கொடுத்தல்—அது எதிர்பார்க்கப்படுகிறதா?
வெகுமதிகளைக் கொடுப்பது பெரும்பாலும் பழக்கங்களினால் தூண்டப்படுகிறது என்பதை நீங்கள் ஒருவேளை நன்கு அறிந்திருப்பீர்கள். அநேக கலாச்சாரங்களில் வெகுமதிகள் எதிர்பார்க்கப்படும் சமயங்கள் உள்ளன. அப்படிப்பட்ட வெகுமதிகள் மரியாதை அல்லது அன்பின் வெளிக்காட்டுதல்களுக்கு அடையாளங்களாக இருப்பதை அர்த்தப்படுத்துவதாக இருக்கலாம். அதைப் பெற்றுக்கொள்பவர்கள் பெரும்பாலான வெகுமதிகளை பயன்படுத்துவதே இல்லை; பிற வெகுமதிகள் மெய்யான தேவைகளை பூர்த்திசெய்ய உதவுகின்றன, அவற்றுக்காக ஆழ்ந்த போற்றுதல் தெரிவிக்கப்படுகின்றன.
டென்மார்க்கில் ஒரு குழந்தை பிறந்தவுடன் நண்பர்களும் உறவினர்களும் அதை சென்று பார்த்து, அக்குழந்தைக்கு பிரயோஜனமாயிருக்கும் வெகுமதிகளை கொண்டு செல்வர். மற்ற தேசங்களில் நண்பர்கள் ஒரு விருந்தை ஏற்பாடு செய்யலாம், அதில் அப்படிப்பட்ட வெகுமதிகள் பிறப்பை எதிர்பார்த்து கொடுக்கப்படுகின்றன.
பெரும்பாலான சந்தர்ப்பங்களில் வெகுமதிகள் எதிர்பார்க்கப்படும் சமயங்கள் வருடாந்தர நிகழ்ச்சிகளாக இருக்கின்றன. பூர்வ கிறிஸ்தவர்கள் மத்தியில் அப்படிப்பட்ட கொண்டாட்டங்கள் ஒரு பழக்கமாக இல்லாவிட்டாலும், அவை கிறிஸ்தவர்கள் என்று உரிமைபாராட்டிக்கொள்பவர்கள் மத்தியிலும் கிறிஸ்தவர்கள் அல்லாதவர்கள் மத்தியிலும் அதிக பிரபலமானவையாக ஆகியிருக்கின்றன. மற்ற கலாச்சாரங்களில் பிள்ளைகள் பெரியவர்களாக வளரும்போது, பிறந்தநாள் வெகுமதிகள் கொடுக்கும் பழக்கம் மறைந்து போகலாம், ஆனால் கிரேக்கர்கள் மத்தியில் காணப்படும் பழக்கம் வித்தியாசமாக உள்ளது. கிரீஸில் பிறந்தநாளுக்கு அதிக கவனம் செலுத்தப்படுகிறது. அவர்கள் ஒருவருடைய “பெயர் நாள்” வரும் சமயத்தின்போதும்கூட வெகுமதிகள் அளிக்கின்றனர். அது என்ன? வருடத்தின் ஒவ்வொரு நாளுக்கும் ஒரு வித்தியாசமான ‘புனிதருக்கு’ மத பழக்கம் முக்கியத்துவம் கொடுக்கிறது, அநேகருக்கு “புனிதர்கள்” பெயர்கள் வைக்கப்படுகின்றன. “புனிதரின்” நாள் வரும்போது, அந்தப் பெயரை வைத்திருப்பவர்கள் வெகுமதிகளைப் பெற்றுக்கொள்வர்.
கொரியர்கள் தங்கள் பிள்ளைகளுக்கு பிறந்தநாள் கொண்டாட்டங்களோடுகூட, பிள்ளைகள் தினம் என்ற ஒரு தேசிய கொண்டாட்டத்தை உடையவர்களாய் இருக்கின்றனர். அது குடும்பங்கள் வெளியே செல்வதற்கான நேரமாய் இருக்கிறது, பிள்ளைகளுடைய பிறந்தநாள் எதுவாக இருப்பினும், அன்று பிள்ளைகளுக்கு வெகுமதிகள் கொடுக்கப்படுகின்றன. கொரியர்களுக்கு பெற்றோர் தினமும் உண்டு, அப்போது பிள்ளைகள் தங்கள் பெற்றோருக்கு கொடுக்கின்றனர், ஆசிரியர்கள் தினமும் உண்டு, அப்போது மாணவர்கள் தங்கள் ஆசிரியர்களுக்கு மரியாதை கொடுத்து அவர்களுக்கு வெகுமதிகள் கொடுப்பர். கொரியர்களின் வழக்கத்தின்படி, ஒரு நபர் 60 வயதை அடையும்போது ஒரு பெரிய விருந்து நடத்தப்படுகிறது. சந்தோஷமாக நீடூழி வாழ்க என்ற வாழ்த்துக்களை தெரிவிப்பதில் குடும்பத்தாரும் நண்பர்களும் சேர்ந்துகொள்கின்றனர், வாழ்க்கையில் அந்த நிலையை அடைந்தவர்களுக்கு வெகுமதிகள் அளிக்கப்படுகின்றன.
