கிறிஸ்மஸ் கொடுத்தல் மனமகிழ்ச்சியின் காலமா அல்லது மனச்சோர்வின் காலமா?
வடதுருவத்துக்குத் தபால் மூலம் அனுப்பப்படும் என்ற நம்பிக்கையுடன் கிறிஸ்மஸ் தாத்தாவுக்குக் கடிதங்கள் எழுதப்பட்டு பெற்றோரிடமும் ஆசிரியரிடமும் கொடுக்கப்படும் இளம் பிள்ளைகளின் கடிதங்களில் பின்வரும் கடிதமும் ஒன்று:
“அன்புள்ள கிறிஸ்மஸ் தாத்தா:
“நீங்கள் எப்படி இருக்கிறீர்கள்? நான் சுகமாக இருக்கிறேன். நீங்கள் நல்லதொரு கிறிஸ்மஸ் கொண்டாட்டத்தைக் கொண்டிருப்பீர்கள் என்று நம்புகிறேன். உங்களிடம் நிறைய நல்ல நல்ல விளையாட்டுச் சாமான்கள் இருக்கும் என்று நம்புகிறேன், ஏனென்றால் எனக்கு நிறைய அருமையான சாமான்கள் வேண்டும். முதலாவது, எனக்கு ஒரு தம்பிப் பாப்பா வேண்டும். வட துருவத்தில் உங்களிடம் பாப்பாக்கள் கிடையாது என்று என்னுடைய அப்பா சொல்லுகிறார், எனவே நீங்கள் எனக்கு ஒரு நாய்க்குட்டி கொண்டுவரலாம். எனக்கு ஒரு கைத்துப்பாக்கியும், ஒரு இயந்திர துப்பாக்கியும், வேகமாக செல்லும் ஒரு சைக்கிளும், ஒரு டேப் ரிக்கார்டரும் வேண்டும். சரி, தாத்தா, இதுதான் என்னுடைய கடைசி கடிதம், ஏனென்றால் அடுத்த வருடம் எனக்கு கிறிஸ்மஸ் தாத்தாவில் நம்பிக்கை இருக்காது. ஆனால் இந்த வருடமோ எனக்கு கிறிஸ்மஸ் தாத்தாவில் நம்பிக்கை இருக்கிறது.”
இந்தக் கடிதம் யாருடையது என்பதை நீங்கள் அறிந்துகொள்ள முடிகிறதா? அது உங்களுக்குத் தெரிந்ததுபோல் இருக்கிறதா? அதன் வாசகம் நீங்கள் குழந்தையாக இருந்தபோது எழுதிய கடிதம் போல இருக்கிறதா? அநேக நாடுகளிலே தபால் நிலையங்களில் இப்படிப்பட்ட இலட்சக்கணக்கான கடிதங்கள் குவிகின்றன. தாங்கள் “கிறிஸ்மஸ் தாத்தா” என்று அவ்வளவு பிரியமாக அறிந்திருக்கும் அந்தக் கற்பனைக் கொடயாளருக்கே அக்கடிதங்கள் எழுதப்படுகின்றன.
வெகு சிலரே “தயவுசெய்து” என்றும், அதிலும் சிலரே “நன்றி” என்றும் எழுதுகின்றனர். சிலர் பாச உணர்வால் ஈர்க்கப்படுகிறார்கள், மற்றவர்கள் பேராசையால் முத்தமிடுகிறார்கள். பையன் சிறியவனாக இருந்தால் குறைவாகக் கேட்கிறான். பெரியவனாக இருந்தால், அவனை திருப்திசெய்ய நிறைய வெகுமதிகள் தேவைப்படுகின்றன, இப்படியாக பின்தொடரும் வருடங்களில் கூடுதலான, ஆடம்பரமான வெகுமதிகளுக்கான அவனுடைய எதிர்பார்ப்புகளை அது கூட்டுகிறது.
