பரிமாற்றம் செய்யப்படுகிறது என்றாலும், அதோடு சம்பந்தப்பட்ட சடங்கு சம்பிரதாயங்கள் அவர்களை ஒன்றாகச் சேர்த்திடவுங்கூடும் அல்லது தூரமாகப் பிரித்திடவுங்கூடும். கிறிஸ்மஸ் கொடுத்தலில் இருக்கும் இந்தப் புதிர் அடுத்தக் கட்டுரையில் சிந்திக்கப்படும். (g87 11⁄22)