திருமணத்தின்போது வெகுமதிகள் கொடுப்பது மற்றொரு சமயமாய் உள்ளது, அது பொதுவான பழக்கமாயிருக்கிறது. கென்யாவில் ஒரு தம்பதி விவாகம் செய்துகொள்ளும்போது, மணமகன் குடும்பத்தார் மணமகள் குடும்பத்தாருக்கு வெகுமதி அளிக்கும்படி எதிர்பார்க்கப்படுகின்றனர். விருந்தினர்களும் வெகுமதிகளைக் கொண்டுவருவர். மணமகனும் மணமகளும் பழக்கவழக்கங்களைப் பின்பற்றினார்கள் என்றால், அவர்கள் மேடையில் உட்கார்ந்திருப்பர், அப்போது விருந்தினர்கள் தங்கள் வெகுமதிகளைக் கொண்டு வருவர். ஒவ்வொருவரும் வெகுமதியைக் கொண்டு வரும்போது, “தம்பதிக்கு இன்னார் வெகுமதியைக் கொண்டு வந்திருக்கிறார்” என்று அறிவிப்பு செய்யப்படும். கொடுப்பவர்களில் அநேகர் அப்படிப்பட்ட அங்கீகாரத்தை பெற்றுக்கொள்ளவில்லை என்றால் மிகவும் புண்பட்டு விடுவர்.
லெபனன் தேசத்தைச் சேர்ந்தவர்கள் மத்தியில், யாராவது ஒருவர் திருமணம் செய்துகொள்ளும்போது, நண்பர்களும் அயலகத்தாரும், தம்பதியை நன்றாக அறிந்திராத ஜனங்களும்கூட, திருமணத்திற்கு பிறகு பல நாட்கள் வெகுமதிகளோடு வந்துகொண்டேயிருப்பர். கடன் கொடுப்பது போன்று வெகுமதிகள் கொடுப்பது ஒரு உத்தரவாதம் என்று அவர்கள் பிள்ளைப் பருவத்திலிருந்தே கற்பிக்கப்படுகின்றனர். “நீங்கள் அதைச் செய்யவில்லையென்றால், உங்களைக் குறித்து நன்றாக உணரமாட்டீர்கள்” என்று லெபனன் தேசத்தைச் சேர்ந்த ஒரு மனிதர் கூறினார். “அது ஒரு பாரம்பரியம்.”
இருப்பினும், வெகுமதிகள் கொடுக்கப்படும் எல்லா சந்தர்ப்பங்களைக் காட்டிலும் அநேக தேசங்களில் கிறிஸ்மஸ் மிகவும் முக்கியமானதாய் உள்ளது. நீங்கள் வாழும் இடத்தில் அப்படி இல்லையா? வெகு சமீபத்தில், 1990-ல், அமெரிக்கர்கள் ஒவ்வொரு வருடமும் கிறிஸ்மஸ் வெகுமதிகளுக்காக $4,000 கோடிக்கும் மேற்பட்ட தொகையை செலவழிப்பதாக மதிப்பிடப்பட்டது. அந்த கொண்டாட்டத்தை பெரும் விருப்பத்தோடு ஜப்பானில் உள்ள புத்த மதத்தைச் சேர்ந்தவர்களும் ஷின்டோக்களும் கொண்டாடுகின்றனர், அந்தக் கொண்டாட்டத்தின் பல்வேறு வடிவங்கள் ஐரோப்பா, தென் அமெரிக்கா, ஆப்பிரிக்காவின் சில பகுதிகள் ஆகியவற்றில் காணப்படுகின்றன.
சந்தோஷமாக இருக்க வேண்டும் என்று ஜனங்கள் எதிர்பார்க்கும் சமயமாக கிறிஸ்மஸ் உள்ளது, ஆனால் அநேகர் அப்படி இல்லை. வெகுமதிகளை வாங்க வேண்டும் என்ற வெறியோடு கடைகளுக்குச் சென்று வாங்கிய பின்னர் அநேகருக்கு அதற்கான பணத்தை செலுத்துவது, அவர்கள் அனுபவிக்கும் சந்தோஷமான நேரத்தை விரைவில் மறைத்துவிடுகிறது.
இருப்பினும், கொடுப்பதில் அதிக சந்தோஷம் உள்ளது என்று பைபிள் சொல்கிறது. அது உண்மையில் அவ்வாறு இருக்கிறது, ஆனால் அந்த கொடுத்தல் எந்த உள்ளெண்ணத்தோடு கொடுக்கப்படுகிறது என்பதன் பேரில் அது சார்ந்துள்ளது.—அப்போஸ்தலர் 20:35.