ஒரு பிள்ளையுடைய வாழ்க்கையின் ஒவ்வொரு பருவத்துக்கேற்ப விளையாட்டுப் பொருட்கள் செய்யப்படுகின்றன. கற்பிக்க உதவும் விளையாட்டுப் பொருட்களும், திறமைகளைப் பரீட்சிக்கும் விளையாட்டுப் பொருட்களும், வன்முறையினிடமாகக் கவனத்தைத் திருப்பும் விளையாட்டுப் பொருட்களும் உண்டு. முரட்டுத்தனமான விளையாட்டுக்கு உடையாத பொருட்களும், ஒருசில நாட்களுக்குள் இரண்டாகப் பிளந்துவிடும் விளையாட்டுப் பொருட்களும் இருக்கின்றன. பாதுகாப்பான விளையாட்டுப் பொருட்களும் உண்டு, கடைகளில் விற்பனைசெய்வது அதிகாரிகளால் தடைசெய்யப்படும் விளையாட்டுப்பொருட்களும் உண்டு. பேய்த்தோற்றமுடைய விளையாட்டுப் பொருட்கள்—கொடுங்கனவுகளை உண்டாக்கக்கூடிய பயங்கரமான முகங்களைக் கொண்ட பந்துகள்—பெற்றோரின் கடுமையான எதிர்ப்பின் மத்தியிலும் கடந்த ஆண்டு அதிகமாக விற்பனை கண்டன. கிறிஸ்மஸுக்கு இரண்டு மாதங்களுக்கு முன்பாகவே பிள்ளைகள் அதற்காக ஆயத்தப்படுத்தப்படுகின்றனர். கொடுப்பதிலும் வாங்குவதிலும் இருக்கும் மகிழ்ச்சி எங்கும் நிரம்பியிருப்பதாகத் தெரிகிறது.
மனச்சோர்வுக்குள் விழுதல்
ஆனால் அந்தோ, இருந்த கிளர்ச்சியனைத்தும் ஒரு சில நாட்களில் கடந்துவிட்டன. தான் பெற்ற வெகுமதிகள் அனேகமாயிருப்பினும், குறைவாயிருப்பினும் அவற்றில் கண்ட எல்லா பூரிப்பையும் மகிழ்ச்சியையும் அவன் சுக்குநூறாக்கிவிட்டான். உண்மைநிலை அவனுடைய எதிர்பார்ப்புக்கேற்ப இருக்கவில்லை. அவனுக்கு போரடிக்க ஆரம்பித்துவிட்டது. தான் எதிர்பார்த்த முழுநிவாரணம் கிறிஸ்மஸும் அதன் வெகுமதிகளும் கொண்டிருந்த பகட்டு அல்ல. இதன் பேரில் தன் கருத்தைத் தெரிவிப்பவராய், சிறுவர் உளநூலர் டாக்டர் நான்சி ஹேய்ஸ் சொன்னதாவது, கிறிஸ்மஸ் காலம் “பிள்ளைகள் மத்தியில் மிக அதிக அளவான மனச்சோர்வும் தற்கொலையும் இருக்கும் காலம்.” கிறிஸ்மஸ் “பிரச்னைகளுக்கு மாயப் பரிகாரம்” அளிக்காதது கண்டு அனேக பிள்ளைகள் சோர்ந்துவிடுகிறார்கள். கிறிஸ்மஸ் தாத்தா வெறும் ஒரு கற்பனைத்தான் என்பதையும், தங்களுடைய பெற்றோர் ஒரு பொய்யை அலங்கரிக்க வெகுதூரம் சென்றுவிட்டனர் என்பதையும் அவர்கள் அறிய வரும் போது, அவர்களுடைய மனம் கூடுதலாக நொறுங்கிவிழுவதைச் சற்று கற்பனைசெய்து பாருங்கள்.
எனவே கிறிஸ்மஸ் காலங்களில் பிள்ளைகள் வெகுமதிகளுக்காகக் கேட்பதற்கும், எழுதுவதற்கும், எதிர்பார்ப்பதற்கும் சிறுவயதுமுதல் கற்பிக்கப்பட்டுவருகிறார்கள். இது பிள்ளைகளோடு நின்றுவிடுவதில்லை. பெரியவர்கள் மத்தியிலும் நட்பு தாங்கள் பெற்றுக்கொள்ளும் வெகுமதிகளின் விலைமதிப்பைக்கொண்டு அளவிடப்படுகிறது. அநேக சமயங்களில் ஒருவர் கொடுத்த வெகுமதியின் மதிப்பு அதிகமாக இருக்க, அதற்குக் கைமாறாகத் தனக்கு கொடுக்கப்படும் வெகுமதி குறைந்த மதிப்புடையதாக இருக்கும்போது நட்பின் பந்தம் முறிந்துவிடுமளவுக்குச் சென்றுவிடுகிறது. அனேகமாக, “எண்ணம்தான் முக்கியம்” என்ற கூற்று வருடத்தின் வேறு எந்த சமயங்களிலும் இந்தளவுக்கு அர்த்தமற்றதாகிவிடுவதில்லை.
கடனாக வாங்குவதற்குக் கொடுக்கப்படும் அட்டைகள் அவற்றின் வாங்கும் சக்தியின் வரம்பை எட்டிவிடுகிறது. பூர்த்திசெய்யப்படும் காசோலைகள் வங்கிக் கணக்கையும் மிஞ்சிவிடுகிறது. மக்கள் கூட்டம் நிறைந்த கடைகளிலே நெருக்கடிகளின் சமயங்களில் சம்பவிக்கும் கொள்ளைகள் ஒரு பக்கம் அச்சத்தை அதிகரிக்கிறது. கடைகளில் காணாமற்போன பொருட்களின்பேரில் வாடிக்கையாளரும் கடைக்காரரும் அடிதடியில் ஈடுபடுவது, தைரியமானவர்களையும் பின்வாங்கச்செய்கிறது. கால் வலியும், எதை வாங்குவது என்றறியாது தவிக்கும் இக்கட்டான நிலையும், இந்தக் குளிர்கால சம்பிரதாயத்தை எரிச்சலோடு நோக்கச் செய்கிறது. அது கிறிஸ்மஸ் வாடிக்கையாளரை வெகுவாகப் பாதிக்கிறது.
வியாபாரி ஒருவன் சொன்னான்: “மக்கள் அங்குமிங்கும் அவசரமாகப் போய்க்கொண்டிருப்பதையும் யாருக்காவது ஒரு வெகுமதி வாங்கிக்கொண்டிருப்பதையும் நீங்கள் பார்க்கிறீர்கள்; அவர்கள் உண்மையில் முனகிக்கொண்டிருக்கிறார்கள். மக்கள் மகிழ்ச்சியோடு வெகுமதிகள் கொடுப்பதில்லை.” கிறிஸ்மஸ் பண்டிகையை, “ஆண்டுதோறும் மனச்சோர்வும் நரம்புத்தளர்ச்சியும் ஏற்படும் ஒரு சமயம்,” என்று ஒரு மதகுரு அழைத்ததில் வியப்புண்டோ?
அனேக வெகுமதிகள் கடமைக்காகவும் பல சமயங்களில் தன்னல நோக்கத்துக்காகவும் வாங்கப்படுகிறதும் கொடுக்கப்படுகிறதுமாயிருப்பதுதானே ஏமாற்றத்தைக் கூட்டுகிறது. சமூகநூல் பேராசிரியர் ஒருவர் பின்வருமாறு சொன்னார்: “வெகுமதி கொடுப்பவர் அது கொடுக்கப்படும் நபருக்கு விருப்பமாயிருக்குமா என்று கவலைப்படுகிறவராக மட்டுமல்லாமல், தன்னைக்குறித்த ஒரு தகுதியான எண்ணத்தை அவரில் ஏற்படுத்தவேண்டும் என்ற கவலையும் இருக்கிறது.”
கிறிஸ்மஸ் காலத்தின் மிக சுறுசுறுப்பான நாள் எது? அனேக சமயங்களில் அது கிறிஸ்மஸுக்கு மறுநாளாக இருக்கிறது. அன்று கடைகளில் தாங்கள் பெற்ற வெகுமதிகளைத் திருப்பிக்கொடுக்கும் கூட்டம் காணப்படுகிறது, அவர்களில் அனேகர் அவற்றைப் பணத்துக்காகத் திருப்பிக்கொடுத்துவிடுகின்றனர். என்றாலும், அவர்களுக்கு வெகுமதியாக ஒருவேளை பணம் கொடுக்கப்பட்டிருந்தால், அதை அவர்கள் இழிவாகக் கருதியிருப்பார்கள். இப்படியாக, ஏற்படும் முழு ஏமாற்றமும், எரிச்சலும், முறுமுறுக்கும் கும்பலும், நூற்றுக்கணக்கான பொருட்களைத் தேர்ந்தெடுப்பதும், அவற்றைத் தாள்களில் சுற்றுவதும், முடிச்சுபேடுவதும் போன்ற இந்த எல்லாக் காரியங்களும் அநேக சமயங்களில் வீணானதாகிவிடுகிறது. இத்தனை அனேக வெகுமதிகள் இவ்வளவு குறைந்த போற்றுதலுடன் பெற்றுக்கொள்ளப்படுகிறது!
கிறிஸ்மஸ் பலருக்கு ‘இன்பத்தின் காலமாக’ இருப்பதில்லை.
கொடுப்பதற்குக் காலம் பார்க்கத் தேவையில்லை
ஆனால் குடும்பங்கள் ஒன்று சேருவதிலும், ஒருவரோடொருவர் உறவையும் அன்பையும் அனுபவிப்பதிலும் என்னே மகிழ்ச்சி உண்டு! வெகுமதிகளைக் கொண்டுவருவதுங்கூட இருதயப்பூர்வமான அன்பின் வெளிக்காட்டுதலாக இருக்கக்கூடும். “கொடுப்பதைப் பழக்கமாக்கிக்கொள்ளும்”படியாக இயேசுதாமே கிறிஸ்தவர்களை உற்சாகப்படுத்தினார். “வாங்குவதிலிருப்பதைவிட கொடுப்பதில் அதிக மகிழ்ச்சி இருக்கிறது,” என்ற இயேசுவின் வார்த்தைகளை அடிக்கடி மேற்கோள் காட்டாத கிறிஸ்தவன் அல்லது கிறிஸ்தவனல்லாதவன் ஒருவன் இருப்பானோ? (லூக்கா 6:38; அப்போஸ்தலர் 20:35, NW) நிச்சயமாகவே, கொடுப்பதற்குக் காலம் பார்க்கத் தேவையில்லை. ஆனால் கிறிஸ்மஸ் கொடுத்தலைக் கேள்விகேட்பதற்கு இன்னொரு காரணம் இருக்கிறது.
கிறிஸ்மஸ் பண்டிகையிலிருக்கும் உண்மையான பிரச்னை, அது பொய்யில் வேரூன்றியதாயிருப்பது. அந்தப் பண்டிகைக் காலம் இயேசுவின் பிறப்பைக் குறிப்பதாகச் சொல்லப்படுகிறது. உண்மையில், கிறிஸ்மஸ் பண்டிகைக் காலம் சூரியனின் “பிறப்புடன்”—சூரிய வழிபாட்டுடன்—இணைந்து செல்லுகிறது.
கிறிஸ்மஸின் கதை (The Story of Christmas) என்ற தன்னுடைய புத்தகத்தில் மைக்கெல் ஹாரிசன் பின்வருமாறு எழுதுகிறார்: “கவனத்திற்கொள்ள வேண்டிய முதல் காரியம், எண்ணிலடங்கா அறிஞர்கள் முயன்றும், கிறிஸ்து எந்தத் தேதியில் பிறந்தார் என்பது நிரூபிக்கப்படவில்லை.” பைபிள் அவருடைய மரண தேதியைத்தான் தெளிவாகக் காட்டுகிறது. இந்தத் தேதியைத்தான் தன்னுடைய சீஷர்கள் ஆசரிக்க வேண்டும் என்று இயேசு கட்டளையிட்டார். “நம்முடைய ஆண்டவரின் பிறந்த நாள் அப்போஸ்தலருடைய காலத்திலோ அல்லது அவர்களுக்குப் பின்னான காலத்தின் ஆரம்பப்பகுதியிலோ கொண்டாடப்பட்டது என்பதற்கு சரித்திரப்பூர்வமான ஆதாரம் கிடையாது,” என்று ஷாஃப்-ஹெர்ஜாகின் புதிய மத அறிவு என்ஸைக்ளோப்பீடியா (The New Schaff-Herzog Encyclopedia of Religious Knowledge) குறிப்பிடுவதில் ஆச்சரியம் உண்டோ?
இப்பொழுது பின்வரும் இந்தக் கேள்விகளைக் குறிப்பாய்க் கவனியுங்கள்: தன்னைக் கனப்படுத்துவதாக உரிமைப்பாராட்டுகிறபோதிலும் புறமத சடங்குகளிலும் பழக்கவழக்கங்களிலும் வேரூன்றிய ஒரு பண்டிகையை இயேசு அங்கீகரிப்பாரா? வருடத்தின் வேறு எந்தச் சமயத்திலும் இருப்பதைவிட அதிகமான கொலைகளும், கிறிஸ்தவமல்லாத குடிவெறியும், காம வாழ்வும் கொண்ட இந்தக் கொண்டாட்டத்தை அவர் ஆதரிப்பாரா? மனச்சோர்வுக்கும் நரம்புத்தளர்ச்சிக்கும் தற்கொலைகளுக்கும் பேர்போன ஒரு பண்டிகைக் காலத்தை அவர் அனுமதிப்பாரா? உண்மையான கிறிஸ்தவர்களுக்கு விடை தெளிவாகத் தெரிந்ததே.
மற்றவர்களுக்கு மகிழ்ச்சியுடன் கொடுப்பதற்கு வருடத்தில் ஒரு குறிப்பிட்ட காலத்தை ஒதுக்குவதற்குப் பதிலாக, வெகுமதி கொடுப்பவருக்கும் பெற்றுக்கொள்பவருக்கும் கொடுத்தல் எல்லா சமயத்திலும் மகிழ்ச்சியைக் கொண்டுவருகிறது என்பதை ஒரு தயாளகுணமுள்ளவன் காண்கிறான். நம்முடைய நேரம், நம்முடைய சக்தி, நம்முடைய இரக்கம் ஆகிய வெகுமதிகள்; தயவான வெகுமதிகள் மற்றும் யோசனையான வார்த்தைகள்; ஆம், தேவைப்படும் பொருள்சம்பந்தமான வெகுமதிகள்—இப்படிப்பட்ட கொடுத்தலில் ஈடுபடுபவருக்கும் பெற்றுக்கொள்பவருக்கும் பெருமகிழ்ச்சியையும் பேரின்பத்தையும் கொண்டுவருகிறது. (g87 11⁄22)